காலம் கொன்ற நினைவுகள்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 9, 2026
பார்வையிட்டோர்: 31 
 
 

(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நான் படித்த கிராமத்துப் பள்ளிக்கூடத்தைக் காணும் போதெல்லாம் சடுதியில் ஞாபகத்துக்கு வருபவன் அப்போது என்னுடன் கூடவே படித்த குஞ்சன் தான்.

அந்தப் பள்ளிக்கூடம் ஐந்தாம் வகுப்பு வரை இருந்தது. எமது கிராமத்துப் பிள்ளைகளுக்கான ஆரம்ப பள்ளி கூடமும் அதுதான். சுற்றி வர கருகரு வென வளர்ந்த பனைகள் நெடுதுயர்ந்து போய் நின்றன. அந்தப் பனங்கூடலுக்குள் தான் எங்கள் பள்ளிக்கூடம் இருந்தது. நாலு பக்கமும் அலம்பல் வேலி. அலம்பல் தடிகளை நெருக்கமாகக் குத்திச் சாத்தி குறுக்காக பனை மட்டைகளால் வரிச்சுப் பிடிக்கப்பட்டிருக்கும். யாரும் பாய்ந்து வெளியே போகாத படிக்கு உயரமான வேலிகள். ஒரு சின்னக் கட்டிடத்தில் தான் பள்ளிக் கூடம் இயங்கியது.

பள்ளிக் கூடத்துக்கு வடக்குப் புறமாக கண்ணுக்கெட்டியதூரத்தில் காத்தவராயர் கோவில். அங்கு நாலாபக்கமும் கிளையெறிந்து சதா நிழல் பரப்பி நிற்கும் ஆலமரமொன்று நின்றது. சடைத்துப் போய் விழுதெறிந்த ஆலமரத்தைப் பார்க்க குளிர்ச்சியாக இருக்கும். எனது வகுப்புத்தோழர்களின் கோடை காலப் பொழுதுகள் அங்கே தான் கழியும். கிட்டிப்புல், விளையாடுவது, மாபிள் போளை அடிப்பது, விழுது களில் தொங்கி ஊஞ்சலாடுவதெல்லாம் அங்குதான்.

மாரிகாலம் வந்தால் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். துள்ளலும் மகிழ்ச்சியுமாக இருக்கும்.

கோயிலுக்கு முன்னேயுள்ள வயல்காணி மழை வெள்ளத்தால் நிறைந்து விடும். ஒரு பெரிய குளம் போல எங்கள் இடுப்பளவுக்கு நீர் முட்டியிருக்கும். அதில் ஒரு வகையான மீன்கள், நீர்பாம்புகள், வெள்ளைக் கொக்குகள் எல்லாம் சஞ்சரிக்கும். ஓங்கி வளர்ந்து நிற்கும் பனைகளின் நிழல்கள் நீரில் விழுந்து பிரதி பலிப்பதும், வெள்ளைக் கொக்குகள் கூட்டம் கூட்ட மாக வந்து தாழப் பறந்து சிறகடிப்பதும் ரம்மியமான காட்சிகள். நீர்ப் பாம்புகள் வேகமாக வந்து தலைநீட்டிப் பார்த்து விட்டு, நீரில் அமிழ்ந்து மறைந்து விடும். மீன்கள் திடீரென்று துள்ளியெழுந்து திசை மாறிப் பாயும். அப்போதெல்லாம் நீரில் இறங்கி மீன்களைப் பிடிக்கப் போய் தோற்று விடுவோம். வேகம் கொண்டு நீந்திச் செல்லும் நீர்ப்பாம்பு யாரையும் தீண்டாது. கையால் பிடிக்குமளவுக்கு அது பச்சைத் தண்ணிப் பாம்பு என்பதை தெரிவித்தவன் குஞ்சன் தான். சமயங் களில் அவன் கையால் பிடித்துமிருக்கிறான். அதன் பிறகு பயம் எங்களைத் தொற்றிக் கொள்ளவில்லை.

எங்களுக்கெல்லாம் தலைச்சனாகக் குஞ்சன் இருந்தான். மதானித்து நிற்கும் ஒற்றை வடலி போல் வாகன உடற்கட்டுடையவன். வகுப்பு வரவு இடாப்பில் அவன்பெயர் குமரேசன். வீட்டில் செல்லமாக குஞ்சன் என அழைக்கப்போய் அதுவே நிலைத்து விட்டது. பருமனிலும், பலத்திலும் எங்களை விட வீச்சானவன். உண்மையில் ஏழாம் வகுப்பில்தான் படிக்க வேண்டியவன். இருமுறை பெயில்விட்டு எங்களுடன் தங்கி விட நேர்ந்தது. பள்ளிக் கூடத்துக்கும் பிந்தித்தான் வருவான்.

எங்கள் வகுப்பாசிரியை சிவபாக்கியம் ரீச்சர் எப்போதும் புனிதம் பேணும் ஆசாரசீலர். சுத்தம், சுகாதாரம் பார்ப்பதில் கராரானவர். எப்போதும் பிராமணப் பெண்போல காட்சி தருபவர். ஒருமுறை குஞ்சனைத் தண்டிக்கப்போக, அவன் தகப்பனைக் கூட்டி வந்து நியாயம் கேட்க வைத்து விட்டான். அதன் பின், எதுசெய்தாலும் ரீச்சர் அவனைக் கடிந்து பேசுவதில்லை. மற்றைய ஆசிரியர்களும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். ஆனாலும் பள்ளிக்கூடத்தில் சிரமதானம், புறக்கிருத்திய வேலைகள் என்று வந்தால், கலைத்துக் கலைத்து அவனிடம் சுளுவாக வேலை வாங்கி விடுவார்கள்.

அவனும் அடிக்கடி காயப்பட்டு காலில், கையில் கட்டுப் போட்டுக் கொண்டு வந்து நிற்பான். அவனில் ஒருவகை முரட்டுத்தனமும், அலட்சியமும் குடி கொண்டிருக்கும். தலைமை ஆசிரியருக்கு மட்டும் அடங்கிப் போவான். அவர் பலமுறை அவனை பிரம்புடன் துரத்திய காட்சிகள் இப்போதும் நினைவில் நிற்கிறது.

ஆசிரியர் வகுப்புக்குப் பிரசன்னமாகாத வேளைகளில், வகுப்பை அமைதியாக வைத்திருப்பதும் அவன் தான். அந்தப் பொறுப்பை தானாகவே சுவீகரித்து விடுவான். இடைவேளை நேரம் தண்ணீர் குடிப்பதற்கு வகுப்பில் தள்ளுமுள்ளு ஏற்படும். பானையின் மேல் வைக்கப்பட்ட றப்பர் கோப்பை அடிக்கடி காணாமல் போகும். ஒவ்வொரு தடவையும் அதைத் தேடிக் கொண்டு வந்து தருவான்.

இதனால் சமயங்களில் ஆசிரியர்களிடம் நல்ல பெயரையும் எடுத்து விடுவான்.

நவராத்திரி பூசை வந்தால் அந்த ஒன்பது நாட்களும் எங்களுக்கு விடுமுறை மாதிரி இருக்கும். அதுவும் கடைசி நாள் பூசைக்கு நிறையப்பூக்கள் தேவைப்படும். பல குழுக்களாகப் பிரிந்து பூக்கள் சேகரிக்க ஊர்மனைக்குள் போவோம். எங்களுக்கு குஞ்சனே வழிகாட்டுவான். எங்களுக்கும் அவனுடன் போவதில் அலாதிப் பிரியமாக இருக்கும். அவன் முதலில் வியாபாரிமூலைப்பக்கந்தான் கூட்டிச் செல்வான். வீரபத்திரர் கோயிலை அண்மிக்கமுன் வளைவில் ஒரு இறக்கம் வரும். அந்த இறக்கத்தில் ஆளையாள் முந்தி ஓடிச் செல்வது மகிழ்ச்சியான’ தருணங்கள். கோவிலை அண்டியிருக்கும் மரங்களின் நிழலில் ஆறியிருப்போம். தாகமெடுக்க கோயில் கிணற்றை எட்டிப் பார்ப்போம். ஆழங்குறைந்த சிறிய கிணறு. பார்க்க வினோதமாகத் தெரியும். கோவிலுக்கு வருகிறவர்கள் மனம் இரங்கினால் தண்ணீர் குடிப் போம். கைமண்டையில் வயிறு முட்டக் குடிப்போம். நாங்கள் அப்போதெல்லாம் கொடி பிடித்து நீர் அள்ளக் கூடாதென்பது நியதி. நாங்கள் வேறை ஆக்களாம். இதையும் குஞ்சன் சொல்லித்தான் தெரியும். தன் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள அம்மன் கோவிலிலும் அப்படித்தானாம். கிணத்துக்குக் கிட்ட போக முடியாதாம்.

விளையாட்டு முடியக் களையாறிவிட்டு ஊர் மனைக்குள் போவோம். குஞ்சன் தான் முன்னே செல்வான். அங்கு எல்லாமே கல்வீடுகளாக இருக்கும். பார்த்து வியந்து போவேன். மதில்களுக்கு மேலால் விதவிதமான பூக்கள் இதழ் விரித்திருக்கும். வீடுகளின் வெளிக்கேற் உட்பக்கமாக இழுத்துப் பூட்டப் பட்டிருக்கும். நாய்கள் அவிழ்த்து விடப்பட்டிருக்கும். எங்களைக் கண்டு அவை ஆக்ரோசமாகக் குரைத்தபடி யிருக்கும்.

“ஐயா…ஐயா… பூசைக்குப் பூப்புடுங்கலாமே… பள்ளிக் கூடத்திலிருந்து வாறம்”

முதலில் பவ்வியமாக குரல்கொடுப்பான் குஞ்சன். நாங்களும் அதை வழிமொழிவோம். ஓயாத நச்சரிப்பைத் தாங்க இயலாது. சில வீடுகளில் பூப்பறிக்க அனுமதிப்பார்கள். இன்னும் சிலர் ஏசிக் கலைத்து விடுவார்கள். குஞ்சன் அவர்களுடன் பதிலுக்கு தர்க்கப் பட்டுக் கொள்வான். பூக்கள் சேகரித்து முடிய கடற் கரைக்குப் போவோம். அதுவும் கூப்பிடுதூரத்தில் தான் இருந்தது. இரகசியமாகத்தான் எங்களைக் கூட்டிப் போவான் குஞ்சன். யாருக்கும் சொல்லக்கூடாதென்ற மிரட்டல் வேறு. அவனுக்குப் பின்னால் ஓடிப் போவோம். கரையைத் தொட்டுச் செல்லும் நீரில் காலை நனைப்போம். கடலில் மிதந்து வரும் பாய்மரக் கப்பல்களை அதிசயித்துப் பார்ப்போம். அவை அலை களின் தாலாட்டில் அசைந்து அசைந்து வருவதைப் பார்க்க மனம் குதூகலிக்கும்.

அங்கு சிப்பிகள், சோகிகள், சங்குகள், கணவாய் ஒடுகள் கரை ஒதுங்கிக் கிடக்கும். ஓடியோடிப் பொறுக்கியெடுப்போம். கணவாய் ஓட்டினால் சிலேற் அழிக்கலாமென்று முதலில் எனக்குச் சொல்லித் தந்தவனும் குஞ்சன் தான். எல்லாம் முடியக் கட்டுப் பாடாக பள்ளிக்கூடத்துக்குக் கூட்டி வந்து விடுவான்.

குஞ்சன் வழியெங்கும் எம்.ஜி.ஆரின் பாட்டுக் களையே பாடிக் கொண்டு வருவான். அப்போ தெல்லாம் வகுப்பு எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்களால் தன்னை பிரிந்திருக்கும். எம்.ஜி. ஆருக்குத்தான் இரசிகர்கள் அதிகம். சமயங்களில் ரசிகர்களிடையே தர்க்கம் முற்றி மோதல்களிலும் முடிவதுண்டு. நான் சிவாஜியின் ரசிகனாகவே இருந்தேன். குஞ்சனுடன் தர்க்கம் வந்தால் இணங்கிப் போவேன்.

குஞ்சனுடனான அந்தக் கடைசிச் சந்திப்பும், சம்பவமும் இன்றும் பசுமையாக மனதில் நிற்கிறது.

நல்ல ஞாபகம். அது ஒரு மழைநாள். காலைப் பிரார்த்தனை முடிந்து வகுப்பில் அமர்ந்திருந்தோம். முதல் மணி அடிக்க சிவபாக்கியம் ரீச்சர் பாடத்துக்கு வந்து விட்டார். சுற்றாடல் பாடம் ஆரம்பித்துர விட்டது. அப்போது தான் பதுங்கிப் பதுங்கி வந்த குஞ்சன் வாசலில் நின்று எட்டிப் பார்த்தான். ரீச்சர் அவனை முறைத்து விட்டு உள்ளே வா எனச் சைகை காட்டினார். வகுப்பில் அவனுக்கு மட்டும் தான் இப்படியான சலுகைகள் கிடைக்கும்.

உள்ளே வந்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான். என்னைக் கண்டு சிரித்து விட்டு விறுக்கென வந்து பக்கத்தில் அமர்ந்து கொண்டான். வகுப்பில் என்னுடன் தான் ஒட்டிக்கொள்வான். மற்றவர்கள் அருகில் அண்டுவது குறைவு. ஆரம்பத்தில் அவனிட மிருந்து வரும் பழக்கப்படாத வாடை அருவருப்பாகித் தான் இருந்தது. நாளடைவில் அவனது நல்ல இயல்பு களும் தெரிய வர அந்த வாடையும் பழகிப் போனது. அவனது தொந்தரவுகளையும் சகித்துக் கொண்டேன்.

புத்தகப் பையை வாங்கிலில் வைத்து விட்டு என்னை எச்சரிக்கையோடு பார்த்தான்.

ரீச்சர் செல்லப்பிராணிகள் பற்றி கற்பித்துக் கொண்டிருந்தார். பலரும் கைகளை உயர்த்தி தத்தமது செல்லப்பிராணிகளை சொல்லிக் கொண்டனர். ரீச்சரும் அவற்றைக் கரும்பலகையில் காட்சிப்படுத்தியபடி இருந்தார்.

“ரீச்சர்… ரீச்சர்… என்ரை செல்லப்பிராணி அணில்” என உற்சாகமடைந்தவனாய் எழுந்து நின்று சத்தமாகக் கூறினான். என்னையும் பெருமிதத்துடன் பார்த்தான்.

முன் வாங்குகளில் இருந்தவர்கள் திரும்பிப் பார்த்துச் சிரித்தனர். முன் வாங்கில்காரர் எப்பவும் கெட்டிக்காரர்கள் என்பது பலரதும் கணிப்பு. நானும், குஞ்சனும் எப்பவும் பின் வாங்கில் தான்.

குஞ்சன் அவர்களை ஒரு பார்வை பார்த்தான். மிரட்டுவது போலிருந்தது. உடன் எல்லோரும் அடங்கிப்போய் அமைதியாகி விட்டனர்.

“கெட்டிக்காரன் குமரேசன் சொல்லிறதும் சரிதான். அணிலையும் செல்லப்பிராணியாக வளர்க்க லாம் சிலர் அப்படி வளர்க்கிறார்கள்தான். அதுவும் எங்கடை சூழலிலுள்ள அழகான பிராணிதானே…

ரீச்சர் அவனுக்கு ஆதரவாகக் கூறினார். அவனுக்குக் கிடைத்த அங்கீகாரத்தால் மகிழ்ந்து போய் நின்றான். எல்லோரையும் மிதப்புடன் பார்த்துவிட்டு அமர்ந்தான்.

சிவபாக்கியம் ரீச்சர் கரும்பலகையில் எழுதத் திரும்பியபோது, கண்களால் ஜாடை காட்டினான். புத்தகப்பையை சிறிது திறந்தான். பையில் கீச்… கீச்… என்ற சத்தம் அனுக்கமாகக் கேட்டது. ஆவல் மீதூர இன்னும் அவனை நெருங்கி அமர்ந்தேன். அது ஏதோ வொரு பிராணிதான் என ஊகித்துக் கொண்டேன்.

குஞ்சன் நிமிர்ந்து என்னைப் பார்த்தான். எச்சரிக்கையுடன் புத்தகப்பையை அருகில் கொண்டு வந்தான். மெதுவாகக் கையை விட்டேன். அது பஞ்சுப் பொதி போல மெதுமெதுப்பாக இருந்தது. சத்தமும் அடங்கிப் போய் மெலிதாகக் கேட்டது.

“பள்ளிக்கூடம் முடிய வெளியில் எடுத்துக் காட்டுறன்” எனக் கூறிவிட்டு புத்தகப்பையை தன்னுடன் வைத்துக் கொண்டான்.

பள்ளிக்கூடம் முடியும் வரை, புதையலைக் காப்பது போல, கையில் கவனமாக இருந்தான்.

கடைசி மணி அடித்துவிட, என்னையும் இழுத்துக் கொண்டு நேரே காத்தவராயர் கோயில் ஆலமரத்தடிக்கு ஓடி வந்தான். வரும்போது திரும்பித் திரும்பி பார்த்தபடி வந்தேன். பாலன், அமுதன், சிவனொளி, ஓடையான், தயா, அருமை எல்லோரும் பின்னே வந்தார்கள்.

ஆலமர நிழலில் நின்று கொண்டு பையைத் திறந்து காட்டினான்.

அணில்… சிறிய அணில்… அது வெண் சாம்பல் நிறத்தில் அழகாக இருந்தது. முதுகில் மூன்று கோடுகள் தெரிந்தது. மிரண்டபடி எங்களைப் பார்த்து கீச்… கீச்… என்றது.

குஞ்சன் அதைத் தன் உள்ளங்கைகளில் வைத்து வேடிக்கை காட்டினான்.

எனக்கும் அதன் மென்மையை ஸ்பரிசிக்க ஆவலேற்றபட்டது. ஆசையுடன் கையை நீட்டினேன்.

“வேண்டாம் இது துள்ளி ஓடி விடும்” எனக் கூறி மறுத்து விட்டான்.

“நாளைக்கு உனக்கு கிளி கொண்டு வாறன். கவனமா வளப்பியாடா”

தலையசைத்து விட்டு வியந்து போய் அவனைப் பார்த்துக் கேட்டேன்.

“உண்மையா… தருவியா”

“உன்னட்டைக் கூடு இருக்காடா…”

“இல்லை” என்றேன்.

“சரி. என்ரை கூட்டுக்கை விட்டுத்தாறன். வெள்ளண வா. ஒருதருக்கும் சொல்லாதை”

ஒரு கணம் யோசித்து விட்டுச் சொன்னான்.

“குஞ்சன் கிளிக்கு சாப்பாடு என்ன வைக்கிறது”

“நான் கொவ்வைப்பழந்தான் வைக்கிறனான்”

வீட்டுக்குப் பக்கத்தில் பின்னொச்சியோலைப் பக்கம் சொத்திச் சாத்திரியாரின் வளவுக்கை கொடி கொடியாக படர்ந்திருக்கும் கொவ்வை நினைவில் முளையிட்டது.

எங்களுக்குப் பின்னால் ஓடி வந்தவர்களும்t தயங்கித் தயங்கி ஆலமர நிழலுக்கு வந்து சேர்ந்தார்கள்.

குஞ்சனும் பெருமிதம் கொண்டவனாக, அணிலை கையில் வைத்து சாகசம் காட்டிக் கொண்டிருந்தான். கூட்டம் இன்னும் கூடி விட்டது.

அவ்வேளை, குஞ்சனைக் குறி வைத்து கல் ஒன்று திடீரென வந்து விழுந்தது. சற்றுப் பெரிய கல்தான். கோவிலுக்குப் பின்பக்கமிருந்து வந்தது. அவனில் பட்டதும் சற்றுத் தடுமாறி விட்டான். அதேவேகத்தில், அணில் கையிலிருந்து நழுவி ஆலமரத்துக்கிளைக்குத் தாவி விட்டது.

நான் திரும்பிப் பார்த்தேன். யாரோ கோயிலின் பின்பக்கமாக மறைவது தெரிந்தது. குஞ்சனும் அதனைக் கண்டு விட்டான். எங்களைத் தள்ளிவிட்டு ஓடினான். அங்கே ஒளிந்திருந்த விக்கி மேல் திடீரெனப் பாய்ந்து கீழேதள்ளி விட்டான். அவன்மேல் ஏறியிருந்து பல முறை அடித்தான். வலி தாங்க மாட்டாமல் அலறிய விக்கியைப் பார்க்க எனக்குப் பாவமாக இருந்தது. அவன் முகத்தில் கிறல் விழுந்து இரத்தம் கசிந்தது. அவன் தினமும் அணிகின்ற நீல நிறச்சேட்டும் கிழிந்து போய் விட்டது.

“நாளைக்கு வாடா. அம்மாவைக் கூட்டிக் கொண்டு வந்து பெரிய வாத்தியாரட்டை சொல்லுவன்” குஞ்சனின் பிடியிலிருந்து ஒருவாறு தன்னை விடுவித்த விக்கி சொல்லிக் கொண்டு ஓடினான்.

“மாடு தின்னி… ஊத்தையா…” கடைசி ஆயுதத்தையும் வார்த்தைகளாக வீசிவிட்டு ஒழுங்கைக்குள் ஓடி மறைந்து விட்டான்.

சண்டை முடிய மனக்குழப்பத்துடன் வீட்டுக்குப் போனோம்.

அன்றிரவு முழுவதும் எனக்குத் தூக்கமே வர வில்லை. புரண்டு புரண்டு படுத்தேன். காற்றில் பனைஓலைகளின் சரசரப்பும், இராக் குருவிகளின் ஒலிகளும் கேட்டன. மனம் குஞ்சன் வாக்களித்த கிளி மீது மையமிட்டுக் கொண்டிருந்தது.

அடுத்தநாள் என்றுமில்லாதபடி நேரத்துடனேயே பள்ளிக்கூடம் வந்து விட்டேன். வழமையாக அவன் வரும் பாதையில் காத்திருந்தேன். நேரமும் கடந்து கொண்டிருந்தது. மாணவர்கள் அணிஅணியாக வந்து கொண்டிருந்தனர். பிந்தி வந்தால் பெரிய வாத்தியாரிடம் மாட்டி விட நேரிடும் என்ற பயம் அவர்களுக்கு. குஞ்சனைத் தேடினேன் அந்தக் கூட்டத்தில் அவனில்லை. சிலர் என்னுடைய வகுப்புத்தோழர்கள். என்னைப் பார்த்து சிரித்து விட்டுப் போனார்கள். குஞ்சனைப் பார்க்கும் ஆவல் எனக்கு. வழி விட்டு பாதை ஓரம் நின்று பரக்கப் பரக்கப் பார்த்தேன்.

அவனைக் காணவில்லை.

சிலவேளை தெற்கே விளாத்திக் கூடல் பக்க மிருந்து வருகிறானா எனப் பார்க்க அந்தப் பாதையில் சிறிது தூரம் ஓடிச் சென்றேன்.

மணி அடிக்கப் போகும் நேரமும் நெருங்கி விட்டது.

அவசரமாகச் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இராசையா வாத்தியாரும் என்னைப் பார்த்தபடி கடந்து போனார். எங்களுக்கு ஆங்கில பாடம் படிப்பிக்கிறவர்.

“டேய்… மணி அடிக்குதடா வா…” என அந்தப் பாதையில் வந்த சிவனொளி கையைப் பிடித்து இழுத்தான்.

குஞ்சனின் நினைவிலிருந்த எனக்கு மணியடித்தது காதில் விழவில்லை.

அவனுடன் வருகின்ற கோபால், மணி, ரூபன், ஜெயக்கொடி எல்லோரும் வந்துவிட்டார்கள்.

ஏமாந்து போய் பள்ளிக்கூடத்துக்கு ஓடி வந்தேன்.

காலைப் பிரார்த்தனைக்காக மாணவர்கள் கூடியிருந்தனார். முடிவில் தலைமை வாத்தியார் நற்சிந்தனை வழங்கினார்.

அன்று கடுகடுத்த முகத்துடன் அவர் பேசியது இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது. ஆசிரியர்களது முகங்களிலும் சோகம் கவிந்திருந்தது.

சிவபாக்கியம் ரீச்சரும் அடிக்கடி சேலைத் தலைப்பினால் கண்களை ஒற்றிக் கொண்டு நின்றதும் நினைவில் நிற்கிறது.

காலைக்கூட்டம் கலைய வகுப்பு வந்து வாங்கி லில் புத்தகப்பையை வைத்துவிட்டு நிமிர்ந்தேன்.

சிவனொளிதான் ஓடி வந்து சம்பவத்தைக் கூறினான்.

பட்ட பனையில் ஏறி கிளி பிடிக்கப் போய், அது பாதியில் முறிய குஞ்சனும் கீழே விழுந்து இறந்து விட்டதாகக் கூறினான்.

இதைக்கேட்ட நான் இதயம் அதிர்ந்து போய் நீண்ட நேரம் அழுதேன். பாவம் குஞ்சன். எனக்காக கிளி பிடிக்கப் போய் இத்துயரம் நிகழ்ந்து விட்டதேயென்ற குற்றவுணர்வு உறுத்திக் கொண்டிருந்தது. பல நாளாக நிம்மதியற்றுத் திரிந்தேன். இப்போதும் அந்தப் பள்ளிக் கூடத்தை காணுகிற வேளையில் குஞ்சனின் நினைவுகளே மனதை அலைக்கழிக்கிறது.

அந்தப் பள்ளிக்கூடம் அன்றிருந்தது போல வல்ல இன்று. பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. கட்டடங்கள் புதிதுபுதிதாக முளைத்து சுற்றவும் மதில் கள், பெரிய இரும்புக்கேற், வாயிலில் முகப்பு வளைவு, கிணறு, மின்சாரம் என பல வசதிகள் கூடி விட்டன. மாணவர்களும் சீருடையில் அழகாக வருகிறார்கள்.

ஆனாலும் குஞ்சனுடன் பொளுதளந்த அந்தக் காத்தவராயர் கோவில், பெரிய ஆலமரம், வெள்ளம் முட்டி நின்ற வயல் காணி, பாதைகள் இன்னும் மிச்சம் மீதியாக, அன்றிருந்தது போல இருப்பது, மனதுக்கு இதமளிக்கிறது.

– ஜீவநதி 12 ஆவது ஆண்டு மலர் மாசி 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *