சர்க்கரைப் புலவர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 6, 2025
பார்வையிட்டோர்: 1,722 
 
 

வசன கவிதை நடையில் விரியும் சிறுகதைகள்

அறிவழகன் தன்னுடைய சின்னஞ்சிறு அலுவலகத்தில் இருக்கையில் அமர்ந்து அலுவலில் மூழ்கியிருந்தான் .

“நீர்தான் துப்பறியும் அரிமா தமிழ்த்தம்பியோ?”

கம்பீரம் கலந்த பெண் குரல் கேட்டு தலையை நிமிர்த்தினான் அறிவழகன் .

அங்கு மிடுக்கான காவல் துறை பெண் அதிகாரி பவானி நின்று கொண்டிருந்தார். அவர், அறிவழகன் பாலகனாய் இருந்த போது அவன் வசித்து வந்த அடுக்ககத்தில் பக்கத்து வீட்டில் இருந்தவர்.

“வாருங்கள் அக்கா என் குடில் மன்னிக்க என் சிறு அலுவலகம் தேடி வந்துள்ளீர்கள் நன்றி”

முகம் மலரப் பேசினான். பவானி அவனுடைய மேசைக்கு எதிரே இருந்த ஆசனத்தில் அமர்ந்தார் . தண்ணீர் புட்டியை அவரிடம் அளித்தான் அறிவழகன். “உன்னை இளம் வயதுக் காரனாக காட்டிக் கொள்ள எனக்கு தமக்கை இடம் கொடுத்து விட்டாய் போலும். போகட்டும்… துப்பறியும் பணிக்கு எதற்கு புனைபெயர்? அறிவழகன் பெயருக்கு என்னதான் குறைச்சலோ?”

“குறைச்சல் ஒன்றும் இல்லை தான் . அன்னையின் பெயர் தமிழ்ச்செல்வி அப்பாவின் பெயர் நல்ல தம்பி இருவர் பெயரையும் இணைத்து தமிழ்த்தம்பி”

“கொள்ளைப் பாசமுள்ள பிள்ளை தான் நீ.. உன்னிடம் அதிகம் அளவளாவ என்னிடம் நேரமில்லை … இந்த கோப்பைப் பார். சர்க்கரைப் புலவர் என்ற பெயரில் பல ஏடுகளில் ஒருவர் எழுதிய கட்டுரை கத்தரித்தல்களின் தொகுப்பு இது . இந்தப் பெயரில் ஒளிந்திருக்கும் நபர் யார் என்று நீ கண்டுபிடிக்க வேண்டும் இதுதான் நான் உனக்கு அளிக்கும் பணி . இரண்டு நாட்களில் பணியை முடி .. உங்களால் முடியாத ஒன்றா என்றெல்லாம் கேள்விக் கணைகள் தொடுக்க வேண்டாம். இவர் எங்கள் காவல் துறையைப் பற்றியும் எழுதுகிறார்.. பல பெரும் புள்ளிகளைப் பற்றி எல்லாம் எழுதுகிறார். அதனால்…”

“சரி அக்கா.. மன்னிக்க சரி மேம்.. கேள்வி கூடாது என்று கூறி விட்டீர்கள். நான் முயன்று பார்க்கிறேன்..”

“இதைத் தான் நான் எதிர்பார்த்தேன் . என் கைபேசியிலிருந்து உனக்கு அழைப்பு விடுத்துள்ளேன். அந்த எண்ணைக் குறித்துக் கொள். இரண்டு நாட்களில் எனக்குத் தகவல் கூறு வருகிறேன் வாழ்த்துக்கள்”

விடை பெற்றுச் சென்றார் பவானி .

இரண்டு நாட்கள் கழித்து அறிவழகன், பவானியுடன் கைபேசியில் தொடர்பு கொண்டான் .

அவன் அவரிடம் பகிர்ந்ததோ அதிர்ச்சித் தகவல்

“வணக்கம் மேம் … அறிவழகன் இவ்விடம்”

“சொல்லு அறிவு துப்பு துலக்கினாயா அவரைப் பற்றி … “

“அவரைப் பற்றி அறிந்து கொண்டு அவர் எண்ணையும் தெரிந்து கொண்டு அவருடன் தொடர்பு கொண்டேன் … அவர் இன்று காலை பூங்காவுக்கு என்னை வரச் சொன்னார் அவருடைய படத்தையும் எனக்குப் பகிரந்து இருந்தார் . ஆனால் நான் அவரைச் சந்திப்பதற்கு முன்பாக துன்ப சம்பவம் நேர்ந்து விட்டது…”

“என்ன ஆனது.. விரைவில் சொல்லு இழுக்காமல்”

“அவர் அமர்ந்து இருந்த திண்ணையை நோக்கி நான் செல்வதற்கு முன்பாக இமைப் பொழுதில் ஒருவன் வந்து அவரைத் தாக்கி சாய்த்து விட்டான் . நொடிப் பொழுதில் அவரது உயிர் உடற்கூட்டை விட்டுப் பிரிந்து விட்டது. நடைப்பயிற்சி சென்ற மூத்த குடிமக்கள், தாக்கிய ஆளைப் பிடித்து கட்டிப் போட்டு காவல் துறையினரிடம் தந்து விட்டனர் . இப்பொழுது அவரது பூத உடல் உடற்கூறு ஆய்வுக்குச் சென்று இருக்கிறது. நான் அரசு மருத்துவமனையில் உள்ளேன்..தாங்கள் வர வேண்டும் அவரது நல்லுடலைப் பெற்றிட…”

“நான் ஏனப்பா வர வேண்டும் அவரது உறவினர் யார் என அறிந்து தகவலை பக்குவமாகச் சொல்”

“அதிகாரி அவர்களே சர்க்கரைப் புலவர் வேறு எவரும் இல்லை தங்களையும் தங்கள் தங்கையையும் சீராட்டி பாராட்டி வளர்த்து ஆளாக்கிய பெருமகன் தங்கள் சிற்றப்பா சக்கரபாணி…”

பவானியின் கரங்களிலிருந்து அவரது கைபேசி நழுவி விழுந்து விட்டதை அறிவழகன் உணர்ந்தான்.

– கூண்டை விட்டு வெளியே வந்த பறவை, வசன கவிதை நடையில் விரியும் சிறுகதைகள்.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *