கரிப்பு மணிகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 22, 2024
பார்வையிட்டோர்: 2,225 
 
 

(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4

சேல் பட்டு அழிந்தது செந்தூர்
வயல் பொழில் தேங்கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடி
யார் மனம் மாமயிலோன் 
வேல் பட்டு அழிந்தது வேலையும்
சூரனும் வெற்பும் அவன் 
கால் பட்டு அழிந்தது இங்கு என் 
தலை மேல் அயன் கையெழுத்தே… 

கையிரண்டையும் தலைமேல் உயர்த்திக் குவித்துக், செந்தூர் முருகன் சன்னிதியில் மனங்குழைய நிற்கிறார் அருணாசலம். திருநெல்வேலி சென்று வருவதென்றால் வரும்போது அலைவாயில் மூழ்கி, முருகனைத் தரிசித்து அவன் காலடியில் மனச்சுமையை இறக்கி ஆறுதல் தேடுவ தென்றும் அவருக்குப் பொருள். 

தூத்துக்குடி சென்று திருநெல்வேலிக்குச் செல்வதை விட, திருச்செந்தூர் முருகனைக் கண்டு செல்வதென்றால் ஓர் ஆறுதல்,வயது வந்த பிள்ளை, கல்வி வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டு தானும் முன்னுக்கு வந்து நாட்டின் பெருமையை உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோள் ஓர் ரேகையளவும் இல்லாமல் அற்ப காரணங்களுக்காக அடிதடியிலா இறங்குவான்? கல்லூரி விடுதியில் இரண்டு கோஷ்டிகள் ஒருவருக்கொருவர் சண்டை, அதுவும் சாதிச் சண்டை விடுதி அறையில் சக்திவேல் ஒரு அரசியல் தலை வரின் பெயரை எழுதி வைத்தானாம். இன்னொரு மாண வன் அதை அழித்துவிட்டு வேறொரு அரசியல் தலைவரின் பெயரை சூட்டினானாம். இவர் ஒரு ஜாதி, அவர் ஒரு ஜாதி. ஆக நெருப்பு பொறி பறந்து அடிதடியில் மோதிக் கொண்டிருக்கிறார்கள். 

”முருகா! நீ என்றைக்கு இவர்களுக்கெல்லாம் நல்ல புத்தியைக் கொடுக்கப் போகிறாய்!” 

குடும்பம் அவற்றின் நிமித்தமான எண்ணற்ற பிரச்னைகள் எல்லாவற்றையும் சுழற்றி அவன் காலடியில். வைத்து விட்டுச் சிறிது நேரம் மெய்மறந்து நின்று ஆறுதல் கொள்கிறார். பன்னீர் இவைப் பிரசாதமும் குங்குமமும் வாங்கிக் கொண்டு வெளியே வருகிறார். 

மரத்தடியில் நின்று ஈரவேட்டியை உயர்த்திப் பிடிக்கிறார். 

கிழக்கே தகத்தகாயமாகத் தங்கக் கதிரவன் அவை வாயில் பட்டாடை விரிக்கிறான். எத்தனை நாட்கள் பார்த்திருந்தாலும் அலுக்காத காட்சி. சில நாட்களில் மனம் குழம்பி ஆற்றாமையில் அல்லலுறும்போது, பஸ்ஸுக்குக் கொடுக்கக் காசில்லாமல் பொடி நடையாக. நடந்தே அலைவாய் முருகனைக் காண வந்திருக்கிறார். அந்தக் மேனியை நனைத்து, உள்ளத்தை அவன் கோலத்தில் நனைத்துக் கொண்டால் அந்தச் சுகமே தனி. 

எத்தனை ஆண்டுகளாகவோ அலைவாய் முருகனைக் காண வருகிறார். இப்போது, எத்தனை மண்டபங்கள் எத்தனை கூட்டங்கள்! பயணிகளை ஏற்றி வரும் ‘டூரிஸ்ட் பஸ்கள் கார்கள் என்று சந்நிதி முழுவதும் கும்பல். பயணி யர் விடுதிகள் வேறு மாடி மாடியாக எழும்பியிருக்கின்றன. ஆனால்… 

முருகனைச் சுற்றி வேடக்காரர்கள் மலிந்து கிடக்கின் றனர். எங்கு பார்த்தாலும் எச்சில் துப்புபவனும், இயற் கைக் கடன் கழிப்பவனும், அங்கேயே இட்லி வாங்கித் தின்பவனும் படுத்துக் கிடந்து பிச்சை வாங்கும் கபடப் பண்டாரமும், தங்கள் செல்வ நிலையைத் தம்பட்ட மடித்துக் கொண்டு முருக பக்தியென்று கள்ளக் கண்ணீர் விடும் போலிகளும் அலைவாய் முருகனைச் சூழ்ந்திருக்கின் றனர். இதுதான் இன்றைய உலகின் ஓர் மாதிரித் துண்டு! வேட்டியை ஆட்டிக் காய வைத்து உடுத்திக் கொண்டு சட்டையை அணிந்து கொள்கிறார் அருணாசலம். முதல் நாளிரவே எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. பசி வயிற்றை கிண்டுகிறது. 

நீண்ட சந்நிதித் தெருக் கொட்டகை வழியே நடந்து வருகையில் மண்டபத்தில் உள்ள ஐயர்கடையில் ஏறி அமர்ந்து கொள்கிறார். மூக்குக்கண்ணாடியை மாட்டிக் கொண்டு காலைத் தினசரியைப் பார்க்கிறார். ஐந்து ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்து ஆச்சி அவரை மகனைப் பார்த்து வர விரட்டினாள். இன்னும் ஒரு ரூபாய் எழுபத்தைந்து பைசா மீதி இருக்கிறது பஸ்ஸுக்குக் கொடுத்து, நான்கு இட்டிலியும் காப்பியும் சாப்பிட முடியும். 

அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது நயினார் பிள்ளை வருகிறான். “என்ன அண்ணாச்சி? எப்ப வந்திய?’ என்று கேட்டுக் கொண்டு அமருகிறான். 

நயினார்பிள்ளை அந்தக் காலத்தில் திருச்செந்தூர் வட்டக் காங்கிரஸ் இயக்கத் தொண்டர்களில் அரும்பாடு பட்டுப் பெயரும் புகழும் பெற்றவன். கள்ளுக்கடை மறிய லுக்கு அவரும் அவனும் சேர்ந்து சென்றிருக்கிறார்கள். “ஸால்ட் இன்ஸ்பெக்டர்” லோன் கொலைச் சதியில் சிறைக்குச் சென்று வந்தவன். இந்நாள் மண்டபத்தில் ஒரு புறம் தையல்கடை வைத்திருக்கிறான். பெண்கள் உடை கள் தைக்கிறான் அரசியலுக்கே வருவதில்லை. அவன் மட்டுமில்லை. அந்நாட்களில் ஆர்வமும் உண்மையுமாக நாட்டு விடுதலையையும் நல்வளர்ச்சியையும் நம்பிப் பாடு பட்ட தொண்டர்கள் எல்லோருமே இப்படித்தான் விலகி விட்டார்கள். 

“எங்க இப்படி வந்திய? தொழில் நிலம் எப்படி இருக்கு?” 

“எப்படி இருக்கு? ஒண்ணும் சொல்றதுக்கில்ல. நேத்துக்கூட டி. ஆர். ஓவைப் பார்க்கணுனும்தா தங்கி 

ஆர்.ஓவைப் இருந்தேன்.அமைச்சர் வந்திருக்கிறார்ன்னாவ. பெடிசன் எதுவும் தயார்ப்பண்ணிட்டுப் போகல. ஒண்ணும் வாவன்னா இல்ல நயினாரு. அந்தக் காலத்துல ஒரு முடிவெடுத்தா எப்படி எல்லாரும் ஒத்துக் கிளர்ச்சியோ, எதுவோ பண்ணினம்? அவனுக்கு அப்பவும் பெண்சாதி பிள்ளிய இல்லாமலா இருந்தாவ? இல்லாட்டா வெள்ளக் காரனை வெரட்டிருக்க முடியுமா? இப்ப ரொம்ப சுயநல மாப் போச்சு. அவனவன் தன் மட்டுக்கு நல்லா வந்திட ணும்,பணம் சம்பாதிக்கணும்னு எதுவும் செய்யிறான். 1947ல் இந்திய சர்க்கார் உப்புவரி வாணான்னு சட்டம் போட்டது. அந்தக் காலத்தில் காங்கிரசில் இருந்தவன், இல்லாதவன் எல்லோருமா ஒத்துமையாக் கூடித்தான், தூத்துக்குடி சப்கலெக்டரிடம் மகஜர் கொடுத்தோம். எங்களுக்கு நிலம் பட்டா போட்டுத் தரணும்னு. அப்போதும் கூட்டுறவுச் சங்கமாவது இன்னொண்ணா வதுன்னு பணபலமுள்ளவன் எதிர்த்துத்தா மறிச்சான். அப்படியும் இருநூற்றைம்பது பேர் ஒத்துமையாக்கூடி இருந்ததால், இருநூறு ஏகராவுக்கு மேல் ஒதுக்கினாங்க. தன்பாட்டளம் செய்யுங்கள்னு அப்போது புறம்போக்கு… நிலம் குறிச்சுக் காட்டினோம், ஒதுக்கினாங்க. அப்போது இந்த ஓடை நடுவில் வந்து மறிக்கும். ஓடைக்கப்பால் ஆளையே விழுங்கும் தனி முதலாளியின் அளம். ஆயிரக் கணக்கான ஏக்கராகும்னு ஒரு நினைப்புமில்ல. கடோ சில என்ன ஆச்சு? இருபது வருசமாகப் போவுது. ஓடை குறுக்கிடுவதால் பாதை இல்லை. லாரி வந்து உப்பெடுக்க முடியாது. அதனால், நாம் அயனானவரி உப்புவாரினா லும் மூடை எட்டணாக்கும் முக்கா ரூபாய்க்கும் சீரழியிது. வண்டிக்காரன் ஓடையில் இறங்கி வந்து முக்கால் ரூபாய் மூடைன்னு இங்கே உப்பெடுத்து அந்தால மூணு ரூபாய்க்கு விக்கிறான். அதனால், இந்தத் தம்பாட்ட ளத்தில ஒண்ணும் முன்னுக்குவர முடியாதுன்னு அவன வன் நிலத்தைச் சும்மா போட்டு வச்சிருக்கான். முன்ன, இருபதம்ச திட்ட காலத்துல, இதுக்கு எப்படியானும் வழி பிறக்குமின்னு நம்பி, பாலத்துக்குத் திட்டமெல்லாம் போட்டு, பணம் செலவு பண்ணி எல்லாம் எழுதி எடுத்திட்டு தாங்க கலக்டரப் பார்த்தோம். அப்ப இதான் கேட்டாரு. இருநூறு ஏக்கராவில் பத்து ஏகராகூட நீங்க அளம் போடலியே? இது என்ன கூட்டுறவுன்னாரு. நிலம் வச்சி ருக்கிறவ அங்கங்க பிழைக்கப் போயிட்டான். அன்னிக்குக் காந்தி எதுக்கு உப்பு சத்தியாக்கிரகம் பண்ணப் போனாரு? ஒரு ஏழை, தன் கஞ்சிக்குப் போடும் உப்புக்கு வரிகொடுக்க வேண்டாம் என்பது மட்டுமல்ல, அவனவன் சொந்தமா பாடுபட்டு தன் நிலத்தில் விளைவெடுக்கணும். அவனு டைய தேவைக்கு அவன் சம்பாதிக்க முடியும்னு சொன்ன அந்த அடிப்படையில் தான் தன்பாட்டளம்னு லட்சியம் வச்சோம். இப்ப…ஆயிரக்கணக்கானத் தளிப்பட்ட முத லாளிகள் தன் பாட்டளம் பெருக்கியிருக்கா? குடும்பம் குடும்பமா அங்கே கொத்தடிமை செய்யப் போவுறாங்க. பொம்பிளப்பிள்ளைக, தாழக் குறுத்துப் போல, இம்மாட் டுப் பொடியலுவ, எல்லாரையும் கங்காணிய கண்ட்ராக் டுக, கூட்டிட்டுப் போறாவ. இதுக்கா சொதந்தரம் வாங் கினம்…” 

அருணாசலத்துக்குப் பழைய நண்பர் கிடைத்து விட் டால் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்து விடுவார். வைத்த இட்டிலியை இன்னமும் தொடவில்லை. 

“இப்பக் காலம் அந்தக் காலம் இல்ல அண்ணாச்சி. எல்லாம் யாபாரம் தானிப்ப. தாய் மகன் தொடர்பு, புருசன் மனைவி பிரியம் எல்லாமே இது செஞ்சா இதுக்குப் பர்த்தியா என்ன கெடைக்கும்னு ஆயிப்போச்சு. அந்தக் காலத்துல கதர்ச்சட்டை போட்டவங்களைப் போலீசு மகன் தேடிட்டுப் போவான். அவனுடைய தாயார், தலை மறைவுக்காரங் களைத்தானே ஒளிச்சிவச்சுச் சாப்பாடு போடுவா. இப்ப நினைச்சிப்பார்க்க முடியுமா? அது வேற காலம்; இது வேற… அதைச் சொன்னாக் கூட இப்ப ஆருக்கும் புரியாது.” 

நயினார் பிள்ளை சொல்வது உண்மைதான் என்று அவருக்குத் தோன்றுகிறது. அவருக்கு இரண்டு பெண்கள் தாம். படிக்கப்போட்டு ஒருத்தி டீச்சராக இருந்தாள். இரண்டு பேரையும் கட்டிக் கொடுத்து விட்டார். பெண் குழந்தைகள் தேவலை என்று தோன்றுகிறது. 

எக்ஸ்பிரஸ் பஸ்ஸுக்கு திருச்செந்தூரிலிருந்து, இருபது நிமிடம்கூடப் பிடிக்கவில்லை. ஊர் வந்துவிட்டது. மாதா கோயிலின் முன் கொண்டுவந்து இறக்கிவிட்டான். வள்ளி பள்ளிக்கூடத்துக்கு வந்து கொண்டிருக்கிறாள். ஆண் பையன், படிப்பதைக் காட்டிலும் ஊர் திரிவதில்தான் குறிப்பாக இருக்கிறான். குமரனைக் காணோம். 

“ஏட்டி, குமரன் பள்ளிக்கூடம் வரல?” 

“அவன் அம்மாளிடம் துட்டு வேணும்னு அழுது பெரண்டிட்டிருக்கா என்று செய்தி தெரிவிக்கிறாள். அன் றாடம் ஐந்து பைசா வைத்தாலே பள்ளிக்கூடம் போவேன் என்று அடம் பிடிக்கிறான். பள்ளிக்கூடம் செல்வதற்காக ஊக்கக் காசாக ஆச்சி கொடுத்துப் பழக்கி, அது இல்லாமல் போகமாட்டேன் என்று விழுந்து புரளுகிறான். 

வீட்டு வாசலில் மனைவி குந்தியிருந்து ஈருருவிக் கொண் டிருக்கிறாள். அவரைக் கண்டதுமே எழுந்து “வேலுவைக் கூட்டிவரல…?” என்று கேட்டுக் கொண்டு உள்ளே பின் தொடருகிறாள். அவர் பதில் ஏதம் கூறாமல் சட்டையை எடுத்து ஆணியில் மாட்டுகிறார். ஞானம் படுத்தபடியே எதற்கோ கோபித்துக் கொண்டிருக்கிறான். 

“பையனுக்கு… ஒண்ணில்லியே?” 

“கல்லுக்குண்டாட்டம் இருக்கா? அவனுக்கென்ன, கொளுப்புதா அதிகமாயிருக்கு. எனக்கு இவம் படிச்சி உருப்படுவான்னு தோணல்.” 

“நீரு ஏம் எறிஞ்சு விழுறீம்? போலீசுச் சவங்க எதுக்காக நாமபெத்த புள்ளயப் போட்டு அடிக்கணும்? அவனுவ கொட்டடில அடிபடவா நாமபெத்து விட்டிருக்கம்?” 

“மூடு ஒ ஊத்தவாய. போலீசுக்காரன் ஏன் சொல்லுற? திமிரெடுத்துப் போயி இவனுவ திரியிறானுவ. படிக்கப் போனவன் படிப்பில் இல்ல கவனம் செலுத்தணும்? ரூமுக்குப் பேர் வைக்கிறானாம்? மானக்கேடு…சரி, இப்ப என் கோவத்தை நீ கிளப்பாத. சடையன் வந்தானா? பொன் னாச்சி எங்க? பச்சைய இளந்தண்ணி குத்திவைக்கச் சொன்னே, எங்கே, வாரப் போயிருக்கானா? தங்கபாண்டி வண்டி, கொண்டாந்தாலும் வருவான்…” 

“அல்லாம் குத்திக்கெடக்கு. வண்டியும் மோட்டாரும். வந்து உம்ம உப்ப வாரிட்டுப் போப்போரா! ஏங்கெடந்து கனாக்காணுஹீம்!” என்று நொடித்துவிட்டு ஆச்சி உள்ளே செல்கிறாள். 

திடீரென்று நினைவுக்கு வந்தவராக அவர் கத்துகிறார். 

“அந்தக் குமரன் பயல ரெண்டு உதை கொடுத்துப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பக் கூடாது? இந்தப் பய ஏன்- இன்னும் எந்திரிக்காம படுத்திருக்கிறான்? லே, எந்திரிந்து காலம பல்விளக்கி, சாமி கும்பிடணும்னு உனக்கு எத்தினி தடவ சொல்லியிருக்கேன்? எந்திரிலே?” 

“அப்பா, பொன்னாச்சியும். பச்சையும் ஊருக்குப் போயிட்டாவ” என்று ஞானம் ஆர்வத்துடன் எழுந்து அறிவிக்கிறான் பதிலுக்கு. 

அவர் விழித்துப் பார்க்கிறார். 

“என்னலே உளறுறே?” 

“நெசமாலும், அவிய வந்து அளச்சிட்டுப் போயிட்டா தூத்தூடிக்கு” அவருக்கு எதுவும் புரியவில்லை. “என்ன சொல்றா. இவ?” 

சிதம்பர வடிவு அவரை நிமிர்ந்து பார்க்காமலே அகில் எதையோ எடுத்துக் கொழிக்கிறாள். 

அவர் வந்து பின்புறமாக அவள் முடியைப் மற்றுகிறார். 

“பிள்ளையளை எங்கே அனுப்பிச்ச…?” 

“ஐயோ…. முடிய வுடும்?” என்று அவள் கூந்தவைப் மற்றிக் கொள்கிறான். “போறம் போறம்னு சொல்லுறவள நா புடிச்சா வச்சுக்க முடியும்? அவ சின்னாச்சியாமே. அந்த சக்களத்தி வந்தா. வந்து கொமஞ்சா, மாமா ஊரில் இல்ல, பொறவு என்ன வந்து ஏசுவாண்ணு சொன்னா அவ கேக்கா இல்ல, நீரு என்னப் போட்டுக் காச்சுவீம்!” என்று முன்றானையை முகத்தில் தேய்த்துக் கொண்டு மூக்கை சிந்து கிறாள். “அவ… சின்னச்சியிட்ட என் சொன்னா தெரியுமா சோறுண்டு ரெண்டு நாளாச் சுண்ணா. நா அப்படிப் பாவியா? ரெண்டுநாளா முக்காத்துட்டு கெடயாது. இவ போவேண்ணு குதிய்க்கா கோயில்காரரு வீட்டேந்து மூணு ரூவா அவளே வாங்கிட்டு வந்து போயிட்டா. தம்பியயும் கூட்டிட்டு. நா பட்டினி கெடக்கே. எம்புள்ளய பட்டினி கெடக்கு; வராத விருந்துக்கு இருந்த அரிசிய வடிச்சிப் போட்ட. கடயில் கடன் சொல்லி அவதா காப்பித்தூளும் கருப்பட்டியும் வாங்கியாந்தா!”

அவருக்கு இதில் ஏதோ சூது இருக்கிறதென்று புலனாகிறது.

“இத்தனை நாளா இல்லாத சின்னாத்தா ஒறவு எப்படி முளைச்சிருக்குன்னு ஒனக்கு அறிவு வேண்டாம்? அளத்தில் பாத்தி மெதிக்க ஆள் கேட்டிருப்பா. அந்தக் காலத்துல் தேயிலைத் தோட்டத்தி லே மலங்காட்டில சாவுறதுக்கு எப்படி ஆள் பிடிப்பாளாம் தெரியுமா? தேனும் பாலும் வழியிம்… காக்காய ஓட்டத்தா ஆளும்பானாம்?” என்று அவர் இரைகிறார். 

“நானென்ன கண்டே! நீரு எங்கிட்டச் சலம்பாதீம்!” என்று கூறிய அவள் கூந்தலை அள்ளிச் செருகிக் கொண்டு சுளகில் கொழித்த அரிசிக் குருணையுடன் அடுப்படிக்குச் செல்கிறாள். 

தூத்துக்குடிக்குச் செல்ல வேண்டுமானால் கையில் பணமில்லை. அன்று காலையில் தொழி திறந்து பாத் திக்கு நீர் பாய்ச்சியிருந்தார். உப்பு குருணைச் சோறாக இறங்கியதும் இளந்தண்ணீர் பாய்ச்சும்படி பச்சையிடம் கூறிச் சென்றிருந்தார். உப்பு வாருவதற்கு இறங்கியிருக்கும்.

செந்தூர் முருகளை வாய்விட்டுக் கூவி அழைத்துவராக  அவர் தலையில் ண்டைப் போட்டுக் கொண்டு நடக்கிறார். 

வெகுநாட்கள் அவர் திருமணமே செய்து கொள்ள வில்லை.தாயார் மருமகளைப் பார்க்காமலே போகிறேனே என்று கண்களை மூடினாள். சிதம்பரவடிவு உறவு பெண் தான். செவந்திக்குத் கட்டி வைத்த மறுவருடத்திலேயே இவளை மகனுக்குக் கட்டி வைத்தார் தந்தை. 

புருசன் சரியில்லாமல் செவந்தி அண்ணன் வீட்டுக்கு வந்தாலும் சோற்றுக்குப் பாரமாக இருக்கவில்லை. இட்லிக் கடை போட்டாள். பரவர் வீடுகள் எல்லாம் அவளுக்கு வாடிக்கை. பெட்டி முடைவாள், வலைகூடப் பின்ன& கற்றாள். சுறுசுறுப்பும் கருத்தும் உடைய அவள் கையில் எப்போதும் காசு இருக்கும். அட்டியலும் கை வளையலும் மகளுக்கென்று வைத்திருந்தாள். புருசன் இடித்துவிட்டு வந்து நகையைக் கேட்டான் என்றுதானே அவள் புருச னையே வேண்டாம் என்று விலக்கிவிட்டு வந்தாள்? 

உழைப்பின் காரணமோ, அவருடைய போதாத காலமோ, அவளுக்கு நீர் வியாதி வந்தது. இரண்டு மாதம் படுக்கையில் கிடந்துவிட்டுக் கண்ணை மூடிவிட்டாள். தன் பாட்டளத்தில் முழுக்கஞ்சி கூடக் குடிக்க முடியவில்லை கூட்டுறவு உப்புத்தொழிலாளர், உற்பத்தி விற்பனைச் சங்கம் என்ற ஒன்றை உருவாக்கவே பங்குகள் சேர்க்க வேண்டியிருந் தது. இப்போதும் அவர் பேரில் முக்கால் ஏக்கர்,செவந்தி பேரிலும் அவள் மகன் பச்சை’ பேரிலும் என்று மூன்று பங்கு… இரண்டேகால் ஏக்கரில் அவர் உப்பு விளை விக்கிறார்; அவளுடைய வேண்டிய தாகி விட்டது. நகைகளை எல்லாம் விற்றுவிட சக்திவேலுவுக்கு அரசு உபகாரச் சம்பளம் கிடைக்கிறதென்றாலும், அவன் செலவு அவர் கையை அதிகமாகவே கடிக்கிறது. தன்பாட்டளம் கூட்டுறவில் நல்வளர்ச்சி பெற்றுப் பொருளாதார அளவில் அவர்கள் முன்னுக்கு வருவதைப் பற்றி அவர் இன்னும் கனவு காண்கி றார். பொன்னாச்சியை நல்ல பையனாக, உழைப்பாளியாக குடிக்காத, பிறன் மனை நோக்காத ஒரு மாப்பிள்ளைக்குக் கட்டி, இந்த அளத்தில் பாடுபடுபவனாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தார். பெண்கள் நான்கு சுவர் களைத் தாண்டி,பாத்திக் காட்டில் இன்னொருவன் அடிமை யாக வேலைக்குச் செல்வதனால் ஏற்படும் கேடுகளை அவர் அறிந்தவர். அதனால்தான் இந்தச் சமுதாய அமைப்பில், பெண்களைத் தங்கள் இல்லம் தாண்டிப் பாதுகாப்பில்லாத வேலைக்கு அனுப்புவதைக் காட்டிலும் கிடைக்கும் கால் வயிற்றுக் கஞ்சி யே மேல் என்று நிச்சயமாக நம்பியிருந்தார். 

ஓடையில் நீரேற்றம் தெரிகிறது. ஒதுக்கிவிட்டிருக்கும் மீன்பிடி வள்ளங்கள் ஒன்றும் இல்லை. இறால் பிடிப்பதற் கென்று குத்தகை பேசி ஏழாயிரம், எட்டாயிரம் கடன் பெற்று தூத்துக்குடியில் இருந்து ‘ரெடிமேட் வள்ளங்’களை நிறைய வாங்கி விட்டிருக்கின்றனர். தாமிரபரணித்தாய், கடலரசனைத் தழுவப் பல கைகளாகப் பிரிந்து கொண்டு ஆவலோடு வ வரும் இடம் அது. ஒவ்வொரு ஓடையும் ஒரு கையின் விரல்களைப் போல் தெரிகிறது. முட்புதர்களும் தாழைகளுமாக நிறைந்த, அந்த இடத்தில் சங்கமுகேசுவரர் கோயில் இருக்கிறது. ஆடி அமாவாசை, தை அமாவாசை என்றால் காட்டுப் பாதையில் நடந்து வந்து நீராடி ஈசுவர னைத் தரிசனம் செய்பவர்கள் உண்டு. கோயிலுக்கு மேற்கே மூங்கில் துறை ஊரில் இருந்து வந்து குருக்கள் பூசை செய்வார். 

பாலத்தை மேற்கே ஓடை பிரியுமுன் போட்டு விட்டால், லாரி வரும் சாலை வந்துவிட்டால்; அந்த அளங்கள் வளமையை வாரிக் கொடுக்குமே? 

ஆனால் பாலம் கட்டும் யோசனை, திட்டம் எல்லாம் தயாராக்கிக் கொடுத்த பின் ஓடையின் பரதவரி வள்ளங்கள் நிறுத்துவதற்குத் தடங்லாகுமென்றும், அவர்கள் பாயை விரித்துக் கொண்டு பாலத்தடியில் செல்ல முடியாதென்றும் பாலம் கட்டக் கூடாதென்றும் மனுக் கொடுத்திருக்கிறார் களாம். 

அந்தச் செய்தியே கனவுப் பூங்காவில் வீழ்ந்த இடிபோல் தோன்றியது. இங்கு… பொன்னாச்சியையும் மகளையும் சின்னாத்தா கூட்டிப் போயிருக்கிறாள்! 

இத்தனை நாளாக இல்லாத கரிசனமா, வாஞ்சையா? எது? 

அளத்தில் உப்பு கண்ணாடி மணிகளாக, பரல்களாக இறங்கியிருக்கிறது. ஆயிரமாயிரமான ஏக்கர் நிலங்களில் ஆட்களை விரட்டி செய்நேர்த்தி செய்தவர்களுக்குக்கூட இவ்வளவு நேர்த்தியாக உப்பு இறங்கியிருக்காது. மூட்டை ஐந்து ரூபாய்க்குத் தாராளமாகப் போகும். இது…இதை தங்க பாண்டி, வண்டியை ஓடையில் இறக்கிக் கொண்டு வந்து அலட்சியமாக அள்ளிப் போட்டுக் கொண்டு போவான். அவருக்கு எப்போதும் முடை. அவன் கொடுத்த பணத்தை வாங்கிக் கொள்வது கட்டாயமாகி விடுகிறது. அவனிடம் உப்பு கண்டு முதலாகு மூன்பே கடன் வாங்கி விடுகிறார். இப்போது அவன் வந்தால், உப்பை வாரிவிடலாம். பணம் இருபது ரூபாய் வாங்கிக் கொள்ளலாம்… 

சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு அங்கு பன ஓலை யினால் வேயப்பெற்றிருக்கும் சிறு அறைக் கதவைத் திறந்து வாருபலகை, வாளி ஆகியவற்றை எடுக்கிறார். பாத்தியின் கீழிறங்கி, சலசலவென்று கலகலத்துச் சிரிக்கும் மணிகளை வார் பலகையில் கூட்டி ஒதுக்குகிறார். 

தொலைவில் தங்கபாண்டியின் வண்டிச் சத்தம் கட கட வென்று கேட்கிறது. 

அத்தியாயம்-5

கிழக்கே கடலின் அடிவரையிலிருந்து பொங்கிவரும் விண்மணி கண்களைக் குத்தும் கதிர்களைப் பரப்புகிறான். வாயிலில் பெரிய வளைவில் பனஞ்சோலை ‘ஸால்ட் வொர்க்ஸ்’ என்ற எழுத்துக்கள் தெரியும் கதவுகள் அகன்று திறந்திருக்கின்றன. 

தலைக்கொட்டை எனப்படும் பன்ஓலையால் பின்னிய சும்மாட்டுச் சாதனமும், அலுமினியத்தூக்கு மதிய உணவும் கைகொண்டு ரப்பர் செருப்பும் ஓலைச் செருப்புமாக உப்பளத்துத் தொழிலாளர் அந்த வாயிலுள் நுழைந்து செல்கின்றனர். சிறுவர் சிறுமியர் கந்தலும் கண்பீளையுமாக மேய்ச்சலுக்கு ஓட்டிப் போகும் மாட்டுக் கும்பலை ஒத்து உள்ளே விரைகின்றனர். முடியில் விளக்கெண்ணெய் பளபளக்க, அன்றைப் பொழுதுக்குப் புதுமையுடன் காணப் படும் இளைஞரும் அந்தக் கும்பலில் இருக்கின்றனர். முக்காலும் பாத்திகளில் ‘செய்நேர்த்தி’ முடிந்து தெப் பத்தில் கட்டிய நீரைப் பாத்திகளுக்குப் பாயத் திறந்து விட்டு விட்டார்கள். உப்பை வாரிக் குவிக்கத் துவங்கிவிட்டனர். பொன்னாச்சியும் தம்பியும் வேலைக்குச் சேர்ந்து மூன்று சம்பளங்கள் வாங்கி விட்டனர். இத்தனை நாட்களில் பாத்திப் பண்பாட்டிலேயே மிதித்து அவளுடைய மென்மை யான பாதங்கள் கன்றிக் கறுத்துக் சீறல்கள் விழுந்து விட்டன. 

உப்பளத்து வேலையில் சமுசாரி வேலை’ என்று சொல்லப் பெறும் பசிய வயல் வரப்புகளில் வேலை செய்வது போல் குளிர்ச்சியைக்காண இயலாது. இங்கு உயிரற்ற வறட் சியில், பண்புள்ளவர் செவிகளும் நாவும் கூசும் சொற்களைக் ‘கண்ட்ராக்ட்’ நாச்சியப்பன் உதிர்த்தபோது முதலில் அவள் மருண்டு தான் போனாள்.. அவர்கள் பண்பற்ற வசைச் சொற்களைத் தவிர்த்து மரியாதையாகப் பேசியே அறியார் என்பதை இப்போது புரிந்து கொண்டிருக்கிறாள். 

எல்லை தெரியாமல் ளிரிந்து பரந்து கிடந்த பாத்தி ளைக் கண்டு இன்னமும் அவளுக்கு மலைப்பு அடங்கவில்லை. மாமனின் தன் பாட்டனத்தில் வேட்டி காயப் போட்டாற் போல், பாய்விரித்தாற்போல் பாத்திகளில் உப்பு இறங்கியிருக் கும். இங்கோ…வானக்கடலைப் போல் ஓர் வெண் கடலல்லவா இறங்கியிருக்கிறது? *தெப்பங்களே ஆத்தூர் ஏரிபோல் விரித்து கிடக்கின்றன? 

வேலை செய்யும் ஆட்களோ, பலவிதங்கள் அவளைப் போல் நாச்சியப்பன் கண்டிராக்டின் கீழ் வேலை செய்யும் பெண்கள் பலர் இருக்கின்றனர். வரப்பில் குவியும் உப்பை வழித்துப் பெட்டி பெட்டியாகத் தட்டு மேட்டில் அம்பாரம் குவிக்கும் பணிதான் அவர்களுக்கு. 

உப்பைக் கொத்துப் பலகை போட்டு உடைப்பவர் களில் சில பெண்களும், வாருபலகை கொண்டு உப்பை வாரி வரப்பில் ஒதுக்கும் ஆண்களும் கங்காணிகளின் கீழ் வேலை செய்கின்றனர். ஒரு கங்காணியின் ஆதிக்கத்தில் ஐந்து பேருக்கு மேலில்லை. இவர்களைத் தவிர. தனிப் பட்ட முறையில் மாதச்சம்பளம் பெற்றுக்கொண்டு பணி இசய்யும் தொழிலாளிகளும் உண்டு. தம்பி பச்கைமுத்து வுக்கு அறவைக் கொட்டடியில் வேலை கொடுத்திருக் கின்றனர். உப்பை, அறைவை ஆலைகள் இரவோடிரவாக மாவாக்கிக் குவிக்கின்றன. அந்தத் தூளைப் பெட்டி பெட்டியாகச் சுமந்து கொட்டடிக்குள் குவிக்கும் பணியில் தான் எத்தனை சிறுவர் சிறுமியர்! பச்சைக்குப் பதினாறு வயதாகிவிட்டது என்று அவள் கூறியும் நாச்சப்பன் நம்ப வில்லை. அவனுக்கு நான்கு ரூபாய் கூலி இல்லை. அறை வைக் கொட்டடியில் இரண்டரை ரூபாய்தான் கூலி கிடைக்கிறது. அட்வான்சு பெற்றதுமே சின்னம்மா அவ னுக்கும் அவளுக்கும் காலில் போட்டுக் கொள்ள ரப்பர் செருப்பு வாங்கித் தந்தாள். அவள் அளத்தில் பெட்டி சுமக்கையில் எல்லோரையும் போல் ரப்பர் செருப்பைக் கழற்றி விட்டு, பன்ஓலையில் பின்னி இரண்டு சுயிறுகள் கோத்த மிதியடியை அணிகிறாள். அதுவே ஒருநாளைக்கு ஒரு சோடி போதவில்லை. சனிக்கிழமை மாலையில் கூலி கொடுக் கிறார்கள். தலைப்புரட்ட எண்ணெய், அரசி, புளி, மிளகாய் எல்லாம் தட்டில்லாமல் வாங்க முடிகிறது. சென்ற வாரம் சின்னம்மா அவளுக்குப் புதிய ரவிக்கை ஒன்றும், தம்பிக்குத் துண்டு ஒன்றும் எடுத்து வந்தாள். பருப்பு நிறையப் போட்டு வெங்காயம் உரித்துப் போட்டுக் குழம்பு வைத்துத் திருப்தி யாக உண்டார்கள். அடுத்த சனிக்கிழமைக்குக் கறி எடுத்துக் குழம்பு வைக்க வேண்டும் என்று ஆசையை அப்பன் வெளி விட்டார். பசி…பசி அவிய இந்த உப்புக்கசத்தில் எரிய வேண்டும். 

நாச்சப்பன் பேரேட்டைப் பார்த்துத் தன் கீழுள்ளவர் பேர்களைப் படிக்கிறான். மாரியம்மாலே மூன்று பேர் ஒவ்வொருவருக்கும் ஒரு அசிங்கமான வசையைச் சொல்லிக் கூப்பிடுகிறான். அல்லி…அவள் பிள்ளையையும் தூக்கி வருகிறாள். கொட்டடியில் விட்டுவிட்டு உப்புச் சுமக்க வேண்டும். அன்னக்கிளி… அன்னக்கிளி சூலி. 

பொன்னாச்சியைக் கீழ்க்கண்ணால் பார்க்கிறான் நாச்சி யப்பன். அவன் பார்வையில் அவள் துடித்துப் போகிறாள். அங்கு வேலை செய்யும் பெண்களில் யாரும் பொன்னாச்சி யைப்போல் சூதறியாத பருவத்தினரில்லை. இந்த ஒருமாச காலத்தில் அவன் அவளைப் பார்க்கும் பார்வை மட்டுமே ஆகாததாக இல்லை. போகும்போதும் வரும்போதும் கழுத்தில் தொடுவதும், கையைத் தீண்ட முயல்வதும், இன்னும் அருவருப்பான சைகைகள் செய்வதுமாக இருக்கிறான். பேரியாச்சி என்ற கிழவி ஒருத்தி, கொத்து பலகை போடுவாள். “புதுசா தளதளப்பா இருக்கா, ஏட்டி ஒம்பாடு சோக்குத்தா. சோலிக்கீலியெல்லா சொம்மா போக்குக் காட்டத்தா…” என்று று கேலி செய்தாள். பொன்னாச்சிக்கு நாராசமாக இருந்தது. ஆச்சி, நீங்க பெரியவிய பேசற பேச்சா இது? என்றாள் கோபமாக. 

பேரேட்டில் பெயர் படிக்கும்போதே அவன் பொன் னாச்சியை அன்று கூட்டத்திலிருந்து பிரிக்கச் சூழ்ச்சி செய்து விடுகிறான். 

“ஏவுள்ள ! நீ அவளுவகூட உப்பள்ளப் போகண்டா. இப்பிடி வா சொல்லுற…” 

பொன்னாச்சி தன் விழிகள் நிலைக்க, நகராமல் நிற் கிறாள். மற்றவர்கள் எண்பத்தேழாம் நம்பர் பாத்திபில் குவிந்த உப்பை வாரிக் கொட்ட நடக்கின்றனர். மாசாணம் கொட்டடியில் ஒருபுறமுள்ள கிடங்கறையில் சென்று பெட்டிகள், மண்வெட்டி முதலியவற்றை எடுத்து வருகிறான். 

“அங்கிட்டு வாடி, விருந்துக் கொட்டிடியப் பெருக்கித் துப்புரவு பண்ணு. சாமானமிருக்கி, தேச்சுக்கழுவ…” என்று அவளைக் கையைப் பற்றி இழுக்கிறான். 

அவள் கையை வெடுக்கென்று உதறிக்கொள்கிறாள். மற்றவர் யாரும் காணாததுபோல் செல்கின்றனர். 

விருந்துக் கொட்டடி என்ற கட்டிடம் மிகத் தொலைவில் இருக்கிறது. அதன் வாயிலில் கார்வந்து நிற்கக் கண்டிருக் கிறாள். அங்கு முதலாளிமார் வருவார்கள். அதன் ஓர் புறம் அலுவலகமும் இருக்கிறது. அங்கிருந்துதான் கணக்கப்பிள்ளை சம்பளத்தைப் பெற்றுவந்து ‘கண்ட்ராக்டி’டமோ, கங்காணி யிடமோ கொடுப்பார். 

பொன்னாச்சி விரிந்து கிடக்கும் அந்தப்பாத்திக் காட்டில் அவளை அவன் அழைத்துச் செல்வதை யாரேனும் நிமிர்ந்து யார்க்கிறார்களா என்று கவனித்துக் கொண்டே அச்சம் நடுங்கச் செல்கிறாள். ஆட்கள் ஒவ்வொருவராக இப்போது தான் வருகிறார்கள். விருந்து கொட்டடி என்பது கொட்டடி யில்லை. அது பங்களா போலவே இருக்கிறது. கீழே நடக்கக் கூசும் பளிங்குத் தரையில் அடிவைக்கவே மெத்தென்ற விரிப்பு. பூப்போட்ட திரைகள்; மெத்தென்ற உட்காரும் ஆசனங்கள் அவள் தயங்கியவளாக வெளிவராந்தால் நிற்கிறாள். 

“ஏட்டி,நிக்கிற? இங்ஙன உள்ள வா! சாமானங் கெடக்கு. தேச்சுக்கழுவு, இங்க பெருக்கி, பதவிசாத் துடச்சி வையி! முதலாளி வராக…” என்று சொல்லிவிட்டு கட்டி பின் டத்தைச் சுற்றி உள்ளே அழைத்துச் செல்கிறான். தாழ்வாரத்தில் குழாயடியில் வெள்ளி போன்ற சாப்பாட்டு அடுக்கு கூசா, தம்ளர்கள், தட்டு ஆகியவை கிடக்கின்றன. சோப்புத் தூளை எடுத்துப் போடுகிறான். அவள் துலக்க அமருகிறாள். 

நெஞ்சில் சருக்கருக்கென்று, மணலில் கத்தி தீட்டுவது போன்றதோர் அச்சம் குலைக்கிறது. இது வெறும் பாத்திரம் துலக்க அல்ல. “முருவா… முருவா” என்று உள்ளம் ஓலமிடுகிறது. 

சாமான் துலக்கும்போது, அங்கிருந்து ஓடிவிடப் பின்கதவு திறந்திருக்கிறதா என்று பார்க்கிறாள். பின் கதவு கம்பி வலைகளால் பாதுகாக்கப் பெற்றிருக்கிறது. ஆனால், பூட்டப் படாமல் திறந்து தானிருக்கிறது. அவள் வெகுவிரைவில் பாத்திரங்களைத் துலக்கிக் கழுவிக் கவிழ்த்து வைக்கிறாள். அச்சத்தில் நர உலர்ந்து போனாலும், குழாயில் கொட்டுவது நல்ல நீர் தானா என்று பார்க்கக்கூடத் தெம்பு இல்லை. அந்தத் தாழ்வரையின் ஓர் ஓரத்தில் வேண்டாத சாமான்கள் போடும் ஓர் அறை இருக்கிறது. பெயின்ட் தகரங்கள், கொத்து வேலைக்கான தட்டுமுட்டுக்கள், நார்ப் பெட்டிகள், உடைந்து போனதோர் நாற்காலி ஆகியவை இடம் கொண்ட அந்த அறையில் அவன் ஏதோ பார்ப்பவனாகப் பார்த்துக் கொண்டு நிற்கிறான். “இங்க வாட்டி, வாரியல் இருக்கு பாரு. சுத்தமா இந்த ரூம்பைத் தட்டிப் பெருக்கு!” 

அவள் பருந்தைக் கண்ட கோழிக்குஞ்சாகப் பதுங்கி தோளைப் போர்த்துக் கொண்டு உள்ளே செல்கிறாள். 

வாரியல் அவிழ்ந்து கொட்டிக்கிடக்கிறது. அவள் அதைத் திரட்டிக் கட்டும்போது அவன் அவள்மீது விழுந்து மாராப்புச் சேலையைத் தள்ளி விடுகிறான். 

அவள் பலம் கொண்ட மட்டும் அவன் கையைக் கிள்ளித் தள்ளுகிறாள், “என்னியவிடு…! என்னிய விடுரா. சனத்து மாடா? சவம்…” 

காலை நீட்டி அவனை உதைக்கப் பார்க்கிறாள்.

வெளியே யாரோ நடமாடும் அரவம் கேட்கிறது.

அவனுக்கு ஆத்திரம். அவளைச் சுவரில் வைத்து மோதுகிறான். 

“ஒன்ன வழிக்குக் கொண்டார எனக்குத் தெரியும் டீ” என்ற மாதிரியில் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீசையைத் திருகிக் கொள்கிறான். அதைப் போன்றதோர் அருவருப்பான எதையும் அதற்குமுன் அவள்மனம் உணர்ந் திருக்கவில்லை. அவள் விர்ரென்று திறந்த ஒற்றைக் கதவின் வழியாகக் குழாயடியில் வந்து நிற்கிறாள். 

“மூளி…ஒனக்கு அம்புட்டிருக்கா? செறுக்கி மவ… ஓந்திமிரு பதங்கொலைய நீயே வந்து விழுவ. பத்தினித் தனமா காட்டுறே?…” 

வெளியே கார் வந்து நின்றிருக்கிறது. முதலாளிமார்… யாரோ வந்திருக்க வேண்டும். அவன் நாய் வாலைகுழைத்துக் கொண்டு ஓடுவதைப்போல் ஓடுகிறான். பொன்னாச்சி பின் கதவைத் திறந்துகொண்டு ஓட்டமாக் ஓடி வருகிறாள். தான் ஒரு கசத்தில் வந்து மாட்டிக் கொண்டது புரிகிறது. 

அவள் தப்பிவிடலாம். இந்த அளத்துச் சோலிக்கு முழுக்குப் போட்டுவிட்டு நின்றுவிடலாம். ஆனால், அட் வான்ஸ் இருபத்தைந்து ரூபாயை எப்படித் திருப்பிக் கொடுப்பார்கள்? 

கண்களில் நீர் கரிப்பாய் சுரந்து கரகரவென்று கன்னங் களில் இறங்குகிறது. ‘ஐட்ராவை’ மூங்கிற்குழாய் நீரில் விட்டு டு டிகிரி பார்த்துவிட்டு அதை மீண்டும் ‘போணி’க்குள் போட்டுக் கொண்டு நிமிர்ந்த ராமசாமி, இவள் கண்ணீர் வடிய தன்னந்தனியாக ஓடுவதைப் பார்க்கிறான். 

“ஏவுள்ள … ஏ அளுதிட்டுப் போற?..ஏ..?” 

அவனுடைய வினா அப்போது மனதை இதமாக வந்து தொடுகிறது என்றாலும் அவன் யாரோ! அவனும் ஒரு கங்காணியாக இருப்பானாக இருக்கும்? அவனைச் சற்றே நிமிர்ந்து பார்த்தாலும் மறுமொழி கூறவில்லை. 

எண்பத்தேழாம் நம்பர் பாத்தி வரப்பில் நின்று மாசாணம் கறுப்புக் கண்ணாடி மாட்டிக் கொண்டு சேர்ந்த உப்புை வாளியினால் வாரிப் பெட்டிகளில் நிரப்புகிறான். அடுத்த பாத்தி ஒன்றில் பேரியாச்சி நீண்ட பிடியுள்ள கொத்துப்பலகையில் நீரில் பாளமாகக் கட்டியிருக்கும் உப்பைச் சலங்கைகளாக உடைக்கிறாள். மாசாணம் அவள் மகன்தான். கல்யாணம் கட்டி, மருமகளும் வேலை செய்கி றாளாம். ஆனால், இந்த அளமில்லை. அவர்கள் குடியிருக் கும் செவந்தியாபுரம் அளத்திலேயே பணி செய்கிறாளாம். 

முகத்தைத் துடைத்துக்கொண்டு பெட்டியில்லாமல் வந்து நிற்கும் அவளை மற்ற பெண்கள் பார்க்கின்றனர். அவளைக் குரோதப் பார்வை கொண்டு நோக்கும் வடி வாம்பா ‘குடுத்து வச்சவிய நிக்கிறா.ஏட்டி எங்கட்டி பாத்து வாயப்பொளக்குறே? ஒ மாப்பிளயா அவுத்திட்டுக் கெடக்கா ?” என்று இன்னொருத்தியைக் கடிவது போல் ஏசுகிறாள். இங்கே பெண்களும்கூட எவ்வளவு கேவலமாக ஏசுகிறார்கள். மாமி ஏசுவாள்; அல் அயல் சண்டை  போட்டுப் பார்க்காதவளல்ல அவள். ஆனால் இந்தப் பாத்திக்காட்டில், உப்புக் கசத்தில் புழுத்த நாயும் குறுக்கே செல்லாத வசைகன்! 

நரநரவென்று உப்பு கால் சதைகளின் மென்மையை வருடி இது வேறோர் வாழ்வு என்று அறிவுறுத்துகிறது பசுமையற்ற அந்த உப்பு வெளியிலே, மென்மையின் உயிர்த் துடிப்புக்களுக்கு இடமே கிடையாது. ஏரிபோல் விரிந்திருக் கும் தெப்பங்களில் மீன் பிடிக்கக் காத்திருக்கும் கபடமான கொக்குகளைத் தவிர ஒரு புழு பூச்சி கிடையாது. இங்கே வந்து தங்கினாலும் இந்த உப்பு அவற்றைத் தன் மயமாக்கி விடும். 

பொன்னாச்சி பெட்டியை எடுத்து வந்து உப்புச் சுமக்கிறாள். 

சுட்டெரிக்கும் கதிரவன் உச்சிக்கு ஏறி,பாத்திகளின் நீரை உறிஞ்சுகிறான். அந்த நீர் உனக்கு மட்டும் உரிமை யில்லை என்றுரைத்துக் கொண்டு வறண்ட காற்று, குருதியை உழைப்பாக்கும் நெஞ்சங்களையும் உலரச் செய்கிறது. பெட்டி உப்பு – நடை – சுமை – தட்டுமேடு- அம்பாரம்… இவற்றுக்கு மேல் சிந்தையின்றி, மனிதத்துளிகள் இயந்திரமாகி விடும் பேச்சு இயக்கம். இங்கு சிரிப்பும் களிப்பும் தோய்ந்த உயிர்க்காது. 

பொன்னாச்சிக்குக் குடம் குடமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று விடாய் விசுரூபம் எடுக்கிறது. விருந்து கொட்டாயில் கொட்டிய குழாயை நினைத்துக் கொள்கிறாள். பகலுணவுக்கு மணியடிப்பார்கள். 

சோற்றுக் கொட்டுக்குப்போய் நீரருந்தலாம்? அங்கும் குழாயுண்டு. ஆனால் அந்த மாசாணம் அதைக் குத்தகை எடுத்திருக்கிறான். இலகுவில் விடமாட்டான். உணவு நேரத்தை விட்டால் நீரருந்த முடியாது. 

‘கண்ட்ராக்டு’ நாச்சியப்பன் குடைபிடித்துக் கொண்டு தட்டு மேட்டில் வந்து நிற்கிறான், பொன்னாச்சி அவன் நிற்கும் பக்கம் உப்பைக் கொட்ட அஞ்சி அம்பாரத்தின் இன்னோர் பக்கம் கொட்டி விட்டுத் விட்டுத் திரும்புகிறாள். அம்பாரம் குவிக்கும் ஆண்டியை, செருப்பின் அடியில் உப்பு நெரிய நின்று அவன் விரட்டுகிறான். 

நாச்சப்பன் பின்னர் அவளைச் சீண்டவே குடையும் கையுமாக வரப்பில் இறங்கி வருகிறான். இரு கைகளையும் தூக்கி உப்புப் பெட்டியை அவள் சுமந்து வருகையில் அவன் எதிர்ப்பட்டு, வேலையை விரைவாக்க முடுக்கும் பாவணை யில் கைவிரலை அவள் விளாவில் நுழைத்து சீண்டி விட்டுப் போகிறான். அந்த உப்பை அவன்மீது கொட்டி அவனை மிதிக்கவேண்டும் என்ற ஓர் ஆத்திரம் பற்றி எரிகிறது பொன்னாச்சிக்கு. 

ஆனால், ஏலாமை கண்களில் நீரைப் பெருக்கி, பாத்தி காடுகளும் உப்புக் குவையும் வெறும் வெண்மைப் பாயல் களாகக் கரையப் பார்வையை மறைக்கிறது. 

சிறுவயசில் அவள் தாயுடன் குளத்துக்குக் குளிக்கச் செல் வாள். அந்நாட்களில் குளத்தில் நடுவில் மலர்ந்திருக்கும் அல்லிப்பூக்களைப் பறிக்க வேண்டும் என்று மிகவும் ஆசை யாக இருக்கும். ஆனால் அம்மா அவளைக் கீழே இறங்க விட மாட்டாள். கணுக்கால் நீருள்ள படியிலேயே அமர்த்திக் குளிப்பாட்டித் துடைத்துக் கரைக்கு அனுப்பி விடுவாள். “இன்னும் இன்னும்…” என்று ஆழத்தில் இறங்க வேண்டும் என்று அவள் கத்துவாள்.. 

“ஆளண்டி, அறிவுகெட்டவளே, போனா ஒளையிலே மாட்டிக்கிட்டு முடிஞ்சி போவ!” என்பாள். 

ஆனால் அவளுக்கு அப்போது அது உறைத்ததில்லை. அந்நாள் மற்றவர் நீந்திச் சென்று மலர் பறித்து வருவது அவளுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். பின்னர், அவள் தாய் இறந்துபோன பிறகு ஒருநாள், அவள் பூப்பறிப்பதற்காக இருகைகளையும் நீரின்மேல் அகலப் பாய்ச்சிக் கொண்டு ஆழத்தில் இறங்கினாள். 

சேற்றில் கால் புதைந்துவிட்டது. தூக்கமுடியவில்லை கைகளை’ அடித்துக்கொண்டு அவள் தத்தளிக்கையில் பனையேறி வீராசாமி குதித்து அவளை இழுத்துக் கரை சேர்த்தான். “ஏவுள்ள, நீச்சம் தெரியாம கசத்துல எறங்கே?” என்று கடிந்தான். 

இப்போது அது நினைவுக்கு வருகிறது. 

பகல் நேர உணவுக்கான ஓய்வு நேரம் முக்கால் மணி. 

தம்பி பச்சைக்கும் அப்போது ஓய்வு நேரம்தான். இருவருக்கும் தனித்தனித் தூக்குகள் வாங்கவில்லை. தம்பி, கண் இமைகளில், காதோரங்களில் பொடி உப்பு தெரிய, ஒடி வருகிறான். உப்பின் நெடியில் கண்கள் கரிக்க, கன்னங்களில் நீர் ஒழுகிக் காய்ந்து கோடாகி இருக்கிறது. “மொவத்த நல்ல தண்ணில கழுவிட்டு வாரதில்ல…மே லெல்லாம் உப்பு. இத்தத் தட்டிக்க வாணாம்?” என்று அவன்மீது கையால் தட்டுகிறாள். 

படிக்க வேண்டும் என்று பள்ளிக்குச் சேர்த்தால் ஓடி ஓடி வந்து விடுவான். காலையில் மாமி சக்திவேலுவுக்கு மட்டும் வெளியிலிருந்தேனும் இட்டிலியோ ஆப்பமோ வாங்கித் தின்னக் காசு கொடுப்பாள். அவளுடைய தாய் இருந்த வரையிலும் அதே வீட்டில் தனியடுப்பு வைத்து இட்டிலிக் கடை போட்டாள். அப்படி வயிற்றுக்கு உண்ட பழக்கத்தில், காலையில் வெறுந் தண்ணீரைக் குடித்துவிட்டுப் பள்ளிக் கூடம் போகாமல் ஓடி ஓடி வந்து அக்காளிடம் “பசிக்குதக்கா’ என்பான். பிறகு அவன் படிக்காமல் பரவப்பிள்ளைகளுடன் லுக்குப் போவது, அல்லது வேறு வேலை செய்வதென்று தாவி, படிப்பதை விட்டு விட்டான். 

தூக்குப் பாத்திரத்தைத் திறந்து நீர்ச் சோற்றையும் துவையலையும் அவனுக்குக் கையில் வைத்துக் கொடுக்கிறாள். 

“அக்கா,அங்ஙன ஒரு டைவர் இருக்கா, கடலுக்குள் ளேந்து மிசின் தண்ணியக் குழாயில கொண்டிட்டு வாரதில்ல? அந்த டைவர் தா கடலுக்கடில இருந்து பைப்பெலா முடுக்கித் தரா பெரி… பைப். தாம் போயிப் பார்த்தே. கடலுக்கடில ஆளத்தில போயி மீன்குட்டி மாதிரி நீச்சலடிச்சிட்டே பைப் மாட்டுறா…” 

பொன்னாச்சிக்கு அவன் பேசுவது எதுவும் செவிகளில் உறைக்கவில்லை. 

“ஆனாக்கா…அந்தாளு, எப்பமும் கள்ளுகுடிச்சிருக்கா இல்லாட்ட தண்ணிக்குள்ள கெடக்க முடியுமா? போலீ சொண்ணும் அவியளப் புடிக்காதாம். அளத்து மொதலாளியே பரிமிசன் குடுத்து அதுக்குன்னு ரெண்டு ரூபாயும் குடுப்பா வளாம்!” 

பொன்னாச்சிக்கு அது ரசிக்கவில்லை. 

“நீ ஒருத்தரிட்டவும் போகண்டா, பேசண்டா, ஒஞ்சோலி யுண்டு, நீயுண்டுன்னு வா…. ” என்று அறிவுரை கூறுகிறாள். 

வயசாகியும் கபடம் தெரியாமல், வளர்ந்தும் வளர்ச்சி பெறாத பிள்ளை. இவனுக்கு அவளைத் தவிர வேறு யாரும் ஆதரவில்லை. 

“ஆனால்…அந்தக் கண்டிராக்டிடமிருந்து அவள் எப்படித் தப்புவாள்?

இந்தத் தம்பிக்கு அவளுக்கேற்பட்டிருக்கும் சோதனை யூகிக்கத் திறணுண்டோ?… 

“ஏக்கா, நீ சோறுண்ணாம எனக்கே எல்லா வச்சித்தார…” 

“இல்ல ராசா…” என்பவளுக்குக் குரல் தழுதழுக்கிறது. “இந்த உப்புக் காட்டில் இப்பிடிச் சீரளியிறமேன்னு நினைச்சே….” என்நு கண்களைத் துடைத்துக் கொள்கையில் அங்கே புளித்த வாடை சுவாசத்தை வளைத்துக் கொள்கிறது. யாருடைய சோறு இப்படிப் புளித்திருக்கிறது?” என்று கேட்பது போல் திரும்பிப் பார்க்கிறாள். 

கொட்டடியில் கூட்டம் நிறைந்திருக்கிறது. ‘யார் யாரோ ஆணும் பெண்ணுமாகத் தொழிலாளிகள் ‘ஐட்ராவை வைத்துக் கொண்டு டிகிரி பார்க்கும் அந்த இளைஞன், அவளை ‘ஏன் அழுகிறாய்’ என்று கேட்டவன், கை, கால் கழுவி கொண்டிருக்கிறான். 

“ஆகா… சோறு மணக்கு… எனக்குஞ் சோறு வையிடீ ராசாத்தி…” என்று ஒருவன் வந்து குந்துகிறான். இடையில் அவனிடமிருந்துதான் புளித்த கள்ளின் நெடி வருகிறது. கறுத்த நனைந்த சல்லடத்தைத் தவிர அவனது கறுத்த மேனியில் துணியில்லை. திரண்ட தோள்கள்; எண்ணெயும் நீரும் கோத்த முடி; சிவந்த கண்கள்….. 

“அக்கா, நாஞ் சொன்னேனில்ல, இவெதா… அந்து டைவரு.” 

அவன் நெருக்கிக் கொண்டு அவள் சோற்றுக்கையைப் பற்றும்போது அவள் தூக்குப் பாத்திரத்துடன் எழுந்து திமிரப் பார்க்கிறாள். 

அப்போது கால் கழுவிக் கொண்டிருக்கும் அந்த ‘ஐட்ரா’ இளைஞன் பாய்ந்து வந்து அவனை இழுத்து ஓர் உதை விடுகிறான். 

“ராஸ்கோர்ல்…. பொண்டுவ கிட்ட வம்பு பண்ணு. ஒன்ன எலும்ப நொறுக்கிப் போடுவ…”

அவன் வாய் குழற அழுகுரலில் கத்துகிறான்.

“குடிகாரப்பய…”

“நீ சோறுண்ணும்மா… இனி அவெ வரமாட்டா இந்தப் பக்கம்…” 

பொன்னாச்சி விழிகள் பூச்சொரிய அவனைப் பார்த்த வண்ணம் நிற்கிறாள். 

‘அந்தக் கண்ட்ராக்டர் காலமாடனுக்கும் இப்படி ஒரு பூசை போடுவாரோ இவர்?’… 

பசுமையற்ற கரிப்பு வெளியில் ஓர் நன்னீருற்றின் குளிர்மை இழையோடி வந்து படிவதாகத் தெம்பு கொள்கிறாள் அவள். 

அத்தியாயம்-6

அந்த ஆண்டுக்கான முதலுப்பை வாரி எப்போதோ. அம்பாரம் குவித்து விட்டார்கள். ஆனால் கங்காணி தொழிலாளர் கூலிக்கு முதலுப்பு வாரும் பூசை இன்னமும் போடவில்லை. ஆயிரமாயிரமாகப் பரந்து கிடக்கும் ஏக்கர் பாத்திகள் எல்லாவற்றிலும் செய்நேர்த்தி முடிய வில்லை என்று கணக்குப்பிள்ளை பூசை என்ற ஆயத்தை இன்னும் நிகழ்த்தவில்லை. நான்கு மூலைகள் கொண்ட சிறு சதுரமேடு போல் கட்டப் பெற்றிருக்கும் பூடத்துக்கு வெள்ளையடித்து அழகு செய்வது கண்டு பேரியாச்சி “பூடத்துக்குப் பூசை போடுறாக போல இருக்கு…” என்று ஆறுதல் கொள்கிறாள். 

அவர்களுக்கெல்லாம் இனி முழுக்கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. 

பொன்னாச்சிக்கு அதைப் பற்றிய ஆர்னமும் ஆவலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவளும், பச்சையும் ‘கண்ட்ராக்ட்’ கூலிகள். அவர்களுக்கு நாச்சி யப்பன் மனமுவந்து கொடுப்பதுதான் கூலி. பொது நீர் ணயக் கூலி முறையில் அவர்கள் அளத்தில் பணியெடுக்க வில்லை. 

பூடத்தின் முன் வாழையிலை விரித்து, உப்பை அள்ளி வைத்து, கற்பூரம் காட்டிக் கும்பிடுகிறான் பிச்சைக்கனி. அந்த முதலுப்பு, முதலாளிகள் வீட்டுக்குப் போகும் உப்பு விளைச்சலைப் பற்றியோ, இலாப நட்டங்களைப் பற்றியோ நினைக்க அவர்களுக்கு உரிமையுமில்லை ஒன்றுமில்லை; 

காலையில் எங்கோ ஆலைச்சங்கு ஒலிப்பதைக் கணக்கு வைத்துக்கொண்டு எழுந்து, சின்னம்மாவும், அவளும் தம்பியும், அலுமினியம் தூக்குப் பாத்திரங்களில் பழைய சோற்றையோ, களியையோ எடுத்து வைத்துக் கொண்டு அதையே கொஞ்சம் கூழாகக் கரைத்துக் காலை நேரத்துக்கு அருந்திவிட்டு, பாத்திக் காட்டில் நடப்பதற்கான பன ஓலை மிதியடிகளைக் கோத்து வாங்கிக் கொண்டே நடப்பார்கள். அந்த மிதியடிகளை ஒரு நாளைக்கு ஒரு சோடி போதாமல் பகலுடன் கிழிந்து விடுகின்றன. நறநறவென்று தெரியும் உப்புக்கு ரப்பர் செருப்பு ஈடு கொடுக்காது. வெட்டவெளியில் பெண்களான அவர்களுக்கு இயற்கைக் கடன் கழிக்க ஓர் மறைவிட வசதிகூடக் கிடை யாது. சூலியான அன்னக்கிளி தவித்துப் போகிறாள் எங்கோ கடற்புரத்தை நாடி அவர்கள் நாலைந்து பேராக நடக்கின்றனர். 

“ஆச்சி, அடிவயிறு கல்லா நோவு…” என்று கிழவியான பேரியாச்சியிடம் அன்னக்கிளி கரைகிறாள். அவள் கண்கள் குழியில் எங்கோ கிடக்கின்றன. கன்னத்தெலும்புகள் முட்டியிருக்கின்றன். நான்கு குழந்தைகள் பெற்றிருக்கி றாள். இது ஐந்தாவது பிள்ளைப்பேறு. புருசன் ஐந்தாறு மாசங்களுக்கு முன் இவளை விட்டு ஓடிப்போய் விட்டானாம். அவளைப் பற்றி ‘ஒரு மாதிரி’ யானவளென்று அழகம்மா, பொன்னாச்சியிடம் கிசுகிசுக்கிறாள். 

“ஏட்டி.நீர்க்கோவயின்னா,பெருஞ்சீரவம் வெந்தியம் ரெண்டயும் வெடிக்கவுட்டுக் கிழாயம் வச்சிக் கருப்பட்டியப் போட்டுக் குடிக்கிறதில்ல? நாலு புள்ள” பெத்தவதானே?” என்று பேரியாச்சி இரைந்து பேசுகிறாள். 

பொன்னாச்சிக்கும் கூடச் சில நாட்களில் இட்டுப் போகிறது கண்களிலிருந்து தாரையாக நீர் வழிந்து பார் வையை மறைக்கிறது. அதைத் துடைக்கக்கூட முடியாமல் இயந்திரம் போல் வரப்புக்கும் தட்டு மேட்டுக்குமாக உப்புப் பெட்டி சுமக்கிறாள். 

அப்பனைக் காணும்போது அவளுக்கு இப்போதெல்லாம் கசிவு தோன்றுவதேயில்லை. அவர் அவள் புறப்படும் போதெல்லாம் படுத்திருக்கிறார். மாலை நேரங்கனில் எங்கோ தேநீர்க் கடையில் அரசியல் பேசிவிட்டு சுடுசோறு தின்பதற்கு வந்து விடுகிறார். 

அன்று பெட்டியைத் தலையில் வைத்து அவள் நட கையிலே மாமனின் நினைவே தோன்றுகிறது. “பெண் குழந்தைங்க புறாபோல, நம்ம வீட்டு பாதுகாப்பை விட்டு வெளியே அனுப்பக் கூடாது…” என்று வாய்க்கு வாய் பேசு வார். மாமா எத்தனையோ நாட்கள் தூத்துக்குடிக்கு வருபவர் தாம் கயிறு வாங்கணும், இரும்பாணி வாங்கணும். தாசில்தாரைப் பார்க்கணும், என்றெல்லாம் சொல்லிக் கொண்டு பஸ் ஏறுவாரே, அவர் வரக்கூடாதா! 

“அப்பனைப் பார்த்தாச்சில்ல? கிளம்பு?” என்று சொல்ல மாட்டாரா? சின்னம்மாவின் மக்கள் அவளிடம் ஒட்டவே யில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அவளுக்கும் நெருங்கி உறவாட நேரம் இருக்கிறதா? 

வள்ளிக்கும் குஞ்சரிக்கும் அவள் தான் சடை பின்ன வேண்டும். ஓடைக் கரையிலிருந்து மாமா, தாழம்பூக் குலை கொண்டு வருவார். அவ. கத்தி கத்தியாக வெட்டித் தைத்து விடுவாள். ஞானம் அவள் தட்டினால்தான் உறங்கு வாள். வேலு முன்பு வைத்திருந்தபோதுகூட அவனுக்குப் புத்தகமெல்லாம் தட்டி வைத்தாள். அவனுடைய சட்டையையும் சராயையும் குளத்தில் சோப்புப் போட்டு அலசிக் கொண்டுவந்து, மூங்கில் கழியை நுழைத்துக் காயப் போடுவான். 

“பொன்னம்மா தோச்சா பொட்டியே போடவாண்ாம்!” என்பான். அவன் பொன்னம்மா என்றுதான் அவளைக் கூப்பிடுவான். 

அவன் பரீட்சைக்குப் படிப்பதற்கு அவளைத் தான் தேநீர் போட்டுத்தரச் சொல்லுவான். 

அந்த மாமன் வீட்டைவிட்டு அவள் அவர் இல்லாத போது வந்திருக்கலாமா? 

பகலில் உணவு கொள்ளும் நேரத்தில், ராமசாமி என்ற அந்த ஐட்ரா பார்க்கும் ஆள் அவளைப் பார்த்துக் கொண்டு அங்கே தான் உணவு கொள்கிறான். 

அவன் அவளிடம் எதுவும் பேசுவதில்லை. ஆனால், அவனுடைய பார்வை “பயப்படாதே, நான் இருக்கிறேன் என்று சொல்வது போல இருக்கும். 

அவன் தண்ணீர்க்குழாயில் நீரருந்துகையில் பச்சையிடம். “தண்ணி குடிச்சிக்கோ?” என்று குழாயை ஒப்படைப்பது வழக்கமாகிறது. 

“அவரு மாசச்சம்பளக்காரரா அக்கா! மொதலாளிக்கு. வேண்டியவியளா!” என்று பச்சை பொன்னாச்சியிடம் கிசுகிசுக்கிறான். 

அதனால் தான் மற்றவர் யாரும் சகஜமாக அந்த ஆளிடம் பேசிப் பழகுவதில்லையோ? 

“ஒனக்கு ஆரு சொன்னா?” 

“அந்த ‘டைவர்’ சொன்னா! அந்தாளோட அப்பச்சி முன்ன பெரிய முதலாளியக் கொலை செய்யறதுக்கு இருந். தான்னு போலீசு கண்டுபிடிச்சி செயிலுக்குக் கொண்டு போயிட்டாவளாம். அப்ப இவிய ஆத்தா அளுத்திச்சாம். மொதலாளி எரங்கி இவரை வேலைக்கு வச்சாளாம். அப்பா இப்ப செத்துப் போச்சாம். இப்பம் மாசச் சம்பளமாம் அதாம் பவுருன்னு கருவிட்டுப் போறா அந்த டைவரு…” 

“நீ அந்தக் குடிகாரச் சவத்துங்கூடப் பேசாதே ….” என்று அவள் பச்சையை எச்சரித்து வைக்கிறாள்? 

அந்தச் சனிக்கிழமை மாலையில் சின்னம்மா கூலி வாங்கி வருகையில் கருவாடு வாங்கி வந்திருக்கிறாள். 

சுடுசோறு வடித்து நிமுர்த்துமுன் பச்சை சில நாட்களில் படுத்துவிடுகிறான். அவசரமாக வடித்து எடுத்து, ஒரு துவை யலை அரைத்து அப்பனுக்கும் குழந்தைகளுக்கும் பொன் னாச்சி சோறு போடுகிறாள். 

“கருவாடா? வறக்கலியா?” என்று நா ருசிக்க உண்ணும் ஆவலில் அப்பன் கேட்கிறார். சின்னம்மா பட் டென்று பதில் கொடுக்கிறாள். 

தலைப்புரட்ட, காலுக்குக் குழச்சிப்போட எண்ணெயில்ல. எண்ண என்ன வெல தெரியுமா?” 

அப்பச்சி பேசவில்லை தட்டில் கைகழுவிவிட்டு, நகர்ந்து கொள்கிறார். தம்பி வாசல் திண்ணைக்குப் போய்ச் சுருண்டு கொள்கிறான். சரசுவும் நல்லகண்ணுவும் வாசலுக்கு ஓடி ஆச்சி லீட்டில் ரேடியோப் பெட்டி பாடுவதைக் கேட்கப் போகின்றனர். 

சின்னாச்சியும் அவளும் சோறு வைத்துக்கொண்டு அமரு கின்றனர். கருவாடு நன்றாக இல்லை. வீச்சம் குடலைப் புரட்டுகிறது. முகம் முகத்துக்குத் தெரியவில்லை. உயிர் பிழைக்க மட்டுமே அன்ன ஆகாரம் கொடுக்கும் கூலியைப் போன்று ஓர் சிம்னி விளக்கு. அந்த மஞ்சள் ஒளியில் விவரம் காண முடியாது. ஒரு குழம்பு வைத்துச் சுவை காணக்கூட முடிவதில்லை. மாமன் வீட்டிலும் வறுமைதான் என்றாலும், நிதமும் இந்த வேகாச் ‘சோறு இல்லை. இந்த நூல் பிடித்த வரைகள் அங்கு இல்லை. இந்த ஒளியில் முகம் சுளித்தாலும் கண்டு கொள்ள முடியாது அது அவசியமும் இல்லை அவர்கள் ழைப்பின் பயனான உணவைக் கொண்டு பசி எரிச்சலைப் புதைக்கின்றனர். 

பொன்னாச்சிக்கும் தம்பிக்கும் அந்தச் சனிக்கிழமை யில் கூலி போடவில்லை. ஞாயிறன்று காலையில் தம்பியைக் கூட்டிச் சென்று அளத்தில் ஆபீசில போய் வாங்கிக் கொள்ள வேண்டும். “நேரமாகிவிட்டது. நாளைக்கு வா!” என்று கண்ராக்ட் கூறினான். எல்லோரும் வருவார்கள் என்றாலும் அவளுக்கு நெஞ்சம் அச்சத்தினால் கட்டிக் கிடக்கிறது. அதை நினைத்தால் சோறும் இறங்கவில்லை. 

“சின்னாச்சி.. எனக்கு இந்தப் பனஞ்சோல அளம் ரொம்பப் பயமா இருக்கி…” 

மன ஆற்றாமையின் சுமைகளில் மோதுண்டு சொற்கள் மெல்லப் பிரிகின்றன. சின்னமமாவோ, முத்துக் கொறிக்க. வில்லை. பீடி புகைக்கும் அப்பன், உணர்ச்சியை விழுங்கிக் கொள்வது போல் “அஹம்” என்று கனைக்கிறார். 

“ஒங்க கங்காணியிட்டச் சொல்லி, எனக்கும் ஒங்ககூட அளத்துல வேல வாங்கித்தாரும் சின்னாச்சி. ஒங்ககூட இருந்தா பயமில்லாத பதனமாயிருக்கும். 

இதற்குமேல் தனது சங்கடத்தைச் சூசகமாக உணர்த்த முடியாதென்று அவள் நினைக்கிறாள். இதற்கும் சின்னாச்சி எதிரொலி எழுப்பவில்லை. 

அப்பன் பீடிக்காரல் பாய்ந்தாற்போன்று கனைத்து, தொண்டையைச் செருமிக் கொள்கிறார். மெள்ள எழுந்து சென்று வெளியே காரித் துப்புகிறார் பிறகு வந்து உட்காருகிறார், இத்தனை நேரமும் கின்னம்மா வாய். திறக்கவில்லை. 

பொன்னாச்சி, “அந்தக் கண்டிராக்டு, மோசமா நடக்கா. நாளக்கி ஆபீசில போயிக் கூலி வாங்கிக்கணுமா” என்று சங்கடத்தை வெளியிடுகிறாள். 

“ஆரு, நாச்சப்பனா? சவத்துப்பய, அவன் முழியப் புடுங்கித் தேரில போடணும். அந்தப்பய. ஒரு நேரக் கஞ்சிக்கு வக்கில்லாம இருந்தவ, பொண்டுவள கணக்க பிள்ளமாருக்குக் கூட்டிக் குடுத்துக்கொடுத்துத் திரியிறான். ஒம்மேல மட்டும் அவெ கய்ய வய்க்கட்டும்…” 

அவர் முடிக்கவில்லை. பூமி பிளந்து குருதி கொப்புளித் தாற்போன்று சின்னம்மாவின் குரல் ஆங்காரமாக வருகிறது. 

“ஆமா! என்னேயிவீரு ! முன்னபின்னக் கண்ட் ராக்டு கங்காணிச் சவங்க செய்யாததியா செய்யிறா அவெ? நீரு என்னேஞ்சீரு? சீலயப் புடிச்சிளுத்துப் பதங் கொலய வய்க்கிறது கொஞ்சமா? வயித்துப் பசின்னு நாலு செவத்துக்குள்ளேந்து வெளியே வந்தா இந்த மிருவங்கதா இதுங்க சீரளிக்கிறதுதா…?” 

தோலை நீக்கிச் சீழும் இரத்தமும் குழம்பும் புண்ணை? வெளிக்காட்டினாற்போன்று பொன்னாச்சி விக்கித்துப் போகி றாள். மருதாம்பாளின் முகத்தில் மஞ்சள் ஒளி நிழலாடுவது தெரிகிறது; கண்கள் பளபளக்கின்றன. 

“ஏம் பேசாம இருக்கீரு? ஏ?…ஏ?…”

சோற்றுக்கையுடன் அவள் எழுந்து வெறிபிடித்தாற் போன்று அவன் மேலே போட்டிருக்கும் துணியுடன் கழுத்தைப் பற்றுகிறாள். 

குரூரம் கெக்கலி கொட்ட அவள் பொங்கெழுச்சி கண்டு அப்பன் அதிர்ச்சியுற்று ஆவியாகப் போகிறார். அவள் கையைப் பிடித்துக்கொண்டு, ‘வாணா… வாணா மருதாம்பா என்னிய விட்டிரு….” என்று கெஞ்சும் குரல் அழுகையாகத் தழுதழுக்கிறது. 

“இருட்டில வந்து தட்டுமேட்டுல லாரின்னு கொரல் குடுப்பா. உள்ளாற வந்து சீலயப்புடிச்சி இருத்திட்டுப் போவா. புருசனாம் புருசன், அவ ஒடம்பில ரத்தமா ஓடிச்சி? இவ வ சீலயப்புடிச்சு இளுத்திட்டுப் போவையில் பாத்திட்டு ஒக்காந்திருப்பா, காலம் வந்ததும் கட்டயெடுத்திட்டு அடிச்சுக் கொல்லுவான், பாவி, ஊரம்புட்டும் பாத்திட்டிருக்கும். நாச காரக்கும்பல்…” 

பொன்னாச்சிக்கு அந்தச் சிற்றம்மையைக் கட்டித் தழுவிக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது. 

இந்த அப்பனைக்கூட அவ்வளவுக்கு யாரும் தூற்றிய தில்லை; ஏசியதில்லை. ஆனால், கண்ணால் பார்த்திராத இந்தச் சின்னம்மாவை எவ்வளவுக்கு யார் யாரோ ஏசியிருக்கின்றனர்! அப்பனின் குரல் அழுகையிழைபோல் இருட்டு குகையில் ஒன்றி மறைகையில் சின்னம்மா குரல் உடைய விம்முகிறாள். 

இந்தச் சின்னம்மாவும் ஒரு காலத்தில் பொன்னாச்சியைப் போல் உதயத்தில் இதழ் விரிக்கும் மலராக எதிர்காலக் கனவுகள் கண்டவளாக இருந்திருப்பாளோ? வயிற்றுப் பசி யுடன் போட்டி போட இயலாத கனவுகள் அவளையும் வருந்தி குலைத்திருக்கும். அவளை ஓர் ஏலாத குடும்பக்காரன் கலியாணம் என்று வளைத்துக்கொண்டிருக்கிறான். 

பிறகு… பிறகு…இந்த அப்பன்… 

இவருக்கா அவள் இரக்கப்பட்டாள்? 

சின்னம்மா இப்போது எதற்கு விம்மி அழுகிறாள்? தன்னுடைய சுகந்த மணங்களெல்லாம் சேற்றுக் குட்டையிலும் தெருப்புழுதியிலும் சிந்திவிட்டதென்று அழுகிறாளோ? 

பொன்னாச்சிக்கு நெஞ்சு கட்டிப் போகிறது: சோநு இறங்கவில்லை. வேலியும் காவலும் இல்லாமல், உயிர்ப்பும் மென்மையும் வறண்டு போகும் உப்புக் காட்டில் தன்னைப் போல் நலம் குலைய நிற்கும் ஒவ்வொரு பெண்ணையுமே நினைத்துச் சின்னாச்சி அழுவதாகத் தோன்றுகிறது. 

அன்றிரவு பொன்னாச்சிக்கு உறக்கம் பிடிக்கவில்லை. மாமன் வரமாட்டாரா, திரும்பிப் போய்விட அழைக்க மாட்டாரா என்று கூட நினைத்தாளே. அந்த நினைப்பு உகந்ததாக இல்லை. இங்கே இந்தக் களத்தில், கங்காணிகளும் கணக்கப்பிள்ளைகளும், ‘கண்ட்ராக்ட்’களும் நச்சரவு களாய் ஊரும் களத்தில், காவலில்லாத பூச்சிகளாய் அவர்கள் இருக்கிறார்களே. அது தொடர்ந்து கொண்டே இருக்குமா?… இதைத் தட்டிக் கேட்க ஆளில்லாமலே இருந்து விடலாமா? 

‘தட்டிக் கேட்க’ என்று தோன்றுகையில் ராமசாமி அந்த ‘ஐட்ரா’ ஆள், முதலாளிக்கு வேண்டிய ஆள் என்று தம்பி சொன்ன அந்த….அவர் முகம் நினைவுக்கு வருகிறது. அதிக உயரமுமில்லை; பருமனுமில்லை. வெள்ளைச் சட்டையும் வெளுத்த முண்டாசும் அரும்பு மீசையும் குளிர்ந்த விழிகளு மாக அந்த ஆள்…”தண்ணீர் குடிச்சிட்டீங்களா?” என்று கேட்கும் ஆள்… அவளுடைய சங்கடங்களைப் புரிந்துகொண்டு விலக்கிய ஒரே ஆள்…. 

அவரும் அந்தப் பாத்திக் காட்டில்தான் இருக்கிறார். உப்புக் கடலினால் கரிப்பு மணிகள் மட்டுமே விளையவில்லை. நல்முத்துகூட விளைகிறது. ஆனால் அது அருமையானது. அதனால் விலைமதிப்பற்றது. 

மறுநாட் காலையில் சின்னம்மா, பச்சையையும் அப்பனையும் அனுப்பி அவளுடைய கூலியைப் பெற்றுவர செய்கிறாள். ஞாயிற்றுக் கிழமையில் நல்ல தண்ணீர்க்குளம் தேடிச்சென்று துணி துவைத்து வருகிறார்கள்; அன்றுதான் ‘மாசத்துக்கொரு முறையான எண்ணெய்த் தலை முழுக்கும். வைத்துக் கொள்ள வேண்டும். கூந்தலைக் கோதிக்கொண்டு அவள் சன்னலின் அருகே நிற்கையில் ஓலை கிழித்துக் கொண் டிருக்கும் வீட்டுக்கார ஆச்சி, 

“ஏட்டி? கூலி போடலியா நேத்து?’ என்று வினவுகிறாள். 

‘இல்ல. அப்பச்சியும் பச்சையும் போயிருக்கா?” 

“அதாங் கேட்டே. காலையில் சின்னாச்சி வாடவையும் சீட்டுப் பணமும் குடுத்திடுவா. காணமேன்னு கேட்டே…” 

பொன்னாச்சிக்கு அவள் வாடகைப் பணத்தை நினைவு படுத்தும் மாதிரியில் கோபம் வருகிறது. என்றாலும் எதுவும் பேசவில்லை. இவளுடைய ஒரே பையனும் மூன்று வருஷங் களுக்கு முன் இறந்து போனானாம். வட்டிக்குக் கொடுக்கும் பணத்தைக் கண்டிப்பாக வாங்கி விடுகிறாள். 

அவளிடம் உப்பளத் தொழிலாளரின் பாத்திரங்கள், நீர் குடிக்கும் லோட்டாவிலிருந்து சருவம் வரை அடகு பிடிக்கப் பட்டவை கிடக்கின்றனவாம். அந்த முன்னறைக்கு நேராக உள்ள அறையில் இரும்பு அலமாரியும் கட்டிலும், சாமான் களும் நிறைந்திருப்பதை பாஞ்சாலி அவளிடம் சொல்லி வியந்தாள். ரோசத்துடன் சின்னம்மாவிடம் அப்பனும் பச்சையும் கூலிபெற்று வந்த உடனேயே அவள் கடனுக்காக பணத்தையும், வாடகையையும் கொடுத்துவிடவேண்டும் என்று கூறுகிறாள். 

“இப்ப வேணா …அடுத்த கூலிக்குக் குடுக்கலாம். அடுப்புக்கு வய்க்கப் பானை ஒண்ணு வாங்கணும். அவிப ஒண்ணுஞ் சொல்லமாட்டா ” 

“எங்கிட்டக் கேட்டா; ஏங்குடுக்கலன்னு..” 

“பானை வாங்கணுமின்னா ஒண்ணுஞ் சொல்லமாட்டா.. மேலுக்கு அப்படி வெட்டித் தெறிச்சாப்பல பேசினாலும் கெரு ஒண்ணுங் கெடயாது பாவம் ஒரே பய …அவன் போயிட்டா…அதுலேந்து ஆச்சி முன்னப் போலவே இல்ல…” 

“ஆச்சி புருசன் எங்கேயிருக்கா?”

“புருசனொன்னுமில்ல. அந்தக் காலத்துல அளத்துல சோலி எடுக்கறப்ப அந்தக் கணக்கவுள்ள வாரானே. அவங் கொலச்சி பெரி முதலாளி, இப்ப கெழமா படுத்த படுக்கையா யிருக்காண்ணு சொல்லிக்கிடுவா. அவனுக்குக் கூட்டி வச்சிட்டா. அவெ அந்த காலத்துல பொம்பிளன்னா பேயா அலையுறவ. ஆனா, இந்தாச்சி ஒரு கௌரவப் பட்டாப்பலவே வீட்டோடு இருந்திட்டா. பொட்டி கிட்டி மொடயும் இந்த வளவெல்லாம் அந்தக் காலத்துல அந்தக் கணக்கவுள்ள வகையா வந்ததுதா. ஒரு பையன் இருந்தா, நல்ல வாளிப்பா… அதா போட்டோ வச்சிருக்கே. வாசல்ல, அதுதா. படிச்சிட்டிருந்தா காலேசில, பொக்குனு போயிட்டா…” 

“எனக்குச் சாமியில்ல. எஞ்சாமி செத்துப் போயிட் டா’ன்னு அவள் கூறிய சொற்கள் பொன்னாச்சிக்கு நினைவில் மின்னுகின்றன. 

“வயசுப்புள்ள எப்படிப் போயிட்டா? காருல தீருவ அடிபட்டுப் போயிட்டானா?” 

“என்னென்னவோ சொல்லிக்கிறாவ. நமக்கு என்னம்மா தெரியும்? அந்தப் பய, ஆனா, மொதலாளி செறுப்பத்துல் எப்படி இருதாவளோ அப்பிடியே இருப்பா கௌவனுக்கு நாலு பொஞ்சாதி கெட்டி மொத்தம் பன்னண்டு ஆம்பிளப் பிள்ள இருக்கா. கடோசிக்காரந்தா வேதக்காரப் பொம்பளயக் கெட்டி, கிறிஸ்தியானியாயிட்டா அவியளுக்கு அளத்துல செவந்தியா வரம்பக்கம் பிரிச் சிட்டாவ. அவதா துரை அளம்பா. முன்ன ஒண்ணாயிருந்த அந்தக்காலத்துல நாங்கூட செய்நத்துக்கு ஒண்ணே கால்ரூவா கூலிக்குப் போயிருக்கே. அந்தப் புள்ளயல்லாங்கூட இப்படி அச்சா மொதலாளியப்போல இருக்கமாட்டாவளாம். சொல்லிக்குவா. எனக்கென்ன தெரியும்? நடந்த தென்னன்னு கிளக்கால உதிச்சி மேக்கால போறவனுக்குத்தா தெரியும். இந்தப்பய பங்களாவுக்குப் போனானா ஒருநா. போட்டோவப் பார்த்தானாம். ஆத்தாகிட்டவந்து, நானும் அவிய மகந்தானே, எனக்கொரு பங்கு சொத்து வாரணுமில்ல? பத்து லட்சம் பங்கில்லேன்னாலும் ஒரு லட்சம் வரணு மில்லன்னானாம். வக்கீலக் கண்டு பேசுவன்னானாம், பொறவு என்ன நடந்ததுன்னு தெரியாது… வக்கில் புரத்துல அம்மன் கொடை வரும். அன்னிக்குத்தா தேரியில் இந்தப்பய அந்தால வுழுந்து கெடந்தா.நீல டௌசரு. சரட்டு எல்லாம் அந்தால இருக்கு…ஆச்சி கூத்துப் பாக்க ஒக்காந்திருக்கா. சேதி சொன்னாவ. போலீசெல்லாம் வந்தது. என்னமோ தண்ணியக் குடிச்சிட்டா. அதுதாண்ணு சொல்லி மறச்சிட்டாவ…” 

பொன்னாச்சி திடுக்கிட்டுத் திகைத்து சொல்லெழும் பாமல் அமர்ந்திருக்கிறாள். அடுப்பு திகுதிகுவென்று எரி கிறது; பானைச்சோறு பொங்குகிறது. சின்னம்மா ஒரு சுள்ளியை இழுத்து நீரைத் தெளித்துச் சிறிது அணைக்கிறாள். 

“அப்படியா…? அப்படிக்கூடச் செய்வாங்களா சின்னம்மா? அப்ப அந்த அளத்து மொதலாளிக்குப் பன்னண்டு லச்சமா இருக்கு…” 

“நமக்கு என்னாத்தா தெரியிது. நாம் லச்சத்தைக் கண்டமா, மிச்சத்தைக் கண்டமா. சொல்லிக்குவாக கரிப்பு உப்புத் தொழில்ல ஒரம் போடணுமா. களை எடுக்கணுமா, பூச்சி புடிச்சிடுமேன்னு பயமா? மிஞ்சி மிஞ்சி, மழை பெஞ் சாக் கொஞ்சம் கரையும். மறுவருசம் காஞ்சா உப்பாகும். இந்தத் தூத்துக்குடி ஊரிலேயே பேயறதில்லை. காயிறது பார் பேஞ்சிச்சின்னா அளத்துக்கு வேலய்க்கு வர ஆளுவ ரொம்ப இருக்கமாட்டா. காஞ்சிச்சின்னா கோயில்பட்டி அங்க இங்கேந்தல்லாம் கூலிக்கு இங்க ஆளுவந்து விழும். அதனால் மொதலாளி மாருக்கு நட்டம் எங்கேந்து வரும்? சிப்சம், மாங்கு எல்லாம் மூடமூடயா வெல. சிமிட்டி ஃபாக்டரிக்கு அப்படியே போனது. நாம் சொமை சொமக்கிறோம்… வேறென்ன தெரியுது?… 

பொன்னாச்சி சிலையாக இருக்கிறாள்.

– தொடரும்…

– கரிப்பு மணிகள் (சமூக நாவல்), முதற்பதிப்பு: ஏப்ரல் 1979, தாகம், சென்னை.

ராஜம் கிருஷ்ணன் ஆசிரியை திருமதி.ராஜம் கிருஷ்ணன் 1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது 'ஊசியும் உணர்வும்' என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப் பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.  1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது 'பெண்குரல்' நாவல். 1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'மலர்கள்' நாவல் முதல் பரிசைப் பெற்றது. …மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *