கிரகங்கள் ஏன் மனிதர்களின் வாழ்வை பாதிக்கின்றன?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி புனைவு
கதைப்பதிவு: July 17, 2025
பார்வையிட்டோர்: 3,468 
 
 

சூரியக் குடும்பத்தில் சூரியன் கணவன். அவனுக்கு, கிரகங்களான ஒன்பது மனைவிகள். காதல், கடமை, ஒழுக்கத்தில் பிசகாமல் அவை அனைத்தும் சூரியனைச் சுற்றி வந்துகொண்டிருந்தன.

கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான குணச்சித்திரங்கள் கொண்டவை.

சூரியனுக்கு மிக நெருக்கமான புதன், அறிவாளி மற்றும் அமைதியற்றவள். எப்போதும் விரைவாக சுற்றித் திரிந்துகொண்டிருக்கும் பழக்கம் கொண்ட அவள், செய்திகளையும் வம்பு தும்புகளையும் பரப்புவதில் ஆர்வலர்.

மின்னும் மேகங்களால் முக்காடு போடப்பட்ட வீனஸ், பேரழகி. அவளுடைய இதயம் காதலால் நிரம்பி வழிந்தது, சில நேரங்களில் மாயை மேகமூட்டத்தால் மூடப்பட்டது.

உயிரோட்டம் நிறைந்த பூமி, சூரியனுக்குப் பிரியமானவள். சூரியனின் மனைவிகளில் அவளுக்கு மட்டுமே குழந்தைகள் இருந்தன. அவளின் மேற்பரப்பில் செழித்து வளர்ந்த கோடிக் கணக்கான உயிரினங்கள்.

இந்த ஆசீர்வதிக்கப்பட்ட கருவுறுதல், சூரியனின் பிற மனைவிகளின் இதயங்களில் பொறாமையைத் தூண்டியது. பிறப்பிலேயே அபாய நிறம் கொண்ட நீச கிரகமான செவ்வாய், பூமி மீதும், அவளின் குழந்தைகளில் உச்ச உயினங்களான மனிதர்கள் மீதும் தணியாத வெறுப்பைக் கொண்டிருந்தாள். தனது சொந்த தரிசு நிலப்பரப்பு, அவளின் கசப்பைத் தூண்டியது. மேலும் அவள் சக்களத்திகளான பிற கிரகங்களிடம் விஷ எண்ணங்களை விதைத்து, பூமியின் செழிப்புக்கு எதிராக சதி செய்தாள்.

கம்பீரமான வளையங்களால் அலங்கரிக்கப்பட்ட சனி, துர்க் குணங்கள் நிறைந்தவள். வயிற்றெரிச்சலும் பொறாமையும் அவளுள் கனலாகத் தகித்துக்கொண்டிருந்தன. தன்னால் இயன்றவரை பூமிக்கும், அவளின் பிள்ளைகளுக்கும் தொந்தரவு, கஷ்டம், துன்பம், துயரங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

அவர்களுடன் சேர்ந்து தொலை தூர, பனிக்கட்டி சூழ் உலகமான புளூட்டோ சதி செய்தாள். அவளின் நீண்ட தனிமை, செழிப்பான மற்றும் இணைக்கப்பட்ட எதன் மீதும் ஆழமான காழ்ப்பை உருவாக்கியது.

பொறாமை கொண்ட சக்களத்திகள் கூட்டணி அமைத்து பூமியைச் சீர்குலைக்க முயன்றனர். அண்டப் புயல்களையும் வானக் குப்பைகளையும் அவள் மீது வீசி தொல்லை கொடுத்தனர்.

ஆனால், பூமிக்கு கூட்டாளிகள் இல்லாமல் இல்லை. ராட்சத கிரகமான வியாழன், கருணை மிக்க வலிமையைக் கொண்டிருந்தாள். அவள் பூமியை பல அண்ட அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாத்தாள். சிறு கோள்களைத் திசை திருப்பவும் தீங்கு விளைவிக்கும் எரிப்புகளைத் தணிக்கவும் செய்தாள்.

சாத்வீக நீல ராட்சஸியான நெப்டியூன், பூமியின் கவலைகளுக்கு ஆறுதல் வழங்கினாள். பொறாமைக்கார கிரகங்கள் எதிர்மறை அலைகளால் பூமியைத் தாக்கும்போது தன் ஆற்றலால் அவற்றை செயலிழக்கச் செய்தாள்.

யுரேனஸ், கனிவான ஆதரவோடு தனது தத்துவ ஞானத்தால் ஆன்ம பலத்தையும் வழங்கினாள்.

இந்த சக நேசங்கள் பூமி எதிர்பாராத சவால்களைக் கடந்து செல்ல உதவின.

தொடர்ச்சியான அண்ட இழுபறி, சூரிய மண்டலத்தை ஓயாத போர்க் களமாக ஆக்கியது. சூரியன் எப்போதும் தனது மனைவிகள் அனைவருக்கும் சமமான காதலை வெளிப்படுத்தினான். ஒளி – நிழல், இணக்கம் – துவேஷம் ஆகிய எதிர்மைகளின் இடைவினையை நன்கு புரிந்துகொண்டவன் அவன். ஒளி பிரகாசிக்க இருள் அவசியம் என்பதை அவன் அறிந்திருந்தான்.

தொடர் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், பூமி தைரியத்துடன் இருந்தாள். கூட்டாளிகளின் அன்பும் ஆதரவும் அவளின் சொந்த உள்ளார்ந்த வலிமையுடன் இணைந்து அவளை மேலும் திடமாக்கின. அவள் மீது

வெறுப்பு கொண்ட கிரகங்களினால் அவளை அழிக்கவோ, துன்புறுத்தவோ, கஷ்டப்படுத்தவோ இயலவில்லை. எனவே, அதற்கு பதிலாக, அவளின் செல்லக் குழந்தைகளான மனிதர்களின் வாழ்க்கை மீது தங்களின் ஆத்திரத்தையும், எரிச்சலையும் காட்டி, அவர்களைத் துன்புறுத்தலாயின.

நவ கிரகங்களில் பூமி தவிர்த்த பிற கிரகங்கள், மனிதர்களின் வாழ்வில் நன்மை அல்லது தீமை ஏற்படுத்தக் காரணம் இதுதான்.

– கல்கி இணைய இதழ், 15-04-25.

ஷாராஜ் இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *