கதை இல்லாத நாயகி




(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திரைப்படப் பெரும்புள்ளிகளுக்கு மத்தியில், அவள் செல்லப்புள்ளியாய் நின்றாள். காதோரம் கறுப்பு டோலாக் காய் படர்ந்த முடிக்கற்றையை மேல் நோக்கி திருப்பிவிட்ட படியே ஒவ்வொரு புள்ளியையும் முற்றுப்புள்ளியாய் பார்த் தாள். இவர்கள் அத்தனைபேரும் இசை, நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவற்றில் பிரபல புள்ளிகள். அவள் ஒருத்திதான் ஒரு (க்)கால் புள்ளி’. அதனால்தானோ என்னவோ, கண்ணுக்கு எதிரே தோன்றினாலும் இவர் களுக்குக் காட்சியாகாத தெய்வப்படங்களையே பார்த்தாள்.

“முருகா! இந்தப் படம் நூறு நாள் ஓடணுமுன்னு ஒன் அண்ணன்கிட்டே சொல்லு… விநாயகா! இந்தப்படம் வெற்றி விழா கொண்டாடணுமுன்னு ஒன் தம்பிக்கிட்டே சொல்லு.”
அவள், தனக்குள்ளே புன்னகைத்தாள். வித்தியாசமான வளாய் மாறப்போவதால் இப்படி வித்தியாசமான வேண்டுதல் தோன்றுகிறதோ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். ‘எல்லாம் இந்தச் சந்திரனாலே இவர் எழுதுற வசனங்களைப் பேசிப் பேசி இப்போ சிந்தனை கூட அவர் நடையிலேயே வருது’ என்று மனதுக்குள் பேசிக் கொண்டே அவனைக் குறும்புத்தனமாகப் பார்த்தாள் குறுந்தாடியும், ஜோல்னா பையும் கொண்ட அறிவுஜீவி யான அந்தச் சந்திரன் ‘கை கொடுப்பார்கள்’ என்று நினைப் பவர்களுக்குக் கைகொடுத்துக் கொண்டிருந்தான்.
அவள் மனத்திரைக்குக் கீழே லட்சோப லட்சம் மக்கள் மூச்சையடக்கியதுபோல், அசைவற்று அவளைப் பார்க் கிறார்கள். அவள் அழும்போது சிரிக்காமலும், சிரிக்கும் போது அழாமலும் அவளாகவே மாறுகிறார்கள்.
இந்தத் திரை விலகி, இன்னொரு திரை வருகிறது.
அவள் ‘அவார்ட்’ வாங்குகிறாள். டி.வி.யில் பேட்டி கொடுக்கிறாள். செய்தியாளர்களிடம் பேசுகிறாள்.
மனத்திரையில் தெய்வங்களுக்குப் பதிலாக, தன்னையே வேறு வேறு ரூபங்களாக ஆராதித்தும், ரசிகர்களை பக்தர் களாக அனுமானித்தும் “அகமாகிப்போன தமிழ்ச்செல்வி, கூட்டத்தில் சலசலப்புக் கேட்டு கண் திறக்கிறாள். சுற்றும் முற்றும் பார்க்கிறாள். ஒரு பிரபல நடிகையின் பிரவேசத் தால் கூட்டம் அமளிப்படுகிறது. கூடை சுமந்த தோழியோடு வந்த அந்த நடிகையை, செய்தியாளர்கள் சுற்றிக்கொள் கிறார்கள். நாட்டின் மிகப்பெரிய பிரச்னையான அவளது விவாகரத்து கிசுகிசுப்புப்பற்றி கேட்கப் போகிறார்கள். அவள், யார் கதாநாயகி என்று கேட்டிருக்க வேண்டும். இல்லையானால் அந்த நடிகையின் வாயையே பார்த்தவர்கள் தமிழ்ச்செல்வியை ஒட்டு மொத்தமாக அப்படிப் பார்த்திருக்க மாட்டார்கள்.
அந்தம்மா பார்த்த பார்வையில் தமிழ்ச்செல்வி பயந்து போகிறாள். கண்களை மூடுகிறாள். முன்பு தோன்றிய மனோ பாவங்களை’ மூழ்கடித்து, தெய்வப்படங்களை உலா விடுகிறாள். இந்தப்படங்களும் மறைந்து இன்னொரு படம், ஒற்றை உருவமாய் வருகிறது. சந்திரனின் உருவம். ஆமாம், அவன்தான். அவனே தெய்வம். அல்லது இந்த தெய்வங்களின் மனித ரூபம். இந்தச் சந்திரனுக்கு ‘விட மாட்டோம்’ என்ற நாடகம் பல புரட்சி நாடகங்களில் ஒன்றுதான்.
ஆனால் அவளுக்கோ அது முதல் நாடகம். திரையுலகப் பிரவேசத்திற்கு முதலான’ நாடகம். கடந்த பத்தாண்டு காலமாக எக்ஸ்டிரா நடிகையாய் கும்பல் நடனக்காரியாய் நடித்தும். துடித்தும் அலுத்துப்போனவளுக்கு இந்தச் சந்திரன்தான் நாடகத்தில் நாயகி வேடம் கொடுத்தான். வேடம் என்றால் எப்படிப்பட்ட வேடம்?சப்-இன்ஸ்பெக்டர் காதலன், ஏழை பாளைகளை அடிக்கும்போது அவனுக்கு எதிராக போர்க்கொடியான ஒரு பெண் கொடி வேடம். காதலை குப்பையில் போட்டுவிட்டு, குப்பையோடு குப்பை யாய் வாழும் மக்களுக்காக புரட்சிக்காரியான வேடம்.
இந்த நாடகமே இவளால்தான் உயிர் பெற்றதாய் பத்திரிகைகள் சொல்லின. இதைச் சந்திரனே சொன்னான். இருக்கட்டுமே… சுவரில்லாமல் சித்திரமா? இந்தச் சந்திரன் இல்லாமல் தமிழ்ச்செல்வியா? தயாரிப்பாளர்களிடம் தமிழ்ச் செல்வியை சிபாரிசு செய்தவன் தனக்குக் கடவுளாக இல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்?
தமிழ்ச்செல்வியை அவள் அம்மா அப்போதுதான் பெற்றுப் போட்டதுபோல், பெருமிதத்துடன் பார்த்தாள். பலர் முன்னிலையில், அது தன் பிள்ளை என்று ஒப்புக் கொள்ள நாணப்படும் தலைப்பிள்ளைக்காரிபோல, பாராதது போல் பார்த்தாள்.
“ஏம்மா… பித்து பிடிச்சதுமாதிரி நிற்கே! பெரிய பெரிய ஆக்டருங்க வந்திருக்காங்க. நாடறிஞ்ச நடிகைகள் நிற் காங்க. அவங்களுக்கெல்லாம் வணக்கம் போடும்மா…
தமிழ்ச்செல்வி அம்மாவின் பேச்சுக்கு அடாவடித்தன மாகத்தான் குரலை உயர்த்தி, அம்மாவுக்கு முகம் காட் டாமலே பேசுபவள். இன்றைக்கோ அந்த அன்னையின் முகம் கோணிட, மகள் மாறிவிட்டாள் என்று தப்புக்கணக்கு போட்டுவிடக்கூடாது என்று பயந்தவளாய், அம்மாவின் மோவாயைத் தாங்கியபடியே பதிலளித்தாள்.
“இந்த பில்டப் பற்றி ஒனக்குத் தெரியாதும்மா. படம் வருவது வரைக்கும் நாம் யாருன்னு தெரியப்படாது… இப்போ எல்லாருக்கும் ஒட்டுமொத்தமாய் வணக்கம் போட்டால் அம்மா பேட்டி கொடுக்க வாராங்களோ”ன்னு சிரிப்பாங்க! தனித்தனியாய் போட்டாலோ, அவனுக்கு எவ்வளவு உயரமாய்க் கையைத் தூக்குனே! எனக்கு மட்டும் இவ்வளவு உயரமா’ன்னு கேள்வி வரும். அதோட ‘நான் கதாநாயகியாயிட்டேன்னு காட்டுறியாக்கும்! எக்ஸ்டி ‘ரா’ன்னு சொல்வானுக… அதனாலதான் இப்படி பேசா மடந்தை மாதிரி…”
பூஜை மணி நாதமாகி, ஆங்காங்கே பேசிக்கொண்டிருந் தவர்களின் வாய்களைக் கட்டி. அவர்களின் கண்களைப் பூஜைப் படங்கள் பக்கம் திருப்பிவிட்டது உடனே அத்தனை புள்ளிகளும்,ஞானப்புள்ளிகளாயின. அர்ச்சகர் ஒரு தட்டில் காட்டிய கற்பூர ஒளியையும், மறு கை அடித்த மணியோசை யையும் கண்டும் கேட்டும் முகங்களை உப்ப வைத்தார்கள். உடம்பைக் குலுக்கிக் கொண்டார்கள்.
டைரக்டர் சந்திரன் தயாரிப்பாளர் காலில் விழுந்தான். அவரோ டிஸ்ட்ரிபியூட்டர் காலில் கை போட்டார். டிஸ்ட்ரி பியூட்டர் பைனான்சியர்’ காலில். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலில் கைபோட்டு நான்கு கால்கொண்ட கூனர் களாய் ஆகிக்கொண்டிருந்தபோது, கும்பிடத் தகுதியற்றவர் களாகக் கருதப்பட்டவர்களும் பையில் மட்டுமே கை போடு பவர்களும் போகப்போக, கூட்டம் கரைந்து நான்கைந்து ஆட்களாயிற்று.
தமிழ்ச்செல்வி நிமிர்ந்துதான் நடந்தாள். சந்திரனை நோக்கித்தான் சென்றாள். அவனை அடிக்கப்போகிறவள் போல்தான் போனாள். பிறகு அவன் கால்களை கைகளால் பற்றி கரங்களை எடுக்க மனமின்றி இயல்பாய் குனிந்த படியே நின்றபோது சந்திரன் அவளைத் தோளோடு சேர்த்து தூக்கி நிறுத்தினான். லிப்ஸ்டிக் கலப்படமில்லாமல் துடித்த உதடுகளையும் மைவேலி போடாத கண்களையும் உற்று நோக்கினான். அந்த அழகில் ஒரு மயக்கம் ஏற்படுவதற்குப் பதிலாக அவன் சுதாரித்தவன்போல் சொன்னான்.
“இன்றைக்கு முதல் டேக் இருக்கிறத மறந்துட்டியா… சீக்கிரமாய் மேக்கப் போட்டுட்டு வா!”
”நான் ரெடி சார்!”
“டயலாக் மனப்பாடம் ஆயிட்டுதா.”
“ரெண்டே ரெண்டு வரி! அதுவும் நாடக வரி… மறக்க முடியுமா?”
“முடியாது தான்… ஆனாலும் சொல்லு பார்க்கலாம்.”
“ஒரு போராட்டத்துல தாக்குறது முக்கியமில்ல! தாக்குப் பிடிக்கிறதே முக்கியம்.”
“ஓ ஐ அம் ஸாரி! சொல்ல மறந்துட்டேன். பஸ்ட் டேக்… புரட்சிக் கூட்டமில்ல! உன்கிட்டே காதலன் வரு வான். உடனே நீ இன்று நல்ல நாள், இனி என்றும் வெற்றி நாள்’னு சொல்லணும்.”
“முதல் சிட்சுவேசனும் டயலாக்கும் நல்லா…..”
“சொல்றதை செய்! நான் இப்போ டைரக்டர். சந்திரன் செத்துட்டான். ஐ அம் ஸாரி..அவன் இல்ல. எடுத்த எடுப்பிலேயே போராட்டம், தாக்குறதுன்னு வசைச் சொல் வரக்கூடாது. “
தமிழ்ச்செல்வி, அவனை ஒரு மாதிரிப் பார்த்தாள். புரட்சி நாடகாசிரியன் வறட்சி சினிமாக்காரனாகிவிட்டாரே என்பதுபோல் பார்த்தாள். கடந்த மூன்று மாதகால திரைக் கதை-டிஸ்கஷன் போன்ற வெண்டைக்காய் சமாச்சாரங் களால், அவன் மாறிவிட்டதுபோல் ஒரு பார்வை.
மேக்கப் அறைக்குள் நுழைந்ததும், “ஒங்களுக்கு மேக் கப்பே தேவையில்லம்மா” என்றார் மேக்கப்பர். தேவை யில்லப்பா’ என்று செல்லமாகச் சொல்லப்போனவர், அவள் பார்த்த பார்வையில் கன்றுக்குட்டிமாதிரி ‘மா’ போட்டார். பிறகு ஒரு அறைக்குள் அவளைப் போகச் சொல்லி வாயில் புடவையைக் கட்டச்சொன்னார். உள்ளே வந்தவளை சுழல் நாற்காலியில் உட்கார வைத்தார். நிலைக்கண்ணாடி முன்னால் இருந்த விதவிதமான கண்ணாடி டப்பாக்களை உருட்டி, திரட்டி அவள் முகமெங்கும் தேய்த்தார். பிறகு ரோஸ் பவுடரைப் போட்டார். ஒரு பட்டுத்துணியால் தேய்த்துவிட்டார். கண்ணுக்கு மை போட்டு ஒற்றைவால் ஜடையை குதிரைக் கொண்டையாக்கினார். உதவிப் பேராசிரியை ஆயிற்றே… சும்மாவா.
மேக்கப்மேனின் பார்வைக் கோளாறு பதிப்பித்த ஆசிரியையாக தமிழ்ச்செல்வி வெளிப்பட்டாள். உருவமும், உடையும். செயற்கையானது போன்ற எண்ணம். ஆனாலும் அது தொலைவில் தெரிந்த காட்சியைக் கண்டதும் இயற்கைக் கூத்தாகியது. தமிழ்ச்செல்வி வெட்டுக்கிளிபோல் துள்ளி நடந்தாள். சிட்டுக்குருவியாய் தாவித்தாவி நடந் தாள். நிஜத்தை நிழலால் சரிப்படுத்தியபடியே முயல் பாய்ச்சலாய் போனபோது-
காமிராக்காரர், ஷோல்டர் ஷாட்டுக்காக உதவியாளர் தோளில் காமிராவைச் சுமத்தி கண் குவித்துப் பார்க்கிறார். லைட்டிங் பையன் சாம்பல் நிறத்தகடு மாதிரியான ஒருச் சாண் நீள வஸ்துவை தூக்கிப் பிடிக்கிறான். இன்னொருத் தன் கரும்பலகை மாதிரியான ஒன்றில் வெள்ளை எழுத்துக் களோடு நிற்கிறான். இவர்களுக்கு முன்னால் கதாநாயக நடிகர் புல்வெளியில் உலாத்துகிறார். தமிழ்ச்செல்விக்கு நிஜமாகவே காத்திருப்பதுபோல் அவளையே பார்க்கிறார். இயக்குநர் சகல மரியாதைத்தனங்களோடு நீட்டும் காகிதத்தைப் பார்க்காமலே நடந்து வருபவளையே உறுத்தலாய்ப் பார்க்கிறார்.
தமிழ்ச்செல்விக்கு அவர்களைக் காக்கவைக்கப் பிடிக்க வில்லை. அவர்களை நோக்கி ஷைனி ஆப்ரஹாம் மாதிரியே ஓடுகிறாள். அதென்ன இன்னொருத்தி? அடடே நடிகை நந்திகுமாரி! வங்களுக்கு இங்கென்ன வேலை? சந்திரன் அவளிடம் ஒரு காகிதத்தை நீட்ட, அவள் அதை அவன் கையில் வைத்தபடியே படிக்கிறாள். அப்புறம் சிரிக்கிறாள். அப்போதுதான் நடந்து பழகுபவள்போல் காமிரா முன் நடந்து காட்டுகிறாள். சந்திரனிடம் பேசிக் காட்டுகிறாள்.
தமிழ்ச்செல்வி, பி.டி.உஷாவாகிறாள். எதிர்த்திசையில் உஷாரில்லாமல் போன தன் மகளை நோக்கி அம்மாக்காரி கிழட்டு வேகத்தோடு ஓடிவருகிறாள். காய்ந்த அந்த உடம்பு காற்றடித்த சருகாக மகளிடம் ஒட்டிக்கொள்கிறது. அத்தனைபேர் காதுகளும் உள்வாங்கும்படி வாய் ஓலமிடு கிறது.
“பாவி மகளே மோசம் போயிட்டோமேடி… மோசம்! அடேய் அடுத்துக் கெடுத்த பயலே! ஒன் நாடகம் பேர் வாங்குனதுக்கு என் மகளோட நடிப்புதானடா காரணம்! இவளால் ஓடுன ஒண்ணுல இருந்து இவளையாடா ஓட வைக்கே! நீ உருப்படுவியா… இந்த ஒரு படத்தோட நீ ஓடு எடுக்கிறியா இல்லையான்னு பாரு! ஏய் தடிமாடு எங்கேடி போறே!”
தமிழ்ச்செல்வி அம்மாவை அப்புறப்படுத்திவிட்டு, அவளை அரைவட்டமாய் ஒரு சுற்றுச் சுற்றி தன் ஆவேசத் தைக் காட்டிவிட்டு, படப்பிடிப்பு இடத்திற்கு நிதானமாய் நடக்கிறாள். போய்ச் சேர்கிறாள். அவளுக்கு முதுகைக் காட்டியபடி ‘பிஸியாக’ நின்ற சந்திரனின் தலையில் தட்டு கிறாள். திரும்பிப் பார்ப்பவனிடம் ஒரு நிமிஷம் என் கிறாள். இருவரும் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு வந்ததும், சந்திரன் அமாவாசையாகி தனிமைப்படுகிறான். அப்புறம் ஒப்பிக்கிறான்.
“ஐ அம் ஸாரிம்மா! புதுமுகத்தைப் போட்டால், அதுவும் தமிழ்ப்பெண்ணைப் போட்டால் படம் ஓடாதாம். டிஸ்ட்ரிபியூட்டரும், பைனான்சியரும், புரட்யூஸர்கிட்டே கண்டிப்போடு சொல்லிட்டாங்களாம்! ஒனக்கு செகண்ட் ரோல் கொடுக்கணுமுன்னால் ஏற்கனவே மஞ்சுவை…
‘நீங்க கொடுத்தாலும் நான் வாங்கிக்க மாட்டேன். என்னோட ஏமாற்றம் மஞ்சுவுக்கு வரப்படாது. குறைந்த பட்சம் என் மூலம்.
“நீங்களும் முட்டாள்தனமாய் பேசுவீங்க… ஆனால் நான்தான் ஆமாம் போடமாட்டேன்!”
தமிழ்ச்செல்வியால், தன் சுயமரியாதை பாதிக்கப்பட்ட பாவலாவில் சந்திரன் அவளைக் கோபமாகப் பார்க்கிறான். அங்கே தான் நின்றால், அவளுக்குத்தான் ஆபத்து என்பது போலவும், அதை தான் விரும்பவில்லை என்பதுபோலவும் அவன் அவளுக்கு புறமுதுகு காட்டி நடக்கிறான்.
தமிழ்ச்செல்வியும் நடக்கிறாள். திரும்பிப் பாராமலே திரும்பி நடக்கிறாள் – அம்மாவுக்கு தடிமாடாய்; திரையுலகின் எக்ஸ்டிரா நடிகையாய்.
– இன்னொரு உரிமை, முதற் பதிப்பு: மே 1992, வானதி பதிப்பகம், சென்னை.
![]() |
சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941-ம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்தார். கடையத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். சு. சமுத்திரம் செங்கல்பட்டு அருகிலுள்ள காட்டுக்கரணை என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அலுவலக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழக அரசில் கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி ஆகிய பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றுகையில் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படவே பணியைத்…மேலும் படிக்க... |