சமாதானம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 16, 2025
பார்வையிட்டோர்: 289 
 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாபெரும் பேரணிக்கான சகல ஏற்பாடு- களும் செய்யப்பட்டு விட்டன. மக்கள் வசிக்கும் ஊர்களில் இருந்து அவர்- களை அழைத்து வர நம்பர் பிளேட் உள்ள வாகனங்கள் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள் எல்லாம் தயார். 

போக்குவரத்து சபை பஸ்கள் பேரணிக்- கான ஆட்களை சத்தமில்லாமல் இழுத்து வரவும் மிச்ச சொச்சங்களை திணைக்கள கூட்டுத்தாபன வாகனங் கள் கொண்டு போய்ச் சேர்க்கவும் தடைகள் இல்லை. 

மாவட்ட எல்லைகளை, மண் மூட்டை அரண்களைத் தாண்டுவது தமது ஆதரவாளர்கள் தான் என்பதை உறுதி செய்து காவலர்- களின் காருண்யமான சோதனைத் தடைகள் அனைத்தையும் கடந்து வந்து சேர சகல ஏற்பாடுகளும் ரெடி. 

தொடர்ந்து எழுபத்தி இரண்டு மணித்தியாலங்களாக வானொலி தொலைக்காட்சியின் அலைவரிசைகள் அலையலையாக பேரணி தொடர்பான புனித பேரொலிகளை ஓசைகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன. 

வானத்துத் தேவர்களும் அகிலத்துப் பெருமானார்களும் நேரில் வந்து இன மத மொழி வேறுபாடு இன்றி முத்தி வழங்கப் போவதாக அவை அடித்துச் சொன்ன காட்சிகளை வெளிப்படுத்தின. பத்திரிகைகள் பக்கம் பக்கமாய் அனுபந்தங்கள் வெளியிட்டன. கிராமத்து மக்கள் சகல வசதிகளும் பெற்றுக் குறைவில்லாத வாழ்க்கை வாழ இந்தப் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் போலவும் சுதந்திரம் பெற்ற ஐம்பது ஆண்டுகளை கழித்து விட்ட இந்த நீண்ட வரலாற்றில் ஒரு புதிய எழுச்சி ஏற்படப் போவதாகவும் அவை கதை பரப்பின. 

பேரணியில் பங்குபற்றும் ஆளும் கட்சியும் அதன் அன்புசார் அமைப்பாளர்களும் இணைப்பாளர்களும் ஆதரவாளர்களும் எல்லோரும் சிரத்தை எடுத்து தமது சாயங்களை வெளுக்கப் பண்ணி வெண்மையாக்கி வெள்ளை வெளேர் ஆகி விட்டனர். நடத்தி முடித்தால் அந்த மாதிரி இருக்கும் என்று பெரும்பான்மை அரசியல் தலைவர்களும் அவர்களை அடிதொழும் சிறுபான்மைத் தலைவர்களும் நெஞ்சை நிமித்திய போது தான் பேரணியை ஒழுங்கு செய்த ஆளும் கட்சியின் மெத்தப் படித்த தலைமை கேட்டது. 

“எங்கே அது?” 

ஏற்பாடுகள் எல்லாம் பொதி செய்தது போல பூர்த்தியான பின்னர் தலைமை கேட்டது எதனை. 

“எது….?” 

அதுதான் அந்தப் பேரணிக்கே பிரதானமானது. அது இல்லாமல் என்ன பேரணி” 

தலைமை கிடுகிடுத்தது. 

தலைமை எதைக் குறிப்பிடுகின்றது என்பதைக் கலங்கித் தெளிய முடியாது திண்டாடியவர்கள். 

“நீங்கள் எதனைக் கூறுகிறியள் ”தயங்கித் தயங்கிக் கேட்க. தலைமை கோபத்தின் உச்சிக்குப் போனது. 

உயர்ந்து நீண்டு விரியும் எதிர்கால அரசியல் நலன்களைப் பெற்றுக் கொள்ள இந்த முட்டாள்களை வைத்தா செயற்பட வேண்டும் என்று நினைத்ததாலோ என்னவோ காதடைக்கச் சத்தம் போட்டது. தேர்தல் காலத்து வாக்குறுதிகள் போல அவை நாற்றிசையும் பாய்ந்து சென்றன. 

“நாங்கள் எதற்காக இந்தப் பேரணியை நடாத்துகின்றோம்” 

“இன் ஒற்றுமையைக் கட்டிக் காக்க” 

“வெட்டிச் சாய்க்க. மூளை கெட்டவர்களே இன ஒற்றுமையைப் பாதுகாப்பதாகக் காட்டிக் கொள்ள” 

பெருந்தலைகளும் இடை மட்டத்து முடிகளும்/துடி துடித்துப் போனார்கள். சுதந்திரமான பத்திரிகையாளர்கள் யாராவது நின்றார்களா? என அக்கம் பக்கம் பார்த்தனர். 

“அப்படிக் காட்டிக் கொள்ள எது முக்கியம்” மீண்டும் தலைமை கேள்வி கேட்டது. 

பதில்கள் தடம் புரண்டபடிதான் இருந்தன. சரியானதைத்தான் காணவில்லை. “இன ஒற்றுமை இருப்பதாகக் காட்டிக் கொள்ள என்ன வேண்டும் சொல்லுங்கள் ம்…. சொல்லுங்கள்” 

“தெரியாதா,நான் சொல்லுகின்றேன். கொண்டு வாருங்கள் அதனை” சிறிது காலமாய் அதனைக் காணவில்லை. தொண்- ணூற்றி நாலாம் ஆண்டில் எங்கள் தத்துப் பிள்ளையாக இருந்து எங்களுக்கு நன்கு உதவியது. 

நள்றாகத் தின்று கொழுத்திருந்தது. பிறகு எப்போதாவது தான் அதனைப் பார்த்ததாக ஞாபகம். அதனைக் கொண்டு வாருங்கள். 

தலை மயிரைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது. கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு தலைமை சொல்லும் அதனை மறந்து கன காலமாயிற்று. அதன் உருவத்தை முக அடையாளத்தையே மறந்தாயிற்று. எப்படிக் கண்டு பிடிப்பது எங்கே போவது….”

“அது எங்கே இருக்கும்’ 

“இது என்ன முட்டாள் தனமான கேள்வி. உடனே கண்டு பிடியுங்கள். வழக்கம் போல சகல வழி முறைகளையும் கையாளுங்கள். சுற்றி வளைப்புககள், தேடல்கள் எல்லாம் நடக்கட்டும். உயிரோடோ பிணமாகவோ கொண்டு வாருங்கள்” என்று கர்ஜித்தது தலைமை. “அடடே முழுப்பிணமாக்கினால் காரியம் கெட்டு விடும். எனவே எழும்பி நடக்கக் கூடிய மாதிரியான நிலையிலாவது கொண்டு வாருங்கள்…ம்… விரைந்து செல்லுங்கள் திரும்பி வாருங்கள். இருபத்தி நான்கு மணித்தியாலம் தான் காலக்கெடு” 

அதனைத் தேடி தொண்டர்கள், குண்டர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள் என எல்லோரும் புறப்பட்டனர். நால்வகைப் படைகளுடன் துணை, இணைப்படைகளும் இணைந்து கொண்டன. 

தேர்தல் இடாப்புகளில் அதன் பெயர் இல்லை. உயர் மட்ட பிரமுகர் பட்டியலில், விருந்தினர் பட்டியலில், சந்தேக நபர்கள், எதிராளிகள் என்று எந்தப் பட்டியலிலும் காணவே காணோம். 

பிரயாணத்திற்கான பாஸ், தங்குமிட பாஸ், போக்குவரத்துப் பாஸ் அது இது என்று எதிலுமே அதன் பெயர் இல்லை. 

எதிர்க்கட்சிப் பிரமுகர்கள், நடுநிலையாளர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்து விட்டதா? 

சுழியோடிப் பார்த்தும் பிரயோசனப்படவில்லை. கடைசியில் அந்த அற்புதம் நடந்தது. ஆள் அரவம் அற்ற காட்டுப் பகுதியில் தோல்வியடைந்த கவிஞனைப் போல அது குப்புறக் கிடந்தது.

தேடிக்கொண்டு போனவர்களுக்கு அது விட்ட மூச்சுத்தான் கேட்டது. “சர் புர்” என்ற அந்தச் சத்தம் எந்த விதமான பின்னணி இசையும் இல்லாமல் தெளிவாகக் கேட்டது. 

பதுங்கிப் பதுங்கிப் போனவர்கள் ஆளை ஆள் தள்ளி அதன் கிட்டப் போனார்கள். செத்தது போலவும் சாகாதது போலவும் கோமா நிலையில் இருந்த அது சுற்றிவர நடந்த அமளிகளை உணராமலே கிடந்தது. 

கடல் தாண்டி இந்தியாவுக்குக் கேட்குமாப் போல் ஒருவன் “நீதானா அது” என்று கதறினான். 

அது சிறிதாகத்தான் அசைந்தது. ஆனால் கண்களைத் திறக்க” வில்லை. 

“இது தலைமை சொன்னது தானே ….” என்றார் ஒரு தலைவர்.

பல பேர் அதனை உறுதி செய்ய முடியாமல் உதடுகளைக் கடிக்க சற்றே வயதோடிய ஒரு குருவானவர். 

“எனக்கு முன்பு பார்த்த ஞாபகம் இருக்கிறது. இது அது தான். ஆனால் முந்தி இது என்ன மாதிரி இருந்தது. எல்லாம் வடிவாய் புஷ்டியாய்…..” மலரும் நினைவுகளில் மூழ்கினார் அவர்.

இப்போது முண்டியடித்துக் கொண்டு எல்லோரும் அதனைப் பார்த்தனர். சோமாலியா சிறுவர்களைப் போல அது வதங்கி யிருந்தது. மண்டை பெருத்து, கனத்து எலும்பெல்லாம் துருத்திக் கொண்டு உதடுகள் வெடித்து உளி மாறிய விழிகள் படைபடையாய் அழுக்கு மோசமான துர்வாடை. 

மூக்கைப் பொத்திக் கொண்டு நின்று என்ன செய்வது? இதனைக் கிளப்பிக் கொண்டு போய் பேரணியை நடாத்த கடைசி அதுவரை-யாவது இது தாக்குப் பிடிக்குமா? என்ற பிரச்சினையும் சேர அவர்கள் கவலைப்பட ஆரம்பித்தனர். 

அது எழுந்து உட்கார்ந்து கண்களை இடுக்கிக் கொண்டு சுற்றி நின்றவர்களை விநோதமாகப் பார்த்தது. பிறகு சுயத்திற்கு வந்தது. எதுவுமே புதினமாக இல்லை அதுக்கு. 

எல்லோருமே பழையவர்கள் அல்லது அவர்கள் வழித்தோன்றிய- வர்கள். உடைகளும் முகங்களும் தான் வித்தியாசம். கோல உடை அணிந்தவர்களின் உடைகளும் புதியவைகள் தான். அவர்கள் கைகளில் இருந்த இரும்புத் தளபாடங்களும் வேறு தான். இத்தனை பெருங் கூட்டம் வந்திருப்பது ஏதோ பெரிய அலுவலாகத் தான் இருக்க வேண்டும் என்று அதற்குப் புரிந்தது. நாற்பத்தி யெட்டாம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற பின்னர் தன்னை எப்போ- தாவது தான் தேடி வருகின்றார்கள் என்பது அதற்குப் புரியாத தொன்றல்ல. 

எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தால் என்ன யார் அரசோச்சிய போதும் தேவைப்படும் நேரங்களில் மாத்திரம் தன்னிடம் வந்து கொஞ்சிக் குலாவி கன்னத்தில் கள்ள முத்தமிட்டு சுகித்து விட்டுப் போவதும் இயல்பானதே. 

ஆரம்ப காலங்களில் அடிக்கடி இந்த உறவுகள் புதுப்பிக்கப்படும். ஆனால் சமீப காலங்களில் இடைவெளி நீண்டு கொண்டு போய் விட்டது. நீண்ட இந்தக் காலப் பகுதியில் போர் என்றால் போர் என்று சொல்லிக் கொண்டிருந்த பெரும்பான்மைத் தலைமை அவ்வப் – போது அதனைப் பாவித்து வந்தது. அதற்குப் பிறகு வந்தவரும் ஒன்றும் குறைவில்லை. எத்தனை வாஞ்சையாக வெள்ளைப்புறா, வெண்தாமரை என்றெல்லாம் பளபளாக் காட்டினார்கள். எல்லாமே வெற்றி நிச்சயத்தில் கதைத்த பணமாயிற்று. 

“நீங்கள் வர வேண்டும்” 

வெகு விநயமாகக் கேட்டார்கள் வந்தவர்கள். 

“எங்கே….” இத்துப் போன குரலில் அது கேட்டது 

“நாட்டின் எதிர்காலம் கருதி நீங்கள் வர வேண்டும்” முன் வரிசை அங்கத்தவர் ஒருவர் பவ்வியமாகக் கேட்டார். 

அது சிரித்தது. ஆனால் பார்க்க அது சிரிப்பது போல இருக்க- வில்லை. மிதந்து கிளம்பிய அதன் பற்கள். ஆட்களைப் பயம் கொள்ளச் செய்தன. 

நாடு ஒரு கஸ்டமான நிலையில் உள்ளது. நாட்டைக் காப்பாற்ற வேண்டும். பெரும்பான்மை சிறுபான்மை பிரச்சினை எல்லை மிறிப் போய் விட்டது. நாட்டை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற வேண்டும். 

“அப்படியா…அவ்வளவு மோசமாகி விட்டதா பிரச்சினை” 

“ஆமாம் பிரச்சினை முத்திப் போய் விட்டது. நாங்கள் மேற்கொண்ட எந்த நடவடிக்கைகளும் இதுவரை பயன் தரவில்லை” 

“பயன்தரவில்லை என்றால்” 

“சிறுபான்மைப் பிரச்சினை முழுமையாக முடியவில்லை” 

“ஆமாம். சிறுபான்மையை முழுமையாக முடிக்கும் வரை பிரச்சினை முடியாது தான்” என்றது அது. 

கூட நின்றவர்களின் முகங்களில் சந்தோஷம் பீறிட்டது. தங்கள் தரப்பு நிலையினை அது உணர்ந்து கொண்டு விட்டதாக ஆனந்தம் கொண்டனர். 

“நாங்கள் பெரும்பான்மையாக இருக்கின்றபடியால் இந்த நாடு எங்களுக்கானது. நாங்கள் தான் இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும். அதுக்கு முதல் சிறுபான்மைப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்”. 

அது சற்றே கண்களை அகட்டி சுற்றி நின்றவர்களை பார்த்தது. சிறுபான்மைப் பிரச்சினையைத் தீர்க்கும் அதீத ஆர்வம் அவர்- களின் அகத்தில் இருப்பதை அது புரிந்து கொண்டது. 

“சிறுபான்மையினரின் மிச்சப் பிரச்சினையைத் தீர்க்கும் வரை அவ்வப்போது நான் உங்களுக்கு உதவ வேண்டும். அப்படித்- தானே.” 

சூழ நின்றவர்களை தன் கண்களால் சுழற்றி சுழற்றிப் பார்த்தபடி அது சொன்னது. 

“ஆமாம் எங்கள் செயற்பாடுகளுக்கும் வேகம் கொடுக்க வேண்டி- யுள்ளது. பெரும்பான்மை மக்கள் மத்தியிலே ஒரு எச்சரிக்கையை ஏற்படுத்த வேண்டும். எங்களை சந்தேகக் கண்ணுடன் பார்ப்பவர்- களைத் திசை திருப்பவும் வேண்டும். அதோடு”. 

மூச்சு வாங்கிய முன்னணித் தலைவர் சற்று இளைப்பாறினார்.

“அத்தோடு வாக்குகள் கேட்டுப் போகும் திருவிழா வரப் போகின்-றது. அப்படித்தானே” என்றது அது. 

“ஆமாம் நீங்கள் கட்டாயம் வர வேண்டும்” கூட்டத்தில் உச்சக் குரலில் வேண்டுகோள் விடுத்தனர். 

“நான் அதிக நாள் வாழ்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. மூப்பு வரவில்லையாயினும் என் நிலைமை மோசமாகி விட்டது. சரியான பராமரிப்பு இல்லாதபடியால் என் உயிர் போகப் போகிறது. இன்றோ நாளையோ அது நடக்கலாம்” 

சோகக் குரலில் அது சொல்ல. 

“அதனால் என்ன பரவாயில்லை. இப்போது வாருங்கள்” 

கையுறை அணிந்த கைகள் அதனைத் தூக்கின. அது எழுந்து நின்றது. 

“வாழ்க வாழ்க” என்று எல்லோரும் சத்தம் போட அமைதியான காட்டுப் பகுதி அதிர்ந்தது. காட்டில் இருந்த மிருகங்கள் அதிர்ந்து சிதறின. பறவைகள் துடித்துத் துடித்து விழுந்தன. 

ஒரு கிளாஸ் பழரசத்தினை அதனிடம் நீட்ட அதனை வாங்கிய அது மூக்கைப் பொத்திக் கொண்டு சுவைத்துப் பார்த்து விட்டு மிகுதியை தரையில் ஊற்றியது. 

பேரணி புறப்பட்ட போது புத்தாடை பூண்ட அது முன்னணியில் நிறுத்தப்பட்டிருந்தது. 

தங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடி போட்டு அதன் முகக் கொடு-மையை மறைத்திருந்தனர். காந்திக் குல்லாய் வைத்து தலையின் அசிங்கத்தை முக்காடு இட்டிருந்தனர். காந்திக் குல்லாய் போட்ட காந்தியத் தலைவர் நன்றாய் கழுவிய கைகளுடன் அதற்கு அருகில் வந்து கொண்டிருந்தார். 

எங்கும் வெண்மை…. எதிலும் வெண்மை, தூய வெண்மை, உடல் பொருள் ஆவி அத்தனையுமே இன ஒற்றுமைக்காக ஒப்படைத் தவர்கள் போல முதல் தர நடுத்தர கீழ்மட்ட தலைவர்கள் எல்லோரும் நடந்தனர். 

வழக்கமாக கோல உடைகளில் திரிபவர்களும் கூட தம்மை வெறுத்து வெள்ளை பர்தா அணிந்து பொது இயல்பு காட்டினர்.

சப்பிளாக்கட்டை, உடுக்கு, மேளம், தாளம் என்று ஒரு சிறு கோஷ்டி ஆடிக் கொண்டும் பஜனை பாடிக் கொண்டும் வந்தது. ஒத்து ஊதிக் கொண்டும் சில பேர் வந்தனர். அவர்கள் பெரும்பான்மையோடு இணைந்துள்ள சிறுபான்மையின் சிறுபான்மை என்பதை அது கண்டு கொண்டு கவலை கொண்டது. 

“நாடு வாழ்க” 

“இன ஒற்றுமை வாழ்க” 

“சிறுபான்மை பெரும்பான்மை பேதமை ஒழிக” 

“சிறுபான்மை மக்களின் உரிமைகளை அளிப்போம் அழிப்போம்’ “மக்கள் ஒன்றிணைந்து நாட்டை வாழவைப்போம்.” “நாட்டை மேம்படுத்துவோம் 

பேரணி தலைநகரினை விழுங்கியபடி பாம்பாக வளைந்து சென்றது. 

அது நடக்க முடியாமல் கஷ்டப்பட்டது. மூச்சு விடக் கூட இயலாமல் இருந்தது. பெரு வேதனையில் துடித்தது. 

பேரணி இன்னும் அதன் இலக்கை அடைய வெகுதூரம் இருந்தது. அதுவரை எப்படித் தாக்குப் பிடிக்கப் போகின்றேன் என அது கண்ணீர் விட்டது. 

நிலைமையினை புரிந்து கொள்ள முடியாதவர்கள் காட்டுக் கத்தலுடன் சேர்ந்து வரும் அதனை இழுத்துக் கொண்டு நடந்தார்- கள். பேரணியை பார்வையிட்டவர்களுக்கு அதனைக் காட்டி மகிழ்ந்தார்கள். 

நடந்து களைத்தவர்கள் வாகனத்திற்குப் போக புதியவர்கள் வந்தார்கள். களைக்காமல் வந்தார்கள். ஆனால் அது களைத்து தள்ளாடத் தொடங்கியது. 

“ஏன் இது பேசாமல் இருக்கிறது” என்றார் முன்னணித் தலைவர்-களில் ஒருவர்”. 

“இன ஒற்றுமை வாழ்க என்று சத்தம் போட்டால் எவ்வளவு நல்லாய் இருக்கும்” 

“இது குரல் கொடுக்கும் ஒப்பற்ற ஆட்சியைக் கொண்டு நடாத்தும் கட்சி என்ற பெயரல்லவா கிடைக்கும்” 

ஆளுக்கு ஒவ்வொரு கருத்தினைச் சொல்ல அது தலை குனிந்தது. கோபம் கொண்ட பேரணி சகபாடிகள் அதன் தலையை உலுக்கினர்.

“நாடு வாழ்க” என்று சொல்லும்படி நெருக்கினார். உயிருக்காகப் போராடும் வேதனையில் சோர்ந்திருந்த அதன் உதடுகளை அசைத்தாலும் சத்தம் வரவில்லை. 

தெண்டித்து தெண்டித்து தம் முயற்சி பயன் அளிக்க முடியாமல் போகவே அதனை வேறுவிதமாக கவனிக்கத் தலைப்பட்டனர். 

கைக்கடக்கமான ஆயுதங்கள் தான். நீளம் அதிகம் இல்லை. சிறுகத்தி, சிறிய ஊசிகள் ஆரவாரம் இல்லாமல் அதன் உடலில் இறங்கின. 

“சொல்லு” 

“கத்து…ம் கெதியாய் கத்து…” 

அது பரிதாபகரமாக மூச்சுத் திணறத் தொடங்கியது. 

பேரணி முடிந்து கூட்டம் ஆரம்பிக்கும் இடத்தை அடைந்த போது பேரணியில் வந்தவர்கள் உச்ச லாகிரியில் திளைத்திருந்தனர்.

மேடையிலே முக்கிய தலைகள் முதன்மை பெற்றிருக்க கனவுக் காட்சிகளாக மேடையும் சூழலும் வனப்புக் கொண்டன. 

தங்க பிறேம் கண்ணாடியும் புதிய உடைகளும் பிடுங்கப்பட்ட நிலையில் ரத்தம் பெருக்கெடுத்தோட அப்பாவித் தமிழ்ச்சனம் போல அது அனுங்கிக் கொண்டிருந்தது. 

“இதனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். அடுத்த மாதம் நாம் நடாத்தப் போகும் மகா நாட்டுக்கு இது தேவை” என்றபடி வேறு சிலர் வந்து கொண்டிருந்தனர். 

– சரிநிகர், ஏப்ரல் 6-22, 2000.

– மணல்வெளி அரங்கு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மாசி 2002, தேசிய காலை இலக்கிய பேரவை, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *