கள்ளனோ குள்ளனோ?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 11, 2025
பார்வையிட்டோர்: 90 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்குணவாயிற் கோயிலில் ஒரு பெருந் திருட்டுப் போயிற்று. கோயில் அதிகாரிகள் பெருந் திருவிழாவிற்காக நகைகளை எடுக்க ஸ்ரீ பண்டாரத்தைத் திறந்தார்கள். விலையுயர்ந்த நகைகளைக் காணவில்லை; வைரமுடி, தங்கக் கவசம் இவைகளைக் காணவில்லை. இவைகள் பத்து ஆண்டுகளுக்கு முந்தித்தான் பூண்டிச் சமீந்தாராலும், ப.ழ.பெ.ந. இராமன் செட்டியாராலும் செய்துத் தரப்பட்டன. இக்களவு உடனே போலீசுக்குத் தெரியப்படுத்தப் பட்டது. போலீசார் இரண்டு மாதம் வரை துப்பு ஆராய்ந்தார்கள். இறுதியில் ஒரு பழைய திருடன் வீட்டைச் சோதனை போட்டதில் ஒரு சில கோயில் நகைகள் கிடைத்தன. அவனை அடித்து நொறுக்கியதில் அவை பொன்னப்பா பத்தர் மூலமாகத் தனக்குக் கிடைத்தன என்று சொல்லிவிட்டான். பொன்னப்பா பத்தரைச் சிறைசெய்து விசாரித்ததில் வைத்தியநாத கனபாடிகள் சில தங்க நகைகளைத் தந்து உருக்கச் சொல்லிக் கைவளையல்களாக்கிக் கொண்டு போனார் என்று சொன்னார். மறுபடி இதே துறையில் போலீசார் துப்பு விசாரிக்கையில் திருப்பனைத்துறை மடத்தார் வைத்து நடத்தும் அன்னதானக் கட்டளைக் கணக்குப் பிள்ளை சொக்கப்பா பிள்ளையும், வைத்திய நாத கனபாடிகளும். பொன்னப்பா பத்தரும் சேர்ந்து இக்களவைச் செய்திருக்க வேண்டும் என்று போலீசார் முடிவுக்கு வந்தார்கள். போதுமான சான்றுகள் கிடைக்காததனால், பொன்னப்பா பத்தரை விட்டு விடுவதாக ஆசை காட்டினதில் அவன் சர்க்கார்ச் சாட்சியாக வருவதற்கு இசைந்தான். ஆகவே, சொக்கப்பா பிள்ளையையும் வைத்தியநாத. கனபாடிகளையும் குற்றவாளிகளாகச் சேர்த்து குற்றவழக்குத் தொடங்கினார்கள். 

முதல் வகுப்புக் குற்றவிசாரணை நீதிபதி கச்சேரியில் விசாரணை நடந்தது. பெரிய வழக்கறிஞர்களை எதிர்க் கட்சிக்கு வைத்திருந் தார்கள். மடத்தார் தம் ஆளுக்குத் தண்டனையானால் தம் மடத்திற்குக் கேவலம் என்று எண்ணி அவர்களும் பொருளுதவி முதலியவைகளைச் செய்தார்கள். ஆகவே கனபாடிகளுக்கும் ஒரு வழக்கறிஞர் இலவசமாகக் கிடைத்தார். சர்க்கார் தரப்புச் சாட்சிகள் முதலில் விசாரிக்கப்பட்டார்கள். 

கனபாடிகளுடைய கட்சி என்னவெனில், திருட்டுப் போன நாளில் தாம் சென்னையில் இருந்ததால் தமக்குத் திருட்டுச் செய்தியே தெரியாது என்பதாம். அதற்காகச் சாட்சிகளை விசாரித்தார். முதற் சாட்சி-பாலு நாயுடுக் 

வழக்கறிஞர்: உமக்கு என்ன வேலை? 

சாட்சி: நான் சென்னையில் ஒரு மிரசுதார், வர்த்தகமும் செய்து வருகிறேன். 

வ: எத்தனை வரி கொடுக்கிறீர்?

சா: ரூ.500 முனிசிபல் வரி, ரூ. 1,000 தீர்வை ரூ.1,000 வருமான வரி. 

வ: சென்ற ஜனவரி மாதம் 25ந் தேதி எங்கிருந்தீர்? 

சா: சென்னையில் இருந்தேன். 

வ: என்ன செய்தீர்? 

சா : எங்கள் வீட்டு மேல்மாடியில் நானும், சோமுபிள்ளையும், கோதண்டராம முதலியாரும், வைத்தியநாத கனபாடிகளும் சீட்டு ஆடிக்கொண்டு இருந்தோம். பிறகு முதலியாருடன் ஒளிப்படம் (சினிமா) பர்க்கச் சென்றோம். அன்றிரவு முதலியாரின் விருந்தினராக இருந்தோம். 

வ: அன்றாவது, அதற்கு முந்திய நாள் பிந்திய நாட்களிலாவது கனபாடிகள் திருக்குணவாயிலில் இருந்தாரா? 

சா: இல்லவே இல்லை. 

குறுக்கு விசாரணை : 

சர்க்கார் வழக்கறிஞர் : 

கனபாடிகள் ஜனவரி 25ந் தேதி உங்களுடன் சீட்டு ஆடினார் என்று எப்படி நினைவு இருக்கிறது? 

சா: எனக்கு மிக நான்றாக நினைவு இருக்கிறது. 

ச.வ: ஏதாவது தினசரிக் குறிப்பு எழுதி வைத்திருக்கிறீரா? 

சா: இல்லை. 

ச.வ: ஏதாவது வரவு செலவுக் கணக்கில் எழுதி வைத்திருக்கிறீரா? 

சா: இல்லை. 

ச.வ: அதனைப்பற்றி யாருக்காவது கடிதம் எழுதி இருக்கிறீரா? 

சா: இல்லை. அன்று சினிமாவில் ‘நவயுகம்’ நடந்தது. 

ச.வ: அது எத்தனை நாள் நடந்தது? 

சா: இரண்டுமாதம், 

ச.வ: எத்தனையாவது நாள் அதைப் பார்த்தீர்? 

சா: ஞாபகம் இல்லை. பலதடவை அதனையே பார்த்திருக்கிறேன். 

இரண்டாம் சாட்சி-சோமு முதலியார் 

பாலு நாயுடுவைப்போலவே சொன்னார். 

மூன்றாம் சாட்சி-கோதண்டராம முதலியார் 

வழக்கறிஞர்: உங்களுக்கு என்ன தொழில்? 

சா: சினிமா நடத்துகிறேன். 

வ: வருமானம் என்ன? 

சா: 1,500 ரூபாய். 

வ: கனபாடிகளைத் தெரியுமா? 

சா: நன்றாகத் தெரியும். 

ப: எப்படித் தெரியும்.

சா: பல ஆண்டுகளாகத் தெரியும். அவர் எங்கள் சினிமாவிற்கு நாடக பாத்திரங்களைச் சேர்த்து உதவி புரிந்து வருகிறார். 

வ: கடைசியாக அவரைச் சந்தித்த தெப்போது? 

சா: ஜனவரி மாதம் 27,28,29-ந் தேதிகளில். 

வ: அப்போது என்ன செய்தீர்கள்? 

சா: மூன்று நாளும் எங்கள் கொட்டகைக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். 29ந் தேதி பாலுநாயுடு மாடியில் சீட்டு ஆடினோம். பிறகு இரவில் ‘நவயுகம்’ என்ற படம் பார்த்தோம். 

குறுக்கு விசாரணை : 

ச.வ: அவர் உம்மோடு இருந்ததற்கு யாதாவது எழுத்து மூலமான 

சாட்சியம் உண்டா? 

சா: இல்லை. 

ச.வ: தினசரியிலாவது எழுதி வைத்திருக்கிறீரா? 

சா: இல்லை. 

ச.வ: பிறகு எப்படி நினைவு இருக்கிறது? 

சா: சீட்டு ஆடிவிட்டுப் படம் பார்க்கச் சென்றது அந்த ஒருநாள்தான். 

ச.வ: எந்த எந்த நாளில் யார் யாரைக் கூட்டிக் கொண்டு போனீர் என்று வரிசையாகச் சொல்லுவீரா? 

சா: முடியாது. 

ச.வ: பின்னே இந்தத் தேதி மாத்திரம் எவ்வாறு நினைவு இருக்கிறது. 

சா: (மௌனம்). 

ச.வ: என்ன பதில் 

சா: நினைவுதான். 

ச.வ: சரி, கனபாடிகளின் கையெழுத்துத் தெரியுமா? 

சா: தெரியும்.. 

ச.வ: (ஒரு கையெழுத்திட்ட புத்தகத்தை எடுத்து ஒரு பக்கத்தில் மற்றவற்றை மறைத்துக்கொண்டு ஒரு கையெழுத்து மாத்திரம் காட்டி) இது யாருடைய கையெழுத்து? 

சா: கனபாடிகள் கையெழுத்துபோல் இருக்கிறது. 

ச.வ: உண்மையாகச் சொல்லும், அவருடைய கையெழுத்தா, அல்லவா? 

சா: ஆமாம், அவருடைய கையெழுத்து. 

ச.வ: அந்த வரி முழுதும் வாசியும். 

சா: பெயர் வைத்தியநாத கனபாடிகள் : தகப்பன் பெயர் – சாமிநாத கனபாடிகள்; தொழில் வைதீகம் ; ஊர் திருக்குணவாயில், கையெழுத்து – வைத்தியநாத கனபாடிகள். 

ச.வ: இந்த விவரங்கள் எல்லாம் சரிதானே? இரண்டாம் குற்றவாளியினதா? 

சா: சரிதான். ஆமாம். 

ச.வ: இந்தப் பக்கத்தில் மேல் பாகத்தை வாசியும். 

சா: திருக்குணவாயில் கோயிலில் திருப்பனைத்துறை மடாலயத்தார் செய்துவரும் அன்னதானக் கட்டளையின் சார்பில் நடந்துவரும் அன்னதானம் பெற்று வரும் யாத்திரிகர்களின் தினசரிக் குறிப்பு. 

ச.வ: தேதி பாரும். 

சா: ஜனவரி மாதம் 27-ந் தேதி. 

ச.வ: முந்திய பிந்திய தேதிகளைப் பாரும். 

சா: இவ்விரண்டு நாட்களிலும் அவருடைய கையெழுத்து இருக்கின்றது. 

ச.வ:சரி, போகலாம். 

திருப்பனைத்துறை மடத்தார் திருக்குணவாயில் கோயிலில் அன்னதானக் கட்டளையை நடத்த வந்தார்கள் அங்கே கட்டளைக் கணக்குப்பிள்ளையாக இருந்தவர் சொக்கப்பா பிள்ளை. அவர் சரியாக அன்னதானம் செய்வதில்லை என்ற புகார் இருந்தது. அதற்காக மடத்தார் சாப்பிட வருபவரின் குறிப்பு ஒன்று வைக்கச் சொல்லித் தினந்தோறும் சாப்பிடுபவர்களின் கையெழுத்தை வாங்கும்படி கட்டளை இட்டனர். அவ்வாறு வைக்கப்பட்ட தினசரிக்குறிப்புதான் துப்பறியும் அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்டு நீதி மன்றத்தில் சாட்சிக்குக் காண்பிக்கப்பட்டது. அதில் அந்தத் தேதிகளில் கனபாடிகள் தூப்பிட்டதாகக் கையெழுத்து இருந்தபடியால் கனபாடிகள் ஏமாந்து போனார். 

நீதிபதி, சொக்கப்பாவுக்கு ஓர் ஆண்டும், கனபாடிகளுக்கு ஒன்பது மாதமும் தண்டணை இட்டார். 

ஆனால், கனபாடிகள் கையெழுத்து இருப்பதைப் பார்த்து ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அடைந்தார். தாம் திருட்டுக்கு உடந்தையாக இருந்தபோதிலும் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகச் சென்னைக்குச் சென்று மூன்று நாள் சினிமாக் கம்பெனி முதலியாரிடம் இருந்துவந்தார். அப்படியிருக்கையில் குறிப்பில் கையெழுத்து எப்படி ஏற்பட்டது? சிறையில் இருந்தபோது வெகுநாள் இதைப்பற்றியே ஆராய்ச்சி செய்தார். சாப்பாட்டுக் குறிப்பில் ஒன்று சேர மூன்று நான்கு நாட்கள் கையெழுத்து வாங்கி விடுவது சொக்கப்பாவின் செயல் என்று நினைவுக்கு வந்தது. “திருட்டில் தான் சிக்கிக்கொண்டால் தன் சகா ஏன் தப்பிக்கொள்ள வேண்டும்? அவனும் தண்டனை அனுபவிக்கட்டும்” என்ற கொடிய எண்ணம் வைத்துக்கொண்டு, சொக்கப்பா இவ்விதம் பித்தலாட்டம் செய்திருக்கவேண்டும் என்று கனபாடிகள் தீர்மானித்துக் கொண்டு சிறைவாசத்தை அனுபவித்து வந்தார். 

– கோயிற் பூனைகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு; 1945, திராவிடர் கழக வெளியீடு, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *