கலைமானின் கொம்பு!
ஒரு கலைமான் மிகுந்த தாகத்துடன் தண்ணீர் குடிக்க ஓர் ஓடைக்குச் சென்றது. தண்ணீரில் தெரியும் தனது நிழலைப் பார்த்தது. தனது உருவத்தையும் வித்தியாசமான கொம்பையும் பார்த்துப் பெருமிதம் கொண்டது. தனது பலவீனமான மெல்லிய கால்களைக் கண்டு மனம் வருந்தியது.
இவ்வாறாக, தனது கால்களைப் பார்த்துக் கலைமான் அவமானப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அந்த ஓடைக்கு நீர் அருந்த வந்த சிங்கம், கலைமானைக் கண்டு, அதன் மேல் பாய்ந்தது.
சிங்கம் தன்மேல் பாய்வதை அறிந்த கலைமான் உடனே ஓட்டம் எடுத்தது. எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடிச் சிங்கத்திடம் இருந்து தப்பிப் பாதுகாப்பான இடத்துக்குச் சென்றது.
சிங்கத்திடமிருந்து தப்பிவிட்டோம் என்று எண்ணிய கலைமான் மீண்டும் காட்டுக்குள் புகுந்தபோது, அதன் கொம்பு ஒரு செடியில் சிக்கி மாட்டிக்கொண்டது. அதை எடுக்க முடியாமல் கலைமான் திணறிக் கொண்டிருந்தபோது, அந்த வழியே வந்த சிங்கம் வேகமாக அருகே வந்து கலைமானைப் பிடித்துக் கொண்டது.
சிங்கத்திற்கு இரையாகிக் கொண்டிருந்த கலைமான், “எனது புத்தி போன போக்குக்கு நல்ல பரிசு கிடைத்தது. எந்தக் கால்கள் என்னைப் பாதுகாத்தனவோ, அவற்றை நான் இழிவாக எண்ணினேன். எந்தக் கொம்பு எனக்கு மிகவும் அழகு என்று பெருமைப்பட்டேனோ, அதனாலயே எனக்கு அழிவு வந்தது…’ என்று தனக்குள்ளே புலம்பியது
– எம்.ஜி.விஜயலக்ஷ்மி கங்காதரன், மதுரை. (பெப்ரவரி 2013)
தின/வார இதழ்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 19,399
very beautyful story