கைதுசெய்யப்பட்ட கிராமம்




(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வெண் குதிரைகளாய்க் கடல் அலைகள்.
ஒன்றின் மேலேறி ஒன்று; ஒன்றை விழுங்கி மற்றொன்று. அவை சிரிக்கின்றனவா அல்லது கோபாவேசங்கொண்டு அவனைப் பார்த்துக் கர்ச்சிக்கின்றனவா?
கப்பலின் ‘கடையால்’ பகுதியில் நின்று, பரந்துகிடக்கும் கடலைப் பார்த்துக்கொண்டு நின்றான்.

அலைகளின் தாலாட்டுக்கேற்ப ஆடி, ஆடிச் செல்லும் சிறு படகுகளில் அவன் சின்னக் காலங்களில் பயணம் செய்திருக்கின் றான். நகர்கின்றதா தரித்து நிற்கின்றதா என்பதையே அறியமுடியாத பூதாகரமான ராட்சதக் கப்பல்களிலும் பயணித்திருக்கின்றான். இப்போ அவன் பயணம் செய்துகொண்டிருப்பது அப்படிப்பட்ட தல்ல. இடைப்பட்ட முந்நூறுபேர் வரை சௌகரியமாகப் பயணம் செய்யக்கூடிய பயணக் கப்பல்.
அலைகளைக் கிழித்துக்கொண்டு கப்பல் போய்க்கொண்டிருந் தது. கப்பல் விட்டுவரும் ஊரின் கரைகள் தூரத்தூரப் போய்க் கொண்டிருக்க, அவன் அடிவயிற்றில் இருந்து கிளம்பி வரும் துயர் அவன் தொண்டையை அடைப்பதுபோல் மேலேறி வந்தது. நான்கு வருடகாலமாக அடைபட்டுக்கிடந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்டுச்செல்வது துக்கமான ஒன்றா? விடுதலை என்பது துக்கத்தைத் தருமா? இல்லை; அப்படியானால், ஏன் அவன் நெஞ்சில் துயர் திரள வேண்டும்?
அவன் பிறந்த ஊரை விட்டுப் பிரிகிறோம் என்ற துயர். இதுகாலவரை பழகிய அப்பாவிச் சனங்களை விட்டுப் பிரிகிறோம் என்ற துயர். அதுமட்டுமா? எண்ணிறந்த துயருக்கான காரணங்கள், காகம் குளித்துவிட்டுச் சிறகடிக்கும்போது பறக்கும் நீர்த்திவலைக ளாய், அவன் கண்முன் சிதறுகின்றன.
நிற்பதற்கு வசதியாகக் கட்டப்பட்டிருந்த கைப்பிடியில் கையைக் கோர்த்தவாறு மாலை வெயிலில் கடலின் நுரை நகைப்பில் அள்ளுண்டு அவன் நிற்கின்றான். கைதுசெய்யப்பட்டு, அவன் கிடந்த நான்கு வருடகால நிகழ்வுகள் ஒன்றோடொன்று மோதி முன்னும்பின்னுமாக அவனில் அவிழ்ந்துகொண்டிருந்தன.
கடந்தகால நிகழ்வுகளில் அவன் நீச்சல்.
‘ஹோ’வெனச் சோளகம் வீசிக்கொண்டிருந்தது.
அதன் வெறித்தனமான ஒப்பாரிக்கு அர்த்தம் ஏற்படுத்துவது போல் புங்குடுதீவு மக்கள் இடம்பெயர்ந்துகொண்டிருந்தனர்.
சைக்கிள்களிலும் ‘வான்’களிலும் லொறிகளிலும் மினிபஸ்களி லும் என்று வகைவகையான கோலங்களில் மக்களின் இடப்பெயர்வு. சைக்கிளின் முன்னால் பிள்ளைகளையும், பின்னால் மூட்டைமுடிச் சுகளையும் கட்டிக்கொண்டு சிலர். முன்னால் மனைவியையும் பின்னால் பிள்ளைகளையும் என்று வேறு சிலர். இன்னும் சிலர் முன்னால் பிள்ளைகளை இருத்தி, பின்னால் நாய்க்குட்டி, கோழிக் குஞ்சுகள் என்று பெட்டிகளில் திணித்தபடி. அவற்றின் ஊளை யிடல், கொக்கரிப்புக்கள் என்பவை இடப்பெயர்வின் அவலத்தின் ஒப்பாரிபோல் மிதந்தன.
காற்றின் கதறல் நின்றபாடில்லை. ஐப்பசி பிறந்தும் தெற்கிருந் தெழும் சோளகம் நின்றபாடில்லை. வடக்கிருந்தெழும் ‘வாடை’யை அடக்கிச் சோளகமே இன்னும் இன்னும் சீறிக்கொண்டெழுந்து வந்தது. மக்கள் சாரிசாரியாக இடம்பெயர்ந்து போய்க்கொண்டிருந்தனர்.
வடக்கிலிருந்த யாழ்ப்பாணத்தை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருந்தனர். தெற்கிலிருந்தெழுந்த சோளகம் அவர்களைப் பின்னின்று தள்ள அவர்கள் பயணம் வேகங்கொண்டது. வான்களி னதும் மினிபஸ்களினதும் முகடுகளில் மூட்டைமுடிச்சுக்கள் சிறுசிறு குன்றுகளாய்ச் சிகரம்கட்டி நிற்க, வாகனங்களுள் ஆட்கள் அடசப்பட, இடம் கிடைக்காதவர்கள், தமக்களவான பைகளில் தமக்குரிய அத்தியாவசியப் பொருட்களைக் காவியவர்களாய் நடந்துகொண்டிருந்தனர்.
அவர்கள் ஒவ்வொருவரது முகத்திலும் பீதியும் அந்தரமும் நிழலாடின. ஏதோ பெரும் அனர்த்தத்திலிருந்து தப்பிவிட வேண்டும் என்பதற்கான அந்தரம். உண்மைதான்; அவர்கள் இன்று இரவுக்குள் யாழ்ப்பாணம் சென்றுவிட வேண்டும்.
அப்படித்தான் போராளிகள் அறிவித்திருந்தனர்.
இன்றிரவோ அல்லது நாளை அதிகாலைக்குள்ளோ புங்குடு தீவுக்குள் ஆமி நுழைந்துவிடும். அதை அவர்களால் நினைத்தே பார்க்க முடியவில்லை. அவர்கள் கைகளில் சிக்கி, சித்திரவதைக்குள்ளாகிச் சாவதைவிட, எங்காவது உயிர்தப்பி வாழ்வது மேல். இடம் பெயர்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரது நெஞ்சையும் அழுத்திக் கொண்டிருக்கும் இந்தப் பீதி, அவர்களை முன்தள்ளிக் கொண்டிருந்தது.
நேரம் ஆக, ஆகக் காற்றின் கொக்கரிப்பு பேய்க்கூச்சலாக மாறிக்கொண்டிருந்தது.
மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த பீதியும் அவசரமும் எதை எடுத்து மூட்டைகட்டுவது, எதை விட்டுப்போவது என்று தெரியாதவாறு சனங்களை ஆட்டிப்படைத்தன. கொஞ்சம் சுணங்கி விட்டால் வாகனங்களைத் தவறவிட்டுவிட நேரலாம். பின்னர் எஞ்சியிருப்பது நடைதான். பிள்ளைகுட்டிகளோடு நெடுந்தூரம் நடக்க முடியுமா? இது என்ன முன்னைய கதிர்காம யாத்திரையா; ஆடிப்பாடி, சமைத்துச் சாப்பிட்டுச் சல்லாபித்துச் செல்ல? ஒவ் வொருகணத் தாமதமும் உமது உயிரோடு விலைபேசுவதாக முடியும்.
அப்படித்தான் போராளிகளின் அறிவுறுத்தல் தோரணை இருந்தது.
“எனக்கெண்டா மோனை, யாழ்ப்பாணத்தில் ஆருமில்லை. நான் அங்க போய் ஆரோட இருக்கிறது?” தனிக்கட்டையாக ஒரு கொட்டிலில் வசித்துவந்த ஒரு கிழவி, போராளி ஒருவனின் நாடியைத் தடவியவாறு கேட்டாள்.
“நீங்க என்னவாலும் செய்யுங்க, ஆச்சி. நாங்க சொல்லிறதைச் சொல்லிப்போட்டம். அது எங்கட கடமை” – இவ்வாறு கூறிக் கொண்டே அவன் வேகமாகச் சைக்கிளில் போய்க்கொண்டிருந் தான். அவனது நிலையில்கூட ஏதோ சுற்றிவளைப்புக்குள் மாட்டிக் கொண்ட அந்தரம் தெரிந்தது.
காற்று, பேய்மாதிரி ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அதன் ஊளையின் உக்கிரம், கூட்டமாய் நின்ற பனங்கூடல்களில் பட்டுத் தெறித்து, சடைத்து நின்ற வேம்புகளை உலுக்கி, பரிகலங்கள் மாதிரி கீழிறிங்கி, கூட்டுவாரற்று முற்றங்களில் கிடந்த குப்பைகளை வாரி அள்ளி எடுத்துச் சிதறிச் சென்றது.
மாலை ஆகிக்கொண்டிருந்தது.
ஆனால், காற்று ஓய்வதாய் இல்லை. மாறாக, யாழ்ப்பாணம் நோக்கிப் போவோரும், அவர்களை ஏற்றிக்கொண்டு போகும் வாகனங்களுமாய் நீண்டிருந்த புங்குடுதீவின் பிரதான பாதை ஓய்ந்துபோய்க்கொண்டிருந்தது.
இரண்டொருவர் சைக்கிளில் வேகமாகப் போய்க்கொண்டிருந் தனர். மேற்கின் தொலைவில் வாகனம் ஒன்று உறுமுவது லேசாக விட்டுவிட்டுக் கேட்டது. எஞ்சிக்கிடந்த கிழடுகட்டைகளையெல் லாம் ஒன்றுவிடாது வழித்துத் துடைத்துக்கொண்டு வரும் கடைசி வாகனமாகவும் அது இருக்கலாம். உண்மைதான்; அந்த வாகனம் ஆலடிச் சந்திக்கு வந்தபோது, அதில் கிழடுகட்டைகளே நிரம்பியி ருந்தது தெரிந்தது. அதில், இரண்டொரு பிராமணரின் முகங்களும் தெரிந்தன.
ஆலடிச் சந்தியில் அது சிறிது தரித்து, யாராவது இன்னும் ஏறிக்கொள்வதற்கு இருக்கிறார்களா என்று பார்ப்பதுபோல் நின்று, அவ்விடத்தைவிட்டு மெல்ல நகர்ந்தது. அது சிறிது தூரம் நகர்ந்திருக் காது, சொல்லிவைத்தாற்போல் தெற்குக் கடலோரத்தில் இருந்த கண்ணகி அம்மன் கோவில் மணி அடிப்பது காற்றின் இரைச்சலுக் கும்மேலாகக் கேட்டது.
யார் மணியை அடிப்பது? எல்லாரும் ஓடிவிட்ட நிலையில் இன்னும் அங்கே மணி அடிக்க யார் இருக்கிறார்கள்? அப்படிச் சொல்லமுடியாது. இன்னும் அங்கே சிலர் இருக்கத்தான் செய்கிறார் கள். இவர்கள், கிராமத்தில் என்ன நடக்கிறதென்றே தெரியாத அளவுக்குச் சமூகத்தோடு தொடர்பு கெட்டுப்போன தனித்த தீவுகள் – ஒருவகை றொபின்சன் குருசோக்கள். வழமையாகத் தாம் செய்யும் காரியத்தை முடுக்கிவிட்ட பொம்மைபோல் செய்யு மிவர்களின் கையில் அகப்பட்ட கோயில் மணி, குறித்த நேரத்தில் அடிக்கிறது.
டாண், டாண், டாண்…
“ன்ண்” என்று இரையும் மணி ஓசையின் இறுதி எச்சம், “எங்கே ஓடுகிறீர்கள்? என்னை விட்டு எங்கே ஓடுகிறீர்கள்?” என்று கடவுள் கேட்பதுபோல், கண்ணகி அம்மன் கேட்பதுபோல் அங்கெழுந்துகொண்டிருந்தது.
கடவுளுக்கு எத்தனையோ நேர்த்தியும் அர்ச்சனையும் அபிஷே கமும் செய்து பூஜித்த மக்கள், கடவுளைத் தனியேவிட்டு ஓடுகிறார் கள். இதையும்விட வேடிக்கையானது, கடவுளின் அருளை மக்க ளுக்கு எடுத்துக்காட்டி, கடவுளையே நம்பி வாழ்ந்த பிராமணர்கள் எல்லோருக்கும் முந்தி ஓடுவது.
தனித்துவிடப்பட்ட கடவுளும் கோயிலும்.
‘ஹோ ஹோ’வென வீசிய சோளகம் கடவுளின் ஊழிச்சிரிப் பாய் அதிர்ந்தது. மெல்லிதான மஞ்சள் வெயில், மறையப்போகும் கதிரவனின் சோகத்தையா அல்லது எமது கிராமத்தின் சோகத் தையா எழுதிக்கொண்டிருக்கிறது?
மேலே பொம்பர் விமானங்கள் வட்டமிடத் தொடங்கின. இடைக்கிடை கோடையிடியாய்க் குண்டுகள் வந்து விழுந்தன. யமகிங்கரராய் ஆமிக்காரர்கள் நம் கிராமத்துள் நுழையப் போகிறார்கள் என்பதைக் கட்டியம் கூறுவனவாய் அவை வீழ்ந்துகொண் டிருந்தன.
2
நூற்றுக்கணக்கான கைகள் தேர்வடத்தை இறுக்கிப் பிடித்தன. கலட்டிப் பிள்ளையார் கோவில் முன்றலில் நிலைத்துநின்ற தேர், வீதிவலம் வருவதற்கு ஆயத்தமாயிற்று.
‘அரோகரா, அரோகரா’ என்று எல்லோர் வாயும் அவர்களை அறியாமலே பெருங்குரல் எடுத்துக் கத்தத்தொடங்கின.
‘அரோகரா’ கூச்சல் உச்ச ஸ்தாயியை அடைந்தபோது, மெல் லத் தேர் அசையத் தொடங்கிற்று.
தேர் அசைந்தபோது, குழந்தைகளோடு தாய்மார் குனிந்து அவற்றின் கைகளைத் தேர்வடத்தைத் தொடவைத்துத் தாமும் தொட்டுக்கொண்டனர். தேருக்குப் பின்னால் ஆண்கள் பிரதட் சணை செய்துகொண்டு வந்தனர். பெண்கள் தேரடி அழித்து வந்தனர். பெண்கள் சிலர் கண்ணகிபோலத் தம் கூந்தலை அவிழ விட்டு, “ஊஹும் ஊஹும்” என்று மூச்செறிந்தவர்களாய் ‘கலை’ ஆடிக்கொண்டு வந்தனர். அவர்கள் போட்ட ஆட்டத்தின் வேகத்தில் உயர்ந்த கைகளில், பிள்ளையார் அகப்பட்டுத் திக்குமுக்காடுவது போல் பட்டது.
தேருக்குப் பின்னால் வந்த கிழங்கள் தேவாரம் பாடி வந்தனர். முன்னால் காவடியாட்டம் நடந்துகொண்டிருந்தது. கட்டாடி ஆறுமுகத்தின் வழிவந்த ஒருவன், பெருங்காவடியைத் தோளில் சுமந்து செடில் பூறி நன்றாகவே ஆடிக்கொண்டு நின்றான். அவன் பின்னால் கயிறெறிந்து நின்றவன், தவில்காரனின் கம்பு விழுத்திய தாளத்திற்கு ஏற்ப காவடிக்காரனை ஆட்டுவித்துக் கொண்டு வந்தான். சிறுவர்களும் விடலைகளும் காவடியாட்டத்திற் குப் பின்னால் இழுபட்டனர்.
தேர், ‘அரோகரா’ சத்தத்தின் பொழிவின் மத்தியில் தெற்கு வீதிப் பவனி முடித்து, மேற்கு வீதிக்குத் திரும்பியது. தேருக்குப் பின்னால் உருண்டுகொண்டு வந்த ஆண்கள், தேரடியழித்து வந்த பெண்கள், தேருக்குப் பின்னால் தேவாரம் பாடி நெக்குருகிக் கண்ணீர் சொரிந்தவர்களாய் நின்றவர்கள், கலையாடி வந்த பெண்கள் ஆகிய அத்தனை பேரும் தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அந்த கலட்டி விநாயகனுக்கே அர்ப்பணித்துவிட்ட கோலத்திலேயே காட்சி தந்தனர்.
தேர் அசைந்தது.
மேற்கு வீதி முடித்து, வடக்கு வீதி வலம்வரத் தேர் திரும்பியது. ‘அரோகரா’ சத்தங்கள் வானத்தைப் பிளப்பதுபோல் எழுந்தன.
தேரில் நின்ற பிராமணர் விண்ணுறையும் இறைவனைத் தானே மண்ணுக்கு இறக்கி அருள் பாலிக்கப்போகும் தோரணையில் நின்றுகொண்டிருந்தார். அவர், தேர்ச் சாரதிபோல் இடுப்பில் கைவைத்துக்கொண்டு நிற்க, நூற்றுக்கணக்கான அடிமைகள் தேர் வடத்தைப் பற்றி இழுப்பதுபோல் பட்டது.
அங்கு வெறும் மேலோடு நின்று இழுத்தவர்கள் பிள்ளையாரின் அடியார்களா அல்லது காலங்காலமாக வந்த பிராமணீயத்தின் அடிமைகளா?
தேரில் நடுநாயகமாகத் திருவாசியில் சோடிக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிரிப்பதுபோல் பட்டது. யாரைப் பார்த்துச் சிரிக்கிறார்?
தேர், வடக்கு வீதியில் கிழக்கு நோக்கி வேகமாக வந்துகொண் டிருந்தது. கிழக்கு வீதி, தெருவோரமாக அமைந்திருந்தது. தெருவோ ரத்தில் பெருவிருட்சங்களாக வில்வமும் மருத மரங்களும் நின்றன. அவற்றின் கிளைகள் நாலாபக்கமும் பரவி விண்வெளியைக் குடைந்தவண்ணம் இருந்தன.
தேர், மிக வேகமாக வந்துகொண்டிருந்தது. மரத்தாலான பெரிய சில்லுகளைக் கொண்ட பழையகாலத் தேர். ‘அரோகரா’ ‘அரோகரா’ என்று மக்கள் கொடுத்த உற்சாகத்தில் தேரை இழுத் தவர்கள், கொஞ்சம் வழமைக்கு மாறாகவே இழுவையில் வேகத்தை கொடுத்திருக்க வெண்டும். அதனால், கிழக்கு நோக்கி வேகமாக வந்த தேரை, மீண்டும் கோயில் வாசலுக்குக் கொண்டுசெல்லச் சற்று உள்விழுத்தியே தெற்கு நோக்கித் திருப்பியிருக்க வேண்டும். ஆனால், வந்த வேகத்தில் அது, அவர்களால் முடியவில்லை. வேகமாக வந்த தேர், நெடிது வளர்ந்து நாலாபுறமும் கிளைகள் பரப்பியிருந்த மரங்களருகே வந்துதான் திரும்பக்கூடியதாக இருந்தது. அதனால், அந்தக் கணப்பொழுதில் அது நடந்து முடிந்துவிட்டது!
தேர் மரங்களருகே வந்து, தனது வேகத்தை உள் விழுங்கித் திரும்பியபோது, இதற்கெனவே காத்திருந்தவைபோல் நீண்டிருந்த மரக் கிளைகள் தேர்முடியைத் தட்டிவிட்டன. அவ்வளவுதான் அடுத்த கணம்–
“தேர்முடி சாய்ஞ்சு போச்சு! தேர்முடி சாய்ஞ்சு போச்சு!” என்று ஏககாலத்தில் கூக்குரல்கள் எழுந்தன.
“ஐயோ, தேர்முடி சரிஞ்சு போச்சே. ஐயோ, தேர்முடி சரிஞ்சு போச்சே” என்று பெண்கள் பலர் ஒப்பாரிவைக்க, ஏற்கனவே ‘கலை’ ஆடிக்கொண்டிருந்த பெண்கள், மின்சாரம் பாய்ச்சப்பட்ட வர்கள்போல் துள்ளி எழுந்து ருத்ர கோலம் கொண்டனர். “ஐயோ, என்னவோ அழிவு வரப்போகுது” என்று ஒருத்தி குதிக்க, “ஏதோ துக்குறி காட்டுது” என்று இன்னொருத்தி கீச்சிட, ‘கலை’க்காரிகளுக்கெல்லாம் தலையாளியாகக் கருதப்பட்ட ஒல்லியான ஒருத்தி, “உஹும் உஹும்” என்று மூச்செறிந்து அவிழ்ந்த கூந்தலை நாலாபக்கமும் சுழற்றி, “அம்மாள் ஆச்சி பலி கேக்கிறாள். பலி கேக்கிறாள்” என்று கூச்சலிட, அவளைச் சுற்றிப் பல வயதுபோனவர் கள் “ஆச்சி தாயே, என்னம்மா சொல்லிற, என்னம்மா சொல்லிற?” என்று ஆருடம் கேட்கத் தொடங்கினர்.
பெருவிழாக் கோலம் பூண்டிருந்த அவ்விடம் ஓர் அவல நிலைக்குள் தள்ளப்பட்டு, அல்லோகல்லோலப்பட்டது. விழா அப்படியே முடிவுக்கு வந்தது.
இது நடந்து சிறிது காலத்திற்குள் புங்குடுதீவு மக்கள் இடம் பெயர்வுக்குள்ளாயினர். இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சிலரின் பேச்சில், தேர்முடி சாய்ந்ததும் பேசப்பட்டது. ஆனால், தம் உடல், பொருள் ஆவி அனைத்தையும் பிள்ளையாருக்கே அர்ப்பணித்துவிட்டோம் என்பதுபோல் நடந்து கொண்ட அவர்களில் எவரும், இப்படிப் பிள்ளையாரைத் தனியே விட்டு ஓடுகிறோமே என்று நினைக்கவே இல்லை.
பிள்ளையார் சிரித்திருப்பாரா? ஆனால், அவனுக்கு உண் மையாகவே சிரிப்பு வந்தது. அந்தச் சிரிப்பில் மெல்லிதான ஒரு விரக்தியின் வாடை. ஆலடிச் சந்தியில் தெருவோரமாக இருந்த அவனது வீட்டில் நின்றவாறு இடம்பெயர்ந்து செல்லும் மக்களைப் பார்த்துக்கொண்டு நின்ற அவனுக்கு ஆழமான துயரம் அடிவயிற்றி லிருந்து கிளம்பி மெல்லமெல்ல மேலெழுந்து வந்தது.
இவ்வளவு காலமும் தாம் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்திருந்த ஊரை ஒரு நொடிப் பொழுதில் தூக்கியெறிந்தவர்களாய், தமக்கும் இந்த ஊருக்கும் எந்தவித பந்தமும் இல்லை என்பதுபோல், தமது ஆடையில் ஒட்டியிருக்கும் அற்ப தூசைத் தட்டிவிடுவதுபோல் தட்டிவிட்டு ஓடுகிறார்களே, இது எவ்வாறு முடிந்தது?
உயிர்வாழ வேண்டும் என்ற வேட்கை! இந்த வேட்கையின் முன்னே இவர்கள் போற்றிய பண்பாடு, நம்பிக்கைகள் விழுமியங்கள் எல்லாம் அற்பமாய்ப் போய்விடுகின்றனவா?
உயிர் வாழ்ந்தால்தானே இவற்றைப் பாதுகாக்க முடியும்? அப்படியா? அல்லது நம்மைக் கொல்ல வரும் பகையை, எதிர்த்து நின்று போராடு என்று நம்மைப் பணிக்க வைப்பதுதான் உயர்ந்த பண்பாடு, உயர்ந்த விழுமியங்கள் என்று சொன்னால் தவறாகுமா? அப்படியானால், இங்கே ஒடிக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் உயர்ந்த பண்பாடும் விழுமியங்களும் அற்றவர்களா? அல்லது அப்படியானவற்றைக் கொண்டிருந்தும் ஆழமான விளக்கமற்றதால் ஓடுகிறார்களா?
இல்லை, அப்படியும் சொல்ல முடியாது.
எதிரி பலமாய் இருக்கும்போது அவனை எதிர்கொள்வதென் பது அறிவீனம். எம்மைப் பலமுற வைத்தபின் எதிர்கொள்வதே விவேகம். அங்கே ஓடிக்கொண்டிருப்பவர்கள் இந்த அறிவோடுதான் ஓடுகிறார்களா? இல்லாமல் இருக்கலாம். ஆனால், உள்ளுணர்வின் உந்தலில் இந்த வெளிச்சம் இருக்கவே செய்யும்.
அவன் தனது விசாரணையில் மூழ்கியிருந்தபோது, கடைசி யாக யாழ்ப்பாணம் நோக்கிச் சைக்கிளில் போன இருவர் திரும்பி வந்துகொண்டிருந்தனர். அவன் தலைக்கறுப்பைக் கண்டதும், “மாஸ்ரர், ஆமிக்காறன் வேலணைப் பாலத்தடிக்கு வந்திற்றான்” என்று ஒருவர் உரத்துக் கூறிக்கொண்டே சைக்கிளை வேகமாக மிதித்தார்.
பொங்கிவரும் முன்னிரவுபோல் அவன் மனதிலும் ஒரு வகைப் பீதி கருக்கொண்டு கவியத் தொடங்கியது.
அவர்களைப் போல் இவனும் யாழ்நோக்கி ஓடாமல் இங்கேன் தங்கியிருக்க வேண்டும்? அதுவும் தன் குடும்பத்தோடு?
அப்போது, அவனுக்குத் தீட்சையளித்த அவனது குருவின் அமைதியான முகம் முன்னெழுந்தது.
முப்பது வருடங்களுக்கு முன் அவர், அவனுக்கும் அவன் அண்ணாவுக்கும், அவன் நண்பன் துரைக்கும் தீட்சையளித்த நிகழ்வுகள் முன்னெழுந்தன. அதற்குப்பின் அவர்களுக்குக் கிடைத்த ஆத்மீக அனுபவங்கள், அதன்மூலம் அவர் தன்னை யாரென்று வெளிப்படுத்திய நிகழ்வுகள் இன்று நடந்ததுபோல் அவன் நெஞ்சில் விரிந்துகொண்டிருந்தது. இன்று அவர் இல்லை. அவர் மகாசமாதி யடைந்து முப்பது வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், அவரது அஸ்தி புங்குடுதீவிலிருக்கும் ஆச்சிரமத்தில் பேணிப் பாதுகாக்கப் பட்டு வருகிறது.
இந்த அஸ்தியை, அவரது சமிக்ஞை கிடைக்காது அங்கிருந்து வேறெங்கும் கொண்டுபோக முடியாது.
ஆகவே, அவன் அங்கேயுள்ள அவரது அஸ்தியை விட்டுவிட்டு மற்றவர்களோடு சேர்ந்து இடம்பெயர முடியாது. அது, குருத் துரோகமாக முடியும் என்று நினைத்தான்.
அவனுக்குத் துணையாக, அவனது நண்பன் துரையும் அந்த ஆச்சிரமத்தில்தான் நேற்றுவரை இருந்தான்.
ஆனால், இன்று அதிகாலைதான் அவன், இவனுக்குக்கூடச் சொல்லிக்கொள்ளாது, தனது தனிப்பட்ட காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக யாழ்ப்பாணம் போய்விட்டான்.
ஆச்சிரமத்துக்குப் பொறுப்பான அவனுக்குச் சொல்லிக்கொள் ளாது, அவன் ஏன் யாழ். போனான்?
ஆச்சிரமத்தில் நடைபெறும் பூஜைக்குரிய பொருட்கள் வாங்கிவரப் போனதாக அவன் மனைவி கூறினாள்.
அது பொய்யென அவனுக்குத் தெரியும். அப்படி பூஜைக்குரிய சாமான்கள் தேவைப்படும் பட்சத்தில் அது இவனுக்குத் தெரியாமல் போகாது.
அவன் குருவை நினைத்துக்கொண்டான். இத்தகைய பொய் மைகளை அவர் தண்டிக்காது விடுவதில்லை. அவன் துக்கப்பட் டான். நண்பன் பெருஞ்சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளப் போகிறான் என்பது இவனுக்குத் தெரிந்தது. அவ்வாறே அவனுக்கு நடந்தது.
அன்று அதிகாலை அவனுக்குச் சொல்லிக்கொள்ளாது யாழ். போன அவனது நண்பன், அங்கேயே அடைபட்டுக்கொண்டான். காரணம், அவன் போன அன்று மாலையே ராணுவம் தீவுப்பகு திக்குள் நுழைந்துவிட்டது. இனி, ராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்ட தீவுப்பகுதிக்கும், புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப் பாணத்துக்கும் எந்தவித தொடர்பும் இருக்கப்போவதில்லை. அங்கி ருந்தவர்களுக்கு இங்கு வரவோ, இங்கிருந்தவர்களுக்கு அங்கு போகவோ இனிமேல் முடியாது.
அவனுக்கு நெஞ்சு திக்கொன்றது. இந்த நேரத்தில் அவனது நண்பன், அவனைக் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டான். போதா தற்கு அவனது மனைவி பிள்ளைகளையும் இவன் பார்க்கவேண்டிய பொறுப்புக்குள்ளும் தள்ளிவிட்டிருந்தான்.
சாதாரண காலம் என்றால் இது ஒரு பிரச்சினையே இல்லை. ஆனால், இப்போது அவன் முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் சூழல் வித்தியாசமானது.
கொலை வெறியோடு உள்நுழையும் ராணுவம்.
பொதுவாகவே தாம் செல்லும் இடமெல்லாம் தமிழ்ச்சனங் களைப் பலவித நொண்டிச் சாட்டுகளை முன்வைத்துக் கொன்று குவிக்கும் ராணுவம், புலிகள் இருந்துவிட்டுச் சென்ற இடத்துக்குள் நுழையும்போது அதன் வெறி பன்மடங்கு மூர்க்கங்கொள்ளலாம்.
அவன் நெஞ்சு அச்சத்தால் கனத்தது.
ஆனால், அது சிறிது நேரந்தான். அடுத்த வினாடி, அது அமைதியில் திளைத்தது.
அவன் யாருக்காக அங்கே தங்கியிருக்கிறான்? தனது விருப்புக் காகவா? இல்லை; சுவாமிக்காக. அதாவது, அவனது குருவுக்காக. ஆகவே, அவனைக் காப்பாற்றுவதும் விடுவதும் அவரது பொறுப்பு.
இப்படி நெருக்கடிகள் வரும் ஒவ்வொரு கணமும் அவனும் அவனது சகோதரனும் தாம் நம்பிய குருவை உரைத்துப்பார்க்கும் பரிட்சை யாகவே எடுத்துக்கொள்வர்.
இவ்வாறு பார்க்கத் தொடங்கும்போது அவன் முன்னெழும் பிரச்சினையின் பரிமாணமே மாறத் தொடங்கும். உயர்ந்த தொகை யைப் பந்தயத்தில் வைத்து ஆடும் சூதாடிகளின் திகில் அவனைக் கௌவிக்கொள்ளும்.
அவனுக்கும் வெளிப் பொருட்களுக்கும் தரகுவேலை பார்த் துக்கொண்டிருந்த ‘நான்’ அழிய, இருப்பின் தரிசனத்தில் மூழ்கும் நிலை.
அவன் சிரித்துக்கொண்டான்.
3
வானம் கறுத்து, மெல்லக் குளிர்காற்று கீழ் இறங்கி, இலை தழைகளைத் தடவிவரத் தொடங்கியதும் மழை வரப்போகுதென் பதை அறிந்து ஆடு, மாடுகள் வீட்டை நோக்கி வரிசை, வரிசையாகக் கிளம்புவதையே மக்களின் இடப்பெயர்வு அவனுக்கு நினைவூட் டிற்று. மனிதர்களை மட்டுமல்ல மிருகங்கள், பறவைகள், பூச்சிகள் எல்லாவற்றையுமே இப்படித்தான் ஆபத்திலிருந்து தப்பவைக்கும் டப்பெயர்வு. வானத்தில் கூட்டமாய்ப் பறந்துபோகும் பறவைகள், வரிசை, வரிசையாய் ஊர்ந்துசெல்லும் அற்ப எறும்புகள்.
புங்குடுதீவு மக்கள் இடம்பெயர்ந்து போகின்றார்கள். எறும்பு கள் இடம்பெயர்ந்து செல்லுகின்றன. இந்த உலகில் புங்குடுதீவு மக்களின் இடப்பெயர்வு, இந்த எறும்புகளின் இடப்பெயர்வைவிட என்ன வகையில் உயர்வான தாக்கத்தை ஏற்படுத்திவிடப்போகிறது?
அப்படி அவன் யோசித்தபோது, அவனுக்குத் தன்மேலும் அந்த மக்கள்மேலும் இனம்புரியாத பச்சாத்தாபம் ஏற்படுவதுபோல் பட்டது.
முன்னரும் இரண்டு தடவைகள் புங்குடுதீவு மக்கள் இடம் பெயர்ந்து யாழ்ப்பாணம் போனதுண்டு. ஆனால், ஆமிக்காரன் வரமாட்டான் என்பது ஊர்ஜிதம் ஆனதும், இரண்டு நாட்களில் ஊர் திரும்பிவிட்டார்கள்.
ஆயினும்,ஊர்காவற்றுறை ஊடாக வந்து ஆமி புங்குடுதீவுக் குள் நுழைந்துவிடும் என்ற அச்சம் புங்குடுதீவு மக்களுக்கு எப்பவும் அடியோடி இருந்தது. 90இல் கஜபாகு படையணி அவ்வாறுதான் கிளம்பி வந்து, வேலணை பங்களாவடியாலும், அராலி வடக்கு ரோட்டாலும் சுற்றி வந்து, ஈற்றில் மண்டைதீவுக்குச் சென்றபோது நிகழ்ந்த அழிவுகள் அவன் மனக்கண்முன் ஆடிற்று.
தெருவோரமாக இருந்த ஒவ்வொரு வீட்டுப் படலையிலும் ரயர் போட்டு எரித்தும் எரியாததுமாகக் கிடந்த பிணங்கள்: அவற்றில் கால் கருகியவை, கை கருகியவை என்று பல ரகம். அராலிச் சந்தியிலிருந்து பங்களாவடிச் சந்தி வரை நீண்டிருந்த அப்பகுதி ஒருவகைச் சுடுகாடாய் மாறியிருந்தது. இந்தக் கோரத் தனத்தின் உச்சத்தை மண்டைதீவு சந்தித்தது.
ஆனால், நல்ல காலம் கஜபாகு படையணி அவ்வேளை புங்குடுதீவுக்குள் நுழையத் துணியவில்லை. காரணம், வேலணையை யும் புங்குடுதீவையும் இணைக்கும் அம்பலவாணர் பாலத்தைக் கடந்து, புங்குடுதீவுக்குள் நுழைந்து, பின்னர் புலிகளின் சுற்றிவளைப் புக்குள் சிக்கிக்கொள்ள வேண்டிய ‘றிஸ்க்’கை அவர்கள் எடுக்க விரும்பாததே. அதனால், அப்போது புங்குடுதீவு தப்பியிருந்தது. அதன் தெருவோரங்களில் பிணங்கள் எரியவில்லை.
ஆனால், தொடர்ந்து அந்த நிலை நீடிக்கப்படமாட்டாது என்பதைச் சுட்டுவதுபோலவே, 91இன் பிற்பகுதியில் ஆமி புங்குடு தீவுக்குள் புகுந்தது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு முன் தீவுப் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவ போட்ட திட்டத்தின் விளைவே இது.
இருள் கவிந்துகொண்டு வந்தது. அதன் குவிப்பில் தடிப் பேறிற்று. சதா சுற்றாடலில் உள்ள பிள்ளைகளின் சத்தம் என்றும், வந்து போகும் வாகனங்களின் இரைச்சல் என்றும் கலகலத்துக் கொண்டிருக்கும் ஆலடிச் சந்தி, அன்றிரவு ஏழு மணிக்குள்ளேயே அடங்கிப்போயிற்று. ஓர் அசாதாரண பேரமைதி!
இனிமேலும் அங்கே அவனும், அவனது குடும்பமும் தனித்தி ருப்பது புத்திசாலித்தனமல்ல. ஆலடிச் சந்தியில் அவனுடையதே முதல் வீடு. ஆமி வரும்போது எதுவும் நேரலாம். அதனால், கிழக்கே அவன் பிறந்து வளர்ந்த தாய் வீட்டுக்குப் போக ஆயத்த மானான். இதுவும் ஓர் இடப்பெயர்வுதான்! அந்த இடத்தை ஓர் ஆச்சிரமம் என்று இவனும், இவனைச் சார்ந்தவர்களும் அழைத்தார்கள். காரணம், அங்குதான் இவனது ஆத்மீக வழிகாட்டி யின் அஸ்தி இருந்தது. அந்த அஸ்தி பேணப்பட்ட இடத்தை விட்டெறிந்துவிட்டு இவன் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் போக விரும்பவில்லை. அவன் யாழ்ப்பாணம் போகாததற்குக் காரணம் இதுவே என்று அந்த ஆச்சிரமத்தில் இருந்த, இவனைச் சார்ந்த இரண்டொருவரைத் தவிர வேறெவருக்கும் தெரியாது. இரவோடிர வாக இவனும் தனது குடும்பத்தோடு அந்த ஆச்சிரமத்துக்கு வந்து சேர்ந்துவிட்டான்.
இரவு நித்திரையின்றிக் கழிந்தது.
நித்திரையின்றித் தவித்த அவன்முன் கனவாக ஒரு பயங்கரக் காட்சி விரிகிறது. யாரோ அவனது கைகளிரண்டையும் பின்னால் கட்டி ரோட்டில் தூக்கிப்போடுகின்றனர். அவன் ரோட்டில் அனாதரவாகக் கிடந்தபோது, முகத்தைக் கரித்துணியால் கட்டிய பயங்கர உருவம் தோன்றிச் சுட்டுத்தள்ளுகிறது. அவன் பயங்கரமாக அலறியவாறு விழித்துக்கொள்கிறான்…
ஏன் இந்தக் கனவு? வரப்போகும் ராணுவம்பற்றிய பீதியா?
இடம்பெயர்ந்து போனவர்களைத் தவிர புங்குடுதீவில் பல்வேறு காரணங்களுக்காக – பஸ்ஸைத் தவறவிட்டவர்கள், யாழ்ப்பாணத் தில், போய்த் தங்க இடமற்றவர்கள், இடையில் ஆமியைக் கண்டு திரும்பி ஓடிவந்தவர்கள், எழுந்து நடமாடமுடியாதவர்கள், அங்க வீனர்கள் என்று தங்கிவிட்டவர்கள் எல்லாருக்கும் இரவு நித்திரை யின்றிக் கழிந்திருக்கும்.
வீடுகளில் எஜமான்கள் இன்றி, தனித்துவிடப்பட்ட நாய்கள் ஊளையிட்டன. இடையிடையே பயங்கரக் கனவுகள் வேறு. வெறும் பீதியில் சூல்கொண்டெழும் கனவுகள்.
ஆயினும்,எல்லா நினைவுகளும் கனவுகளும் நிகழ்வுகளும் ‘ராணுவம் வரப்போகிறது’ என்பதை மையமிட்டுச் சுழன்றன. அதற்கேற்றவாறே, அங்கே இடம்பெயராது தங்கியிருந்த அனைவரை யும் அதிகாலையிலேயே வடக்குப் பக்கமிருந்து கிளம்பிவந்த பல்வகையான பேரிரைச்சல்கள் திடுக்கிட்டெழவைத்தன.
வித்தியாசம் வித்தியாசமாக ஒலிக்கும் வேட்டுச் சத்தங்கள், கிறனேட் அதிர்வுகள், விட்டுவிட்டுக் கேட்கும் ஜீப், ட்றக் போன்ற ராணுவ வாகனங்களின் உறுமல்கள், இவற்றுக்கு மத்தியில் வெறி பிடித்த வன்முறை மனிதக்கூட்டம் திரண்டு வருவதுபோன்று பேரிரைச்சல்.
‘ஆமிக்காறங்கள் வாறாங்கள்!’
எல்லோர் மனங்களுள்ளும் இச்சொற்களே திரும்பத்திரும்ப மீட்கப்பட்டுக்கொண்டிருந்திருக்கலாம். அவனும் அதையே சொல் லிக்கொண்டான். அவன் தஞ்சம் புகுந்திருந்த ‘ஆச்சிரமம்’ புங்குடு தீவு கிழக்கின் பிரதான வீதியோரமாகவே இருந்தது. அவன் துரிதமாக இயங்கினான். அவன், ஆச்சிரமத்திலிருந்த அவனது உறவினர்கள், அவனது மனைவி, பிள்ளைகள் எல்லோரும் ஆச்சிர மத்தின் கோயில் அறைக்குள் புகுந்துகொண்டார்கள். இனி அவர்கள் விதி, அவர்கள் நம்பும் அந்த ஆத்மீகப் பேராற்றலின் கையில்தான் உள்ளதா அல்லது அவர்கள் ஆமிக்காரர்களின் கையில் சிக்கிச் சீரழியப் போகிறார்களா?
ஆச்சிரமக் கோயில் அறையில் இருந்தபோது சாவைப்பற்றி, அதன் பரிமாணங்கள்பற்றி அவன் அதிகமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
அந்த எண்ண ஓட்டங்கள் மீண்டும் அவன் மனதில் பேரலை போல் எழுந்துவந்தன.
அராலிச் சந்தியிலிருந்து வேலணை மணியகாரன் வளவுவரை எரிந்துகொண்டிருந்த பிணங்கள் அவன் மனக்கண்முன் வந்தன. அரைகுறையாய் எரிந்தும் எரியாததுமாய், தகனம்கூடப் பூரணமாய் வாய்க்கப் பெறாதவையாய்க் கிடந்த சடலங்களின் குறைநிலைகள் சாவின் அவலத்தை மேலெழுப்புவனவாய் அவன்முன் புகைந்தன.
சாவின் அவலம்!
கஜபாகு ராணுவக்காரர்கள் ஒவ்வொரு வீடாகப் புகுந்து வெளிவருகிறார்கள். வீடுகள் சிலவற்றுள் நடுங்கிக்கொண்டிருந்த மக்களை வெளியே இழுத்துவந்து சும்மா சுட்டிருக்கமாட்டார்கள். அதற்கு முன் பல சித்திரவதைகள் நடந்திருக்கும். கோடரியால் கொத்தியிருப்பார்கள். அல்லது கூரிய கத்தியால் அவர்கள் கண் களைத் தோண்டியிருப்பார்கள். அவர்கள் மர்ம உறுப்புக்களை வெட்டி எறிந்து அவர்கள் சககாக்களோடு சேர்ந்து ‘ஹோ ஹோ’ வென வெறிச்சிரிப்பு சிரித்திருப்பார்கள். இந்நிலையில் அவர்கள் கையில் யாராவது பெண்கள் சிக்கியிருந்தால், அவர்கள் நிலையை அவனால் நினைத்தே பார்க்க முடியவில்லை.
கோயில் அறையில் இருந்த அவனுக்கு ஆத்திரத்தாலும் ஆற்றாமையாலும் உடம்பு நடுங்குவதுபோல் இருந்தது.
அவன் தனக்குப் பக்கத்தில் இருந்த உறவினரையும் பிள்ளைக ளையும் மனைவியையும் பார்த்தான்.
அவர்கள் விடும் மூச்சு அவன் முதுகில் சுடுவதுபோல் ஓர் உணர்வு. ஆமிக்காரர்களின் வெடிச்சத்தமும் ஆரவாரமும் வாகன உறுமல்களும் வெளியே தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்தன.
ஆமிக்காரர்கள் வந்தால், அவனுக்கும் அவனைச் சூழ இருப் போருக்கும் நடக்கபோகும் சித்திரவதைகளை, அவன் மனம் பல கோணங்களில் எண்ணியெண்ணிப் பார்த்தது.
திடீரென அவன் கண்முன்னே குமுதினிப் படகில் கொலை பட்டும் குற்றுயிராயும் மிதந்துவந்த குழந்தைகள், பெண்கள், ஆண்கள், வயோதிபர் நினைவுக்கு வந்தனர். நெடுந்தீவிலிருந்து குமுதினிப் படகில் வந்த மக்கள் நயினாதீவிலிருந்து இடையில் புகுந்த நேவிக்காரரால் கூரிய ஆயுதங்கள் கொண்டு குத்தப்பட்டும் வெட்டப்பட்டும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டும்… கடலில் மிதந்த படகு இரத்த வெள்ளத்தில் மிதக்கவிடப்பட்டது. இறுதியில் செத்தவர்களோடும் குற்றுயிரானவர்களோடும் மயக்கமுற்றவர்க ளோடும் படகு மிதந்து வந்து புங்குடுதீவுக் கரையை அடைந்தபோது, மாலை இருட்டுக் கவிந்துகொண்டிருந்தது.
அவனும், அவன் நண்பர்களும் அந்தச் சனங்களுக்கு எவ்வளவு வேகமாக உதவினர்.
அப்படி உதவும் வகையில் எந்த ராணுவக் குறுக்கீடும் இன்றி, புங்குடுதீவு சுதந்திரமாக இருந்தது.
இனி, அந்தச் சுதந்திரம் பறிபோகப் போகிறது.
உயிர் தின்னிக் கழுகுகளாக ராணுவம் உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் எத்தனத்தில் மனங்கள் அலைபாய்கின்றன. செய்வதறியாது நடுங்கி, நடுங்கி மயங்கிப்போகின்றன. சுதந்திரத்தை இழந்து உயிர் வாழ்தல் மேலானதா? மிருகங்களும் ஏனைய உயிரினங்களும்கூட, தம் சுதந்திரத்தைப் பேணிக்கொள்ளத்தானே, இயல்பூக்கத்தின் உந்து தலில் போராடுகின்றன?
திடீரென, அவன்முன்னே சாவைத் துச்சமாக மதித்த அவன் அறிந்த சிலரின் முகங்கள் ஓடிவந்தன.
இரத்தினம்!
இந்திய ராணுவம் புங்குடுதீவுக்குள் நுழைந்தது. புலிகளை வேட்டையாடும் நோக்கோடு சல்லடையிடுகிறது. தலைமறைந் திருந்த இரத்தினமும் அவன் சகாக்களும் பல வீடுகளின் மதில் களின் மேலால் பாய்ந்து பாய்ந்து செல்கின்றனர். ஆனால், ஒரு கட்டத்தில் அவன் கால் தவறி விழுந்துவிடுகிறான். இந்திய ராணுவத்தின் கையில் சிக்கப்போகும் தருணத்தில் அவன் சைனைட்டைக் கடித்துத் தன்னை விடுவித்துக்கொள்கிறான். அந்த வீரனின் முகம் அவன்முன் மிதந்து வந்தது. அன்பு என்னும் பெயருடைய இன்னொரு போராளிபற்றி அவனுடைய நண்பன் சொன்ன கதை, அவன் நினைவில் எழுந்தது. இன்னும் தொடர்ந்து சிலர் வந்தனர். கடைசியாக வந்தது, திக்குவாய் ஞானத்தின் முகம். வீரனாகவே வாழ்ந்து, இறுதிவரை வீரனாகவே இறந்துபோன அந்த வீரனின் முகம்! தத்தாரி போன்ற அச்சிறுதோற்றத்துள் எத்தகைய மாவீரம் உள்நுழைந்திருந்தது!
அவனுக்குள் இனந்தெரியாத துயர் எழுகிறது.
அதை அதிகரிப்பதுபோல், அவனைச் சுற்றியிருந்த சிறுபிள்ளை களின் அப்பாவி முகங்கள் தெரிந்தன.
அவனை லேசாகப் பயம் கெளவிக்கொள்கிறது. ஏன் பயம்? அவன் இன்னும் ஆழமாக உள்ளிறங்கினான். பயம் மரணத்தில் போய் தொட்டுக்கொண்டு நிற்கிறது. அவன் சாகப் பயந்தானா? இல்லை. அவன் அருகே இருந்த பிள்ளைகளின் நிலைபற்றிப் பயந்தான். எவ்வாறு பார்த்தாலும் பற்றுத்தான் பயத்தின் காரண மாக நிற்கிறது. ஒவ்வொரு பயத்தையும் தொட்டுக்கொண்டு போனால், அது எத்தனையோ பற்றுக்களில் கிளைவிட்டு விழுதெறி வதைக் காணலாம். இந்தக் கிளைகளை ஒவ்வொன்றாக வெட்டிக் கொண்டு போகும்போது மரணமும் வாழ்வும் ஒன்றாகி நிற்கின்றன. அவன், இதைக் கருத்துரீதியாக வெட்டி, வெட்டி ஆய்வுக்குட்படுத் தியபோதே, அவன் வெறும் பிரக்ஞை வெளியில் கரைவதுபோன்ற உணர்வெழ, மெய்சிலிர்த்தது. அந்நிலையில் மரணம் நெருங்க, நெருங்க ஓர் இன்விடுதலை அவனோடு உரசிக்கொண்டு நிற்பது போல்- அவனுக்குள் எதையும் சந்திக்கும் திராணி ஒன்று திரள்வது போல்…
தன்னைச் செத்தவனாகக் கிடத்திப் பார்த்த ரமண மகரிஷியின் பாவனை, அந்நேரத்தில் அவன் நினைவுக்கு வந்தபோது, அதன் அர்த்தம் பெரியதாய் விரிந்தது.
ஆனால், அப்போதும் அவன் முதல்நாள் இரவு ஆச்சிரமத்தில் கண்ட கனவு வேறொரு பரிமாணத்தில் தோன்றிப் பயமுறுத்தியது.
கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் யாரோ ஒருவன் ரோட்டில் கிடந்தபோது, இவன் முகத்தை ஒரு கறுத்தத்துணியால் மறைத்துக் கட்டியவாறு, அவனைச் சுட்டுத்தள்ளுகிறான். பின்னர் இவனே செத்தவன் அருகே ரோட்டில் குந்தியிருந்து, அழுகிறான்.
அப்போதுதான், வெளியே கேட்ட வேட்டுச் சத்தங்களும் ஆரவாரமும் அடங்கிப்போயிருந்தன.
ஆமிக்காரர்கள் அவனது ஆச்சிரமம் இருந்த முச்சந்திக்கு வந்துவிட்டார்கள் என்பதை வாகனங்களின் உறுமல் அறிவித்தது. ஆனால், சிறிது நேரத்தில் அந்த இடம் எதனாலோ அள்ளுப்பட்டது போல், திடுதிப்பென்று அமைதியாயிற்று. உளவியல்ரீதியான அச் சுறுத்தலை ஏற்படுத்திய வேட்டுச் சத்தங்கள், கிறனேட் அதிர்வுகள், வந்தவர்களின் ஆரவாரங்கள் எல்லாம் அடங்கிப்போனமாதிரியான நிலை. அவர்கள் என்ன செய்கிறார்கள்? இளைப்பாறுகிறார்களா? அல்லது ஆச்சிரமத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்களா?
எந்த நேரமும் ஆச்சிரமத்தின் பெரிய கேற் தட்டப்படலாம்.
கோயில் அறைக்குள் இருந்தவர்கள் அதை எதிர்பார்த்து ஒவ்வொரு வினாடியையும் எண்ணியவர்களாய் இருந்தனர். ஒவ் வொருவர் இதயமும் உலக்கை போட்டு இடிப்பதுபோல் அவர் களுக்கு கேட்டுக்கொண்டிருந்தது.
ஆனால், ஆமிக்காரர்களின் அரவம் எதையும் காணவில்லை. வெளியே அழுகுரல் கேட்டது.
அவன் வெளியே வந்து பார்த்தான்.
தெற்குப் பக்கமாக இரண்டு வேலிகளுக்கப்பால், ஒரு ‘சப் பாணி’ப் பெண்ணின் கொட்டிலின் வெளியே சில ஆமிக்காரர்கள்; பெரிதாகச் சத்தமிட்டு வெருட்டிக்கொண்டு நின்றார்கள். அந்தப் பெண் இருந்த இருப்பிலேயே, கையெடுத்துக் கும்பிட்டவாறு எதையோ அழுது ஒப்புவித்துக்கொண்டிருந்தாள். அவர்களின் வெருட்டலும் போலி, அவள் அழுதுகும்பிடுவதும் போலி என்பது தூரத்துப் பார்வையிலேயே தெரிந்தது.
இவ்வேளை, அப்பகுதியிலிருந்த முதியவரான சரவணமுத்தர் தெருவில் போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. அவன், அவரைப் போய் விசாரித்தான். அப்போதுதான், அவனுக்கு நடந்தது தெரிந்தது. ஆமிக்காரர்கள் ஆச்சிரமம் இருந்த சந்திக்கு வந்ததும், ஏதோ நினைத்துக்கொண்டவர்களாய், ஆச்சிரமத்தின் பின்னால் இருந்த ஒழுங்கைவழியே திரும்பி, அந்தச் சப்பாணி இருந்த கொட்டில் பக்கம் வந்து, மீண்டும் பிரதான வீதியிலேயே போயிருந்தார்கள்.
ஏன், அப்படி அவர்கள் வந்த வழியைச் சிறிது மாற்றிக்கொண் டார்கள் என்பது, அவனதும் சரவணமுத்தரதும் புரிதலுக்கு அப்பாற் பட்டதாக இருந்தது.
அவன்முன்னே அவனது குருவின் முகம் மிதந்துவந்தது.
அன்று பின்னேரம், ராணுவ வாகனம் புங்குடுதீவின் மூலை முடுக்கெல்லாம் சென்று எஞ்சியிருக்கும் மக்கள் அனைவரையும் மாரியம்மன் கோவில் முன்றலில் கூடுமாறு அறிவித்துச் சென்றது. அதற்கிணங்க யாழ்ப்பாணம் செல்லமுடியாமல்போன அனைவரும் அங்கே திரண்டனர். அறுநூறுபேர் வரை அங்கே திரண்டிருந்தது, பெரிய கூட்டமாகவே தெரிந்தது. அவர்கள் அனைவரின் பெயர்க ளும் பதியப்பட்டன.
வாகனத்திலிருந்து தேவகுமாரன் இறங்கிவந்து ரட்சிப்பது போல் அந்த விடுவிக்கப்பட்ட மக்களுக்கு டென்ஸில் கொப்பேகடுவ உரையாற்றினார்.
5
‘புதிய சப்பாத்தின் கீழ்’ மக்கள் இயக்கப்பட்டனர்.
அசாதாரண அமைதிக்குள் புங்குடுதீவு வீழ்கிறது.
புங்குடுதீவுக்குள் ராணுவம் நுழைந்த சில நாட்களாக ஏதோ ஓர் ஆபத்தை எதிர்பார்த்திருப்பதுபோன்ற உணர்வால் பீடிக்கப் பட்ட நிலை. ராணுவம் நுழையும் பூமியெங்கும் இந்த வாடையின் கனதி. சந்திகள், சோதனைச் சாவடிகள், குச்சொழுங்கைகள் அனைத் திலும் மண்டிக்கிடப்பது இது ஒன்றே என்பது எவரும் உணரக் கூடியதே.
இதற்கு இன்னொரு காரணம், முன்னர் செறிவாக அருகருகே இருந்த மக்கள், இப்போ இங்கொருவராய் அங்கொருவராய்ச் சிதறி இருந்தனர். ஒருவருக்கு ஏதும் நடந்தால் அதுபற்றி அடுத்த வருக்கு தெரியவரலாம் அல்லது தெரியவராமலும் போய்விடலாம். ஒரு வட்டாரத்தில் மட்டும் ஆயிரத்துக்குமேல் இருந்த இடத்தில் இப்போ முதலாம் வட்டாரத்தில் ஐந்துபேர், இரண்டாம் வட்டாரத் தில் பத்துப்பேர், ஐந்தாம் வட்டாரத்தில் ஆறுபேர் என்று செறிவின்றி தூரத்தூர இருந்தனர். இந்தப் பின்னணியில் வெறுமையின் வெறிச் சோடலும், காற்றின் அனாதரவான சோகக் குழைவும் ஒருவித அச்சத்தை ஊட்டுவதாய் இருந்தது.
தெருவில் செல்லும் பெண்கள் நிலம் நோக்கிய தம் பார்வை யிலிருந்து மீளாதவராய் வேகமாகச் சென்றனர். தப்பித்தவறி நிமிர்ந்து பார்த்துவிட்டால், எங்காவது ஆமிக்காரன் நின்று தம்மைக் கைகாட்டி அழைக்கலாம் என்ற ஒருவகையான பீதிக்குள் அவர்கள் விழுந்தவர்போல் தெரிந்தனர். அவர்களைத் தொட்டுக்கொண்டு சென்ற பிள்ளைகள், தாய்மாரிடமிருந்து தம் கேள்விகளுக்குப் பதில் வராதபோதும், சும்மா தொணதொணத்துக்கொண்டே சென்றனர்.
“குஞ்சியம்மாவும் யாழ்ப்பாணம் போயிற்றாவா, அம்மா?”
“யாழ்ப்பாணம் போனவை, எப்பம்மா வருவினம்?”
பதில் வராவிட்டாலும் அவர்களது கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.
தெருவில் நின்ற நாய்களின் முகங்களில் உற்சாகம் மங்கி பசிக் களை தெரிந்தது. தேடுவாரற்றுக் கதியால் வேலிகள்மேல் கால்போட்டு மேய்ந்துகொண்டு நிற்கும் ஆடுகளை, அவை ஒருவித வெறியோடு பார்த்தன. கன்றுகளோடு சென்ற பசுக்களருகே நாய்கள் சென்றபோது, அவை மூசிக்கொண்டு நாய்களின் சள்ளை யில் இடித்துத் தூக்கி எறிந்தன. ஏற்கனவே பசியோடு கிடந்த நாய்கள், இந்த எதிர்பாராத தாக்குதலைத் தாங்கமுடியாது வெகு நேரம் ஊளையிட்டன. எங்கு திரும்பினாலும் ஒருவித தனிமையும் பீதியுமே கைகோர்த்து, வௌவால்கள்போல் கண்கள் முன்னால் தொங்குவதுபோல்…
பசிக் களை மக்கள்மேலும் தொற்றியிருந்தது. கையிலிருந்த உணவுப் பொருட்கள் தீர்ந்த நிலையில் மக்களுக்குக் கைகொடுக்க எந்தக் கடைகண்ணியும் அங்கே இருக்கவில்லை. கடைகளைப் பூட்டிவிட்டு எல்லாக் கடைக்காரர்களும் யாழ்ப்பாணம் போய் விட்டார்கள். மக்கள் இலைக்கஞ்சி, புழுக்கொடியல், கிழங்கு, பனாட்டு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கையில் புங்குடுதீவு கூட்டுறவுச் சங்கக் களஞ்சிய அறை உடைக்கப்பட்டு உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்ற செய்தி எங்கும் பரவிற்று. மக்கள் முதலாம் வட்டாரத்திலுள்ள கூட்டுறவுச் சங்கத்தின் முன்னால் கூடினர். இளம் பெண்கள் அங்கே அதிகம் தலைக்காட் டவில்லை. வயதுபோனவர்களும் நடுத்தரவயதினரும் சிறுவர்களுமே அங்கே கூடினர். ஒவ்வொருவருடைய கைகளிலும் பலவகையான பைகள் இருந்தன. இராணுவத்துக்கும் மக்களுக்குமிடையே தொடர்பை ஏற்படுத்தும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உணவுப் பொருட்களை வழங்கிக்கொண்டிருந்தனர்.
வேலை மும்முரமாக நடந்துகொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத நேரத்தில் பேரிடிமாதிரி ஒரு சத்தம் அங்கெழுந்தது. அங்கு நின்ற சிறுவர்களும் பெரியவர்களும் பயத்தினால் நெஞ்சுதற், என்ன நடந்தது என்று தெரியாமல் விழிபிதுங்க நின்றனர். சிறிது நேரத்துக்குப் பின் தகவல் கசிந்தது.
கூட்டுறவுக் களஞ்சிய அறை இருந்த இடத்திற்கு இரண்டொரு வீடு தள்ளியிருந்த வீடொன்று ராணுவத்தினால் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது. ஏன் அப்படி அந்த
வீடு தரைமட்டமாக்கப்பட்டது?
அதற்கான பதிலும் அங்கே கசிந்தது.
புங்குடுதீவில், அந்த வீட்டில்தான் விடுதலைப் புலிகள் முகாம் ஒன்றை அமைத்திருந்தார்களாம்.
இதை யார் ராணுவத்துக்குச் சொல்லிக்கொடுத்தது?
சாமியாராக வந்ததும் நாங்களே, சம்சாரியாக இருப்பதும் நாங்களே என்று தங்கவேலு ஒரு சினிமாப் படத்தில் கூறியதுதான் அவன் நினைவில் ஓடிற்று. எல்லாவற்றுக்கும் நாங்கள்தான் காரண மாக இருக்கிறோம். புலிகளின் முன்னால் நாங்களே விடுதலை வீரர்கள். அவர்கள் இல்லாத இடங்களில் நாங்களே காட்டிக் கொடுக்கும் முன்னணி வீரர்கள். இந்த விலாங்குத்தனம் எக்காலத்தி லும் எங்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்குமா?
உணவுப் பொருட்களை வாங்கிய மக்கள் அங்கிருந்து மெல்ல மெல்ல அகன்றுகொண்டிருந்தனர். அவர்கள் முன்னால் வீடொன் றைக் குண்டுவைத்து, தரைமட்டமாக்கிய ராணுவத்தினர் ஏதோ பெரிய சாதனையைச் செய்துவிட்டவர்கள்போல் பெரிதாக எக்காளமிட்டுச் சிரித்துக் கதைத்துக்கொண்டு நின்றனர். அவர்கள் முகங்களில் வெளிப்பட்ட சிரிப்புக்குமேலாக ஒருவித குரூரம் எரிந்துகொண்டிருந்தது.
அவர்கள் வாடையே தமக்கு ஆகாதென்பதுபோல் அங்கு வந்திருந்த இரண்டொரு பெண்கள் வேகமாக நடந்துசென்றனர். அவர்களைத் தொடர்ந்து, “அறுவாற்றை மூஞ்சியையும் மோறக் கட்டையையும் பார்” என்று அவர்களைப் பார்த்துத் தமக்குள் கறுவிக்கொண்டு சில கிழங்கள் சென்றனர்.
புங்குடுதீவில் தங்கிய மக்களில் 7ஆம் வட்டாரமான ஊரதீவி லேயே மக்கள் ஒப்பீட்டளவில் கூடுதலாக வாழ்ந்துவந்தனர். மிகவும் கஷ்டப்பட்டவர்களும் அங்கேதான் இருந்தனர். அவர்கள் உணவு வழங்கப்பட்ட முதலாம் வட்டாரமான சந்தையடிக்கு வருவதென்பது ஒரு நெடுந்தூரப் பயணமாகும். வல்லைவெளி போன்ற சில குறுநிலங்களைக் கடந்தே இவர்கள் வரவேண்டியிருந் தது. ஊரதீவுக்கு அருகே இருந்த மடத்துவெளியில்தான் ராணுவ முகாம் இருந்தது.
ஊரதீவு மக்கள் தமக்கருகே ராணுவத்தின் முகாம் இருந்ததை ஆபத்தாகவே கருதினர்.
எங்குமே ராணுவம் மக்களின் பாதுகாப்புக்காக இருந்தது இல்லை. அப்படி இருந்தது என்று நினைப்பது ஒரு மாயையே.
ஊரதீவு மக்களின் குடிமனைப் பக்கம் ராணுவத்தினர் தனித் தனியாகவும் சோடியாகவும் சைக்கிளிலும் திரியத்தொடங்கியது மக்களை அச்சுறுத்துவதாகவே இருந்தது.
ஒருநாள் அவர்கள் பயந்ததுபோலவே நடந்துவிட்டது. அன்று, நள்ளிரவிருக்கும் ஐந்தாறு ராணுவத்தினர் பெண்கள் தனியே இருந்த வீடொன்றுக்குள் புகுந்தபோது அவர்கள் போட்ட கூக்குர லில் அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் அங்கு திரண்டு விட்டனர்.
எதுவும் செய்வதறியாது ராணுவத்தினர் பின்வாங்கி ஓடுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.
“என்ன பாலன், ராத்திரி உங்கட பக்கம் ஒரே அல்லோலகல் லோலமாமே, என்ன நடந்தது ?” அவன் ஊரதீவில் இருந்து வரும் பாலனைக் கேட்டான்.
“நல்ல காலம், இதை நாங்க எதிர்பார்த்திருந்ததால், அநியாயம் நேராமல் தடுத்துப் போட்டம்.” பாலன் கூறினான்.
“அப்பிடியெண்டா?”
“இதுக்கு முந்தியும் பல தடவை ஆண்துணையில்லாமல் இருந்த அந்தப் பெண்களின் வீட்டை ஆமிக்காரர் சுறறிவந்தது எங்களுக்குத் தெரியும். நேற்று மத்தியானம் தாங்க இரவு வருவம் எண்டு அந்தப் பெண்களிட்ட சொல்லிப் போயிருக்கீனம். நாங்களும் அந்த வட்டாரத்துச் சனங்களுக்குச் சொல்லி, எல்லோரையும் கூட்டிவைச்சிருந்தம். இது தெரியாமல் அவை வீட்டுக்க நுழைந்த போது கூடியிருந்த சனம் சொல்லிவைத்தால்போல் கூக்குரலிட்டது.”
“பயந்துபோயிருப்பாங்களே?”
“பயமா, ஒரே ஓட்டம் தலைதெறிக்க…”
“இவங்கட அநியாயங்களை நாங்க ஒன்றுபட்டா தடுக்கலாம். ஆனால், கொஞ்சம் தியாகம் செய்யவும் தயாராக இருக்கவேண்டும். அப்பத்தான் நம்ம விடுதலைப் போராட்டம் வெற்றி பெறும்.”
“இது நம்மட சனங்களுக்கு புரிஞ்சாத்தானே !” என்று கூறிக் கொண்டே பாலன் போனான்.
6
யாழ்ப்பாணத்தோடு தம்மைப் பிணைத்திருந்த தொப்புள் கொடி அறுபட்டதான நிலையில் தீவுப்பகுதி கிடந்தது.
விடுதலைப் புலிகள் தீவுப்பகுதியிலிருந்து தமது நிர்வாகத்தை வாபஸ்பெற்றுக்கொண்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்ற பின்னர் மாற்றான் கைக்குள் சிக்குண்ட அனாதைகளின் நிலையில் தீவுப் பகுதி மக்கள்.
யாழ்ப்பாணத்திற்குள் இனிமேல் அவர்களால் செல்லமுடியாதா?
அவர்களது உற்றார், உறவினரைக் காணமுடியாதா? இனி எப்போது அவர்களைக் காண்பது?
தீவுக்குள் அடைப்பட்டுக்கிடந்த சனங்களின் மனங்களில் அக்கேள்விகள் அடிக்கடி எழுந்தன. அதேநேரத்தில் ராணுவம் வரப்போகிறது என்பதுபற்றித் தெரியாது, ஏற்கனவே யாழ்ப்பாணம் சென்றிருந்த சிலர் தமது மனைவி மக்கள் புங்குடுதீவிலும், தாம் யாழ்ப்பாணத்திலுமாகப் பிரிந்துபோன நிலை இன்னும் பரிதாபகர மானது. யாழ்ப்பாணத்திலிருந்து இருபது மைல்கள் தொலைவி லிருந்த புங்குடுதீவிற்குப் போய், தமது மனைவி மக்களைக் காணமுடியாத நிலையில் வெறிபிடித்தவர்களாய் அவர்கள் திரிந்திருக்கலாம். அந்த நிலையில் அவர்களுக்கு யாழ்ப்பாணம் ஒரு சிறையாகவே மாறியிருந்திருக்கலாம்.
இதற்கெல்லாம் காரணம், பற்றுத்தான். யாழ்ப்பாணத்தில் சிக்கிக்கொண்டவர்கள் புங்குடுதீவில் தம்மை விட்டுப் பிரிந்துபோய் இருக்கும் மனைவி மக்கள்மேல் இருந்த பற்றின் காரணமாகச் சிறைக்குள் அகப்பட்டவராய்த் தவித்தனர். அவ்வாறே, யாழ்ப்பாணத் தில் தமது உற்றார் உறவினர் பிள்ளைகுட்டிகளை விட்டுவிட்டுப் புங்குடுதீவில் சிக்கிக்கொண்டவர்கள், தாம் கொடிய சிறைக்குள் தள்ளப்பட்டவர்களாகவே தவித்தனர்.
எல்லாம் பற்றின் காரணமாக ஏற்பட்ட துன்பமும் துக்கமும். எந்தவித பற்றும் பந்தமுமில்லாமல் கிடந்த கிழடுகட்டைகள் தாம் கைதுசெய்யப்பட்ட தீவுப்பகுதியில் சந்தோஷ சித்தர்களாக இருந்திருக்க வேண்டும். “தம்பி, நான் செத்தா என்னைக் கொண்டு போய் எரிச்சுப்போடு” என்று அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு சொன்ன ஒரு வயோதிபரின் முகம் அவன்முன் நிழலாடிற்று.
பற்றோ பற்றின்மையோ, கைது செய்யப்பட்ட கிராமத்தில் மக்கள், நெருஞ்சிமுள் காட்டில் நடப்பதுபோலவே நடமாடினர். ராணுவத்தின் தலையீடே இதற்குக் காரணம் என்பது சிறுபிள்ளை யும் அறிந்த விஷயம். நள்ளிரவில் ஊரதீவில் நடந்த அசம்பாவிதத் தின் பின்னர் மக்கள் இன்னும் சுதந்திரமாக நடமாட அஞ்சினர். ஆனால், இதைச் சாட்டாக வைத்து இயக்கத்தினர் ராணுவத்தைப் புங்குடுதீவில் இருந்து அகற்றி, நிர்வாகத்தைத் தமது கைக்குள் எடுப்பதற்கு முயன்றனர். அதில் பின்னர் வெற்றியும் பெற்றனர்.
ராணுவம் புங்குடுதீவில் இருந்து அகன்றதில் மக்களுக்கு ஒருவகையில் நிம்மதியே.
இப்பொழுது ராணுவம் வேலணைப் பகுதியிலும் ஊர்கா வற்றுறையிலுமே நடமாடியது. நேவிக்காரர்கள், நயினாதீவுக்குப் போகும் புங்குடுதீவிலுள்ள குறிகாட்டுவான் துறையிலும் நயினாதீவி லும் இருந்தனர். காரைநகர், நேவிக்காரரின் மத்திய இயங்குதளமாக இருந்தது.
புங்குடுதீவுக்குள் ராணுவம் புகுந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆயினும் இன்னும் மக்கள் தமது பசியிலிருந்தும் தேவைகளில் இருந்தும் விடுவிக்கப்படவில்லை என்பது அவர்கள் முகங்களிலும், வீடுகளிலும் இருந்து கொட்டாவி விட்டதில் தெரிந்தது.
‘விடுவிக்கப்பட்ட’ தீவுப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்ட றிந்து அவற்றைக் களைவதற்காக மந்திரிமார்களும், அவர்களோடு சேர்ந்து உயர் அதிகாரிகளும் வரப்போவதாகக் கதைகள் அடிப்பட் டன. அப்படி ஒருசிலர், ஹெலிகள் வட்டமிட, பாதுகாப்புகள் உஷார்படுத்தப்பட்டு ராணுவக்காரர்கள் விறைத்து நிற்க, வந்து போயினர்.
ஹெலிகள் வட்டமிடுவது எஞ்சியிருந்த சிறுவர்களின் கண்க ளுக்கு விருந்தளிப்பதாய் இருந்தது. வேலணை மகாவித்தியாலயத் தில் மந்திரிமார்களின் வருகையும் கூட்டங்களும் நிகழ்ந்தன.
இவ்வேளைகளில் தீவுப்பகுதியில் இருந்த அனைத்துச் சனங்க ளும் ஏற்றி இறக்கப்பட்டனர். ஆட்களைத் திரட்டும் பொறுப்பு ஒவ்வொரு தீவிலும் உள்ள பிரஜைகள் குழுத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அவர்களின் தலைமையில், ஆடு மாடுகள் போல் அனைத்து தீவுச் சனங்களும் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். தீவுப்பகுதி மக்களின் பற்றாக்குறைகளை மந்திரிமாருக்கு எடுத்துச்சொல்லும் சந்தர்ப்பங்கள் அவனுக்கும் கொடுக்கப்பட்டது.
மந்திரிமார்கள் ஏதேதோவெல்லாம் செய்து தருவதாக கயிறு கள் திரித்தனர்.
ஆயினும் என்ன, நோயால் பீடிக்கப்பட்ட, மருந்துகள் எதுவும் இல்லாதிருந்த மக்களுக்கு வைத்தியம் செய்யக்கூடிய ஒழுங்கான வைத்தியர் ஒருவரைக்கூட அவர்களால் நியமிக்கமுடியவில்லை.
மந்திரிமார் வந்துபோயினர். ஆனால், நிலமைகள் சீர்பெற வில்லை. இயக்கத்தினால் நடத்தப்பட்ட மக்கள் கடையோ தனி நபர் கடைகளோ இன்னும் முளைக்கவில்லை.
ஒருநாள் அவன் குளிக்கும்போது மேலுக்குப் போட சோப் இல்லாமல் இருந்தான். ஒரு மைல் தூரத்திற்கப்பால் இருந்த அவன் நண்பர் ஒருவரிடம் சோப் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவரிடம் சென்றான். அவரோ மிகுந்த மனவருத்தத்திற்கு மத்தியில் அவர் தேய்த்து எஞ்சியிருந்த மீன்செதில்போன்ற சோப்புத் துண் டைக் கொடுத்தார், திருப்பித்தர வேண்டுமென்ற வேண்டுதலுடன்.
அவன் அந்த சோப்பைக் கொண்டுவந்து கிணற்றுக்கட்டில் வைத்துவிட்டுத் தண்ணீரை அள்ளக் குனிந்தபோது, எங்கிருந்தோ பறந்து வந்த காகம், அவனது சோப் துண்டைக் காவிச் சென்றது. அவன், ‘ஆய், ஆய்’ என்று கத்தியவாறே அதன் பின்னால் ஓடினான். காகமோ சோப்பைக் காலால் மிதித்தபடி தென்னைமர ஓலையில் இருந்து ஊஞ்சலாடியவாறு, அதைக் கொத்தியபடி அவனைப் பார்த்து நகைப்பதுபோல் பட்டது.
காகத்திடமிருந்து வடையை வீழ்த்திய முற்கால நரியின் உபாயம் எதுவும் அவனுக்கு கைகொடுப்பதாய் இல்லை.
அன்றைய நாளும் வழமைபோல் சோப்பில்லாத குளிப்பாக முடிந்தது.
குளிப்பதற்குச் சோப்பில்லாமல் போனது பெரிய விஷயமல்ல. அவன் வாழ்வதற்கு உயிர்நாடியாகவிருந்த இன்சுலின் மருந்தின் கையிருப்பே தீர்ந்துபோய் இரண்டு மாதத்திற்கு மேலாகிவிட்டது.
அவனோ இன்சுலின் இன்றி வாழ்க்கையை நடத்த முடியாத வன். அவனொரு Insulin Dependent Patient.
இன்றோடு அவன் இரண்டு மாதத்திற்கு இன்சுலின் இல்லா மல் இருக்கின்றான். இப்போ அவனுக்கு sugar நன்றாக ஏறியிருக்கும். 300க்குமேல் உயர்ந்திருக்கும். அதனால், சாப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பது தெரியும்.
ஆனால், தீவுப்பகுதியில் மக்களோ சாப்பாட்டுப் பொருட்கள் போதியளவு இல்லாமல்தானே தவித்துக்கொண்டிருக்கின்றனர். அந்நிலையில் அவன் ஏற்கனவே டயற்றிங்தான். இருந்தாலும் அவனுக்கு Sugar அதிகரித்ததுவிட்டதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கியிருந்தன. அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தான். தாகம் அதிகரித்திருந்தது. பலவீனம் அவனைத் தள்ளாட வைத்தது. வழமையாகக் காலையில் உற்சாகமாக எழுந்து, குளித்துவிட்டு ஆச்சிரமக் கோயில் அறைக்குச் சென்று குருவழிபாடு செய்பவன், இப்போ காலையில் எழுந்து காலைக்கடன்களை முடிப்பதற்கே பலமில்லாமல் இருந்தான். அவன் மனைவியின் ஒத்தாசை இல்லா திருந்தால் அவன் எப்பவோ செத்திருப்பான்.
இருந்தாலும் அவன் மனத்தளவு பலமானவன்போலும், முன் னர் இப்படித்தான் அவனுக்கு டயபெற்றிக் வியாதி இருப்பதைக் கண்டுபிடித்த டொக்டர் ‘சுகர்’ 360க்கு ஏறியிருப்பதைக் கண்டு அவனை மேலும்கீழும் ஆச்சரியத்தோடு பார்த்தார்.
“என்ன உங்களுக்கு மயக்கம், தலைசுற்றல் எதுவும் ஏற்பட வில்லையா?” என்று கேட்டார்.
‘இல்லை” என்றான் அவன்.
அவர் தனக்குள் சிரித்துக்கொண்டு “எல்லாம் மனந்தான்” என்று கூறிக்கொண்டே, அவனை ‘வார்ட்’டில் நிற்பாட்டி இன்சுலின் போட்டு, சுகரை குறைத்தது, இப்போ நினைவுக்கு வந்தது.
அவன் ஒருவாறு தன்னைச் சமாளித்துக்கொண்டு ஆச்சிரமத் துக்குப் போனான். ராணுவம் வந்து நிலைமை சிறிது வழமைக்குத் திரும்பியபின், அவனும் அவனது குடும்பமும் ஆலடிச் சந்தியிலுள்ள அவனது வீட்டுக்குத் திரும்பியிருந்தனர். அங்கே, ஆச்சிரமத்தில் அவன் நண்பன் துரையின் மனைவி மக்களும் அக்காவும் இருந்தனர்.
அவன் ஆச்சிரமத்திலுள்ள கோயில் அறைக்குள் போனான். அங்கே, அவன் குருவின் படமும் அஸ்தியும் இருந்தன. விளக்கு எரிந்துகொண்டிருந்தது.
அவன், நின்று பிரார்த்திக்கவே பலமற்றவனாக, “இறைவா, என்னால் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாளைக்கு நான் உன்னிடம் வருவேன் என்று சொல்ல முடியாது. நான் வருவதும் வராததும் உன்னிடந்தான் உள்ளது” என்று பிரார்த்த னையை முடித்துவிட்டு, அவன் விரைவாக வீட்டுக்குத் திரும்பினான்.
வீட்டில், அவன் மனைவி பயந்துகொண்டிருப்பாள் என்பதும் தெரியும். வீட்டுக்குப் போனவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ஆலடிச் சந்தியிலிருந்த அவன் வீட்டுக்கு முன்னால், ஒரு ‘வான்’ நின்றுகொண்டிருந்தது. அவன் அதைக் கடந்து வீட்டுக்குள் நுழைந்தபோது, அவன் சற்றும் எதிர்பார்த்திராத வகையில் அவனது பல்கலைக்கழக நண்பன் நற்குணன் அங்கே நின்றுகொண்டிருந்தான். அவனோடு, அந்தக் கிராமத்துக்குப் பொறுப்பாயிருந்த இயக்கத்தைச் சேர்ந்தவனும் நின்றுகொண்டிருந்தான்.
அவனைக் கண்டதும், நற்குணன் அவனைக் கட்டியணைத்துக் கொண்டான்.
“டேய் சிவா, எப்படி இருக்கிறாய், இதோ உனக்கு, உனது உயிரைப் பிடித்துவைத்திருக்க உதவும் இன்சுலின்” என்று கூறிக் கொண்டே 10 vial இன்சுலினை ஒரு பெட்டியோடு கொடுத்தான். “இது உன் குருவின் துணைவியார் கொழும்பிலிருந்து உன்னிடம் உடனே சேர்ப்பிக்கும்படி ஓர் அதிகாரிமூலம் இங்கு வரும் என்னி டம் கொடுத்தனுப்பினார்.”
அவன் அதிர்ச்சியால் ஓங்கி அறையப்பட்டு ஒருகணம் நின்றான். அவன்முன்னே அவன் சுவாமியின் முகம் மிதந்துவந்தது. அவன் பிரார்த்தனைக்கு, உடனே பதில் அளிக்கப்படுகிறதா?
நற்குணன் பெரிய வேலையில் இருந்தான். வடக்கு-கிழக்கு மாகாணத்தின் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரி. தீவுப்பகுதி மக்களின் துயர்துடைக்க அன்றைய அரசாங்கம் அவனை அனுப்பி யிருந்தது. அவனைப் பற்றிய நினைவுகள் மேலேழுந்தன.
1983 இனக்கலவரத்தின்போது தமிழ்மக்கள்மீது சிங்கள இனவெறியர் பாய்ந்து குதறித்தள்ளிக்கொண்டிருந்தபோது, நற்குணனும் கொழும்பில்தான் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அவன் வீட்டையும், அவனையும், அவன் குடும்பத்தையும் குதறித் தள்ள, சிங்களக் குண்டர்கள் வந்துகொண்டிருந்தார்கள்.
அவன் அஞ்சவில்லை.
அவனிடம் அவன் லைஸென்ஸ் எடுத்து வைத்திருந்த துவக்கு இருந்தது. கத்தி பொல்லுகளோடு ஓடிவந்தவர்களில் சிலரை அவன் துவக்கு பதம்பார்த்தது. வந்தவர்கள் எல்லோரும் திரும்பி ஓடினர். அவனும், அவன் குடும்பமும் அகதி முகாமில் தஞ்சம் அடைந்து, கப்பலில் யாழ். சென்றனர்.
நற்குணன் தனக்குரிய வீரம் தோய்ந்த சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான்.
“சிவா, நான் உனக்கு நல்லது செய்யத்தான் வந்துள்ளேன். மறுக்காமல் ஏற்றுக்கொள்” என்றான் நற்குணம்.
“என்னத்தைச் செய்யச் சொல்லிறாய்?”
“நான் உன்னைத் தீவுப்பகுதி உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றும்படி கேட்கின்றேன். என்ன சொல்கிறாய்?” என்றான்.
“மன்னிக்கவும். எனக்கு அந்த பெரிய உத்தியோகமெல்லாம் வேண்டாம்.” இவன் மறுப்புத் தெரிவித்தான்.
“பெரிய உத்தியோகத்தில் இருந்தால், மக்களுக்குப் பெரிதாய் உதவலாம் இல்லையா?” மற்றவன் திருப்பிக் கேட்டான்.
“இருக்கலாம். ஆனால், எனக்கு விருப்பமில்லை.”
“அப்படியானால், நீங்கள் ஆரம்பிக்க ஆர்வங்காட்டும் புங்குடு தீவு மகாவித்தியாலயத்திற்கு அதிபராக இருக்கிறாயா?”
“இல்லை. அதற்குத் தகுதியானவர்கள் நயினாதீவில் இருக் கிறார்கள். அவர்களைப் போடுங்கள்.”
“சரி, இதையாவது ஏற்றுக்கொள்.”
“எதை?”
“இயக்கம் ஆரம்பிக்கப்போகும் மக்கள் கடையை, நீ பொறுப் பேற்று நடத்துகிறாயா?”
“அதற்கு ஏற்கனவே வியாபாரம் செய்து பழக்கமானவர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்களை உங்களுக்கு பிடித்து தாறன். எனக்கு அதில் அனுபவமில்லை.” அவன் அதையும் மறுத்துவிட் டான்.
“என்னடா சிவா, எல்லாத்தையும் வேண்டாம் எண்டு சொல்கிறாய், அப்ப என்ன செய்யப் போற?” நண்பன் சிறிது கவலையோடுதான் கேட்டான்.
“நான் முன்போலவே சாதாரண ஆசிரியராக இருக்கவே விரும்புறன். மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதையும் செய்கிறேன். இன்னும் மந்திரிமார் வந்தால் மக்களுக்குத் தேவை யானவற்றை எடுத்துச் சொல்கிறேன். அதற்காக என்னை பிரஜைகள் குழுவில் இருக்கும்படி கேட்கவேணாம்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.
நற்குணமும் சிரித்தான்.
“நான் எப்பவும்போல் அடிமட்ட ஊழியனாக இருந்து மக்களுக்கு உதவுவதில்தான் எனக்கு ஆறுதல்.”
இவனும் நற்குணமும் கதைத்ததை கவனித்துக்கொண்டு நின்ற இயக்கத்தைச் சேர்ந்தவன் இவனை ஆச்சரியத்தோடு கவனித்துக்கொண்டு நின்றான். எல்லோரும் “நான் முந்தி, நீ முந்தி” என்று எதையாவது பெற்றுக்கொள்ளப் போட்டிபோடும் இந்நேரத்தில் இவன் மட்டுமேன் இப்படி?
அதன் பின்னர் அவனுக்கு ஓர் தனி மரியாதை.
அங்கே, புங்குடுதீவை அவன் கண்காணிப்பதுபோலவே நிலைமை இருந்தது. சுவாமி அவன்முன் சிரித்துக்கொண்டு நிற்பதுபோல்.
7
ரோட்டில் மாடொன்று நைலக்ஸ் சேலை ஒன்றை முகத்திலும் கழுத்திலும் எடுத்துப்போட்டவாறு, ஒரு பெண் ஒய்யாரமாக நடந்துவருவதுபோல், வந்துகொண்டிருந்த காட்சி அவனை வியக்க வைத்தது.
மாட்டுக்கு யார் சேலை அணிவித்தது? அல்லது மாடு எவ் வாறு சேலை அணிந்துகொண்டது?
அதை விளங்கிக்கொள்ள அவனுக்கு அதிக நேரம் எடுக்க வில்லை.
பூட்டிவிட்டு யாழ்ப்பாணம் ஓடியவர்களின் வீடுகளெல்லாம் உடைக்கப்பட்டுவிட்டன. யார் வீடுகளை உடைத்தார்கள் என்பது தான் இன்னும் ரசனைக்குரியது. புங்குடுதீவில் எஞ்சியிருந்தவர் களும் உடைத்தார்கள். ஆனால், இதையும்விட நயினாதீவிலிருந்து புங்குடுதீவிலுள்ள தமது உறவினரைச் சந்திக்க வந்ததாகச் சொல்லிக் கொண்டவர்கள், தமது உறவினரோடு சேர்ந்து இரவு இரவாக ஒவ்வொரு வீடாகப் பேய்கள்மாதிரிப் புகுந்து வந்தார்கள் என்பது தான் இன்னும் வேடிக்கையானது. அப்படிப் புகுந்தவர்கள் ஒவ் வொரு வீட்டுக்குள் இருந்தும் விலைமதிப்புள்ள சேலைகள் என்றும் சில்வர்கள் என்றும் மூட்டை கட்டிக்கொண்டுதான் வெளிவந்தார்கள்!
மூட்டை கட்டப்பட்ட பொருட்கள் இரவோடு இரவாகக் கடத்தப்பட்டன. இந்தக் களவும் கடத்தலும் உச்சநிலை அடைந்த போது அதைக் கண்காணிப்பதற்காக முக்கியமான இடங்களில் இயக்கத்தினர் ‘சென்றி’ போட்டுக் காவல் செய்தும், அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இப்படியாக உள்ளுர், வெளியூர்க் கள்ளர்களால் திறந்துவிடப் பட்ட வீடுகள், போவோர் வருவோரை ‘வா வா’ என அழைத்தன. ஒருவரின் மனப்பக்குவத்தைச் சோதிக்கின்ற சந்தர்ப்பமாகவே இவை இருந்தன. புங்குடுதீவில் அதிக சனங்கள் இல்லாததால், வெளியூர்க்காரரின் ஆக்கிரமிப்புக்கள் நிகழ்ந்தன. மக்கள் இடம் பெயர்ந்துவிட்ட ஊரில், ரோட்டில் போவோர் வருவோராய் இருந்தவர்கள் மக்களல்ல, ஆடுகளும் மாடுகளும் நாய்களுமே! வழமைக்கு மாறாக என்றைக்குமில்லாத மாதிரி திறந்துவிட்டு ‘ஹோ’வெனக் கிடந்த வீடுகளைப் பார்த்தபோது மிருகங்களே ஏதோவொன்றால் தூண்டப்பட்டவைபோல் உள்ளே நுழைந்து பார்க்க விரும்பின.
நாய்கள் உள்ளே புகுவதற்கு முன், எப்பவுமே தாம் செய்வது போல் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு நேரடியாகவே சமையல் அறைக்குள் நுழைந்தன. ஏற்கனவே ஜன்னல்கள் ஊடாக நுழைந்து அவ்விடங்களைத் தமதாக்கிவிட்டிருந்த பூனைகள் இவற்றைக் கண்டதும் சீறிக்கொண்டு வெளியே பாய்ந்தன.
ஆடு மாடுகளுக்கு முன்பின் பார்க்கிற, கபடம் நிறைந்த எந்தவித யோசனைகளும் இல்லாததால், அவை நேராகவே தமக்குப் பிடித்த வீட்டறைக்குள் புகுந்தன. அங்கே இருந்த பெட்டகங்கள், அலுமாரி கள் என்பவற்றிலிருந்து உடுப்புகள் திருடர்களால் வெளியே எடுத்து உதறப்பட்டும் சிதறப்பட்டும் கிடந்தன. உள்ளே சென்ற மாடுகளும் ஆடுகளும் அவற்றின் மேல் சாணமிட்டன. புளுக்கை போட்டன. சலம் வடித்தன. ஈற்றில் சிந்திக்கிடந்த உடுப்புகள் சிலவற்றை வைக்கோலை இழுத்தெடுத்து உண்பதுபோல் உண்டவாறு வெளியே வந்தன. அலுமாரிக்குள் இருந்து வெளியே இழுத்தபோது, உடுப்புகள் அவற்றின் மேல் விழுந்து சாமிக்குப் பட்டுச்சாத்துவதுபோல் அவற்றை அலங்கரிக்க, வெளியே அவை ஆடி அசைந்து வந்த காட்சி கண்கொள்ளாததாகவே இருந்தது.
பார்க்கும் இடமெல்லாம் திறந்த வீடுகள்.
அப்படித் திறக்கப்படாத வீடுகள் இருக்குமானால், அங்கே, இடம்பெயராது எஞ்சிப்போன கிழடுகட்டைகள் காவலுக்குக் கிடக்கின்றன என்பதுதான் அர்த்தம். பெரிய வெற்றுச் சங்குக் கோதுக்குள் உள்நுழைந்துவிட்ட சிறுபூச்சிகள்போல் அவர்கள் அந்த வீடுகளுக்குள் நடமாடினர். தங்களால் சமைக்க முடியாத நிலையில், அடிக்கடி ‘வெறுந்தேத்தண்ணி’ மட்டுமே குடித்துவிட்டு ஊசலாடினர். சிலர் ‘சீலம் பாயை’ விரித்து அதன்மேல் அழுக்குத் ‘தலகணி’யைத் தலைக்குப் போட்டுப் படுத்திருந்தனர்.
பூனையொன்று அப்படிக் கிடந்த ஒருவரோடு ஒட்டிக் கொண்டு கிடந்தது. வீட்டு நாய் அடிவளவில் நின்று ஊளையிட்டுக் கொண்டு நின்றது. அது, அடிக்கடி ஊளையிடுவதும், திடீரென விசர்பிடித்ததுபோல் முற்றத்திற்கு ஓடி வருவதுமாய் இருந்தது.
அப்போது அந்தப் பக்கத்தால் ஊரதீவிலிருந்து சைக்கிளில் வந்த நடுத்தரவயது மதிக்கத்தக்க வேலுப்பிள்ளை, சைக்கிளை ரோட்டுக்கரையோரமாகச் சாத்திவிட்டு, “தம்பிராசண்ணை, தம்பிராசண்ணை” என்று கூப்பிட்டவராய் உள்ளே நுழைந்தார். தம்பிராசண்ணை நீட்டிநிமிர்ந்து சீலம் பாயில் கிடந்தார். அவரிட மிருந்து எதையோ காவிக்கொண்டு ஓடுவதுபோல், அவரோடு கிடந்த பூனை பாய்ந்துபோயிற்று.
வேலுப்பிள்ளை இன்னும் நெருங்கித் தம்பிராசண்ணையைப் பார்த்தார். வாய் அவிழ்ந்த நிலையிலும் கண் வெறித்த நிலையிலும் அவர் கிடந்தார். “ஆள் செத்துப்போச்சு” என்று வேலுப்பிள்ளை தனக்குள் சொல்லியவாறு விறுவிறுவென வெளியேவந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினார். தூரத்தூர இருந்த ஒவ்வோர் ஆட்களின் வீட்டுப் படலையையும் திறந்து, தம்பிராசண்ணை செத்துப்போனதை அறிவித்துப் போனார்.
அன்றிரவு தம்பிராசண்ணையின் பூதவுடலின் தலைமாட்டில் ஒரு சிறு குத்துவிளக்கு எரிந்துகொண்டிருந்தது. அவரைச் சுற்றி வேலுப்பிள்ளையின் தலைமையில் இரண்டொருவர் தேவாரம் பாடிக்கொண்டிருந்தனர். இடைக்கிடை நாலைந்து வயதுபோன பெண்கள் உயிரற்ற குரலில் நித்திரையிலிருந்து விழித்துக்கொண்ட வர்கள்போல் ஒப்புச்சொல்லி அழுவதும், மூக்கைச் சீறி, சேலைத் தலைப்பால் துடைப்பதுமாய் இருந்தனர்.
அடுத்த நாள் காலை பத்து மணிபோல் தம்பிராசண்ணையின் பாடை சுடலையை நோக்கி நகர்ந்தது.
நான்கு முனைகளிலும் வாழைக்குட்டிகள்வைத்துக் கட்டப் பட்ட பாடை; சோடனைக் கடதாசிகள் எதுவும் இல்லை. சவப் பெட்டி இல்லாது பன்னாங்கில் தம்பிராசண்ணையின் பூதவுடல் கிடத்தப்பட்டிருந்தது. பாடையைக் காவிய நான்கு பேருக்கும் பின்னால் ஐந்தாறு பேர் தேவாரம் பாடிக்கொண்டு செல்ல, வேலுப்பிள்ளையர் சங்கூதிக்கொண்டும், தில்லையர் சேமக்கலம் தட்டிக்கொண்டும் சென்றார்கள்.
மேளம் அடிக்கும் குடிமக்கள் இல்லை. கொள்ளி வைக்கும், கருமாதிகளைச் செய்யும் நாவிதரும் இல்லை. நாவிதர் நேவிக்கார ருக்குச் ‘சேவகம்’ செய்யப் போய்விட்டதாகக் கேள்வி. சடங்குகளை நீத்த தம்பிராசண்ணையின் தகனம், மணல்காட்டுச் சுடலையில் ‘சிறப்பாக’ நடைபெற்றது.
வேலுப்பிள்ளையரின் கையாள் ஒருவர் சுற்றிவந்து கொள்ளிக் குடத்தை உடைத்துவிட்டு, கொள்ளி வைத்தார். காவோலைகளில் பட்ட தீ, ‘திகுதிகு’வென எரிய ஆரம்பித்தது.
8
“நான் ஏன் இந்த வெயிலில் காய வேண்டும்? இது என்னு டை ய ஊரா? என்னுடைய பிள்ளைகளும் பெண்டாட்டியும் இங்கேயா இருக்கிறார்கள்? இங்கேயா வாழப்போகிறார்கள் ? இல்லையே, அப்ப நான் ஏன் இங்க வந்து வெயிலில் காயவேணும்?”
நயினாதீவைப் பார்த்துக்கொண்டிருந்த குறிகாட்டுவான் துறையில் மிதந்துகொண்டிருந்த வள்ளத்தருகே வெயிலில் குளித்தவ னாய், தனியனாய் நின்றிருந்த நேவிக்காரன் கத்தினான்.
அப்பொழுதுதான் நயினாதீவுக்கு நண்பர் ஒருவரைக் காணப் போய்விட்டு குறிகாட்டுவான் துறையில் வந்திறங்கிய அவனைப் பார்த்து, நேவிக்காரன் கதைப்பதுபோல் இருந்தது.
நேவிக்காரன் சிங்களத்தில் கத்தினான்.
நேவிக்காரன் சொன்னதை விளங்கிக்கொண்ட அவன், “இது அரசாங்கத்துக்கு விளங்கினால்தானே” என்று, அவனுக்குச் சிங்களத்தில் கூறிவிட்டு மேலே சென்றான்.
நேவிக்காரன் அவன் கூறியதற்கு சாதகமாகத் தலையசைத்துச் சிரித்துவிட்டு, பாடத் தொடங்கினான்.
“தனியாய் உப்பண்னே தனியாய் மரிண்னே”
“தனியாகவே பிறக்கிறோம். தனியாகவே சாகிறோம்” என்ற அர்த்தந்தரும் அப்பாடல், அவன் பின்னால், உலகின் சோகம் அனைத்தையும் திரட்டிக்கொண்டுவருவதுபோல் பட்டது.
எங்கும் வெறுமையின் – விரக்தியின் அடையாளம் மிதந்து கொண்டிருப்பதுபோல் அவன் உணர்ந்தான்.
நயினாதீவுக்குப் போயும் அவன் தேவைக்குரிய காசு கிடைக்க வில்லை. புங்குடுதீவில் எந்தவித வசதியுமில்லாததால் அவன் நிலையும் பரிதாபகரமானதாகவே இருந்தது.
எங்கும் விரக்தியின் வியாபிப்பு
அவன் குறிகாட்டுவானிலிருந்து வீட்டை நோக்கிச் சைக்கிளை மிதித்தான். குறிகாட்டுவானையும் நடுவுத்துருத்தியையும் பிரிக்கும் இடத்தில் இயக்க முகாம் குறுக்கிட்டது. அதில் காவலில் நின்றவர் களின் முகத்தில் எந்தவித ஜீவசுரணையையும் காணவில்லை. ஒருவன் கொட்டாவிவிட்டுக்கொண்டு நின்றான். எந்த வேலையு மில்லை. அதனால், எதுவும் செய்யத் தோன்றாத ஸ்தம்பிதமும் விரக்தியும் அவர்கள் முகங்களில் ஒட்டியிருந்தது.
அவன் காரைநகர்த் துறைமுகத்தில் நின்றுகொண்டிருக்கிறான்.
தம் குடும்பங்களை தீவுப்பகுதியில் விட்டுவிட்டு யாழ்ப்பாணத் தில் அடைபட்டுப்போன சிலர் மீண்டும் தீவுப்பகுதிக்குச் செஞ் சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பிவைக்கப்படுவதாகக் கேள்விப்பட்டு, அவன் காரைநகர்த் துறைமுகத்தில் செஞ்சிலுவைச் சங்கக் கப்பலின் வருகைக்காகக் காத்துக்கொண்டு நின்றான்.
யாழ்ப்பாணத்தில் அடைபட்டுப்போன அவனது நண்பனும் அக்கப்பலில் வரலாம் என்று அவன் எதிர்பார்த்து அங்கு வந்திருந் தான். அவன் வருவானா?
இன்னும் செஞ்சிலுவைச் சங்கக் கப்பல் வரவில்லை.
அவனோடு இன்னும் சிலர் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள், தம் விதியையும் தாம் படும் துன்பத்தையும் அவனோடு தொண தொணத்துக்கொண்டிருந்தனர். அவனோ, தான் படும் துன்பங்களை யாருக்குச் சொல்லியழுவது என்று தெரியாமல், தனக்குள்ளேயே புழுங்கிக்கொண்டு நின்றான்.
தூரத்தே ஊர்காவற்றுறைக் கடற்கோட்டை தெரிந்தது.
பெரியம்மை நோய் பீடித்தவர்களை முன்னர் அந்தக் கோட் டையில்தான் கொண்டுபோய்ப் போடுவார்களாம். 1971இல் தென்னிலங்கையில் கிளர்ச்சியில் ஈடுபட்ட சேகுவேரா (ஜனதா விமுக்தி) இளைஞர்கள் சிலரும், அவர்கள் தலைவனான ரோகண விஜயவீரவும் சிறிது காலம் இக்கோட்டைக்குள்தான் அடைக்கப்பட் டிருந்தனர்.
இப்போ, அங்கே யாரை அடைத்து வைத்திருப்பார்கள்? இவ்வளவு அருகில் இருந்தும் இன்னும் இந்தக் கோட்டையைப் போய்த் தான் பார்க்கவில்லையே என்ற ஆதங்கம் வேறு, அவனுக்கு அப்போது ஏற்பட்டது.
இன்னும் செஞ்சிலுவைச் சங்கக் கப்பல் வரவில்லை. வந்தாலும் அவன் நண்பன் வருவானா?
முதல்நாள் இரவு அவன் நண்பன் வரப்போவதுபற்றி ஊருக்குப் பொறுப்பாய் இருந்தவனோடு அவன் கதைத்தது நினை வுக்கு வந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து இதுவரை யாரும் திரும்பி வந்ததில்லை. ஏன் இவர் மட்டும் இங்கு வருகிறார்? பொறுப்பாய் இருந்தவன் கேள்வி எழுப்பினான். இவனது பதில், அவனைத் திருப்திப்படுத்தவில்லை என்பதும் தெரிந்தது. “நான் நினைக் கின்றேன் அவர் ‘றெக்கி’ எடுக்க வருகிறார் என்று.” பொறுப்பாளன் தொடர்ந்து கூறினான்.
“இல்லை தம்பி, அவருடைய குடும்பம் இங்கதானே இருக்கு, அதுதான் அவர் அங்குள்ளவர்களிடம் அனுமதி பெற்று இங்க வாறேர்.”
“இதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால், அவரைச் சுட்டுத்தள்ளுவோம் அல்லது எங்களோ டேயே காம்பில இருக்க வைப்போம்.”
பொறுப்பாளன் இப்படிச் சொன்னபோது, இவன் நண்பனைக் காப்பாற்றுவதற்காக, தன்னையும் தன் குடும்பத்தையும் பணயம் வைத்தது நினைவுக்கு வந்தது.
அன்றிரவு அவனுக்குத் தூக்கம் வரவில்லை.
அவன் ராணுவம் தீவுக்குள் நுழைந்த அன்று கண்ட கனவுதான் மீண்டும் மீண்டும் நினைவில் நுழைந்தது. கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்ட நிலையில், ரோட்டில் வீசப்பட்ட அவனை யாரோ பயங்கர உருவம் சுட்டுத்தள்ளுவதாக.
ஒருவேளை இது நண்பனுக்கு நடக்கப்போவதைத்தான் சுட்டுவதாக இருக்குமோ? அவன் இதை நினைத்து நினைத்துப் பெரிதும் பயந்தான்.
ஆனால், அவன் நண்பன் அதில் வரவில்லை.
வேறு தீவுகளைச் சேர்ந்த இரண்டொரு வயோதிபர் வந்திருந் தனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெற்றிலை பாக்கு கொண்டுவந்திருந்தனர். தீவுப்பகுதி மக்கள் வெற்றிலை பாக்கைக் கண்டு கனகாலம் ஆயிற்று. கரையில் நின்றவர்களுக்குக் கப்பலில் வந்தவர்கள் வெற்றிலை பாக்கை அன்பளிப்பாக வழங்கி மகிழ்ந்தனர்.
அவனைப் பொறுத்தவரை, அவை எதிலும் மனம் நாட்டம் கொள்ளவில்லை. நண்பன் வராதது பூதாகரமான இருண்மையாக அவன்முன் கவிழ்ந்தது.
அவன்முன் விரக்தியும் வெறுமையும் படர்ந்தன.
அவன் வெறுங்கையோடு வீட்டுக்குத் திரும்பினான்.
அன்று புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் சனங்கள் கூடியிருந் தனர். புங்குடுதீவில் வாழ்ந்த அறுநூறு சனங்களில், எழுந்து நட மாட முடியாதவர்களைத் தவிர, ஏனையோர் அனைவரும் அங்கே காணப்பட்டனர்.
அவர்களோடுகூடவே வந்திருந்த சிறுவர்களும் சிறுமிகளும் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டு நின்றனர்.
அங்கே திரண்டிருந்த கூட்டத்தின் மத்தியில் அவனும் நின்றி ருந்தான்.
அப்படி என்ன விசேஷம், அங்கே?
அங்கே நின்றிருந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், “இன்னும் கொஞ்சநேரத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தவர்கள் வந்துவிடுவார்கள்” என்று அறிவித்தனர்.
அவர்கள் சொன்னதுபோலவே, சற்று நேரத்தில் பத்துப் பன்னிரண்டு செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அங்கே வந்திறங்கினர். இரண்டு வாகனங்கள் அவர் களைக் கொண்டுவந்து இறக்கிற்று. இவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்தனர். இங்கே தீவுப்பகுதியில் அடைபட்டுக்கிடந்தவர்களுக்கு யாழ்ப்பாணத்திலிருந்த உறவினர்கள் அனுப்பிய தூதாய் அவர்கள் வந்திருந்தனர். வெள்ளைக்காரர், சிங்களவர், தமிழர் என்று அதற்குள் அடங்கியிருந்தனர்.
அவர்கள் வந்ததும்வராததுமாய்த் தம்மோடு கொண்டு வந்திருந்த கடிதங்களை விநியோகித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்தவர்கள் தீவுகளில் சிக்குண்டவர்களுக்கு அனுப்பிவைத்த கடிதங்கள்.
மக்கள் முண்டியடித்துக்கொண்டு தமக்கு வந்த கடிதங்களைப் பெறுவதற்கு பாய்ந்தனர்.
அவனும் ஆவலோடு காத்திருந்தான்.
அவனுக்கும் பல கடிதங்கள் வந்திருந்தன. ஆனால், அவை யெல்லாம் தமது வீடுவாசல்களை நன்றாகக் கவனிக்கும்படி எழுதியிருந்த, தூரத்து உறவினர்களின் கடிதங்கள்.
ஆனால், அவனுடைய நண்பனிடம் இருந்து மட்டும் எந்தவித கடிதமும் வரவில்லை. அவனுக்கு அது பலத்த ஏமாற்றத்தைத் தந்தது.
அவன் அங்கிருந்து விரக்தியுற்ற நிலையில் புறப்பட்டான். அவன் போகும்போது, சில வயோதிபர்களும், சில இளவயது மட்டத்தினரும் தம்மை யாழ்ப்பாணம் கொண்டுபோய் விடுமாறு செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்தவர்களைக் கேட்டுக்கொண்டு நிற்பது அவனுக்குத் தெரிந்தது.
அந்த நிலையிலும் அவனுக்கு ஏனோ சிரிக்க வேண்டும்போல் இருந்தது. இது நடக்கிற காரியமா?
9
பார்க்கும் இடமெல்லாம் வெறுமையும் விரக்தியும் புரை யோடியிருப்பதுபோல்பட்டது. பார்த்து வந்த வேலையெல்லாம் திடீரென்று ஸ்தம்பித்துவிட்ட நிலையில் மக்கள் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் கிடந்தனர். உழைப்புக்கு எந்தவழியும் இருப்பதாகத் தெரியவில்லை. கூட்டுறவுச் சங்கக் கடையை உடைத்ததால் கொஞ்சக்காலம் மாவும் அரிசியும் நிவாரணமாகக் கிடைத்தன.
மந்திரிமார் வந்துபோயினர்.
அதன் பின்னர் ‘தாரா’ என்ற சரக்குக் கப்பல் திருகோணமலை யில் இருந்து ஊர்காவற்றுறைக்குப் போக்குவரத்துச் செய்தது. அதில் வந்திறங்கிய உணவுப் பொருட்கள், தீவுப்பகுதி மக்களின் பசியைத் தாக்காட்டிற்று.
ஆனால், அடைபட்ட நிலையில் சந்தோஷம் என்பது எவருக் கும் அந்நியமான ஒன்றாகவே இருந்தது.
சாதாரண மக்களுக்கு, ‘மேலதிக’ சந்தோஷத்தை வழங்கிய கள்ளுக் கொட்டில்கள் எல்லாம் காற்றால் அள்ளுபட்டுச் சிதைந்து போய்க் கிடந்தன. அவற்றுள் இரண்டொரு சொறி நாய்கள் முணு முணுத்தபடி கிடந்தன. அவைக்கும் அடைபட்டுக்கிடந்த மக்களுக் கும் அதிக வித்தியாசம் இருந்ததாகத் தெரியவில்லை.
பள்ளிக்கூடங்கள் எதுவும் இயங்காததால், தம்மோடு பிள்ளைக ளும் சோம்பிக்கிடப்பதைக் கண்டு பொறுக்கமுடியாத பெற்றோர்கள் பள்ளிக்கூடம் ஒன்றை ஆரம்பிக்குமாறு கேட்டுத் திரிந்தனர்.
அவன், அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தான்.
அதன் பயன் ஆறுமாத இடைவெளிக்குப் பின்னர், புங்குடுதீவு மகாவித்தியாலயம் இயங்கத்தொடங்கிற்று. ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சிலரும், ஏ.எல்.பாஸ் பண்ணிய இளைஞர்கள் இரண்டொருவரும் அங்கே படிப்பித்தனர். வேலணை, ஊர்காவற்றுறை, புங்குடுதீவு ஆகிய இடங்களில் எஞ்சிக்கிடந்த 140 சிறுவர்கள் அங்கே கல்வி பயின்றனர்.
புங்குடுதீவு மத்தியிலிருந்த மகாவித்தியாலயத்திற்கு, புங்குடு தீவின் நான்கு திசைகளின் தொலைவிடங்களிலிருந்தும் பிள்ளைகள் வந்திருந்தனர். பிள்ளைகளின் போக்குவரத்து, செத்துப்போய்க் களையிழந்து கிடந்த கிராமத்தை உயிர்பிப்பதுபோல் இருந்தது.
இவ்வாறு, அவ்வப்போது ஏதோ ஒரு நிகழ்ச்சி நடப்பது, விரக் தியிலும் வெறுமையிலும் உறைந்துபோகும் கிராமத்தை உயிர்ப்பிப் பதுபோல் இருக்கும்.
ஒரு நாள் ராணுவத் தளபதி டென்ஸில் கொப்பேகடுவ அராலிப் பகுதியில் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்காகி இறந்துபோன திடுக்கிடும் செய்தி தீவுப்பகுதி மக்களைத் திகிலடைய வைத்தது.
டென்ஸில் தனது சகாக்களோடு பயணம் செய்த வாகனம், புலிகளால் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிக்கு இலக்காகிச் சிதறியதாக ஒரு செய்தி. கொப்பேகடுவ ஸ்தலத்திலேயே மரணம்.
இச்செய்தி தீவுப்பகுதி மக்களை உறைநிலையிலிருந்து விடுவித்து நடுங்க வைத்தது. இதைச் சாட்டாகவைத்து ராணுவம் மக்கள்மேல் தாக்குதல் நடத்தலாம் என்று சிலர் கதை பரப்பினர். இக்கதைக ளுக்கு எந்தவித ஆதாரம் இல்லாவிட்டாலும் இலங்கை ராணுவம் பற்றிய நிச்சயமின்மை அவர்களை நடுங்கவைத்தது.
பின்னர், கொல்லப்பட்டது புலிகளால் அல்ல. பிரேமதாஸா வின் சதியே இதற்குப் பின்னணி எனச் சொல்லப்பட்டது.
பாடசாலைச் சிறு இடைவேளையின்போது, செல்லத்துரை ஆசிரியர், “டென்ஸில் கொப்பேகடுவய புலிகள் கொல்லேல்ல” என்று பெரிய குரலெடுத்துக் கூறினார்.
அங்கே ஸ்ராவ் றூமில் கூடியிருந்த ஆசிரியர்களில் ஒருவரான சிவசாமி, “அப்ப ஆரு கொப்பேகடுவய கொன்றதாம்?” என்றார்.
“இது பிரேமதாஸாவின் வேலை?” செல்லத்துரை தொடர்ந்தார்.
“பிரேமதாஸாவேன் அவனைக் கொல்லவேணும்?” இன்னொ ருவர் கேட்டார், தெரிந்தும் தெரியாதவர்போல்
“டென்ஸில், சிறிமாவோவின் சுதந்திரக் கட்சி ஆதரவாளன். அவன் ராணுவப் புரட்சிமூலம், தன் ஆட்சியைக் கவிழ்த்துவிடு வான் என்று பிரேமதாஸாவுக்கு எப்பவும் ஒரு பயம். அதனால், தன்ர ஆக்களைக்கொண்டு போட்டுத்தள்ளிப்போட்டு, புலிகளைச் சாட்டியிருக்கிறான்.”
“ஓ, அப்பிடியும் ஒரு கதை உலாவுதா?” என்றார் சுப்பிரமணியம்.
“எல்லாற்ற ஆசைகளுக்கும் போடுதடியாக புலிகள் இருப்பது தான் வேடிக்கை” என்று சிவசாமி கூறியபோது எல்லோர் முகத் திலும் ஒருவித புன்னகை மெல்லத் தவழ்ந்தது.
அதைத் தொடர்ந்து அனுமான் வால் மாதிரி வேறு கதைகள் நீண்டுகொண்டேபோயின. அப்படியே அந்த விவகாரம் அடங்கியது. மீண்டும் மக்கள் உறைநிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இன்னொருநாள் வந்த செய்தி, தீவுப்பகுதி மக்களை, புதுவித உணர்ச்சிக்குள் ஆழ்த்திச் சந்தோஷப்படுத்திற்று.
ஒருவித விடுதலை உணர்வால் தொங்கிப்போய்க் கிடந்த உள்ளங்கள் நிமிர்ந்தெழுவனவாய்த் தெரிந்தன.
அந்தச் செய்திதான் என்ன?
மூன்று கிழமைக்கொருக்கால் ஊர்காவற்றுறைக்கு வந்துபோன ‘தாரா’ என்ற சரக்குக் கப்பலில் தீவுப்பகுதி மக்களும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ‘தாரா’ கப்பலில் போனால், திருகோணமலைக்குப் போகலாம். அங்கிருந்து கொழும்புக்குப் போகலாம்; ஏன், வன்னி, யாழ்ப்பாணம் என்றுகூடப் போகலாம்!
அடைபட்டுக் கிடந்த மக்களுக்கு இந்தச் செய்தி ஒருவித விடுதலைப் பிரகடனமாகவே பட்டிருக்க வேண்டும்.
எல்லாரும் போவதற்கு முந்தியடித்துக் கொண்டு நின்றனர். ஆனால், எல்லாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை.
அவனும் ஒருமுறை அந்த தாரா கப்பலில் திருகோண மலையை நோக்கிப் பிரயாணம் செய்திருக்கிறான். இரண்டு இரவுகளும், மூன்று நாட்களுமாக நீண்ட அந்தப் பிரயாணம், அவன் வாழ்க்கையில் மறக்கமுடியாத தடத்தைப் பதித்திருந்தது.
இந்தியாவை நோக்கிப் பிரயாணம் செய்த வாஸ்கொ ட காமா, அமெரிக்காவைச் சென்றடைந்த கொலம்பஸ் ஆகியோர்கூட அத்தகைய அனுபவங்களைப் பெற்றிருப்பார்களோ தெரியாது! பேரலைகளால் குளிப்பாட்டப்பட்டும், மழையில் நனைந்தும், பொதிகள் நிறைக்கப்படும் கிடங்கில் கிடந்து ‘தாலாட்டப்பட வாந்தி எடுத்தும், மலசலம் கழிக்கக்கூட எழுந்து நடமாடமுடியாத நிலையில் திருகோணமலை சென்றடைந்தபோது, உயிர் அகன்று போன ஆவிகளாய்ச் சிலர் தோற்றந்தந்தனர்.
என்றாலும் வெளியுலக விடுதலை என்பது இனிக்கத்தான் செய்தது. அதுதான் ஆவிகளாய்த் தோற்றந்தந்தவர்களுக்கு நிலத்தில் கால்பதித்து நடக்கவைத்த உயிர் ஊட்டியாய் அமைந்தது.
காலம் செல்லச்செல்ல, அடைப்பட்டுக் கிடந்த மக்களின் நிலைமை சீர் அடைந்துவந்தது. ‘தாரா’ என்ற சரக்குக் கப்பலில் ஆடுமாடுகள்போல் ஏற்றி இறக்கப்பட்ட மக்களுக்குச் சந்தோஷம் ஊட்டுவதுபோல் நவீன வசதிகள் கொண்ட, மக்கள் பயணத்துக் கென நிர்மாணிக்கப்பட்ட கப்பல்கள், தீவுப்பகுதி மக்களின் போக்குவரத்துக்கு வந்துசேர்ந்தன. இப்போ மக்கள், அடிக்கடி வெளியே போய்வந்தனர்.
இப்போ அங்கே இருந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ப வர்களின் நிலைமைகளிலும் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. இயக்க வேலைகள் என்று எதுவுமில்லாததால், ‘சென்றி’களில் காவலில் ஈடுபட்டிருந்தவர்கள். அங்கொன்றாய் இங்கொன்றாய் எஞ்சிக்கிடந்த வீடுகளில் இருந்தவர்களோடு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அரட்டை அடிக்கத் தொடங்கினர். அடிக்கடி அவ்வீடு களுக்குச் சென்றுவந்தனர். அனேகமாக, இளம் பெண்கள் இருந்த வீடுகளுக்கு அழையா விருந்தாளிகளாகச் சென்றுவந்தனர்.
சிலரின் இத்தொடர்புகள் கலியாணத்திலும் முடிந்தன. இவற்றின் மூலம் தாம் வீழ்ந்திருந்த வெறுமையில் இருந்து மீள்வதற்கான உபாயங்களை அவர்கள் பரீட்சித்தனர்போலும்.
பாடசாலைப் பிள்ளைகள் செல்லும்போதும் வரும்போதும், இவர்கள் சைக்கிள்களில் வந்து குறுக்கிட்டனர். அவர்களோடு இவர்கள் அனாவசிய பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்திக்கொள்ள முயறன்றனர்.
இப்படியான சந்தர்ப்பத்தில்தான் ஒருநாள் மிகுந்த அதிர்ச்சிக் கும் துன்பத்திற்கும் காரணமான ஒரு நிகழ்வு நடந்தேறியது.
அந்த நிகழ்ச்சி ஏன் நடந்தது என்ற கேள்வியில் அவன் இறங்கிய போது, அது பெரும் சுயவிசாரணையாவே முடிந்தது. ஏன் அந்த துர்ச்சம்பவம் நிகழ்ந்தது? அதுவும் பலர் முன்னிலையில். எல்லோரும் பார்த்திருக்க, அவர்கள்மேல் அதற்குரிய கர்மத்தை தள்ளிவிடுவது போல் அல்லது அவர்களையும் அதில் தோய்ந்தெடுப்பதுபோல் ஏன் அது நிகழ்ந்தது?
எதன் சமிக்ஞை அது?
புங்குடுதீவுக்குள் ராணுவம் புகுந்த நாளிலிருந்து இதுகால வரை அவன் அனுஷ்டித்துவந்த தபஸ் வாழ்க்கையில், ஒரு கீறல் விழுந்தமாதிரி இருந்தது.
ஏன் இப்படி நிகழ்ந்தது?
அவன், ஏதாவது தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டானா? எதற்காவது ஆசைப்பட்டானா? அந்த ஆசையின் நிமித்தம், சுமுக மான தெய்வீக நிகழ்வோட்டத்தில், பாறைபோல் குறுக்கே நின்றானா? பாறைபோல் என்று பெரிதுபடுத்தாது, சிறு பருக்கையளவாவது குறுக்கிட்டானா?
இல்லை, அவன் அறிந்தளவு அப்படி ஒன்றுமில்லை.
அப்போ ஏன் அந்தக் கொலை நிகழ்ந்தது? ஒருவேளை அந்தக் கொலையுண்டவன் புரிந்த பலாத்காரத்தை இவன்தான் முதலில் முறைப்பாடு செய்தான் என்ற ரீதியில்…?
ஆனால், அது பிழையாகாது. பொதுமக்கள் இவ்வாறான நடத்தைகளினால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், அது முறைப்பாடு கொடுக்கப்பட வேண்டியதே.
மேலும், அவன் நேரடியாகத் தலையிடுவதற்குக் காரணம், கொலையுண்டவனால் பாதிக்கப்பட்டவர்கள் அவன் நண்பன் துரையின் உறவினர்களாக இருந்ததே. அதனால், இவனுக்கு மதிப்பளிப்பதுபோல் அவர்கள் இந்தத் தண்டனையை நிறைவேற் றினரா? திடீரென இன்னோர் நினைவு வந்தது. தான் தூய வாழ்க்கையை மேற்கொண்டிருந்தாலும், அவனுடைய நண்பன் யாழ்ப்பாணத்தில் என்ன கோலத்தில் இருக்கிறானோ? அவன் நடத்தையை நம்பமுடியாது. அவன் உணர்ச்சி மேலீட்டில் கீழ் நிலைகளுக்கு வீழ்ந்துவிடவும் கூடியவன்.
இவனிடம் எதுவும் சொல்லாது தன் சுயகாரியத்துக்காக யாழ்ப்பாணம் ஓடிப்போய் மாட்டிக்கொண்டதுமாதிரி. அவனைத் தண்டிப்பதற்காகத்தான், சுவாமி அவனது உறவினர்களைத் தாக்கினாரா?
அப்போது, அவன் வீட்டுக்கு வெளியே வாகனச் சத்தம் கேட்டது. இவன் வாசலுக்கு வந்து பார்த்தான். அங்கே ட்றாக்ரரில் தீவுக்குப் பொறுப்பான இயக்கத்தைச் சேர்ந்தவன் இருந்து கொண்டிருந்தான்.
“மாஸ்ரர், நீங்கள் கூறிய அசம்பாவிதக்காரனைப் பிடித்து விட்டோம். அந்தா ட்றாக்ரரில் அவனைக் கட்டிப்போட்டுக் கொண்டு வந்திருக்கிறோம்.” பொறுப்பாய் இருந்தவன் வந்து கூறிவிட்டு, “நாங்கள் அவனைப் பகிரங்கமாக, பாடசாலைக்கு முன்னால் வைத்துச் சுடப்போகிறோம். இது மற்றவர்களுக்கும் ஒரு பாடமாய் இருக்கும்” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள், இவன் குறுக்கிட்டான்.
“தம்பி அந்தமாதிரி எதையும் செய்து விடாதீர்கள். திருந்தி வாழ அவனுக்குச் சந்தர்ப்பம் கொடுங்கள். அவனை எச்சரித்து இங்கிருந்து வேறிடத்துக்கு மாற்றிவிடுங்கள். அவன் திருந்திவிடுவான். அதுதான், நீங்கள் எங்களுக்குச் செய்யும் பெரும் உதவியாய் இருக்கும்” என்று கூறிமுடிப்பதற்குள், பொறுப்பாளன் தலையைக் குனிந்து லேசாகச் சிரித்தவாறு போய், ட்றாக்ரரில் ஏறிக்கொண்டான். அது, இரைச்சலுடன் பாடசாலைப் பக்கமாகவே சென்றது.
10
அவன் நினைவு மீண்டும் நிகழ்வில் மிதக்கிறது.
மாலை வெயிலில் கடலை ஊடுருவியவாறு கப்பல் வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.
தூரத்தெரியும் கடலின் எல்லைகளில் நிழலாடும் வெளிச்சப் பொட்டுகள். அண்ணாந்து பார்த்தால், வானமெங்கும் கடல் நீலம் செறிந்திருந்தது.
அவன் மனம் ஆனந்தித்ததா? துக்கித்ததா?
இரண்டுக்கும் இடைப்பட்ட ஊமை உணர்வு.
ஏறக்குறைய நான்கு வருடங்கள்வரை புங்குடுதீவில் அடைபட் டுக்கிடந்த அவன், அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்ற நிலையை அடைந்திருந்தான். அவன் அங்கிருந்து இனிமேலும் வெளியேறாது போனால், அவன் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும். அவன் வெளியேறிவிட வேண்டுமென்ற தீர்மானத்திற்கு வந்த காலத்தில், கப்பல் போக்குவரத்து மிக ஒழுங்காக நடந்து கொண்டிருந்தது. அத்தோடு, நவீன பயணக் கப்பல்களும் புழக்கத் திற்கு விடப்பட்டிருந்தன.
ஒருநாள் அவன் நினைத்தபடி தன் குடும்பத்தோடு புங்குடு தீவை விட்டுப் பயணமாகிறான்.
அலையெறியும் கடல் தாலாட்டில் அவர்கள் பயணம். நெஞ்சிலோ ஆர்ப்பரித்தெழும் ஆயிரம் அலைகள்.
அலைதலையே வாழ்க்கையாகக்கொண்டிருந்த அவனுக்கு, கட்டாய அறுதல் கொடுத்ததுபோல் நான்கு வருடங்கள் அடைபட்ட சிறை. ஆயினும், அங்கும் அவன் சும்மா இருக்கவில்லை. சமூகப் பணி தொடர்ந்தது. அங்கிருந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குபவ னாக, உத்தியோகப்பற்றற்ற இறப்பு, பிறப்புப் பதிவாளனாக, கிராம சேவையாளனாக, ஆசிரியனாக, ஏன், சிலவேளைகளில் “அப்பு, ராசா, இந்த ஊசியை போட்டுவிடப்பு” என்று இரந்துவரும் வயோதிபங்களுக்கு ‘ஆபத்தான’ வைத்தியனாகவும் இயங்கியிருக் கிறான்.
அவனுக்குச் சிரிக்க வேண்டும்போலிருந்தது.
அங்கு அடைபட்டுக்கிடந்த ஐநூறுக்கும் மேற்பட்ட அப்பாவிச் சனங்களின் கூட்டுப்படிமம் அவன்முன் நிழலாடிற்று. ஏதோ ஒருவகைத் துக்கம் மேலாடி வந்தது. அவர்கள்பற்றி, அங்கு நிகழ்ந் தவைபற்றி, அவன் எடுத்த குறிப்புக்கள் அவனுக்கு நினைவில் வந்தன. அக்காலங்களில் நிறையவே எழுதினான். நிறையவே வாசித்தான். வாசிப்பதற்குப் பத்திரிகைகள் கிடைக்காத குறையைத் தவிர, நூல்கள் நிறையவே இருந்தன, அவனிடம்.
திடீரென, அவன் நெஞ்சைத் துக்கம் நிறைத்தது.
ஒரு சிறிய நகரத்துக்குரிய நூல்நிலையத்தையே உருவாக்க உதவக்கூடிய புத்தகங்களை விட்டுச் செல்கிறோம் என்ற துக்கம் அவன் நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. அவனும், அவன் அண்ணனும் சேகரித்திருந்த புத்தகங்கள்!
மாலை வெயில் மங்கிக்கொண்டு வந்தது.
திருகோணமலையை நோக்கி அலைகளைக் கிழித்தபடி முன் னேறிக் கொண்டிருந்தது கப்பல். கப்பலின் பின்பகுதியில் கூடுபோல் கட்டப்பட்டிருந்த அடைப்புக்குள் நின்றவாறு எல்லையற்று விரியும் வானத்தையும் கடலையும் பார்த்துக்கொண்டு நின்றான். எல்லை யற்று விரியும் வானமும் கடலும் எங்கோ தொலைவில் நிகழ்த்தும் போலிச் சங்கமிப்பின் அழகு, அவனை வியப்புற வைத்தது.
கலை என்பது இதுதானே?
சங்கமிக்காததைச் சங்கமிப்பதாகச் செய்த கலைஞன் யார்?
அந்த அற்புதத்தின் உள்ளே போகப்போக, அது திடீரென உனக்குள்ளேயே திரும்பி, உனக்குள்ளேயே கவிழ்ந்தது. அந்த முடிவின்மை உன்னிலேயே முடிவதாகத் தொடர்ந்தபோது அவன் அதிர்ந்திருக்கிறான்.
பிரபஞ்ச இருப்பின் அற்புதம், அவன் கடைவிழிகளில் கசிவை ஏற்படுத்திற்று. எல்லாவற்றின் பின்னாலும் ஓர் இனந்தெரியாத துயர் கசிந்துகொண்டுவந்தது.
அவன் நினைவில் திடீரென அந்தச் சம்பவம் மீண்டும் முகத்தில் அறைவதுபோல் முன்னெழுந்தது. அந்தத் துயர நிகழ்ச்சி..
பாடசாலை விட்டு, பகல் இரண்டு மணிபோல் பிள்ளைகள் வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தனர். இவர்களில் இருந்து பிரிந்து அக்காவும் தம்பியுமான இருவர் வெகுதூரத்திலுள்ள அவர்கள் வீட்டை நோக்கி விரைந்துகொண்டிருந்தார்கள். இடையில் ஓர் வல்லைவெளி போன்ற வயல்வெளியை அவர்கள் கடக்க வேண்டும். அந்த வெளியில், வெயிலில் வெடித்து, வெயிலின் கானலை நெளியவிட்டவாறு, வாய்பிளந்து ராட்சசிபோல் கிடந்தது, பெரிய கிராய் என்னும் குளம். அவர்கள் அதையும் கடந்து ஊர்மனையை எட்டிக்கொண்டிருந்தனர். ஒரு காக்கை குருவியும் பறக்கத் தயங்கும் அந்த நேரத்தில் எங்கோ ஒளிந்திருந்த, இயக்கத்தைச் சேர்ந்த, ஒருவன் அவர்கள் முன்னே நிற்கிறான்.
அவர்கள், அவனைக் கடந்து ஓட முற்படுவதற்குள், அந்தச் சிறுமியை அருகேயிருந்து யாருமற்ற வீட்டுக்குப் பலவந்தமாக இழுத்துக்கொண்டுபோக அவன் எத்தனிக்கிறான். அவர்கள் மூவருக்குமிடையில் இழுபறியும் கூக்குரலும் எழுகின்றன. முன் னைய கிராமமாய் இருந்திருந்தால் இந்தக் கூக்குரலால் முழுக் கிராமமே திரண்டிருக்கும். அவன் இழுத்துக்கொண்டு போவதில் தோல்வியுறவே, அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறான். ஆயினும், இவர்களின் இந்தச் சந்தடியால் உலுக்கப்பட்டு, அங்கே இரண்டொரு தலைக்கறுப்பு தெரிகிறது.
இதைக் கண்டதும் அவன், அவளை விட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் எடுக்கிறான்.
இச்செய்தி காட்டுத்தீ போல் பரவுகிறது.
அந்தப் பிள்ளையின் தாயும் பாட்டியும் இன்னும் சிலரும் கூக்குரல் இட்டவர்களாய் இவனிடம் ஓடி வர, இவன் அவர்களை அருகிருந்த இயக்க முகாமுக்கு இட்டுச்சென்று நடந்தவற்றை முறையிட வைக்கிறான்.
நடவடிக்கை துரிதகதியில் இடம்பெறுகிறது.
பாடசாலைச் சிறுமியோடு சேட்டையில் ஈடுபட்டவன் கைதுசெய்யப்பட்டு, கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில், ஒரு ட்றாக்ரரின் பின்பெட்டியில் தூக்கிப்போடப்பட்டுக் கொண்டு வரப்படுகிறான்.
தீவின் நான்கு திசையிலுமுள்ள பிரஜைகள் குழுவைச் சேர்ந்த வர்களும் பொதுமக்களும் மகாவித்தியாலயத்திற்கு வருமாறு அழைக்கப்படுகின்றனர். போதுமான அளவு சனம் கூடியதும் அங்கே ஒரு கூட்டம் நடைபெறுகிறது. இவ்வாறான அசம்பாவிதங் கள் இனிமேலும் இங்கே இடம்பெறாமாட்டாதென்பதை உறுதிப் படுத்துவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டம் அது.
இவ்வாறு கூட்டம் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் குற்றச் செயலில் ஈடுபட்டவன் மகாவித்தியாலயத்திற்கு முன்னாலுள்ள வேப்பமரத்தின் கீழ் ட்றாக்ரரில் கொண்டுவரப்பட்டு இறக்கப் படுகிறான்.
மகாவித்தியாலயக் கூட்டத்தில் ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார்.
இனிமேலும் இத்தகைய அசம்பாவிதங்கள் இடம்பெறாதென உறுதிமொழிகள் கூட்டத்தில் வழங்கப்படுகின்றன.
டிறாக்ரரில் இருந்து இறக்கப்பட்டவனின் கண்கள் கட்டப்படுகின்றன.
கூட்டம் முடிந்து மக்கள் வெளியே வந்துகொண்டிருக்கின்றனர்.
அவ்வேளை, ‘சடசட’வென துப்பாக்கிச் சன்னங்கள் வெடித்துப் பாய்கின்றன.
‘குற்றவாளி’ இரத்தம் கொப்பளிக்க நிலத்தில் பிணமாகிச் சரிகிறான்.
கூட்டம் முடிந்து வெளியே வந்துகொண்டிருந்த அனைவரின் நெஞ்சையும் அது உறையவைக்கிறது.
அவனுக்கு இத்தனை கொடிய தண்டனையா? யார் இதைச் செய்யும்படி கேட்டது? அந்தச் சிறுமியின் பெற்றோரும் அவனும் குறிக்கப்பட்ட அந்த நபரை எச்சரித்துவிடும்படியே கேட்டுக்கொண்டனர்.
அப்படியிருந்தும்அவனுக்கேன் அத்தகைய கொடும் தண்டனை?
ஊர் மக்கள் தமக்கெதிராகத் திரும்பாமல் இருப்பதற்கான ஒரு வன்முறை எதிர்வினை அது?
இந்த எதிர்வினை மூலம் சுவாமி எனக்கு விடுக்கும் சமிக்ஞை என்ன? அவனைக் குடைந்த கேள்வி அது. அவனுக்குப் பழைய நினைவு ஓடிவந்தது. அவன் ‘பொலிநீயூறைற்றிஸ்’ நோயினால் பீடிக்கப்பட்டு, கால், கை வழங்காத நிலையில் யாழ். வைத்திய சாலையில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறான்.
அப்போது, யாழ்நகரை ஆக்கிரமிக்கும் நோக்கில் புலிகளோடு பொருதியவாறு இந்திய ராணுவம் வந்துகொண்டிருக்கிறது.
ராணுவம் வைத்தியசாலைக்குள்ளும் நுழையுமா? அவன் தனக்குள் கேட்டுக்கொண்டான். இது சிங்கள ராணுவமல்ல வைத்தியசாலை களுக்குள்ளும் நுழைந்து தமிழ்மக்களைக் கொல்லுவதற்கு. இது, இந்திய ராணுவம், இது அமைதி காக்க வந்த படை, அப்படிச் செய்யாது. அனேகர் அப்படித்தான் கூறினர்.
ஆனால், அவனுக்கு அப்படிப் படவில்லை.
அவனுக்குள், “இங்கிருந்து போய்விடு” என்று அவன் குரு குரல்கொடுப்பதுபோல்பட்டது.
அவன் தன் வார்ட்டுக்குப் பொறுப்பான டொக்டரிடம் தன்னை டிஸ்சார்ஜ் பண்ணிவிடுமாறு கேட்டான்.
டொக்டருக்குச் சிரிப்பாய் இருந்தது.
“உனக்கு எழுந்தே நிற்க முடியவில்லை. எப்படிப் போவாய்? நான் வெளியே போகவிடமாட்டேன்” என்றார்.
“ராணுவம் இன்று இரவு வைத்தியசாலைக்குள்ளும் வந்து வெறியாடலாம்.”
“அப்படி நடக்காது, அவர்கள் இங்கே வரமாட்டார்கள்.” டொக்டர் உறுதியளித்தார்.
ஆனால், அவன் கேட்கவில்லை. டொக்டரின் ஆத்திரத்தைச் சம்பாதித்தவாறே அங்கிருந்து வெளியேறினான்.
அவன் வெளியேறிய அன்றிரவு, ராணுவம் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தது. நோயாளிகள், தாதிமார், வைத்தியர்கள் என்று பாராமல் சுட்டுத்தள்ளியது.
அவன் தனக்குள் எழுந்த குருவின் குரைலைக் கேட்காது அங்கிருந்திருந்தால், அவனும்,அவனுக்குத் துணையாக நின்ற அவன் மனைவியும், அவனது நண்பன் துரையனும் பலியாகியிருப் பார்கள். அன்று காலை அவர்கள் பயந்து பயந்து வாகனம் ஒன்றில் பயணித்தபோது, இரவு சிறுசிறு காயங்களோடு இந்திய ராணுவத்திடமிருந்து தப்பியிருந்தவர்களும் அதில் ஏறியிருந்தனர்.
இப்போ, மீண்டும் இத்துயர் நிகழ்வுமூலம் சுவாமி எனக்கு அனுப்பும் செய்தி என்ன?
இங்கிருந்து உன் குடும்பத்தோடு வெளியேறிவிடு என்பது போலவேபட்டது.
அவனுக்கு, மீண்டும் அவனது நண்பன் யாழ்ப்பாணத்தில் ஏதாவது தவறு புரிந்திருக்கலாம் என்ற உணர்வே தலைகாட்டிக் கொண்டிருந்தது.
சரி, அவன் அங்கு புரிந்த தவறு, இங்கு எம்மையும் ஆச்சிரமத் தையும் அகற்றுவதற்கொரு சமிக்ஞை தரும் நல்ல நிகழ்வாய் மாறுவதாயின்…
தீமை எது? நன்மை எது? அப்படி ஓர் இருமை இருக்கிறதா? இல்லை, இருப்பது ஒன்றுதான். அந்த ஒன்றே இப்படி இரண்டாகி மாயம் புரிகிறதுபோலும்? அவன் தனக்குள் பெரிதாகச் சிரித்தான்.
11
விரிந்துகொண்டு செல்லும் கடல்வெளியை அவன் பார்த்த வாறு நின்றிருந்தான்.
வானம் கவிந்து கடலுக்குக் காப்புத்தருவது போன்ற ஒரு படிமம் அவன்முன் எழுகிறது.
ஒன்றுக்கொன்று காவல், ஒன்றுக்கொன்று பகைமை. பகைமை யாகத் தெரிவது, காவலாக மாறும். காப்பதாகத் தெரிவது, திடீ ரெனக் கூற்றுவனாக மாறும். ஒவ்வொன்றும் தாம் வரிக்கும் சார்பின் ஈர்ப்பில் போடும் மாயத்தோற்றங்கள்.
சார்பிலிருந்து விடுபடும்வரை எந்த நீதியான தீர்ப்பும், எங்கோ வோர் மூலையில், அதிலுள்ள அநீதியைக் கிணுகிணுத்துக்கொண்டே யிருக்கும்.
அவன் கண்முன்னே சுடப்பட்டிறந்த அந்தக் ‘குற்றவாளி’யின் முகம் வந்து, வந்து மறைந்தது.
அவனுக்கு அந்தத் தண்டனை சரியா?
தெய்வாதீனமாக அந்தச் சிறுமி தப்பினாள்.
அவள், அவன் கையில் சிக்கிச் சிதறடிக்கப்பட்டிருந்தால்…?
ஆனால் –
அவள், அவன் கையில் சிக்கிச் சிதறடிக்கப்படவில்லை!
அதுதான் மையப்புள்ளி – அங்குதான் நம் கண்ணுக்குத் தெரியாத ஒன்று நின்றாடும் மையப்புள்ளி.
அந்த மையப்புள்ளியின் ஓரங்களில் பல முகங்கள் அவனுக்குத் தெரிந்தன.
புங்குடுதீவிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்துபோன பின்பு, எஞ்சியிருந்த ஜனங்களுக்குள் இடம்பெற்ற வன்முறைகள், களவுகள், வன்புணர்வுகள், வன்புணர்வு எத்தனிப்புகள், கொலைகள் – இவற்றின் காரணகர்த்தாக்களின் முகங்கள் அவன்முன் வந்து வந்து போயின.
தன் மனைவியையே அடித்துக் கொலை செய்து வளையில் தூக்கிலிட்டுவிட்டு, அவளே தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியவன்.
தனித்து வாழ்ந்த அப்பாவி மனிதன் ஒருவனைக் கொலை செய்துவிட்டு, அவனுடைய கையிருப்புத் தேடியவர்கள் –
பாலியல் வண்புணர்வில் ஈடுபட்டவர்கள், எத்தனித்தவர்கள்.
சுடப்பட்டு இறந்தவனைவிட எத்தனையோ மடங்கு அறிவும் ஆற்றலும் அறமும் உடையவராகக் காட்டிக்கொண்ட, அவனோடு பழகிய ஒருவர், அந்த அப்பாவியைவிடக் கீழ்நிலைக்கு இறங்கி அவன்முன் புழுவாக நெளிந்த காட்சி அவனை என்றுமே வெட்கிக்க வைத்துக்கொண்டிருந்தது….
அங்கு முகாம் போட்டிருந்த ராணுவத்தின் இயக்கம்போலவே, இவர்களின் இயக்கமும் காமம் மூடிய போர்வைகளாகவே இருந்தன.
அந்த அப்பாவிக் குற்றவாளியைத் துளைத்த சன்னங்கள் அவன் நெஞ்சைத் துளைத்தன.
அவன் உடல் கூனிக்குறுகியது.
அந்த மையப்புள்ளியை விட்டு, இவர்கள் எந்தச் சார்பு ஈர்ப்புச் சுழலால் அள்ளுப்பட்டனர்?
வேம்பின் கீழ் இரத்தம் கொப்பளிக்க வீழ்ந்துகிடந்த அந்த அற்ப மனிதனின் நினைவு அவனுக்குள் எழுந்தது.
அப்படியானால், அந்தக் கிராமத்தில் எத்தனை பேரை சன்னம் துளைத்திருக்க வேண்டும்.
அவன் கடைவிழிகளில் இருந்து தெறித்த நீர், கடலையும் உப்பாக்கியிருக்கலாம்.
திடீரென, அவன்முன்னே சுடப்பட்டிறந்தவன் கேள்வி கேட்பவன்போல் எழுந்தான்.
அப்படியானால், நீ எவ்வளவு உயர்த்தி?
அவன் மனம் அலைபாய்ந்தது.
நீ எவ்வளவு துப்புரவானவன்?
எனக்குத் தண்டனை வழங்கியவர்கள் எவ்வளவு துப்புரவானவர்கள்?
எத்தனை விரச உணர்வுகள், ஆபாசங்கள், வன்முறை மன விகாரங்கள்…அவன் மனமும் ஏறி, ஏறி விழுந்தேதான் வந்தது. ஆயினும், அந்தச் சார்பில் சுழலும் ஈர்ப்பில் அவன் உடல் விழவில்லை. அந்த ஈர்ப்பினால், அவன் பந்தாடப்படவில்லை. அவன் மனம் நேரியதாகவே நின்றது. அந்தப் பலத்தைத் தந்த பேராற்றலை அவன் கரங்கள் கூப்பி வணங்கின.
மீண்டும் அந்த மையப்புள்ளி
வானக்கவிப்பென…
அவன் கடைவிழிகளில் நீர் கசிய, நெஞ்சு கரங்குவிக்கிறது. என்றாலும், அந்த அற்ப மனிதனின் நெஞ்சில் பாய்ந்த சன்னங்கள் எல்லோர் நெஞ்சிலும் பாயவேண்டும்போல் குறுகியது.
அவன் கண்ணெதிரே இருந்தாற்போல் ஒரு காட்சி.
பிட்டுக்கு மண் சுமந்தவனாய் சுடப்பட்டிறந்தவன் நின்றான்.
நீரைக் கிழித்தபடி ஒரு பெரும் சுறா, ஜெற் விமானம்போல், பின்சிறகு நீர்மேலெழுந்து தெரிய, சிறு மீன்களைத் துரத்தியபடி வருகிறது.
அதற்கஞ்சி, சிறு மீன்கள் நீரைவிட்டெழுந்து பாய்ந்து பாய்ந்து அந்தரித்து வீழ்கின்றன. வெள்ளிப் பாளங்களாய் மாலை வெயிலில் அவற்றின் பளீரிடல். நீர்ப்பரப்பு, சிறிது நேரம் வன்முறைப் போர்க் களமாய் மாறுகிறது. சிறிது நேரந்தான்! பிறகு, எல்லாம் முடிவுக்கு வந்த அமைதியின் தாலாட்டு. அலைகள் எழுந்தெழுந்து, மெல்ல மெல்ல அடங்குகின்றன.
அப்போது, அங்கே தாலாட்டிய அலைகளிடையே மூன்று, நான்கு மீன்கள் குற்றுயிராய் துடித்தபடி துடித்தபடி… அவைகளில் ஒன்று சுடப்பட்டு இரத்தம் கொப்பளிக்க, வேம்பின் கீழ் கிடந்த அந்த அற்ப உயிராய் அவன் முன் துடித்துத் துடித்து…
– 2000
– முடிந்து போன தசையாடல் பற்றிய கதை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, தமிழியல், லண்டன்.
![]() |
மு.பொன்னம்பலம் (1939, புங்குடுதீவு, யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் இவர் பங்களித்திருத்து வருகிறார். 1950களில் கவிதை எழுதத் தொடங்கிய பொன்னம்பலத்தின் முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. மு. பொன்னம்பலம் எழுதிய "திறனாய்வின் புதிய திசைகள்" என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011ஆம்…மேலும் படிக்க... |