சாக்கடை இன்னும் அடைத்துக்கொண்டுதான் இருக்கிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 25, 2026
பார்வையிட்டோர்: 1,758 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அம்மூவரும் அந்தத் தெருவுக்குள் நுழைந்ததும், அவர்களின் வரவை எதிர் நோக்கி இருந்தவர்களால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு வரவேற்கப்பட்டார்கள்.

“எந்தினிவாட்டியா வந்து வந்து சொல்றது.. இன்னிக்காவது உங்கள் அனுப்பி வச்சி இருக்காங்களே” என்று அத்தெருவாசிகளில் ஒருவர் பேச்சைத் துவக்கினார்.

அவர்களில் ஒருவன் தனது தோளில் சுமந்து வந்த நீண்ட மூங்கில் கழிகளை ‘சட’, ‘சட’ என்று ஓசை எழும்பத் தரையில் போட்டு விட்டு, “அதான் நாங்க வந்துட்டோமே ஸார்” என்று சுருக்கமாகப் பதிலளித்தான்.

அத்தெருவில், பாதாளச் சாக்கடையின் வட்ட வடிவ இரும்பு மூடியையும் கடந்து, கழிவு நீர் காற்றுக் குமிழிகளுடன் தூர் நாற்றத்தையும் வெளியிட்டுக் கொண்டு தெருவெங்கும் வழிந்தோடிக் கொண்டு இருந்தது.

அந்தத் தெருவாசிகளுடன் அம் மூவரும் அக்கழிவு நீர் ஓட்டத்தைப் பார்வையிட்டுக்கொண்டு சாக்கடை அடைப்பை நீக்க ஆயத்தமாகத் தங்கள் உடைகளைக் கழற்றத் தொடங்கினர்.

“எத்தினி நாளா அடைப்பு இருக்கு ஸார்” என ஒருவன் வினவ, “ஒரு வாரம் இருக்கும்பா. மொதல்ல ஒண்ணும் தெரியல, ஒரு மூணு நாளா எல்லா வீட்லயும் கக்கூஸ் எல்லாம் அடைச்சிக்கிணு இருந்திச்சு. எவ்ளோதரம் போன் பண்றது. நேர்ல வந்து சொல்றது யாரைப் பாத்துச் சொன்னாலும் அவரு, இவரைப் பாருன்னு சொல்றது, இவரு அவரைப் பாக்கச் சொல்றது, இன்னா டிப்பார்ட்மெண்ட்டுயா உங்களது” என்று அத்தெருவாசிகளில் ஒருவர் சலித்துக்கொண்டு கூறினார்.

“அவுங்க அனுப்புனா நாங்க வந்து செய்யப் போறோம். ஸார், மொதல்ல மூங்கில் பத்தையில் குத்திப் பாக்குறோம். இல்லனா ஆள்தான் உள்ள எறங்கணும் ஸார், சாக்கட உள்ள இங்க பாருங்க, ஸார் எப்டி இருக்கு, நீங்கதான் பாத்து ஏதாவது…”

“சரி, சரி முதல்ல வேலைய முடிங்க. வேலையே தொடங்கல அதுக்குள்ள காசு வசூல் பண்ண ஆரம்பிச்சுட்டிங்களா!”

“அப்புறம்… ஸார்… கொஞ்சம் குளிக்க நல்ல தண்ணி, குளிக்கிற சோப்பு, வேணுமிங்க.” முன் எச்சரிக்கையுடன் மற்றொருவன் கேட்டான்.

வேலை முடிந்தவுடன் இவர்களை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். முகம் சுளித்துக் கொண்டு விரட்டுவார்கள். சிலர் சில்லறைகளைக் கையில் படாமல் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வார்கள். பிறகு மனிதக் கழிவு நீர் படிந்த உடலுடன் எங்கே போய்க் குளிப்பது. எப்படி இவர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒருவர், பழைய பொருள்கள் வாங்குபவனிடம் போடுவதற்கு வைத்து இருந்த, கைப்பிடி உடைந்து போன சில நாட்களில் முற்றிலும் உடைந்தவிடக்கூடிய பழைய பிளாஸ்டிக் வாளியைக் கொண்டுவ ந்து கொடுத்தார். அதில் நீரும் நிரப்பப்பட்டது.

ஆனால் குளியல் சோப்பை யாரும் தரவில்லை, கரைந்து போன துணி துவைக்கப் பயன்படும் சோப்பு வில்லைகள் தான் சில கிடைத்தன.

வேலை ஆரம்பம் ஆயிற்று, உடைகளைக் கலைந்து உள்ளாடையுடன் அவர்கள் மூங்கில் பத்தைகளை ஒன்றுடன் ஒன்று சணல் கயிறு மற்றும் இரும்புக் கம்பிகளால் இணைத்து நீண்ட வடிவமாகச் செய்தனர். பின் பாதாளச் சாக்கடைத் திறப்பை மூடியிருந்த இரும்பு மூடியை அகற்றி ஒரு ஓரமாக வைத்தார்கள். “மொதல்ல கொஞ்சம் தண்ணியை மொண்டு ஊத்துவோம்” என்று சொல்லிக்கொண்டே தாங்கள் கொண்டு வந்து இருந்த சிறிய இரும்பு வாளியில் சாக்கடை நீரை வாரி வாரி இறைத்தனர். அங்கு ஏற்கனவே நிலவி இருந்த துர்நாற்றம் இதனால் மேலும் தீவிரத் தன்மை அடைந்தது. இவ்வேலை தொடரக் கழிவுநீர் இறங்குவதும் ஏறுவதுமாகப் போக்குக் காட்டி, பின் ஒரே அளவில் பிடிவாதமாக நிற்கத் தொடங்கியது.

பிறகு இது வேலைக்கு ஆகாது எனக் கூறிக்கொண்டே அவர்கள் மூங்கில் பத்தையைச் சாக்கடையின் உட்செலுத்தி அடைப்பை நீக்க முயன்றனர்.

மூங்கில் பத்தையை வளைத்தும் சற்று வெளியில் இழுத்தும் மீண்டும் உட்செலுத்தியும் என்ன வித்தை செய்தும் அடைப்பு நீங்கவில்லை.

சிறியவர்களும் பெரியவர்களும் நிழலில், பாதுகாப்பான தூரத்தில் மூக்கைப் பொத்திக்கொண்டு இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

“இன்னப்பா ஆச்சு, இவ்ளோ நேரமா இன்னா பண்றிங்க, அடைப்பை எடுத்தீங்களா இல்லையா?” ஒருவர் குரல் கொடுத்தார்.

“இவனுங்க இப்படித்தான் ஸார். சும்மா பால்வா காட்டிக்கிணு இருப்பாங்க, அதோ இதோன்னு போக்குக் காட்டி இன்னிக்குப் பொழுதப் போக்கிடுவாணுங்க,” தனது வீட்டு காம்பவுண்டு சுவரில் சாய்ந்தபடி மற்றொருவர் கூறினார்.

“ஆமாம் ஸார், அப்புறம் ஒவ்வொரு வீடா வந்து பணம் கேட்பாணுங்க. இவனுங்க பணத்தை எடுத்துக்கிணு போய் வீட்லயா கொடுப்பாங்க, வூம் ஹிம். சாராயக் கடைதான்” மற்றொருவர் ஆமோதித்தார்.

இதையெல்லாம் கவனிக்காமல் அவர்கள் மூங்கில் பத்தையின் துணையுடன் கழிவு நீர் அடைப்பை நீக்கப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் காரியம் ஆனபடி இல்லை, சூரியனும் உச்சிக்கி வந்து சுட்டெரிக்க, மூவரும் அங்கிருந்து நகர்ந்து சற்று இளைபார நிழலை நாடினர்.

அதற்குள் பிளாஸ்டிக் வாளி அளித்த நபர் பெருங்குரலெடுத்துக் கூவினார், “இவ்ளோ நேரமா இன்னா வேலைய செஞ்சிங்க, ஒரு இன்ச் அளவு தண்ணிகூட எறங்கல, அதுக்குள்ள உங்களுக்கு ரெஸ்டு கேக்குதா” என,

“அதானே, ஒரு வாரமா நாம் படற அவஸ்தை இவனுங்களுக்கு எப்படித் தெரியும்” என மற்ற அத்தெருவில் உள்ளவர்களும் அவருடன் சேர்ந்து கொண்டார்கள்.

தன் உடல் மீது படிந்து இருந்த மலக் கழிவுகளை வழித்து உதறிய படி யே அம்மூவரில் ஒருவன், “ஸார் அடைப்பு பெருசா இருக்கும்போல ஆள் உள்ள எறங்குனா தான் முடியும்” எனக் கூற,

“அப்படினா உள்ள ஏறங்க வேண்டியதுதானே, அத மொதல்ல செய்ய வேண்டியதுதானே.”

“இல்ல ஸார் …” எனப் பேசத் தொடங்கியவனை இடைமறித்து,

“போய் வேலையப் பாருங்கையா… அதுக்குள்ள ரெஸ்டு எடுக்க வந்துட்டிங்க” எனக் கூறித் தன் பேச்சுக்கு ரெஸ்டு கொடுத்தார்.

மீண்டும் மூவரும் அந்தச் சாக்கடைத் திறப்பை நோக்கி நடந்தனர்.

அவர்களில் ஒருவன் மூங்கில் பத்தை இரும்பு வாளியுடன் இணைக்கப்பட்ட கயிறு இரண்டையும், பிடிமானமாக கொண்டு அச்சாக்கடைத் திறப்பினுள் இறங்கி முத்துக் குளிப்பவன் போல் மூச்சைப் பிடித்துக் கொண்டு அக்கழிவு நீரில் “குபுக்” என ஓசையெழ மூழ்கினான். சில நொடிகளில் மேலே வந்து வானத்தை நோக்கி முகத்தைத் தூக்கிக்கொண்டு மூச்சு வாங்கினான்.

மீண்டும் மீண்டும் முழுக்கு. வெளியில் வரும்போதெல்லாம் திடக் கழிவுகளைக் கையில் அள்ளி வந்து வெளியே தரை மேல் எறிந்தான்.

பின் மூங்கில் பத்தையால் அடைப்பை நீக்க முயன்றார். இப்போது கழிவுநீர் சற்று இறங்கியது போல் காணப்பட்டது.

“தண்ணி எறங்குது, அப்படித் தான் ஆங், இந்தப் பக்கம் வுடு, இஸ்து தள்ளு, நீ இன்னொருக்கா உள்ள எறங்குப்பா” என வேலை மும்முரமாகத் தொடர, இவர்களுக்குப் பரிதாபப்பட்டு அடைப்பு வழி திறந்து கொண்டதோ எனும்படி கழிவுநீர் மட்டம் சிறிது குறைய மூவரும் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.

ஆனால் மீண்டும் ‘குபுக்’, ‘குபுக்’ எனக் காற்றுக்குமிழிகளுடன் கழிவு நீர் பொங்கி மேலே வரத் துவங்கியது. “இன்னொரு முறை உள்ள மூழ்கி மண்ண எடுத்தா சரியாயிடும்” எனக் கூறிக்கொண்டே கழிவு நீரில் மூழ்கியவன் சற்றுக் கழித்து மேலே வந்து திடக் கழிவுகளை அள்ளிப் போட, தண்ணீர் ‘கட கட’வென வடியத் துவங்கியது. தண்ணீர் குறையக் குறைய நீரில் மூழ்கியவன் இன்னும் உள்ளே இறங்கத் தொடங்கினான்.

கழிவு நீர் ‘குபுக் குபுக்’ என வடிவதும் மேலேறுவதுமாக இருந்தது.

திடீரென ‘புஸ்’ என ஓர் ஓசை. உள்ளே இருந்தவன் மேல் நோக்கியபடி கயிற்றையும், மூங்கில் பத்தையையும் பிடித்துக்கொண்டு மேலேற முயன்றான்.

மேலிருந்த இருவரும் அவனுக்கு உதவியாக வேகமாகச் செயல்பட்டார்கள். ஆனால் அவர்களும் தடுமாறித் தடுமாறி ஒரு வழியாக உள்ளே இருந்தவனை மேலே இழுத்துப் போட்டார்கள்.

பின் மூவரும் அங்குத் தரை மேலிருந்த கழிவுகளில் சுருண்டு விழுந்தனர். ஒருவன் மட்டும் மண்ணில் நீச்சல் அடிப்பவன் போல் நகர்ந்து நகர்ந்து சற்று தூரம் தள்ளி ஊர்ந்து வந்து மண்ணில் தலையைக் கிடத்திக் கொண்டான்.

இவ்வளவும் சில வினாடிகளில் முடிந்துவிட்டது. தெருவாசிகள் என்ன நடந்தது என ஊகித்துக் கொண்டார்கள். ஆனால் ஒருவரும் அருகில் செல்ல விரும்பவில்லை.

இதற்குள் சற்றுத் தூரம் தள்ளி வந்து படுத்து இருந்தவன் மெல்ல எழுந்து உட்கார்ந்து கண்களை மூடி மூடித் திறந்து “ஐயோ கண்ணு தெரியலியே, கண்ணு தெரியலியே” எனக் கதறத் துவங்கி, மற்ற இருவரையும் தேடி அவர்களின் உடல்களைத் தொட்டு உணர்ந்து, “யீ..யீ. போயிட்டிங்களா?” எனத் தலை மேல் கைகளால் அடித்துக்கொண்டு அலறி அழத் துவங்கினான்.

அவன் அழுகையைக் கண்டு கூடத் துவங்கிய கூட்டம், பாதுகாப்பான தூரத்தில் கூடிநின்று வேடிக்கை பார்க்கத் துவங்கியது.

“என்ன ஆச்சு ஸார்?” என ஒருவர் அக்கூட்டத்தில் ஒருவரிடம் கேள்வியெழுப்ப, “சாக்கடைத் தண்ணியில ‘கேஸ்’ பார்ம் ஆகி இருக்கும் போல, அந்த ரெண்டு பேரும் செத்துட்டாங்க போல இருக்கு” என்றவரிடம் அத்தெருவைச் சேர்ந்த ஒருவர், “அவனுங்க செத்துத் தொலைஞ்சா பரவாயில்லை. அடைப்பை எடுத்துட்டாங்களா?” என வினவ.

“இல்ல ஸார். இன்னும் அடைப்பு சரியாகல, அதுக்குள்ள இவனுங்க வேற செத்துத் தொலைச்சிட்டாங்க” என்று சலிப்புடன் பதில் அளித்தார். பின் கண்பார்வை இழந்து உயிர் பிழைக்கப் போராடிக்கொண்டு இருக்கும் அந்தத் துப்புரவுத் தொழிலாளியைக் கூட்டதினருடன் சேர்ந்து வேடிக்கை பார்க்கத் துவங்கினார்.

அந்தத் துப்புரவுத் தொழிலாளிகள் குளிப்பதற்கு வைத்து இருந்த பிளாஸ்டிக் பக்கெட் தண்ணீரில் காகம் ஒன்று சிறகுகளையும் தலையையும் சிலுப்பியபடி மூழ்கி மூழ்கிக் குளித்துக்கொண்டு இருந்தது.

– உயிர்மை, நவம்பர் 2007.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *