கற்றறி மூடர்களைக் காட்டியது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 19, 2025
பார்வையிட்டோர்: 190 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வடதேசத்திலே பத்து வயது முதலாக முப்பது வரைக்கும் தர்க்கசாஸ்த்திரம் ஒன்றே படித்த ஒரு தார்க்கிகனும் வியாகர்ண சாஸ்த்திரம் ஒன்றையே கற்றவொரு வையாகரணியும், பரதசாஸ்த்திரம் ஒன்றையே அப்பியாசித்த ஒரு பாடகனும், சோதிட சாஸ்த்திரம் ஒன்றையே வாசித்த ஒரு ஒள்ளியனும், வைத்திய சாஸ்த்திரம் ஒன்றையே ஆராய்ந்த ஒரு வைத்தியனும் ஆகிய இவ்வைந்து பேரும் கூடிக்கொண்டு தேசாந்திரம் போய் பணம் சம்பாதித்துக் கலியாணம் பண்ணிக்கொள்ள ஆலோசிக்கும்போது வேலூரில் இராயர் வித்வான்களுக்கு வேண்டியபடி கொடுக்கிறாரென்று, அவரைக் காணும்படியாக அதுவரைக்கும் துணைகூட்டிக் கொண்டுவந்து, துணையாக வந்தவர்களைஅனுப்பிவிட்டு இராயருடைய சபைக்குப் போய் அவனவன் தன் தன் வித்தையின் வல்லபத்தைக் காண்பித்தார்கள். 

இராயர், அப்பாச்சியைப் பார்த்து, “இவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள்” என்று புகழ்ந்தார். அதற்கு அப்பாச்சி, இவர்கள் வித்தையிலே எவ்வளவு கெட்டிக்காரர்களோ அவ்வளவு லௌகிகக் காரியங்களிலே மூடர்களாயிருக்கலாமென்று நினைக்கிறேன்” என்றான். 

இராயர், “அந்த மூடத்தனத்தை எனக்குக் காட்டவேணும்” என்று கேட்க, அதற்கு அப்பாச்சி, “அப்படியே காண்பிக்கிறேன். இன்றைக்கு இவர்களைச்சாப்பிட்டுவரும்படி அனுப்பிவையுங்கள்” என்றான். 

அப்படியே இராயர்அனுப்பிவிட்டார். பின்பு அப்பாச்சி, அவர்களை அறியாமல் நடக்கிற காரியத்தைப் பார்த்துவரக் சொல்லிச் சில சேவுகரை அனுப்பினான். 

அவ்வைந்து பேர்களுக்குள்ளே தார்க்கீகன் நெய்க்குபோய் ஒரு தொன்னையிலே வாங்கிக்கொண்டு வரும்கையிலே இருக்கிற நெய் தொன்னையைப்பார்த்து, நெய்க்குத் தொன்னை ஆதாரமோ தொன்னைக்கு நெய் ஆதாராமோ என்று தர்க்கபுத்திகளைக் கொண்டு நெடுநேரம் யோசித்துப் பார்த்துச் சந்தேகம் தீராமையால் தொன்னையைக் கவிழ்க்க நெய் முழுவதும் ஒழுகிப்போனதைக் கண்டு நெய்க்குத் தொன்னையே ஆதாரமென்று நிச்சயித்துக் கொண்டுவந்து சேர்ந்தான். 

வியாகர்ண வித்துவான் தயிர் வாங்கப் போய் ஒரு இடைச்சி தயிரோ என்ற கடைசி ஓகாரத்தைப் பார்த்து மாத்திரை அளவாக நீட்டிக் கூவுகிறதைக் கேட்டு, “இந்த இரண்டு மாத்திரையுள்ள ஒகாரத்துக்கு அதிக மாத்திரை வியாகரணிக்கு விரோதமாக உச்சரிக்கிறாயே?” என்றும், “பயித்தியக்காரி” யென்றும் அவளுடன் நெடுநேரம் சண்டையிட்டுக் கோபித்துக் கொண்டு தயிர் வாங்காமல் வந்தான். 

பாடகன் உலையில் அரிசியைக் கழுவிப் போட்டு, தளதள வென்று கொதிக்கிற ஓசையைக் கேட்டு, அதற்குச் சரியாகத் தாளம் போட்டு, அத்தாளத்திற்கு ஒத்துவராமையினாலே கோபங்கொண்டு சோற்றுப்பானையை உடைத்துவிட்டான். 

சோதிட சாஸ்த்திரி இலை பறிக்கப்போய்ப் பாதி மரத்திலே ஏறும்போது கவுளி சொன்னதைக்கேட்டு ஏறுதற்கும் இறங்குதற்கும் தடையாய் இருக்கிறதை அறிந்து வெகுதூரம் அங்கேதானே இருந்து பின்பு சும்மாவந்துவிட்டான். 

வைத்தியன் கறிகாய் வாங்கிக்கொண்டுவரப் போய்த் தன்னுடைய வைத்திய நூற்பட்ட அந்தந்தக் கறிகாய்களிலிருக்கிற தோஷத்தை அறிந்து அதுகளையெல்லாம் தள்ளிவிட்டு வெறுங்கையனாய் வந்துவிட்டான். 

இந்தச் சமாசாரமெல்லாம் தான் அனுப்பிய மனுசனால் அறிந்து அப்பாச்சி இராயரைக் கொண்டு சேவுகரைவிட்டு அவ்வைந்து பேரையும் அழைப்பித்து விசாரிக்கும் அளவில் நடந்த சங்கதிகளையெல்லாம் அவர்கள் சொல்லக்கேட்டு இராயர் ஆச்சரியப்பட்டு அப்பாச்சியைப் புகழ்ந்து கொண்டாடினார். 

– இராயர் அப்பாஜி கதைகள், இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2006, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

இராயர் அப்பாஜி கதைகள் பதிப்பாசிரியரின் முகவுரை - செப்டம்பர் 2006 முன்னுரை :  மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர்-அப்பாஜி கதைகள் முதலியன வாய்மொழி இலக்கிய இயல்புகள் நிரம்பப் பெற்றவை. இலக்கிய அழகு மிகுந்த இவை மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்பவையாகும். குறிப்பாகச் சிறுவர்களை ஈர்க்கும் திறம்படைத்தவை இவை.  இவற்றில் மரியாதைராமன் கதைகள் ஏற்கனவே என்னால் பதிப்பிக்கப் பெற்றுச் சரசுவதி மகால் நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது. மரியாதைராமன் கதைகள் குறித்த நெடிய ஆய்வுக் கட்டுரையொன்று மகால்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *