சாமான்ய நிலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 25, 2023
பார்வையிட்டோர்: 2,657 
 
 

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஊரில் அறம் வளர்த்த முதலியார் என ஒருவர் இருந்தார். அவர் ஒரு வேளாளச் செல்வர். அவருடைய சிறந்த அறிவாற்றலைக் கண்ட அந்த நாட்டு அரசன் அவரைப் பிரதானியாக நியமித்து, அவரிடம் பெருமதிப்பு வைத்திருந்தான்.

அந்த அறம் வளர்த்த முதலியார் சிறந்த அறிவுடையவராக இருந்தமையால், தம்முடைய சொந்த ஊருக்கு வரும் போது பாண்டிய மன்னனைக் கண்டு அளவளாவி விட்டுச் செல்வார்.

அந்தப் பாண்டிய மன்னன் தமிழ்ப் புலமை மிக்கவன்; நல்ல கவிஞன். முதலியார் பேரரசனு டைய பிரதானியாக இருந்தமையால் அவருடைய நட்பானது தானக்குக் கிடைத்தைப் பெரிய பாக்கிய மாகக் கருதினான்.

Marabu

அந்தப் பாண்டிய மன்னன் சில நூல்களை இயற்றினான். அந்த முதலியாரைப் புகழ்ந்து ஒரு சிறிய நூலை இயற்ற வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு உண்டாயிற்று. அவரிடம் சொல்லாமல் அவரைப் பற்றி ஒரு கலம்பகம் பாடினான். அந்தச் செய்தி தமக்குத் தெரிந்த போது, பிறரால் பாடப் பெறும் தகுதி உள்ள நீங்கள் அடியேனைப் பாடலாமா?” என்று முதலியார் தம் பணிவைக் காட்டிக் கொண்டார். அந்த நூல் பல புலவர்கள் அமர்ந்திருந்த சபையில் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது.

ஒரு நாள் பாண்டிய மன்னன் தனக்கு வேண்டிய புலவர் ஒருவரோடு பேசிக் கொண்டி ருந்தான். கலம்பகம் பாடியதைக் கேட்டு, முதலியார் சொன்னதை அந்தப் புலவரிடம் சொன்னான். அந்தப் புலவர் முதலியாரின் பணிவைப் பாராட்டவில்லை. “பார்த்தீர்களா! நான் அப்போதே நினைத்தேன்” என்றார். “என்ன நினைத்தீர்கள்?” என்று பாண்டியன் கேட்டான்.

“அவர் வேளாளர். நீங்கள் முடி மன்னர்களாகிய பாண்டிய வம்சத்தில் உதித்தவர்கள். அவர் உங்கள் குடிமக்களில் ஒருவராக இருப்பவர். அப்படி இருக்க, ஒரு சாமான்யமான புலவனைப் போல நீங்கள் பெருமையைக் குறைத்துக் கொள்ளலாமா? அது முறை அன்று” என்றார் புலவர். அதைக் கேட்ட பாண்டிய மன்னன் அந்தப் புலவருடைய அறியாமைக்கு இரங்கினான், “சோழ அரசர்கள் முடி மன்னர்கள் அல்லவா?” என்று கேட்டான். “ஆம்” என்றார் புலவர்.

“கிள்ளி வளவன் என்ற சோழனைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? அவன் ஒரு வேளாளனைப் பாடியிருக்கிற பாடலை நீங்கள் பார்த்ததுண்டோ?”

“யாரைப் பாடினான்?”

“சிறுகுடி கிழான் பண்ணனைப் பாடியிருக்கிறான்”

புலவர் சிறிது யோசித்தர். பிறகு, “ஏதோ ஒரு பாட்டு அரைப் பாட்டு அவசியமான சந்தர்ப்பத்தில் பாடியிருக்கலாம். ஆனால் இப்படி ஒரு முழு நூலை யாரும் பாடியிருக்க மாட்டார்கள். நீங்கள் உங்களைக் குறைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், பாண்டியனுடைய மரபுக்கே இழுக்கு உண்டாகுமாறு செய்து விட்டீர்கள்” என்று மிடுக்குடன் சொன்னார்,

சிறிது நிதானமாகப் பாண்டியன், “புலவரே. உங்கள் மனம் எனக்குத் தெரியும். எங்கள் மரபு உயர்வு உடையது. சமானமானது அல்ல என்று நினைக்கிறீர்கள். அது தவறு. எங்கள் மரபு ஒன்றற்கு ஒன்று ஒத்து நிற்பவை.”

“எப்படி?” என்றார் புலவர். “சொல்கிறேன்; பாண்டிய மரபு சந்திரகுலம் அல்லவா?”

“ஆம்” என்றார் புலவர்.

“முதலியார் வம்சம் என்ன வென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று பாண்டிய மன்னன் கேட்டான்.

“வேளாளர் குலம்” என்று கூறினார் புலவர்,

“அவர்களுடைய குலத்துக்கு முதல்வர் யார் என்று தெரியுமா?” என்று பாண்டியன் கேட்டான்.

“அவர்களைக் கங்கைக் குலத்தினர் என்று சொல்வார்கள்” என்று விடை கூறினார் புலவர்.

“நாங்கள் சந்திரனுடைய வழியில் வந்தவர்கள். அவர்கள் கங்கையின் வழியில் வந்தவர்கள். எங்கள் இருவர் மரபிற்கும் மூலமாக இருப்பவர் பரமேசுவரனே. அவர்கள் சமானமானவர்கள் என்று கருதி அந்தப் பரமேசுவரனே தன்னுடைய சடாபாரத்தில் சந்திரனுக்கும் கங்கைக்கும் இடம் கொடுத்து இருக்கிறான். இறைவனே சந்திரனும் கங்கையும் ஒப்பானவர்கள் என்று தலையாலே தாங்கிக் காட்டும் போது, அந்த இருவர்களுடைய மரபும் சமானமானவை, உறவுடையவை என்று நான் சொல்வது பிழையாகுமா? இதைத் தெரிந்துதான் நான் பாடினேன்” என்று பாண்டியன் கூறி முடித்த போது, புலவர் வாயடைத்து நின்றார்.

– கிழவியின் தந்திரம் (சிறுகதைத் தொகுப்பு),முதற் பதிப்பு: ஜூலை 1988, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை

Ki.Vaa.Ja கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் (1906-1988). இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *