தெ.பொ.மீனாட்சிசுந்தரம்

தெ.பொ.மீனாட்சிசுந்தரம்
 

தெ.பொ.மீனாட்சிசுந்தரம் (08 சனவரி 1901 – 27 ஆகத்து 1980) 20-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர்களுள் ஒருவர்.

இறந்த ஆண்டு: ஆகஸ்ட் 27 – 1980.

பிறந்த ஊர்: சிந்தாதிரிப்பேட்டை (சென்னை).

மொழிப்புலமை :

தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், ஒப்பிலக்கியம், மொழியியல் குறித்த பல கட்டுரைகளையும், நூல்களையும், திறனாய்வுகளையும் எழுதியுள்ளார்.

சிறப்பு பெயர்கள்: பன்மொழிப்புலவர், பல்கலைச் செல்வர்.

முக்கிய குறிப்புகள்:

தெ. பொ. மீனாட்சி சுந்தரம் சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் 1901ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் நாள் பொன்னுசாமி கிராமணியார் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தைக்கு தமிழ் மீதும் தமிழ் அறிஞர்கள் மீதும் இருந்த பற்றினால் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் பெயரை தன் மகனுக்கு இட்டார்.

இவர் 1920ஆம் ஆண்டு சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ பட்டமும், 1922ல் B.L. பட்டமும் பெற்றார். பின்பு 1923 ஆம் ஆண்டு எம்.ஏ பட்டம் பெற்று வரலாறு, பொருளியல், அரசியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டமும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 1923 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தன்னைப் பதிவு செய்து கொண்டார்.

அதன் பின்னர் 1924-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்பு 1925 ஆம் ஆண்டு அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவராக இருந்து தொண்டு புரிந்தார்.

தமிழ் இலக்கிய இலக்கண ஆர்வத்தால் பி. ஒ.எல் , எம். ஒ. எல் பட்டங்களை 1934ஆம் ஆண்டுக்குள் பெற்றார். பின்பு 1946ஆம் ஆண்டு நாட்டு உரிமைக்காக மறியல் செய்து சிறை சென்றார்.

இவரது தமிழ்ப் புலமையைக் கண்ட அண்ணாமலை அரசர் “அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு” இவரை பேராசிரியராக நியமித்தார். பேராசிரியராகப் பொறுப்பேற்ற தெ. பொ. மீனாட்சிசுந்தரம் 1944ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். மீண்டும் 1958ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல், இலக்கியத் துறைகளின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். மொழிப்புலமை இவரை அயல்நாட்டுப் பல்கலைக்கழகமான சிகாகோ பல்கலைக் கழகத்தில் 1961 ஆம் ஆண்டு தமிழ்ப் பேராசிரியராக பொறுப்பு ஏற்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

1966 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக இவர் 1966 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

இவர் 1973 மட்டும் 1974 ஆம் ஆண்டுகளில் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் கழக சிறப்பு ஆய்வாளராக பொறுப்பேற்றார். 1974ஆம் ஆண்டு முதல் ஆழ்நிலை தியான தேசியக் குழுவில் உறுப்பினராக இருந்து தொண்டு செய்துள்ளார்.

இவருக்கு தருமபுர ஆதீனம் “பல்கலைச் செல்வர்” என்றும் குன்றக்குடி ஆதீனம் “பன்மொழிப் புலவர்” என்றும் விருதுகள் அளித்து சிறப்பித்தனர்.

சிறப்புகள்:

பன்மொழிப்புலவர் என்று அழைக்கப்பட்ட தெ. பொ. மீனாட்சி சுந்தரம் இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர்கள் ஒருவராவார்.

இவர் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, செருமன் போன்ற பழமொழிகளை அறிந்தவராய் திகழ்ந்தார்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், ஒப்பிலக்கியம், மொழியியல் குறித்த பல கட்டுரைகளையும் நூல்களையும் திறனாய்வுகளையும் எழுதி உள்ளார்.

இவர் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று தமிழின் புகழ் பரப்பிய பெருமகனார் மீனாட்சிசுந்தரம் யுனெஸ்கோவின் “கூரியர்” எனும் இதழ் குழுவின் தலைவராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மிகச் சிறந்த இலக்கிய திறன் ஆய்வாளராகவும் விளங்கியவர். மற்றும் தமிழுக்குப் பல புதிய சிந்தனைகளைத் தன் ஆய்வின் மூலம் தந்தவர்.

ஆராய்ச்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்தம் நூல்கள் காட்டுகின்றன. திறனாய்வுத் துறையில் பல புதிய தடங்களைப் பதித்தவர்.

உலகக் காப்பியங்களோடும், உலக நாடகங்களோடும் சிலப்பதிகாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து அதை “நாடக காப்பியம்” என்றும், “குடிமக்கள் காப்பியம்” என்றும் ஒருவரியில் கூறியவர். சிலப்பதிகாரத்துக்கு இவரைப் போன்று வேறு யாரும் திறனாய்வு எழுதியதில்லை.

“தமிழ் மொழியை உயர வேண்டுமானால் தமிழன் உயர வேண்டும்” என சங்க நாதம் இட்ட முதல் சான்றோர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் ஆவார்.

பெற்ற விருதுகள்:

தமிழக அரசு சார்பில் – கலைமாமணி விருது

இந்திய அரசின் சார்பில்(மத்திய அரசு) – பத்ம பூஷன் விருது

தருமபுர ஆதீனம் சார்பாக – பல்கலைச் செல்வர் விருது

குன்றக்குடி ஆதீனம் சார்பாக – பன்மொழிப்புலவர் விருது

நூல்கள்:

தமிழ் இலக்கிய வரலாறு (தமிழ் மொழி வரலாறு) தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலாகும்).

இதனை ஆங்கிலத்தில் இருந்து மு. இளமாறன் என்பவரால் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.


ஆசிரியர் முன்னுரை – நற்றிணை நாடகங்கள், டிசம்பர் 1954

எனக்குப் பிறந்த முதல் குழந்தை ஈராண்டுக்குள் இறந்தது. வருத்தத்தில் மூழ்கிய எனக்கு அந்த வருத்தத்தினை மறக்கச் சிந்தா- திரிப் பேட்டை உயர்நிலைப் பள்ளித் தொண்டு கிடைத்தது; அதன் செயலாளன் ஆனேன். ஆதலின். அதனை, மகவெனவே கொண்டு வாழலாயினேன். சிந்தாதிரிப்பேட்டைத் தொடக்க நிலைப் பள்ளி, இராவ் பகதூர் கலவலகண்ணன் செட்டியார் பெண்பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை மாண்டிசோரிப்பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை ஆரம்பப் பள்ளி, சிந்தாதிரிப்பேட்டைக் கலியாணம் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளி எனப் பள்ளிகள் இன்று வளர்ந்தோங்கி உள்ளன. சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைமைப் பேராசிரியனாகத் தொண்டாற்றவந்ததும் பள்ளிகளின் செயலா- ளன் எனத் தொடர்ந்திருப்பது இயலாததாயிற்று. திரு. துரை வேலனார் அன்புடன் முன்போந்து செயலாளராகத் தொண்- டாற்றிவருகிறார். ஆதலின், வருத்தம் ஒருவாறு எனக்கு மகிழ்ச்சியாக மாறியது. 

பள்ளியோடு கால் நூற்றாண்டு தொடர்ந்திருந்த என் நினை வைப் பாராட்டவேண்டும் என்று நண்பர்கள் விரும்பினார்கள். தொண்டினைச் செய்தோம் என்ற நிறைவுள்ளமே பெரிய பாராட்டு. அதற்கு மேலும் பாராட்டு ஏன் ? ஆனால் இளைய நண்பர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர். யான் எழுதிய கட்டுரைகள் இதுவரை நூல்வடிவில் வெளிவராதவற்றைத் திரட்டி நினைவுப்- பதிப்பாக வெளியிடுவதே இந்தப் பாராட்டு என்றபோது எவ்- வாறு நான் மறுக்கத்தகும்? 

இந்தச் சூழ்ச்சியைச் செய்த திரு. துரைவேலனார். திரு. பிநாகபாணியார், திரு. சண்முகசுந்தரனார், திரு. இராசேசுவரி அம்மையார், திரு. துரைக்கண்ணனார். திரு. துரை அரங்கனார் முதலியோருக்கும் இதனைத் தம் பதிப்பாக அச்சிட முன்வந்த திரு. பழனியப்பா அவர்களுக்கும் நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? 

இப்போது, நற்றிணைப் பாடல்களுள் ஒன்பது பாடல்கள் கொண்டு நான் எழுதிய சிறு நாடகங்கள் வெளிவருகின்றன. இவற்றுள் சில, பத்திரிகைகளிலும், வானொலியிலும் வெளியானவை. 

இவற்றைத் தமிழ்மக்களுக்கு என்றே எழுதினேன். அவர்- கள் என்ன நினைக்கின்றார்களோ? என் கருத்துக்கள் என் கருத்- துக்களே ! என் முகம்போல மற்றொரு முகம் இராது. ஆதலின், என் கருத்துக்கள் எல்லோர் கருத்துமாக முடிவது அருமை. என்றாலும், அன்பினால் குற்றத்தினைப் பொறுத்து வாழ்த்துவது அன்றோ தமிழ் மரபு ? அதனையே நம்பி வாழ்கிறேன். 

சென்னை, 4-12-1954. 
தெ.பொ.மீனாட்சிசுந்தரன். 

தெ.பொ.மீ. வெள்ளிவிழாக் குழுவினர் 

அணிந்துரை – நற்றிணை நாடகங்கள், டிசம்பர் 1954

ஆறு கிளைகளாகப் படர்ந்து, மூவாயிரம் மாணவர்களுக்குக் கல்விப்பயிற்சியாம் தண்ணிழல்தரும் கற்பகத் தருவான சென்னைச் சிந்தாதிரிப்பேட்டைக் கல் விநிலையக்குழுவின் செயலாளராகச் சென்ற இருபத்தைந்தாண்டுகள் தந்நலம் சிறிதும் கருதாது அத- னைத் தழைத்து வளரச்செய்து வந்த பேராசிரியர், பல்கலைச் செல்வர், பன் மொழிப்புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாருடைய வெள்ளிவிழா இரண்டாம் மலராக “நற்றிணை நாடகங்கள் ” என்ற இந்நூல் தமிழுலகை அணிசெய்ய வெளிவருகிறது. இமயம் முதல் குமரிவரையில் இப்பேராசிரியர் ஆற்றிய சொற்பொழிவு- கள் கணக்கிலடங்கா. ஆனால், அவையெல்லாம் காற்றில் கலந்து வானில் ஒன்றாயின. அவ்வப்போது இவர் தமிழ் வெளியீடுகளி – லும், ஆங்கில வெளியீடுகளிலும் எழுதிவந்த கட்டுரைகளும் எண்ணிலடங்கா. ஆனால், அவை யெல்லாம் தொகுக்கப்பெற- மல் சிதறுண்டுள்ளன. அவற்றையெல்லாம் தொகுத்துப் பல வெளியீடுகளாகத் தமிழுலகிற்கு வழங்கவேண்டும் என்பது எங்- கள் பேரவா. இவ்வவாவினை நிறைவேற்றுவதற்குப் பொருள் மிகுதியும் தேவை என்பது சொல்லத் தேவையில்லை. எனினும், எவ்வாறேனும் எங்கள் விருப்பத்தை இவ் வெள்ளிவிழாவில் நிறைவேற்றவேண்டும் என்ற துணிவு கொண்டு, பேராசிரியர் எழுதிய கட்டுரைகளில் பலவற்றைத் திரட்டிப் பத்து வெளியீடு- கள் வரையில் தொகுத்துள்ளோம். ஆனால், பொருள் முட்டுப்- பாடு எங்களைத் திகைக்கவே செய்தது. அப்போது சமய சஞ் சீவியாய்த் தமிழ்வள்ளல், சைவசமயப் புரவலர், உயர்திருவாளர் உ.ராம.மெ.சுப. சேவு. மெ. மெய்யப்பச் செட்டியாரவர்கள், எங்களுக்கு ஊக்கம் அளித்துத் தமிழ் நூல்களை அழகாக அச்- சிட்டு வெளியிடுவதையே தமிழன்னையின் வழிபாடாகக் கொண்டிலகும் உயர்திருவாளர் பழனியப்பச் செட்டியாரவர்களிடம் அறிமுகப்படுத்திவைத்தார்கள். தம்முடைய இயல்பான இனி- மைப் பண்பில் உயர் திருவாளர் பழனியப்பச் செட்டியாரவர்கள் எங்கள் செயலைப் பாராட்டிப் பேராசியர் எழுத்துக்கள் அனைத்- தையும் வெளியிட இசைந்து, முதலில் வள்ளுவர் கண்ட நாடும் காமமும் என்ற நூலை அச்சிட்டு, அடுத்து இரண்டாவதாக இந் நூலை விரைவில் அழகாக அச்சிட்டுத்தந்தார்கள். இவ்விரு பெருஞ்செல்வர்களுக்கும் நாங்கள் ஆற்றும் கைம்மாறு ஏதும் அறியோம். எல்லாம் வல்ல ஆண்டவன் அவர்கட்கு எல்லா நலங்களும் அளித்தல் வேண்டுமென அவ் வாண்டவனை வேண்டி அமைகின்றோம். 

இந்நூலின் சிறப்பினை வரையறை செய்து கூறுவது எம் மனோர்க்கு இயலாத தொன்று, ஒப்புயர்வற்ற நூல் இஃதாகும் என்று கூறி அமைகிறோம். 

சங்க நூல்கள், பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் எனப் பகுக்கப்பட்டிருப்பதைத் தமிழர் அனைவரும் அறிவர். எட்டுத் தொகை எனப்படும் நூல்களுள் நற்றிணையே தலைசிறந்தது. எட்- டுத் தொகை நூல்கள் இவை என்பதை ஒரு பழம் பாடல், 

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் 
கற்றறிந்தார் ஏத்தும் கலியே அகம்புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை 

என்று இயம்புகிறது. இப் பாடலில் முதற்கண் வைத்து எண்- ணப்பெறும் பெருமை நற்றிணைக்கே அமைந்துள்ளது. மேலும் குறுந்தொகை என்பதும் ‘நல்ல குறுந்தொகை” என்று சிறப்பிக்- கப் பெற்றிருந்தாலும், ‘நல்’ என்ற அடைமொழி,பிரிக்க முடியாத படி நற்றிணைக்கே பொருந்தியுள்ளது. இவ்விரண்டே சாலும் நற்றிணை எட்டுத் தொகையுள் தலைசிறந்தது என்பதற்கு. இந் நூலுள் நானூறு பாடல்கள் நன்மணிகளெனத் திகழ்கின்றன. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு சிறு நாடகமாக விரிக்கலாம். இம் முறையில் ஒன்பது பாடல்களைச் சிறு நாடகங்களாக அமைத்து அப் பாடல்களை நன்கு விளங்கிக்கொள்ளும் வகையில் உயர் திரு.தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் சிறந்ததொரு தமிழ்த் தொண்டு ஆற்றி யிருக்கின்றார். இந் நவமணியுள் ஒவ்வொன்- றன் சிறப்பையும் தனித் தனி எழுதிக்காட்டுதல் வேண்டா. ஒளி- யும் சுவைமிகுதியும் ஒவ்வொன்றிலும் உண்டு. படித்துச் சுவைக்க முற்பட்டுவிட்டால் தங்குதடையின்றி முழுதும் சுவைத்து விட்டே நூலைக் கீழே வைக்கத்தோன்றும் என்ற அளவு நூலின் சிறப்பைப்பற்றிக் கூறினால் போதும் என்று கருதுகிறோம். 

இந்நூலைத் தமிழ்மக்கள் அனைவரும் விரும்பி ஏற்பார்கள் என்பது திண்ணம்; ஏற்பின், இதனால் பெரும் பயன் அடைவர் என்பதும் திண்ணம். 

தொடுமிடந்தொறும் சுவைநயம் தோன்ற ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு சிறு நாடகமாக அமைத்துத் தந்த திரு. தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் நீடு வாழ்க! இவற்றோடு நின்று- விடாது. நற்றிணையில் உள்ள எல்லாப் பாடல்களுக்கும் இங்ஙனமே திரு.தெ.பொ.மீ. அவர்கள் சிறு நாடகங்கள் எழுதித் தமிழ்மக்கள் அனைவரையும் நூலில் திளைக்கும்படி செய்- வார்களாக! வாழ்க நற்றிணை ! வாழ்க தமிழ்மொழி! 

சென்னை, 4-12-1945. 
இங்ஙனம், தெ.பொ.மீ. 
வெள்ளிவிழாக் குழுவினர்.