கொடுப்பதே இன்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 29, 2026
பார்வையிட்டோர்: 917 
 
 

திருவிழா காலம் ஆரம்பமானது. கடைகள் எல்லாம் விழாக்கோலம் பூண்டிருந்தன. மக்கள் பொருட்களை வாங்க வீதிகளில் சாரை சாரையாக சென்று கொண்டிருந்தனர். கிறிஸ்மஸ்க்குத் துணி எடுக்க நானும் ஒரு ரெடிமேட் துணிக்கடைக்குச் சென்றேன். வாசலில் பலபேர் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தனர். ஒரு இளம் பெண் கையில் பச்சிளம் குழந்தையுடன் நின்று வருவோர் போவோரிடம் கையேந்தி நின்றாள், ஆனால் யாரும் அவளுக்கு உதவ முன் வரவில்லை. எனக்கு அவளைப் பார்த்தால் பாவமாகத்தான் இருந்தது. சரி துணி வாங்கி விட்டு பணம் மீதி இருந்தால் அவளுக்குத் தரலாம் என்ற எண்ணத்துடன் கடை உள்ளே சென்று துணிகளைப் பார்த்து வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்.

கொஞ்சமாக இருட்ட ஆரம்பித்தது. நான் எனது பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து அந்த யாசகம் கேட்கும் தாயிடம் கொடுக்க இருந்தேன். பக்கத்தில் கை தட்டும் ஓசை கேட்டது. ஒரு திருநங்கை கை தட்டி பக்கத்துக் கடையில் காசு வாங்கிக் கொண்டு நான் இருந்த கடை அருகில் யாசகம் கேட்க வந்தாள்.

கைக்குழந்தையோடு நின்று யாசகம் கேட்டுக் கொண்டிருந்த பெண்ணை அழைத்துக் கொண்டு அந்த துணிக்கடையினுள் நுழைந்து அந்தப் பெண்ணிற்கும் அந்தக் குழந்தைக்கும் துணி வாங்கிக் கொடுத்து வெளியே வந்ததும் தன்னிடமிருந்த பணத்தையும் அவளிடம் கொடுத்து பாப்பா பத்திரமா சீக்கிரமா வீட்டுக்குப் போ. காலம் கெட்டுக்கிடுக்கு என்று கூறினாள். பணம் வாங்கிக் கொண்டு அவளும் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தாள்.

அந்தத் திருநங்கைக்கு இருக்கின்ற கருணை கூட நம்மிடம் இல்லையே. நமக்கு மட்டும் துணி எடுத்தோம். ஆனால் இவளோ அவளுக்குப் புதுத் துணி எடுத்துக் கொடுத்து பணமும் கொடுத்தனுப்புகிறாள் என்று நினைத்து நான் கொடுக்க இருந்தப் பணத்தை திருநங்கையிடம் கொடுத்து இந்தாம்மா இதை நீ வைத்துக் கொள் என்று கொடுத்தேன்.

அடுத்த நிமிடமே அவள் கைதட்டி அந்த அம்மாவைக் கூப்பிட்டு நான் கொடுத்த பணத்தை அப்படியே அவளிடம் கொடுத்தனுப்பினாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவளே கைதட்டி யாசகம் கேட்கிறாள். இவள் சம்பாதித்தப் பணத்தைத் தனக்கென வைத்துக் கொள்ளாமல் அதையும் இல்லாதவர்களுக்குத் தானமாகத் தருகின்றாளே என்று நினைத்து ஏன்மா நான் உனக்குத்தானே கொடுத்தேன் நீ ஏன் அதை அவளிடம் கொடுத்தாய் என்று கேட்டேன்.

அதற்கு, சரி விடுங்க சார். எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை. இன்னைக்கு இல்லைன்னா நாளைக்கு சம்பாதித்து விடுவேன். பாவம் அவள். திருவிழா வேற வருது. கையிலே குழந்தை வேறு வைத்திருக்கின்றாள். வீட்டுக்காரன் இருக்கின்றானோ இல்லையோ. அல்லது போதையில எங்கேயாவது விழுந்து கிடக்கின்றாதோ யார் கண்டது. பாவம் இந்தப் பெண்ணின் வாழ்க்கை. நம்மால் முடிந்த உதவி செய்வதில் தப்பில்லை சார் என்று கூறிக் கொண்டே கை தட்டிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். என்னை அறியாமல் அவளுக்காக நான் கை தட்டினேன்.

இவ்வளவு படித்தும் கை நிறைய சம்பாதித்தும் இவளிடம் இருக்கும் பரிவும், பாசமும், அன்பும், நேசமும், கருணையும் துளி கூட நம்மிடம் இல்லையே என்று வருத்தப்பட்டேன். பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை. மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை என்ற பாடல் வரிகள் என் நினைவில் நிழலாடின.

பணக்காரர்களை விட இத்தகைய எளிய மனத்தோரிடம் தான் அன்பும் பிறர்சினேகமும் கொட்டிக் கிடப்பதைக் காண முடிகின்றது. நமக்கு இல்லையென்றாலும் பிறருக்குக் கொடுத்து ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டு அழகு பார்ப்பதுதான் இறைவன் நம்மிடம் விரும்பும் நற்செயல். அதனால் தான் ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது (மத்.5:3) என்று கடவுள் கூறுகின்றார்.

கொடுங்கள் அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும். அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவினால் அளக்கின்றீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்று வேத நூல் கூறுகின்றது. (லூக்.6:38) கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை என்பதை நாம் உணர்ந்து பிறருக்குக் கொடுப்போம். அவர்களின் மகிழ்வில் இன்பம் காண்போம்.

நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *