கழுதையின் பாட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 14, 2025
பார்வையிட்டோர்: 119 
 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

I

ஒரு வண்ணானிடம் கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிவிட்டதால் வேலை செய்ய முடிய வில்லை. வண்ணான் அதை எப்படியாவது தொலைத்து விடவேண்டும் என்று எண்ணினான். இதைத் தெரிந்துகொண்ட கழுதை அவனிடமிருந்து தப்பி ஓடிவிட்டது. 

அந்தக் கழுதைக்கு இசைபாடுவதில் மிகுந்த விருப்பம். அது போகும் வழியில் ஒரு கிழ நாயைச் சந்தித்தது. நாய் பெருமூச்சு விட்டுக்கொண்டு நின்றது, “ஏன் ஐயா இப்படி இளைத்துப்போய் இருக்கிறீர்?” என்று கழுதை கேட்டது. “எனக்கு வயதாகி விட்டது. என்னால் வேட்டைக்குப் போக முடிய வில்லை. அதனால் வேடன் என்னை அடித்துத் துரத்தி விட்டான். நான் என்ன செய்வேன்?” என்று நாய் சொல்லிற்று. 

“நல்லது; நீ என்னோடுவா. நாம் எங்கேயாவது போய்ப்பாட்டுப் பாடிப் பிழைத்துக் கொள்ளலாம்,’ என்று கழுதை சொல்லிற்று. நாயும் கழுதையுடன் சேர்ந்து அலைந்து திரிந்தது. எதிரில் ஒரு பூனை வந்தது. அது மிகவும் மெலிந்திருந்தது. “உமது முகம் ஏன் இப்படி வாடி இருக்கிறது?” என்று கழுதை கேட்டது. “நான் சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆயின. என்னால் நடக்கவும் முடியவில்லை,’ என்று பூனை சொல்லிற்று. “நீயும் எங்களோடு வரலாம். நாம் பாட்டுக் கச்சேரி வைக்கலாம். உன் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது,” என்று கழுதை சொல்லிற்று. 

பூனையும் அவர்களுடன் புறப்பட்டது. தோழர் கள் மூவரும் ஒரு தோட்டத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கே ஒருசேவல்,”கொக்கரக்கோ, கொக்கரக்கோ,’ என்று ஓயாமல் கூவிக்கொண்டே இருந்தது. “ஏன் இப்படிக் கூவுகிறீர்?” என்று கழுதை கேட்டது. “நாளைக்கு என்னைப் பலியிட்டுப் பொங்கல் வைக்கப் போகிறார்கள். என் தலையே போய்விடும்போல் இருக்கிறது. நான் என்ன செய்வேன்!” என்று சொல்லி அது அழுதது. 

அப்படியானால் நீரும் எங்களுடன் வாரும். உம்முடைய பாட்டும் நன்றாய் இருக்கிறது. எல்லோ ரும் விருப்பமுடன் கேட்பார்கள்,” என்று கழுதை சொல்லிற்று. சேவலும் அவர்களுடன் சேர்ந்து கொண்டது. 

II 

நான்கு தோழர்களும் ஒரு காட்டின் வழியே போய்க்கொண்டிருந்தார்கள். இரவு வந்ததும் தங்கு வதற்கு இடம் தேடினார்கள். சேவல் மரத்தின்மேல் ஏறிப் பார்த்தது. சற்றுத் தொலைவில் வெளிச்சம் தெரிந்தது. “விளக்கு வெளிச்சம் தெரிகிறது. அங்கே ஏதாவது வீடு இருக்கவேண்டும்,” என்று சேவல் சொல்லிற்று. “நாம் அங்கே போய்க் கொஞ்சம் இளைப்பாறலாம், என்று கழுதை சொல்லிற்று. 

நால்வரும் வீட்டை நோக்கிப் புறப்பட்டனர். அந்த இடத்தை அடைந்ததும் கழுதை வீட்டிற்குள் எட்டிப் பார்த்தது. “உள்ளே யாராவது இருக்கிறார்களா?” என்று சேவல் கேட்டது. 

உள்ளே கொள்ளைக் கூட்டத்தினர் இருந்தனர். அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டுவந்த பணத் தையும் நகைகளையும் பங்கிட்டுக்கொண்டு இருந்தனர். சாப்பாடும் தின்பண்டங்களும் நிறைய வைக்கப்பட்டிருந்தன. நான்கு தோழர்களும் சேர்ந்து ஒரு சூழ்ச்சி செய்தனர். கொள்ளைக்காரர்களை வெளியில் துரத் துவதற்கு வழிதேடினர். 

கழுதை தன் முன்னங் கால்களைத் தூக்கி வாசற் படியின்மேல் வைத்துக்கொண்டது. நாய் அதன் முதுகின்மேல் ஏறிக்கொண்டது. பூனை நாயின் முதுகின் மேல் நின்றுகொண்டது. சேவல் பூனையின் தலைமேல் உட்கார்ந்துகொண்டது. கழுதை தலையை அசைத்தவுடன் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து பாடத் தொடங்கின. அதுபோன்ற பாட்டுக் கச்சேரி எங்கும் கேட்டிருக்க முடியாது! கழுதை கத்திற்று. நாய் குரைத்தது. பூனை ‘மியா மியா’ என்று கத்திற்று. கோழி கொக்கரித்தது. வீடெல்லாம் அதிரும்படி கச்சேரி நடந்தது. 

கொள்ளைக்காரர்கள் திடுக்கிட்டு, “ஓ,பேய்களும் பிசாசுகளும் வந்து கத்துகின்றன; ஐயோ ! இனி என்ன செய்யலாம்!” என்று சொல்லிக்கொண்டு நடு நடுங்கினர், பின்பு அவர்கள் ஒன்றும் தோன்றாமல் வீட்டின் பின்வாசல் வழியாகவே ஒரே ஓட்டம் பிடித்தனர். தோழர்கள் நால்வரும் குதித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்து, அங்கே வைத்திருந்த தின்பண்டங்களை யெல்லாம் வயிறு புடைக்கத் தின்றார்கள். பசியாறியபின், விளக்கை அணைத்துவிட்டுப் படுத்து உறங்கினர். கழுதை வாசலில் படுத்துக்கொண்டது. நாய் வாசற்படியில் படுத்துக்கொண்டது. பூனை சமையல் அறையில் படுத்து உறங்கிற்று. சேவல் மேடைமேல் ஏறிப் படுத்துக்கொண்டது. 

III 

சிறிதுநேரம் கழித்துக் கள்வர் தலைவன், ஒரு முரடனை வீட்டினுள் போய்ப் பார்த்து வரும்படி அனுப்பினான். முரடன் மெள்ள வீட்டிற்குள் நுழைந்தான். ஒரே இருட்டாய் இருந்தது. விளக்கை ஏற்றலாம் என்று சமையல் அறைக்குச் சென்றான். பூனையின் கண்கள் விளக்கைப்போல் எரிந்தன. தீக் குச்சியைக் கொளுத்திப் பூனையின் கண்களுக்கு அருகில் கொண்டுபோனான். 

பூனை சட்டென்று அவன்மேல் பாய்ந்து, அவன் முகத்தைத் தன் நகங்களால் நன்றாய்க் கீறிவிட்டது. கள்ளன் அலறிக்கொண்டு வாசல் பக்கம் ஓடினான். வாசற்படியிலிருந்த நாய் அவன் காலை அப்படியே கடித்தது. அவன் அங்கிருந்து கதறிக்கொண்டு ஓடிப்போய் வாசலில் படுத்திருந்த கழுதையின்மேல் விழுந்தான். கழுதை அவனுக்கு நல்ல உதை கொடுத்தது. கோழியும் விழித்துக்கொண்டு ”கொக்கரக்கோ,” என்று கூவிற்று. 

கள்ளன் திரும்பிப்பாராமல் ஓட்டம்பிடித்தான். அவன், தன் தலைவனிடம் போய், “வீட்டிற்குள் பேய்களும் பிசாசுகளும் இருக்கின்றன. ஒரு பிசாசு என் முகத்தை எல்லாம் கீறிவிட்டது. ஒரு பூதம் என் காலைக் கடித்துவிட்டது. மற்றொரு பெரிய கரும்பூதம் என்னை உலக்கையினால் அடித்தது. ஒரு பேய் கூரையின்மேல் உட்கார்ந்துகொண்டு, ‘யார் அவன்? என்ன செய்தான்?’ என்று கேட்டது. நான் ஒரே ஓட்டமாய் ஓடிவந்துவிட்டேன். நாம் இனி மேல் அங்கே போகவே முடியாது,” என்று சொன்னான். 

கொள்ளைக்காரர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். அவர்கள் மறுபடியும் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்க வில்லை. எல்லோரும் வேறு இடத்திற்குக் குடி போய்விட்டனர். கழுதைக்கு அந்த இடத்தை விட்டுப்போக மனம் வரவில்லை. கழுதையும் அதன் நண்பர்களும் அங்கேயே பாட்டுப் பாடிக்கொண்டு தங்கள் காலத்தைக் கழித்துவந்தன. 

“கழுதையின் பாட்டால் திருடரெலாம் 
கதறியோ டியதோர் கதைகற் றோம்.” 

அருஞ் சொற்கள் 
இளைப்பாறல்
உலக்கை 
கச்சேரி
கரும்பூதம் கூரை 
கொளுத்தி 
தொலைவு 
கொள்ளையடி 
தோழர் 
திடுக்கிட்டு 
முரடன் 
தின்பண்டம் 
துரத்து 
வண்ணான்
வாசற்படி 

– கழகக் கதைச் செல்வம், முதற் பதிப்பு: டிசம்பர் 1941, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *