குரு





(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண புகையிரத நிலையம் பயணிகளால் நிரம்பி வழிந்தது. மத்தியான வேளை அனற்காற்று வீசிக்கொண்டிருந்தது. ஒரே புழுக்கம் புழுக்கத்தை மீறிய சனநெரிசல்.

யாழ்தேவி வருவதற்கு அறிகுறியாக மணி அடித்தது. இளைஞர்கள் சிலர் ‘பிளாட்போமிலிருந்து இறங்கி மறுபக்கத்திற்கு ஓடினார்கள். அந்தப்பக்கத்தாலே நெருக்கடி இல்லாமல் ஏறிக்கொள்ளலாம் என்ற நப்பாசைதான் காரணம்.
யாழ்தேவியும் வந்தது. இடிதள்ளுக்கிடையே ஒரு வழியாகப் புகை வண்டிக்கு ஏறிவிட்டேன். இனி இடம் தேடலாம்.
ஏறக்குறைய எட்டு மணித்தியாலங்களைப் புகைவண்டியிலே கழிக்க வேண்டும். ‘கோணர் சீட்’ கிடைத்தால் நல்லது. அந்தச் சன நெருக்கிடையே அந்த ஆசை கானல் நீர்தான் என்றாலும் மனம் கேட்கிறதா? ‘சொறி கேட்டார்’ வழியாகச் சூட்கேசையும் சுமந்தபடி நடந்தேன். சூட்கேஸ் பிணப்பாரமாயிருந்தது. அதற்குள்ளேதான் எத்தனை பொருள்கள்! நல்லெண்ணை போத்தல் இரண்டு, புழுக்கொடியல் பார்சல் ஒன்று, ஒரு முருங்கைக்காய் கட்டு, இத்தனையும் அயல் வீட்டுக்காரர் தந்தது உறவினர்களிடம் சேர்ப்பிக்கும் படி சுமத்திய சமைகள். இவற்றை விட எனது உடைகள், சேட்பிக்கற்று”கள் அடங்கிய ‘பைல்’ ஒன்று.
‘கோணர் சீட’ ஆசையிலே கிடைத்தற்கரிய ஆசன வசதிகளையும் இழந்த வழியில் நின்ற பிரயாணிகளையும் இடித்துதள்ளியபடி முன்னேறினேன்.
எத்தனையோ தெரிந்த முகங்கள், ஆனால் தெரியாததுபோல பாவனை! இடங்கேட்டு விடுவேனோ என்ற அம்சம் எனக்கும் அவர்களைத் தெரிந்து கொண்டதாய் காட்ட விருப்பம் இல்லை. நின்று பேசிக்கொண்டிருந்தால் ‘கோணர் சீட்’ கிடைக்காது.
ஒன்று இரண்டு, மூன்று பெட்டிகள் கடந்தாயிற்று என் எண்ணம் இன்னும் நிறைவேற வில்லை. அயர்வோடு பெட்டியை நடுவழியில் வைத்தபடி பக்கங்களிலுள்ள ஆசனங்களைப் பார்த்தேன். ஒன்றில் ஏறக்குறைய ஐந்து பேர் தொங்கியடித்தபடி அமர்ந்திருந்தார்கள். மறு ஆசனத்திலே ஒரே ஒருவர் நீட்டி நிமிர்ந்து தலைக்கு தலையணையாகச் ‘சூட்கேஸ்’ ஒன்றை வைத்தபடி கண்களை மூடிப் படுத்திருந்தார்.
எனக்கு எரிச்சலாய் இருந்தது. இத்தனை பேரின் கஷ்டத்திலே ஒருவருக்குச் சுகம்! ஏதோ சீதனப் பொருளிலே உரிமை கோரப்படுவது போல அந்த ஆசனத்தை தனியுடமை ஆக்கிக் கொழும்பு வரை அவர் சுகமாகப் பள்ளி கொள்ளப்போகிறார். இதற்கு விடக்கூடாது.
அவரின் காலிலே தட்டி எழுப்ப எண்ணினேன். அதே வேளையில் வேறோர் எண்ணம் தடுத்தது. இவர் தட்டி எழுப்பினாலும் எழும்பப் போவதில்லை. எழுந்தாலும் ஏதோ சுகவீனம் என்று நடித்துக்காட்டிச் சாக்குப் போக்கு சொல்லுவார். அல்லது சீறி விழுவார். அநுராத புரம் வரை அவரின் வீரத்தனத்திற்கு லைசன்ஸ் உண்டு!
எனவே அவரை எழுப்பாமல் அடுத்த ஆசனத்தை நோக்கிச் சென்றேன். சூட்கேசை வைக்க நான் குனிந்த போது சேர் ! இப்படி வாருங்கோ என்றது ஒரு குரல். நிமிர்ந்தேன். அங்கே என் பழைய மாணவன், சக்திகுமார் தன் ஆசனத்திலிருந்து எழுந்து என்னை அதில் இருக்க வருமாறு அழைத்தான். தயங்கினேன் ஒருவருடைய வசதியீனத்தில் இன்னொருவர் வசதிப்படுவதா என்று மனிதத்தன்மை சற்று மேலோங்கி நின்றது. ஒரு கணம்.
ஒரு ஆனால் கோணர் சீட் ஆசை வந்த தயக்கத்தை உதட்டளவிலே கொண்டு வந்து நிறுத்தியது! ‘பரவாயில்லை நீர் இரும் நான் வேறு இடம் தேடுறன்’ என்று சொல்லியபடியே அவன் எழுந்திருந்த ஆசனத்தை நோக்கி முன்னேறினேன்!
“நான் கிளிநொச்சிவரைதானே? நீங்கள் வசதியாய் சேர் என்று கூறியபடி சக்திகுமார் என் சூட்கேசை வாங்கிக்கொண்டான்.
அவன் அதை மேலே இருந்த தாங்கியில் வைத்தபொழுது நான் வசதியாக அவன் இருந்த கோணர் சீட்டில் அமர்ந்தேன்.
அவன் எனக்குச் செய்த மரியாதையையும், உதவியையும் கண்ட சக பிரயாணிகள் எங்கள் இருவரையும் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். இக்காலத்திலும் இப்படி ஒரு மாணவனா?’ என்ற கேள்விக்குறி அவர்களின் உள்ளங்களிலே விழுந்திருக்க வேண்டும்.
எனக்கும் வியப்புத்தான் இரண்டு ஆசனங்களுக்கு அப்பால் நான் வந்துகொண்டிருந்த பொழுது, என்னை ஒரு காலத்தில் கற்பித்த ஆசிரியர் என்னைப் பார்த்து அறிந்ததிற்கு அறிகுறியாக முறுவல் பூத்து தலையசைத்த போது தொரண தொணப்புக்காரரான அவருக்கு தப்பிவர அவரைத் தெரியாதது போல பாவணை பண்ணியவன்தான் நான், ஆனால் இங்கோ…… சக்திக்குமாரை தலையிலிருந்து கால்வரை பார்த்தேன். கால்களை இறுக்கும் ரைற் பான்ற்’ டெரிலின் சேட், கன்னத்தாடி அரும்பு மீசை, பரட்டைத்தலை ஆகிய அலங்காரங்களோடு இருக்கவேண்டியவன் என்று என்னால் கற்பனை பண்ணாதிருக்கக் கூட வில்லை.
ஆனால் அவனோ, அரைக் கை வெள்ளைச் சட்டையும், ரோடன் சாறம் ஒன்றும் அணிந்திருந்தான். கன்னற் தாடியோ, அரும்பு மீசையோ பரட்டைத் தலையோ இல்லை. சாதாரணமாகத்தான் இருந்தான். எனக்கு ‘சப்’ என்று போய்விட்டது.
அவனைப் பார்த்துச் சிரித்தேன். அவனும் சிரித்தான். ‘கொழும்புக்கா போறியள் சேர்’ என்றான். “ஓமோம்! ஓர் இன்டர்வியூவிற்குப் போறன்”
“அடிக்கடி மாஸ்டர்மாரைப் புகைவண்டியிலை சந்திக்கிறன். எல்லாரும் இன்டர்வியூ என்றுதான் சொல்லுவினம்’ என்று எனக்குப் பக்கத்திலிருந்தவர் சிரித்தார். சக்திக்குமார் சிரிக்கவில்லை. அவன் பார்த்த பார்வையில் அவர் அடங்கிப் போய் விட்டார். அவர் அதற்குப்பிறகு எங்கள் உரையாடலில் தலையிடவில்லை.
‘இப்பவும் அங்கைதானே படிப்பிக்கிறியள் சேர்’ என்று சக்திக்குமார் கேட்டான்.
‘ஓம்! நீர் என்ன செய்யிறீர்?
‘நான் கிளிநொச்சியில் வயல் செய்யிறன் சேர்’ என்று அவன் சொன்ன பொழுது என்னால் நம்பமுடியவில்லை.
அவனுடைய தகப்பனார் கல்லுாரி ஒன்றின் அதிபராக இருந்தவர். தாய் இப்பொழுதும் ஆசிரியையாக கட்டையாற்றுகிறார். சக்தி குமார் அவர்களின் ஒரே மகன்.
‘என்ன வயல் செய்யிறீரே? நீர் எஞ்சினியருக்கு படித்துக்கொண்டு இருக்கிறீர் என்றெல்லவோ நினைத்தேன்?’ என்று என் வியப்பை கேள்விச்சரங்களாய் அடுக்கினேன்.
சக்திக்குமார் சிரித்தான். ‘எல்லாரும் இன்ஜினியரானால் இலங்கை தாங்காது சேர். எனக்குத்தான் படிப்பு அவ்வளவு ஓடாது என்று உங்களுக்குத் தெரியும் தானே? கல்லுாரியை விட்டதும் கொழும்பிலை நாவலர் கோசிலை சேர்ந்து ‘அட்வான்ஸ்லெவல் இரண்டுமுறை எடுத்தன். சரிவரவில்லை. விட்டு விட்டு அப்பாவின் வயலைச் செய்யத் தொடங்கிவிட்டேன்.’ எனக்கு இன்னமும் நம்பமுடியவில்லை. சக்திக்குமாரின் தந்தை மகனைப்பற்றி பெரிய பெரிய கனவுகளைக் கண்டது எனக்குத் தெரியும். கீழ் வகுப்புகளில் அவன் படித்த காலத்திலேயே அடிக்கடி எங்கள் கல்லூரிக்கு வருவார். அவனுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை தனித்தனி சந்தித்து அவன் முன்னேற்றம் பற்றி விசாரிப்பார். சில வேளைகளில் இந்த விசாரணை எங்களுக்குத் தலைவேதனையாய் இருப்பதும் உண்டு. ஆனாலும் ஒரு கல்லுாரியின் அதிபர் என்ற வகையில் அவரின் தொந்தரவுகளை எல்லாம் சகித்து வந்தோம்.
‘சக்திக்குமாருக்கு இலங்கைக் கல்வி சரிப்படாது அவன்அட்வான்ஸ் லெவல்’ பாஸ்பண்ணினதும் இங்கிலாந்துக்கு அனுப்பப் போறன் ‘மெக்கானிக்கல் எஞ்சினியரிங்’ பயிற்சி பெறுவானானால் நல்ல எதிர்காலம் உண்டு. அந்தப் பயிற்சி முடிந்து ‘போஸ்ற் கிறாட்யு வேற்’ படிக்க விரும்பினாலும் படிப்பிக்க தயாராய் இருக்கிறேன். என்று அடிக்கடி சொல்லுவார். ‘அப்பா இதற்கு எப்படிச் சம்மதிச்சார்? அவருக்கு நீர் படிப்பை விட்டது பெரும் அதிர்ச்சியாய் இருக்குமே!” என்று கேட்டேன்.
‘ஆரம்பத்திலை பெரும் வருத்தம்தான் இப்போது எல்லாம் சரியாய் போயிட்டுது. மண்ணையும், பயிரையும், வாழ்க்கையையும் அவர் இப்ப நல்லாய் நேசிக்கப் பழகிவிட்டார் என்று சக்திக்குமார் சிரித்தபடி சொன்னான்.
படிக்கிற காலத்தில் சக்திக்குமார் பெரியவர் அதிபருக்கே அவன் பயப்படமாட்டான். அவன் வகுப்பிலிருந்தால் ஆசிரியர்களுக்கும் சுவர்க்கம் தான்! ஆசியர்கள் அவனோடு முரண்டினால் தொலைந்தது. அவர்களுக்கு பட்டம் வைத்து கல்லுாரிச் சுவர்களிலும் வகுப்பறைகளிலும் கரும்பலகைகளிலும் எழுதிவிடுவான். கல்லுாரி நாட்களில் அவன் நடாத்திய திருவிளையாடல்கள் மிகப் பல.
எனக்கு அவன் வைத்த பட்டம் தளிசை. எனக்கு சற்றே கொழுத்த உடம்பு. கன்னங்களும் உப்பியிருக்கும். சக்திக்குமாரின் கற்பனையிலே நான் ‘தளிசை’.
ஒரு நாள் தமிழ்ப்பாட நேரத்தில் சில மாணவர்கள் புத்தகம் கொண்டு வரவில்லை. அவர்களில் சக்திக்குமாரும் ஒருவன். புத்தகம் கொண்டு வராதவர்களை வேறு வகுப்புகளுக்குச் சென்று புத்தகம் வாங்கிவரச் சொன்னேன். சக்திக்குமாரைத் தவிர மற்ற அனைவரும் புத்தகம் வாங்கிவரச் சென்றார்கள். சக்திக்குமார் செல்லவில்லை. எனக்குச் சரியான கோபம், ஆனாலும் அவன் செயலை கவனியாதது போல இருந்தேன்.
சென்றவர்களில் ஒரு சிலருக்குத்தான் புத்தகம் கிடைத்தன. புத்தகம் உள்ளவர்களோடு புத்தகம் இல்லாதவர்கள் சேர்ந்திருங்கள் என்று நான் கட்டளையிட்டேன். ஆனால் சக்திக்குமார் தன் இடத்திலேயே இருந்தான். அவனைக் காப்பாற்ற எண்ணிய அவன் பக்கத்திலே இருந்த அவன் நண்பன் செல்வராஜனையும் சக்திக்குமார் அதட்டிக் கலைத்தான்.
இது என் பொறுமைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. சக்திக்குமார் இருந்த இடத்திற்குச் சென்று அவனை இழுத்து போகம் தீர கன்னம் – முதுகு – பிடரி எல்லாம் அறை அறையென்று அறைந்தேன். அவன் அடி வேகம் தாங்காமல் வகுப்பறையிலிருந்து எழுந்து ஓடிவிட்டான். ஓடும் பொழுது வெளியில் வாரும் உம்மைக் கவனித்துக்கொள்ளுறன் என்று சொன்னான்! நான் பயந்தேன்! அவனுக்கு கல்லுாரியின் பின் சூழலிலிருந்த காவாலிகளோடு சிநேகிதம் உண்டு. தெருவில் நான் சைக்கிளில் போகும் போது அவனும் அவன் கூட்டத்தினரும் ஏதாவது செய்துவிட்டால்… அடிபடுவதிலும் பார்க்க அதனால் உண்டாகும் அவமானத்தை எவ்வாறு சகிப்பது? நாளைக்கு மற்ற மாணவர்களும் இவன் வழியிற் செல்வார்களே!
நல்ல காலம். நான் பயந்ததுபோல ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் கல்லூரிச் சுவர்களெல்லாம் ‘தளிசை’ மயமாகிவிட்டது!
அதை நான் சகித்துக் கொண்டேன். தலைக்கு மேல் வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்ற ஒரு திருப்தி!
வந்தால் வகுப்பிலேயே ‘லோங்ஸ்’ அணிந்த நவநாகரீக சின்னமாய் நடமாடியவன் சக்திக்குமார். படமாளிகையில் ஏன் கள்ளுக் கொட்டில்களிலும் தன் பாதபங்கயங்களை பதித்துத் திரிந்தவன் தானே?
இன்று….
எவ்வளவு அடக்கம்! எவ்வளவு மரியாதை! என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. எனக்கு ஒரு பழக்கம் படமாளிகையின் இருளிலும், றெயில் வண்டிகளிலும் ஒளிவு மறைவாக சிகரட் பிடிப்பதுதான் அது. ‘சைவாசாரமுடையவர், ஒழுக்க சீலர் என்ற புகழுரைகளைக் காப்பாற்ற வேண்டுமென நினைத்து மறைவிலே யாருக்கும் தெரியாமல் ‘சிகரட்’ பிடிப்பதில் அப்படி ஒரு ஆசை! புகைவண்டியில் ஏறும் பொழுதே ‘பிறஸ்டல் பைக்கட்’ ஒன்றும் நெருப்புப் பெட்டியும் வாங்கி சட்டைப் பையில் போட்டிருந்தேன். பையினுள்ளே கையை விட்டபொழுது அவையிரண்டும் தட்டுப்பட்டன. ஆனால் சக்திக்குமாருக்கு முன்னால் புகைக்கும் திருப்பணியைச் செய்யக் கூச்சமாயிருந்தது. ஆனால் புகைக்கும் ஆசையோ உள்ளத்து நெருப்பாய் பற்றி எரிந்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டேன்.
‘உமக்கு படிக்கேயிலை என்ற மனக்குறை இல்லையா? சமம் செய்வதற்கு உமக்கு வெட்கம் கூச்சம் ஏற்படவில்லையா?’ என்று சக்திக்குமாரை கேட்டேன்.
சக்திக்குமார் சொன்னான்! ‘கமத்தொழிலை நானே விரும்பி ஏற்றனான். காவாளி கடைப்புளி என்று ஏச்சுப் பேச்சுக் கேட்பதிலும் இது மேல். இந்த வருடங் கூட எனக்கு வயல் செய்ததிலை எல்லாச் செலவும் போக இரண்டாயிரம் ரூபா மிஞ்சியது. என் முயற்சியாலை கிசு கிசு என்று வளர்ந்து பச்சைப் பசேலென்று நிற்கிற வயலைக் காணுகையில் உண்டாகும் சந்தோஷத்துக்கு ஈடே இல்லை சேர்!” இவ்வாறு சொல்லிய பொழுது அவன் கண்களிலே புலப்பட்ட கனிவை என்றும் மறக்க முடியாது.
இருபது வருடமாக ஆசிரியராகக் கடமையாற்றி நான் இரண்டு ரூபா மிச்சம் பிடிக்கவில்லை. சக்திக்குமாரோ ஒரு சில வருடத்திலேயே இரண்டாயிரம் ரூபா மிச்சம் பிடித்துவிட்டான்.
கமத்தொழில் இவனை பொறுப்பு வாய்ந்த பெரிய மனுசனாக்கியுள்ளது. இவனுக்கு முன்னால் நான் ஒரு துாசு…. நான் கூனிக்குறுகிப் போனேன்.
சக்திக்குமாமார் ‘புபே சென்று எனக்கு சோடா வாங்கி வந்து தந்தான். கிளிநொச்சி வரும் வரை அவன் நின்ற படியே என்னோடு பேசிக்கொண்டு வந்தான். நான் இருக்கும்படி எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் கேட்கவில்லை.
இறங்கும் பொழுது காலடியில் வைத்திருந்த பெரியதொரு சாக்குகளை அனாயாசமாகத் தூக்கி தோளிலே வைத்தபடி எனக்கும் கையசைத்து பிரியாவிடையளித்தான்.
மெலிந்துயர்ந்த அவன் கம்பீரமாக நடந்து புகைவண்டி நிலையத்தைக் கடக்கும்வரை அவனையே பார்த்தபடி புகைவண்டிக் கதவருகில் நின்றேன்.
அவனது உருவம் மறைந்ததும் எனது சட்டைப்பையுள் இருந்த சிகரட்டையும் நெருப்புப் பெட்டியையும் எடுத்து வெளியே எறிந்துவிட்டு என் இடத்திலே வந்தமர்ந்தேன்.
சொக்கன்
அமரர் கலாநிதி க.சொக்கலிங்கம் சொக்கன் என்ற புனைப்பெயரில் நிறையவே தமிழில் பல்துறைகளில் எழுதியுள்ளார். சிறுகதை, நாவல், நாடகம் என்பன அவரது சிறப்பான துறைகள். நல்ல பல சிறுகதைகளைப் படைத்துள்ளார். அவற்றின் தொகுப்பாக கடல் வெளிவந்துள்ளது. சலதி அவரின் மொழிபெயர்ப்பு நாவல். ஈழத்தில் முதன் முதல் சீதா என்ற சாதிய நாவலை அவரே படைத்தார்.
– ஈழநாடு, 30.04.1972.
– கடல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1972-6-27, நண்பர் வெளியீடு, யாழ்ப்பாணம்.
– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.
![]() |
ஈழத்து மூத்த எழுத்தாளரில் ஒருவரான சொக்கன் (க.சொக்கலிங்கம்) அவர்கள் 1930ஆம் ஆண்டு யூன் மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆவரங்காலில் கந்தசாமிச் செட்டிக்கும் மீனாட்சிக்கும் மகனாகப் பிறந்தார். டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி 2004 ஆம் ஆண்டு இறைபதம் எய்தினார். நமது நாட்டின் தமிழ் இலக்கிய உலகிலே மூதறிஞர் என்று போற்றப்படும் "சொக்கன்” 1944ஆம் ஆண்டு தனது 14ஆவது வயதில் “தியாகம்" என்ற வீரகேசரி சிறுகதை மூலம் எழுத்துலகில்…மேலும் படிக்க... |