கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 2, 2024
பார்வையிட்டோர்: 853 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இருவரும் ஆப்த நண்பர்கள். “வர வர மோசமாகிக் வருகிறாய்” என்றார் நண்பர்களில் ஒருவரான பத்திரிகாசிரியர். 

”ஏன்?” என்றார் மற்றவர். “படு ஏழை தீபாவளிக் குத் தீபாவளி எண்ணெய் தேய்த்து முழுகுவதுபோல் விசேஷ மலர்களைத் தவிர மற்றக் காலத்தில் எழுதுவதே ல்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு விட்டாய்.” 

“அப்படி ஒன்றுமில்லை. நீ என்ன, எல்லா ஆசிரியர் களும்தாம் கதை கேட்கிறார்கள். எழுத வரவில்லை. வரவும் வராது. சித்தக் குருவி, கவி வெளியில் பாடித் திரிந்து கொண் டிருக்கிறது. கதை கிடைக்காது. கவிதையோ பத்திரிகைகளுக்குத் தேவை இல்லை.’ 

“அப்படி ஒன்றும் இல்லை, ஒரு கவிதையாவது அனுப்பேன்.” 

“உறுதி சொல்ல முடியாது. கவிதை பெண்களைப் போல. விரும்பினால் வெட்கிக் கலவரமடைகிறது. நீர்ப் பாம்புபோல் கற்பனை, தலையை உள்ளுக்கு இழுத்துக் கொள்கிறது.” 

“ஆகையினால் கவிதையும் கிடைக்காது என்கிறாய்; அவ்வளவுதானே?” 

”அதுவும் சொல்லவில்லை.” 

“இந்தக் கவிகள், எழுத்தாளர்கள் எல்லோருமே இப்படித்தான். வெயிலில் காய்வதும் இல்லை; மழையில் நனைவதும் இல்லை! உங்களை எல்லாம் நம்பிப் பத்திரிகை போடுகிறோமே!’ 

“எங்களை நம்பாதே – அதிலும் என்னை நம்பாதே. எழுத்தைக் கொண்டு பிழைப்பதானால் சர்க்கஸ்காரன் சவுக்கைக் கண்டு சிங்கம் கூட்டில் நுழைவதும், வெளியில் வருவதும்.ஆட்டுடன் பால் குடிப்பதும்போல எ எழுத்தை ஆட்டத் தெரியவேண்டும். கவிதை சிங்கமல்ல. என்னிடம் சவுக்கும் இல்லை. உலகு பராசக்தியின் லீலை என்றால் எழுத்து என் லீலை. அச்சு யந்திரம் வேலை செய்வது போல் கவிதா யந்திரம் வேலை செய்ய இயலாது.” 

“இனி நான் என்ன சொல்ல? உன் இஷ்டம்.” 

‘“அது சரி. இப்பொழுது பஸ்ஸுக்குப் போய் ஊருக்குப் போகிறேன். ஏதாவது எழுதினால் அனுப்பி விடுகிறேன். வருத்தப்படாதே.’ 

கவி பஸ் நிற்கும் இடத்திற்கு வந்தார். முதல் பஸ். போய்விட்டது. இனி மெயில் பஸ்தான் அடுத்த வண்டி. புறப்பட இரண்டுமணி யாகும். எனவே பிரயாணிகள் தங்கும் சாவடியில் போய் உட்கார்ந்தார். 

முதல் பஸ் தவறிவிட்ட வருத்தங்கூடத் தோன்றாத படி ஒரு தேனீ கவியின் தலைக்குள் ரீங்கார மிட்டுக் கொண்டிருந்தது. ஒரு முடைப் புழு சிறகு முளைத்து, மண்கூட்டைத் துளைத்து வெளியேறத் தத்தளித்துக் கொண்டிருந்தது. 

இக்கவிக் கிளர்ச்சியில் அடுத்த பஸ் வந்ததுகூடத் தெளிவாகத் தெரியவில்லை.சாவடியை விட்டு ஜனங்கள் முண்டி மோதிக்கொண்டு பஸ் ஏற முயன்றபொழுது தான் கவிக்குப் பஸ் ஏற நினைப்பு வந்தது. கூட்டத்துடன் கூட்டமாக இடித்துக்கொண்டு பஸ்ஸில் ஆறு அங்குலம் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டார். இடம் கிடைத் ததே என்று பிரயாணிகள் ஆறுதலுடன் பெருமூச்சு விட்டபொழுது விஷமக்காரக் கண்டக்டர் வாயைத் திறந்தான். 

“எல்லாரும் இறங்குங்கோ; உம்! எல்லாரும். தபால் எடுத்துக்கிட்டுத் திரும்பி வறோம். அந்தச் சத்திரத்து முனையில் நில்லுங்கோ, அப்போ ஏறிக்கொள்ளலாம்.” 

வெட்டுப்பட்ட பலிக்கடாவின் தலையைப்போல் உயி ரற்று ஒவ்வொரு பிராணியாய்ப் பஸ்ஸை விட்டு இறங்கி னார்கள்: கவியுங் கூடத்தான். 

ஒரு விநாடிக்குள் பஸ்ஸில் இருந்த கூட்டத்தைத் தெருவில் காணவில்லை. ஜலம் பட்ட சர்க்கரைப் பொம்மை போல் மனிதர்கள் கரையமுடியுமா என்று கவி வியந்தார். 

‘ஏன்? காபி சாப்பிடப் போயிருக்கலாம்.பூ வாங்கப் போயிருக்கலாம். இன்னும் ஆயிரத்தொரு சிறிய காரியங்களைக் கவனிக்கப் போயிருக்கலாம். பஸ் திரும்பும் பொழுது ஆஜரானால் போதாதா?’ என்று அறிவு சமா தானம் சொல்லிற்று. 

சொன்ன சமாதானத்தில் கொஞ்சம் நியாயம் இருந்த தால் பழைய கவிக்கிளர்ச்சி நீர் நிறைந்த ஏற்றச்சாலைப் போல் மேலே எழுந்தது. ஆனால் தேனீயின் ரீங்காரத் தைக் காணவில்லை. மலர்க்கிண்ணியில் மது அருந்தும் மோனம் நிறைந்திருந்தது. முடைப்புழு பட்டுப் பூச்சியாகி மண்கூட்டைச் சிதைத்து வெளிவரும் கோலம் தெரிந்தது. சத்திரத்து வாசலில் நின்றபடியே கவி நோட்டுப் புஸ்த கத்தைப் பிரித்துப் பென்ஸிலைக் கையில் எடுத்தார். 

காதலி! அமுதக் கடலே!
ஈருடல் உருக்கி ஒன்றாய்
சேர்த்திடும் ஊது குழலே!
உதடெனும் தோணி பற்றி
அக்கரைத் தேனார் சோலைச்
சேர்த்திடும் பரிச லோட்டி!
உன்னைநான் கைப்பி டித்து
உன்மத்த னானேன் கண்டாய்.
மாதே! நான்உன் னிடத்தில்
உருவறக் கலந்த வேளை
இரண்டுமூன் றாக மாறும்
அதிசயக் கணக்குச் செய்தாய்!
தாயே! இக்குல விளக்கு 
நோய், நொடி சோகக் காற்றில்
சாயாது சுடர்விடுத் திடவே 
தாய்மையால் அரவ ணைத்து,
உயிர்க்குலம் ஓங்க வைப்பாய்,
அன்னையே! ஆதி சக்தி! ….” 

திடீரென்று கவித்தேனீ கிளம்பிவிட்டது. தபாலுக் குப் போன பஸ்ஸைக் காணவில்லை. ஆயிரத்தொரு காரியம் செய்யப்போன பிரயாணிகளையும் காணவில் லையே; ஒருவேளை பஸ் போயிருக்குமோ என்ற நினைப் புகள் எழுந்தன. 

சத்திரத்துக்கு அடுத்தாற்போல் உள்ள முச்சந்தியில் போலீஸ்காரன் கை காட்டிக்கொண்டு நின்றான். அவன் விஷயத்தை விளக்கக்கூடும் அல்லவா? திறந்த நோட்டும் கையில் பென்ஸிலுமாகக் கவி போலீஸ்காரனை அணுகினார். “ஏன் ஸார்! தபால் எடுத்துக்கொண்டு பஸ் திரும்பிவிட்டதா?’ 

“இன்னும் இல்லை.” 

“வந்தால் எங்கே நிற்கும்?” 

 போலீஸ்காரன் தனது வலப் பக்கத்தைச் சுட்டிக் காட்டினான். 

போலீஸ்காரன் சைகை, பால் வார்த்தாற்போல் இருந்தது. சுட்டிக் காட்டிய பக்கத்துக்குப் போய்க் கவி அங்கிருந்த திண்ணையைப் பார்த்ததும் பழைய தேனீ திரும்பிவிட்டது. கவி திண்ணையில் ஏறியதும் தேனீ பாடிற்று. 

அன்னையாய் ஆன போது 
அகிலமும் வாய்பு தைத்த
நச்சுவாய் உறவி னர்கள் 
நெஞ்சத்து மெய்யன் பர்கள் 
பூச்சூட்டிப் பூஜை செய்தார், 
தாய்மையைத் தலையில் வைத்தார். 
தருணிநீ தாய தாகிப் 
பொறையெழில் ஏற்ற போது 
புகுந்ததோர் சக்திக் கதிரில் 
விளைந்தது வைய முழுதும். 
காதலும் தாயு மானாய். 
தாயுடன் தெய்வ மானாய்.
குழந்தையைத் தந்த தாயே
குவலயம் காத்து வருவாய்.
லீலையே! மூல சக்தி!” 

‘மூல சக்தி’ என்று முடிக்கும்பொழுது பஸ் வரும் ஓசை கேட்டது.பென்ஸிலும் பிரிந்த நோட்டும் கையு மாய்க் கவி தெருவில் இறங்கினார். அதே தபால் பஸ். ஆனால் அங்கு நிற்கவில்லை. 

‘நிறுத்து, நிறுத்து!’ என்று கவி கூவினார். புளி மூட்டையில் பிதுங்கியிருக்கும் ஒற்றைக்கொட்டைபோல் பஸ்ஸுக்கு உள்ளும் புறமுமாக உட்கார்ந்திருந்த ஒரு பிரயாணி கைவிரித்தானே ஒழிய வண்டி நிற்கவில்லை. 

தன்னைத் தவிர அவ்வளவு பிரயாணிகளும் வண்டி யில் ஏறிவிட்ட மாயம் கவிக்குப் புரியவில்லை. பஸ் கண் டக்டர் சொன்னபடி கவி,சத்திரத்து முனையில் நின்றது என்னவோ உண்மை. பின் பஸ் ஏமாற்றியது எப்படி? 

திரும்பவும் போலீஸ்காரனைக் கவி அணுகினார். “நீங்கள் சொன்னதுபோல, பஸ் நிற்கவில்லையே!” “பஸ்ஸுக்கென்ன கணக்கா? சத்திரத்துக்குப பின் புறம் நின்று பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு போயிருக்கும்.” 

“கண்டக்டர் சத்திரத்து முனையில் இருக்கச் சொன்னாரே?” 

“முன் பக்கமும் ஒரு முனை, பின் பக்கமும் ஒரு முனை. நீங்கள் என்ன, தூங்கிக்கொண் டிருந்தீர்களா?” 

உள்ளபடி தூக்கத்திற்குச் சமானமான ஒரு நிலை யில்தான் கவி இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆயிரத்தொரு காரியம் செய்யச் சென்ற பிரயாணிகள் ஆயிரத்தொரு தடவை திரும்பிவரும் நேரமாகியும் தான் நின்று எழுதிக்கொண்டிருந்த திண்ணையின் அருகில் கூட்டம் சேராததைக் கண்டு எச்சரிக்கை அடைந்திருக்கவேண்டாமா? போலீஸ்காரன் நின்ற முச்சந்தியைக் கண்டுவிட்டு அப்படியும் இப்படியும் ஒரு பத்தடி நடந்து பார்த்திருக்க வேண்டாமா? ஆனால் கவிதுரியம், உலகைப் பற்றியவரையில் ஒரு தூக்கமாகவே அமைந்துவிட்டதால் இந்த யோசனை தோன்றவில்லை. 

இனிச் செய்வதென்ன? கவி திரும்பவும் பிரயாணிகள் தங்கும் இடத்திற்கு வந்தார். அடுத்த பஸ் சாயங்காலம் நான்கு மணிக்குத்தான். இன்னது செய்வதென்று புரியவில்லை. 

முனிஸிபாலிடியாரின் தெருக் கடிகாரம் கண்ணில் பட்டது. கடிகார முள் எவ்வளவு மெதுவாக நகர்ந்தது! சொல்லப்போனால் முள் நகரவே காணோம். நிமிஷ வீதி யில் பெரிய முள் நின்றுகொண்டே இருக்கும். விநாடிகள் கழியும். ஆனால் விநாடிக்கு விநாடி முள் நகராது. அறுபது அல்லது எழுபது விநாடிகள் ஆகியிருக்கக்கூடும் என்று நினைக்கும்பொழுது திடீரென்று வாய்க்காலைத் தாண்டு வதுபோல் முள் தாண்டும். தூங்குமூஞ்சி வேலைக்காரன் எஜமான் கட்டளையைச் செவியுற்று நடுவில் நடுவில் எழுந்திருப்பது போல் முள் உயிர்த்துடிப்புக் கொள் ளும். செயலற்ற இந் நிலையிலே ஒரு மணி கழிந்து விட்டது. 

ஏதோ நினைப்பு வந்ததும் சட்டை, துணி மணிகளைக் கவி மாறி மாறிப் பார்த்தார். பெஞ்சிமேல் திறந்த நோட்டுடன் பென்ஸில் ஏதோ பேசிக்கொண் டிருந்தது. கவியின் மனம் பஸ்ஸுக்கும் கவிதுரியத்திற்கும் உள்ள முரணைப்பற்றிச் சிந்தித்துக்கொண் டிருந்தது. கவியையும் அறியாமலே கை பென்ஸிலை நாடிற்று. அது சமயம் அடித்த அலைகாற்றில் பென்ஸில் நோட்டைவிட்டு விலகி உருண்டது. 

“எச்சரிக்கை! ஊருக்குப் போன பிறகு கவிக் கிளர்ச்சி வரட்டும். இல்லாவிட்டால் அடுத்த பஸ்ஸும் போய்விடும்” என்று மறைமுகமாகச் சொல்வதுபோல் இருந்தது. 

கவிக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை. பென்ஸிலை எடுத்து ஓங்கிக் கூரை அப்படியே தரையில் குத்தினார். கவிக் கிளர்ச்சி சிதைந்தது போலப் பென்ஸில் நுனியும் தூள் தூளாகப் பறந்தது. 

அதற்குப் பிறகுதான் அடுத்த யோசனை தோன் றிற்று. நேரே அந்த மோட்டார்க் கம்பெனியின் ஆபீசுக் குச் சென்று, பஸ் தவறிய செய்தியைச் சொன்னார். 

“என்ன செய்ய வேண்டும்?” என்றான் ஆபீஸ் குமாஸ்தா. 

“அடுத்த பஸ் எப்பொழுது?’ 

”நான்கு மணிக்கு.’ 

“அதில் போக இந்த டிக்கெட் போதுமோ இல்லையோ?” 

“டிக்கெட் மாற்றப்பட மாட்டாது என்று அச்சடித் திருப்பது தெரியவில்லை?” 

“தெரிகிறது.” 

“ஆகையினால் வேறு டிக்கெட் வாங்கவேண்டும்.

“ஒரு பிரயாணியிடம் இரண்டு தரம் பணம் வசூல் பண்ணுவது நியாயமாக இல்லையே?” 

“நீங்கள் ஏறப்போவது இரண்டாவது பஸ். ஞாபகம் இருக்கட்டும், ஒரு பிரயாணி என்கிறீர்களே, அதை யார் கண்டார்? உமக்குப் பதிலாக வேறு ஆள் போயிருக்கலாம்.” 

“அப்பொழுது அவனிடம் டிக்கெட்டுக்குப் பணம் வாங்கிவிட மாட்டார்களா?” 

“அதைத்தான் யார் கண்டார்கள்? கண்டக்டருக்கு ஆள் கணக்கே ஒழிய ஆள் மாறாட்டக் கணக்கு அவசியமில்லை. புறப்படுகிற இடத்தில் ரசீதைப் போட்டுவிட்டு, பஸ் பிரயாணிகளை எண்ணும்பொழுது இரண்டும் சரியாக இருந்தால் சரிதான்.” 

“ரசீதுப் புஸ்தகத்துக்கும் இருந்த ஆளுக்கும் சரியாகப் போய்விட்டதென்று உமக்கு எப்படித் தெரியும்?” 

குமாஸ்தாவுக்குக் கோபம் வந்துவிட்டது. 

“ஓய், நான் கோர்ட்டில் கிளிக்கூட்டில் நிற்கவும் இல்லை. நீர் வக்கீலும் அல்ல. பஸ்ஸில் மறுபடி ஏற வேண்டுமென்றால் டிக்கெட் வாங்கும். நீங்கள் சொல்கிற கதை நிஜம் என்று எப்படி ஐயா நம்புகிறது?’ 

இப்பொழுது கவிக்கு ஒரு புறம் கோபமும், மற்றொரு புறம் கதைக் கிளர்ச்சியும் எழுந்தன. குமாஸ்தா கவி சொல்வதைக் கதை என்றார் அல்லவா? கவி மறுபேச் சின்றி ஒரு கிளப்புக்குச் சென்று சாப்பாட்டை முடித்துக் கொண்டார். பென்ஸிலைக் கூர்சீவி நோட்டுப் புஸ்தகத் தில், தலை எடுக்காமல், மூச்சு விடாமல், ஒட்டினார். எழுதி முடிந்ததும் திருப்பிப் படித்துவிட்டுத் 

தாள்களைக் கிழித்து மடித்துச் சட்டைப்பையில் திணித்துக்கொண்டு தம் நண்பனின் வீடு நோக்கிப் புறப்பட்டார். 

நண்பர் ஒரு சிறந்த இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியர். கவி வந்தபொழுது திண்ணையில் யாரோ ஒரு கனவானுடன் பேசிக்கொண் டிருந்தார். துள்ளி எழுந்தார். 

 •ஆமாம், பஸ்ஸுக்குப் போய் ஊருக்குப் போகிறேன் என்று காலையில் சென்றாயே?” 

“ஆமாம். சென்றேன். பஸ் கிடைக்கவில்லை. ஒரு கதை கிடைத்தது; கொண்டு வந்தேன்.’ 

“காலையில் வற்புறுத்திக் கேட்டபோது நீ சொன்ன பதில் ஞாபகம் இருக்கிறதா? எல்லாப் பத்திரிகாசிரியர் களும் இப்பொழுது கதையே கேட்கிறார்கள். எழுத வரவில்லை.வரவும் வராது. சித்தக் குருவி, கவி வெளியில் பாடிக்கொண் டிருக்கிறது என்றாய்.” 

”ஆமாம், சொன்னேன்.” 

“கவிதையாவது எழுதி அனுப்பு என்றேன்; நான் யந்திரம் அல்ல என்றாய்.” 

“ஆமாம். சொன்னேன்.” 

“இப்பொழுது?’ 

“கதையுடன் கவிதையும் கொண்டுவந்திருந்த போதி லும் அதையேதான் சொல்கிறேன். கவி பெண்ணைப் போல்; சொன்னபடி நடக்கவேண்டுமென்ற கட்டுப்பாடு இருவர்களுக்கும் இல்லை.” 

“ஆகையால் கவிகள் பொய் சொல்லலாம்?” 

“இல்லை: கவிகள் என்றும் பொய் சொல்ல மாட் டார்கள். அவர்கள் சொல்லும் உண்மை, உலகத்தாருக் குப் புரிவதில்லை. பொய் என்கிறார்கள். கவி என்பது தெரியாமல், காலையில் பஸ் கம்பெனி குமாஸ்தா நான் பொய் சொல்வதாகச் சொன்னான். கவி என்று தெரிந்த நீயும் அப்படியே சொல்கிறாய். நான் என்ன சொல்வது?”

“ஒன்றும் சொல்லவேண்டாம். முதலில் கதையையும் கவிதையையும் கொடு.” 

கவி, தன் சட்டைப்பையில் இருந்த தாள்களை எடுத்து நண்பன் கையில் கொடுத்தான். 

“பஸ் கம்பெனி என்கிறீர்களே எது?” என்றார் எதிரிலிருந்த கனவான். 

“பஸ் நிற்கும் இடத்திற்குப் பின்னால் இருப்பது தான்?” 

“என்ன நடந்தது அங்கே?” 

கவி பஸ் தவறிய கதையைச் சொல்லி முடித்தார். “இவர் யார் தெரியுமா?” என்று பத்திரிகாசிரியர் கனவானைச் சுட்டிக் காட்டினார். 

“தெரியாது” என்றார் கவி. 

“பஸ் கம்பெனிக் கூட்டாளிகளில், ஒருவர்?” 

“இவர் யார் தெரியுமா?” என்று கவியைச் சுட்டிக் காட்டினார். 

“தெரியாது” என்றார் கனவான். 

“இவரே ‘மண்ணும் விண்ணும்’ எழுதிய ஆசிரியர்; ஒரு கவி” 

கனவான் ஒரு நிமிஷம் வியப்பினால் சும்மா இருந்தார். 

“பின் இவரைப் பொய்யர் என்ற முறையிலே பேசினீரே?’ 

“தமாஷாக, உலகரீதியில் பேசினேன். காலையில் கதை கேட்டேன். கவிதை கேட்டேன். மூச்சு விடக் கூடாது என்றான் நண்பன். ஆனால் இப்பொழுதோ ரண்டும் வந்துவிட்டன.கவிகளிடம எல்லாம் தலைகீழ்!” 

“உண்மை அது அல்ல. நீங்கள் யாரைக் கதையோ கவிதையோ வேண்டுமென்று கேட்கிறீர்களோ, அவருக் குப் பதில் சொல்லும் அதிகாரம் இல்லை. ஏனென்றால் எழுதுகிற ஆள் வேறு. மலைக்காற்று எப்பொழுது அடிக்கும் என்று பள்ளத்தாக்கைக் கேட்பதில் என்ன பொருள்?” 

“கவியும் எழுத்தும் எப்பொழுது வரும் என்று கவிக்கே தெரியாது என்கிறாய்; அவ்வளவுதானே?” 

“அதுமட்டும் அல்ல. தெரிந்ததுபோலக் கவிக்குள் இருக்கும் நடைமுறை ஆள் பேசிவிடுகிறானே, அதுதான் ஆபத்து.” 

“ஆபத்து ஒன்றும் இல்லை. கவி முரண் இப்பொழுது விளங்கிவிட்டது. நான்கு மணிப் பஸ் தவறும் ஆபத்துத் தான் இப்பொழுது எதிர்ப்படுகிறது!” 

“நாழிகை யாகிவிட்டதா?” 

‘பரவாயில்லை.நான் தவறாமல் ஏற்றிவிடுகிறேன்” என்று கனவான் எழுந்தார். 

“பிரயாணிகள் பொய் சொல்லப் பிறந்தவர்கள் என்று குமாஸ்தா நினைத்திருக்கிறாரே, அதையும் திருத்தி விடுங்கள்” என்று கவி எழுந்திருந்தார். 

பத்திரிகாசிரியர் கதையைப் படிக்கத் தொடங்கினார்.

– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.

ந.பிச்சமூர்த்தி வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *