சித்திரகுப்தன் கச்சேரி

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 14, 2025
பார்வையிட்டோர்: 2,870 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சூரியமண்டலத்தைத் தாண்டியாகிவிட்டது; ஆயினும் யமதூதர்களின் பாசங்களில் இருந்த அங்குஷ்டப் பிரமாணமுள்ள ஜீவன்கள் இன்னமும் பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தன. செம்படவன் தண்ணீரிலிருந்து இப்போதுதான் இழுத் துப்போட்ட மீன்களைப்போல, அந்த ஜீவன்கள் துடி துடித்துக்கொண்டு இருந்தன. 

எங்கிருந்தோ தெய்விகப் பாட்டின் இன்னிசை காற்றிலே மிதந்து வந்தது.  பாசங்களில் இருந்த மனித ஜீவன்கள் ஆத்திரத்தோடு பூமி இருந்த திசையை நோக்கின. ஆனால், அந்த யமதூதர்கள் இருவரும், அந்தப் பாட்டிலே மோகித்துப்போய், ஸ்வர்க்கவழியைப் பார்க்கலானார்கள். 

துயரத்தோடு ஒரு பெருமூச்சு விட்டு ஒரு தூதன் மற்றவனிடம், “ரம்பை பாடுகிறாள் போலிருக்கிறது?” என்றான். 

“அது ரம்பையானாலும் சரி, ஊர்வசியானாலும் சரி. இந்தப் பாட்டைக் கேட்காமல் இனி நாம் நகரப்போவதில்லை” என்றான் மற்றவன். 

முதலில் பேசிய தூதன் பெருஞ் சிந்தையில் ஆழ்ந்தான். மண்ணுலகத்திலிருந்து யமதர்ம ராஜ னுடைய நியாயாலயத்துக்குப் பிரயாணம் செய்ய எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பது சித்திரகுப்தனுக் குத் தெரியாமலா இருக்கும்? ஆனால் அவ்வினிய சங்கீதத்தைக் கேட்கும் ஆசையை அந்தத் தூதன் எப்படி அடக்க முடியும்? மரணாவஸ்தையிலுள்ள நோயாளிகளின் விக்கல்களும், அவர்களுடைய சுற்றத் தாரின் பிலாக்கணமும், யமதர்மராஜனுடைய நியா யாலயத்தில் நரக தண்டனை விதித்தவுடனே மனித ஜீவன்கள் ‘ஐயோ! ஐயோ!’ என்று அலறுவதும், நரகத்தில் பயங்கரமான தண்டனைகளை அனுபவிக்கும் துரதிருஷ்ட ஜீவன்களின் கீச்சுக்குரல்களுமே அந்த யமதூதர்களின் வாழ்க்கையிலுள்ள சங்கீதம்! மண் ணுலகத்துப் போலீஸ்காரர்களுடைய யுக்திகள் எல்லாம் அவர்களுக்குப் பாவம், தெரியவே தெரியாது!பணம் கொடுக்காமலே நாடகசாலைகளில் நுழையும் வித்தை பூலோகத்து நியாயதேவதையின் தூதர்களுக்குத்தான் வரும். அது யமலோகத்து அப்பாவிகளின் வேலை அல்ல ! 

சூரிய கிரணங்கள் கண்ணுக்குத் தெரியாமலே பூமியிலுள்ள நீரை ஆகர்ஷிப்பதுபோல, அந்தத் தேவகானத்தின் அபூர்வ ராகங்கள் அந்த யமதூதர் களைத் தம்மிடம் பிடித்து இழுத்தன. கையில் இருந்த பாசங்களை வழியைத் தாண்டிச் சற்று அப்புறமாக வைத்துவிட்டு, அவ்விருவரும் பாட்டைக் கேட்கப் போய்விட்டனர். 

யமதூதர்கள் தொலைவில் போனதாகத் தெரிந்த தும், “இன்னமுங்கூட என்னை யாராவது விடுவித்துப் பூலோகத்திலே கொண்டுபோய்விட்டால்-” என்று தீனக்குரல் ஒன்று, ஒரு பாசத்திலிருந்து கிளம்பியது. நானும் குதித்துக்கொண்டு வருவேன், அண்ணா!” என்ற சொற்கள் மற்றொரு பாசத்தி லிருந்து வெளிவந்தன. காரிருளில் அடர்ந்த கோரைப் புதரின் நடுவே மினுமினுக்கும் மின்மினிப் பூச்சிகளைப் போலத் தோற்றின, பாசங்களில் இருந்த அவ்விரு ஜீவன்கள். 

“உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டது, முதலில் பேசிய ஜீவன். 

“பெயரா?” என்று மற்றொரு ஜீவன் சிரித்துக் கொண்டே, அது மட்டும் ஏனோ ஞாபகத்துக்கு வரவில்லை, அண்ணா!” என்று பதில் சொல்லியது. 

“என் கதியும் அப்படித்தான் இருக்கிறது. நான் யார் என்பது எனக்கு ஞாபகமே இல்லை. என் உரு வம் எப்படி இருந்தது என்பதும் நினைவு இல்லை. ஆனால், மற்ற விஷயங்கள் எல்லாம் எவ்வளவு நன்றாக நினைவிருக்கின்றன, தெரியுமோ! என் வீட்டு வாச லிலே இருந்த அந்த உயர்ந்த தென்னைமரம் -” 

“தென்னைமரமா? தென்னங் கள் – அதை நினைத் தாலே வாயில் நீர் ஊறுகிறது, அண்ணா!” 

“நான் ஒருபோதும் கள் குடித்ததில்லை. எது எப்படி இருந்தாலும், இந்தப் பரலோகத்திலே நீங்களும் நானும் ஒன்றுதான். எனக்குத் தென்னை மரத்தின் ஞாபகம் வருவதுபோலவே, உங்களுக்கும் அந்த ஞாபகம் வருகிறது. இருவருமே இங்கிருந்து நழுவிப் போக முடியுமானால்,—” 

“அப்படி முடிந்தால் எவ்வளவு ஜோராக இருக் கும், அண்ணா! இன்னும் இரண்டொரு நாளில் எங்கள் ஊரில் ஒரு பெரிய கல்யாண விருந்து நடப் பதற்கு இருந்தது. அதற்குள்ளே தெய்வம் எனக்கு இந்தச் சங்கடத்தைக் கொண்டுவந்து விட்டதே!” 

“எங்கள் ஊரிலும் இரண்டொரு நாளில் ஒரு பெரிய கல்யாண விருந்து நடப்பதற்கு இருக்கிறது. அடடா! என்ன ஒற்றுமை!அப்படியானால் நாம் இருவரும் ஒரே ஊர்க்காரர்கள்தாம். இங்கே யமனு டைய கச்சேரியிலும் ஒருவரை விட்டு மற்றவர் பிரியக் கூடாது. 

“நாம் இருவரும் துணையாக வந்தோம்; துணை யாகவே இருப்போம். ஆனால் ஒரு விஷயம், அண்ணா: இங்கே மீன் சாம்பார் ‘சமத்தியா’க் கிடைக்குமா?”

“இங்கே மோர் எப்படிக் கிடைக்கும் என்பது எனக்குப் பெரிய பிரச்னையாகிவிட்டது. ஆமாம் ஐயா, ஸ்வர்க்கம் கிடைத்துத்தான் என்ன பிரயோ ஜனம்? ‘தக்ரம் சக்ரஸ்ய துர்லபம்’ (மோர் இந்திர னுக்கும் கிடைப்பது அரிது) என்று சொல்வார்களே!”

“என்ன, என்ன? நீங்கள் இப்போது என்ன சொனனீர்கள், அண்ணா ? நீங்கள் சொன்னது எனக்கு ஒன்றும் புரியவே இல்லையே.” 

“புரிந்துதான் இனிமேல் என்ன செய்வது? ஸ்வர்க்கத்தில் பாரிஜாத மலர்கள் இருக்கும்; ஆனால் சம்பங்கிப் பூக்கள் ஏது? என் வீட்டுக்காரிக்குத்தான் அவற்றில் என்ன ஆசை!” 

“என் பெண்சாதிக்குக் காட்டுமல்லிகை என்றால் உசிர் ! இனிமேல் அந்தப் பூவை இங்கே பார்க்கக்கூட முடியாது.” 

“ஸ்வர்க்கத்தில் கற்பகமரம் இருக்கிறது என் பார்கள். ஆனால் எங்கள் வீட்டுப் புறக்கடையிலுள்ள ஓட்டு மாம்பழத்தின் இனிமையே வேறுதான்!” 

“என் குடிசை வாசலில் இருந்த அந்த அருமையான பலா மரம்-” 

“அது போகட்டும். மழையின் வேடிக்கையை இங்கே எப்படிப் பார்க்க முடியும்? ஸ்வர்க்கத்தில் மழை பெய்வது ஏது? எங்கள் வீட்டு முற்றத்தில் கூடல்வாய் வழியாக மழை நீர் கொட்டும்போது அஹஹா! வேதகோஷத்தைப்போல் இருக்குமே!” 

“ஆகாயத்தில் இடி முழங்கும்போது பறை கொட்டும் சத்தம்போலக் கேட்கும்; அல்லவா?” 

யமதூதர்கள் வரும் சத்தம் கேட்டது. ” எல்லா விஷயங்களிலும் நாம் ஒரே அபிப்பிராயம் கொண் டிருக்கிறோம். நாம் இனிமேல் ஒருவரை மற்றவர் விடக்கூடாது. இது சத்தியம்” என்று இரண்டு பாசங்களிலிருந்தும் மெதுவாகக் குரல்கள் வந்தன. 

அவர்களுடைய கடைசிச் சொல், திரும்பிவந்த யமதூதர்களின் காதில் விழுந்தது. பொங்கிவரும் சிரிப்பை அவர்களால் அடக்க முடியவில்லை. ‘தேகத் திலிருந்து விடுபட்ட ஜீவன்கள் சத்தியம் செய்து கொள்வதில் அர்த்தம் என்ன?’ என்று கேட்பது போல இருந்தது அந்தச் சிரிப்பு. 

யமதூதர்கள் அவசர அவசரமாகப் பாசங்களைத் தூக்கிக்கொண்டு ஒரே ஓட்டமாக யமலோகத்துக்குப் புறப்பட்டார்கள். வைதரணி நதிக்கரைக்கு வந்து படகில் உட்கார்ந்ததும், அவர்கள் அவ்விரு பாசங்களை யும் ஒன்றாகப் போட்டார்கள். “நம்மூர் ஆற்றங்கரை யிலுள்ள படகின் துடுப்பு இதைவிடப் பெரிது; அல்லவா?” என்று ஒரு பாசத்திலிருந்து மெதுவாகப் பேச்சு வெளிவந்தது. 

மற்றொரு பாசத்திலிருந்து, தெளிவற்ற சொற் களிலே, ஒரு பாட்டின் தொடர் வெளியாயிற்று: 

“மண்ணை நம்பி- ஏலேலோ
மரம் இருக்க–ஐலஸா” 

“சற்று உரக்கப் பாடுங்கள். எவ்வளவு இனி மையான பாட்டு!” என்றது முதற் பாசத்து ஜீவன். 

யமதூதர்களின் பயத்தினால் மற்றொரு ஜீவன் அந்தப் பாட்டைப் பாடவே இல்லை. படகு கரை சேர்ந்ததுமே, யமதூதர்கள் மீண்டும் பாசங்களை எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடி, சித்திரகுப் தனுடைய கச்சேரியில் போய் நின்றார்கள். சித்திர குப்தன், நெற்றியில் இருந்த மூக்குக் கண்ணாடியை மூக்கின்மேல் நகர்த்திக்கொண்டு, “எத்தனை ஜீவன் கள்?” என்று கேட்டான். 

“இரண்டு ஜீவன்கள்”.

“எதனால் சாவு?” 

“திடீர் விபத்தினால் மரணம்.”

“இருவருக்குமா?” 

“ஆமாம்; இருவரும் திடீர் விபத்தினால்தான் இறந்தார்கள்”. 

பாசத்தில் இருந்த ஜீவன்கள் ஆவலோடு அதைக் கேட்கலாயின.பெயரையும் உருவத்தையும் போலவே தமது மரணத்தையும் அவை மறந்திருந்தன. 

“என்ன துர்விபத்து நேர்ந்தது?” என்று சித்திர குப்தன் கேட்டான். 

முதல் யமதூதன் தன்னுடைய பாசத்தைக் காட்டி, “இவன் பிராம்மணன்!” என்றான். 

மற்றொருவன் தன் பாசத்தைத் தூக்கி, “இவன் தீண்டாதவன்!” என்றான். 

“ஒரே சமயத்தில் இவர்களுக்கு எப்படித் துர் விபத்து நேர்ந்தது? கள் குடித்துவிட்டுக் காரின் கீழே அகப்பட்டுக்கொண்டார்களா என்ன?” என்று சித்திரகுப்தன் ஆச்சரியத்தோடு கேட்டான். 

“காரினால் நேர்ந்த துர்விபத்து அல்ல. ஒரு கோயி லிலே துர்விபத்து நேர்ந்தது!” என்றான் முதல் தூதன். 

“தீண்டாதவர்கள் தடியும் கையுமாகக் கோயிலுக் குள் பிரவேசிக்க முயன்றனர் ; பிராம்மணர்கள் தடி யும் கையுமாக அவர்களைத் தடுக்க முயன்றனர். அந்த அடிதடிச் சண்டையில் இவர்கள் இருவரும் ஒருவர் மண்டையை மற்றவர் உடைத்தார்கள்!” என்றான் மற்றொரு தூதன். 

“துரோகி!” என்ற ஒரே சொல் ஒரேயடியாக அவ்விரு பாசங்களிலிருந்தும் வெளிவந்தது. 

– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *