காந்தித் தாத்தா கதை

0
கதையாசிரியர்: ,
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 23, 2025
பார்வையிட்டோர்: 958 
 
 

(1941ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதியவர் கல்வி முன்னேற்றத்திற்காகவும் பாலர்கட்குப் பயன்படுமாறும் வெளியிடப்பட்டது. 

பாகம் – 1 | பாகம் – 2

குழந்தைப் பருவம்

மஹாத்மா காந்தி யென்றால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, எல்லாரும் அறிவார்கள். அவருடைய பெயரும் புகழும் பரவாத நாடோ, தேசமோ இவ்வுலகத்தில் இல்லை. பட்டிக்காட்டுக் குடியானவனைப் போல் முழங்காலுக்குமேல் துணி, திறந்த மார்பு, கையில் ஒரு கொம்பு, பிரகாசமான கண்கள், சாந்தமான முகம், ஒல்லியான தேகம், சுறுசுறுப்பான நடை, கலகல வென்ற சிரிப்பு, இனிமையான வார்த்தை – இந்த லட்சணங்களுடைய எழுபது வயது நிறைந்த கிழவர் மஹாத்மா காந்தி. அவர் ஒரு அவதார புருஷர். அவரை நேரில் பார்க்கும் யாவரும் அதிகப் புண்ணியம் செய்தவர்கள் என்றே சொல்லவேண்டும். 

இவருடைய முழுப் பெயர், மோகனதாஸ் கரம்சந்த் காந்தி. 1869-ஆம் வருஷத்தில் அக்டோபர் மாதம் 2-ஆந் தேதி கத்தியவார் பிரதேசத்தில் போர்பந்தர் என்ற ஊரில் காந்தி பிறந்தார். இவருடைய தகப்பனாரான காபா காந்தி என்பவர் ராஜகோட் சமஸ்தானத்தில் திவானாக இருந்தார். குடிகளின் நன்மைக்காக, காபா காந்தி இராப் பகலாய் வேலையை நெறி தவறாமல் செய்துவந்தார்; தமது வேலைத் திறத்தினால் எல்லாருடைய அன்பையும் நன்மதிப்பையும் பெற்றார். மேலும், ராஜகோட் சமஸ்தானாதிபதியிடம் அவருக்கு அளவற்ற விசுவாசமும் பக்தியுமுண்டு. 

மஹாத்மா காந்தியின் தாயாரோ சீலம் மிகுந்த பெண் மணி. அவருக்குக் கடவுளிடம் அளவற்ற நம்பிக்கை யுண்டு. ஒவ்வொரு நாளும் தப்பாமல் அந்த அம்மணி கோவிலுக் குச் செல்வார் ; அங்கே கடவுளுக்குப் பூஜை விமரிசையாய் நடத்துவார்; கோயிலில் நிகழும் மதவிஷயமான கதா காலட்சேபங்களையும், உபந்யாசங்களையுங் கேட்டுப் பரவச மடைவார். தாம் மேற்கொண்ட நோன்புகளையும், விரதங் களையும் வெகு பக்தி சிரத்தையாக வைராக்யத்துடன் நிறை வேற்றுவார்; பல விரத தினங்களில் நாள் முழுதும் பட்டினி கிடப்பார்; நோய் வாய்ப்பட்டுக் கஷ்டப்பட்டாலும், பட்டினி கிடந்து தம் உபவாசத்தை நிறைவேற்றுவார். சூரியனைக் கண்ட பிறகுதான் சாப்பிடுவது என்ற விர தத்தையும் அவர் அடிக்கடி எடுத்துக் கொள்வார். மாரி காலத்தில் ஆகாயம் மேகம் நிறைந்து மப்பும் மந்தாரமுமா யிருக்கும்போது, தொடர்ந்து பல நாள் சூரியன் கண் ணுக்குத் தோன்றாமலே யிருந்துவிடும். இருந்தபோதிலும், காந்தியின் தாயார், எவ்வளவு நாளானாலும் பட்டினி கிடப்பார்; தம் விரதத்திற்குப் பங்கம் விளைக்காமல் சூரி யனைப் பார்த்த பிறகே உணவு கொள்வார். 

காந்திக்கு வயது ஏழு நிரம்பியதும் அவரைப் படிக்க வைத்தார்கள். அவருக்குக் கூச்சமும் நாணமும் அதிகமா யிருந்தமையால், தம் வயதுப் பையன்களோடு அவர் சேர விரும்பவில்லை. பள்ளிக்கூடம் திறக்கும் சமயத்திற்குப் போவார்; பள்ளிக்கூடம் கலைந்ததும் நேராக வீட்டுக்கு வருவார். உண்மையே பேசுவார். பெரியவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பார். தம் குலதர்மத்துக்கு விரோதமாக நீதி தவறி நடக்கமாட்டார். 

அவர் பள்ளிக்கூடத் துப் பாடங்களைத் தினந் தோறும் தவறாமல் கவனமாய்ப் படிப்பார். ஒரு சமயம் தகப்பனாரின் அனுமதி பெற்று இரண்டு நாடகங்களைப் பார்க்கச் சென்றார். அவற்றுள், சிரவண குமார் என்பது ஒன்று; மற்றொன்று அரிச்சந் திர நாடகம். 

இவ்விரண்டு நாடகங்களையும் பார்த்த காந் தியின் மனம் ஒரு புதிய உணர்ச்சியை யடைந் தது. அந்த நாடகங்களின் நீதி இவர் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்தது. சிரவண குமாரின் கதை, ராமாயணம் படித்த எல்லா ருக்கும் நன்றாகத் தெரியும். சிரவண குமாருடைய தாயும் தந்தையும் வயோதிகத்தினால் கண்ணை யிழந்தார்கள். உயிர் விடுவதன் முன்பு, எல்லாப் புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி, எல்லா க்ஷேத்திரங்களிலும் சுவாமி தரிசனம் செய்யவேண்டு மென்று அவர்களிருவரும் ஆசைப் பட்டார் கிடை கள். ஆனால், அவர்களிடம் ஒரு பைசாக்கூ.டக் யாது. அவர்கள் பரம ஏழைகள். சிரவண குமார் தன் பெற்றோரிடம் அதிக அன்புள்ளவன்; தேக பலமும், மனோ திடமும் பெற்றவன். தன் தாயை ஒரு கூடையிலும், தன் தந்தையை மற்றொரு கூடையிலும் உட்காரச் செய்தான் பிறகு அந்தக் கூடைகளை ஒரு மூங்கிலின் இரண்டு நுனிகளி லும் கட்டித் தொங்கவிட்டான். அந்த மூங்கிலைக் காவடி தூக்குவது போல் தன் தோளில் தூக்கிக்கொண்டு, புண்ணிய தீர்த்தங்களுக்கும் க்ஷேத்திரங்களுக்கும் சென்று, தன் பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்றிவந்தான். 

இப்படி யாத்திரை செய்து வரும்போது, ஒருநாள் சிரவண குமார் தன் பெற்றோர்களின் தாகத்துக்கு நீர் கொண்டுவர ஓர் ஓடைக்குச் சென்றான். அதே சமபத் தில், தசரத மஹாராஜா அங்கே வேட்டையாட வந்திருந்தார். சிரவண குமார் ஒரு சிறு கூஜாவில் தண்ணீர் மொள்ளவே, அதனால் ஒரு மிருகம் தண்ணீர் குடிப்பது போன்ற சத்தம் உண்டாயிற்று. வேட்டையாட வந்த தசரத மஹாராஜா, இதைக் கேட்டு, ஏதோ துஷ்ட மிருகம் தண்ணீர் குடிக்கிறதென்று எண்ணினார். உடனே, எந்த இடத்திலிருந்து சத்தம் வந்ததோ அந்த இடத்தை நோக்கித் தசரதர் ஓர் அம்பு விடுத்தார். அந்த அம்பு சிர வண குமாரின் மார்பில் பாயவே, அவன் ‘ஐயோ!’ என்று அலறிக்கொண்டு கீழே சாய்ந்தான். அம்பு பாய்ந்த இடத்தி லிருந்து ஒரு மனிதனுடைய குரலோசை வந்ததைக் கேட்ட தசரத மஹாராஜா திடுக்கிட்டுப் போனார்; உடனே அந்த இடத்துக்கு ஓடினார்; மார்பில் அம்பு தைத்த சிரவண குமாரைப் பார்த்தார். தாம் அறியாமையால் செய்த பாதகத் துக்குத் தம்மையே நொந்தார். தம்மை மன்னிக்கும்படி சிரவண குமாரிடம் மன்றாடினார். அம்பு பாய்ந்த வேகத் தால், சிரவண குமாரின் மார்பிலிருந்து ரத்தவெள்ளம் பெருகிக்கொண்டிருந்தது. அவனுடைய உயிர் போய்க் கொண்டிருந்தது. அதோடு சிரவண குமார் அரசனை நோக்கினான்; அரசன் தெரியாமல் செய்த செய்கைக்கு அவரை மன்னித்தான். என்றாலும், தாகத்தினால் தவித்துக் கொண்டிருக்கும் தன் பெற்றோர்களின் ஞாபகம் சிரவண குமாருக்கு வந்தது. ஆகவே, தசரத மஹாராஜாவை நோக்கித் தன் பெற்றோர்களுக்குத் தண்ணீர் கொண்டு போய்க் கொடுக்கும்படி வேண்டிக்கொண்டான். அரச னும் அவ்விதமே செய்தான். 

இந்த நாடகம் காந்தியின் மனதைக் கொள்ளை கொண் டது. சிரவண குமாரைப் போலவே தாமும் தம் பெற்றோர்களின் விருப்பத்துக் கிணங்க நடக்கவேண்டு மென்று மனதில் நிச்சயஞ் செய்து கொண்டார். 

அவ்விதமே அரிச்சந்திர நாடகமும் அவருடைய மனதைக் கவர்ந்தது. அரிச்சந்திரர் கதையை அறியாத வரும் இந்த நாட்டில் உண்டோ? விசுவாமித்திர ரிஷி, அரிச்சந்திரர்மீது பகைமைகொண்டு, அவரைப் பொய் சொல்லச் செய்யத் தம்மாலான உபாயங்களெல்லாம் செய் தார். அவர் வேண்டுகோளுக் கிணங்கி, அரிச்சந்திரர் தம் அரசுரிமையை முனிவருக்குத் தாரை வார்த்தார்; தம் மனைவி மைந்தனுடன் அயல்நாடு சென்றார் ; முனிவரின் சூழ்ச்சியால், தம் மனைவியையும் மைந்தனையு மிழந்தார் ; சால்லொணாக் கஷ்டங்களையும் அனுபவித்தார். உண்மை நெறி தவறாமல் நடப்பதே மேல் என்றெண்ணி அவ் விதமே நடந்து வந்ததால்தான், அரிச்சந்திரர் இக் கஷ்டங்களை யெல்லாம் அனுபவித்தார். இதனால், கடை சியாக என்றும் அழியாப் புகழைப் பெற்றார். அவர் எப்போதும் உண்மையையே பேசிவந்ததால், அவருக்குச் சத்திய அரிச்சந்திரர் என்று பெயர் வழங்குகிறது. இந்த நாடகத்தைப் பார்த்த காந்தி தாமும் அரிச்சந்திரரைப் போலவே நடந்துகொள்ள வேண்டுமென்று தீர்மானித் துக் கொண்டார். உண்மையைக் காப்பாற்ற எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்தாலும் அது பெரிதாகாது; உண்மைதான் பெரிது. இதை நன்குணர்ந்த காந்தி சிறு வயது முதற்கொண்டே உண்மை பேசி வந்திருக்கிறார்; உண்மைக்கு அவர் மிக வும் உயர்ந்த ஸ்தானங் கொடுத்திருக்கிறார்; அவ ருடைய ஆயுள் முழு வதையும் உண்மையைக் கண்டு பிடிப்பதிலேயே கழிக்கத் தீர்மானித் திருக்கிறார். 

பள்ளிக் கூடத்தில் படித்தபோது காந்தி பல விஷயங்களைப் பற்றி யும் படித்தறிந்தார். ஆனால், ஒரு விளையாட் டிலும் கலந்துகொள்ள வில்லை. அதில் அவ ருக்கு உற்சாகம் ஏற்பட வில்லை. இப்படி அப்போது விளையாட்டுகளில் கலந்துகொள்ளாம லிருந்ததற்கு அவர் இன்றைக்கும் வருத்தப்படுகிறார். சிறுவர்களா யிருக் கும்போது சாயந்தர வேளையில், நன்றாக ஓடியாடி விளை யாடினால், தேகத்துக்கு வலிமை ஏற்படும்; சுகம் ஏற்படும்; 

நன்றாக உழைக்கும் சக்தி யுண்டாகும்; மனதுக்குத் தைரியம் ஏற்படும். விளையாட்டின் நன்மையை, காந்தி இப்போது நன்கு அறிந்திருக்கிறார். ஒவ்வொரு சிறுவனும் சிறுமி யும் கட்டாயம் ஏதாவதொரு விளையாட்டை விளையாட வேண்டுமென்று இப்போது அவர் வற்புறுத்துகிறார். சிறு வயதில் ஓடி விளையாடாத குற்றத்துக்குப் பரிகாரமாக, காந்தி இப்போது அநேக வருஷ காலமாக, தினந்தோறும் நெடுந் தூரம் உலாவச் சென்று வருகிறார். தேச சேவைக்கு வேண்டிய தேக பலத்தையும் ஆரோக்கியத்தையும் காந்தி இதன் மூலம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

இதேமாதிரி, பள்ளிக்கூடத்தில் வாசிக்கும்போது தாம் நன்றாக எழுதக் கற்றுக்கொள்ள வில்லையே யென்று காந்தி வருத்தப்படுகிறார். படித்தவனுக்குத் தெளிவாக எழுதத் தெரிந்திருக்க வேண்டும். இல்லா விட்டால் அவன் எழுதுவதைப் படிக்கும் பிறருக்குக் கஷ்டமாகு மல்லவா? 

காந்திக்குப் பதின்மூன்றாம் வயதிலேயே கலியாணம் ஆகிவிட்டது. சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் கலியாணம் செய்து வைப்பது ஒரு பழைய கெட்ட வழக்கம். அப்படிச் சிறுவயதில் கலியாணம் செய்வது இப்போது சட்ட விரோதம். காந்தி கலியாணத்தின் போது அந்தச் சட்டம் வரவில்லை. 

ஒழுக்கம் திருந்துதல்

கெட்ட பழக்கமுள்ள சிநேகிதர்கள் சிலருடன் காந்தி சிறுவயதில் பழகிவந்ததால், மாமிசம் சாப்பிடும் பழக்கம் அவருக்கு ஏற்பட்டது. காந்தியின் பெற்றோர் வைஷ்ணவர்கள் ; மாமிசத்தை நினைக்கவும் மாட்டார்கள்; பார்க்கவும் மாட்டார்கள். காந்தி மாமிசம் சாப்பிட்டது அவர்களுடைய மதத்துக்கே விரோதம். ஒருநாள் இராத்திரி சந்திரன் நன்றாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தான். காந்தியும் அவருடைய நண்பர்களும் ஆற்றங் கரைக்குச் சென்றார்கள்; அங்கே யாருக்கும் தெரியாமல் மாமிச ஆகாரத்தை உண்டார்கள். மாமிசம் சாப்பிடும் போதே காந்தி யின் நெஞ்சும் மார்பும் படபட வென்று அடித்துக் கொண் டன. அன்றிரவு முழுதும் ‘மாமிசம் சாப்பிட்டு விட் டோமே’ என்ற மனோவேதனையால், அவருக்குத் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டார். தமது வயிற்றுக்குள் ஒருஆட்டுக் குட்டி இருந்துகொண்டு, ‘என்னைக் கொன்று இப்பாவிகள் தின்று விட்டார்களே!’ என்று கத்துவதுபோல் அவருக்குத் தோன்றிற்று. மாமிசம் சாப்பிட்டால் தேகத்துக்குப் பலமும், மன துக்குத் தைரியமும் வரும் என்று சிலர் சொன்னார்கள். அதைக் கேட்டுக்கொண்டுதான் காந்தி மாமிசம் சாப்பிட இசைந்தார். மாமிசம் சாப்பிட்டால், தமது பயங்கொள்ளித் தனத்தையும், கூச்சத்தையும் போக்கிக் கொள்ளலாமென்று அவர் எண்ணினார். ஆனால் மாமிசம் சாப்பிட்டதில் ஒருவிதமான நன்மையும் அவருக்கு ஏற்படவில்லை. மாமிசம் சாப்பிடுவதுடன், சுருட்டுப் பிடிக்கும் கெட்ட வழக்கமும் காந்திக்கு ஏற்பட்டது. சுருட்டு வாங்கக் கையில் காசில்லாதபோது, பீடி வாங்கிக் குடித்தார். பீடி வாங்கவும் தம் கையில் காசில்லாதபோது, வீட்டிலிருந்து பணம் திருடினார். இப்படிச் சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள், இவ்வாறு மாமிசம் சாப்பிடுவதும் பணம் திருடுவதும் புகை பிடிப்பதும் மிகவும் கெட்ட வழக்கமென்று அவருக்குப் பட்டது. இவற்றை உடனே நிறுத்திவிட வேண்டு மென்று மனதில் நிச்சயம் செய்து கொண்டார். அது மாத்திரமன்றி, தாம் இவ்வளவு காலமாக ஒளிமறைவாக நீதி தவறி நடந்ததைப் பற்றி யெல்லாம் ஒன்றையும் ஒளிக்காமல் தம் தகப்பனாரிடம் சொல்லிவிட வேண்டும் என்றும் நிச்சயம் செய்துகொண்டார். 

அப்போது அவருடைய தகப்பனார் காய்ச்ச லாய்ப் படுத்திருந்தார். அவர் முன்கோபி. ஆதலால், காந்தி அவரிடம் தம் குற்றங்களை நேரில் சொல்லப் பயந்தார்; எனினும், தாம் செய்த குற்றங்களை யெல்லாம் விவரமாக ஒரு கடிதத்தில் எழுதி, தம் தகப்பனாரிடம் கொடுத்தார். அவருடைய தந்தையும் தம் மகன் எழுதிய கடிதத்தைக் கவனமாக வாசித்தார்; பெருமூச்சு விட்டார்; ஒன்றும் பேசவில்லை. காந்தியைக் கோபித்துக் கொள்ளவுமில்லை. ஆனால், அவர் கண்களினின்றும் தாரை தாரை யாகக் கண்ணீர் வடிந்தது; விம்மி விம்மி அழுதார். தம் மகன்மீது இருந்த அன்பின் பெருக்கத்தினாலேயே அவர் இம்மாதிரி கண்ணீர் வடித்தார். இதனால், தகப்பன், மகன் இருவருடைய இருதயமும் பரிசுத்த மடைந்தது. தந்தை கண்ணீர் விடுவதைக் கண்ட காந்தியின் மனது உருகியது. அப்பொழுதே, அவ்விடத்திலேயே, இனி அநீதியாக நடந்து கொள்வதில்லை யென்று மனதில் உறுதி செய்து கொண்டார். அவ்விதமே நடந்தும்வந்தார். தகப்பனா ரிடம் தாம் செய்த குற்றங்களைச் சொல்ல இவருக்கு ஏற் பட்ட தைரியத்தினாலேயே இவர் தம் தீய நடத்தைகளை உதறித் தள்ள முடிந்தது. 

இதன் பிறகு, காந்திக்குப் பல உண்மைகள் தென்பட்டன. அஹிம்சையில் இவருக்குப் பற்றுதல் ஏற்பட்டது. அதாவது, எந்த உயிருள்ள பிராணிக்கும், எவ்விதத் துன்பத்தையும், மனதினால் எண்ணவோ, வார்த்தையால் உண்டாக்கவோ, செய்கையால் விளைவிக்கவோ கூடாது என்ற நீதியைக் கைக் கொண்டார். இதனால், கடவுள் படைத்த சகல ஜீவராசிகளிடத்தும் அன்பும், கடவுளிடம் பக்தியும் இவருக்கு ஏற்பட்டன. ஒழுக்கமாகத் தம் வாழ்க்கையை நடத்தவும் தீர்மானித்துக் கொண்டார். ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டுமானால் எப்போதும் உண்மையே பேசவேண்டும் என்பதையும் நன்குணர்ந்தார். அவ்விதமே எப்போதும் உண்மையே பேசிவந்தார். தம் செய்கையிலும் உண்மையாகவே யிருந்தார். அதே சமயத்தில், உண்மையைக் கடைப்பிடித் தொழுகும் ஒருவன் மற்ற மதத்தாரோடு அன்புடன் நடந்துகொள்ள வேண்டு மென்பதையும் கண்டுகொண்டார். தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்வதுதான் நேர்மை – பெருந்தன்மை – என்ற திட நம்பிக்கையும் அவருக்கு ஏற்பட்டது. ஹிந்துமத சம்பந்தமான பக்தி மார்க்க நூல்களைத் தம் தாய்ப் பாஷையான குஜராத்தியில் படிப்பார்; பல தோத்திரப் பாட்டுகளையும் பாடுவார். அவற்றுள் ஒரு தோத்திரம் சிறந்த நீதி முறையைக் கூறுகிறது: 

”குடிக்க நீர் கொடுத்தவனுக்கு வயிறாரச் சாப்பாடு போடு; கருணையுடன் வரவேற்கும் ஒருவனது கை பிடித்து அவனுடைய பாதம் பணி; ஒரு காலணாக் கொடுத்தவனுக்குத் திரும்பி ஒரு பவுன் கொடு! ஒருவன் செய்த நன்மைக்கு நாம் பத்து மடங்கு அதிகமாகத் திருப்பிச் செய்ய வேண்டும். ஒரு பெரிய மனிதன் எல் லாரையும் சமமாகப் பாவிப்பான்; எப்போதும் தீமையே இழைப்பவர்களுக்கும் நன்மையே செய்வான்.” இதுதான் அந்தப் பாட்டில் அடங்கிய நீதிமுறை. காந்தி இந்த நீதி முறையைத் தம் வாழ்வில் அனுசரிக்க வேண்டுமென்று தீர்மானித்தார். 

பாரிஸ்டர் படிப்பு

1887- ஆம் வருஷத்தில் காந்தி மெட்ரிகுலேஷன் பரீ க்ஷையில் தேறினார். குடும்ப நண்பர்கள் பலர் காந்தியின் தந்தையிடம் சென்று காந்தியை இங்கிலாந் துக்குப் படிக்க அனுப்ப வேண்டுமென்று சொன்னார்கள். ஆனால், இதற்குத் தடையாகப் பல கஷ்டங்களும் ஆக்ஷே பங்களும் ஏற்பட்டன. காந்தியை உடனே இங்கிலாந்துக்கு அனுப்புவது என்பது சுலபமா யிருக்கவில்லை. பணக் கஷ்டம் ஒரு புறமிருக்க, தங்கள் மகனை விட்டு எப்படிப் பிரிந்திருப்பது என்பது தாய்க்கும் தந்தைக்கும் கஷ்டமா யிருந்தது. இங்கிலாந்துக்கு ஹிந்து வாலிபர்கள் சென் றால், அவர்கள் அந்த நாட்டாரின் சில கெட்ட வழக்கங் களைக் கைப்பற்றுகிறார்கள். அதனால் பல குடும்பங்கள் கெட்டுப்போகின்றன” என்று சிலர் சொல்லி விட்டார்கள். இதைக் கேட்ட தாயாருக்குப் பயமும் உண்டாயிற்று. இங்கிலாந்துக்குத் தம் மகன் சென்றால், இந்திய நாட்டுக்குத் திரும்பியே வராமல் ஒரு வேளை அங்கேயே இருந்து விடுவார் என்றும் தாயார் எண்ணினார். “ சீமைக்குச் சென்றால், மாமிசம் சாப்பிடாமல் இருக்க முடியாது; சாராயம் குடிக்காமலும் இருக்க முடியாது. இங்கிலாந்தில் குடிப் பழக்கம் இல்லாதவர்களே யில்லை. அங்கே ஆண்கள், பெண்கள் எல்லாருமே குடிப்பது சகஜம்” என்று காந்தியின் தாயார் கேள்விப்பட்டார். “இங்கிலாந்துக்குக் காந்தி சென்றால், ஒரு புதிய ஆங்கில மனைவியுடன் திரும்புவார்” என்றும் சிலர் சொன்னார்கள். இவற்றை யெல்லாம் சொன்னார்கள். கேட்ட காந்தியின் தாயார், அவரை இங்கிலாந்துக்கு அனுப்ப இசையவில்லை. 

என்றாலும், காந்திக்கு இங்கிலாந்து செல்ல அதிர்ஷ் டம் இருந்ததால், இக் கஷ்டங்களும் ஆக்ஷேபங்களும் வெகு சீக்கிரத்தில் ஒழிந்தன. காந்தியின் தமையனார் காந்தியைச் சீமைக்கனுப்பப் பணஉதவி செய்ய முன்வந்தார். ஆனால், காந்தி மூன்று வாக்குறுதிகளைத் தரவேண்டு மென்று அவருடைய தாயார் கேட்டார். “மாமிசம் சாப்பிடுவதில்லை; சாராயம் குடிப்பதில்லை; பெண்களை நாடாமல் பரிசுத்த மான வாழ்க்கை நடத்துவேன்” என்று காந்தி பிரதிக்ஞை செய்யவேண்டுமென்று, அந்த அம்மையார் சொன் னார். காந்தியும் அவ்வாறே பிரதிக்ஞை செய்தார். அதன் பிறகு, எல்லாருடைய ஆசிபையும் பெற்று, காந்தி 1888-ஆம்வருஷத்தில் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். 

கப்பலில் பிரயாணம் செய்தபோது, காந்தி அதிகக் கூச்சமடைந்தார். ஆங்கிலத்தில் பேசுவது அவருக்கு மிக்க கஷ்டமாக இருந்தது. தம் முன் வைத்த உணவு மரக்கறி உணவோ, மாமிச உணவோ என்று கேட்கவும் கூச்சப்பட்டு, சாப்பிடத் தயங்கினார். கப்பலில் மற்றப் பிரயாணிகளுடன் காந்தி கலந்து கொள்ளவுமில்லை ; பேசவுமில்லை. அதே கப்பலில் வேறோர் இந்தியர் பிரயாணம் செய்தார். மற்றப் பிரயாணிகளுடன் நன்றாக உறவாடி ஆங்கிலத்தில் பேசுமாறு காந்திக்கு அவர் சொன்னார். ஆனால், காந்திக்குக் கூச்சம் அதிகமா யிருந்ததால், அவ ரால் அவ்விதம் செய்ய முடியவில்லை. 

ஒருநாள் கருணை மிகுந்த ஆங்கில கனவான் ஒருவர் இவருடன் வலுவில் வந்து பேசினார். காந்தி அவரை நோக்கி, தாம் மரக்கறி உணவையே சாப்பிடுவதாகச் சொன்னார். அதைக் கேட்ட அந்த ஆங்கில கனவான் சிரித்துக்கொண்டு, “வெகு சீக்கிரத்தில் நீங்கள் மாமிச ஆகாரம் சாப்பிட நேரிடும். இங்கிலாந்து மிகவும் குளிர்ந்த தேசமாதலால், அங்கே நீங்கள் மாமிசம் சாப்பிடாமல் இருக்க முடியாது” என்று சொன்னார். ‘மாமிசம் சாப்பிடுவதில்லை’ யென்று காந்தி தம் தாயாரிடம் பிரதிக்ஞை செய்திருந்ததால், ‘எக்காரணங் கொண்டும் மாமிச உணவை உட் கொள்ளவே கூடாது’ என்று மனதில் உறுதி செய்து கொண்டார். 

இங்கிலாந்தில் மரக்கறிகளைச் சாப்பிடுவது து காந்திக்கு மிகவும் கஷ்டமா யிருந்தது. உப்பு, மிளகாய் சேராத வெந்த காய்களை எவ்வளவு நாள்தான் சாப்பிட முடியும்? ஊரிலிருந்து கொண்டுவந்த தித்திப்புப் பலகாரங்களைச் சில நாட்கள் வரையில் வைத்துக் கொண்டு தின்று வந்தார். பலவிதங்களில் இவருடைய செலவும் அதிகரித்தது. இங்கிலாந்தை யடைந்ததும் ஒரு பெரிய மனுஷ னைப்போல் நடந்துகொள்ள வேண்டுமென்று இவருக்குத் தோன்றியது. அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் பிரெஞ்சு பாஷை கற்பது, படித்தவர்களுக்கு லக்ஷணமாய்க் கருதப்பட்டது. அதனால் கௌரவமும் மதிப்பும் உண்டு. காந்தி யும் பிரெஞ்சு பாஷை கற்க ஆரம்பித்தார். பிறகு நாட்டி யம் ஆடவும் பிடில் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். இப்படிச் சில நாட்கள் சென்றபின், காந்தி தமது ஆங்கில வாழ்வைப் பற்றிச் சற்று ஆழ்ந்து சிந்தித்தார். தம் அண்ணன் வெகு கஷ்டப்பட்டு மிச்சம் பிடித்துத் தனக்கு அனுப் பும் பணத்தைத் தம் மனம் போனபடி செலவழிப்பது சரியல்ல வென்று நினைத்தார். உடனே, பிரெஞ்சு பாஷை கற்பதையும் நாட்டியம் ஆடுவதையும் பிடில் வாசிப்பதையும் அறவே ஒழித்தார். எளிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தார். தம் செலவைப் பலவகையிலும் குறைத்துக் கொண்டார். குறைந்த வாடகையில் ஓர் அறையை வாடகைக்கு அமர்த்திக் கொண்டார்; தாமே சமையல் செய்து சாப்பிட ஆரம்பித்தார் ; ஒரு வினாடியும் வீணாக்காமல் படிப்பிலே கவனம் செலுத்தினார். 

இங்கிலாந்தில் மரக்கறி உணவுச் சங்கத்தார் நடத்தி வந்த ஒரு பத்திரிகையைத் தாம் நிர்வகிக்க, காந்தி ஏற்றுக் கொண்டார். பிறகு அச்சங்கத்தினர்களில் சிலரைச் சந்தித் தார். அதன்மேல் மரக்கறிச் சங்கத்தில் தாமும் ஒரு அங்கத்தினராய்ச் சேர்ந்துகொண்டார். அவர்களுடன் பழகியதின் பலனாக, காப்பி, தேயிலைப் பானங்களைக் குடிப்பதையும் ஒழித்தார். காய்கறிகள், பழங்கள், கோக்கே இவற்றையே சாப்பிட்டு வந்தார். இதனால் அவருடைய உடம்பும் தேர்ச்சி யடைந்தது. அவருக்கு ஆரோக்கியமும் திடமும் ஏற்பட்டன. முன்னிலும் நன்றாகப் படிக்க முடிந்தது. ஞாபக சக்தியும் அதிகரித்தது ; சுறுசுறுப்பும் உண்டாயிற்று. அவர் நீண்ட தூரம் உலாவி வந்ததால், தேகப் பயிற்சியால் உண்டாகும் சகல அனுகூலங்களையும் அடைந்தார். 

பிறகு, பாரிஸ்டர் பரீட்சையில் தேறினார். இங்கிலாந்தில் இருக்கும் போது தான், நேரத்தின் மதிப்பை, காந்தி நன்குணர்ந்தார். தமது நேரத்தில் ஒரே ஒரு நிமிஷத்தையும் வீணாக்குவது பெருங்குற்றம் என்றெண்ணினார். மேலும் அக்காலத்தில் காந்தி, ‘பெரியோர்கள் தமக்கென்று வாழார்; பிறர்க்குரியர்’ என்ற உயர்ந்த கொள்கையை மேற்கொண்டு, எளிய வாழ்க்கை முறைகளை யனுசரித்து, உன்னத நோக்கங்களுடனும் சிந்தனையுடனும் வாழ்ந்துவந்தார். 

வக்கீல் தொழில்

பாரிஸ்டர் பரீட்சை கொடுத்துவிட்டு, காந்தி தம் தாய் நாடு திரும்பினார். அப்போது அவருடைய தமையனார் பம்பாய்த் துறைமுகத்துக்குச் சென்று அன்புடன் தம் தம்பியை வரவேற்றார். தாயார் சில நாட்களுக்கு முன் பாகத்தான் இறந்து போனார் என்ற செய்தித் தம் தமையனிடமிருந்து காந்தி அறிந்துகொண்டார். இந்தத் துக்க சமாசாரத்தை எழுதினால் காந்திக்கு விசனமேற்பட்டு அதனால் அவருடைய படிப்புக்குக் கெடுதல் உண்டாகும் என்றெண்ணி, அவர் தமையன் முன்னாடி எழுதவில்லை. பம்பாய் வந்திறங்கியதும் இச் செய்தியைக் கேட்ட காந்திக்குப் பெருந் துக்கம் உண்டாயிற்று. என்றாலும், இந்தத் துக்கத்தில் அவர் மனோதைரியத்தை இழக்காமல் மனதைச் சமாதானப் படுத்திக்கொண்டார். அடிக்கடி அவர் தம்முடைய தாயாரை நினைத்துக் கொண்டு, அவருடைய அன்பு, கடவுள் பக்தி, ஒழுக்கம் முதலியவற்றைப் புகழ்ந்து பேசுவார். தாமும் அதேமாதிரி நடக்க வேண்டுமென்று நினைப்பார். 

இந்தியாவுக்கு வந்து சேர்ந்த சில நாட்களில், அவர் பம்பாயில் பாரிஸ்டர் வேலை செய்ய ஆரம்பித்தார். என்றாலும், பம்பாயில் அவருக்குப் போதுமான வரும்படி கிடைக்கவில்லை. ஆகையால், தம் தகப்பனார் திவான் வேலை பார்த்த ராஜகோட்டுக்குச் சென்றார். அங்கே அவருக்கு ஒரு மாதத்துக்கு முந்நூறு ரூபாய்வரை வரும்படி வந்தது. இச்சமயத்தில், தென்னாப்பிரிக்காவில் வியாபாரம் செய்து வந்த ஒரு முஸ்லீம் வர்த்தகர், டர்பன் நியாய ஸ்தலத்தில் ஒரு வழக்கை நடத்த, காந்தியை அழைத்தார். காந்தியும் டர்பனுக்குச் சென்றார். டர்பனில் இந்தியர்களை வெள்ளையர்கள் மிகவும் அவ மரியாதையாக நடத்தினார்கள். இதைப்பற்றி காந்தி முன்னமே கேள்விப்பட்டிருந்த போதிலும், இப்போது அதை நேரில் காணும் சந்தர்ப்பம் அவருக்கு ஏற்பட்டது; அன்றியும், அதைத் தாமும் அனுபவிக்கவும் நேர்ந்தது. 

வழக்கை நடத்த இவர் டர்பன் நியாய ஸ்தலத்துக்குச் சென்றார். இவர் தம் தலையில் இந்தியத் தலைப்பாகை அணிந்திருந்தார். இதைப் பார்த்த நியாயாதிபதி தலைப் பாகையை எடுக்கும்படி சொல்ல, காந்தி “மாட்டேன் ” என்று மறுத்தார். ஆகவே, கோர்ட்டை விட்டு, காந்தி வெளியேற வேண்டியதாயிற்று. ஐரோப்பிய உடையோடு இந்தியத் தலைப்பாகையை அணியக் கூடாது என்று நியாயாதிபதி ஆக்ஷேபித்தாராம். 

சில நாட்களுக்கப்புறம், காந்தி டர்பனிலிருந்து பிரிடோரியாவுக்கு ரயிலில் சென்றார். முதல் வகுப்பு டிக்கட்டுடன், அதே வகுப்பில் ஏறினார். இரயில்வே அதிகாரிகள் இவரைக் கீழே யிறக்கிக் கடைசியி லிருந்த ஒரு வண்டிக்குப் போகும்படி சொன்னார்கள். காந்தி அவ்விதம் செய்ய மறுத்தார். பிறகு, போலீஸார் வந்து இவரை வண்டியை விட்டு வெளியே தள்ளினார்கள். இதன் மேல் வேறு எந்த வண்டியிலும் போக இவர் மறுத்தார்; டர்பனிலேயே தங்கியிருந்தார். என்றாலும், மறுநாள் இரயில்வே அதிகாரிகள் இவரை முதல் வகுப்பிலேயே பிரயாணம் செய்ய அனுமதித்தார்கள். 

இதற்குள்ளாக, எந்த வழக்கை நடத்த வந்தாரோ அந்த வேலையும் முடிந்தது. ஆகவே, காந்தி இந்தியாவுக்குத் திரும்பிப் போகத் தயாராக இருந்தார். டர்பனில் உள்ள இந்தியர்கள் இதை யறிந்து, காந்தி புறப்பட்டுப் போவதற்கு முன்பு அவருக்கு ஒரு பிரிவுபசாரம் நடத்தி னார்கள்; அச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் கஷ்டங்களை யெல்லாம் காந்திக்கு எடுத்துச் சொன்னார்கள்; காந்தி இந்தியாவுக்குத் திரும்பிப் போகக் கூடாது என்றும், தென்னாப்பிரிக்காவிலேயே தங்கி இந்தியர்களுக்குத் தலைமை வகித்து அவர்களுடைய கஷ்டத்தை ஒழிக்க வேண்டுமென்றும் அவரை வேண்டிக்கொண்டார்கள். அவர்களின் கஷ்டங்களைக் கேட்டு மனமிளகிய காந்தி, தென்னாப்பிரிக்காவிலேயே தங்கினார். மூன்று வருஷங் கள் கடந்த பின்னர், காந்தி தம் மனைவிமக்களையும் தென்னாப்பிரிக்காவுக்குக் கூட்டிப்போக இந்தியாவுக்கு வந்தார். 

மனைவி மக்களோடு இவர் ஆப்பிரிக்காவுக்குத் திரும்பிச் சென்ற கப்பல் ஒரு புயல் காற்றில் சிக்கிக்கொண்டது. அந்தப் புயல் நெடுநேரம் அடித்ததால் “உயிர் தப்ப முடியாது ; கப்பலுடன் சமுத்திரத்தில் மூழ்கித்தான் போவோம்” என்று யாவரும் பயப்பட்டார்கள். அந்த ஆபத் தான சமயத்தில் பிரயாணிக ளெல்லாரும் ஒன்று சேர்ந்து கடவுளைப் பிரார்த்தித்தார்கள். ஹிந்துக்களும், கிறிஸ்தவர் களும், முகம்மதியர்களும் எவ்விதமான வித்தியாசமுமின்றி அந்த அபாயத்தில் ஒன்றுசேர்ந்து கடவுளைப் பிரார்த்தித்தார்கள். கடவுளும் அவர்களுடைய பிரார்த்தனைக்கு இரங்கினார். வானம் வெளிறிட்டது. சமுத்திரத்தின் கொந்தளிப்பு நின்றது. புயலின் அமளியும் ஓய்ந்தது. உடனே யாவரும் கடவுளை மறந்தனர். பிரயாணிகள் எல்லாரும் உண்ணவும் குடிக்கவும் ஆடவும் பாடவும் வேடிக்கையாகக் காலத்தைக் கழிக்கவும் ஆரம்பித்தனர். புயல் காற்றடித்த சமயத்தில் பயப்பட்டு அதைரியப்பட்ட பலருக்கும், காந்தி உற்சாகத்தையும், கடவுளிடம் நம்பிக்கையையும், தைரியத்தையும் மூட்டினார். இதனால் கப்பலில் உள்ளவர்கள் எல்லாரும் காந்தியை அறிய நேரிட்டது. அல்லாமலும், காந்திக்கு இதனால் பலருடைய நட்பும் ஏற்பட்டது. இந்தப் புயல்காற்று நண்பர்களெல்லாம் பிற்காலத்தில் காந்திக்கு அதிக உதவி செய்தனர். 

தென்னாப்பிரிக்க சேவை

டர்பனை அடைந்ததும் காந்தி ஒரு நல்ல வீட்டை அமர்த்திக்கொண்டு அதை வெகு சீராக அலங்கரித்துச் சௌகரியம் உள்ளதாகச் செய்துகொண்டார். ஒரு நாள் தம் வீட்டு வரவு செலவுக் கணக்கைப் பார்த்தார்; தாம் அதிகமாகப் பணம் செலவழிப்பதைக் கண்டார்; உடனே, வேண்டாச் செலவுகளை நிறுத்தினார். வண்ணானுக்கு இவர் அதிகக் கூலி கொடுத்து வந்தார். என்றாலும் அவனுடைய வெள்ளை நன்றாக இருக்க வில்லை. ஆகவே, காந்தி அவனிடம் துணி போடுவதை நிறுத்தித் தம் துணிகளை யெல்லாம் தாமே வெளுக்க ஆரம்பித்தார். துணி வெளுப்பதைப் பற்றி ஒரு புத்தகத்தையும் வாங்கித் தாம் படித்ததோடு, தம் மனைவியான கஸ்தூரி பாய்க்கும் துணிகளை வெளுக்கச் சொல்லிக் கொடுத்தார். தம் துணியைத் தாமே வெளுப்பதில் காந்திக்கு வெகு ஆனந்தம் ஏற்பட்டது. 

முதல் நாள் காந்தி தாமே வெளுத்த ஒரு காலரைப் போட்டுக்கொண்டு கோர்ட்டுக்குப் போனார். அதற்குக் கஞ்சி அதிகம் போட்டிருந்ததால், அதிலிருந்து மாவு கீழே உதிர்ந்தது. இதைக் கண்ட பிற பாரிஸ்டர்கள் சிரித்தார்கள்; காந்தியை ஏளனமும் செய்தார்கள். அதை காந்தி பொருட்படுத்தவில்லை. “நான் என் துணிகளை வெளுக்க ஆரம்பித்தது இதுதான் முதல் தடவை. அதனால்தான் இந்தப் பிசகு ஏற்பட்டது. இருந்தாலும் பரவாயில்லை. துணி வெளுப்பதில் ஒரு தனி ஆனந்தம் இருக்கிறது” என்றார். ஒருவர் “உங்கள் துணியை நீங்கள் ஏன் சலவைச்சாலைக்கு அனுப்பக்கூடாது?” என்று கேட்டார். அதற்கு காந்தி “சலவைச்சாலைக்குக் கூலி கொடுக்க என்னால் முடியாது. ஆகையால் என் துணியை நானே துவைத்து வெளுக்கிறேன்” என்றார். இப்படிச் சில நாட்கள் சென்ற பிறகு துணி வெளுப்பதில் காந்திக்கு நல்ல திறமை ஏற்பட்டது. பெட்டி போடவும் கற்றுக்கொண்டார். மற்ற பாரிஸ்டர்களுக்கு காந்தியினுடைய செய்கை பிடிக்கவில்லை. ஆனால், தம் வேலையைத் தாமே செய்து கொள்வதில் காந்திக்கு அதிக உற்சாகமும் நம்பிக்கையும் ஏற்பட்டன. ஒவ்வொருவரும் தம் கையினால் ஏதாவது ஒரு வேலை செய்யப் பழகிக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும், எவ்விதமான தொழிலும் ஈனமான தன்று என்றும் காந்தி இப்போதும் வற்புறுத்தி வருகிறார். 

தென்னாப்பிரிக்காவில் காந்தியின் வீடு ஓர் அன்ன சத்திரம்போல் இருந்தது. சிநேகிதர்களாகட்டும் அந்நியர்களாகட்டும் இந்தியர்களாகட்டும் பிறதேசத்தவர்க ளாகட்டும், கறுப்பு மனிதர்களாகட்டும் வெள்ளையர்களாகட்டும் யாவரையும் தம் வீட்டுக்கு அவர் தாராளமாக வரவேற்றார். வீட்டில் யார் வந்து தங்கினாலும் அவர்களைத் தம் சொந்தக் குடும்பத்தினர் என்றே காந்தி கருதினார். ஒருவருக்கொருவர் ஒத்தாசையும் பணிவிடையும் செய்து கொள்ளவேண்டும் என்பது காந்தியின் கொள்கை. தீண் டப்படாதார் என்ற வகுப்பைச் சேர்ந்த கிறிஸ்தவரொருவர் ஒரு தடவை காந்தியுடன் தாமதித்தார். காந்தி மற்ற வர்களை எப்படி உபசரித்தாரோ அம்மாதிரியே இந்த ஆ திதிராவிடக் கிறிஸ்தவ விருந்தாளியையும் உபசரித்தார். வித்தியாசம் ஒன்றும் பாராட்டவில்லை. ஆனால், காந்தியின் மனைவியாருக்கு இது பிடிக்கவில்லை. அந்த அம்மை யாருக்கு அக்காலத்தில் தீண்டப்படாதாரிடம் ஒருவித அருவருப்பு இருந்தது. அந்தக் கிறிஸ்தவ விருந்தாளிக்குப் பணிவிடைசெய்ய அந்த அம்மணி உடன்படவில்லை. இதை ஒரு நாள் காந்தி நேரில் கண்டுவிட்டார். தம் மனைவியை அதற்காகக் கோபித்துக்கொண்டு, “வீட்டைவிட்டு வெளியே போய்விடு!” என்று அதட்டினார். அதற்கு அந்த அம்மணி “இந்திய தேசத்தில் இருந்தால், சொந்தக்காரர் வீட்டுக்குச் செல்லக்கூடும். தென்னாப்பிரிக்காவில் நான் எங்கே செல்வது?” என்று கேட்டார். அத்துடன் காந்தியிடம் தம் அபிப்பிராயத்தையும் எடுத்துச் சொன்னார். கடைசியிலே, காந்தி தம் செய்கைக்கு வருந்தினார். தம் அபிப்பிராயமே நியாயமா யிருந்தாலும், தம் மனைவியிடம் தாம் இப்படிக் கோபப்பட்டிருக்கலாகாது என்று உணர்ந்தார். பிறகு, இருவருக்கும் சமரசம் ஏற்பட்டது. 

போயர் யுத்தத்தின் போது காந்தி தென்னாப்பிரிக்காவில்தான் இருந்தார். தமக்குப் போயர்களிடத்து அபிமானம் இருந்த போதிலும் ஆங்கிலேயருக்குத் தம்மாலான உதவியைச் செய்யக் கடமைப்பட்டதாக, காந்தி எண்ணினார் ; இந்தியர்கள் கேவலம் சுயகாரியப் புலிகள் அல்லர் என்றும், சமயம் வாய்த்தால் எந்தவிதமான கஷ்டத்தை யும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார்கள் என்றும் நிரூபித்துக் காட்டினார். சண்டையில் அடிபட்டவர்களுக் சிகிச்சை செய்வதற்கென்று இந்திய சிகிச்சைப் படை யொன்றைத் திரட்டினார். இவர்களின் வேலைத் திறத்தையும் வீரத்தையும் யாவரும் மெச்சி இந்தியர்களை வெகுவாகப் பாராட்டினார்கள். இந்தியர்களை முன்னிலும் அதிகமாக ஆங்கிலேயரும் மற்றவர்களும் மதித்தார்கள். 

சண்டை தீர்ந்ததும் காந்தி இந்தியாவுக்குத் திரும்பி வர எண்ணினார்; தமக்கு விடை கொடுக்கும்படி தம் நண்பர்களைக் கேட்டார். தென்னாப்பிரிக்க இந்தியர்கள் “நாங்கள் வேண்டும்போது நீங்கள் திரும்பவும் வருவதாயிருந்தால் தான் நீங்கள் இந்தியாவுக்குப் போகலாம்” என்றார்கள். அதற்குச் சம்மதித்து, காந்தி இந்தியாவுக்குத் திரும்பினார். அவர் புறப்படுவதன் முன்பு, ஒரு பிரிவுபசாரமும் நடத்தினார்கள். அச்சமயம் தங்கத்தினாலும் வெள்ளி யினாலும் செய்யப்பட்ட பல ஞாபகச் சின்னங்களையும் தட்டுக்களையும் கோப்பைகளையும், தங்கள் நன்றியறிதலின் அறிகுறியாக, காந்திக்கு அவர்கள் கொடுத்தார்கள். அவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்வ தென்று காந்திக்கு விளங்கவில்லை. அவர் மனைவியோ எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதை காந்தி விரும்பவில்லை. ஒரு பொதுஜன ஊழியன் இந்தச் சன்மானங்களைப் பெறக் கூடாதென்று அவர் எண்ணினார். ஆகையால், அவர்கள் கொடுத்த விலைபெற்ற சாமான்கள் யாவற்றையும் அவர்களுக்கே காந்தி திருப்பிக் கொடுத்துவிட்டார். 

இந்தியாவுக்கு வந்ததும் காந்தி மறுபடியும் பாரிஸ்டர் தொழில் புரிந்தார்; ஆனால், பல இந்தியத் தலைவர்களையும் சந்தித்தார். அவர்களுள் ஒருவர் கோபால கிருஷ்ண கோகலே. இவர்தான் இந்திய ஊழியர் சங்கத்தை ஏற்படுத்தியவர். காந்தியைத் தம் கூடப்பிறந்த சகோதரரைப் போல, கோகலே வெகு அன்புடன் நடத்தினார். காந்தி இந்தியாவுக்கு வந்து சில மாதங்களாயின. அதற்குள்ளாக, மறுபடியும் தென்னாப்பிரிக்காவுக்கு வரும்படி காந்திக்கு ஒரு தந்தி வந்தது. உடனே காந்தி தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார். அங்கிருந்த இந்தியர்கள் அளவிலா மகிழ்ச்சி யடைந்தனர்.

– தொடரும்…

– காந்தித் தாத்தா கதை, முதற் பதிப்பு: 1941, சக்தி காரியாலயம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *