காற்று மாறி அடிக்கும்




(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோடாரி தலைக்கு மேலே போய், காலுக்கு முன்பாக அழுத்தமாய் விழுகிறது. தொடர்ந்து சப்தம் வருகிறது. புஜங்களும், சதைத்திரட்சிகளும், லயத்துடன் அசைகின்றன.
கறுத்த உடம்பெல்லாம் செம்புழுதி. வியர்வைக் கசிவு. செம்புழுதியை ஈரமாக்கி… சில இடங்களில் கண்ணீராக வழிந்து காக்கி டவுசரை நனைக்கிறது.
நெஞ்சுக்கூடு,களைப்பில் தித்திக்கென்று அடித்துக் கொள்கிறது. மூச்சு இரைக்கிறது. நாசி நுனியில் வியர்வைத் துளி ‘முத்துப் புல்லாக்காக ஆடுகிறது.
கோடாரியின் தாக்குதலில் தாக்குப்பிடிக்க முடியாமல், வேலித்தூர் சிறாயாக பிளவுபட்டுக்கொண்டிருக்கிறது.
விறகு உடைப்பை நிறுத்திவிட்டு, கோடாரியை தரையில் ஊன்றி நின்ற சங்கையா, உடைபட்டுக் கிடந்த சிறாய்க் குவியலைப் பார்த்தான். மனசில் ஒரு நிறைவு ததும்பியது. பலனைப் பார்க்கிற ழவனின் சந்தோஷம்.
“ஒரு லோடுக்கு சரியா வரும்.” திருப்தியான முணுமுணுப்புடன், களைப்பான பெருமூச்சுத் தொடர்கிறது.
வயிறு பசிக்கிறது. வாய் உலர்ந்து எச்சில் கட்டியாகி விட்டது. உச்சி வெயில் நெருப்பாக எரிக்கிறது.
கோடாரியை போட்டுவிட்டு, வாகை மரத்துக்குப் போனான். சைக்கிளில் தொங்கிய தூக்குச்சட்டியை, கீழே எடுத்து வைத்துவிட்டு, பிளாஸ்டிக் கேனில் கொண்டு வந்திருந்த நீரில் முகத்தையும், உள்ளங்கைகளையும் கழுவி, தலைத் துண்டால் துடைத்துக் கொண்டான்.
கஞ்சியை கரைத்துக் குடித்தான். வயிறு நிரம்ப, மனசும் நிறைந்தது. பீடியை நுனியைக் கடித்துத் துப்பிவிட்டு, பற்ற வைத்தான். புகை உள்ளுக்குள் இறங்கிப் பரவி… வெளியேறியது.
உடம்புக்கு சுகமாக – இதமாக இருந்தது.
வாகை மரத்தில் சாய்ந்துகொண்டு, ஒரு காலை நீட்டி, மறு காலை மடக்கி, வகையாக உட்கார்ந்துகொண்டான். பீடியை உறிஞ்சிக் கொண்டான். உடலுக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது.
பார்வை, விறகு கிடந்த இடத்துக்குச் சென்றது. கடைசித் தூர்- அதையும் இன்று உடைத்தாகிவிட்டது. அதைச் சுற்றிலும் கிளறப்பட்டுக்கிடந்த மண்; தூர்கள் வாழ்ந்த குழிகள்.
இங்கே… கும்பல் கும்பலாக வேலி மரங்கள் நின்றன. ‘மேல் விறகு ‘களை வெட்டி டீக்கடைக்காரருக்கு விற்றாகிவிட்டது. தினசரி ஒவ்வொரு தூராக உடைத்து,சிறாய்களாக்கி, லோடு ஏற்றி ஆலங்குளத்தில் வீடு வீடாக அலைந்து விற்றாகி… தீர்ந்துவிட்டது.
‘ஹூம்… நாளை விறகுக்கு எங்க போறது?’ என்ற நினைவில் மனசு அலைந்துகொண்டிருந்தது.
கிழக்காக நீளும் ஆறு, நீரில்லாமல் காய்ந்த நாணல்களும், பொறிந்த மணல்களுமாக லட்சணமில்லாமல் தெரிந்தது.
கரைகளில் அடர்ந்து, பசுமைக் கிளைகளை அசைத்துக் கொண்டு அழகாக இருந்த வேலி மரங்களும், கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டுவிட்டன.
விவசாயம் நொறுங்கிப்போய் வேலை கிடைக்காமல் ‘குடி பெயர’த் தயாராகிவிட்ட எத்தனையோகூலிக் குடும்பங்களுக்கு வேலை கொடுத்து கஞ்சி ஊற்றியது இந்த மரங்கள்தான்.
இந்த வேலி மரங்கள் மட்டும் இல்லாமலிருந்தால்…
எத்தனை ஜீவன்கள் வேலையற்று, பிழைப்புக்கு வழியற்று அகதிகளைப்போல மாவட்ட எல்லைகளைத் தாண்டவேண்டிய அவலம் நிகழ்ந்திருக்கும்!
சங்கையா பெருமூச்சு விட்டான். கோடை காலத்து வெயில் சுள்ளென்று உறைக்கிறது. காடுகளில் பசுந்திட்டுக்களை எங்கேயும் காண முடியவில்லை.
காய்ந்த புற்கள்… செடிகள் பழுத்து உலர்ந்த விதவிதமான இலைகள்…காடே தீப்பற்றி எரிந்து முடிந்ததுபோல் கிடக்கிறது. கானல் அலைகள் ஓடுகின்றன…
கண்கள் எரிந்தது. பார்வையை அகற்றினான். வாகை மர நிழலும்கூட குளுமையாக இல்லை. எங்கு பார்த்தாலும் வறட்சி… வறட்சி…வறட்சி…!
துண்டை மறுபடியும் தலையில் கட்டிக்கொண்டான். சைக்கிளைப் பார்த்தான். பெடலையும், பிரேக்கையும் அன்புடன் தொட்டுப் பார்த்தான். மக்கார்டுகளில் படிந்திருந்த செம்புழுதியை பரிவுடன் கையாலேயே துடைத்தான். அது ஓர் உயிர்ப் பிராணி போல இவனுக்குப் பட்டது. தொழிலின் துணைவன்! கேரியலுடன் இணைந்து நாலு கம்புகள் கட்டப்பட்டு உயரமாக நின்றன.
எழுந்து வெயிலுக்குள் வந்தான். சுள்ளென்று உறைத்தது. இருந்தாலும் பழகிப்போன வெயில்தானே!
உடைக்கப்பட்டுக் கிடந்த சிறாய்களின் பக்கம் வந்தான். வேலிக்கட்டைகளிலிருந்து உரித்து வைத்திருந்த நார்களை விரித்து, சிறாய்கைள அடுக்கினான்.
சின்னச் சின்னக் கட்டுக்களாக மூன்று கட்டுக்கள்.
கேரியலுடன் இணைந்து உயரமாக நின்ற கம்புகளுக்கிடையில் ஒன்றின்மீது ஒன்றாகக் கட்டுகளை அடுக்கி… கயிறைப் போட்டு இழுத்துக் கட்டி… அப்பாடா!… லோடு ஏற்றியாகிவிட்டது.
கோடாரியையும் அரிவாளையும் சைக்கிளில் கோர்த்துக் கொண்டு, எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திவிட்டு வண்டியை உருட்டினான்.
டயர் செம்புழுதிக்குள் பதிந்து கொண்டு சவால்விட்டது. மூச்சைப்பிடித்துக்கொண்டு வண்டியைத் தள்ளினான். சிறாய்கள் வலது உள்ளங்கையில் குத்தி வலியெடுக்கிறது. பழகிப்போன வலிகள் தானே!
இந்த வேலிமரச் சகவாசம் ஏற்பட்டபிறகு எத்தனை முட்கள் தோலைக் கிழித்து ரணப்படுத்தியிருக்கின்றன… இரத்தக் கசிவுகள்…
வாழ்க்கைச் சுமையை இழுத்துச் செல்லும் போராட்டத்தில்… இந்தக் கிழிப்புகள் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. சங்கையா வண்டியை உருட்டினான். ஆற்றின் கரையை ஏறிக் கடந்து வண்டிப்பாதைக்கு வந்து சேர்ந்தபோது-
ஒரு சிகரத்தையே எட்டிப்பிடித்த சந்தோஷம் மனதுக்குக் கிடைத்தது.
பொருத்தமான இடத்தில்… பெடலை மிதித்து ஏறிக் கொண்டான். வண்டி, பாரத்தினால் அலைபாய்ந்தது.
புழுதிக்குள் சரிய முயன்றது. சமாளித்துக்கொண்டான்.
‘நாளை விறகுக்கு எங்க போறது?’
மனசுக்குள் கேள்வி வலுவுடன் நின்றது. நினைவு அதையே சுற்றிச்சுற்றி வந்தது. எப்போதும் போலவே இப்போதும் தெளிவற்ற நம்பிக்கை பக்கபலமாக நின்றது…
‘ம் ம்… பார்ப்போம். நாளைக்கு ஒரு வழி பொறக்காமலா போயிடும்…?’
பெடலை அழுத்தினான். வாழ்க்கை நகர்ந்தது.
காற்று எதிர்த்து வந்து மோதியது. சைக்கிள் மலைத்து திகைத்தது. சிரமப்பட்டு பெடலை மிதித்து, சைக்கிளை நகர்த்தினான்.
கால் ரொம்ப வலித்தது.
விறகின் பாரம்… எதிர்த்து மோதும் காற்று… இவனே மலைத்தான். நிமிர்ந்தான். சிமிண்டாலைக் குழாய் தூரத்தில் தெரிந்தது. முக்கி முக்கி மிதித்தான்.
‘டபார்!’
சப்தத்தில் காது இரைந்தது. புழுதி பறந்தது. குண்டு வெடித்த மாதிரி பயங்கர சப்தம். திடுக்கிட்டுப்போனான்.
முன் சக்கர ட்யூப் வெடித்துவிட்டது. டயரின் கம்பிக் கட்டும் பிய்ந்து, சிவப்பாக பல்லையிளித்தது. ஏற்கனவே நிறைய ஒட்டுக்களால் நிரம்பிப்போன ட்யூப். ஏகப்பட்ட இடத்தில் தையல் விழுந்த டயர். சொல்லி வைத்தாற்போல ஒரேசமயத்தில் ரிட்டையர்டாகிவிட்டது.
மனசு ரொம்ப சோர்ந்து போயிற்று. பாரத்தை நெஞ்சில் தாங்கி நின்றான். இப்போது சிமிண்டாலைக் குழாயைப் பார்த்தான். முன்னை விட தூரத்திற்குப் போய்விட்டது போலிருந்தது.
‘இந்த லோடு… நல்லாப் போனா… பதினைஞ்சு ரூபாய்க்குப் போகும். டயரும் ட்யூப்பும் வாங்கிப் போடாமல், வீடுபோய்ச் சேரமுடியாது… வாங்கணும்னா… முப்பதுக்கு குறையாம ஆகும். மிச்சத்துக்கு என்ன செய்றது?’
நெஞ்சுக்குள் நினைவுகள் மருகித் தவித்தன.
வழியறியாமல் திகைத்துப்போய்… நம்பிக்கையிழந்து பெருமூச்சுவிட்டான். மனசின் அவஸ்தை தாங்காமல், யாரையாவது திட்ட ஆசைப்பட்டான்.
‘எந்த வெறுவாய்க் கட்டை மூஞ்சியிலே முழிச்சி எந்திச்சேனோ… எல்லாமே முட்டுக்கட்டையாயிருக்கு…
இடது கையால் ஹாண்ட்பாரைப் பற்றி… வலது கையால் லோடைப் பற்றி உந்தித் தள்ளினான். வண்டி சீராக உரு மறுத்தது. சிறாய்கள் கையை அழுத்தியது. வேதனைப்படுத்தியது. உடம்பு பூராவும் தளர்ந்து சிரமப்பட்டது.
‘மாட்டேன்னு சொன்னா… விட்டுட்டா போகும்.எதெது வருதோ…அதையெல்லாம் தாங்கித்தானே ஆகணும்…’
சோர்ந்த பெருமூச்சுடன்… தன் வாழ்வையே நொந்துகொண்டு முன்னேறினான். சிமிண்டாலைக் குழாய் போய்க் கொண்டேயிருப்பது போலிருந்தது.
விறகு விற்றுக் கிடைத்த பணம் போக-இருபது கடன் வாங்கி, புது டயர்,ட்யூப் மாட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தபோது…
அந்தக் கேள்வி கனத்து நின்றது;
‘நாளை விறகுக்கு எங்க போறது?’
பதிலும் பக்கத்திலேயே நின்றது: ‘பாக்கலாம்.’
சுவரில் சரிந்து உட்கார்ந்திருந்தான். உடம்பு பூராவும் வலித்தது. ரொம்பக் களைத்திருந்தது. அடிபட்ட உடம்பாக, அலுப்பாக இருந்தது.
வீட்டில் போட்டிருந்த காபியை மனைவி முத்தம்மா தந்தாள். குடித்தான். பீடியை பற்றவைத்துக் கொண்டான். சற்று தெம்பு வந்தது. கண்கள் ஏனோ எரிந்தன. மனம் நினைவுகளுக்குள் புதைந்தது.
“பொழுதாகுது. சோறு காய்ச்சணும். கடைக்குப் போவட்டா?” முத்தம்மாதான் கேட்டாள். சிரத்தையில்லாமல் சொன்னான்:
“போயிட்டு வா. புள்ளையெ எங்க?”
“எங்கயாச்சும் வெளயாடப் போயிருக்கும். சரி… விறகு எம்புட்டுக்கு வித்திக…? ரூவாயைத் தாங்க.”
“துட்டு இல்லே…”
“ஏன், விறகு கடனா போட்டுட்டீகளா?”
‘இல்லே. டயரும் ட்யூப்பும் வெடிச்சிடுச்சி. வாங்கிப் போட்டேன்.”
அவள் பார்வை வித்தியாசப்பட்டது. கேள்வியும் பதிலுமாக நிறம் மாறிய அந்தப் பார்வை, கடைசியில் சைக்கிளின் மீது கோபத்துடன் நின்றது. “நல்ல சைக்கிள்!”- பழித்தாள்.
“உழைச்சு உழைச்சு இதுக்குப் போட்டுட்டுப் போக வேண்டியதுதான். வவுத்துலே ஈரத்துணியையா கட்டிக்கிட்டு உறங்குறது?’
“சரி சரி… அலுத்துப்போய் வந்துருக்கேன். இச்சிலாத்திப்படுத்தாதே… கடைக்குப் போயிட்டு வா.”
“எதை வைச்சு வாங்குறது?”
“கடன் சொல்லி வாங்கிட்டு வா…”
முணுமுணுத்துக்கொண்டே நடந்தாள். சலிப்பா, கோபமா?
இனம் பிரிக்க முடியவில்லை. பிரித்துப் பார்த்துக்கொண்டிருக்க மனசிலும் தெம்பில்லை.
அணைந்துபோன பீடியை, மறுபடியும் பற்றவைத்துக் கொண்டபோது, தீக்குச்சியின் சுடர் நாசி நுனியைச் சுட்டது. எரிச்சலுடன் திட்டிக்கொண்டான்.
“ச்சே,பொழைப்பைப் பாரு… நாய்ப் பொழைப்பு… எத்தனை உழைச்சு என்ன செய்ய? ஊரை ஏமாத்தி உலையிலே போடுறவன் உல்லாசமா திரியுறான்… நம்ம பொழைப்பு இப்படி நாறிக் கிடக்கு…”
நினைவுகள் பசியெடுத்துப்போய் அலைந்தன.
‘சரி… நாளைக்கு லீவு போட்டாக் கட்டுப்படியாகாது. நிலைமை மோசம்… பொழுது மயங்குறதுக்குள்ளே… எங்கையாச்சும் பொறம் போக்குலே… வேலித்தூரு கிடைக்குதான்னு பாத்துட்டு வந்துட வேண்டியதுதான்.’
பெருமூச்சுடன் எழுந்தான். வெளியேறினான். உஷ்ணத்தை இழந்து வெயில் வெறுமையாகிப் போயிருந்தது. காலில் செருப்பு இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டான்.
கடைக்குப் போய்விட்டு வந்த முத்தம்மா… வீதியில் எதிர்பட்டாள்.
“என்ன… வந்தவுடனே கிளம்பியாச்சு… எங்க, குளிக்கவா?”
“இல்லே… இன்னிக்கோட இங்க தூரு தீர்ந்து போச்சு… நாளை லோடுக்கு தூரு வேணுமே… பாத்துட்டு வாரேன்…”
”நம்ம ரெங்கசாமி அண்ணாச்சியோட புஞ்சைக்கு நேரா… ஆத்துக்குள்ளே பத்து இருபது, வேலி மரங்க இருக்கு. இன்னைக்கு அங்கதானே வேலைக்குப் போயிருந்தேன்…”
“அப்படியா!” மனதுக்குள் சந்தோஷம் துளிர்விட்டது. கனம் குறைந்து நெஞ்சு இலேசாயிற்று.
திடுமென்று ஒரு சந்தேகம்.
“மரங்க… அவரு புஞ்சைக் கரையிலே இருக்கா? இல்லே, தள்ளி ஆத்துக்குள்ளே இருக்கா?”
“கரையிலேயும் இருக்கு, ஆத்துக்குள்ளேயும் இருக்கு. நீங்க, கரையிலே இருக்கிறதை விட்டுட்டு… ஆத்துக்குள்ளே இருக்கிறதை வெட்ட வேண்டியதுதானே… ஆறு எல்லார்க்கும் பொதுதானே…”
“அதுவும் சரிதான்… நா பாத்துட்டு அப்படியே குளிச்சிட்டு வந்துடுறேன்.”
“வெருசா..வந்து சேருங்க.”
சங்கையா நகர்ந்தான். அவன் மனதுக்குள் ரெங்கசாமி வந்தார்.
அந்தக் கிராமத்திலேயே பெரிய புள்ளி. நிலபுலன் நிறைய. வரவு செலவு ஜாஸ்தி. ‘மடிப் பை’யில் வாடாத செழுமை. விபரமானவர். நாலெழுத்துப் படித்தவர். கோடு, நாடு கண்டவர்.
யாரும் அவர் பேச்சுக்கு, மறுபேச்சு பேசுவது கிடையாது. பயம். அவரை எதிர்த்து எவரும் எதுவும் செய்வதில்லை. சகலத்தையும் தனக்கு சாதகமாக வளைத்து விடுவதில் வல்லவர் என்பதை ஏற்கனவே சில சம்பவங்களில் நிரூபித்திருக்கிறவர். ‘பொசுக்’ கென்று போலீஸ் போய்விடுவார், சின்னச் சின்ன விவகாரங்களுக்குக்கூட. அவரை அந்த ஊரில் சில இளவட்டங்கள்தான் தைர்யமாக விமர்சிப்பார்கள்.
போகிற போக்கில் கடையில் பத்து பைசாவுக்கு பீடி வாங்கிக் கொண்டு, ரெங்கசாமி புஞ்சைக்குப் போய்ச் சேர்ந்தான்.
ஆற்றின் கரையில் புஞ்சை அமைந்திருந்தது.
எல்லாப் புஞ்சைகளும் கரையில் நூல் பிடித்தாற்போல வரிசையாக அமைந்திருக்க… இவர் நிலம் மட்டும்… ஆற்றுக்குள் கொஞ்சம் முகத்தை நீட்டி துருத்திக்கொண்டிருந்தது.
புஞ்சைக்கு கரை சேர்க்கிற சாக்கில்… ‘விஸ்தரிப்பு’ நடந்து நாலைந்து வருடமாகிவிட்டது.
சில சமயங்களில்-
கரையைத் தாண்டி புஞ்சைக்குள் ‘விழுந்த’ ஆடுகளை விரட்டிவிட்டு, ஆட்டுக்காரனை மிரட்டுவார் ரெங்கசாமி. கொஞ்ச தூரம் தள்ளிச் சென்ற பிறகு, அவன் வைது விட்டுப் போவான்.
“ஆத்தையெல்லாம் மறிச்சு புஞ்சையாக்கிக்கிட்டா… ஆடு எங்க போய் மேயுமாம் தாயோ…” கெட்ட வார்த்தைகள் தொடர்வதை சங்கையாவே, பலமுறை காதுபடக் கேட்டிருக்கிறான்.
நினைவுகளை உதறிவிட்டு நடப்புக்கு வந்தான். பம்ப்ஷெட்டில் மோட்டார் தடதடத்துக் கொண்டிருந்தது. தண்ணீர் பீச்சியடிப்பது- மாலை வெயிலுக்கு உருக்கி வார்த்த வெள்ளியாக-அழகாக-இருந்தது.
‘ம்ம்… சரி, ஆத்துக்குள்ளே இறங்கிப் பாத்துட்டு, குளிச்சிட்டுப் போகவேண்டியதுதான்.’
குளித்துவிட்டுப் புறப்படும்போது திருப்தியுடன் சென்றான்.
‘நாளை லோடுக்கு இங்க வந்துட வேண்டியதுதான். இருபது நாள் பாடு ஓடும்…’
விடிந்தது. இன்னும் முழுதாக இருள் பிரியவில்லை. வழக்கம் போல சாப்பிட்டுவிட்டு… கேனில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு- முத்தம்மா நிரப்பித் தந்த தூக்குச்சட்டியை வாங்கிக்கொண்டு- கோடாரியையும் ‘கும்பிட்டு’ எடுத்துக்கொண்டு- கிளம்பினான்.
மனசில் உற்சாகம். நேற்று வரை கனத்த பிரச்னை… கற்பூரமாக கரைந்துபோன சந்தோஷம். உள்ளுக்குள் இன்ப ராகம்.
வேலையை ‘கும்பிட்டு விட்டு’ ஆரம்பித்தான். விறகுக் கட்டையை வெட்டிச் சரித்தான். பசுமையான முட்குவியல் ஒதுக்கப்பட்டு, மேல் விறகு நறுக்கிக் குவிக்கப்பட்டது.
பழகிப்போன வேலை. அதிலும் குளிர்ந்த காலை நேரம். வேலை விறுவிறுவென்று சாய்ந்தது.
அரிவாளைப் போட்டுவிட்டு, கோடாரியை எடுத்தான்.
மேல் விறகை இழந்து, பூமிக்கு மேலே நாலடி உயர்- அகலத்தில் நின்ற தூரில் கோடாரியை வீச ஆரம்பித்தான்.
சிறாய்கள் குவிந்தன. மதியத்துக்குள் வேலை முடிந்தது.
சிறாய்களைகட்டுப்போடத்துவங்கினான். மனசுக்குள் ஆனந்த ராகம் அலைமோதியது…
“எவன்டா இங்க விறகு வெட்டுறது?”
அதட்டலாக – அபஸ்வரமாக- வந்த குரல். திடுக்கிட்டுத் திரும்பினான். ரெங்கசாமி ‘வேகு வேகெ’ன்று வந்து கொண்டிருந்தார். ‘கோடு, நாடு கண்டவர். மனசுக்குள் சிலீரென்று ஓடிப் பரவியது பயம்.
“ஏம்மாமா… நாந்தான்” – நாக் குழறியது.
‘எதுக்காகப் பயப்படணும்? ஆறு, புறம்போக்குலே வெட்டுறதுக்கு யாருக்குப் பயப்படணும்…?’ அவனையும் மீறி மனசு பயந்தது.
ரெங்கசாமி ஆங்காரமாக நின்றார்.
“என்ன நாந்தான்? புஞ்சைக்கு நேரா இருக்குற விறகை வெட்டுனா…எப்படி? யாரைக் கேட்டு வெட்டுனே?”
“என்ன மாமா… ஆத்துக்குள்ளேதானே வெட்டியிருக்கேன்?”
“ஓகோ… சட்டம் பேசுறீகளோ… எனக்கும் மேலே சட்டம் படிச்சிட்டீயோ…?”
மிரட்டலாக உறுமினார்.
“இல்லே மாமா… எங்களுக்கும் இதை விட்டா… பொழப்புக்கு வேறெ வழியில்லையே?”
“அதுக்கு யார் என்ன செய்றது? ஊரான் புஞ்சையிலே வெட்டுனா… விட்டுடுவாகளா?”
“இது உங்க புஞ்சையில்லையே…”
“பொறகு? உங்கப்பன் வீட்டுப் புஞ்சையா?”
“மரியாதையா பேசணும். வார்த்தை தவறக்கூடாது.
“என்னடா… மிரட்டுதே? மயிராண்டி… உனக்கெல்லாம் என்ன மரியாதை…?”
அவருக்கு மூச்சு இரைக்கிறது. கோபத்தில் உடலெங்கும் நடுங்குகிறது. உதடுகளும், முகமும் கடுகடுத்துப் போயிருக்கிறது.
இவர் எதுக்காக வந்து மிரட்டுகிறார்? என்ன காரணம்? ஆற்றுக்குள் வெட்டினால் இவருக்கென்ன வந்தது? ஆறு எல்லோருக்கும் பொதுதானே!
ஒருவேளை… ஆற்றுக்கும் சேர்த்து ‘சொந்தம்’ கொண்டாடுகிறாரோ?…
“சரி… இப்ப என்ன செய்யணும்ங்கிறீர்?”
“என்ன செய்யணுமா? இங்க மத்த எவனும் வந்து வெட்டக் கூடாதுன்னா… வெட்டக்கூடாதுதான்”.
“ஆறு புறம்போக்கு. எல்லோருக்கும் பொதுதானே? ஆத்துக்குள்ளேதானே வெட்டியிருக்கேன். உங்க புஞ்சைக்குள்ளே வெட்டலியே.”
“விட்டா…எங்க வேணும்னாலும் வெட்டுவீக!”
“நீங்க மட்டும் ஆத்தையும் சேர்த்து புஞ்சையாக்கலாமோ?”
ரெங்கசாமியிடம் ஒரு ஸ்தம்பிப்புத் தெரிந்தது. அந்தரங்கத்தைத் தொட்டு உலுக்கிவிட்டானே?
அவருக்குக் கண்கள் சிவந்து சுருங்கின… ஆத்திரத்தில் மட்டியைக் கடித்தார். கடைசியாக, கறாராகக் கேட்டார்.
“இப்ப விறகைப் போட்டுட்டுப் போறீயா… இல்லையா?”
‘வசதியானவர்… ‘கோடு, நாடு’ கண்டவர்… எதிர்த்துப் பேச எவரும் பயப்படுவார்கள்.
மனசு பயந்தாலும், துணிச்சலாகக் கேட்டான்:
“இல்லேன்னா… என்ன செய்வீக?”
“அரசாங்கத்துக்குச் சொந்தமான மரங்களை சீரழிச்சதாக பாரஸ்ட்டுக்குப் புகார் பண்ணுவேன். நாளைக்கே போலீஸ் வரும். கேஸ் நடக்கும். உன்னாலே… அதையெல்லாம் தாங்கிக்க முடியுமா?” மனசு நடுங்கிக் குலுங்கியது. இருப்பினும் இந்தக் கேள்வியும் குடைந்தது.
‘அதே மரங்களை- நிலத்தை- ஆக்கிரமித்துக்கொண்ட இவரை மட்டும் அந்த அரசாங்கம் ஒன்னும் செய்யாதா? வலுத்தவனுக்கு ஒரு ஞாயம், இளைச்சவனுக்கு ஒரு ஞாயமா?’
ரெங்கசாமி கடைசியாகக் கூறினார்:
“ஒழுங்கு மரியாதையா சொல்றேன். இதை இப்படியே போட்டுட்டுப் போயிடணும். எடுத்துட்டுப் போனே… நாளைக்கே புகார் பண்ணுவேன்.”
போய்விட்டார்.
பிரத்யட்ச நிலைமைகள் அவனைப் பயமுறுத்தினாலும். அக்ரமத்தைத் தாங்காமல் மனசு கொதித்தது.
போய்க்கொண்டிருக்கும் அவரைப் பார்த்தான்.
‘இப்படியே கோடாலியை எடுத்து அவர் முதுகு மேலே வீசிவிடலாமா…’
வெட்டிக் கிடந்த விறகை- கொட்டிக் கிடந்த உழைப்பை- குதறப்பட்டுக் கிடந்த நியாயத்தை – பார்த்தான் – மனசு கிடந்து தவித்தது.
அழுகையும்,ஆத்திரமும் அலைமோதியது.
‘அட, அக்ரமக்காரப் பாவிகளா… தலைகால் தெரியாம ஆடாதீக…ஆட்டம் ரொம்ப நாளைக்கு ஆட முடியாது. இந்த காத்து இப்படியே அடிக்காது… மாறியும் அடிக்கும்டா… பாவிகளா…’
குமையும் நெஞ்சுடன் அரிவாளையும், கோடாரியையும் எடுத்துக்கொண்டு, வெறுமையாக சைக்கிளுக்கு வந்தான். உடம்பு தளர்ந்தது. ஆனால், மனம் புகைந்துகொண்டிருக்கிறது.
– செம்மலர், ஆகஸ்ட் 1980.
– மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் (பாகம்-2), முதற் பதிப்பு: 2002, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |