கோர்ட்டு முத்திரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 2, 2024
பார்வையிட்டோர்: 1,107 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இப்பொழுது முன்சீப் கேஸைத் கூப்பிடப் போகிறார். என்ன செய்வோம்?” 

“ஏங்க? நெம்பரை நடத்த வேண்டியது தாங்களே. பணம் கொடுத்ததைப் பார்த்தவரு ராமன் வந்திருக்காரு. கிட்ணன் வந்திருக்காரு. அவருகிட்டெத்தான் பணம் கடன் வாங்கிக் கொடுத்தேன். ரசீது தர்றீயா, இல்லை யான்னு கேட்டனுப்பிச்சப்போ தறேன்னு அவரு சொன் னதுக்குச் சாட்சி இருக்கு?”

”அது யாரு?” 

“அந்தாலே நிக்கிறாரே வீசைக்காரரு, அவருதான்.” “அவர் பேரு?” 

“ஒரு நல்ல பேருங்க. ” 

‘உனக்கே தெரியாதா?” 

“ஏன் தெரியாது?” மறந்து போச்சுங்க. கிருஷ்ணன் ஊர்தானுங்க. அவர் பின்னோடெத்தான் வந்திருக்கிறாரு. ஏன் கிட்ணா. அவர் பேரென்ன?”

“கோவிந்தன்” 

“ஆமாங்க, ஆமாங்க. கோவிந்தனுங்க.” 

“இவர்களை எல்லாம் விசாரித்தால்?” 

”பணம் குடுத்தேனா.இல்லையா இங்கிறது புலப்பட்டுப் போவுது.” 

“பணம் கொடுத்தோமா, இல்லையா என்பது நமக்குத் தெரியாதா?” 

அதெப்படித் தெரியும்? ஒலகத்திலே நடக்கிற எல்லா விஷயங்களும் நமக்கெப்படித் தெரியுமுங்க?’ 

“அது சரி. கேஸ் விசாரணைக்கு வந்து எத்தனை ஈரங்கி ஆச்சு என்று ஞாபகம் இருக்கிறதா?” 

“அஞ்சு மாசம் ஆச்சு.” 

”உனக்குத்தான் நல்ல ஞாபகம் இருக்கிறதே. நீ கோர்ட்டுச் சம்மனையும், பிராது நகலையும், கிருஷ்ணனை யும் அழைத்துக்கொண்டு வந்தாயே, அது ஞாபகம் இருக்கிறதா?’ 

“நல்லா இருக்கு! கிட்ணனும் நானும் பாலக்கரை ஆச்சி கிளப்பிலே அரிசி உப்புமாத் தின்னூட்டு நேரே உங்க ஊட்டுக்குத்தானே வந்தோமுங்க. நல்ல படை படைக்கிற வெயில்!” 

“வந்து என்னிடம் என்ன சொன்னாய், ஞாபகப் படுத்திப் பாரு.” 

“சுக்ரமணிய கவுண்டன் தாவா போட்டூட்டானுங்க. சம்பா மகசூல் கைக்கு வந்ததும் பணம் தரேன் இன்னு சொன்னேன். சரீன்னு சொல்லிக்கிட்டிருந்த பயல் தாவா போட்டூட்டானுங்கன்னு சொன்னேன். 

“வேறே ஒண்ணும் சொல்லவில்லையா?” 

“கோர்ட்டுலே நாலு மாசம் கெடு வாங்குங்க. சம்பா மகசூலில் கடனைத் தலையைச் சுத்தி எறிஞ்சுடறேன்னு சொன்னேன்.” 

“அதற்கு நான் என்ன சொன்னேன்; ஞாபகம் இருக்கிறதா?” 

“கச்சேரியிலே ஒரு மாசத்துக்கு மேலேகெடு கொடுக்க மாட்டாங்க இன்னீங்க. ஒரு மாசத்திலே பணம் எப்பிடிக் கிடைக்குமுங்க? சனியனை ஒழிச்சுப் புடறேனுங்க; அதுக்கு எப்படியாச்சும் ஒரு வழி பண்ணுங்க இன்னேன்.” 

“நீ சொன்னபடி வழி செய்தேன். ஒரு கட்சியைச் சொல்லிவை. விசாரணை என்று, இரண்டு, மூணு ஈரங்கி ஒத்திப் போகும். நாலு மாசம் கெடுவும் கிடைச்சுப் போகும் என்று சொல்லிவிட்டு ஒரு கட்சியை எழுதிப் போட்டேன்.” 

“அதுக்கென்னாங்க,நீங்க சரியாத்தானே எழுதிப் போட்டீங்க.” 

“பிரதிவாதி கொடுத்த பணம் பத்து ரூபாயைப் பிரா தில் வரவு வைக்காமல் வாதி மோசடி செய்திருக்கிறார் என்று நானா எழுதிப் போட்டேன்?” 

“ஆமாங்க.” 

‘”பணம் கொடுத்தேன்னு நீ சொல்லவில்லையே.”

“இல்லிங்க.” 

“இப்பொழுது வந்து சாட்சி வந்திருக்கு விசாரிக்க ணும் என்கிறாயே?” 

“ஆமாங்க.” 

“வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது என்பார்களே. அதுமாதிரி பொய்க் கட்சியை நான் தயார் செய்தேன். என்னிடத்திலேயே, ‘சாட்சி இருக்கிறது. நம்பரை நடத்த வேணும்’ என்கிறாயே!’ 

“வாஸ்தவம்தானுங்க, ஒருநாள் ராமனைப் பார்த்து வக்கீல் ஐயா இந்த மாதிரி எழுதிப்போட்டு இருக்காங் கன்னு சொன்னேன். பணம் கொடுத்தது அவருக்கு எப்பிடித் தெரிஞ்சுதுன்னு கேட்டானுங்க. அப்பொத்தான் பணம் கொடுத்திருப்பேன்; மறந்து போச்சு இன்னு தோணித்து.”

“இதைப் பாரு, இந்தக் கதை எல்லாம் கோர்ட்டிலே பலிக்காது. முனிசீப் முழிச்ச ஆள். கட்சியை நடத்த வில்லை என்றால் கௌரவமாக இரண்டு மாசம் கெடுவா வது வாங்கலாம்.” 

‘பணம் குடுத்துதுன்னு எழுதிப் போட்டீங்களே ; அது பொய்யாகிடுமே. 

“இல்லாத போனால் ரொம்ப நெஜம்!’ 

“அப்பொ இவுங்க எல்லாம் பொய் சொல்றாங்களா?” 

“கருமாதிக்குச் சாப்பிட்டவன் இருக்கிறான்; செத்தது பொய் என்கிறாயே!” 

“என்னங்க! பொய் மெய்யெல்லாம் கோர்ட்டாரு அல்ல சொல்லணும். சும்மா நெம்பரை நடத்துங்க. பணம் கொடுத்தது மெய்யா, பொய்யாங்கறது கோர்ட்டாரு பாடு.’ 

கோர்ட்டு முத்திரை விழுந்தாலொழிய பொய் பொய்யாகாது என்ற புது உண்மையைக் கேட்ட வக்கீ லுக்கே ஆச்சரியமாக இருந்தது. வக்கீல் கையில் இருந்த பென்சில் அவரை அறியாமலே வராந்தாத் தூணில் ஒரு ஆவர்த்தம் வாசிக்க ஆரம்பித்து விட்டது. 

“ராக்கப்பபிள்ளை, ராக்கப்ப பிள்ளை!’ என்று கச்சேரி டபேதார் வராந்தாவில் நின்று கத்தினான். 

வக்கீலும் ராக்கப்ப பிள்ளையும் கோர்ட்டுக்குள் விழுந்தடித்து ஓடினர். முன்சீப்தார் வழக்கை விசா ரணைக்கு எடுத்துக்கொண்டார். வாதி, பிரதிவாதி,சாட்சி ராமன், கிருஷ்ணன், கோவிந்தன் அத்தனை பேர்களையும் விசாரித்த கோர்ட்டார் வாதி பக்கம் தீர்ப்பளித்துவிட்டு, அடுத்த கேஸை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். வக்கீலும் ராக்கப்ப பிள்ளையும் வராந்தாவுக்கு வந்தனர். 

“என்ன ராக்கப்ப பிள்ளை! இப்பொழுது திருப்தி யாகி விட்டதா? முன்சீப் முத்திரை விழுந்தூட்டுது. சந்தோஷமாப் போச்சா?’ என்றார் வக்கீல். 

ராக்கப்ப பிள்ளை உடனே பதில் சொல்லவில்லை. ஊருக்கு அடுத்த பஸ் எப்பொழுது கிளம்பும் என்று வீசைக்காரரை விசாரித்தார். ஒரு மணி நேரத்துக்குள் பஸ் இருப்பதாகவும், போகிற வழியில் பாலக்கரை ஆச்சி கிளப்புக்குப் போய்விட்டு வீட்டுக்குக் கிளம்பப் பொழுது இருப்பதாகவும் பேசிக்கொண்டார்கள். 

“என்ன ராக்கப்ப பிள்ளை! நான் கேட்டது காதுலே விழல்ல போல இருக்கு. இப்பொழுது சந்தோஷமா?”

“விழுந்து துங்க. கச்சேரிக்கு லீவ் எப்பொங்க?”

“அடுத்த மாசம்.’ 

“சுக்ரமணியன் என்னை எதுனாச்சும் செய்யணுமின்னா என்ன செய்யணும்?” 

“தீர்ப்பு நகல் வாங்கிக்கொண்டு நிறைவேற்ற மனுப் போடவேணும்.” 

அந்த நகலு அவனுக்கு இன்னிக்கே கிடைக்குமா?”

“கிடைக்காது. இவன் ஒரு நகல் மனுப் போட வேணும். பிறகு ஒரு மாசத்திலே கிடைச்சுப் போகும்.” 

”அது வரத்துக்கும் கோர்ட்டுச் சாத்தறதற்கும் சரி யாய்ப் போயிடாதுங்களா?’ 

“போயிடும். போயிடும். நான் கேட்டதற்குப் பதில் சொல்லமாட்டேங்கிறியே?” 

“அதைப் போய்ச் சொல்லுவானேன்னு?”

“சும்மாச் சொல்லு.”‘ 

சந்தோஷமாத்தான் போச்சுங்க. இப்பொப் போய்க் கெடு வாங்கிக்கிட்டா நல்லாவா இருக்கும்? உங்களை அல்ல பொய்யனாக்கிப் புடும்? எனக்காக ஒரு கட்சி எளுதிப் புட்டீங்க. அதைப்போய் நானே அழிக்கலாம்களா? இப்பொ பாருங்க. யாரும் பொய்யாகிடல்லே. எதோ கோர்ட்டாரு செஞ்சுப்புட்டாங்கன்னூட்டுப் போயிடும். இல்லீங்களா? மூணு நாலு மாசம் இருந்தால் போது மின்னு நெனைச்சேனுங்க. ஆறு மாசத்துக்கு மேலேயே கெடச்சிப் போச்சு; வரேங்க.” 

ராக்கப்ப பிள்ளையும், சாட்சிகளும் வக்கீலை வணங்கி விட்டுப் புறப்பட்டுவிட்டார்கள். 

தான் சொன்ன பொய்யை மெய்யாக்க இவ்வளவு முயற்சியும் செய்தது போல ஒரு தோற்றத்தை அல்லவா உண்டாக்கி விட்டான்! அந்த உண்மை அவர் மனத்தைக் கலக்கிற்று. அவரை அறியாமலே கையிலிருந்த பென்சில் வராந்தாத் தூணில் கெத்து வாசிக்கத் தொடங்கிற்று. 

– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.

ந.பிச்சமூர்த்தி வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *