சத்தியத்தின் சின்னம்
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மங்கிப் போயிருந்த அந்தக் குத்துவிளக்கைச் சுடர் தட்டி, எண்ணெய் ஊற்றிப் பிரகாசிக்கச் செய்தாள் ரங்கநாயகி. அந்தத் தீப ஒளியிலே, குடிசையினுள் உறங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளும் முனகிக் கொண்டே புரண்டு புரண்டு படுப்பது அவளுக்குத் தெரிந்தது. கிழிந்த பாயிலும், ஓலையிலும் சுருண்டு கொண்டிருந்த ஜீவன்களுக்கு அருகில், பளிச்சென கம்பீரமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தது அவளுடைய சுழல் ராட்டை.
விளக்கைத் தூண்டிய பிறகு, மீண்டும் ராட்டை அருகே சென்று அமர்ந்தாள் ரங்கம். கை தானாக அதைச் சுழற்றியது. ராட்டையைப் போலவே அவள் மனமும் சுழன்றது.
அவள் கணவன் முருகேசன், வீட்டுக்கு வந்து போய் முழுசாக மூன்று நாட்கள் ஆகிவிட்டன. அன்று கடைசியாக அவன் வந்த போது, சட்டிப் பானைகளையெல்லாம் துழாவி ஏதாவது சில்லறைக் காசு இருக்கிறதா என்று ஆராய்ந்தான். ஒன்றுமில்லாமற் போகவே, ஏமாற்றத்தில் ரங்கத்தின் மீது எரிந்து விழுந்தான். கணவனின் மன நிலையைப் புரிந்து கொண்டிருந்த ரங்கம், அவனுக் குப் பிடித்தமான கீரைக் குழம்பும் சோறும் போட்டு, ஆத்திரத் துடன் வந்திருந்த அவனைச் சற்று அமைதியுறச் செய்தாள். உண்ட பிறகு சிறிது நேரம் மனைவியுடன் சிரித்துப் பேசிக்கொண் டிருந்தவன், அப்படியே தூங்கி விட்டான்.
பொழுது விடிந்ததும் எங்கேயோ எழுந்து போய்விட்டான். அவ்வளவுதான்; இனி என்றைக்கு வீடு திரும்புவான் என்பது அவனுக்கே தெரியாது. இப்படித்தான் அவனுடைய வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. ஒழுங்காக ஒரு இடத்திலே வாட்ச்மேன்’ வேலை செய்து கொண்டு வந்தவன், போக்கிரி களுடன் சேர்ந்து கொண்டு, வேலையைத் துறந்து, சோம்பேறியாக மாறின தினத்திலிருந்தே ரங்கத்துக்கு மனது உடைந்து விட்டது. ஒழுங்காக இயங்கிக் கொண்டிருந்த அவளுடைய வாழ்க்கை இழை, அதுமுதல் அடிக்கடி அறுபட்டுக் கொண்டிருந்தது. தன் மனைவியின் பஞ்சு போன்ற மென்மையான உள்ளத்தை மிக மிக நோகச் செய்தான் அவன்.
வாரம் ஒரு முறை, இரு முறை வீட்டிற்கு வருவான் அப்பொழுதெல்லாம், ‘துரை’க்கு நல்ல சாப்பாடு தயாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அடி, உதை, குத்துதான்! பாவம், ரங்கம் ஒரு கைராட்டையை வைத்துக் கொண்டு, அதில் நூல் நூற்று, சிட்டம் தயாரித்து, அதில் வரும் வருவாயைக் கொண்டு, திட்டமாகக் குடித்தனம் நடத்தி வந்தாள். அம்பர் ராட்டை வாங்கினால், இன்னும் சுலபமாக அதிகப் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில், கணவனுக்குத் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேமித்துக் கொண்டிருந்தாள். முருகேசனுக்குத் தன் மனைவியிடம் இருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்கச் சொல்லியா தரவேண்டும் ? அந்த முழுப் பணமும் ஒரு முறை, முருகேசனால் கிண்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது. ஆனால் அதற்காக ரங்கம் முருகேசனிடம் கடுமையாக நடந்து கொண் டாள், பொறுமையை இழந்து பேசினாள் என்பதே கிடையாது. காந்தி மகான் கண்டுபிடித்த கைராட்டையைச் சுழற்றிப் பயிற்சி பெற்றவர்களுக்கு பொறுமையை இழக்கவே முடியாதே! ராட்டை போதிக்கும் மாபெரும் பாடம் அது தானே ! என்றாவது கணவன் திருந்த மாட்டானா என்ற நம்பிக்கையில் அவள் வாழ்வு ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது.
அண்மையில் தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்ததால், அவள் கொஞ்சம் நூலை அதிகமாகவே நூற்றாள். தான் வைத் திருந்த பழைய தையல் மிஷினில் சிலருக்குத் துணியும் தைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். நல்ல வேளை இன்று வரை அந்த இரண்டுக்கும் முருகேசனால் ஆபத்து வர வில்லை. அது ரங்கம் செய்த பெரும் புண்ணியம் தான்!
சீட்டி ஒலியை மெதுவாக எழுப்பிக் கொண்டு, கட்டம் போட்ட கைக்குட்டையை கழுத்தில் கட்டிய வண்ணம் பிளாட்பாரத்தில், ஏதோ பெரிய காரியத்தை சாதிக்கப் போகிறவன் போல், ஆழ்ந்த சிந்தனையுடன் நடந்து கொண்டிருந்தான் முருகேசன். டாணா தெரு திருப்பத்தில், ஒருகை வந்து அவன் சட்டையைப் பிடித்து இழுத்துத் தடுத்து நிறுத்தியது. திடுக்கிட்டுத் திரும்பியவன், தன் எதிரில் காங்க்லைன் பக்கிரி நின்று கொண்டிருப்பதைக் கண்டு, முகத்தில் சிரிப்பைத் தவழ விட்டான்.
“என்ன வாத்தியாரே, இப்படி மஜாக்கா போறாப் போல இருக்குது?” என்று ஆரம்பித்தான் பக்கிரி.
“என்ன மஜா?” என்றான் விரக்தியுடன் முருகேசன்.
“உனக்கு விசயம் தெரியுமா?” என்று கேட்டான் பக்கிரி.
“சொன்னாத்தானே தெரியும்!”
“நம்ம மூலைத் தெரு முனுசாமி இல்லே, அதாம்பா அல்டாப் ஆறுமுகத்தோட தம்பி……”
“யாரு, ப்ளேட் பழனியோட சண்டை போட்டுகிட்டு, வெத்திலை பாக்குக் கடை வச்சிருக்கானே, அவனா? ”
“அவரே தான்! அவரு மூக்காத்தா தெரு மூலையிலே, நேத்து சாயந்தரம் ம் ஒரு குழந்தையை மிட்டாய் தரதா சொல்லி இட்டுக்கிட்டுப் போய், கழுத்திலிருந்த செயினை அபேஸ் பண்ணிட்டாரு !”
“சே, சே ! அவன் ரொம்ப யோக்கியனாச்சே! அப்படி யெல்லாம் செய்ய மாட்டானே? வேறே யாரையானா பார்த்துட்டுச் சொல்றயா?”
“அட நீ ஒண்ணு! நான் சொன்னதை நிசம்னா நம்பிட்டே! அவன் அழச்சிக்கிட்டுப் போனதை நீ கண்ணாலே கண்டதாக, கோர்ட்டிலே வந்து சாட்சி சொல்லணும்னு உன்னைக் கூப்பிடறேன்.”
“பொய் சாட்சி சொல்லக் கூப்பிடறயா? பாவம்பா! அவன் கிட்டே உனக்கேன் இந்த குரோதம்?”
“தம்பி! நம்ம கிட்டயே இல்லே அவரு வேலையைக் காட்ட றாரு ! இந்த தபா நம்பளே உள்ளே தள்ளினவரே அவருதான் ! நம்ப ப்ளேட் பழனி கிட்டே கூட ‘ராங்’ பண்ணினாரு! விடு வேனா? அதெல்லாம் என்ன பேச்சு, உன்னாலே ஆவல்லேன்னா சொல்லு, வேறே கிராக்கி பார்த்துக்கறேன்” என்று முடிவு கட்டுவதுபோல் பேசினான் பக்கிரி.
முருகேசன் சிறிது யோசித்தான். விஷயம் கொஞ்சம் தவறாக இருந்தாலும் வேலை சுலபம். நல்ல கூலியும் கிடைக்கும் போலிருக்கிறது, ஒப்புக்கொண்டால் என்ன ?
“சரி, கோர்ட்டுக்கு வந்து பொய் சாட்சி சொன்னா எவ்வளவு கொடுப்பே? நூறு ரூபாய் கொடுப்பியா?” என்று கேட்டான்.
“அடப்பாவி! செயின் விலையே அவ்வளவு இருக்காதே! சும்மா இரண்டு வார்த்தை சொல்றதுக்கா இவ்வளவு பணம் கேட்கிறே?”.
“பொய் சாட்சின்னா சும்மாவா ? மனச்சாட்சியையே இல்லே விக்கணும்?”
“அதல்லாம் இல்லே; ஐம்பது ரூபா தரேன். அட்வான்ஸா இந்தா பத்து ரூபாய்” என்றான் பக்கிரி.
கையை நீட்டிய முருகேசத்திடம், பத்து ரூபாய் நோட்டை வைத்து, “முருகேசு! டபாய்ச்சிடப்போறே! ஏட் ஐயா கிட்டே கூடச் சொல்லி வச்சிருக்கேன். திங்கக்கிழமை கரெக்டா பதினோரு மணிக்கு வந்துடு” என்று எச்சரித்தான்.
“நீ போ நயினா, என்னை கரிக்டா பதினோரு மணிக்கு கோர்ட்லே கண்டுக்கலாம்” என்று சொல்லிவிட்டுச் சென்றான் முருகேசன். அன்றிரவு அவன் நேரம் கழித்துத்தான் வீடு திரும் பினான். அப்போது அவன் கண்ணுக்குப் பட்ட உருவங்களெல் லாம் இரட்டையாகவே தெரிந்தன.
ஞயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு வந்த முருகேசத்தின் நிலை யைச் சாதாரணமாக வர்ணிக்க முடியாது. அன்று ஒரு சினிமாக் கொட்டகையில் புதுப் படம் ஒன்று வெளியாகியிருந்தது. டிக்கெட் கொடுக்கும் ஜன்னலுக்கு முன்னால் கூட்டம் இடித்துப் புடைத்துக் கொண்டு நின்றது. முருகேசன் அந்த கூட்டத் தில் எப்படியோ புகுந்து அடிபட்டு உதைபட்டு சட்டை கிழிந்து அலங்கோலமாக வெளியே வந்தான். இத்தனையும் எதற்காக? டிக்கெட் வாங்கி சினிமா பார்க்க அல்ல! அந்த டிக்கெட்டுகளை வாங்கிக் கள்ள மார்க்கெட்டில் விற்று ‘நாலு ஐந்து’ தேற்றிக்கொள்ளத்தான்.
இரவு பன்னிரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தவன், மறு நாள் பகல் பத்துமணிக்குத்தான் எழுந்திருந்தான்.
அன்று திங்கட்கிழமை, கோர்ட்டுக்குப் போக வேண்டிய நாள்.
முருகேசன் அவசர அவசரமாக முகம் கழுவிக் கொண்டு பெட்டியைக் குடைந்தான், ஒரு சட்டைக்காக, சோதனையாக ஒன்று கூடக் கிடைக்கவில்லை. கோபம், ஆத்திரம், ஏமாற்றம் எல்லாமாகச் சேர்ந்து வந்தது அவனுக்கு.
“ரங்கம், ரங்கம்” என்று உரக்கக் கத்தினான்.
“என்னாங்க” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் அந்த பெண் திலகம்.
“என் சட்டைகளெல்லாம் எங்கே ? ஒண்ணைக்கூடக் காணோமே ! அவசரமா எனக்கு வெளியே போகணும்” என்று இரைந்தான்.
“ஆமாம், அப்படி என்ன அவசரம், ஜட்ஜு வேலை தடுமாறிப் போவுதா?” என்று அவள் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக “உங்க சட்டைங்களெல்லாம் அழுக்கா இருக்கேன்னு இப்பத்தான் அரையணா சோப்பு வாங்கியாந்து கசக்கிப் போட் டேன்” என்று இழுத்தாள்.
“ஐயோ, நான் என்ன பண்ணுவேன்? ரொம்ப அவசரமாச்சே” என்று அலறினான் முருகேசன்.
ரங்கம் சற்று யோசித்தாள். பிறகு “கொஞ்சம் இருங்க என்று உள்ளே சென்றவள், தன் பெட்டியைத் திறந்து ஒரு புது சட்டையை எடுத்து வந்து கணவனிடம் கொடுத்தாள்.
கதர்ச் சட்டையென்றால் தன் கணவன் போட்டுக் கொள்ள மாட்டான் என்று தெரிந்திருந்தும், ஒரு அல்ப ஆசையில் அதைத் தைத்திருந்தாள் அவள். அன்பையே இழையாகக் கொண்டு நெய்யப் பட்டிருந்த ஆடை அது. ஆபத்துக் காலத்தில் கணவனுக்கு அது உதவுகிறதே என்ற சந்தோஷத்தில், ஆவலுடன் அதைக் கணவனிடம் கொடுத்தாள்.
லஸ்லின், ஸில்க், லினன் தவிர மற்றவை முருகேசன் உடலில் ஏறாது. ஆனால் அன்றைய அவசரம்? ஏதோ ஒரு சட்டை கிடைத்ததே என்று அது என்னவென்று கூடப் பார்க்காமல் மாட்டிக் கொண்டு ஓடினான். சும்மாவா ? ஐம்பது ரூபாய் ஆயிற்றே ?
மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. பக்கிரி கோர்ட்டில் நிலைகொள்ளாமல் தவித்தான். முருகேசன் காலை வாரி விட்டு விடுவானோ என்று பயந்தான். நல்ல வேளையாகத் தூரத்தில் முருகேசன் வருவதைப் பார்த்ததும் தான், அவனுக்கு நிம்மதி ஏற்பட்டது. ஆவலுடன் அவனை எதிர் கொண்டு அழைத்தான் பக்கிரி.
“என்னப்பா இவ்வளவு லேட்டு” என்று ஆரம்பித்தவன், “அட கதர்ச் சட்டையா? பெரிய ஆள் ஆயிட்டேப்பா நீ” என்றான்.
முருகேசன் தான் போட்டுக் கொண்டிருந்த ஷர்ட்டைப் பார்த்தான். அவனுக்குச் சுரீர் என்றது. ‘என்ன! கதர் சட்டையா?’ என்று சொல்லிக் கொண்டே சட்டையைத் தூக்கிப் பார்த்தான். அந்தச் சட்டையில், அந்த வெண்ணிற ஆடையில், அண்ணல் காந்தியின் முகம் தெரிந்தது, அவனுக்கு. அந்தத் தூய ஆடையில், தேசத்தின் சின்னம் தெரிந்தது அவனுக்கு. அந்தப் பரிசுத்தத் துணியில் ஆயிரமாயிரம் தியாகிகள் ஈடுபட்ட புனிதமான தேசீயப் போராட்டம் தெரிந்தது அவனுக்கு.
‘ஐயோ, இது சத்தியத்தின் சின்னமல்லவா? காந்தி மகாத்மா கண்டு பிடித்த மூலிகை அல்லவா? இதை வைத்துக் கொண்டு தானே நமக்கு அவர் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்? நமக்குக் கிடைத்த சுய ராஜ்யமே இதனால் தானே? சத்தியத்தின் சின்னமான இந்தத் தூய கதராடைக்கு மாசு ஏற்படுத்துவதா?’ முருகேசனின் மனப்பாறையில் இப்படிப்பட்ட எண்ண அலைகள் வந்து மோதின.
சட்டையையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் முருகேசன். பக்கிரிக்கு ஒன்றும் புரியவில்லை. முருகேசனின் உள்ளத்தில் மிகப் பெரிய போராட்டம் நடந்து கொண்டிருப் பதை அறியவில்லை அவன்.
விசாரணை ஆரம்பமாயிற்று. முருகேசன் சாட்சிக் கூண்டில் ஏறினான். பொய் சாட்சி சொல்லக் கூண்டில் ஏறினவன், உண்மை பேசினான்! தான் பொய் சாட்சி சொல்ல வந்ததாக! தனக்குப் பணம் கொடுத்துப் பேசச் சொன்னார்கள் என்று கூறி தான் கை நீட்டி அட்வான்சாக வாங்கிய அந்த பத்து ரூபாயை வீசி எறிந்தான். பக்கிரியின் மூக்கு உடைந்து விட்டது. முருகேசனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்றே அவன் எண்ணினான். முருகேசனின் உள்ளத்தை அந்தக் கதர்ச்சட்டை மாற்றி விட்டது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிய வில்லை! புடம் போட்ட தங்கத்தைப் போன்று, அக்கினியில் வீழ்ந்தெழுந்த உத்தமியைப் போன்று, சத்தியத்தின் சின்னத்தின் சேர்க்கையால் அவன் தூயவனாகி விட்டான் என்பது பக்கிரிக்குப் புரியவில்லை.
பலத்த போலீஸ் பந்தோபஸ்துடன், வீட்டுக்கு வந்து சேர்ந்தான் முருகேசன். சர்க்காவில் நூல் நூற்றுக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. கணவன் போலீசுடன் வருவது கண்டு திடுக்கிட்டாள்.
“ரங்கம் ” என்று அவள் அருகில் வீழ்ந்த முருகேசன், தான் திருந்திய வரலாற்றைத் தெரிவித்தான்
பொறுமையின் சின்னமான அந்தப் பெண் திலகம், சத்தியத்தின் சின்னத்தை நமக்களித்த, சத்திய சோதனைக்குள்ளாகி வெற்றி கண்ட சாந்த புருஷனின் படத்தைப் பார்த்தாள், கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்க.
– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.