காசி யாத்திரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 7, 2026
பார்வையிட்டோர்: 52 
 
 

அவன் அன்று மிக மகிழ்ச்சியாக இருந்தான். அவனுடைய அன்பு மனைவிக்கு அன்று பிறந்த நாள். அவளுக்கு பிடித்த ஊதா நிற பூக்கள் நிறைய இருந்த ஒரு பூச்செண்டை அவளுக்கு பரிசளித்தான். பிறந்தநாள் கேக்கை வெட்டி குழந்தைகளுடன் எல்லோரும் சாப்பிட்டு முடித்து சோபாவில் அமர்ந்தான் விஜய். சிறிது நேரத்தில் அவள் பில்டர் காஃபியை நீட்டியபோது அதை வாங்கி ருசித்தபடி, இன்று தான் என்னுடைய தாயின் நினைவு தினம் என்று தான் வழக்கமாக எல்லா வருடமும் கூறுவதைப் போல் நினைவூட்டினான்.

அவன் கல்லூரியில் மூன்றாவது வருடம் படித்துக் கொண்டிருந்த சமயம் தன் தாயை இழந்தவன். தன் காதல் மனைவியை சந்தித்து அவர்கள் பழகிக் கொண்டிருந்த காலத்தில் முதன் முதலில் அவள் பிறந்த நாளும் தன் தாயின் நினைவு நாளும் ஒன்றென தெரிந்த பொழுது அதிசயித்துப் போய் இருக்கிறான். தன் தாயின் சகல ஆசீர்வாதங்களுடன் அவள் தன் வாழ்க்கைக்குள் வரவிருக்கிறாள் என்று முழுவதுமாக நம்பினான்.

தன் முதுகையை யாரோ தொடுவது போல் உணர்ந்து அவன் திரும்பி பார்த்தபோது, என்னப்பா! அம்மா பத்தி யோசிச்சிட்டு இருக்கியா? என்று அவள் கேட்டாள். கவலைப்படாதே அம்மா நம்முடன் தான் எப்பொழுதும் இருக்கிறாள் என்றாள். விஜய் தன் தாய்க்கு பல ஆண்டுகளாக திதி செய்யவில்லை. அது தெரிந்த அவள் ஒரே ஒரு முறை நாம் காசி சென்று அங்கு உன் தாய், தந்தையர் இருவருக்கும் பிண்ட தானம் செய்து விட்டால் இதுவரை நீ செய்யவில்லை என்ற குறை நீங்கும் என்று கூறினாள். அவன் ஒவ்வொரு ஆண்டும் தன் தாயின் நினைவு நாளில் சங்கடப்படுவதும், அவள் காசியைப் பற்றி நினைவூட்டுவதும் பல ஆண்டுகள் தொடர்ந்தது. பல காரணங்களால் அவர்களால் காசிக்கு செல்ல இயலவில்லை. ஆண்டுகள் உருண்டோடின. இன்று தன் காதல் மனைவியை தொலைத்த அவன் அவள் கூறியதை நினைவுபடுத்திக் கொண்டான். அவள் நினைவாக அவளுக்கு பிண்ட தானம் செய்யும் பொருட்டு காசி செல்வதென முடிவு செய்தான்.

அக்டோபர் 2025 காந்தி ஜெயந்தியை ஒட்டிய விடுமுறை நாட்களில் இரு நாள் பயணமாக குழந்தைகளுடன் காசி செல்வது என்று தீர்மானித்தான்.

அதிகாலையில் சென்னையிலிருந்து வாரணாசி செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம். தன் வாழ்வில் முதன் முறையாக காசி செல்லும் அவன் சிறு வயதில் அம்புலிமாமா இதழில் படித்த கதைகளில் வரும் காசி நகரம் இப்போது எப்படி இருக்கும் என்று எண்ணியபடி விமானத்தில் ஜன்னலில் இருந்து மேகக் கூட்டங்களை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

வாரணாசியில் விமானம் தரை இறங்கிய பொழுது ஹிந்தியில் ஒரு வார்த்தை கூட தெரியாததால் வேற்று உலகிற்குள் புகுந்ததை போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. சிறிதாவது ஆங்கிலத்தில் பேசக்கூடிய கார் ஓட்டுநர் கிடைப்பாரா என்று விசாரித்துக் கொண்டிருந்த பொழுது தான் அவன் மிஸ்ராஜியை சந்தித்தான்.

மிஸ்ராஜி வாரணாசியில் வசிக்கும் ஒரு உள்ளூர் வாசி. ஆங்கிலத்தில் ஓரளவு உரையாடத் தெரிந்த கார் ஓட்டுநர். அவனிடம் அவன் பயணத்திற்கான காரணங்களை தெரிந்து கொண்ட மிஸ்ராஜி தனக்கு அந்தப் பகுதிகள் மிகவும் அத்துபடி என்று நேரே அவனை அரிச்சந்திரா காட்டிற்கு (GHAAT) அழைத்து சென்றார்.

கங்கையின் கரையை அடைவதற்கு மிகவும் குறுகலான சந்துகளின் வழியே ஒரு நீண்ட நடை பயணம். அந்த சிறிய சந்துக்களிலும் ஒலிப்பானை தொடர்ந்து அடித்துக் கொண்டு இரு சக்கர வாகனங்களில் வேகமாக வரும் உள்ளூர் வாசிகள். கோவிலுக்கு நேர்ந்து விட்ட ஒரு காளை அதுவும் அந்த சந்துக்குள் மேய்ந்து கொண்டு இருக்கிறது. கடவுள் புண்ணியத்தில் அது அவர்களை ஒன்றும் செய்யவில்லை. குரங்கு கூட்டங்கள் பசியில் உணவை தேடி தெருக்களில் அலைந்து கொண்டிருந்தன அவைகளுக்குள் சண்டை வேறு. தெருக்களில் இறந்தவர்களின் உடலை சில மனிதர்கள் சுமந்து செல்கிறார்கள் ராம நாம சத்திய ஹே என்ற ஒலி அவ்வப்போது தெருக்களில் கேட்டுக் கொண்டே இருந்தது. இப்படியாக அவன் அரிச்சந்திரா காட்டை அடைந்தான்.

அவன் நினைத்ததை விட கங்கையின் நீர் சுத்தமாக தான் இருந்தது. அதன் படிக்கரையில் சில புரோகிதர்கள் அமர்ந்திருக்கிறார்கள் அதில் தமிழில் பேசிய ஒருவரிடம் அவன் சென்றான். அவர் கூறியபடி கங்கையில் நீராடி, மந்திரங்களை ஜெபித்து, சியாகியங்களை முடித்து அப்படி பிண்டதான சடங்கு நல்லபடியாக முடிந்த தருணம், புரோகிதர் ஒரு படகோட்டியை அறிமுகம் செய்தார். இந்தப் படகில் ஏறி மணிகர்ணிகா காட்டிற்கு சென்று அங்கு நீராடி காசி விஸ்வநாதரை தரிசித்துவிட்டு அன்னபூரணி கோவிலில் உணவு உண்டு திரும்பி படகில் இதே இடத்திற்கு வந்து விடலாம் என்று கூறினார். இதற்குப் படகோட்டிக்கு கட்டணம் ரூபாய் 6000.

ஒரு 20 நிமிட படகு சவாரி மணிகர்ணிகா காட்டை நெருங்கும் சமயத்தில் பல இடங்களில் இறந்த உடல்களை தகனம் செய்வதை அவன் கண்டான். கங்கை கரையின் பல இடங்களில் தகனத்திற்கு தேவையான விறகுகள் விற்கப்படுகின்றன.

ஞானவாபி மசூதி பிரச்சனை எதிரொலியாக விஸ்வநாதர் ஆலயத்தை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பக்தர்கள் எந்தவித பைகளோ, கைபேசிகளோ கொண்டு போக அனுமதிக்கப்படவில்லை. அமைதியாக கடவுளை தரிசிக்க வேண்டிய இடம் ஒரு போர்க்களத்தை போல் காட்சியளித்தது. மிஸ்ராஜி நேரே ஒரு கடைக்கு அவனை அழைத்துச் செல்கிறார். அங்கு அவர்களுடைய பொருட்களை சிறிய மர அறைகளில் வைத்து வைத்துவிட்டு பூஜைக்கு பொருள்களை வாங்கிக் கொள்ளுமாறும் அது தவிர பண்டிதர் ஒருவரும் உங்களுடன் வருவார் என்றும் கூறுகிறார் அதற்கு கட்டணம் ரூபாய் 5000.

விஸ்வநாதர் ஆலயத்திற்குள் அவன் நுழைந்தான். தன் மனைவியை நினைத்துக் கொண்டு விஸ்வநாதரை தரிசித்து, அன்னபூரணி சன்னதிக்கு சென்றான். அங்கு இருந்த புரோகிதர் அவனிடம் அன்னபூரணிக்கு பூக்களினால் அலங்காரம் செய்தால் நல்லது என்றும் அதற்கு நன்கொடை கொடுக்குமாறும் கேட்கிறார் அதற்கு கட்டணம் ஆயிரம். அதை முடித்து அடுத்த சன்னதி அங்கு இருந்த புரோகிதர் அன்னபூரணி பெயரில் ஒரு நாளைக்காவது அன்னதானம் வழங்க வேண்டும் என்றும் அதற்கான தொகை ரூபாய் 2000 என்றும் கூறுகிறார். இவர்கள் எல்லோரும் கரன்சி நோட்டுகளை மட்டுமே வாங்குகிறார்கள். அவன் போதிய பணம் எடுத்து செல்லாததால் அவன் கூடவே அந்த கடையில் இருந்து வந்த பண்டிட், கரன்சி நோட்டு கேட்கும் இடங்களில் எல்லாம் அவர் பணத்தை கொடுத்துவிட்டு, அக்கவுண்டில் வைத்துக் கொள்ளுகிறேன் என்றார். பக்தி வணிகமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்று எண்ணிக்கொண்டான்.

இது முடிந்து படகில் அரிச்சந்திரா காட்டிற்கு திரும்பினார்கள். படகோட்டி 18 வயது நிரம்பாத ஒரு சிறுவன். அவன் கங்கையின் கரையில் அமைந்திருந்த பல சாரருக்கான காட்டுகளை அவனுக்கு விவரித்துக் கொண்டே வந்தான். மெல்லியதாக மழைச்சாரல் பொழிந்து கொண்டிருந்தது. அவன் நினைவு முழுவதும் அவளைப் பற்றியே இருந்தது. ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒரு காடு என்று படகோட்டி சிறுவன் கூறிய பொழுது அவன் சமூகத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை பற்றி எண்ணிக்கொண்டான்.

படகு மெதுவாக அரிச்சந்திரா காட்டை அடைந்தது. மிஸ்ராஜி அங்கு காத்திருந்தார். அன்று இரவை கழிக்க ஒரு ஹோட்டலில் தங்கினான். மறுநாள் காலை சென்னைக்கு விமானம். மிஸ்ராஜி அதிகாலையிலேயே வந்திருந்தார். விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன் வாரணாசியிலேயே காலை சிற்றுண்டியை முடித்து விடலாம் என்று அவன் கூறியதால் வழியில் ஒரு சிறிய கடையில் காரை நிறுத்தி எல்லோரும் சாப்பிட்டார்கள். கச்சோடி, தயிர், குலோப்ஜாமுன் பரிமாறப்பட்டது.

வாரணாசி விமான நிலையத்தை அடைந்தான். மிஸ்ராஜிக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துவிட்டு விடை கூறி இண்டிகோ விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது காசியில் கண்ட அனைத்து காட்சிகளும் அவன் கண்முன்னே விரிந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *