சகோதரிகள் ஒருமித்து…




(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வகிடெடுத்து இருபுறமும் சீவி, நெளிநெளியாய் வழியும் கூந்தலை விரல்களால் கோதியபடி அமர்ந்திருந்தேன் நான். காலையில் தலைக்கு ஊற்றியபின், அவசரமாகக் கட்டி, கொண்டையிட்டிருந்ததால் இன்னும் முழுமையாக உலராதிருந்த கூந்தலில், சியக்காய் பொடியின் வாசனை ரம்மியமாய் வந்தது.
“சந்தியா இன்னும் தலை கட்டிக்கலையா நீ” கத்தினாள் அக்கா.
“நேரந்தான் இருக்கே?”
“புடவையும் மாத்தலே – சீக்கிரம்.”
அக்கா பத்து வருடங்களாக டீச்சராக இருந்ததில், அவள் குரல் எப்போதும் உச்சஸ்தாயியிலேயே நிலைத்து விட்டது!.
“நா வந்து பவுடர், மை போட்டு வுடட்டுமா?” மீண்டும் அக்காவின் கத்தல்.
“கேசரி ஆயிடுச்சாக்கா? வாசனை ஜோர். ரெண்டு வறுத்த முந்திரி தாயேன்,”
அக்கா இப்போது கோபம் மிக, அடுக்களையினின்றும் வெளிப்பட்டாள்.
“விளையாடுறியா? உக்காரு” என்றவள், பவுடர் டப்பியை எடுக்க.
நான் கிறீச்சிட்டேன்.
“வேணாங்க்கா, உன ஸ்கூல் விழாக்கள்ல நான் பார்த்திருக்கேனே உன் மேக்-அப் திறமையை! குட்டிங்க எல்லாம் பூதம் மாதிரி திட்டு திட்டா பவுடர் அப்பி, கண்ணே தெரியாதளவு மையடிச்சு…”
“போதும் அசடு, உனக்கு சிம்பிளா பண்ணி விடறேண்டி”
‘நா எனக்கு சிம்பிளா பண்ணிக்கறேன். நீ முதல்ல போய்க் குளி… வேர்த்துக் கொட்டுது”
“பொண்ணு பாக்க வரப் போறது உன்னை”
“அதுக்காக நீ இப்படி வர்றவங்களைப் பயமுறுத்தணுமா?”
அக்காவின் இடுப்பைக் கட்டிக் கொண்டேன்.
“இதுக்கெல்லாம் நேரமில்லை” – அக்காவின் விழிகள் உருண்டன. அகல்யாக்கா மிரட்டலாகக் கண்களை உருட்ட, அவள் முகம் இன்னும் குழந்தைத் தனமாகத் தெரியும். அது அறியாது, அவள், தான் வெகு சாமர்த்தியமாக விழிகளாலேயே பிறரை உருட்டி மிரட்டி காரியம் சாதிக்கிறோம் என்று நினைத்திருந்தாள்! அந்தக் கள்ளமில்லாத முகத்தைப் பார்த்து இரங்கியே அவளிடம் பலர் பல சமயங்களில் விட்டுக் கொடுத்திருந்தனரே தவிர வேறில்லை!
“ஆபீஸில் இன்னிக்கு அரை நேரம் லீவு கேட்டேனா. எல்லாரும் என்ன ஏதுன்னு குடைஞ்செடுத்துட்டாங்க.”
“எனக்குத் தெரியாதா, பத்து வருஷமா நா அந்த ஸ்கூல்லதாளே இருக்கேன். நீ ஒண்ணும் சொல்லலியே?”
அக்கா எனக்குத் தலை பின்ன ஆரம்பித்தாள்.
“அக்கா நீ ஏன் கல்யாணம் பண்ணிக்கக்கூடாது?”
“அசடு, முப்பது வயசிலேயா?”
“ஏன்? நீ இன்னும் சின்னப் பெண்ணாட்டம்தான் இருக்கே. நானாவது கருப்பு…”
“ச்சீ… நல்ல மாநிறம் நீ. நாந்தான் ஒரு அசட்டுச் சிவப்பு. கருப்புமில்லாம நல்ல சிவப்புன்னுஞ் சொல்லத் தரமில்லாம… உடம்பு வேற ஊதியாச்சு.”
அக்கா கொஞ்சம் குண்டுதான். கன்னங்கள் உப்பி, சின்ன உதடுகளுடன் செல்லம் போல இருப்பாள்.
“அக்கா… சத்தியமா உன்னை விட்டுப் போக எனக் மனசில்லே.”
“அசடு, காலம்பூரா இப்படியே ரண்டு பேரா…”
“வேற பெருசா உறவு யாரிருக்கா? எனக்கு நீ போதும்,”
“அது சரியில்லை.”
“அப்புறம் உனக்கு யாரு?”
“ரிடையர் ஆன பிறகு யோசிக்கலாம். அதுவரைதான் டீச்சர் உத்தியோகமிருக்கில்ல.”
அம்மா, இரண்டு வருடங்களுக்கு முன் வாதம் வந்து படுக்கையில் விழுந்த போதே அக்கா கிழவி போல வேதாந்தம் பேசுவாள். அம்மா போன பிறகு, தங்கைக்காகவே வாழ்வதாக நினைப்பு.
“இன்னிக்கு வரவருக்கு 32 வயசாச்சு, உன்னை முடிச்சுட்டா என்ன?” கேட்டேன்.
“இனி கல்யாணமெல்லாம் எனக்குச் சரிப்படாது. உனக்கு 25 முடிஞ்சாச்சு, ஏதோ இருக்கற நகை, பணத்துல உனக்கு முடிச்சிரணும்.” கறாராய் சொன்னாள்.
அக்காவிற்கு பயம்.
தன்னைக் கட்டிக் கொள்கிறவன், கொழுந்தியாளுக்கு செய்ய வேண்டிய பொறுப்பை, தட்டி உதறிவிடுவான் என்று பயம்!
“எனக்குப் பிடிக்கலை”
என் கண்கள் கலங்க, அக்கா பதைத்தாள்-
“ப்ளீஸ் சந்தி, எனக்காக, இப்ப போய் மூஞ்சிய தூக்கி வச்சுக்காத. நா எவ்வளவு ஆசையா எல்லாம் செய்து வச்சுக் காத்திருக்கேன்.”
“போண்டா, கேசரி முடிக்க நானாச்சு.”
“அசடு, அதச் சொல்லலை. 12 பவுன் நகை, பணம், பாத்திரம். அதைச் சொன்னேன்… ப்ளீஸ் சந்தி..”
மறுபடி அடுக்களையுள் புகுந்து கொண்டாள் அவள்.
நான் கிறிஸ்மஸுக்கு எடுத்த இளம் பாசிப்பச்சை பட்டை எடுத்துக் கட்டிக் கொண்டேன். போன வாரம் கிறிஸ்மஸ் அன்று நள்ளிரவு தியானத்திற்கு அதைக் சுட்டியிருந்தேன். சிறு அரக்கு பார்டரில் விரலளவே சரிகையிருந்தாலும் அது எனக்கு எடுப்பாகத்தானிருந்தது.
வாழையிலையைப் பிரித்து மொட்டு மல்லிகைச் சரத்தில் 2 முழம் நறுக்கி தலையில் சூடிர் கொண்டு, மீதியைச் சுருட்டி அக்காவுக்கென வைத்தேன்.
”நீ அழகுதான் சந்தி” – குளித்து விட்டு வந்த அக்கா, சேலையை அரைகுறையாய்ச் சுற்றிக் கொண்டு என்னையே பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ம்ப்ச்… அப்பா போய் ரொம்ப காலமான மாதிரி தோணுதில்ல? அம்மாவாவது இருந்து பார்த்திருக்கலாம்” பேசியபடி சேலையைக் கொசுவினாள்.
“எதை? நீயிருக்க எனக்குக் கல்யானம் பேசுறதையா?”
காது கேட்காதவள் போல பவுடர் பூசி முகத்தைச் சேலையால் துடைத்துக் கொண்டாள்.
“இன்னிக்கும் நூல் சேவையா? கிறிஸ்மஸ் சேலையைக் கட்டுக்கா… ப்ளீஸ்.”
“நானும் நீயும் ஒண்ணுபோல கட்டிட்டு நின்னா அசட்டுத்தனமா இருக்கும்.”
“ஒரு நாளைக்குத்தான் நா சொல்றது கேளேன்.”
“ம்ப்ச்… அப்புறம் ரவிக்கையை வேற மாத்தணும்”.
வாசலில் கார்வந்து நிற்கும் ஓசையில் படபடப்பு கூட, “நீ எதும் வாயைத் திறக்காத. எல்லாம் நா பாத்துகிறேன்.”
ஹாலின் ஜீஸஸ் படத்தைப் பார்த்து கை குவித்தபடி, வாசலுக்குக் குடுகுடுவென விரையும் அக்காவைப் பரிவுடன் பார்த்தேன் நான்.
பெற்றோர் இருந்திருந்தால் இந்தப் பதட்டமேதுமின்றி, என்னோடு ஜன்னல் வழியே மாப்பிள்ளையை தோட்டமிட்டுச் சிரித்துக் கொண்டிருந்திருப்பாள்.
‘இதான் என் மூத்தப் பொண்ணு. நல்ல இடத்துல வாக்கப்பட்டிருக்கு. 2 பிள்ளைங்க’ என அப்பா அறிமுகப்படுத்த, அமுக்கமான சிரிப்போடு, அந்தஸ்தோடு நின்றிருக்க வேண்டியவள், இதோ… ‘இந்த பாஸ்கருக்கும் நெருங்கிய உறவு அதிகமில்லை. அக்கா எங்களோடு வந்து இருக்க சம்மதிப்பாரா?’
தரகர் அப்படித்தான் சொன்னார்.
‘தாவா கஷ்டப்பட்டு உசந்த பிள்ளை. அவுக அப்பா அம்மா கலப்பு சுலியாணமானவங்க – அப்பா வகையில் வெட்டிவுட்டுட்டாங்க. ஒரு சித்தி, சித்தப்பா கொஞ்சம் நெருக்கம். பெத்தவுங்க ஒரே ஆக்ஸிடெண்ட்ல போன பிறவு தம்பிதான் தங்கச்சிகளை ஆளாக்கிக்கட்டிக்கொடுத்தது. சொந்த வீடு, கொஞ்ச நிலம் உண்டு. அதுலயே ஷாப் கடை. அதுல நல்ல யாவாரம். ஊர்ல நல்ல பேரு. நா நீன்னு பொண்ணு குடுக்க வாராவ. தம்பி தனக்கு கஸ்டம் தெரிஞ்ச குணமானவளா இருக்கணுங்க விட்டு இங்க அழைச்சுட்டு வந்தேன்’. தரகர் கூறிய விவரங்களை அக்காவும் விசாரித்து ஊர்ஜிதப்படுத்திக் கொண்டே இன்று பிரபாகரை இங்கு வரவழைத்திருந்தாள்.
சந்தியா, ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். போன வாரம் கிறிஸ்மஸுக்காக தொங்க விட்டிருந்த ஸ்டார், அதற்குள் வெளிறி ஆடிக் கொண்டிருந்தது.
தரகர் உற்சாகமாய்,
“அகல்யா பொண்ணு தங்கம். அம்மாமுடங்கவுமே எஸ்.எல்.சி டிரெயினிங் முடிச்சு வேலை தேடிக்கிச்சு. தங்கச்சின்னா உயிரு.” நான் சற்று தலையைச் சாய்த்துப் பார்க்க அக்கா தெரிந்தாள். தரகரை அரைக்கண்ணால் முறைத்தபடி! அதில் அவர்கிடுகிடுத்து வாய் பொத்திப் போக,
“சந்தியா வாம்மா” – அக்காவின் ‘கணீர்’ குரல், தரகரின் குரலை வெட்டி எழுந்தது!
பலகாரத் தட்டுடன் நான் முன்னறையுள் நுழைந்தேன். பழைய மின்விசிறியின் சத்தமும், மற்றபடி கனத்திருந்த நிசப்தமும் எனக்கு சங்கடமாயிருந்தன. முக்காலியில் தட்டை வைத்து, அவரை நோக்கி கைகூப்பினேன்.
“உட்காரு சந்தியா. பலகாரம் எடுத்துக்கோங்க. உங்க ஊரில். ஸ்கூல் இரண்டு இருக்குல?” அக்கா அவரை விசாரித்தாள்.
நான் மெல்ல நிமிர்ந்து அவரைப் பார்த்தேன்.
ஆள் அத்தனை மோசமில்லை.
லேசாக ஒரு அசட்டுக் களை முகத்தில் பரவியிருந்ததோ?
தட்டையான மூக்கு. இருபுறமும் சற்றே விடைத்து விரிந்திருந்தது வேடிக்கையாயிருந்தது.
“ஸ்கூலுங்க இருக்கு. நம்ப கடை கணக்கு வழக்கு பார்த்துக்கிட்டாலே எனக்கு உதவிதான். உங்க ஸ்கல் பக்கத்திலேதானா?” அவர் கண்கள் சலனமில்லாது அக்கா மேலேயே நின்றன.
பலதும் பேசியபின் திடீரென அவர் –
“நா சந்தியாவோட 2 நிமிஷம் பேசணுமே” என, எனக்கு வியர்த்தது.
“அதுக்கென்ன… இப்படி வாங்க” – இயல்பாய் உள்ளே அழைத்தாள் அக்கா.
‘ஏதாகிலும் அசட்டுத்தனமாய்ப் பேசுவாரோ? இவர் அக்காவின் கொழுந்தனாகி விட்டால், அவள் இவரையும் அசடு என்று தான் கூப்பிடுவாள்’ – மனதுக்குள் கூட சிரிக்க முடியாத பதட்டத்தில் நான் விரல்களை நெரித்தபடி அறைக்குள் நுழைந்தேன்.
”சத்தியா, நா இப்ப சொல்லப் போறதைக் கேட்டுச் சங்கடப்படக் கூடாது, என்ன?” அவர் குரல் அசட்டுத்தனமாக இல்லை தெளிவாக இருந்தது.
நான் தலையசைத்தேன்.
“நீ சின்னப் பொண்ணு தான். இன்னும் நல்ல இடமாப் பாத்து நா கல்யாணம் பண்ணி வைக்கிறேன். நா உங்க அக்காவைக் கல்யாணம் செய்துக்க விரும்றேன். என்ன சொல்ற?”
என் உடம்பெங்கும் வெந்நீர் பாய்வது போல ஒரு விநோத உணர்வு.
மெல்ல நிமிரிந்தேன். கரிசனையுடன் என்னைப் பார்த்தவாறிருந்த முகம்… மென்மையும் அழகுமாகத் தெரிந்தது.
“வயசு, சிறு வயசுல நிலைச்சு நின்னது… இதுல எங்களுக்குள்ள பொருத்தம் ஜாஸ்திம்மா. ஏற்கெனவே நா ரண்டு தங்கச்சிமாருக்கு கல்யாணம் செய்து வச்சவன். உனக்கும் நல்லபடியா…”
நான் அழுது விட்டேன்.
“என்ன?!”
“தாங்க்ஸ் ரொம்ப தாங்க்ஸ் அத்தான். எனக்கு ரொம்ப சந்தோஷம்” – அழுகையினூடே சிரித்தேன்.
“தரகர் அண்ணாச்சிக் கிட்டயே இதைச் சொல்லியிருப்பேன். நீ தப்பா நினைச்சுக்கக் கூடாது சந்தியா”
இன்னுமாய் சந்தோஷ அழுகை பொங்கியது.
மூக்கும், காதும் சிவக்க:
“யூ ஆர் கிரேட்” என்றேன்!
உணர்ச்சி வசப்படும் போது ஆங்கிலத்தில் பேசுவது என் வழக்கம்.
அவரில் எனக்கு தந்தை, சகோதரன், அத்தான் எல்லாருமாய் சேர்ந்து கிடைத்த திருப்தி வந்தது.
அவரைக் கட்டிக் கொள்ளலாம் போலத் தோன்ற, முகமெல்லாம் வெளிச்சமாய் வந்தேன்.
அக்காவைக் கட்டிப்பிடித்து அவள் குண்டு கன்னங்களில் முத்தமிட, அவள் அடிக்குரலில் சிடுசிடுத்தாள்.
“அசடு… என்ன பண்ற?”
ஆனால் அவள் கைகள் என்னை ஆதுரத்துடன் சுற்றிக் கொண்டன.
”அக்கா” – குரல் குழறியது.
”நா சொல்றேன் சந்தியா” – பேச ஆரம்பித்த அத்தானின் கம்பீரமும் ஆண்மையுமான – களையா முகத்தை பார்த்தவாறிருந்தேன்.
வெற்றிலைக் குதப்பலை முடித்து நுழைந்த தரகர், தாழ்வார ஸ்விட்சைத் தட்ட, ஸ்டாரின் உள்ளிருந்த பல்ப் எரிந்தது.
ஸ்டாரின் வெளிறலை மீறி மின்னியது!
– நண்பர் வட்டம், டிசம்பர் 1992.
– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.