கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 4, 2025
பார்வையிட்டோர்: 118 
 
 

10 வருடம் கழித்து சுதந்திரக் காற்றை சுவாசித்தான் கலை,இவ்வளவு நாள் வெளியுலகத்தையே பார்க்காத அவன்,இப்போது வெளியே வந்ததும் புதிய உலகத்தை பார்ப்பது போன்று பார்த்துக்கொண்டிருந்தான்

சிறையிலிருந்து வெளியே வந்தவன் நேராக பஸ் ஸ்டாண்டிற்கு சென்று ஒரு டவுன் பஸ்ஸை பிடித்து அவன் சொந்த ஊருக்கு போய்க் கொண்டிருந்தான்,தான் சிறையில் வேலை பார்த்ததற்கான கூலியை வைத்து டிக்கெட் எடுத்தான்

இந்த 10 வருட காலத்தில் எவ்வளவு எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்று அங்கு எழுந்த புதிய கம்பெனி மற்றும் ஃபாக்டரிகள் மூலம் அறிந்துக் கொண்டான்.வெளியே பார்த்துக் கொண்டே பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்தான்

கலை நன்றாக அழகாக இருப்பான், எப்போதும் வாலிப வயதுக்கென்று இருக்கும் ஒரு துள்ளலுடன் தான் சுற்றித் திரிவான் அவன் வேலைக்கு எங்கும் போக மாட்டான் ஆனால் குடிப்பதற்கு மட்டும் அவனுக்கு எப்படியோ காசு சேர்ந்து விடும்.அவனது அழகில் மயங்கியவள் தான் கவிதா.ஒரு கட்டத்தில் அவளின் அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிய வந்து அவளின் அப்பாவிற்கும் கலைக்கும் சண்டை வந்து பெரிய கலேபரமாகிவிட்டது அவரின் கேள்வி “வேலை வெட்டிக்கு போகாத இந்த பயலை நம்பி உன்னால் எப்படி வாழ முடியும்” என்பதே அவரின் கேள்வி ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் கவிதா “உங்க உறவும் வேண்டாம் மண்ணும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டு கலையுடன் சென்றுவிட்டாள்.

கவிதா தன் கூட வந்ததும் “இனி வேலைக்கு போகலைன்னா சரி வராது” என்று எண்ணி கிடைக்கின்ற சின்ன சின்ன வேலைகளை செய்துக்கொண்டு வந்தான்.அப்படியே மூன்று மாசம் வரை சென்றது வருமானமும் அவ்வளவாக வரவில்லை என்ன செய்வதென்று முழித்துக் கொண்டிருக்கும்போது தான் அவனது நண்பன் சுந்தர் ஒரு யோசனையை கூறினான்

“இப்போ என்ன உனக்கு ஒரு நல்ல வேலை வேணும் அவ்வளவுதானே!”

“ஆமா”

“என்கிட்டே ஒரு வேலை இருக்கு ஆனா ரிஸ்க்கான வேலை ஆனா கை நிறைய காசு கிடைக்கும்”

“ஹே எனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சா போதும் அந்த ரிஸ்க்கெல்லாம் நான் பாத்துக்குறேன்”

“நம்ம மினிஸ்டர் வேலப்பனுக்கு ஃபேவராக ஒரு வேலை செய்யனும் அதை செஞ்சாலே போதும் நீயும் உன்னோட வைஃபும் செட்டில்”

“சரி என்ன வேலை”

“ஒன்னும் இல்ல நம்ம மினிஸ்டர் வேலப்பனோட மகன் ஒரு பிசினஸ் பண்ணிக்கிட்டு இருக்கான் அவனுக்கு போட்டியாக நாராயணன்னு ஒரு பிசினஸ்மேன் அந்த பிசினஸ்க்குள்ள வந்தான் அவனால் வேலப்பன் மகனுக்கு லாஸ்ஸாகி பெரிய நஷ்டமாய்ட்டு இதனால் மகனுக்காக அந்த நாராயணன் கிட்ட மினிஸ்டரே போய் “நீ இந்த பிசினஸ்ஸை விட்டு போய்டுன்னு சொல்லிப் பார்த்தார் மிரட்டிப் பார்த்தார் ஆனால் அவன் கேக்கலை அதான் இனிமே மிரட்டுனா சரிவராது மிரட்டுனதை செஞ்சுற வேண்டியது தான்னு முடிவு பண்ணிட்டார்”

“என்ன முடிவு?”

“அவனோட வீக் பாய்ண்ட்டே அவனோட ஃபேமிலி தான் குறிப்பாக அவனோட மகளென்றால் அவனுக்கு உசுரு,இப்போ உனக்கு என்ன வேலைன்னா அவனோட 8 வயது மகளை கடத்துறது தான் உன்னோட வேலையே”

என்றதும் கலைக்கு தூக்கிவாரிப் போட்டது

“கடத்துறதா?அதுவும் குழந்தையவா?

“ஆமா அதுக்குன்னு நீ பயப்படாத அந்த குழந்தையை ஒன்னும் செய்ய மாட்டோம் சும்மா அவனை மிரட்டிட்டு மறுபடியும் அவன் வீட்லயே விட்ருவோம்”

“ஹே ஆனா கடத்துறதுங்குறது”

என்று இழுத்தான்.அதற்கு அவன் நண்பன் சுந்தர்

“இந்த பாரு பயந்துட்டே இருந்தா வேலைக்கு ஆகாது உன் லைஃப் செட்டில் ஆகுறதுக்கு இதை விட ஒரு நல்ல ஆப்ஷன் உனக்கு கிடைக்காது நல்லா யோசி!”

என்று அவனது மண்டையை கழுவினான்,கலையும் ஒரு நீண்ட யோசனைக்குப் பிறகு இந்த கடத்தலுக்கு சம்மதித்தான்,பிறகு சுந்தர் கூறினான்

“அப்போ நீ காலையில் ஒரு ஒன்பது மணிக்கு நம்ம வா.வி நகரத்துக்கு வந்துரு,நான் உன்னைய அவர் கிட்ட கூட்டிக்கிட்டு போறேன்”

என்று கூறிவிட்டு சென்றான்.

காலை ஒன்பது மணி மிதமான போக்குவரத்து இருந்த அந்த சாலையில் கலை சுந்தருக்காக காத்துக்கொண்டிருந்தான்.அப்போது அங்கு வந்த கார் இவன் அருகில் வந்து நின்றது உள்ளே சுந்தர் இருந்தான் கலையைப் பார்த்து “வண்டியில் ஏறு” என்றான் அவனும் காரில் ஏறினான் கார் அந்த இடத்தை விட்டு பறந்தது.

அது வீடென்றெ சொல்ல முடியாது ஒரு மினி பங்களா போன்று இருந்தது அந்த வீட்டின் ஹாலின் மையத்தில் மரநாற்காலியில் வெள்ளை வேட்டி சட்டையுடன் உட்கார்ந்திருந்தார் மினிஸ்டர் வேலப்பன் அவருக்கெதிரில் கலையும் சுந்தரும் நின்றுக்கொண்டு இருந்தனர்.அங்கு இருந்த நிசப்தத்தை கலைத்தார் வேலப்பன்

“என்ன சுந்தரு ஆளை நம்பலாமா?”

“தாராளமாக நம்பலாங்கய்யா”

“இந்த பாருப்பா நம்ம கிட்ட கடத்துறதுக்கெல்லாம் ஆளெல்லாம் இருக்கானுங்க நான் ஏன் உனக்கு இந்த வேலையை தரேன்னா நீ ரொம்ப கஷ்டத்துல இருக்கிறதாய் சுந்தர் சொன்னான் அதனால தான் உன்கிட்ட இந்த வேலையை தரேன்,கரெக்டா செஞ்சிறுவியா?

“கரெக்டா செஞ்சிருவேன் சார்!”

“ம்.உனக்கான அமௌண்ட் 5 லட்ச ரூபாய் அட்வான்ஸாக இரண்டரை லட்ச ரூபாய் வாங்கிக்கோ,பாலு அதை எடுத்துக்கொடு”

என்று அவனது வேலையாளை கூப்பிட அவன் ஒரு பெட்டியைக் கொண்டு வந்து கலையிடம் கொடுத்தான்,திறந்தால் அதில் இரண்டரை லட்ச ரூபாய் இருந்தது.அதனைப் பெற்றுக் கொண்டு அவனது வீட்டிற்கு சென்றான்

அவனது மனைவியிடம் அந்த பணத்தை கொடுத்தான்,அவனது மனைவி அந்த பணத்தைப் பார்த்து வாயடைத்துப் போனாள்

“ஏது இவ்வளவு பணம்?”

“செய்யப்போற வேலைக்கான கூலி”

“என்ன வேலை”

என்று கேட்டதற்கு எதை எதையோ கூறி சமாளித்தான்,அன்று இரவு அவனுக்கு ஒழுங்காக தூக்கம் வரவில்லை “நாம் செய்வது கரெக்டா தப்பா?” என்கிற குழப்பம் அவன் மனதுள் ஓடிக்கொண்டிருந்தது,பிறகு “செட்டிலாக வேண்டுமென்றால் இதையெல்லாம் செஞ்சித்தான் ஆகனும்” என்று தனக்குத் தானே கூறி சமாதானம் செய்துக்கொண்டான்

மறுநாள் பொழுது விடிந்தது கலை தனது வேலையை ஆரம்பித்தான்

அந்த பிசினஸ்மேன் மகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஆரம்பித்தான். அந்த சிறுமியின் பெயர்,அவளுக்கு என்ன பிடிக்கும்,என்ன பிடிக்காது எப்போதெல்லாம் அவளை வெளியே கூட்டிச் செல்வார்கள் என எல்லாவற்றையும் கவனமாக கண்காணித்தான்,மேலும் அந்த சிறுமியுடன் பழகும் சந்தர்ப்பத்தையும் எற்படுத்திக்கொண்டான்,அந்த சிறுமியும் இவனிடம் நன்றாக பழகினாள் எப்போதும் அச்சிறுமி “இவனை மாமா மாமா” என்று அவனை பாசமாக கூப்பிடுவாள்,அப்போதெல்லாம் இவனுக்கு “இந்த பிள்ளையவா நம்ம கடத்துறது” என்று தோன்றும் அடுத்த நொடியே “இந்த எண்ணம் தான் நம்ம பொழப்பைக் கெடுக்கும்” என்று கூறிவிட்டு அவனது வேலையில் கவனம் செலுத்துவான்,மேலும் அச்சிறுமியிடம் பழகுவதை அவளது பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டான்

இப்படியே மூன்று மாதம் சென்றது அவன் எதிர்ப்பார்த்த நாள் வந்தது.

வருகிற சனிக்கிழமை அவளும் அவளது பெற்றோர்களும் 5 நாள் ட்ரிப்பாக கொடைக்கானலுக்கு செல்வதாக அச்சிறுமி அவனிடம் கூறினாள்,அச்சிறுமி கூறும்போதே இவன் மனதுள் திட்டத்தை வகுத்தான்.

சனிக்கிழமை

அச்சிறுமி மிகவும் சந்தோஷமாக இருந்தாள்,அழகாக நீட்டாக டிரஸ் செய்துக்கொண்டு காரில் சந்தோஷமாக ஏறினாள் கூடவே அவளது அம்மாவும் ஏறினாள் ஏற்கெனவே டிரைவர் சீட்டில் அச்சிறுமியின் அப்பா (நாராயணன்)டிரைவர் சீட்டில் அமர்ந்திருக்க

போலாமா என்று தன் மகள் வர்ஷிகாவிடம் கேட்க போகலாம் என்று அவள் சந்தோஷமாக கூற கார் கிளம்பியது.


கொடைக்கானல்

குணா கேவை பார்ப்பதற்காக பலர் வந்திருந்தனர் அவர்களை அந்த இடத்திற்கு டூரிஸ்ட் கைடர்கள் பத்திரமாக கூட்டிச் சென்றனர்,இடையில் குரங்குகள் தனது குறும்புத்தனத்தை டூரிஸ்ட்களிடம் காட்டிக்கொண்டிருந்தது,அதனைக் கண்டு இரசித்துக்கொண்டிருந்தாள் வர்ஷிகா,பிறகு அங்குள்ள ஃபோட்டோ கிராஃபரிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் அப்போது அங்கு ஒரு வளர்த்தியான நபர் இவர்கள் அருகில் வந்தார் அது நாராயணணின் பால்ய காலத்து நண்பன் அவரிடம் நாராயணணும் அவரது மனைவியும் பேசிக்கொண்டிருந்ததால் வர்ஷிகா அவர்களை விட்டுத் தள்ளி வந்து குரங்கு செய்யும் சேட்டைகளை பார்க்க ஆரம்பித்தாள்.அப்போது

“வர்ஷி”

என்று ஒரு குரல் கேட்டது இவளும் குரல் வந்த திசையை நோக்கி திரும்பிப் பார்த்தாள் அங்கு இருந்தது வேறு யாருமில்லை கலை தான்.

கலையைப் பார்த்ததும் அவள் உற்சாகத்துடன்

“மாமா! நீங்களா நீங்க எப்படி இங்க?”

“நீ மட்டும் தான் டூர் போவியா நாங்களும் போவோம்ல”

“நீங்க யார் கூட வந்தீங்க?”

“யார் கூடயும் இல்ல நான் மட்டும் தான்”

“நீங்க மட்டுமா?

“எஸ்.சோலோ ட்ரிப்”

“ஓகே!ஓகே!சரி நீங்க எதில் வந்தீங்க”

“கார்லதான்,அதுமட்டுமில்ல உனக்கு கார்ல ஒரு சர்ப்ரைஸ் வெச்சிருக்கேன்”

“சர்ப்ரைஸ்ஸா?”

என்று வாயைப் பிளந்தாள்

“ம்”

“என்ன சர்ப்ரைஸ்?”

“அதை கார்க்கு வந்து நீயே தெரிஞ்சுக்கோ?”

“அப்படியா அப்போ நான் எங்க அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன்”

“ஏஏய் உங்க அம்மாகிட்டலாம் ஒன்னும் சொல்ல வேணாம் பாத்துட்டு அஞ்சு நிமிஷத்துல வந்துரலாம் “

“சரி அப்போ வாங்க காருக்கு போவோம்”

என்று அவனுக்கு முன்னாடி அவள் கார் கிட்ட ஓடினாள் கார் கதவை திறந்து உள்ளே சென்றாள்,கார் முழுவதையும் தேடிப் பார்த்துவிட்டு

“எங்க மாமா சர்ப்ரைஸ்?”

என்று அவனிடம் கேட்க காரின் அருகில் வந்தவன் கதவைத் திறந்து டிரைவர் சீட்டில் அமர்ந்து ஸ்பிரே போன்ற ஒரு பொருளை எடுத்து அவள் எதிர்ப்பார்க்காத நேரத்தில் அவள் முகத்தில் அந்த ஸ்பிரேயை அடித்தான்,அடுத்த நொடி அவள் மயங்கி சரிந்தாள்.


“அண்ணே நீங்க சொன்ன மாதிரி தூக்கிட்டு வந்தாச்சு”

என்று வேலப்பனிடம் கூறினான்,வேலப்பன் சிரித்துக்கொண்டே

“நல்ல திறமையான ஆளுதான் ஓய்”

“அண்ணே இந்த குழந்தையை அவனை மிரட்டிட்டு அவன் வீட்டில் விட்டுடுவீங்கதான?”

“ஏய் நீ நினைக்கிற அளவுக்கெல்லாம் நான் ஒன்னும் மோசமானவன் கிடையாது,அவன் நான் சொன்னதை கேட்டிருந்தா இந்த குழந்தையைக் கூட தூக்க வேண்டியிருக்காது, சரி சரி நீ பணத்தை வாங்கிட்டு கிளம்புடா,டே அவனுக்கு பையை கொடுத்து விடு”

என்று தனது வேலையாளிடம் கூறினான் அவனும் ஒரு பேக்கை எடுத்துக்கொண்டு இவனிடம் தந்தான் அதை வாங்கி திறந்து பார்த்தவன் கண்ணில் இரண்டரை லட்ச ரூபாய் தெரிந்தது.அதை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

அவன் கிளம்பியதும் நாராயணணுக்கு வேலப்பன் கால் செய்தான்.அங்கு தனது மகளை காணவில்லை என்று பதட்டத்துடன் நாராயணன் தேடிக்கொண்டிருக்க பாக்கெட்டில் இருந்த அவனது ஃபோன் குரல் கொடுக்க ஆரம்பித்தது,எடுத்து அட்டெண்ட் செய்தவன் காதில்

“என்ன நாராயணா பிள்ளையை காணோம்னு துடிதுடிச்சுக்கிட்டு கிடப்பியே,அதுக்குத்தான் பெரியங்க சொல்றத கேக்கனும்,இப்பவும் ஒன்னும் இல்ல நீ இந்த பிசினஸ விட்டுப் போறேன்னு எழுதிக் கொடு உன் பிள்ளை உன் வீட்டுக்கு வந்துரும்”

“ஏய் உன்னை நான் போலீஸ்ட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணுவேன்டா”

“ஐயோ தம்பி நீ ஒன்னு மறந்துட்ட உன் பிள்ளை இப்போ என்கிட்ட இருக்கு,போலீஸ்ட்ட போனா என்ன போலீஸ் ஸ்டேஷனை மிதிச்சாலே உன் பிள்ளைக்கு சங்கு தான்”

“ஏஏய் அவளை ஒன்னும் பண்ணிடாத”

என்று அவன் பதற

“அப்போ நான் சொன்னதை செய்,செஞ்சா உன் பிள்ளை வீட்டுக்கு வரும் உசுரோட”

“என்ன செய்யனும்?”

“நைட்டு பத்து மணிப்போல என் மகன் கையில பேப்பரோட வருவான் அதில் நீ சைன் மட்டும் போடு அவ்ளோதான்,அதனால நீ இப்பவே கொடைக்கானலிலிருந்து கிளம்பி இங்க வா!”

“சரி சார் சரி சார்

“ஆம்.இடையில ஏதும் புத்திசாலித்தனமா பண்றேன்னு புள்ளையை இழந்துறாத”

“இல்ல சார் இல்ல இல்ல”

“ம்”

என்று கூறிவிட்டு காலை கட் செய்தான்.

அன்று சாயந்திரமே கொடைக்கானலிலிருந்து தனது வீட்டை வந்தடைந்தான்,தனது மகளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தாள் அவனது மனைவி.பிறகு 10:30 மணியளவில் வேலப்பன் மகன் ராஜ் வந்தான் ‘தான் இந்த பிசினஸ்ஸை விட்டு வெளியேறுவதாக’ அவன் கூறிய இடத்திலெல்லாம் சைன் செய்தான் அவனும் வந்த வேலை முடிந்துவிட்டது என கிளம்பினான்.,கிளம்புவதற்கு முன் நாராயணன் ராஜிடம்

“சார் அதான் நீங்க சொன்ன மாதிரி கையெழுத்து போட்டுட்டேன்ல,என் புள்ளையை விட்டுட சொல்லுங்க சார்”

“கவலைப்படாத டோய் உன் புள்ள காலையில் வந்துரும்,ம்”

என்று கூறிவிட்டு அங்கு இருந்து புறப்பட்டான்.


அதிகாலை.

மகளை கடத்தியதிலிருந்து சரியாக தூங்காமல் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான் நாராயணணும் அவனது மனைவியும் அப்போது வாசலில் ஒரு கார் வந்து ஒரு கோணிப்பையை தூக்கி வீசியது,இவர்களும் பதறியடித்துக் கொண்டு அந்த கோணிப்பையின் அருகில் சென்றார்கள்,அந்த கோணிப்பையைப் பார்த்ததும் அவர்கள் மனதுள் ஒருவித பயம் தோன்றியது,நாராயணன் தான் அந்த கோணிப்பையைப் பிரித்துப் பார்த்தான் பார்த்தவனுக்கு அதிர்ச்சி அதில் அவனது ஆசை மகள் வர்ஷிகா சடலமாக கிடந்தாள்,அதனைப் பார்த்து கதறி கதறித் துடித்தான்,அவனது மனைவியும் அதனைக் கண்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாள்.

தனது மகளே போய்விட்டாள் இனி என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று கமிஷனரிடமே சென்று மினிஸ்டர் வேலப்பன் மீதும் அவரது மகன் ராஜ் மீதும் கம்ப்ளெய்ண்ட் செய்தான்,அதனை ஏற்ற கமிஷனர் ராஜகோபால் தான் உடனடியாக ஆக்ஷன் எடுப்பதாகக் கூறி அங்கிருந்து மினிஸ்டர் வேலப்பன் வீட்டிற்கு புறப்பட்டார்.


வேலப்பன் வீடு

கமிஷனர் ராஜகோபால் வீட்டிற்குள் நுழைந்ததும் எதிரில் வேலப்பன் கண்ணில்பட்டார்,கமிஷனரைப் பார்த்ததும் உட்கார்ந்திருந்தவர் எழுந்து

“என்ன கமிஷனர் சார்!எங்க இவ்வளவு தூரம்?”

“சார்!உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்”

“முதல்ல உட்காருங்க சார்!”
அவரும் சோஃபாவில் உட்கார்ந்தார்

“சொல்லுங்க என்ன விஷயம்?”

“உங்க மேல அந்த பிசினஸ்மேன் நாராயணன் தன் மகளை நீங்க கொன்னுட்டதாக கம்ப்ளெய்ண்ட் கொடுத்துருக்கான்”

“நினைச்சேன்”

என்று தன் மனதிற்குள் நினைத்தார் வேலப்பன்.

“எதுக்கு கொன்னீங்க?”

“உங்ககிட்ட தான் நான் சொல்லியிருக்கேன்ல சார் இந்த நாராயாணன் மேட்டர்”

“ஆமா தெரியும்”

“அதான் அவனை மிரட்டுறதுக்காக அவன் புள்ளையை தூக்கினேன்,நான் சொன்ன மாதிரி பிசினஸ்ஸை விட்டு போறதாக கையெழுத்தும் போட்டுட்டான்,இடையில் இந்த சின்னப்பொண்ணு என்ன பண்ணிட்டு தப்பிச்சுப்போக பாத்துச்சு நம்ம பசங்களும் பிடிச்சிட்டானுவ ஆனாலும் அந்த புள்ள திமிரிக்கிட்டே இருக்க வெறியானவனுங்க அந்த புள்ளையை தள்ளிவிட கீழே கிடந்த கம்பி ஒன்னு அதோட தொண்டையில் ஏறிட்டு,நம்ம என்ன செய்ய முடியும்,நானே இந்த புள்ளையை வீட்ல விடனும்னு தான் நினைச்சிட்டிருந்தேன் அதுக்குள்ளேயும் இப்படி ஆகிடுச்சு,சரி இப்ப அவன் என்ன சொல்றான்?”

“உங்களை அரெஸ்ட் பண்ணணுமாம்.ஆதாரம் இல்லன்னா கூட ஏதோ பேசலாம் அவன்கிட்ட அவன் மகளை கடத்தி வெச்சு நீங்க மிரட்டுன கால் ரிக்கார்ட்ஸ்லாம் இருக்கு”

“இப்போ என்ன பண்ண?”

“நீங்க இந்த விஷயத்தில் மாட்டக்கூடாதுனா ஒரே ஒரு வழிதான் இருக்கு”

“என்ன வழி?”

என்று கேட்க ராஜகோபால் கூற ஆரம்பித்தார்.


கோவிலில் கலையும் அவனது மனைவியும் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தனர்,கவிதா அம்பாளிடம்

“தாயே!இந்த ஐந்து லட்ச ரூபாயை வெச்சுத்தான்,என் ஹஸ்பெண்ட் ஏதோ தொழில் பண்ணப் போறேன்னு சொல்லிக்கிட்டுக் கிடக்கார்,அவருக்கு நீங்க தான் பக்கபலமாக இருந்து அவருக்கு ஒரு நல்ல வழியைக் காட்டனும்”

என்று வேண்டிக்கொண்டிருந்தாள் கவிதா,கலையோ அம்பாளிடம்

“தாயே!இந்த மாதிரி ஒரு தொழில் ஆரம்பிக்கத்தான் நான் அந்த புள்ளையை கடத்துனேன்,அதுவும் அவங்க கடத்திட்டு விட்ருவேன்னு சொன்னதால் தான் நான் இந்த வேலையை செஞ்சேன்,அவளுக்கு இந்த விஷயம் மட்டும் தெரியாம பாத்துக்கோ தெய்வமே!”

என்று வேண்டிக் கொண்டிருந்தார்கள்.அப்போது அந்த இடத்திற்கு போலீஸ் ஜீப் ஒன்று வந்தது.அதிலிருந்து இறங்கிய போலீஸார்கள் வேகமாக கோவிலுக்குள் சென்று அங்கு சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த கலையை பிடரி வாக்கில் அடித்தார்கள் அதில் நிலைக்குலைந்த கலை கீழே சரிந்தான் கீழே சரிந்தவனை தூக்கி கழுத்தைப் பிடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டு சென்றார்கள்,அங்கு நடப்பதைப் பார்த்த கவிதாவுக்கு என்ன நடக்கிறதென்று சுத்தமாக புரியவில்லை.

“சார்!நான் என்ன சார் பண்ணேன் என்னை எதுக்கு இழுத்துக்கிட்டுப் போறீங்க?”

“ம்.உனக்கு பூசை பண்றதுக்கு பொத்திட்டு வாடா”

என்று கூறிக்கொண்டு அவனை இழுத்துச் சென்றார் இடையில் கவிதா வந்து தடுக்க அவளிடம்

“ஒன்னும் தெரியாத அப்பாவிப் பொண்ணை கடத்தி கொன்னுப்புட்டான்மா உன் புருஷன்”

என்றதும் இவளுக்கு இந்த உலகமே நின்றுப் போனது போல் இருந்தது.

பிறகு அவனை போலீஸ் அரெஸ்ட் செய்து ஜெயிலில் அடைத்தார்கள்

“சார் நான் யாரையும் கொலை செய்யல சார்!என்னை நம்புங்க”

“ஏய்!வாயைப் பொத்திட்டு உக்காருடா”

என்றார்.கலையின் மனதுள் “ஒருவேளை அவர்கள் ஏதோ அந்தச் சிறுமியை கொலை செய்துவிட்டார்களோ” என்கிற சந்தேகம் அவனுள் எழுந்தது.

“சார்!நான் எதுவும் செய்யல சார்.வேணும்னா நீங்க மினிஸ்டர் வேலப்பனுக்கு போன் செய்து கேட்டுப் பாருங்க அவரு சொல்வார்”

“டே உன்னை அரெஸ்ட் பண்ணச் சொன்னதே அவருதான் டா”

என்றதும் அது இவனுக்கு தாங்க முடியாத பேரதிர்ச்சியாக இருந்தது.


அதன்பிறகு இந்த கேஸ் கோர்ட்டுக்குச் சென்றது மினிஸ்டர் தான் இந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக கலையை இந்த கேஸில் மாட்டிவிடத் திட்டம் போட்டார்,அதன்படி கலைக்கு எதிராக அவரும்,கமிஷனர் ராஜகோபாலும் பொய் ஆதாரங்களையும் சாட்சிகளையும் தயார் செய்து அந்த கேஸிற்கு மேலும் வலுவை சேர்த்தனர்.

நாராயணனை போனில் மிரட்டிய கால் ரிக்கார்டையும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டார்கள்.

அதாவது நாராயணனின் கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறுமியைக் கொன்று அந்த கொலைப்பழியை மினிஸ்டர் வேலப்பன் மீது போட்டு அவரை போலீஸார் அரெஸ்ட் செய்தால் கட்சியில் அவர் பெற்ற மதிப்பு மரியாதை என அனைத்தும் போய்விடும் என்கிற நோக்கில் கலை இந்த கொலையை செய்துள்ளதாக கேஸை திசைத்திருப்பிவிட்டார்கள்,கோர்ட்டும் எட்டு வயதுச் சிறுமியைக் கொன்றதன் காரணமாக அவனுக்கு பத்து வருட சிறைத்தண்டனை வழங்கியது.

சிறைக்குச் சென்றதிலிருந்து கவிதா அவனை பார்க்க வரவேயில்லை,நான்கு மாதம் கழித்து அவனது மனைவி கவிதா மாசமாகியுள்ளதாக அவனுக்கு தகவல் கிடைத்தது.அதனை நினைத்து மிகவும் வருத்தப்பட்டான்.

அப்படியே பத்து வருடங்கள் உருண்டோடியது,அந்த பத்து வருடங்களுக்கு பிறகு இப்போது தான் அவனுக்கு விடுதலை கிடைத்தது.

கண்டக்டர் விசில் ஊதியதும் தான் அவன் பழைய நினைவுகளிலிருந்து வெளிவந்தான் அவன் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அவன் இறங்கினான்.அந்த ஒத்தையடி பாதை வழியாக நடந்துச் சென்றான் வழியில் ஒரு கிணறு இருந்தது அந்த கிணறைப் பார்த்ததும் இவனும் இவனது நண்பர்களும் சேர்ந்து கும்மாளமடித்தது நினைவில் வந்துப் போனது.

அப்படியே அதைத்தாண்டி நடந்துச் சென்றான் அப்போது வழியில் அழுகிய நிலைமையில் எலி ஒன்றைப் பார்த்தான் அதன் இரத்தத்தை மட்டும் உரிந்த நிலைமையில் இருந்தது அதனைப் பார்க்க ஏதோ ஒரு பாம்பிடம் சிக்கி இறந்திருக்க வேண்டும் அந்த நிலைமையில் தான் இப்போது அவனும் இருக்கிறான்.

ஊரின் மையத்திற்கு வந்தான் மதியம் ஆகிவிட்டதால் பல கடைகள் அடைக்கப்பட்டிருந்தன அப்போது ஒரு வீட்டின் திண்ணையில் ஒரு பத்து வயதுச்சிறுமி நோட்டில் எதையோ வரைந்துக்கொண்டிருந்தாள் அப்போது அந்த வீட்டின் உள்ளிருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண் கையில் காபி டம்ளருடன் வந்தாள் இவன் அந்த வீட்டை கடக்கவும் அந்த பெண்ணை யதார்த்தமாக பார்த்தவன் அதிர்ந்தான்.

அந்த பெண் வேறு யாருமில்லை கவிதா தான்,கவிதாவும் எதேச்சையாக அவனைப் பார்க்க அவளும் அதிர்ந்தாள் அவளைப்பார்த்ததும் அவளிடம் பேச அவள் அருகில் சென்றான்.

“கவிதா எப்படி…”

என்று அவன் பேச வருவதற்கு முன்னே அவள்

“வந்துட்டியா பாவி!தயவு செஞ்சு எங்கேயோ போயிரு”

“கவி நான் சொல்றதை கேளு நான் இந்த கொலையை சத்தியமா செய்யலை என்னை நம்புமா”

“இந்த பாரு என் வீட்டுக்காரரு வந்துடுவாரு தயவு செஞ்சு போயிறு,முட்டாள்தனமா உன்னை கல்யாணம் பண்ணி என் வாழ்க்கையே நாசம் பண்ணிட்ட இப்போ கிடைச்சிருக்கிற இந்த வாழ்க்கையையும் கெடுத்துடாத போயிறு”

என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று வீட்டுக்குள் தனது பிள்ளையை தூக்கிக்கொண்டு உள்ளே சென்று கதவை சாத்தினாள்.உள்ளிருந்து அந்த சிறுமியின் குரல் கேட்டது

“யாருமா அவர்?”

“அவரு ஒரு பைத்தியக்காரர்,சரி உள்ள பாரு ஃபோனடிக்கு அப்பா தான் கால் பண்றார்னு நினைக்கிறேன் எடுத்துப் பேசு”

என்று அவளிடம் கூறினாள் இவர்கள் பேசிக்கொண்டிருந்தப்பதைக் கேட்ட கலைக்கு மனது நொறுங்கியது.

தனது மகளுக்கு வேறு ஒரு அப்பாவா? என்று மனதுள் நினைக்கும்போதே அவனது மனது வலித்தது.

அதே மனவலியுடன் சாலையில் நடந்துச்செல்லும் போது வழியில் உள்ள பேனரை பார்த்தான் அதிலிருந்தவரின் முகத்தைப் பார்த்தவனின் முகம் சிவந்தது,ஏனெனில் அதிலிருந்தவர் மினிஸ்டர் வேலப்பன்.

அவரைப் பார்த்ததும் அவன் மனதுள் ஒரு எண்ணம் தோன்றியது “மினிஸ்டர் வேலப்பனை கொல்ல வேண்டும்” என்று.


இரவு 08:00 மணி

கட்சி விஷயமாக சென்னைக்குச் சென்றவர் அன்று இரவு எட்டு மணிக்கு தனது வீட்டை வந்தடைந்தார் வந்தவர் ஒரு குளியலைப் போட்டவர் கப்போர்டில் இருந்த ஃபாரின் சரக்கை எடுத்து கிளாஸில் ஊற்ற ஆரம்பித்தார்

மினிஸ்டர் வீட்டிற்கு சற்றுத் தள்ளி இருந்த ஒரு வேப்ப மரத்தில் மறைந்திருந்த கலை மனதுள் “என் வாழ்க்கையை சீரழிச்ச உன்னையை நான் கொல்லாமல் விடமாட்டேன்” என்று சபதம் போட்டுக் கொண்டு மினிஸ்டர் வீட்டின் சுவரில் எகிறிக் குதித்தான்.

அவன் குதித்த சத்தத்தைக் கேட்டு தூங்கி வழிந்துக் கொண்டிருந்த காவலாளி எழுந்து சத்தம் வந்த திசையை நோக்கி சென்றான் அவன் எதிர்பாரா நேரத்தில் கலை அவனது கழுத்திலேயே குத்தி மயக்கமடைய வைத்தான்.

பிறகு மாடியில் ஏறி அங்கு இருந்த ஜன்னலை நைசாக திறந்து உள்ளே குதித்தான் படிவழியாக மெதுவாக கீழே இறங்கினான்.

மது அருந்திக்கொண்டிருந்த வேலப்பன் இவன் கீழே இறங்கி வருவதைப் பார்த்ததும் அதிர்ச்சியில் தான் குடித்துக்கொண்டிருந்த மதுக்கோப்பையை கீழே போட்டார்,அவரையே அறியாமல் அவரது வாய்

“கலை நீயா?”

என்று முனகியது.

“நானே தான்”

“ஹூம்.என்ன என்னை போட வந்துருக்கியா?,போட்ருப்பா என்னை ஒரேயடியாக போட்ரு,உனக்கு செஞ்ச துரோகத்துக்கு என் மகனையும்,மருமகளையும்,அவள் வயிற்றில் இருந்த குழந்தையையும் இழந்து நல்லா அனுபவிச்சிட்டேன்ப்பா,போதும் என்னை கொன்னுடு”

என்ற அவர் பேச்சைக் கேட்டவனுக்கு அதை நம்பலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில்

அவன் எதிர்ப்பார்த்திடாத நேரத்தில் தான் குடித்துக் கொண்டிருந்த சரக்கு பாட்டிலை உடைத்து அவனது தொண்டைக் குழியிலேயே குத்தினார் குத்தியதில் ரத்தம் பீய்ச்சிக்கொண்டு அடிக்க அப்படியே சரிந்து விழுந்தான்,கொஞ்ச உயிரால் துடித்துக் கொண்டிருந்த அவனைப் பார்த்து

“ஏன்டா நீ இவ்வளவு நடந்தும் திருந்தவே இல்லையடா!எது சொன்னாலும் நம்பிடுற இல்லன்னா பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிடுற,ஹீம் உன் ஃபிரெண்ட் சுந்தர் கரெக்டா தான்டா சொன்னான் நீ ஒரு வெத்துவேட்டுன்னு முதல்ல உன்னை இந்த காரியத்தில் இறக்க சொன்னதே உன் ஃபிரெண்ட் சுந்தர் தான்,ஏன்டா என்கிட்ட எவ்வளவு பசங்க இருப்பானுங்க அவங்களை வெச்சு இந்த காரியத்தை எனக்கு முடிக்கத் தெரியாது,ஏன்னா என் முக்கியமான பிளானே அந்த பிள்ளையை கடத்தி கொல்றதுதான்.நானே சமரசம் பண்ணப்போனேன் ஆனால் அந்த நாராயணன் என்னையே மரியாதை இல்லாம பேசுறான் விடுவேனா நான் அதான் அவனுடைய உயிருக்கு உயிரான பாச மகளை கொன்னேன்,பிறகு கொன்னேன்னு போலீஸ்கிட்ட நானா மாட்ட முடியும் அதுக்குத் தான் உன்னைய விட்டே அந்த பிள்ளையை கடத்த சொன்னேன்,ஆனா நீ ஏதும் சந்தேகப்படுவனு பாத்தா உடனே ஓகே சொல்லிட்ட நானும் சரி ஆடு தானாகவே தலையை கொடுக்குன்னு உன்னை யூஸ் பண்ணிக்கிட்டேன்”

என்று கூறுவதை குத்துயிரும் கொலையுயிருமாக கேட்டுக்கொண்டிருந்தான்,மேலும் அவன்

“இப்போவும் பாரு என்னை கொல்றதுக்காக வந்த நீ ஒரேயடியாக போட்ருக்க வேண்டியது தான நான் சொல்ற உருட்டுக்களை நின்னு கேட்டுக்கிட்டிருக்க,ஹீம் உன்னை மாதிரி முட்டாள்கள் எல்லாம் இங்க உயிரோடவே இருக்கக் கூடாது”

என்று கூறிவிட்டு மறுபடியும் அந்த உடைந்த மதுபாட்டிலாலேயே அவனது சங்கை அறுத்தான்,அதில் அவனது கொஞ்ச உயிரும் அவனைவிட்டு சென்றது.

பிறகு மினிஸ்டர் வேலப்பன் தனது செல்ஃபோனை எடுத்து யாருக்கோ போன் செய்து.

“டேய்!தவசி கொஞ்சம் வீடு வரைக்கும் வாடா!”

என்று கூறி அவனிடம் விஷயத்தைக் கூற ஆரம்பித்தார்.


மறுநாள் காலை 06:00 மணி செய்தியில் முக்கியச் செய்தியாக அது ஓடிக்கொண்டிருந்தது

“தூத்துக்குடியில் உள்ள ஹார்பார் கடற்கரையில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக வந்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் சடலத்தை மீட்டு விசாரனை செய்ததில் இறந்துப்போனவரின் பெயர் கலை என்றும் இவர் நேற்று தான் தண்டனைக் காலம் முடிந்து சிறையிலிருந்து வெளிவந்த ஒரு கைதி என்றும் தெரியவந்துள்ளது”

இப்படி அந்த நியூஸ் ஓடிக்கொண்டிருக்க அதனை தனது டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த மினிஸ்டர் வேலப்பனின் இதழில் ஒரு வில்லத்தனமான சிரிப்பு வெளிப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *