
நவஜோதி, ஜோகரட்னம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அகஸ்தியர். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், விமர்சனங்கள், வானொலி உரைகள், வானொலி நாடகங்கள், குட்டிக்கதைகள் என்பவற்றை எழுதியுள்ளதுடன் எனக்கு மட்டும் உதிக்கும் சூரியனின் கவிதை என்னும் நூலையும் எழுதியுள்ளார்.
இவரது நூல்கள்
- எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்
- மகரந்தச் சிதறல்
மேலும் விவரங்கள்
- இவர் எனக்கு மட்டும் என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
“மகரந்தச் சிதறல்” என்ற இவரது படைப்பு வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கு பாட நூலாகவும் உள்ளது. - இவரது படைப்புகள் நூலகம் மற்றும் சிறுகதைகள் போன்ற தளங்களில் கிடைக்கின்றன.
- சமீபத்தில், இவர் எழுதிய “பழகுவதற்கு இனிமையான ராஜகோபால்” என்ற கட்டுரை Thaiveedu இதழில் ஜனவரி 2025 இல் வெளியானது.
- Thaiveedu இதழில் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
- இவரது படைப்புகள் பொதுவாக சமூக, கலாச்சார மற்றும் குடும்பப் பின்னணியைக் கொண்டுள்ளன.
எழுத்தாளர் அகஸ்தியரை பின்தொடரும் புதல்வி பன்முக ஆளுமை நவஜோதி ஜோகரட்னம்! … முருகபூபதி
ஈழத்து முற்போக்கு இலக்கிய முகாமில் குறிப்பிடத்தகுந்த ஒருவரான ( அமரர் ) எஸ். அகஸ்தியரின் மகள்தான் நவஜோதி.
நான் இலங்கையிலிருந்த காலப்பகுதியில் அகஸ்தியரை நன்கு அறிவேன். இறுதியாக அவரை 1983 ஆம் ஆண்டில்தான் சந்தித்தேன். அதன்பிறகு, அவர் பிரான்ஸுக்கும் நான் அவுஸ்திரேலியாவுக்கும் புலம்பெயர்ந்து வந்துவிட்டோம்.
என்னுடன் தொடர்ச்சியாக கடிதத் தொடர்பிலிருந்த அகஸ்தியர் பற்றி நான் பல பதிவுகளும் எழுதியிருக்கின்றேன். அவருடனான எனது நேர்காணல் பதிவும் எனது சந்திப்பு நூலில் இடம்பெற்றுள்ளது.
இந்த நூல் வெளியானபோது அகஸ்தியர் இல்லை. அவரை நினைவுகூர்ந்து குறிப்பிட்ட நூலை மெல்பனில் வெளியிட்டேன்.
1990 களில் அகஸ்தியரும் அவருடைய புதல்விகள் நவஜோதி, நவஜெகனி ஆகியோரும் என்னுடன் கடிதத் தொடர்பிலிருந்தனர்.
எனினும், நவஜோதியை 2008 ஆம் ஆண்டுதான் லண்டனில் முதல் முதலில் சந்தித்தேன்.
நூலகர் நடராஜா செல்வராசா ஒழுங்கு செய்திருந்த இலக்கிய நிகழ்வில்தான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
அதன்பிறகு லண்டனுக்குச் செல்லும் சந்தர்ப்பங்களிலெல்லாம் நவஜோதியை சந்திக்கவும் நான் தவறுவதில்லை.
இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நான் லண்டனில் இருந்தபோது, அங்கு நடந்த விம்பம் அமைப்பின் நிகழ்ச்சிக்கு என்னை அவரே அழைத்துச்சென்றார்.
ஈழத்தின் பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் மூத்த மகளான நவஜோதி , யாழ்ப்பாணம் இளவாலை மகளிர் கல்லூரியில் தனது கல்வியை மேற்கொண்டவர். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், 1980 களின் முற்பகுதியில் பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்தார்.
அங்கு பிரெஞ்சு மொழியை கற்றுத் தேறினார்.
பிரான்ஸில் முக்கிய கல்வி நிலையமாக கருதப்படும் அலியன்ஸ் பிரான்சேஸ் ( Allience Francaise ) கல்விநிலையத்திலும் பிரெஞ்சு மொழியைக் கற்றார். பிரான்ஸ் நாட்டில் வெவ்வேறு தொழில்களைப் பயிற்சிபெற்றுச் செய்திருந்தாலும், பின்னர் COGEDEP என்ற International Music Company இல் முழுநேரமாகப் பணிபுரியும் வாய்ப்பும் இவருக்கு கிட்டியிருக்கிறது.
அங்கு விருப்போடு பணியாற்றி தன்னை வளர்த்துக்கொண்டவர். முற்றிலும் வித்தியாசமான வாழ்விடத்தில் அம்மக்களின் கலை, கலாசாரத்தை தெரிந்துகொண்டு, அம்மக்களுடன் நெருக்கமான உறவையும் பேணி வளர்த்துக்கொண்டவர்.
நவஜோதி பணியாற்றிய குறிப்பிட்ட நிறுவனத்தில் பிரெஞ்சு மக்கள் மாத்திரமின்றி பலநாடுகளைச்சேர்ந்தவர்களும் பணியாற்றியமையால், அங்கு நவஜோதி கற்றதும் பெற்றதும் அநேகம்.
உலக இசை குறித்து பல விடயங்களை இவரால் அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது. அன்புத் தந்தை அகஸ்தியரின் மறைவின் பின்னர் லண்டனில் இவரது வாழ்க்கை தொடர்கிறது.
பாரிசில் தான் வாழ்ந்த காலம் பொற்காலம் என்கின்றார். எனினும் தற்போது வாழும் லண்டன் வாழ்க்கையையும் பொற்காலமாக்குவதற்காக அயராமல், கலை, இலக்கிய ஊடகப்பணிகளையும் தொடருகின்றார்.
ஜோகினி, மாஜிதா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியிருப்பவர்.
அந்தவகையில் அயர்ச்சியற்ற ஆளுமையாகத் திகழுகின்றார்.
கவிஞரும், சிறுகதை எழுத்தாளரும், கட்டுரையாளருமான நவஜோதி ஜோகரட்னத்தின் எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன் என்ற கவிதைத் தொகுப்பு 2005 ஆம் ஆண்டில் வரவாகி, லண்டனில் வெளியான முதல் தமிழ்ப் பெண் கவிஞையின் தொகுப்பாகப் பாராட்டுப் பெற்றது.
அதன்பின்னர் வெளிவந்த இவரது மகரந்தச் சிதறல் லண்டன்வாழ் தமிழ் பெண்களின் நேர்காணல் தொகுப்பு, இரா.உதயணன் இலக்கிய விருதினைப் பெற்றது.
இவரது ஊடகத்துறை ஈடுபாட்டை கௌரவித்து ஹரோ கவுன்சிலினால் Harrow’s Heroes – Inspiring Volunteer award இவருக்கு வழங்கப்பட்டது.
சில சிறுகதைப்போட்டிகளிலும் பரிசுகள் பெற்றிருக்கும் நவஜோதியின் நேர்காணல் தொகுப்பான மகரந்தச்சிதறல் பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தையும் இங்கே பதிவுசெய்கின்றேன்.
நேர்காணல் என்பதும் ஒரு தேர்ந்த கலை. அதிலும் நாம் பயிற்சிபெறவேண்டியவர்களாகவே இருக்கின்றோம். நேர்காணல்களில் ஈடுபடுபவர்களுக்கு தேடலும், வாசிப்பு அனுபவமும் முக்கியமானது. தம்முடன் உரையாடவிருப்பவர் குறித்து எதுவும் தெரியாமல் முழுமையான நேர்காணலை தயாரித்துவிட முடியாது.
நவஜோதி ஜோகரட்னம் வெளியிட்டுள்ள நேர்காணல் தொகுப்பு மகரந்தச்சிதறல், வானொலி – தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கு பாட நூலாகவும் திகழும். நிதானம், தனிப்பட்ட விருப்பு வெறுப்பற்ற பண்புகள், கூர்மையான செவிப்புலன், கிரகிக்கும் ஆற்றல் என்பன சிறந்த நேர்காணலை ஒலி – ஒளிபரப்புவதற்கு பெரும் துணைபுரியும்.
நவஜோதி, லண்டனில் நடா. மோகன் நடத்தும் சண்ரைஸ் வானொலிக்காக தான் சந்தித்த பெண்கள், தத்தமது கருத்துக்களை சுதந்திரமாக எந்தத்தடையுமின்றி தெரிவித்திருப்பதாக நூலின் முன்னுரையில் பதிவுசெய்துள்ளார்.
கேள்விகளை தொடுத்திருக்கும் பாங்கில் மற்றவர்களின் கருத்துச்சுதந்திரத்திற்கு இவர் தந்துள்ள மரியாதை முன்னுதாரணமானது என்பதை இந்நூலுக்குள் பிரவேசிக்கும்பொழுது தெரிந்துகொள்கின்றோம்.
மகரந்தச்சிதறல் நூலை, தமது அருமைத்தாயார் திருமதி நவமணி அகஸ்தியருக்கு நவஜோதி சமர்ப்பணம் செய்துள்ளார். தமது எழுத்துக்களை இன்றும் தேடித்தேடி பத்திரப்படுத்திவைத்திருக்கும் அக்கறையுள்ள தாயாரையும் தொடர்ச்சியாக இலக்கியத்துறையில் ஊக்கமளித்து வந்திருக்கும் தந்தையையும் பெற்ற பாக்கியசாலிதான் நவஜோதி.
இந்த நூலின் முகப்பினை வடிவமைத்திருப்பவர் நவஜோதியின் புதல்வன் செல்வன் அகஸ்ரி ஜோகரட்னம் (செல்லப்பெயர் – சிம்பா) இங்கிலாந்தில் வோறிக் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்றவர்.
இசை, நாட்டியம், நாடகம், ஓவியம், இலக்கியம், அரசியல், மருத்துவம், தொழில் முயற்சி முதலான அங்கங்களில் 33 பேருடன் தாம் நடத்திய நேர்காணல்களின் தொகுப்பினை நவஜோதி ஜோகரட்னம் நேர்த்தியாக வரவாக்கியிருக்கிறார்.
தமிழ்நாடு கருப்பு பிரதிகள் அச்சிட்டிருக்கும் இந்நூலில் இடம்பெற்றிருக்கும் மங்கையற்கரசி அமிர்தலிங்கம், தையல் சுந்தரம் பரந்தாமன் ஆகியோர் இதனைப்பார்க்காமலேயே விடைபெற்றுவிட்டனர்.
அத்துடன் இந்த அரியமுயற்சியை பார்க்கும் சந்தர்ப்பம் நவஜோதியின் தந்தையார் அகஸ்தியருக்கும் கிட்டாமல் போய்விட்டது.
” நேர்காணல் என்பது எனக்கும் பேட்டி தருபவருக்கும் இடையில் நடைபெறும் ஒற்றைவழிப்பயணமல்ல. பல்லாயிரக்கணக்கான நேயர்கள் வானொலி அலைவரிசைகளில் எங்களின் உரையாடல்களைப் பார்த்தும் கேட்டுக்கொண்டும் இருக்கிறார்கள் என்ற ஒருவித மன உணர்வு எப்போதும் என் நெஞ்சில் ஊர்ந்து கொண்டேயிருந்திருக்கின்றது.” என்று தமது முன்னுரையில் நவஜோதி குறிப்பிட்டிருக்கும் வரிகள் , தேடல் மனப்பான்மையற்ற வானொலி, தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கும் சிறந்த ஆலோசனையாகும்.
– நன்றி: https://akkinikkunchu.com