கார்காலக் கதை
கதையாசிரியர்: கா.அப்பாத்துரை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
குடும்பம் சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 17, 2021
பார்வையிட்டோர்: 27,174
(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முன்னுரை
ஷேக்ஸ்பியர் உலகறிந்த புலவர் என்பது யாவரும் அறிவர். அவர்தம் நாடகங்கள் நவில்தொறும் நயம் பயப்பன. ஆங்கிலத்தில் சார்லஸ் லாம் (Charles Lamb) எழுதிய ஷேக்ஸ்பியர் கதைகளைத் தழுவியே தமிழில் கதைகளும் எழுதப்பெற்றுள்ளன. இப்போது மூன்றாம் புத்தகமாக நடுவேனிற் கனவு (A Midsummer Night’s Dream), சிம்பலின் (Cymbeline), கார்காலக் கதை (The Winter’s Tale), ஒதெல்லோ (Othello) ஆகிய நான்கு கதைகளும் வெளிவருகின்றன. இப்பதிப்பில், சிறுவர்கட்குக் கதைகள் நன்றாய் மனத்திற் பதியும் பொருட்டுக் கதை உறுப்பினர்களையும் கதைச் சுருக்கத்தையும் ஒவ்வொரு கதையின் முகப்பில் எழுதிச் சேர்த்திருக்கிறோம். இளைஞர்கள் படித்து இன்புறத்தக்க எளிய இனிய நடையில் எழுதப்பட்டிருக்கின்றன. ஆதலின், இவற்றைக் கற்கும் மாணவர் அறிவு வளர்ச்சியுடன் மொழித் தேர்ச்சியும் பெறுவர் – சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
கதை உறுப்பினர்
ஆடவர்
1. லியோன் டிஸ்: ஸிஸிலியத் தீவின் அரசன்.
2. பாலிக்ஸெனிஸ்: பொஹீமியாவின் அரசன் – லியோன்டிஸின் நண்பன் – பிளாரிஸெல் தந்தை.
3. மரமில்லஸ்: லியோன்டிஸ் மகன் – தாய் துயர் கேட்டிறந்தவன்.
4. காமில்லோ: பாலிக்ஸெனிஸுக்கு உண்மை நண்பனாயிருந்து உடன் சென்றவன் – இறுதியில் பிளாரிஸெல் பெர்திதா காதலை ஏற்க முன்வந்தவன்.
5. அத்தி கோனஸ்: பெருமகன் – பாலினா கணவன் – பெர்திதாவைக் கடல் கடந்து அகற்றிவிட்டு வருகையில் கரடி வாய்ப்பட்டவன்.
6. பிளாரிஸெல்: பாவிக்ஸெனிஸ் மகன் – பெர்திதா காதலன் – மாற்றுருவில் இடையர் வகுப்பு இளைஞன் – தெரரிக்ளிஸ்.
பெண்டிர்
1. ஹெர்மியோன்: லியோன்டிஸ் மனைவி.
2. பாலின: அந்திகோனஸ் மனைவி – ஹெர்மியோனை மறைவாக வைத்துக் காத்தவள்.
3. பெர்திதா: அரசனால் அந்தி கோனஸ் மூலம் கடல் கடந்து விடப்பட்ட பெண் மகவு – இடையர் வளர்த்து பிளாரிஸெல் காதலியானவள்.
கதைச் சுருக்கம்
ஸிஸிலி அரசன் லியோன் டிஸ் தன் நண்பனாகிய பொஹீ மியா அரசன் பாலிக்ஸெனிஸைப் பலநாள் விருந்திற்கப் பால் தான் வற்புறுத்தியபோது தங்காமல் மனைவி வற்புறுத் தித் தங்கினதால் பொறாமை கொண்டு அவனைக் கொல்ல நண்பனாகிய காமில்லோப் பெருமகனை ஏவ, அவன் பாலிக் ஸெனிஸிடம் எல்லாம் சொல்லி உடன் சென்று விட்டான். ஹெர்மியோனையும் சிறையிலிட்டுத் துன்புறுத்த அது பொறாத அவள் சிறுவன் மாமில்லஸ் இறந்தான். பின் பிறந்த பெண் மகவையும் அந்திகோனஸ் பெருமகன் மூலம் கடல் கடந்து விட்டுவிடத் தூண்டினான். அங்ஙனம் விட்டு மீள்கையில் அவனைக் கரடி விழுங்கிற்று, ஹெர்மியோனிடம், அரசன் இரங்குமுன், அவள் இறந்தாள் என்று கூறி அந்தி கோனஸ் மனைவியாகிய பாலினா அவனைக் காத்தாள்.
விடப்பட்ட மகவு இடை யரால் எடுக்கப்பட்டுப் பெர் திதா என்ற பெயருடன் வளர்ந்தது. இடையனுருவில் வந்த பாலிக்ஸெனிஸ் மகன் பிளாரிஸெல் அவளைக் காதலித்து அரசன் அறிந்து சீறியும் பொருட்படுத்தாதிருப்ப, காமில்லோ இரங்கி லியோன் டிஸ் மூலம் அவர்களைச் சேர வைக்க நினைக்க, லியோன் டிஸ் பெர்திதாவைக் கண்டவுடன் அவள் தன் மனைவி போன்றிருப்பது கண்டு இடையனை உசாவ உண்மை விளங்கிற்று. பின் பாலினாவும் உருவம் காட்டுவதாகக் கூறி ஹெர்மியோனைக் காட்ட இதற்கிடை யில் பாலிக்ஸெனிஸும் வர, அனை வரும் ஒருங்குசேர வளர்ந் தனர். பிளாரிஸெல் பெர்திதாவை மணந்தான்.
3. கார்காலக் கதை
க. நட்பின்பம்
லியோன்டிஸ் என்பான் ஸிஸிலித் தீவின் அரசன். அவன் மனைவி அழகிலும் கற்பிலும் மிக்க ஹெர்மியோன் ஆவள். அவளது இல்வாழ்க்கை பொன் மலரும் நறு மணமும் பொருந்திய தென்னும்படி குறைவிலா நிறைவு பெற்றிருந்தது.
*பொஹீமியா நாட்டரசனாக பாலிக்ஸ்ெனிஸ் லியோன்டிஸினுடைய பழைய பள்ளித்தோழனும் உற்ற நண்பனு மா வான். தனது மணவினையின் பின் லியோன்டிஸ் பாலிக்ஸெனிஸைக் கண்டதே கிடை யாது. கடித மூலமாக ஒருவரை ஒருவர் நலம் உசாவு வது மட்டும் உண்டு.
லியோன்டிஸ் அவனை நேரில் கண்டு உறவாடுவ துடன் தன் அரிய மனையாளுக்கு அவனை அறிமுகம் செய்து வைக்கவும் வேண்டும் என்று நெடுநாள் எண்ணிக் கொண்டிருந்தான். பலதடவை அழைப்பு அனுப்பியபின், இறுதியில் ஒரு நாள் பாலிக்ஸெனிஸ் அவற்றிற் கிணங்கி லியோன்டிஸைப் பார்க்க வந்தான்.
முதலில் லியோன்டிஸுக்கு நண்பனது வரவால் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லை யில்லை. தனது இன்ப வாழ்விற் கிருந்த ஒரே குறை இப்பொழுது நீங்கிற் றென அவன் உணர்ந்தான். பழைய பள்ளித்தோழ னது வரவினால் பழைய பள்ளி நினைவுகளும் பள்ளி யுணர்வுகளும் ஏற்பட்டது மட்டுமன்றித் தானும்பழையபடி பள்ளிச் சிறுவன் ஆனதாகவே அவன் உணர்ந்தான். நண்பரிருவரும் பேசும் இப்பழங்காலப் பேச்சுக்களையும் அதனால் கணவன் கொண்ட களிப் பினையும் பார்த்து ஹெர்மியோனும் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.

சிலநாள் லியோன்டி ஸுடன் தங்கி யிருந்தபின் பாலிக்ஸெனிஸ் நண்பனிடமிருந்து விடைபெற்றுக் கொள்ள விரும்பினான். லியோன்டிஸ் தன் நண்பனை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவனை இன்னும் சில நாள் தங்கியிருக்கும்படி வற்புறுத்தினான்.
லியோன்டிஸ் எவ்வளவு சொல்லியும் பாலிக் ஸெனிஸ் தான் இனிப் போக வேண்டியதுதான் என்று சொல்லிவிட்டான். இதனால் மனமுடைந்த லியோன்டிஸ் ஹெர்மியோனிடம் சென்று, ‘ நீயாவது அவனை வற்புறுத்தி இருக்கச் செய்யலாமே’ என்றான். அதன் படி அவள் பாலிக்ஸெனிஸினிடம் சென்று பெண் களுக் கியற்கையான நயத்துடன் அவனை இன்னுஞ் சிலநாள் தங்கியிருந்து போகலாம் என்று வேண்டி னாள். அவளுடைய இன்மொழிகளை மறுக்கக்கூடாமல் பாலிக்ஸெனிஸ் தன் முடிவைச் சற்றுத் தள்ளிவைக்க உடன்பட்டான்.
உ. பொறாமைப் பேய்
தனது வேண்டுகோளை மறுத்த தன் அன்பன் தன் மனைவியின் வேண்டுகோளை ஏற்றான் என்ற செய்தி லியோன்டிஸ் மனத்தில் சுறுக்கென்று தைத்தது. அது நயமான மொழிகளாலும் இருவர் வேண்டுகோளின் ஒன்றுபட்ட ஆற்றலாலுமே ஏற்பட்டதென்று அவன் மனத்தில் அப்போது படவில்லை. அதற்குக் காரணம் கள்ளங்கபடற்றிருந்த அவன் உள்ளத்தில் பொறாமைப் பேய் புகுந்து கொண்டதேயாம்.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பர். அஃதேபோன்று மனத்தில் இக் களங்க நினைவு ஏற்பட்டது முதல் அதற்குமுன் இயல்பாகத் தோன்றிய சிறு சிறு செய்திகளும் இப்பொழுது களங்கமுடையனவாகத் தோன்றின. கணவனுக்கு நண்பன் என்ற முறையில் ஹெர்மியோன் பாலிக் ஸெனிஸுக்குக் காட்டிய மதிப்பும் அன்பும் எல்லாம் லியோன்டிளின் மனத்தில் களங்க நினைவுகளாக மாறின. அவனது பால் போல் தெளிந்த இனிய உள்ளம் இக்கடுப்பினால் திரைந்து தீமையும் கொடுமையும் நிறைந்ததாயிற்று.
இறுதியில் லியோன்டிஸ் தன் பெருமக்களுள் ஒருவனும் நண்பனுமான காமில்லோவிடம் தனது மனத்துள் எழுந்த எண்ணங்களை வெளியிட்டான். காமில்லோ உண்மையும் ஒழுக்கமும் அமையப்பெற்ற வன். எனவே முதலில் அரசனது கருத்துத் தப்பானது என்று விளக்க முயன்றான். ஆனால் லியோன்டிஸ் அதனைச் செவியில் ஏற்றுக்கொள்ளவில்லை. அதோடு பாலிக்ஸெனிஸை நஞ்சிட்டுக் கொல்லுமாறும் அவன் காமில்லோவைத் தூண்டினான். காமில்லோ அதற்கு இணங்குவதற்கு மாறாக, இம் மாற்ற முழுமையும் பாலிக்ஸெனிஸுக்கு அறிவித்து அவனுடன் அவன் நாடாகிய பொஹீமியாவுக்கே போய்விட்டான்.

தன் கருத்து ஈடேறாமற் போனது லியோன்டி ஸின் சீற்றத்தை இன்னும் மிகைப்படுத்தியது. அவ் வெறியில் அவன் தன் மனைவியைச் சிறையிலிட்டான். அவர்களுக்கு அப்போது மாமில்லஸ் என்ற ஒரு மைந் தன் இருந்தான். தாய்க்கு நேர்ந்த அவமதிப்பையும் துன்பத்தையும் நினைந்து நினைந்து அவனும் வாடித் துரும்பாக மெலிந்தான். அப்பொழுதும் அரசன் மனம் கனியவில்லை’.
ஹெர்மியோனுக்குச் சிறையில் ஒரு பெண் மகவு பிறந்தது. மகவின் முகத்தைப் பார்த்தாவது தன் கணவன் மனம் மாறக்கூடும் என்று அவள் அடிக்கடி நினைப்பாள். ஆனால் கொந்தளிக்கும் புயல்போலச் சீறிக்கொண்டிருக்கும் அரசன் முன் அக் குழந்தை யைக் கொண்டுபோக யாருக்கும் மனம் துணியவில்லை. இதை யறிந்து அந்நாட்டுப் பெருமக்களுள் ஒருவனான 2 அந்திகோனஸ் என்பவன் மனைவி ‘பாலினா அப்பணி யைச் செய்வதென முன் வந்தாள். ஹெர்மியோன் அவளை வாயார வாழ்த்தி, “உன் நல்லெண்ணம் ஈடேறுவதாக!” என்று சொல்லிக்கொண்டு குழந் தையை அவளிடம் ஒப்படைத்தாள்.
குழந்தையை அரசன் முன் கிடத்திப் பாலினா கல்லுங் கரைய ஹெர்மியோனுக்காகப் பரிந்து பேசிப் பார்த்தாள். லியோன்டிஸ் அதற்குச் சற்றும் இணங்காதது கண்டு, குழந்தையைத் தனிமையாக இருக்கும் போது பார்த்தாவது அவன் மனம் இளகக்கூடும் என்று நினைத்து அதனை அங்கேயே விட்டு விட்டுப் போனாள். இதிலும் அவள் நினைவு தவறாகவே முடிந் தது. லியோன்டிஸ் குழந்தையைக் கடல் கடந்து ஆளில்லா இடத்தில் விட்டுவிடும்படி அந்தி கோனஸை ஏவினான். அந்தி கோனஸும் அப்படியே விடச் சென்றான்.
குழந்தைக்கு நேர்ந்த முடிவு கேட்டு ஹெர்மி யோன் உள்ளம் அனலிலிட்டமெழுகுபோல் உருகிற்று.

ஆனால், அதனை நினைந் தழுவதற்குக் கூட அவளுக்கு நேரமில்லை. அவள் குற்றத்தை நாட்டுப் பெருமக்கள் நிறைந்த மன்றத்தில் உசாவித் தீர்ப்பளிக்க மன்னன் முனைந்தான். அக்குற்றத்தின் முழு உண்மையையுங் கேட்டு வரும்படி தெல்பாஸ் என்ற இடத்திலுள்ள பேர்போன குறி சொல்லுந் தெய்வத்தினிடம் அரசன் இரு தூதர்களை அனுப்பி யிருந்தான். அவர்கள் அப்போது திரும்பி வந்து, ‘ ஹெர்மியோன் குற்றமற்ற வள். பாலிக்ஸெனிஸும் அப்படியே. லியோன்டிஸ் பொறாமை வாய்ப்பட்டுக் கொடுங்கோலனாய் விளங்கு கிறான். இழந்த குழந்தை பிழைத்து வந்தாலன்றி, அவனுக்கு வேறு பிள்ளையுமில்லை’ என்று குறிகாரன் எழுதிய துண்டைக் கொடுத்தார்கள். அரசன் அம் மொழிகளையும் சட்டை பண்ணாமல் ஹெர்மியோன் மீது குற்றஞ் சாட்டினான்.
இத்தனையுங் கேட்டு முன்னமேயே நலிவுற்றிருந்த மாமில்லஸ் இறந்து போனான். லியோன்டி ஸுக்கு இப்போது அரசியிடம் சற்று இரக்கம் வரும்போ லிருந்தது. ஆனால், அதற்குள் பாலினா அவனிடம் வந்து, ‘ஹெர்மியோன் இறந்துபோய் விட்டாள்’ என்று கூறினாள்.
லியோன்டிஸின் மனம் இப்போது தான் தன் நிலைக்கு வந்தது. தன் மனைவி கெட்டவளாயிருந்தால் இவ்வளவு மனஞ் சிதைந்து மடிந்திருக்கமாட்டாள் என்று அவனுக்குப் பட்டது. அதோடு மாமில்லஸ் இறந்ததால், குறிகாரன் மொழிகளும் உண்மை என ஓரளவு தெளிவு படுத்தப்பட்டன. இழந்த அச் சிறு பெண்மகவு அகப்பட வில்லையானால், தன் அரசாட் சிக்கு உரிமையான பிள்ளை வேறு இனி இருக்கமுடியாதன்றோ?
கூ. ஆவாரை யாரே அழிப்பர்!
நிற்க குழந்தையை ஆளில்லா நாட்டுக் கடற் கரையில் எறியவேண்டும் என்று சென்ற அந்திகோன ஸின் கப்பல் பாலிக்ஸெனிஸின் நாடாகிய பொஹீமி யாப் பக்கமே புயலால் கொண்டு போகப் பட்டது. குழந்தையை அவனும் அங்கேயே நல்லாடை அணி களுடன் விடுத்துச் சென்றான். குழந்தையின் பிறப்பு முதலிய விவரங்களைக் கூறும் ஒரு கடிதமும், பெர்திதா (= இழந்தவள்) என்ற பெயர் எழுதிய துண் டொன்றும் அவ்வாடை யணிகளுடன் சேர வைக்கப் பட்டன. குழந்தையை விட்டுவிட்டுச் செல்கையில், அந்தி கோனஸ் அத் தீமைக்குத் தண்டனை பெற்றான் என்று சொல்லும் வண்ணம் கரடி ஒன்றாற் கொல்லப் பட்டான்.
ச. சேராதவரையும் சேர்த்துவைக்கும்
காதல் பெர்திதா என்னும் அக்குழந்தையை ஓர் ஏழை இடையன் கண்டெடுத்தான். அவளுடன் வைக்கப் பட்டிருந்த அணிகலன்களுள் சிலவற்றை விற்று அவன் செல்வமுடையவனாகி வேறோரூரிற் சென்று வாழ்ந்தான். பெர்திதா தான் யார் என்ற அறிவின்றி அவன் மகளாக அவன் வீட்டிலேயே வளர்ந்து வந் தாள். ஆயினும் அவள் தன் தாயின் ஒரு புதிய பதிப்பே என்னும்படி வடிவழகியாய் விளங்கினாள்.
பாலிக்ஸெனிஸின் புதல்வனான பிளாரிஸெல் என் பவன் ஒருநாள் வேட்டையாடி விட்டு வரும்போது பெர்திதாவைக் கண்டான். அரம்பையரும் நாணும் அழகுடைய அம் மெல்லியலாள் இடைச்சேரியில் இருப்பது கண்டு வியப்படைந்தான். அரசிளங்குமரன் என்ற நிலையில் அவளை அடுத்தால் எங்கே அவளிடத் தில் அன்பிற்கு மாறாக அச்சமும் மதிப்பும் மட்டும் ஏற்பட்டு விடுமோ என்று அவன் அஞ்சினான். அதனால் தானும் ஓர் இடைக்குல இளைஞன் போன்ற மாற்றுருக் கொண்டு தொரிக்ளிஸ் என்ற பெயர் பூண்டு, அவள் நட்பையும் காதலையும் பெறுவானானான்.
வர பெர்திதாவின் காதல் வலையிற்பட்டு பிளாரிஸெல் இடைச்சேரியிலேயே பெரும்பாலாகத் தனது நாளைக் கழிக்கத் தொடங்கினான். பாலிக் ஸெனிஸ் தன் மகன் அடிக்கடி அரண்மனையை விட்டுப் போய்வருவதையும் அரண்மனையில் அவன் கால் பாவாததையுங் கண்டான். எனவே, ஒற்றர்களை ஏவி அவன் எங்கே போகிறான் என்று பார்த்து வரும்படி அனுப்பினான். அவர்களால் பிளாரிஸெல் இடைச் சேரியில் ஒரு மங்கையைக் காதலிக்கிறான் என்று அறிந்தான்.
அந்நாட்டிடையர்கள் பாலுக்காக மட்டுமன்றிக் கம்பளி மயிருக்காகவும் ஆடுகள் வளர்த்துவந்தனர். ஆண்டுக்கு ஒரு தடவை அவற்றின் கம்பளி கத்தரிக் கப்பட்டது. நம்நாட்டு உழவர் தமது அறுவடை நாளைக் கொண்டாடுவது போல் அவர்களும் அம் மயிர் வெட்டு நாளை விழாவாகக் கொண்டாடி விருந்து செய்வர். அத்தகைய விருந்து நாளில் பாலிக்ஸெனிஸ் காமில்லோவையும் கூட்டிக்கொண்டு இடையர் மாதிரி உடையுடனே பெர்திதாவை வளர்த்த இடையனது வீட்டிற்குச் சென்றான்.
இடையனும் அவன் மனைவியும் அரசனையும் காமில்லோவையும் தம்மை ஒத்த இடையர்களே எனக்கொண்டு வரவேற்றார்கள். அப்போது அரச னும் காமில்லோவும் அவ்விருந்தில் பிறருடன் கலவாது ஒரு மூலையில் பிளாரிஸெல் பெர்திதாவுடன் உட் கார்ந்து உரையாடி மகிழ்ந்திருப்பதைக் கண்டார்கள். இடையனிடம் சென்று அவர்கள் யார் என்று கேட்க, அவன் சூதின்றி ‘என் மகளும் அவளைக் காதலிக்கும் இளைஞனும்’ என்றான்.
பெர்திதாவின் அழகும் பெருமிதத் தோற்றமும் பாலிக்ஸெனிஸுக்கு வியப்பைத் தந்தன. அவளை அவனால் பாராட்டாதிருக்க முடியவில்லை. ஆயினும், அவள் ஓர் எளிய இடையன் மகளாதலால், அவளுடன் தன் மகன் காதல் கொள்வது அவனுக்குப் பிடிக்க வில்லை. ஆகவே அவர்கள் காதல் எவ்வளவு தொலை சென்றுள்ளது என்று காணும் எண்ணத்துடன் அவர் களை அணுகி உரையாடினான். அவர்கள் அம் மாற் றுருவில் அவனை அறிந்து கொள்ள முடியவில்லை.
பாலிக்ஸெனிஸ்: இளைஞனே, உன் மனம் இப்புற விருந்துகளில் செல்லவில்லை என்று தோன்றுகிறது. ஆனால், உனது அகவிருந்தையும் நீ. அவ்வளவு திறம்படச் செய்யவில்லை என்றுதான் சொல்லுவேன்.
பிளாரிஸெல்: அப்படியா, அதில் நீர் கண்ட குறை யாது?
பாலிக்ஸெனிஸ்: நான் இளைஞனாயிருந்து காதல் கொண்டபோது என் காதலிக்கு வகைவகையான கண் கவர்ச்சியான நற்பொருள்கள் வாங்கித் தந்து மகிழ்வதுண்டு. நீ ஏன் ஒன்றும் கொண்டுவராமல் ஊமைக் காதலாகவே காதலிக்கிறாய்?
பிளாரிஸெல்: ‘நெஞ்சில் பொருளற்று வெறு மையாய் வருபவர்களே கையில் பொருளுடன் வர வேண்டும். இந்நங்கை நல்லாளும் புன்மையான கைப் பொருள்களை மறுத்து என் நெஞ்சகத்துள்ள விலை யற்ற பொருளையே பொருளாக மதிப்பவள். அப் பொருள் வஞ்சமற்ற காதலே யாகும். எப்படியும் நீங்கள் இப்பேச்சை எடுத்து விட்டபடியால் நீங்களே சான்றாக நான் அவளுக்கு அத்தகைய காதலைக் கொடுக்கிறேன்.’ என்று அவள் பக்கம் திரும்பி , ‘என் உரிமைப் பெர்திதா , இப் பெரியவர் காதலைக் கண்ட மனிதர் ஆவார். அவர் அறிய நான் கூறுகிறேன். இந்த நொடி முதல் நம் உறவு காதலின் கனியாகிய மண உறவு ஆகுக / இந்நொடிமுதல் நீயே என் துணைவி. இதுவே நம் மண ஒப்பந்தம்,’ என்றான்.
அவர்கள் காதல் இவ்வளவு தொலை வளர்ந்திருக்கும் என்று நினைக்காத பாலிக்ஸெனிஸுக்கு இது முதலில் ஏமாற்றத்தையும் பின் சினத்தையும் உண்டு பண்ணிற்று. அவன் உடனே தனது மாற்றுருவைக்
கலைத்து அரசனுருத் தாங்கி, ‘அடே அறிவிலி ! ஒப்பந் தம் ஏற்படும்போதே உன் ஒப்பந்தத்தைக் கலைக் கிறேன் பார். நீ இந்நொடியிலேயே இவளை விட்டுப் பிரிந்துவரவேண்டும்,’ என்று கூறினான். பின் அரசிளங் குமரனை உடனழைத்து வரும்படி காமில்லோவிடம் சொல்லி விட்டு அவன் அரண்மனை சென்றான்.
பெர்திதா பாலிக்ஸெனிஸின் மொழிகளைக் கேட் டதும், பிளாரிஸெலை நோக்கி, ‘நீங்கள் அரசகுமாரராதலால் உங்கள் பெருமையை நீங்கள் வைத்துக் கொள்வதுபற்றி எனக்குத் தடையில்லை’ என்று பெருமிதத்துடன் கூறிப் பின் பெருமூச்சுடன், ‘ஆயின் என் கனவு மட்டும் பாழாயிற்று’ என்றாள். பிளாரி ஸெல் ‘உடனே வெட்டென நான் உனக்கு அரச குமாரனல்லன். காதலனே; என் உறுதியை மறக்க வேண்டாம்’ என்றான். அவளது உளச் செம்மையை யும் உயர்வையும் கண்டு காமில்லோவும், அவளையும் பிளாரிஸெலையும் சேர்த்து வைக்க எண்ணினான்.
ரு. திரை நீக்கம்
லியோன்டிஸ் இப்பொழுது தன் மனைவிக்கும் நண்பனுக்கும் செய்த தீங்கை எண்ணி வருந்துவது காமில்லோவுக்குத் தெரியும். ஆகவே அவன் லியோன் டிஸ் நாடாகிய ஸிஸிலிக்கே அக்காதல் துணை வருடன் சென்று லியோன்டிஸின் உதவியால் பாலிக்ஸெனீஸ் இவர்களை ஒப்புக் கொள்ளும்படி செய்யலாம் என்று நினைத்தான். காதலரும் அதற்கிணங்கவே, அவர்கள் மூவரும், பெர்திதாவை வளர்த்த இடையனுடன் புறப்பட்டு ஸிஸிலி வந்து சேர்ந்தார்கள்.
லியோன்டிஸ் காமில்லோவை அன்புடன் வர, வேற்றான். பின் தன் நண்பனாகிய பாலிக்ஸெனிஸின் மகனை வரவேற்றுத் தழுவிக்கொண்டு , உன் தந்தைக்கு நான் பெரும்பிழை செய்துவிட்டேன்; உன்னைக் கண் டதும் அவனையே கண்டாற் போன்று மகிழ்கிறேன்,’ என்று அளவளாவினான்.
அப்போது அவன் பின் நின்ற பெர்திதாவைக் கண் டதும் அவன் கொண்ட வியப்பிற் களவில்லை. அவன் கண்ணுக்கு அவள் ஹெர்மியோனை அப்படியே உரித்துவைத்தாற்போன் றிருந்தாள். அவன் மனம் கனவுலகிற் சென்று உலவத் தொடங்கிற்று. ‘ஆ! என் குழந்தையை நான் கொல்லாதிருந்தால், அல்லது அந்த அந்தி கோனஸ் அவளைக் கொல்லாது விட்டிருந்தால் அவள் இன்று இவளே மாதிரி, இவள் பருவத்தில் இருப்பாளே.’ என்று கூறி அவன் பெருமூச்சு விட்டான்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த இடையன் மனத்தில் உண்மையின் ஒரு சாயல் தென்பட்டது. அவன் உடனே பெர்திதாவின் நகையுடனிருந்த கடிதத்தைக் கொண்டுவந்து கொடுத்தான். நகைகள் தான் குழந்தையுடன் வைத்துக் கொடுத்த அந்த நகை களே என்பதை அரசன் உணர்ந்தான். உணர்ந்து பெர்திதாவைத் தன் புதல்வியென் றறிந்து அவளை ஏற்று மகிழ்ந்தான்.
இதற்கிடையில் பாலினா வந்து அக்கடிதத்தின் எழுத்துக்களைப் பார்த்து அது தன் கணவன் (அந்தி கோனஸ்) எழுதியதே என்று ஒப்புக்கொண்டாள்.
தன் கணவன் இப்போது எங்கே என அவள் அறிய விரும்பினாள். அப்போது இடையன் வருத்தத் துடன், ‘இக் குழந்தையை நான் காணும்படி கடற் கரையிலிட்டவர் தங்கள் கணவராகவே இருக்க வேண்டும். அவரை ஒரு கரடி விழுங்கியதை நான் கண்டேன். அதனைத் தங்களுக்கு இவ்வளவு நாட் கழித்து நான் சொல்லவேண்டி யிருக்கிறதே என்று வருந்துகிறேன்,” என்றான். பாலினா ஒருபுறம் தன் கணவன் இறந்தற்காக வருத்தமும், இன்னொருபுறம் பெர்திதா மீட்கப்பட்டாள் என்றதற்காக மகிழ்ச்சியும் கொண்டாள்.
பெர்திதாவை மீண்டும் பெற்றது லியோன்டி ஸுக்கு மகிழ்ச்சியே யென்றாலும், அவள் உருவைக் கண்டதால் அவள் தாயின் உருவையும் அதனுடன் சேர்த்து , ஆ , உன் தாயைக் கொன்ற தீவினையேனாயி னேனே’ என்று உருகினான். அதனைக் கேட்டு நின்ற பாலினா இரங்கி, ‘ஐயா, உயிருடன் ஹெர்மியோன் உங்களிடம் வரமுடியாது. ஆனாலும் ஜூலியோ ரோமானோ என்ற ஓர் அரிய செதுக்குக் கலைஞனால் செதுக்கப்பெற்ற உயிர்த்தன்மையுடைய உருவம் ஒன்று என் வீட்டில் உள்ளது. அதை அங்கு வந்தால் தாங்கள் காணலாம்’ என்றாள்.
அதன்படியே லியோன்டிஸும், பிறரும் பாலினா வின் வீடு சென்றனர். அங்கே ஓர் அறையின் நடுவில் ஒரு திரை கட்டப்பட்டிருந்தது. அனைவரும் வந்து அமர்ந்தபின் பாலினா திரையை ஒதுக்கினாள்.
சு. ஓவியமா உயிருருவமா?
அப்போது சலவைக்கல் இருக்கைத்தட்டொன் றின் மீது நிற்கும் பெருமிதத் தோற்றமுடைய ஓர் உருவை அனைவருங் கண்டனர். அதில் உருவின் அமைதியும் இருந்தது. உயிரின் களையும் இருந்தது.

அஃது உருவாயின், அமைத்தோன் ஒரு சிறு கடவுளேயாவன். அஃது உயிராயின், அது கடவுளின் படைப்புத் திறனுக்கு ஓர் உயரிய சான்றேயாகும்’ என்றெல்லாம் பலரும் நினைத்தனர்.
அரசனுடைய கண்கள் அச்சிலையைப் பார்த்த பார்வையில் பார்த்தபடியே நின்றன ; அவன் பார்க் கும்போது, அவன் நின்ற நிலையிலேயே அவன் உடல் நின்றுவிட்டது. அவ்வுரு உயிருடையதே போன்று நின்றதெனில், அதைப் பார்த்து நின்ற அவ்வரசன் உருவெனச் சமைந்தான் எனல் வேண்டும். அப் போது பாலினா , அரசே, தாங்கள் வாளா நிற்ப தொன்றே தாங்கள் இவ்வுருவை மெச்சுகின்றீர்கள் என்று காட்டுகிறது ; ஆயினும் இஃது எவ்வளவு தங்கள் அரசிக்கு ஒத்ததாக இருக்கிறது,” என்று கேட்டாள்.
அரசன்: ‘ஆம். நான் முதலிற் கண்டபோது அவள் இப்படித்தான் நின்றாள். அதே நிலைதான் ; ஆனாலும் ஒரு செய்தி. இந்த உருவில் தோன்றுமளவு அவள் ஆண்டு சென்றவள் அல்லளே !’
பாலி: அந்த அளவு அந்தக் கலைஞன் திறனு டையவனே என்று தோற்றுகிறது. அவள் இன்றிருந் தால் எப்படி யிருப்பாளோ அப்படி அவளை அவன் தன் மனக்கண் முன் பார்த்து எழுதியிருக்கிறான் ! ஆ! எவ்வளவு திறன்!
அரசன்: அதுமட்டுமன்று, அந்த உருவில் அவ ளுயிர் அப்படியே இருக்கிறது. அதோடு அக்கண்கள் அசையவே செய்கின்றன. ஆம்; அம்முகம் நிறம் மாறவே செய்கிறது. ஆம்; இஃது அவளே.
பாலினா: சரி , அரசே , இனி நான் திரையைப் போட்டுவிடுகிறேன். இப்பொழுதே அதன் கண் ணசைகிறது, காதசைகிறது, என்கிறீர்கள். இன்னுங் கொஞ்சம் சென்றால், நடக்கிறது பறக்கிறது என்று கூடக் கூறுவீர்கள்.
அரசன்: இல்லை, இல்லை; திரையை இழுக்காதே. ஆ , அவ்வுருவுக்கு உயிரிருந்து நான் உருவாய் உயிரற் றிருக்கக் கூடாதா? ஆ, அஃது உருவன்று ; அவள் உயிர்க்கின்றாள். அவள் உயிர்ப்பு என்மீது படுகிறது!
பாலினா: அரசே , தங்கள் மனம் நல்ல நிலையி லில்லை. இன்னுங் கொஞ்சம் சென்றால் அஃது உங்கள் கண்ணுக்கு உயிர் உள்ள பெண்ணாய் விடும், வேண்டா . திரையைப் போட்டுவிடுகிறேன்.
அரசன்: ஒரிரண்டு நொடி பொறு. பாலினா, உனக்குப் புண்ணியம் உண்டு. ஒருவரும் என்னை எள்ளி நகையாடாதீர்கள். நான் கிட்டப்போய் அவளுக்கு ஒரு முத்தமளிக்கவேண்டும்.
பாலினா: சரி, விரைவில்! நான் திரையை ஒரு நொடியில் மூடவேண்டும்.
அரசன்: முடியாது, பாலினா. ஒரு நொடியன்று ஓர் ஆண்டாயினும் திரையைக் கீழே விடவிடேன். நான் இங்கேயே இருந்து என் ஹெர்மியோனைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறேன்.
பெர்திதா: ஆம் அப்பா, நானும் அப்படியே என் தாயைப் பார்த்துக்கொண்டே இருக்கப்போகிறேன்.
பாலினா: தந்தையும் மகளும் இப்படிப் பித்துக் கொள்ளக்கூடாது. உங்களுக்கு வேண்டுமானால் இந்த உருவுக்கு உயிர் கொடுக்கக்கூட என்னால் முடியும். ஆனால் நீங்கள் சூனியக்காரியின் செயல் என்று ஏளனம் செய்யக்கூடுமே.
அரசனும், பெர்திதாவும்: இல்லை, இல்லை; அப்படியே வரச்செய்.
இவ்வளவு சொன்னதுதான் தாமதம். பாலினா ஒரு சொடக்கிட்டாள். உடனே பக்கத்தில் மெல்லிய இன்னிசை எழுந்தது. அதன் நடைக்கிசைய உருவம் மெல்ல மெல்ல அசைந்து இருக்கையினின்றும் சரேலென்றிறங்கிவந்து, அரசனையும் பெர்திதாவையும் கட்டிக்கொண்டழுதது.
அவ்வுருவம் உருவமன்று; ஹெர்மியோனே.
முன்னர் லியோன்டிலின் கொடுமையிலிருந்து இனி ஹெர்மியோனைத் தப்புவிக்க முடியாதென்று கண்ட பாலினா அவளை இங்ஙனம் தன் வீட்டிலேயே மறைத்து வைத்துவிட்டு இறந்துவிட்டதாகக் கூறிவிட்டாள்.
மகளைப் பெற்ற அன்றே அரசன் மனைவியையும் பெற்று இன்புற்றான்.
அதே சமயத்தில் பிளாரிஸெலைத் தேடிப் பாலிக் ஸெனிஸும் வந்தான். வந்து செய்தியனைத்தையுங் கேட்டு, அவன் இதுவரையிற் பெற்ற துன்பமெல்லாம் இவ்வின்பத்திற்கே என மகிழ்ந்து மைந்தனையும் தன் பழைய நண்பனான லியோன்டிஸையும் தழுவிக் கொண்டான். தங்கள் நட்புக்குப் புத்துயிர் தரும் தம் புதல்வர் புதல்வியர் காதலை இருவரும் மணவினையால் நிறைவேற்றி இன்புற்றனர்.
மகளையிழந்த ஹெர்மியோன் ஒரேநாளில் மகளைத் திரும்பப் பெற்றதன்றி மருமகனையும் பெற்றுக் களித்தாள்.
– K.அப்பாதுரைப் பிள்ளை, சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் (மூன்றாம் புத்தகம்), முதற் பதிப்பு: 1941, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை