கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 10, 2025
பார்வையிட்டோர்: 1,938 
 
 

(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தத் தேர்தலில் முடிவு வரப்போகிறது என்ற செய்தியைக் கேட்டது முதலே ஆண்டிச் செட்டியாருக்கு அடிவயிற்றில் கவலை. காந்திமதிநாதனை எதிர்த்துப் போட்டி இட்டது அவராக இருந்தால் அந்தக் கவலைக்கு நியாயம் உண்டு. ஆனால் காலையில் எழுந்து எண்ணெய் டின்கள் கொண்ட நார்ப்பெட்டியைத் தலையில் தூக்கிக் கொண்டு ஏ… தேங்கெண்ணை… நல்லெண்ணை … பின்னைக் கெண்ணை…” என்று அலைகிறவருக்கு இந்தக் கலக்கம் அநாவசியம்.

தினமும் ஏழெட்டு மைல் சுற்றித் திரிந்தால்தான் ஆண்டிச் செட்டி யாருக்கு வயிற்றுப்பாடு கழியும். அதற்காக இந்த நாட்டில் அரசியல் மாற்றங்கள் யாரையும் பாதிக்காமல் விடுகிறதா? சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க -சுவர்களில் கோஷங்கள். சந்திகளில் கொடிகள். மூலைகளில் தட்டிகள். கும்பல் கும்பலாக வாதங்கள்.

நான்கு ஊர்களைச் சுற்றிவரும் ஆண்டிச் செட்டியாருக்கு ஊர் ஊராக உள்ள நிலவரம் தெரியும். எந்த ஊரில் எந்தச் சாதிக்காரன் அதிகம்? அதில் பிரிவு, பிளவு என்னென்ன? அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? கவனிக்காமல் போனாலும் காதில் விழும் சமாச்சாரங்கள்…

எண்ணெய் வியாபாரத்தை முடித்துவிட்டு தலைச்சுமை குறைந்த ஆறுதலில் குளத்தில் இறங்கிக் குளித்து, வேட்டி துவைத்து, ஈரம் ஆற்றி உடுத்து, நான்கு மணிக்குச் சாப்பிட விரைகையிலும் வழி மறித்துக் கேட்டார்கள்.

“வே செட்டியாரே… இஞ்ச வாறோ?”

“வாறமிய்யா…”

“அந்தப் பக்கமெல்லாம் நெலவரம் எப்படிவே?”

“நமக்குத்தான்யா…”

“அப்படியாவே சொல்லுதேரு? கருது அருவாளுக்கில்லாசப்போட் டுண்ணு சொல்லுகானுவ…”

“இல்லய்யா… நமக்குத்தான்… தெனமும் அலையவனுக்குத் தெரியாதுண்ணா?”

”அப்பம் நல்ல மெசாரிட்டியிலே செயிச்சுப் போடலாம்ணா சொல்லுதேரு?”

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற வாதம் எல்லா வீடுகளிலும் போலவே ஆண்டிச்செட்டியார் வீட்டிலும் இருந்தது. அவருக்கும் பெண்டாட்டி செல்லம்மைக்கும் சாப்பாடு ஆனபிறகு இதுவே பேச்சு.

“நீங்க என்னதான் சொல்லுகியோ? சுத்திச் சூள நாடாக்கமாரு… அவுனுகளைப் பகைச்சுக்கிட்டு நம்மாலே நடமாடமுடியுமா? சவம் ஊருக்கு ஒப்பம் போயி பசுவும் கண்ணுக்குட்டிக்கும் போட்டுக்கிட்டு வரணும்…’

“இல்லே எளவே… வரவர இந்த நாடாப் பயக்க அட்டகாசம் அதியமாட்டுல்லா போச்சு? புடிச்சுமோளத் தெரியாத பயக்ககூட ஒரு தராதரம் இல்லாம என்னவே செட்டியாரேங்கான்… தேங்கா பத்துபைசா குறைச்சுத் தாண்ணா வேணும்ணாவேங்கும் இல்லேண்ணாபெட்டியைத் தூக்கிட்டுப் போவுமிங்கான். அண்ணைக்கு ஒரு செறுக்கி விள்ளை இது விக்கதுக்கில்லவேய்ணு பரியாசம் பண்ணுகான்…”

“நீரு தூக்கி நிறுத்தீரப் போறேராக்கும்… வெள்ளாங் குடிக்காரனுக நாலஞ்சு பேரு சேர்ந்து கதிரு அருவாளு கொடி கட்டி ஒரே சண்டை. சண்டை வந்தாலும் கேக்கதுக்கு அவுனுக நாலு ஆளும் பேரும் உண்டும். உம்மை வளியிலே செறுத்து கேட்டாம்ணா எவன் வருவான்? பேசாம பசுவும் கண்ணுக்குட்டிக்கே போடலாம்…”

“ஏட்டி! எஸ்.பி.சாமி நம்ப எனவம்லா? அதுக்காச்சுட்டியாவது ஓட்டுப்போடாண்டாமா?”

“ஆமா…எனவந்தான் நம்மளைத் தாங்குகானாக்கும். எண்ணைச் செட்டிக்கும் எலைவாணியனுக்கும் என்னா? எனவனுக்கு ஓட்டுப் போட்டு செயிக்கல்லேண்ணா நாடாக்கமாரு நம்ம தாலியை அறுத்துப் போட மாட்டானுகளா?”

”ஒனக்கு என்ன மயிரு தெரியும்? தேங்காய் புண்ணாக்கு வச்சு தொவையலு அரைப்பே… போன எலக்சன்லே எஸ்.பி.சாமி ரெண்டா யிரம் ஓட்டிலேதான் தோத்திருக்கான். இப்பம் அவனுக்கு நல்ல சப்போட்டு உண்டும். நெய்த்துக்காரனுக எல்லாம் கதிரு அருவாளு… டவுண்லே நாடாக்கமாரு தவுத்து மத்த சாதிக்காரன் எல்லாம் எஸ்.பி.சாமிக்குத்தான். வடசேரி சாலியக்குடி, கோட்டாத்துக் கம்பளத்திலே பணிக்கம்மாரு… எங்க பாத்தாலும் செவப்புக் கொடி யால்லா இருக்கு… நீ வேணும்ணா பாரு நாடாக்கமாரு ஒரு பாடம் படிக் கத்தான் போறானுக…”

“சரி சரி… நீரு இதையெல்லாம் வெளீல சொல்லீட்டுத் திரியாதை யும்… எவன் எக்கேடு கெட்டா நமக்கென்ன?”

வெளியில் தன்னை இனங்காட்டிக் கொள்ளாமலிருக்க ஆண்டிச் செட்டியார் மிகப் பிரயத்தனப்பட்டார். அவர் என்னதான் தன்னைப் பசுவும் கன்றுமாகக் காட்டிக்கொண்டாலும் எதிராளிக்கு அவர்மேல் நம்பிக்கையில்லை.

”கௌவனை நம்பப்பிடாதுவே… அமுக்கி அறுத்திருவானுவ… செட்டிக்கு எட்டுப்புத்தி பாத்துக்கிடும்…” எனும் பாங்கில் விமர்சனங்கள் உண்டு.

நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் பணம் கொடுத்தாவது ஆண்டிச் செட்டியாரை சரிப்படுத்தி விடலாம் என்று காந்திமதிநாதனின் ஆட்கள் எண்ணினார்கள். கதிர் அரிவாளில் நிற்கும் எஸ்.கே.சாமியை ‘கமத்திப் போட்டு அடிச்சாலும் கால்காசு கெடையாது’ என்பது அவர்களுக்குத் தெரியும். காந்திமதிநாதன் அப்படியல்ல. தென்னம் பிள்ளைத் தோப்பு கள், முக்கூடல் மலையில் கூப்பு கான்ட்ராக்டு, பாலமோர் ரோட்டில் இரும்பு, பெயின்ட் வியாபாரம், குலசேகரத்தில் ரப்பர் தோட்டங்கள்.

எனவே ‘வயசாளி மூப்பிலான்கள்’ தேறுதல் கொண்டார்கள். ”புள்ளோ! இந்த நெய்த்துக்காரம்மாரு பயித்தியம் புடிச்சுத் திரியானு வடோ… யாருகிட்ட மோதுகானுவ? இல்ல யாரு கிட்ட மோதுகானு வண்ணு கேக்கேன்? என்னா விளையாட்டா? காந்திமதிநாதன் ஒரு தாய்மக்கமாரியில்லா? மனிசன் எந்த சாமத்திலேயும் வந்து நிப்பாரே… இவனுவ என்னத்தைக் கண்டானுவ? வேலை மெனக்கெட்டு திரியானு வடோ…”

தேர்தல் நடந்து முடிந்தது.

ஊரெங்கும் தேர்தல் முடிவைத் தெரிந்துகொள்ள ஒரு பரபரப்பு. வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாகர்கோயிலில் இருந்து செய்திகள் வந்து கொண்டிருந்தன. வெற்றிலை பாக்குக் கடையின் முகப்புகளில், காப்பிக் கடை பெஞ்சுகளில், கோயில் வாசலில், பேருந்து நிறுத்த மரநிழலில், எங்கும் இதே பேச்சு.

”சாமியில்லாவே லீடிங்கிலே இருக்கானாம்?’ “பிலே, எந்த பூத்து எண்ணுகாவ?”

“வடசேரியிலேருந்து எண்ணுகாவளாம்…”

“ஏம்பிலே? பின்னே மயித்துக்கா பயருதே? கோட்டாறும் தாண்டி தெக்க கரைக்காட்டுக்கு வரட்டும் பிலே…”

மாலை நான்கு மணிக்கு மேல், எண்ணெய் கடவத்தை வீட்டில் வைத்து, சாப்பிட்டு, புகையிலை வாங்குவதற்காக ஆண்டிச் செட்டியார் கடைத்தெருவுக்குப் போனார்.

கடைத்தெருவில் சுயம்புலிங்கப்பெருமாள் கோயிலைத் தாண்டி, வள்ளிநாயகம் பிள்ளையின் பலசரக்குக்கடை. நாடார்கள் நிறைந்த அந்த

ஊரில், பிரிவினை உணர்வில் முதல் எடுக்க வள்ளிநாயகம் பிள்ளை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார். எனவே நாடார் அல்லாதோர் பெரும்பாலோர்க்கு அவர்கடையில்தான் பற்று வரவு.

ஆண்டிச் செட்டியார்கடைக்குப் போன வேளையில், வள்ளிநாயகம் பிள்ளைகடைப்பட்டறையில் இருந்தார். அந்திக்கடை தொடங்க நேரம் இருந்ததால், கடையில் கூட்டமில்லை.

“வாரும் ஓய் செட்டியாரே! சாப்பாடெல்லாம் ஆச்சா?”

“ஆச்சு முதலாளி…”

“இன்னிக்கு ஓட்டு எண்ணுகாளே! நம்ம ஆளு செயிப்பானா ஓய்?” “சொல்ல முடியாது. கண்டுதான் அறியணும்…”

“நம்ம ஆளுகளே சொணை கெட்டுப்போய் நாடாருக்கில்லா ஓட்டுப் போட்டிருக்கானுக…! நீரு யாருக்குப் போட்டேரு?”

“என்ன முதலாளி இப்பிடிக் கேட்டுப்பிட்டியோ? சாமி எங்க எனவமில்லா? எனவனுக்குப் போடாம நாடாருக்கா போடுவேன்?”

“நீரு அப்பிடி வாறேரா? சரி சரி… எல்லாம் ராத்திரிக்குள்ளே தெரிஞ்சு போகும்…”

இரவு எட்டு மணிக்கெல்லாம் தேர்தல் முடிவு உறுதியாகிவிட்டது. காந்திமதிநாதன் ஒன்பதினாயிரத்துச் சொச்சம் ஓட்டில் முன்னேறி வந்து கொண்டிருந்தார். இரண்டு மூன்று சாவடிகள் எண்ணவேண்டியதுதான் பாக்கி.

ஒன்பது மணிக்கு “ஜே” போட ஆரம்பித்தார்கள். லாரி ஒன்றில் குலைவாழைகள் கட்டி தோரணங்கள் தொங்கவிட்டு கொடிகள் நாட்டி பசுவும் கன்றும் கூப்பிய கரங்களுடன் காந்திமதிநாதனும் நிற்கும் தட்டி கட்டி, மாலை கட்டி, வண்ண சர விளக்குகள் கட்டி, மூவர்ண குழல் விளக்கு கட்டி, ஒலிபெருக்கி கட்டி…

லாரி கொள்ளாத கூட்டம். பெரியவர்,வாலிபர், சிறுவர்… வெற்பை உலுக்கும் கோஷ அதிர்வுகள்.

ஊரின் தெருக்களில் புகுந்து புகுந்து வெளிப்பட்டது ஊர்வலம். ஆண்டிச் செட்டியாரின் வீட்டுப் பக்கம் ஊர்வலம் வரும்போது இரவு பத்தரை மணி. வேடிக்கை பார்க்க, தெருவெல்லாம் இந்நாட்டு மன்னர்கள்.

“காந்திமதிநாதனுக்கு…”

”ஜே”

”காந்திமதிநாதனுக்கு…”

”ஜே”

கோஷத்தின் லயம் மாறி, புதிதாகக் கிளம்பிய ஒற்றைக்குரல், வள்ளி நாயகம் பிள்ளைகடையின் வேலைக்காரன்-

“அஞ்சு ரூவா வேண்டிக்கிட்டு கர்ரருவாளுக்கு ஓட்டுப் போட்ட ஆண்டிச் செட்டியாரு

”ஒளிக.”

அஞ்சு ரூவா வேண்டிக்கிட்டு காரருவாளுக்கு ஓட்டுப் போட்ட ஆண்டிச் செட்டியாரு…

“ஒளிக.”

ஆண்டிச்செட்டியாரும் செல்லம்மாளும் தலையை வீட்டினுள் இழுத்துக்கொண்டனர்.

– பம்பாய்த் தமிழ்ச் சங்கம் நாடக விழா மலர், 1978.

நன்றி: https://nanjilnadan.com

நாஞ்சில்நாடன் நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *