சு.குருசாமி

சு.குருசாமி
 

சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான “பிரேம கலாவதீயம்” (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் “வாடா விளக்கு” போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர்.

மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ் நாவல் படைப்பாளிகள் ஆவர். (www.tamilvu.org)

முக்கிய பங்களிப்புகள்:

புதினம்: 1893-ல் வெளிவந்த “பிரேம கலாவதீயம்” என்ற மிகைக்கற்பனை நாவலை எழுதினார், இது பொழுதுபோக்கு நாவல்களுக்கு வழிவகுத்தது.

பிரேமகலாவத்யம் – Tamil Wiki

சிறுகதைகள்:

பல சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டார்:

  • வாடா விளக்கு, 1944
  • பல மொழிகளில் இருந்து சிறுகதைகளைத் தொகுத்து, “இந்தியக் கதைத் திரட்டு” என்ற நூலை வெளியிட்டார் (1943).
  • மறுமணம், 1947
  • உபகுப்தர் (நாடகங்கள்), 1947

முகவுரை – திருமணம் (நாவல்) – செப்டம்பர் 1947

ஒரு சிறந்த கதாசிரியருடைய திறமை எதில் இருக்கிறதென்றால், நமக்குப் பரிச்சயப்பட்ட விஷயங்களைப் புத்தம் புதியவை போலவும், புதிய விஷயங்களைத் தினமும் பழகுபவை போலவும் தீட்டிக் காட்டுவதில் தான்” என்று மேல் நாட்டு ஆசிரியர் தாக்கரே கூறியிருக்கிறார். சில வருஷங்களுக்கு முன்பு ஸ்ரீ குருசாமி அவர்கள் எழுதிய ‘தேசாந்திரி’ என்னும் சிறு கதையைப் படித்தபோது, எனக்கு இதே அனுபவம் ஏற்பட்டது. ஆசிரியர் என்னை வடக்கே க இமயமலைச் சாரலுக்கு அழைத்துக் கொண்டு போனார். வெடவெடக்கும் குளிரை நான் அனுபவித்தேன். கண்களைக் கவரும் மலைக் காட்சிகளைக் கண்டேன். பனி லிங்கத்தைத் தரிசனம் செய்தேன். தேசாந்திரிகளுடன் சத்திரத்தில் குளிர் காய்ந் தேன். இதெல்லாம் எனக்குப் புதிய சமாச்சாரங்கள், அனுபவங்கள்தாம். ஆனால், கதையைப் படிக்கும் போது, இத்தனையும் நடக்கக் கூடியதுதான், நடந்தாலும் இதே போல்தான் இருக்கும் என்ற திடமான நம்பிக்கை ஏற்பட்டது. 

அந்தத் தமிழ்க் கதையைப் படித்துக் கொண்டிருந்த போது, நடையின் மந்திர சக்தியை நான் முழுவதும் உணரவில்லை. படித்து முடித்த பிறகுதான் பக்கத்துத் தெருவில் நடக்கும் கல்யாணத்திற்குப் போவதற்குக் கூடச் சோம்பல்பட்ட என்னை, இந்த ஆசிரியர் எப்படி, “வார்த்தைகளைக் கொண்டே மயக்கி இமயமலை யாத்திரைக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார்” என்பதை உணர்ந்தேன். ‘தேசாந்திரி’ இப்போது ஆனந்த விகடனில் வெளியாயிற்று. நான்கு வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால், விச்ராந்தியான நேரங்களில், மனம் கட்டுப்பாடு களைத் தளர்த்திக்கொண்டு திரியும் சமயங்களில், என் கண் முன்பு தேய்ந்து தேய்ந்து வளரும் தூய பனி லிங்கமும், அதைக் காண ‘க்யூ’ வரிசையில் திட சித்தத்துடன், கரடு முரடான பாதையில் நடைபோடும் உறுதி நெஞ்சம் படைத்த பக்தர்களின் வரிசையும் தோன்றத் தவறியதில்லை. 

சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீ குருசாமி தாம் எழுதிவரும் “திருமணம் ” என்ற நவீனத்துக்கு முகவுரை எழுதவேண்டும் என்று என்னிடம் தெரிவித்தபோது, உடனே ஒப்புக்கொண்டேன். இதற்கு முக்கிய முதல் காரணம், நல்ல நவீனம் ஒன்றை முதன் முதலாகப் படிக்கலாம் என்ற ஆசையே ஆகும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். “திருமண”த்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். என் வருத்த மெல்லாம் கதை முடிந்து விட்டதே என்பதுதான்! 

“இன்னும் கொஞ்சம் சாப்பிட வேண்டும்” என்ற ஆசை தோன்றும் காலந்தான், சாப்பாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டிய சரியான சமயம் என்பார்கள். இன்னும் கொஞ்சம் எழுத மாட்டாரா என்று தோன்றும்படி செய்து கொண்டு, கதையை நிறுத்தும் ஆசிரியர் சமர்த்தர் என்று சொல்ல வேண்டியதுதான். ‘திருமணம்’ இந்த அம்சத்தில் முதல் தர வெற்றி பெற்றுவிட்டது என்பதில் எனக்குச் சந்தேகமே கிடையாது. 

‘திருமணம்’ திருமணமாக மட்டும் இல்லை. தமிழ் மணம் அதிலே ததும்பி வழிகிறது. எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் அது தமிழ்க் கதை. தமிழன் உள்ளத்தில் பொங்கும் எண்ணங்களே எழுத்தில் பிரதிபலிக்கின்றன. வெள்ளைக்காரச் சீமாட்டிகளுக் குத் தாவணி, புடவைகளை உடுத்தித் தமிழ் பேசச் செய்யும் ‘இலக்கியம்’ அல்ல இது. லக்ஷிமி அம்மாள் உயர் குடும்பங்கள் தோறும் காணப்படும் மங்கள முகம் படைத்த மாதுசிரோன்மணி தான்; அவள் புருஷன் சுந்தரஞ் செட்டியார் சகஜமாக நாம் சந்திக்கும் நல்ல மனுஷர்; வேலைத் தொந்திரவு நிறைந்தவர். படித்த பிள்ளை பாலகிருஷ்ணன் செய்வதையும், எண்ணுவதையும், நடந்து கொள்வதையும் எங்கே யுமே காணலாம். சிவகாமி தமிழ் நாட்டுப் பெண். மனம் நிறைய ஆசாபாசங்கள். ஆனால், துணிச்சலாக அவைகளை வெளியிட அவளுடைய பண்பட்ட மனம் இடங்கொடுக்கவில்லை. இத்தனை சகஜமான மனிதர்களைக் கொண்டு, எளிய நடையிலே வாசகரைச் சங்கிலி போட்டுப் பிணைக்கும் அம்சம் என்ன? கதையில் திருட்டும், கொலையும், போலீஸும் வருகின்றனவா? திட்டம் போட்டுக் கொண்டு வேலை செய்யும் தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் இருக்கிறார்களா? அல்லது, மேஜையடியில் உட்கார்ந்து உச்சி மோட்டைப் பார்த்துத் தீவிர சிந்தனையில் ஈடுபட்டிருக்கும் துப்பறிபவன் இருக்கிறானா? கைத் துப்பாக்கிகள் விளையாடுகின்றனவா? ஒன்றுமே இல்லை. மனிதனுடைய ஆசாபாசங்கள், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவன் மனம் இயற்கையாக நாடும் பாதை, அவன் இதயத்திலே தலை முறை தத்துவமாக ஊறிக் கிடக்கும் பழக்க வழக்கங்களின் போக்கு இவைகளையே காண்கிறோம். நமக்கெல்லாம் ஏற்படும் சுபாவமான எண்ணங்கள் தாம் இந்த மனிதர்களுக்கும் ஏற்படுகின்றன. நமக்குத் தெரிந்த இந்த விஷயத்தைப் புதியது போலவும், மேலே மேலே அறிய ஆவலைத் தூண்டும்படியாகவும் ஸ்ரீ குருசாமி எழுதிவரும் போது, அடிக்கடி தாக்கரே எழுதி வைத்த வாக்கியங் தான் ஞாபகம் வந்தது. சிறந்த ஆசிரியர் பரிச்சயமான விஷயத்தைப் புத்தகம் புதியது போல் காண்பிக்கும் திறமை பெற்றவர்! 

 தமிழ் நாட்டில் ஸ்ரீ குருசாமியின் பெயர் பிர சித்தமானதுதான். அவர் கதைகளை எல்லாரும் படித்திருப்பவர்களே. ‘திருமணம்’ அவருடைய புகழை மேலும் ஓங்கச் செய்யப் போகிற தென்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. தெளிந்த நதிப் பிரவாகம் போலக் கம்பீரமாகச் செல்லும் குளிர்ச்சி மிகுந்த நடை; கதைப் போக்கிலே இரு புறமும், இயற்கையான செழுமையான விஸ்தரிப்புகள், அதன் சாந்தமான ஓட்டத்திலேயே ஆழமான பிரச்னைகள், பயங்கரமான சுழற்சிகள், லாகவமான நெளிவு, சுளிவுகள் திருமணம் ஒரு புதிய வாழ்க்கையை ஒட்டிய ஓர்நல்ல நவீனம். இதற்கு உரித்தானமதிப்பும் வரவேற்பும் தமிழ் நாட்டில் நிச்சயம் கிடைக்கும். 

யோக்கியதை உள்ள எழுத்துக்குக் கௌரவம் அளிக்க வாசகர்கள் தீர்மானித்து விட்டார்கள். நூதனமான முறைகளையும், நவநவமான உத்திகளையும் கையாளுபவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கப் பெரும்பான்மையானவர் தயங்குவதில்லை. யார் எழுதினார்கள் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு சீர்தூக்குவதும், அபிப்பிராயம் சொல்லுவதும் இப்போது அநேகமாக இல்லவே இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு நேர்ந்த ஒரு சிறிய அனுபவத்தைச் சொல்லலாமென்று நினைக்கிறேன். மூன்று வருஷங்களுக்கு முன்பு ஒரு நண்பர் வந்தார். 

“ஏன் நீங்கள் கொஞ்ச நாட்களாக எழுதுவதே இல்லை?” என்று கேட்டார். நான் அப்போது எழுதாமல் இல்லை, எழுதிக் கொண்டுதான் இருந்தேன். அவை ‘ஆர்.எம்.’ என்ற பெயரில் வெளியாகிக் கொண்டிருந்தன. நான் சிரித்துக்கொண்டே, “நான் எழுதினால் தானா? மற்றவர்கள் நன்றாகத்தானே எழுதிக்கொண்டு வருகிறார்கள்!” என்றேன். “என்ன ஸார்! ‘ஆர். எம்.’ என்று யாரோ எழுதுகிறார்; நீங்களும் பிரசுரித்துக் கொண்டே வருகிறீர்கள். சுத்த மோசம். நான் அதைப் படிக்கிறதை நிறுத்தி விட்டேன்; என் சிநேகிதர்களும் அப்படித்தான். அதை உடனே நிறுத்தி, அந்த ஆறு பக்கங்களுக்குப் பதிலாக நீங்கள் நாலு பக்கங்கள் எழுதுங்கள், போதும்!” என்று என்னை மேலும் எழுதத் தூண்டி உற்சாகப்படுத்திவிட்டு அவர் போனார். 

இந்த மனோபாவம் இப்போது அநேகமாக இல்லவே இல்லை என்று மகிழ்ச்சியுடன் சொல்ல முடியும். நிர்த்தாக்ஷண்யமாக, பாரபட்சத்துக்கு இடம் கொடாமல் நல்ல அம்சங்களை ஏற்றுக் கௌரவிக்கும் சகாப்தம் ஆரம்பமாகிவிட்டது. சுதந்திர உதயத்துக்கும் இந்த மனப்பான்மைக்கும் நல்ல பொருத்தந்தான். 

ஆகஸ்டு பதினைந்தாம் தேதிக்குப்பின் முதன்முதல் வெளியாகும் ஸ்ரீ சு.குருசாமி அவர்களின் நவீனத்துக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். 

ஆனந்தவிகடன், 21-8-1947.

இங்ஙனம். 
ஆர்.மகாதேவன்.