காலங்கள்
(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கலீர் என, உடைந்து வழிந்த சிரிப்புடன், அவர்கள் இருவரும் உள்ளே வந்தார்கள்.
ரவியின் தோள்களைத் தழுவியபடி ரமணனின் வலது கரம் கிடந்தது.
ரமணனின் கண்களில் எவ்வளவு கூர்மை; குளிர்ச்சி. ஒடிசலாயிருந்தாலும் அவன் உயரமாக இருந்தான். அடர்ந்த புருவங்களுக்கிடையே படீரென இறங்கி, கூர்மை கொள்ளும் நாசி. அதனடியாக அரும்பு கொள்ளும் மீசை. சிவந்த திரட்சி கொண்ட ஈரமான உதடுகள். அவன் பார்ப்பதற்கு அழகாக இருந்தான்.
பின் வளவில் மேயக்கட்டிய பசுவை, கொட்டிற் பக்கம் கொண்டு வந்த முகத்தார், அவனை நிமிர்ந்து பார்த்தார்.
மூப்பும் நரையும் தொந்தரவு செய்யும் அந்த வயதிலும் அவரது பார்வை மிகத் துல்லியமாக இருந்தது.
‘இந்தப் பொடியனை. எங்கையோ. எப்பவோ பார்த்தது போலக் கிடக்கு…!’
மங்கலான நினைவுகளுடன் மல்லாடியவர், தெளிவில்லாமல் குழம்பினார்.
‘மலரைக் கேட்டால் தெரியும்…’ என நினைத்துக் கொண்டார். பசுவைக் கொட்டிலில் கட்டிவிட்டுக் கிணத்தடிப்பக்கம் போனார்.
முகங்கழுவிக் கொண்டிருந்த பொழுது, அவர்கள் கதைத்த தெல்லாம் அவருக்குத் தெளிவாகக் கேட்டது.
“அன்ரி… கொம்பைண்ட் ஸ்ரடி எண்டு வந்த ரவி.. வீட்டிலை ரீ.வி. தான் பார்த்தவன்… அதுவும் கிரிக்கெட்மாச்… இந்த முறையும் இவன் ஏ லெவலிலை கோட்டடிப்பான் போலத்தான் கிடக்குது…”
ரமணன் மலரிடம் முறையிட, ரவி அதை வேகமாக மறுத்தான்.
“இல்லை….இல்லை அம்மா… நல்ல ‘மாச்’ அதுதான்..!”
“இவன் கள்ளன்… எல்லாத்துக்கும் சாட்டுச் சொல்லுவான்…. நீங்கதான் இவனுக்குச் செல்லம் கொடுத்துக் குட்டிச் சுவராக்கிப் போட்டியள்…”
“சரி சரி லெக்சர் அடிச்சது போதும்… வா… வாடா படிப்பம்…” ரமணனை இழுத்தபடி ரவி தனது அறைக்குப் போவதை முகத்தார் பார்த்தார்.
ரமணனின் சாயல் அவரைக் குழப்பியது.
அவரது அடி மனதிலிருந்து அரசல் புரசலாய், ஏதேதோ எண்ணங்கள் புரண்டு புரண்டு வண்டலாய் மேலெழுந்தன. அவரால் எதையுமே நிதானப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
கூடத்து ஜன்னல் வழியாக நழுவி வந்த குளிர்காற்று, பட்டும் படாமலும் அவரைத்தழுவிச் சென்றது. சிறிது நடுங்கியவர் – சாமி அறைக்குப்போய், விபூதி கூடப் பூசிக்கொள்ளாது அவசர அவசரமாக குசினிப்பக்கம் போனார்.
“பிள்ளை மலர்… ஆரிந்தப் பொடியன்..? துருதுரு எண்டு இருக்கிறான்.. படிப்பிலும் படு சுட்டியாய் இருப்பான் போலைக் கிடக்கு…?”
“தம்பியோடை வேலணையிலை படிச்சவர். இஞ்சை இந்துவிலையும் ஏ லெவல் ஒண்டாப் படிக்கிறார். அவருக்கு முதல்தரமே மூண்டு ஏ. மொரட்டுவையில் E1 கிடைக்குமெண்ட நம்பிக்கையோடை இருக்கிறார்… ரவியும் எஞ்ஜினியரிங் செய்ய வேணுமெண்டு ரமணனுக்குச் சரியான விருப்பம். நல்ல குஞ்சு.”
“விருப்பம் மட்டும் போதுமா பிள்ளை. ரவி படிப்பானா…? அவனுக்குப் பௌதிக விஞ்ஞானம் கிடைச்சாலே போதும்… இஞ்சை… எங்களோடை இருந்து… யாழ்ப்பாணத்திலை படிக்கட்டன்…”
“ஏதோ நடக்கிறதைப் பாப்பம் ஐயா… யுத்தம் எங்கடை வாசல் வரை வந்திட்டுது… அதிலையெல்லாம் தப்பிப்பிழைச்சு.. இந்தப் பிள்ளையள் சோதனை செய்தால் போதும்… அந்தப் பட்ட வேம்பான் வழிவிடவேணும்…”
கோப்பியும் கையுமாக ரவியின் அறையை நோக்கி நடந்த மலரை இடைமறித்த முகத்தார் கேட்டார்:
“பிள்ளை… தப்பாநினையாதை.. நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லேல்லை… உந்தப் பொடியன்… வேலணையெண்டா எந்தப்பக்கம்…?”
“இலந்தைக் காட்டுப் பிள்ளையார் கோயிலுக்கு மேற்கால இருந்தவை….. இப்ப எங்களைப்போல இடம்பெயர்ந்து வந்து… கந்தர்மடத்திலை இருக்கினம்…”
அவள் கூறிமுடிப்பதற்கு முன்பாக – மனசின் மூட்டம் கலைந்து, எல்லாமே தெளிவு கொள்ள – அவர் கேட்டார்:
“பிள்ளையார் கோயிலுக்கு மேற்குப் பக்கம் எண்டால்… உவன் நாகன்ரை பேரனே…? செல்லையன்ரை மகனே பிள்ளை…?”
அவரது குரலில் இழைந்த இளக்காரமும் ஏளனமும் அவளை என்னவோ செய்தது. அவள் அருவருப்படைந்தவளாய் அதட்டும் குரலில் பதில் தந்தாள்:
“இல்லை ஐயா… ரமணன் நாகமுத்துவின்ரை பேரன்… செல்லையாவின்ரை மகன்…”
“பள் பொடியன்தானே… அதுக்கு நீ ஏன் குஞ்சங் கட்டிப் பூச்சுசூடுறை பிள்ளை..”
“ஐயா சத்தம் போடாதேங்க… ரமணனுக்குக் கேக்கப் போகுது… எனக்குக் கூச்சமாயிருக்கு…”
“இதிலை என்ன கூச்ச நாச்சம் பிள்ளை… உவர், உந்தச் சீமான் எங்கடை தலையைச் சீவிப் போடுவாரே.. பாளைக் கத்தியும் கையுமா வந்திருக்கிறாரோ.. சாதி கெட்ட பயல்…. உவனை இஞ்சை அடுக்காத பிள்ளை… ரவியிட்டையும் சொல்லிப் போடு..”
“ஐய்யோ… ஐயா உங்கடை சாதித்தடிப்பும் கொழுப்பும் கட்டையிலைதான் வேகும் போல கிடக்கு… படிச்ச மனிசனாயிருந்தும் என்ன கதை கதைக்கிறியள்…. பழசையெல்லாம் மறந்து நன்றி கெட்டதனமாக் கதையாதேங்க…”
“பழசா… நன்றி கெட்டதனமா..? என்னபிள்ளை சொல்லிறை..?” கள்ளப் பூனையின் கரவோடு அவர் ஒதுங்கிக் கொண்டார். அவரது மனம் பழைய நினைவுகளைத் தூசி தட்டியது.
ஐம்பதுகளின் இளமைக் காலம். ஆறு முகத்துக்கு அப்பொழுது இருபது வயது. ஆசிரியப் பயிற்சி முடிந்த கையோடு அவருக்குச் சரஸ்வதியில் முதல் நியமனம் கிடைத்தது. இந்துபோர்ட்டின் அநுசரணை. கிளாக்கர் கந்தசாமியின் உதவி. சாதி வெள்ளாளர் என்ற சிறப்புப் பட்டயம். கையில் புழங்கிய சில ஆயிரங்கள் என்று எல்லாமே அவருக்கு அந்த நியமனத்தைப் பெற்றுத் தந்தது.
சரஸ்வதியில் எஸ்.எஸ்.சி. வரை வகுப்புகள் இருந்தன. அங்கு உயர்சாதி வெள்ளாளருடைய பிள்ளைகளே அதிகம் இருந்தார்கள்.
அவர்களுடன் – ‘டிப்பிறஸ்ட் காஸ்ற்’ என முகச்சுளிப்புடன் முத்திரை குத்தப்பட்ட – அடிநிலை மாணவர்கள் சிலரும் படித்தார்கள்.
ஆறுமுகம் எட்டாம் வகுப்பு ஆசிரியர். அவரது வகுப்பிலும் செல்லையா, வைரமுத்து, பழனி, வேலாயுதம் எனச் சில மாணவர்கள். அம்மாணவர்கள் பல்வேறுபட்ட ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்களிடையே ஓர் ஐக்கியம் இருந்தது. அது அவருக்கு அந்தத்தடித்த சாதிமானுக்கு பெரும் உறைப்பாக இருந்தது. அத்துடன் ஒரு வகைப் பய உணர்வையும் அளித்தது.
அவர் பயந்தது போல சில விஷயங்கள் அங்கு நடைபெறவே செய்தன. பாடசாலையின் உள்ளும் புறமும் சுத்தம் செய்வது இம் மாணவர்களது வேலை. இவரது வகுப்பு மாணவர்கள் மட்டும் சில நாட்களாக அந்தப் பணியில் பங்கு கொள்ளாது முரண்டு செய்தார்கள். அதற்குச் செல்லையாதான் ‘லீடர்’ என்பது ஆறுமுகத்தின் கணிப்பு. வகுப்பாசிரியர் என்ற முறையில் அச்செயல் அவரது முகத்தில் கரிபூசியது போலாகிவிட்டது. ருத்திர தாண்டவராய் மாறிய ஆறுமுகம், தனது கைப்பிரம்பால் அந்தப் பிஞ்சு உடல்களை இரத்தம் வடியும் வரை பதம் பார்த்தார்.
தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் நல்ல மனிதர். சிவபக்தர். சகமனிதனை அவன் சாதியின் அடிமட்டத்தில் இருந்த போதும் நேசிக்கும் இயல்புடையவர். அவர் ஆறுமுகத்தை அழைத்து, ‘ஓய்… உந்தக் குசும்பு வேலை எல்லாத்தையும் மூட்டை கட்டி வையும் காணும்… என்று கண்டித்து வைத்தார்.
தலைமை ஆசிரியரது கண்டிப்பும் போதனையும் ஆறுமுகத்தை அசைக்கவில்லை. எல்லாமே செவிடன் காதில் சங்கொலியாய் பயனில்லாமல் போனது. அவர்தம்போக்கில் தொடர்ந்தும் நடந்து கொள்ளவே செய்தார்.
ஒரு சமயம் செல்லையா, வகுப்பறைக்கு கோயில் விபூதி பிரசாதம் கொண்டு வந்தான். வகுப்பு மாணவர்கள் பூசியதும், அதைத் தனது ஆசிரியரது மேசைமேல் வைத்தான்.
வகுப்பறைக்கு வந்த ஆறுமுகம், விபூதியைப் பார்த்ததும் மிகுந்த குதூகலராய் முகம் மலர்ச்சி கொள்ளக் கேட்டார்:
“என்ன விபூதி சந்தனமா..? எந்தக் கோயில்…?”
“இலந்தைக் காட்டுப் பிள்ளையார் கோயில் சேர்…”
மாணவர்களிடமிருந்து ஒரே குரலில் பதில் வந்தது.
பிரசாதத்தை எடுத்து நெற்றியில் தரித்துக் கொண்டவர், மகிழ்ச்சி பொங்க, மாணவர்களைப் பார்த்துக் கூறினார்:
“வெள்ளாளனா மட்டும் இருந்தால் போதாது… நல்ல சைவனாகவும் இருக்க வேணும்… கல்வியின் பயனே அதுதான் பிள்ளையள்…”
அவரது பேச்சு அங்கிருந்த ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு சாத்தான் வேதம் ஓதுவது போல இருந்தது.
அடுத்து அவர் கேட்ட கேள்விதான் ஆபத்தாய் முடிந்தது. “ஆர் இந்த விபூதி பிரசாதம் கொண்டுவந்தது.. நல்லபிள்ளை, எழுந்து நில்லும் பார்ப்பம்..”
அவர் குரலில் இழைந்த கனிவு, மாணவர்களுக்கு வியப்பையும் ஒருவகை மருட்சியையும் தந்தது.
மெதுவாக இதழ் மலர்த்தி, சிறுசிரிப்புடன், செல்லையா எழுந்து நின்றான்.
ஆறுமுகத்தின் முகம் திடீரெனக் கருமை கொண்டது. அடிபட்ட ஓநாயின் கேவலாய் ஓர் அழுத்தமான ஒலி, அவரது அடித்தொண்டையிலிருந்து வெளிவந்தது.
“உந்தப் பள்ளனே கொண்டு கொண்டு வந்தது…. வந்ததுமில்லாமல் எனக்குப் பிரசாதம் வேறை தாறாரோ… சாதிகெட்ட வடுவா…”
அகங்காரமாகக் கூவியவர், செல்லையாவைத் தனது கைப்பிரம்பால் கிண்ணி கிண்ணியாகக் கிழித்தெடுக்கவும் செய்தார்.
வகுப்பு மாணவர்கள் வாயடைத்துப் போனார்கள். அவர்கள் புலன் ஒடுங்கி, உறைந்த நிலையில் ஆசிரியரையும் அடிபடும் செல்லையாவையும் மாறிமாறிப் பார்த்தார்கள்.
செல்லையா அடி தாளாது துடிதுடித்து மயங்கி விழுந்தான். அப்பொழுது பக்கத்து வகுப்பறையில் இருந்த மிஸ் தனம் பதகளித்து, செல்லையாவை நெருங்கி, முகத்தில் நீர் தெளித்து, ஆசுவாசப் படுத்தினாள். அவள் கூட அவனைத் தீண்டாது, பக்குவமாக நடந்த கொண்டாள். அங்கு வந்த சக ஆசிரியர்கள் அவளது செய்கையைக் கண்டு, கொடுப்புக்குள் லேசாகச் சிரித்துக் கொண்டார்கள்.
ஆறுமுகத்திடம் அடிபட்ட செல்லையா, பக்கத்திலுள்ள வேதப்பள்ளிக் கூடத்துக்கு மாறிப்போனான். அவனுடன் கூடவே, வைரமுத்துவும் வேலாயுதமும் போனார்கள்.
இந்தச் சம்பவத்தால், மாணவர்களது எண்ணிக்கை குறைந்து விடுமோ எனத் தலைமையாசிரியர் பயந்தார். அவர் பயந்தது போல அங்கு எதுவும் நடக்கவில்லை.
செல்லையாவின் தந்தை நாகமுத்து அப்பிராணி. குட்டக் குட்டக் குனியும் இயல்புடையவர். சாதி வெள்ளாளருக்குப் பரம்பரை பரம்பரையாகக் குடிமை பேணி, குலத்தொழில் செய்யும் அவரால், அந்தச் சீலைப்பேன் வாழ்விலிருந்து மேலெழ முடியவில்லை.
‘அவையள் பெரியவை…அவையடை பொல்லாப்பு நமக்கு எதுக்கு.. என ஒதுங்கிக்கொண்டார். அவர் தனது எதிர்ப்பை செல்லையாவை வேதப்பள்ளிக் கூடத்துக்கு மாற்றியதன் மூலம் காட்டிக் கொண்டார்.
காலநகர்வில் பல மாற்றங்கள். ஆறுமுகம் மட்டும் அசங்காமல் கசங்காமல் இருந்தார். அவரது போக்கில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை. சாதிக் கெடுபிடிகளின் தளர்ச்சி கூட, அவரைத் தொட்டதாய்த் தெரியவில்லை. இரு மரபும் தூய சாதி வெள்ளாளராக இருப்பதிலேயே அவர் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார்.
அன்று வெள்ளிக்கிழமை. விரதநாள். நல்லூர் கந்தனைத் தரிசிக்க வந்த ஆறுமுகம், வீதி உலா வந்த உற்சவரைத் தரிசித்த பின்னர், வெளிப்பிரகாரத்துக்கு வந்தார்.
சனம் கும்பல் கும்பலாய் நின்றது. கூடிக்கூடிக் கதைத்தது. அது அவருக்குத் திகைப்பாய் இருந்தது. மனதளவில் கேட்டுக்கொண்டார்:
‘என்ன…? என்ன இது..?’
சந்தேகப்பிராணியாய் மூக்கை நுழைத்துத் துழாவினார். அறிந்து கொண்ட விஷயம் அவரை அசர வைத்தது.
‘ஊரடங்குச் சட்டமா..? இஞ்சை வடக்கிலுமா.? தனிச்சிங்களச் சட்டம், தீச்சுவாலையின் தகிப்புடன் தமிழர் வாழ்வையே சாம்பலாக்கி விடும் போலக்கிடக்கு… ‘லெற்தெம் ரேஸ்ற் இற்..’ என்ற அந்த ஆணவம் மிகுந்த நாக்கு வளைப்பு இவ்வளவு அழிவையும் அனர்த்தங்களையும் கொண்டுவந்து விட்டதே… காலங் கடந்தும் இந்த அழிவுகள் தொடருமா…? அதுவா நமது விதி…?’
அவரது உடல் படபடத்தது. வேர்வை ஆறாகப் பெருகியது. மார்பில் கனமாக ஏதோ அழுத்துவது போன்ற உணர்வு. தொண்டைக்குழியுள் ஏற்பட்ட வறட்சியும் அடைப்பும் அவரை விழி பிதுங்க வைத்தன.
“முருகா நீதானப்பா வழிகாட்டவேணும்…” ஆறுமுகம் முனகினார்.
என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாமல் குழம்பினார். தனித்து நின்று தவித்தார்.
அப்பொழுது அவன், அந்த இளைஞன் புன்முறுவல் தவழ அவர் முன் தோன்றினான்.
‘யார் இவன்…. எங்கையோ பார்த்தது போலக் கிடக்கு..’
“சேர், வீட்டுப்பக்கம் தானே..? ஊரடங்குச் சட்டம் திடீரெனப் போட்டிட்டாங்கள். ஏறுங்க காரிலை போவம்… நானும் ஊருக்குத்தான் போறன்…”
அந்த ரட்சிப்பு, அரவணைப்பு, மரத்துப்போய்க் கிடந்த அவரது மனசை நீவி இதமாகத் தடவியது.
‘எல்லாமே முருகன் அருள்…அவன் செயல்..’ என நினைத்தபடி காரில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.
“தம்பி ஆர்… தெரியேல்லை..”
“நானே….நான் உங்களிட்டை சரஸ்வதியிலை படிச்சனான்… செல்லையா…நாகமுத்துவின்ரை மகன்… சேர் மறந்திட்டார் போலை..”
‘போயும் போயும் பள்ளன்ரை காரிலையே சவாரி செய்யிறன்… வீட்டுக்குப் போன உடனை… தீட்டுக் கழிய தோஞ்சு போட்டுத்தான் மறுவேலை பார்க்கவேணும்…’
நினைவு அவருக்குக் குமட்டலைத் தந்தது. ஓங்காளித்து, காருக்கு வெளியே துப்பினார்.
“விரதமா சேர்…? வெறும்வயிறு. அதுதான் குமட்டுதுபோலை..” என்று கூறிய செல்லையா தொடர்ந்து பேசினான்:
“நான் யாழ்ப்பாணத்தோடைதான்… ஆனைக்கோட்டையில மாமாவோடை நிக்கிறன். இது, இந்தக்கார் அவற்றைதான்… ‘ஹயரிங்கார்..”
ஆறுமுகம், அவனையோ அவனது பேச்சையோ ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை. அவர் பேச்சு ஓய்ந்து மௌனமாக இருந்தார். அவனும் எதுவும் பேசாது காரைச் செலுத்தினான்.
‘தாவாடிக்காரர்களுக்கேயான அந்தச் சாதித்தடிப்பும் செடிலும் இந்த மனிசனிடம் இன்னும் இருக்குது போல…. இதுகின்ரை கொழுப்புக் கரைய நல்லூரடியிலை விட்டிட்டு வந்திருக்க வேணும்..’
மனதில் கறுவிக் கொண்டான். அடுத்த கணம் ‘உது மனிசத் தனமே…? என நினைக்கவும் செய்தான்.
கருப்பாச்சி அம்மன் கோயிலைக் கடந்தபோது அவன் கையெடுத்துக் கும்பிட்டான். மண்கும்பான் பிள்ளையார் கோயிலடியில் இறங்கி வணங்கினான். உண்டியலில் சில்லறை போட்டான். சிறிது விபூதி எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டான். சந்தனமும் இட்டுக் கொண்டான்.
ஆறுமுகத்துக்கு விபூதி சந்தனம் தரநினைத்தவன், சூடு கண்ட பூனையின் தயக்கத்துடன் ‘இப்ப இது வேண்டாமே’ என மனத்தளவில் தடை விதித்துக் கொண்டான்.
பழைய நினைவுகள் நெஞ்சில் நெருட, ஆறுமுகத்தைப் போலவே அவனும் கைப்புடன் காறித்துப்பினான்.
அரசடி கடந்து, சங்கக்கடையடியில் கார் நின்றது. ஆறுமுகம் இறங்கிக் கொண்டார்.
“அப்ப வாறன் சேர்…”
செல்லையா அந்த ஆழ்ந்த மெளனத்தைக் கலைத்தான்.
இடக்கும் இறுக்கமும் குலையாதவராய், ஆறுமுகம் எதுவும் பேசாது, தாவாடிப் பள்ளத்தில் இறங்கி நடந்தார்.
“பிள்ளை மலர், நன்றி கெட்டதனமா…? இது நன்றி கெட்டதனமா…?”
“என்னையா தன்பாட்டிலை பிசத்திறியள்..” கேட்டபடி, மலர் அங்கு வந்தாள்.
முகத்தாருக்கு லேசாகத் தலை சுற்றியது. இடது மார்பில் ஊசி குத்தியது போல ஒரு வலி. உடல் குளிர்ந்து போய் வெடவெடத்தது. மூச்சடைத்தது.
“மலர், எனக்கு மயக்கமா வருகுது… என்னை ஒருக்கால் தாங்கிப் பிடி பிள்ளை…”
கையும் காலும் பதற, துடிதுடித்த அவள்:
“ரமணன்… ரமணன் இஞ்சை வாரும்.. ஒருக்கால் ஓடி வாரும் தம்பி…” என்று கூவினாள்.
ரமணனும் ரவியும் அறையில் இருந்து வெளியே வந்தார்கள். ரவி அம்மாவின் தோள்களைப் பற்றிய படி அவள் பின்னால் ஒதுங்கிக் கொண்டான். விசித்து விசித்து குழந்தை போல் அழுதான். மலராலும் அழுகையை அடக்கமுடியவில்லை, அவளும் அழுதாள். ஆனால், ரமணன் பதட்டப்படாது, எதுவித உணர்வு நிலைக்கும் உட்படாதவனாய், நிதானமாக, மிகமிக நிதானமாக நடந்து கொண்டான். முகத்தாரை அணைத்தபடி தூக்கியவன், அவரது அறைவரை சென்று, அவரைப் பூப்போல கட்டிலில் வளர்த்தினான்.
அடுத்த கணங்களில் சைக்கிளில் விரைந்த ரமணன், செல்லக்கிளியின் காரோடு வந்தான்.
யாழ்ப்பாணத்துக்கு கார் விரைந்தது. ஓ.பி.டி. வரை ரமணன் அவரைத் தூக்கிச் சென்றான்.
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட முகத்தார், மூன்று நாட்களுக்குப் பின்னர் பத்தாம் வாட்டுக்கு மாற்றப்பட்டார்.
‘சேலைன்’இல் இருந்த அவர், மெலிதான நீராகாரம் – பின்னர் இடியப்பம் எனச் சாப்பிடத் தொடங்கினார்.
அன்று, மலர் இடியப்பத்தைச் சொதியில் தோய்த்து முகத்தாருக்கு ஊட்டிக்கொண்டிருந்த பொழுது அவன், அந்தப் பிள்ளை ரமணன் புயல் போல அங்கு வந்தான்.
ஆர்வமாக அவரை நெருங்கி வந்த அவன், அவரைப் பார்த்துக் கேட்டான்: –
“பெத்தப்பா சுகமா இருக்கிறியளா..?”
“பெத்தப்பாவா…? இதென்ன புதிசா ஒரு உறவுமுறை…” மலருக்கு மனசு இளகிக் கரைந்தது.
“ரமணன் அண்டைக்கு வீட்டிலை இல்லாமை இருந்தா… இப்ப.. இப்ப உங்களை உயிரோடை…”
முகத்தாரைப் பார்த்துக் கூறிய மலர் விம்மி விம்மி அழத் தொடங்கினாள். ரமணனுக்கு அருகாக நின்ற ரவியின் கண்களும் கலங்கின.
“அன்ரி சும்மா இருங்க… அழாதேங்க… அவர் கும்பிடிற நல்லூரான்தான் அவரைக் காப்பாத்தி இருக்கிறார்..”
‘நல்லூரானா.. அன்று செல்லையாவின்ரை வடிவிலை… இன்று.. இன்று இந்தப் பிள்ளை ரமணன்ரை வடிவிலையை..?”
சாதி என்றால் எப்பொழுதுமே கற்பாறையாய் இருக்கும் முகத்தாரது போக்கில் லேசான ஒரு நெகிழ்ச்சி; உள் உடையும் ஒரு கசிவு.
“ரமணா….இஞ்சை வாரும்…” கையசைத்து அவர் அவனைத் தன்பக்கமாக அழைத்தார். ரமணன் அவர் அருகாக வந்ததும் அவனது வலது கரத்தை எடுத்துத் தனது இரு கைகளிலும் தாங்கிக் கொண்டார்.
இறுகிக் கிடந்த அவரது முகத்தசை தளர்ச்சி கொள்ள, அவரது முகத்தில் லேசான, மிக லேசான முறுவல் படர்ந்தது.
‘என்ன இது…! அசையாத பொருள் அசைவதும், மாறாத ஸ்திதி மாறுவதும் எப்படி..! எப்படிச் சாத்தியமாகியது…!?’
மலருக்கு எல்லாமே வியப்பாக இருந்தது. எல்லாமே பிடித்துப் போனதான ஒரு போதையின் கிறுக்கம் அவளுக்கு.
ரமணனுக்கு அருகாக வந்த ரவியையும் முகத்தார் அன்பாக அணைத்துக் கொண்டார்.
– தாயகம், சித்திரை 2002.
– புதியவர்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2006, பொன்னி வெளியீடு, சென்னை.
![]() |
க.சட்டநாதன் (பிறப்பு ஏப்ரல் 22, 1940; வேலணை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர். நவீன கலை இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சட்டநாதன், மார்க்ஸிம் கோர்க்கி, ஆன்டன் செக்காவ், புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியவர்களைத் தன் இலக்கிய ஆதர்சங்களாகக் கருதுகிறார். இவரது முதல் சிறுகதை ‘நாணயம்’ 1970-ல் 'வீரகேசரி' இதழில் வெளிவந்தது. 1972-74 காலப்பகுதியில்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: July 12, 2025
பார்வையிட்டோர்: 637
