குறள் மறந்த ஆசிரியர்
கதையாசிரியர்: கே.என்.சுவாமிநாதன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: April 6, 2026
பார்வையிட்டோர்: 100
(2022ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“உங்களுக்கு இந்த புடவை நன்றாக இருக்கிறது. ஆனால் உங்கள் உடல்வாகுவிற்கு சல்வார், கம்மீஸ் இன்னும் பொருத்தமாக இருக்கும்.”
ஒரு பெண்ணின் உடை பற்றித் தேவையில்லாமல் விமர்சிக்கும் நபர் யார் என்று திரும்பிப் பார்த்தாள் சுமதி. சுமதி அந்தப் பள்ளியின் விஞ்ஞான ஆசிரியராகச் சேர்ந்து ஒரு மாதம் ஆகிறது. அசட்டுச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தார் தமிழாசிரியர் சிவராமன், அவருக்கு பதிலளிக்க விரும்பாமல் தன்னுடைய வகுப்பு நோக்கிச் சென்றாள் சுமதி.
சுமதி, சேர்ந்த சில நாட்களிலேயே சிவராமன் நடத்தையைக் கண்டும், கேட்டும் துணுக்குற்றாள். தேவையில்லாமல் பேசுவது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது, புத்தகம், பேனா கொடுக்கல் வாங்கலில் தொட முயற்சிப்பது போன்ற சில் விஷமங்கள் அவளை உறுத்தின. மாணவிகளை தட்டிக் கொடுப்பது ஆகியவற்றையும் கவனிக்கத் தவறவில்லை.
சக ஆசிரியைகளிடம் இது பற்றிக் கேட்ட போது, சினிமா போகலாமா, பீச் போகலாமா என்று தொல்லை கொடுப்பதையும், தேவையில்லாமல் குறுஞ்செய்தி அனுப்பவதைப் பற்றியும் சொன்னார்கள்.
சிவராமன் தலைமை ஆசிரியர்க்கு மிகவும் வேண்டியவர், அதனால் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்கள். மாதம் ஒருமுறை பள்ளி மேலாளர் ஆசிரியர்களைச் சந்திப்பதாகவும், அந்த சந்திப்பில் தலைமை ஆசிரியர்க்குப் பயந்து சொல்லாமல் இருப்பதாகவும், இந்த புகாரை மேலாளரிடம் கொண்டு செல்வது எப்படி என்று தெரியவில்லை என்றும் சொன்னார்கள்.
பள்ளி மேலாளருடன் மாதச் சந்திப்பு வந்தது. புதியதாக பள்ளியில் சேர்ந்திருக்கும் சுமதியிடம், உங்களுக்கு கேள்வி ஏதேனும் உண்டா என்று கேட்டார் மேலாளர், இந்த அறிய வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்று நினைத்த சுமதி,
”ஆசிரியர்கள் தங்கள் துறையைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு இருக்க வேண்டும் அல்லவா” என்று வினவினாள்.
“ஏன், இதிலென்ன சந்தேகம்” என்றார் மேலாளர்.
“இல்லை, தமிழாசிரியர் சிவராமன் அவர்களுக்கு சில திருக்குறளின் பொருள் தெரிவதில்லை” என்றாள்.
தலைமையாசிரியரும், சிவராமனும் மிகுந்த கோபத்தில் அதை எதிர்க்க, சுமதி அமைதியாக “தமிழாசிரியருக்குத் தெரிந்தால் இந்தக் குறளுக்கு விளக்கம் அளிக்கட்டும்” என்றாள்.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
சுமதி கூறியதின் உட்கருத்தைப் புரிந்து கொண்டார் மேலாளர், சுமதி கூறியதை மற்ற ஆசிரியைகள் ஆமோதிக்க தலைகுனிந்தப்படியே அறையை விட்டுச் சென்றார் சிவராமன்.
அடுத்த நாள் சிவராமன் வேலையிலிருந்து நீக்கப்பட்ட செய்தி வந்தது.
![]() |
பொறியியல் பயின்று, அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பணி புரிந்து, பின்பு, 15 ஆண்டுகளாக கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன். “யு-டியூப் – ஸ்வாமிமேடிக்ஸ்” என்ற சேனலில், சுலப கணிதம் குறித்து ஆங்கிலத்தில் விளக்கி வந்தேன். கோவிட் ஊரடங்கு என்னை கதை, கட்டுரை, எழுத ஊக்கம் அளித்தது. கதைகள், கட்டுரைகள் வெளியான இதழ்கள் - தினமலர்-வாரமலர், கலைமகள், அமுதசுரபி, தினமணி, சிறுவர்மணி, கதிர், நம் உரத்த சிந்தனை,…மேலும் படிக்க... |
