Jawad Maraikar
1960 ஆம் ஆண்டுக்குச் சற்று முன்னர்வரை இலங்கையிலிருந்துகொண்டு தனது எழுத்துகளால் ஒரு சூறாவளியை ஏற்படுத்திய எம்.ஏ.அப்பாஸ் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டவர்.
சமூக சீர்திருத்தக் கருத்துகளை நாடகங்கள் , நாவல்கள் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் … என எழுதிக் குவித்தவர். அவருடைய கருத்துகளும் தமிழ் நடையும் இலங்கையில் பெரியதொரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கின (அவர்களுள் சிலர் பின்னாளில் சமூக சீர்திருத்த நோக்கு கொண்ட எழுத்தாளர்களாயினர்). அதுபோலவே, அவரின் கருத்துகளை சீரணித்துக்கொள்ள முடியாதோரின் பலத்த கண்டனங்களையும் அவர் எதிர்கொண்டார்.
1952 ஆம் ஆண்டு வெளியான ‘துரோகி‘ என்ற நாடக நூல் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . காரணம் முஸ்லிம் சமூகத்தில் சமயத்தின் பெயரால் நடைபெறும் அனாசாரங்களைக் கண்டிப்பதாக அது இருந்ததே. வழக்கம்போல, நூலைப் படிக்காமலே கண்டனப் பிரசுரங்களை வெளியிட்டோரும் போராட்டம் நடத்தியோரும் இவர்களுள் அடக்கம். எனினும், சற்றும் தளராமல் தொடர்ந்து எழுதினார் அப்பாஸ். ‘துரோகி‘ 2ஆம் பதிப்பு வெளியாகிற்று.
1959 ஆம் ஆண்டு வரை இலங்கையில் வாழ்ந்த அப்பாஸ் எழுதிய இன்னொரு தாக்கமான நாடக நூல்தான் ”கள்ளத்தோணி ” . அவர் பெயரோடு அடைமொழியாகவே ஒட்டிக்கொள்ளுமளவுக்கு இந்நூல் புகழடைந்தது.
1953 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூலுக்கு சி.என்.அண்ணாத்துரை (அறிஞர் அண்ணா), கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரைகளை எழுதியுள்ளனர்.
பாராட்டுரைகளை எழுதியுள்ளோர்: ராஜாஜி, மு.வரதராசன், ம.பொ .சிவஞானம்,
காமராஜர், ப.ஜீவானந்தம், பெரியார் ஈ.வே.ரா, கே.பாலச்சந்தர், சிவாஜி கணேசன்.
1982 ஆம் ஆண்டு எனக்குக் கிடைத்த தகவலின்படி , ‘ கள்ளத்தோணி ‘ அதுவரை 40 000 பிரதிகள் ( ஏழு பதிப்புகள் ) விற்பனையாகியது .
இன ஐக்கியத்தை மையமாகக்கொண்டு ‘ஒரே ரத்தம்‘, நாகூர் தர்கா அனாசாரங்களைச் சாடும் ‘மூன்று பிரேதங்கள்‘, சீதனக் கொடுமையைச் சித்திரிக்கும் ‘இவளைப்பார்‘ என்பன தொடர்கதைகளாக (இலங்கை) தினகரனில் வெளிவந்தன. இவை தவிர , சிங்களத்தீவின் மர்மம், கலையின் விலை, யக்கடையாவின் மர்மம் போன்ற நாவல்கள் உட்பட 40க்கு மேற்பட்ட நூல்கள் இலங்கையிலும் தமிழகத்திலும் வெளியாகின.
பாகிஸ்தான் கதைகள் ,கே.ஏ. அப்பாஸின் ”இன்கிலாப்” போன்ற நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
தமிழகம் மீண்டபின்னர் சினிமா , நாடகம் ஆகியவற்றிலும் ஈடுபட்டார். ‘ துரோகி ‘ மீண்டும் பதிப்பிக்கப்பட்டது .இலங்கையில் மேடையேற்ற இடமளிக்கப்படாத இந்நாடகம் ,
தமிழகத்தில் ( ஜமாலியா கல்லூரியில் ) மேடையேறியது.
இன ஐக்கியத்தைக் கருவாகக் கொண்ட ”சூறாவளி” வர்ணத் திரைப்படம் ஒரு லட்ச ரூபா பரிசைப் பெற்றுக் கொடுத்தது.
பாரத விலாஸ் , நீதிக்குப் பின் பாசம் முதலிய திரைப்படங்கள் இவரது கதையில் உருவானவை. 1981 ஆம் ஆண்டு தமிழக அரசினால் சிறந்த கதை , திரைக்கதை , வசனகர்த்தாவாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
தனது வாழ்வின் இறுதிக் காலப் பகுதியில் ‘Vision‘ என்ற முத்திங்கள் ஆங்கிலப் பத்திரிகையை நடத்தினார் .
இலங்கையிலிருந்த காலத்தில் ‘இலங்கை வானொலி’ யில் இவர் ஆற்றிய பங்கும் மிகப் பெரிது .நாடகங்கள், இஸ்லாமிய கீதங்கள் என நிறைய எழுதினார். இவருடைய இஸ்லாமிய கீதங்கள் நாகூர் E.M. ஹனிபா , H.ஹுசைன்தீன் போன்றோரின் குரல்களிலும் ஒலித்தன.
மிஸ்ஸியம்மா திரைப்படத்தில்வரும் ‘ முடியுமென்றால் படியாது படியுமென்றால் முடியாது ‘ என்ற பாடல் மெட்டில் அவர் எழுதிய கீதத்தில் சில வரிகள் இவை :
”போடுவதும் வெளிவேஷம்
செய்வதெல்லாம் முழு மோசம்
போலிமதப் பேர்வழிகள்
பார்வையே வேறுதான்
பார்வையெல்லாம் வேறுதான்
பருவ மங்கை மீதுதான்
பச்சை ஜுப்பா
மஞ்சள் தலைப்பா
பாமரரைக் கவருதப்பா
இச்சை கொள்ளப்
பேசும் பேச்சே
ஏந்திழையை ஏய்க்குதப்பா ”
– ‘கள்ளத்தோணி‘ அப்பாஸ் – இரசவாதம்- கற்றுக்குட்டியின் கூக்குரல்