காகித உறவுகள்
கதையாசிரியர்: புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 4, 2025
பார்வையிட்டோர்: 1,829
(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கொழும்பு-14,
23-12-81.
அன்புடையீர்!
அண்மைக்காலங்களாகத் தங்களது பல கதைகள் எமது ஆஇ சஞ்சிகையின் பிரசுரத்துக்காகக் கிடைத்து வருகின்றன. அவை யாவுமே எமது மாசிகையில் வெளிக்கொணரக் கூடியவைகளாக அமைந்திருக்கின்றன. இதன் பிரகாரம் மார்கழி இதழினை அலங்கரிக்கும் தங்களது ‘அரிச்சுவடி’ கதையினைத் தொடர்ந்து மாசி இதழுக்காக ‘புறமோஷன்’ என்ற கதையினையும் தேர்ந்தெடுத்துள்ளோம்.
ஆஇ என்ற ஈரெழுத்துள் பொதிந்திருக்கும் எமது ‘ஆக்க இலக்கியம்’ எனும் மாசிகையின் மகிமையுணர்ந்து செயலாற்றும் தங்கள் திறன் போற்றற்கரியது. தொடந்து வரும் தங்களது பிரசவங்களுக்கூடாகவே தங்கள் திறனின் பரிணாம வளர்ச்சியை மிகவும் உணர்ந்து வருகிறேன். வெறுமனே தயாரிப்புகளாக அன்றி தங்களது ஒவ்வொரு படைப்பும் சமூகத்தின் நிதர்சனங்களையும் பிரக்ஞைகளையும் படம் பிடித்துக் காட்டுகின்றன. கூரான, செறிவான மொழிநடை; லாவகமான வெளிப்பாடு, இவற்றினால் தங்களது பதிவுகள் தனித்துவம் பெற்று விளங்குகின்றன. நிச்சயமாக தங்களுக்கு ஈழத்தின் இலக்கியவாதிகள் மத்தியில் ஒரு உன்னத இடம் உண்டு.
தொடர்ந்தும் எழுதுங்கள் அம்மணி! தங்களுக்கு ஊக்கமளிப்பதால் ஆஇ பெருமை பெறுகிறது!
அன்புடன்
ஆசிரியர்,
ஆ.இ.
யாழ்ப்பாணம்,
25.12.81.
மதிப்பிற்குரிய ஆ.இ ஆசிரியர் அவர்களுக்கு!
ஐயா!
தங்களது மடல் ஒன்று என் கரம் கிட்டியிருப்பது பரமாத்மா ஜீவாத்மாவைத் தேடிவந்த வரலாற்றுக்கு நிகரானது. எழுத்துலகில் அஆ எழுதுபவள் நான். அப்பேற்பட்ட எனக்கு ஆஇ சஞ்சிகை ஆசிரியரது பாராட்டுக்கள் கிடைத்திருப்பதை உண்மையில் பெரும் பேறாகவே கருதுகிறேன். தங்களது மடல் எனக்குச் சந்தோஷத்தைத் தந்திருந்தாலும் வெறும் பல்கலைக்கழக மாணவியான என்னைப்போய் அம்மணி எனத் தாங்கள் விழித்திருந்தது பெரிதும் சங்கடமாக இருந்தது. தங்களது வேண்டுதல்படி தொடர்ந்தும் எழுதுவேன். மென் மேலும் தங்களது பாராட்டுக்களை தட்டிக் கொள்வேன் என உறுதி பகர்ந்து விடைபெறுகிறேன்.
நன்றிகளுடன்
ஆரத்தி.
கொழும்பு.
1.1.82.
அன்புமிக்க சோதரி!
இனிய புதுவருட வாழ்த்துக்கள்!
உங்களது மடலுக்கு நன்றி. ஆக்க இலக்கியத்தின் பரிணாமத்தை அகலப்படுத்த முனைந்த உங்களது அறுவடைகளின் ஆழ அகலங்களின் அடிப்படையில் வைத்து ஆரத்தியின் வயதைக் கணித்து விட்டது எனது அறியாமைதான். முதிர்ந்து பண்பட்டது உள்ளமும் அறிவுமே என்பதனை இப்போது தான் புரிந்து கொள்கிறேன். அது நிற்க, பரமாத்மா என்றெல்லாம் சொல்லுமளவிற்கு நான் மட்டும் மணிவிழாக் கண்ட முதுபெரும் கலைஞனா என்ன? மார்கழி இதழினை அலங்கரித்த தங்கள் அரிச்சுவடிக்கே ஆயிரக்கணக்கில் அர்ச்சனை மடல்கள் வந்து குவிகின்றன. முன்னணிச் சுவைஞர்கள் மூவரது கருத்துக்களை மட்டும் இங்கு இணைத்துள்ளேன்.
உங்கள் பதில் கண்டு பிற!
அன்புடன்
சோதரன்
செல்லா
யாழ்ப்பாணம்,
23.4.82.
அன்பின் செல்ல (1) அண்ணா!
உங்கள் புத்தாண்டு வாழ்த்து மடலும் இரு கடிதங்களும் கிடைத்திருந்தன. எனது பதிலை எதிர்பார்த்துச் சலித்து முடிவில் “என்ன இவளுக்கு?” என்றெல்லாம் நன்றாகவே கற்பனை பண்ணியிருப்பீர்கள். எனக்கு இறுதியாண்டு பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது அண்ணா. இன்றுதான் இறுதிப்பாடம். பரீட்சையால் வந்ததும் வராததுமாக இருந்து இதனை வரைகிறேன்.
கடந்த 22 ஆண்டுகளாக குடும்பத்தில் தனியாகவே வாழ்ந்து விட்டவள் நான். அம்மாவைத் தவிர என் மீது அன்பு பொழிய இதுவரை எவருமே இருந்ததில்லை. ஆனால், இப்போதெல்லாம் அந்தக் குறை அற்றுப்போய்விட்டது அண்ணா! உங்கள் கடிதங்கள் எனக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் நல்கி வருகின்றன. உடன் பிறந்தவன் ஒருவன் இத்தனை காலங்களுக்குப் பிறகாவது கிடைத்திருப்பது எனது பேரதிர்ஷ்டமே. அம்மா கூட எங்களது பாசம் பற்றி அடிக்கடி சொல்லிப் பூரிப்படைவா.
நிற்க ஆஇ புத்தாண்டு மலரிலும் என் கதை ஒன்றினைப் பிரசுரித்திருக்கின்றீர்கள். 5 மாதங்களுள் எனக்கு மட்டும் 3 களம் தந்த உங்கள் உயர்ந்த மனதுக்கும், அன்புக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டவள். அண்ணி, பிள்ளைகள் யாவரும் அங்கு நலந்தானே? மீண்டும் மறுமடல் ஒன்றில் சந்திக்கின்றேனே…!
இனிய தங்கை ஆரத்தி.
கொழும்பு,
25.12.82.
என் இனிய தங்கை ஆரத்திக்கு!
இன்று எனது பிறந்த நாளுக்காக வந்து குவிந்த எத்தனையோ வாழ்த்துக்கள் மத்தியில் உனது பதிவை மட்டுமே மிக்க பதுமையானதாக நான் உணருகின்றேன். 30 வரிகளின் உச்சக் கட்டமாக முடிவில் நீ எழுதிய உங்கள் பெயரே செல்லா நான் சுமக்கும் முதல் மழலை!” என்பதனை வாசிக்கும் போது உண்மையிலேயே என் கண்கள் பனித்துவிட்டன ஆரத்தி.
“இப்பிறப்பில் மட்டுமல்ல நீ எப்பிறப்பிலும் என்னுடன் பிறக்க வேண்டும்!” என்ற வரியும் மிக்க என் கவனத்தை ஈந்தது. இதற்குப் பதிலாக நான் என்ன தரமுடியும்? ஆரத்தியின் ‘அட்வான்ஸ் லெவல்’ கதை தாங்கி ஆஇயின் நத்தார் மலர் நாளை வெளிவருகிறது என்பதை மட்டுமே பிறந்த நாள் பரிசாக என் தங்கைக்கு இந்தக் குசேலனால் அன்பளிக்க முடிகிறது!
உன் அண்ணா
யாழ்ப்பாணம்,
31.3.83.
என் அண்ணா!
நானுங்களுக்கு வரையும் 50 ஆவது மடல் இது. பிரதித் திங்கள்களிலும் உங்கள் மடல் என் கரம் கிட்டுவதுண்டு. அதில் தற்செயலாகத் தாமதம் நிகழும் போது தபால் திணைக்களத்தில் எனக்கு வரும் எரிச்சலை வெறும் வார்த்தைகளால் வடிக்க முடியாது அண்ணா.
‘ஆஇ’ன் சித்திரை மலரிலிருந்து ஆரம்பமாகிறது ஆரத்தியின் ‘பட்டதாரிகள்’ தொடர்கதை என்ற விளம்பரத்தினைக் கடந்த இதழில் கண்டு மகிழ்ந்தேன். அதேசமயம் ஆரம்பித்த 5 ஆண்டுகளுள் ‘ஆஇ’யின் வளர்ச்சியினை நான் மிக உன்னிப்பாகவே கவனித்து வருகிறேன். குப்பைகள் மலிந்து விட்ட இன்றைய இலக்கியக் களத்தில் ‘ஆஇ’யின் பாதை தனியானது தான். 30 வயதுகளில் மட்டும் இருந்துகொண்டு இப்படியான கனதியான தொகுப்பினைத் தர எப்படி அண்ணா உங்களால் முடிகிறது?
கடந்த காலங்களில் ‘ஆஇ’யில் பிரசுரமான என் கதைகள் சிலவற்றினைத் தொகுத்து நூலுருவாக்கும் முயற்சியில் நான் ஈடுபடலாம் என்றிருக்கையில் முதுமாணிக்கான பரீட்சைக்காகவும் தயார்ப்படுத்த வேண்டிய ஒரு நிர்ப்பந்தம். முதலில் படிப்பை முடித்துப் பின்னர் நூலை வெளிக்கொணர இப்போது தீர்மானித்திருக்கிறேன். என் நூல் வெளியீட்டுவிழாவுக்கு வந்து சிறப்புரையாற்றி முதல் பிரதி பெறுவது நீங்கள் தான் செல்லா நினைவிருக்கட்டும்!
பரிய தங்கை ஆரத்தி
கொழும்பு,
23.7.83.
பரிய தங்கை ஆரத்தி!
“ஆஇ என்ன ஆரத்திக்குச் சீதனமா? என்று அன்றொரு நாள் நண்பர் அளையூரான் பகிரங்கமாகவே இலக்கியக் கூட்டம் ஒன்றில் இங்கு கேட்டிருந்தாராம். வேறு நண்பர்கள் சொன்னார்கள், அளையூரானது ஆக்கங்கள் இலக்கிய உலகில் இப்போது எடுபடாது போய்விட்டதனால் அதிகமாக அதேவேளை ஆரோக்கியமான இலக்கியம் படைத்துவரும் ஆரத்தி மீது அவரது ஆத்திரம் திரும்பியிருப்பதில் வியப்பேதும் இல்லைத்தான்.
உனது ‘பட்டதாரிகள்’ நாவல் தனது உள்ளத்தைத் தொட்டதாகப் பிரபல நாவலாசிரியர் தெளிவத்தை ஜோசப் அவர்கள் தனது கைப்படவே கடிதமெழுதி ‘ஆஇ’க்கு அனுப்பியுள்ளார். எண்பதுகளில் எழுத ஆரம்பித்தவர்களுள் ஆரத்திக்கு ஒரு தனியிடமுண்டு என்ற ரீதியில் முன்னணித் திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த வகையில் ‘பட்டதாரிகள்’ உனக்கோர் வெற்றிப்படைப்பு என்று மிகத் தாராளமாகவே கூறிக் கொள்ளலாம்.
சிறுகதைகளை விட நாவல் இலக்கியத்திலேயே உனது ஆளுமை பூரணப்படுத்தப்படுகிறது என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம். பல்கைைலக்கழகக் களத்தோடு ஒன்றியதாக மட்டுமன்றி மென்மேலும் உனது பார்வை விரிவடைய வேண்டும் என்பதே எனது அவர்!
அண்ணன் செல்லா
யாழ்ப்பாணம்
1.9.83.
அன்புள்ள செல்லா அண்ணா குடும்பத்தினருக்கு! நிகழ்ந்து விட்ட இனக்கலவரத்தில் உங்கள் நிலை அறிய நான் கொண்ட துடிப்பினை வார்த்தைகளில் வடிக்க முடியாதண்ணா! ஜூலை 25 லிருந்து தொடர்ந்து இரு வாரங்களாக உங்கள் குடும்பம் பட்ட துயரத்தினை மடலில் பார்த்த போது பெருகி வந்த என் கண்ணீரைத் தடுக்க முடியவில்லை அண்ணா! என்ன கொடுமை இது? எங்கள் இனத்துக்கு கால் நூற்றாண்டுக்குள் அடுத்தடுத்தாக ஏனிந்த நியதி?
வீடுவாசல், பொருள் பண்டங்களை இழந்து உடுத்த உடையுடனேயே கடந்த 5 வாரங்களாக அகதிமுகாமில் அல்லலுற்று வரும் உங்கள் குடும்பத்துக்கு ஆறுதல் வார்த்தைகளைத் தவிர இங்கிருந்து வேறு எவற்றினை அண்ணா என்னால் அனுப்பி வைக்க முடியும்?
ஆஇ அச்சகம் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டதாகவும் காகிதங்களும், பல நூல்களும் குவிக்கப்பட்டு உங்கள் கண்முன்னாலேயே எரிக்கப்பட்டதாகவும் அறிந்து சொல்லொண்ணாத் துயருற்றேன். கல்வித்தாய்க்கு நிகழ்ந்த கதிக்கு காலம் ஒரு பதில் சொல்லாமல் விடாது அண்ணா!
பல பேருக்கு ஏணியாக இருந்து தமிழ் இலக்கியத்துக்கு அரும் பெரும் தொண்டாற்றிய செல்வர் நீங்கள். உங்களால் உயர்ந்த ஒருவரே நாளை உங்கள் வளர்ச்சிக்கு ஒரு வழி சொல்லக்கூடும்! ஆதலால் உறுதியாக இருங்கள் அண்ணா என்பதையே இறுதியாகவும் கூறி விடைபெறுகிறேன்.
அன்புத் தங்கை!
அன்புடன்,
தங்கை,
ஆரத்தி.
கொழும்பு-3
7.10.83.
அன்புத் தங்கை!
இரத்மலானை இந்துக்கல்லூரி அகதிகள் முகாமுக்கு நீ அனுப்பி வைத்த ஆறுதல்கடிதம் கண்டு மிக மகிழ்ந்தேன். உனது அன்பின் ஆழத்தின் நிதர்சனத்தினை நீ அழகாக நிரூபித்துவிட்டாய் என என் மனைவியும் கூறினாள்.
இப்போது கவிஞர் மீரானது வீட்டில் நாம் குடியிருக்கின்றோம். தற்காலிகமாகத் தனியார் அச்சகமொன்றில் முகாமையாளனாகப் பணி புரிந்து என் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறேன். மீரானது குடும்பத்தினரின் அன்பும், புரிந்துணர்வும் ஓரளவுக்கு எமது இழப்புக்களை நிவர்த்திக்க முனைகின்றன.
ஆஇ ஏட்டினை மீண்டும் ஆரம்பிக்க எடுத்த முதல் முயற்சி தோல்வியைத் தழுவி விட்டது. அதனைத் தொடர முடியும் என்ற நம்பிக்கை அருகி வருகிறது.
அதிகம் எழுதும் மனோநிலையில் நானில்லை. பிறபின்.
கொழும்பு-3,
25.12.83.
அன்புத் தங்கை!
நீண்ட நாட்களாக உன் காகிதங்கள் எவற்றையுமே காணவில்லையே ஏன்? அஞ்சாது உன் அஞ்சல்களை மீரானது விலாசத்திற்கே அனுப்பி வைக்கலாம் ஆரத்தி! ‘ஆஇ’ல் அதிகமாக தன் கவிதைகளை அரங்கேற்றாத புதுக்கவி மீரான் இப்படியாக எனக்கு உபசாரம் தருவது உண்மையில் வியப்பினைத் தருகிறது. தங்கும் வாடகையினைக்கூட வாங்கத் தயங்குகிறார் அவர். எனது ‘கிளிக்’ என நான் கருதியிருந்த நண்பர்கள் ஏனோதானோ என்றிருக்கும் இவ்வேளையில் மீரான் கவி இத்தனை கரிசனை என் விடயத்தில் காட்டிவருவது உண்மையில் மானுடம் ஒன்றினை எனக்கு இனங்காட்ட விளைகிறது! உன் பதில் கண்டு மீண்டும் எழுதுவேன்!
கொழும்பு-3
16.5.84.
அன்புத் தங்கை!
இன்று உனது ‘புதிய உறவுகள்’ நூல் வெளியீட்டு விழா என பத்திரிகையில் பார்த்தேன். முதல் பிரதி வாங்கிச் சிறப்புரை ஆற்றும் அந்தக் கலாநிதியின் பெயரினைக் கூட ஆர்ப்பாட்டமாகப் போட்டிருந்தார்கள். தகுதியானவர்தான். ஆனால், ஒரு அழைப்பிதழ் கூட என் கரம் கிட்டாதளவிற்கு இந்தச் செல்லா இன்று செல்லாக் காசாகி விட்டானா ஆரத்தி?
“அற்றகுளம்,அநாதைகள் என எம்மை இனங்கண்டதும் முன்பு ஒட்டியிருந்தவர்களே இப்போ எம்மை எட்டி உதைக்கிறார்களே?” என என்மனைவி இதையறிந்ததும் சொன்னாள். ஆனால், ஆஇமாசிகையால் இனங்காணப்பட்டு இலக்கிய உலகில் நிரந்தர இடத்துக்கு வந்துவிட்டவர்கள் மத்தியில் உன்னை இன்னமும் ஒரு வித்தியாசமான இலக்கிய வாதியாகவே என்னால் கணிக்க முடிகிறது. அதனால் மென்மேலும் உன் வளர்ச்சிக்காக ஆண்டவனைப் பிரார்த்தித்து அடியேனின் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொழும்பு,
7.9.85.
அன்புச் சகோதரி!
தங்களது திருமணச் செய்தி பற்றி விளம்பரம் பார்த்தேன். அதில் உற்றார் உறவினர் இதை ஏற்றக்கொள்ளவும் என்ற வாசகம் இருந்ததல்லவா? உரிமையோடு நான் அதை ஏற்றுக் கொள்கிறேன்.
தங்கள் துணைவரும் தங்களைப் போல பல்கலைக்கழக விரிவுரையாளர் என்ற சேதி மிக்க மகிழ்வைத் தந்தது! அழகு, அறிவு, இளமை, கல்வி, புகழ், பெருமை போன்ற பதினாறு வளமும் உங்கள் இருவரையும் மேலும் சேர வேண்டி மனதார வாழ்த்தி விடைபெறுகிறேன்!
கொழும்பு,
25.12.88.
அன்புடையீர்!
மிகமிக நீண்ட இடைவெளிக்குப் பின் இம்மடலினை நான் வரைகிறேன். ஆராய்ச்சிக் கல்வியின் நிமித்தம் தம்பதிகளாகவே தாங்கள் வெகு விரைவில் வெளிநாடு செல்லத் தீர்மானித்திருப்பதாக அறிகிறேன். மிக்க மகிழ்ச்சி. இப்போதும் ‘ஆஇ ‘ வெளிவந்து கொண்டிருக்குமானால் இந்தச் செய்தியை விஷேட மகுடத்தின் கீழ் வெளிக்கொணர்ந்திருப்பேன். என்ன செய்வது ‘செல்லா’தான் இன்று ‘செல்லா’து போய்விட்டானே?
கடந்த மாதம் தங்கள் மழலையின் முதலாண்டு பிறந்ததின வாழ்த்து பத்திரிகையில் பார்த்தேன். இலக்கியன்! என்ன அழகான பெயர்? பெற்றவர் போல படிப்பில்… படைப்பியலில் இலக்கியனும் இப்பாரில் பெருமை பெற வேண்டி யானும் பிரார்த்திக்கின்றேன்.
ஆக்க இலக்கியத்திலாவது தாங்கள் காட்டிய ஈடுபாடு வெறும் ‘காகித உறவுகள்’ ஆகிப் போய்விடக்கூடாது என்பதனை மட்டும் ஒரு முன்னாள் மாசிகை ஆசிரியன் என்ற கோதாவில் தங்களிடம் இறுதியாக வேண்டி விடை பெறுகிறேன்! நன்றி! வணக்கம்!
என்றும் அன்புடன்,
முன்னாள் ஆசிரியர் ஆ.இ.
– வீரகேசரி வார வெளியீடு, 1989.
– விடியட்டும் பார்ப்போம்..!, முதற் பதிப்பு: மாசி 1997, பதிப்புரிமை: திருமதி இ.சாந்த குமாரி, கொழும்பு.
![]() |
புலோலியூர் இரத்தினவேலோன், ஆறுமுகம் 1958.12.25 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், புலோலியூரில் பிறந்தார். சிறுகதை எழுத்தாளர். இவர் புற்றளை மகாவித்தியாலயம், ஹாட்லிக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். இவர் யாழ் புற்றளை மகா வித்தியாலயம், யாழ் ஹாட்லிக் கல்லூரி மற்றும் யாழ் சென் ஜோன்ஸ் அக்கடமி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தினகரன் பத்திரிகையில் பிரசுரமான புரளும் அத்தியாயம் எனும் சிறுகதையூடு 1977 இல் இலக்கிய உலகத்திற்கு அறிமுகமானவர். 1977 ஆம்…மேலும் படிக்க... |
