இராயர்-அப்பாஜி

இராயர் அப்பாஜி கதைகள்
 

பதிப்பாசிரியரின் முகவுரை – செப்டம்பர் 2006

முன்னுரை

மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர்-அப்பாஜி கதைகள் முதலியன வாய்மொழி இலக்கிய இயல்புகள் நிரம்பப் பெற்றவை. இலக்கிய அழகு மிகுந்த இவை மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்பவையாகும். குறிப்பாகச் சிறுவர்களை ஈர்க்கும் திறம்படைத்தவை இவை. 

இவற்றில் மரியாதைராமன் கதைகள் ஏற்கனவே என்னால் பதிப்பிக்கப் பெற்றுச் சரசுவதி மகால் நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது. மரியாதைராமன் கதைகள் குறித்த நெடிய ஆய்வுக் கட்டுரையொன்று மகால் நூலகப் பருவ இதழில் விரைவில் வெளிவர உள்ளது. 

இப்பொழுது, இங்கு இராயர் – அப்பாஜி கதைகள் இராயர் அப்பாச்சி கதைகள் என்னும் தலைப்பில் பதிப்பிக்கப்பெற்று நூலுருப் பெற்றுள்ளது. இப்பதிப்பு தொடர்பான செய்திகளை இனிக் காணலாம். 

பதிப்புக்கு அடிப்படையான மூல ஓலைச்சுவடி குறித்து : 

சரசுவதி மகால் தமிழ்த்துறையைச் சேர்ந்த 1830-ஆம் எண்ணிடப் பெற்ற ஓலைச்சுவடியில் மரியாதைராமன் கதைகள், இராயர் -அப்பாச்சி கதைகள் ஆகிய இரண்டும் முழுமையும் எழுதப்பெற்றும், தெனாலிராமன் கதைகள் தொடக்கம் மட்டும் (ஓருகதை மட்டும்) எழுதப்பெற்றுப் பின் தொடர்ந்து எழுதப்படாமல் நின்றுபோயும் உள்ளது. இவ்வோலைச் சுவடியே இப்பதிப்புக்கு அடிப்படையாக அமைந்த சுவடியாகும். 

இவ்வோலைச்சுவடி, கரூர் வட்டம் தாளியாபட்டியைச் சேர்ந்த திரு. வை. பாலார் கவுண்டர் இந்நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியதாகும். இவ்வோலைச் சுவடியில் 38 ஏடுகளில் கதைகள் எழுதுப்பெற்றுள்ளன. 

இராயர், அப்பாஜி 

இராயர், அப்பாஜி என்னும் பெயர்கள் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரையும், அவருடைய அமைச்சர் சாளுவ திம்மராசு அப்பாஜியையும் குறிப்பன.அப்பாஜியின் காலம் 16-ஆம் நூற்றாண்டு ஆகும். 

இராயர் – அப்பாஜி கதைகள் 

நுட்பமான மதிநலங்கொண்ட அமைச்சர் அப்பாஜியின் தீரச் செயல்களை விவரிக்கும் கதைகள் தெலுங்கு மொழியிலும் தமிழ் மொழியிலும் (தலைமுறை தலைமுறையாகப் பரவி வழங்கி) எழுதப் பெற்றுள்ளன. இக்கதைகள் வாய்மொழி இலக்கிய இயல்புகள் பெற்று வரலாற்றை ஒட்டி உண்மை நிகழ்ச்சிகளைக் கொண்டும், வரலாற்றுக்குப் பொருந்தாத நிகழ்ச்சிகளைக் கொண்டு கற்பனையாகப் புனையப்பெற்றும் பரவியுள்ளன. 

இக்கதைகள் முதலில் தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப் பெற்றிருக்கலாம். அல்லது கர்ணபரம்பரைக் கதையாகத் தெலுங்கு மொழி பேசுவோரிடமிருந்து தமிழர்களிடத்தில் இக்கதைகள் பரவியிருக்கலாம். 

மொழி பெயர்க்கப்பட்ட அல்லது கர்ணபரம்பரையாகப் பரவிய இக்கதைகள் ஓரிரு தலைமுறைகளுக்கு முன் ஓலைச்சுவடியில் பதிவு செய்யப்பெற்றிருக்கக்கூடும். அவற்றிலிருந்து பிரதி செய்யப் பெற்றவற்றுள் ஒன்றாக இந்நூலகத்திற்குக் கிடைத்துள்ள இப்பிரதி இருக்கக்கூடும். 

இராயர் – அப்பாஜி கதைகள் இடம்பெற்றுள்ள சில நூற்பதிப்புகள் 

இராயர் அப்பாஜி கதைகள் என்னும் தலைப்பில் தமிழில் இதற்கு முன்பே பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சிலவற்றின் பதிப்பு விவரங்கள் : 

1. மதன காமராஜன் மரியாதைராமன் கதைகள் 

என்னுந் தலைப்பிலான நூலில் 350-ஆம் பக்கம் முதல் 375-ஆம் பக்கம் வரை இராயர் அப்பாஜி கதைகள் இடம்பெற்றுள்ளன. 

பதிப்பாசிரியர் : அரு.இராமநாதன், முதற்பதிப்பு : 1958, எட்டாம் பதிப்பு: 1989, வெளியீடு : பிரேமா பிரசுரம், சென்னை. 

2. இராயர் – அப்பாஜி கதைகள் 

நெ. சி. தெய்வசிகாமணி, 1984, ஸ்டார் பிரசுரம், சென்னை. 

3. இராயர் – யுக்திக் கதைகள் 

பதிப்பாசிரியர் : முல்லை முத்தையா, முதற்பதிப்பு : 1986, மூன்றாம் அச்சு 1988, வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 

4. இராயர் – அப்பாஜியின் நகைச்சுவைக் கதைகள் 

தமிழில் : ஏ. எஸ். வழித்துணைராமன் என்றுள்ளது. தெலுங்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாக இருக்கலாம். விவரம் இல்லை. முதற்பதிப்பு : 1989, வெளியீடு : பாரதி பதிப்பகம், சென்னை. 

5. இராயர் – அப்பாஜி கதைகள் 

ஆக்கியோர்: மணிமேகலை பிரசுர ஆசிரியர்குழு, பதிப்பாசிரியர்: லேணா தமிழ்வாணன், திருந்திய முதற்பதிப்பு : 1989, வெளியீடு : மணிமேகலை பிரசுரம், சென்னை. 

6.அப்பாஜி – பீர்பால் கதைகள் 

எ.சோதி, முதற்பதிப்பு : 1991, நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி. 

(இன்னும் சில பதிப்புகள் இராயர் -அப்பாஜி கதைகளுக்கு (பழம்பதிப்புகள்) வெளிவந்திருப்பதாகத் தெரிகின்றது. இந்நூலின் மறுபதிப்பில் அவற்றைத் தேடித் தொகுத்து அடைவு செய்து அளிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பெறும். 

பிறபதிப்புகளின் தன்மைகள் 

பல்வேறு தனியார் புத்தக வெளியீட்டு நிறுவனங்கள், பள்ளி மாணவர்களை ஈர்க்கும் விதத்தில் இராயர் அப்பாச்சி கதைகளை வெளியிட்டுள்ளன. இந்நிறுவனங்களின் நூல் வெளியீட்டு முயற்சிக்கு விற்பனை நோக்கே முதன்மையானதாகும். 

மேலே காட்டப்பெற்றுள்ள ஆறு வெளியீட்டு நிறுவனங்களின் இராயர்-அப்பாஜி கதைகளும் மொழி நடையால் பேரளவும், கதைப் பகுதிகளால், சொல்லும் முறையால் ஓரளவும் வேறுபடுகின்றன. இந்நூல்கள் எவற்றிலும், ஓலைச்சுவடியை அடிப்படையாகக் கொண்டு அவை பதிப்பிக்கப் பெற்றதென்னும் குறிப்பு இல்லை. வை எவையும் ஓலைச்சுவடியை அடிப்படையாகக் கொண்டு பதிப்பிக்க பெறவில்லைதாம். இவற்றுள் முன் வழங்கிய இக்கதைகளை (கதைகள் இடம்பெற்ற இன்னும் பழைய பதிப்பு நூல்களை) மனத்துள் வாங்கித் தத்தம் மனப்போக்குக்கும் வணிக நோக்குக்கும் ஏற்பத் தத்தம் நடையில் மாறுதல்களுடன் எழுதியுள்ளனர். 

சில நூல்களை ஓரிரு கதையை நீக்கிவிட்டும், சில நூல்கள் சில பகுதிகளை மாற்றிவிட்டும் வெளிவந்துள்ளன. 

நமது நூலகப் பதிப்பான இப்பதிப்பின் தேவை 

மேலே கூறியுள்ளபடி, இராயர்-அப்பாஜி கதைகளைக் கொண்ட பல நூல்கள், பல பதிப்புகள் வெளிவந்துள்ள சூழ்நிலையில் இப்பதிப்பு வெளிவருவதன் தேவை என்ன என்று சிலர் கருதக்கூடும். 

இராயர் அப்பாஜி கதைகளைக் கூறும் பல நூல்கள் வெளிவந்திருக்கின்ற போதிலும், இவற்றில் எதுவும் ஓலைச்சுவடியில் இருந்து பதிப்பிக்கப் பெற்றதாக இல்லை. ஆகவே, இக்கதைகளுக்குச் சுவடிப் பதிப்பு நூல் ஒன்று இன்றியமையாததாகின்றது. 

நமது நூலக ஓலைச்சுவடியில் இடம்பெற்றுள்ள கதைகளின் மொழிநடை, பிற பதிப்புகளின் கதைகளின் மொழி நடையிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றது. கதைப்போக்கில் மெல்லிய மாறுதல்களைக் கொண்டிருக்கின்றது. இத்தன்மை வாய்மொழி இலக்கிய ஆராய்ச்சிக்கும், கடந்த நூற்றாண்டு மொழிநடை குறித்த ஆராய்ச்சிக்கும் பெரிதும் பயன்படும் என்னும் நோக்கத்தில் இப்பதிப்பு வெளிவருகின்றது. 

இப்பதிப்பில் இடம்பெற்றுள்ள கதைகளின் மொழிநடை 

இராயர்-அப்பாஜி கதைகளின் மொழிநடை, பேச்சு வழக்குச் சொற்களால் ஆனது. வடமொழிச் சொற்களின் ஆட்சி அதிக அளவில் காணப்படுகின்றது. 

ஆயினும், அப்பாஜி, பாதுஷா என்னும் இரு சொற்கள் மட்டும் அப்பாச்சி, பாச்சா என்று தமிழ்மொழியின் இயல்புக்கேற்ப மருவி வடிவங்களுடனேயே சுவடியில் தொடக்கம் முதல் இறுதிவரை அமைந்துள்ளன. 

இராயர் – அப்பாச்சி கதைகள் என்னும் இப்பதிப்பு நூலின் தலைப்பு குறித்து 

இக்கதைகளைக் கொண்ட பிறபதிப்புகள் தம் நூல் தலைப்பில் ‘அப்பாஜி’ என்னும் சொல் வடிவினைப் பயன்படுத்த, இப்பதிப்பு நூலின் தலைப்பு மட்டும் ‘அப்பாச்சி’ என்னும் சொல்வடிவையே பயன்படுத்துவதாக அமைந்துள்ளது. சுவடியில் தலைப்பிலும், கதைகளுக்குள்ளும் ‘அப்பாச்சி’ என்னும் சொல்வடிவமே இடம் பெற்றுள்ளது. கதைகளைப் புனைந்தவர் அல்லது ஏடு எழுதியவர் கதைகளுக்குள் ‘வேஷம்’, ‘புருஷன்’ முதலிய வடமொழிச் சொற்களை வடவெழுத்துடனேயே எழுதியுள்ளார். ஆனால் ‘அப்பாஜி’, ‘பாதுஷா’ ஆகிய இரு சொற்களை மட்டும் அப்பாச்சி, பாச்சா என்றே தமிழியல்பிற்கேற்ப எல்லா இடங்களிலும் ஆண்டுள்ளார். 

தமிழ்நலஞ் சான்ற சொல் வடிவங்கள் என்னும் நோக்கிலும், இப்பதிப்பு நூலின் தனித்தன்மைகள் என்னும் நோக்கிலும், ஆய்வாளர்களுக்குப் பயன்படவேண்டும் என்னும் கருத்திலும் இச்சொற்களே இப்பதிப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நோக்குகளின் அடிப்படையில், இப்பதிப்பு நூலின் தலைப்பும் ‘அப்பாச்சி’ என்னும் சொல்வடிவையே கொண்டிலங்குகிறது.

“வரலாற்றுக்குப் பொருந்தாத ஒரு கதை” என்னும் குறிப்பு 

இராயர் அப்பாஜி கதைப் பதிப்புகளில் முதல்கதையாக இடம்பெறும் அப்பாஜி (முதலில் சிற்றரசனிடம் மந்திரியாக இருந்துவிட்டுப் பின்) இராயரிடம் மந்திரியாகும் கதை, இராயர் – அப்பாஜி வரலாற்றுக்குப் பொருந்தாததாக உள்ளமையை முற்பதிப்பாசிரியர்களில் ஒருவரான திரு.நெ.சி. தெய்வசிகாமணி தெரிவித்துள்ளார். 

அக்கருத்துரை 

வரலாற்றுப் புகழ்பெற்ற இவ்விருவரைப் பற்றியும் வழங்கப்படும் கதைகளில் வரலாற்றுக்குப் புறம்பான சில கதைகளும் அடங்கியுள்ளன. 

உதாரணமாக, இந்நூலின் பழைய பதிப்புகளில் வரும் முதல் கதையில் அப்பாஜி வேறு ஓர் அரசரிடம் அமைச்சராக இருந்ததாகவும், இராயர் அவருடைய அறிவுத்திறனை வியந்து அவரைத் தம்முடைய மந்திரியாக ஆக்கிக்கொண்டதாகவும் வழங்குகின்றது. இது வரலாற்றுக் குறிப்புகளுக்குப் பொருந்ததாத கதை. 

உண்மையில், கிருஷ்ணதேவராயரைச் சிறுவயதிலிருந்து வளர்த்துவந்தவர் அப்பாஜி. சிறு வயதில் இராயருக்குப் பகைவர்களால் ஆபத்து நேரிடும்போது, அந்த ஆபத்துகளினின்றும் அவரைக் காத்தவர் அப்பாஜி. 

கிருஷ்ணதேவராயர் இந்த நன்றியை மறக்காமல் அவரைத் தம்முடைய முதன்மந்திரியாக நியமித்துக்கொண்டார். 

என்று அவர்தம் “இராயர் அப்பாஜி கதைள்’ நூலின் முன்னுரையில் கூறியுள்ளமை நோக்கத்தக்கது. 

இதுபோன்ற கதைப்பகுதிகள், ஆராயப்புகுவார்க்கு விருந்தாக அமையும். 

பிற இராயர் – அப்பாஜி கதைகள் பதிப்பு நூல்களின் மூலம் 

இப்போது நம் பார்வைக்குக் கிடைக்கின்ற பிற பதிப்பு நூல்கள், அறுபது, எழுபது அல்லது நூறு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பழம்பதிப்பு நூல்களையே அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும். பழம்பதிப்பு நூலின் மொழி, நடை, கதைப் போக்குகளில் தத்தம் மனப்போக்கிற்கு ஏற்ப மாறுதல்களைச் செய்து இவற்றின் பதிப்பாசிரயர்கள் இக்கதைகளை வெளியிட்டுள்ளனர். 

மிகப் பழம்பதிப்பு நூல்களின் மூலம் வாய்மொழியிலிருந்து சேகரிக்கப்பெற்றதாகவோ, மொழிபெயர்க்கப் பெற்றதாகவோ சுவடியிலிருந்து எடுக்கப்பெற்றதாகவோ இருக்கவேண்டும். மிகப் பழம்பதிப்பு நூல்கள் கிடைக்கப் பெறும்போது இவற்றின் மூலம் குறித்தும் பதிப்பாசிரியர்களால் செய்யப்பெற்ற மாற்றங்கள் குறித்தும் பல உண்மைகள் வெளிப்படும். 

நமது சுவடிப்பதிப்பு நூலில் இடம்பெறாத கதை 

பிறஇராயர் அப்பாஜி கதைப் பதிப்புகளில் காணப்படும் இறுதிக்கதையான பாதுஷாவைக் கண்டுபிடிக்கும் கதை நமது சுவடியில் காணப்படவில்லை. அதனால் இப்பதிப்பு நூலில் அக்கதை இடம்பெறவில்லை. 

சுவடியில் விடுபட்டுள்ள ஒரு கருத்து பற்றிய குறிப்பு 

குறிப்பிற் சொன்னவைகளை வெளிப்படுத்தியது’ என்னும் 14-ஆவது கதையில் சுவடியில் விடுபட்டுள்ளது. இது “பிள்ளைக்காம்” என்பதற்கான விளக்கம் “தென்னம் பிள்ளை வைத்து வளர்ப்பதற்கு ஏற்ற நிலம்” என்பதாகும். (ஆதாரம் : பிற பதிப்புகளில் அமைந்துள்ள இதே கதைகளின் பகுதிகள்.) 

நன்றியுரையும் நிறைவுரையும் 

மரியாதைராமன் கதைகள், இராயர்-அப்பாஜி கதைகள் போன்ற பேச்சுவழக்கு நடையிலான சுவடி நூல்களைப் பதிப்பித்து வெளியிடுவதன் தேவையை எடுத்துக்கூறி, இந்நூலைப் பதிப்பிக்க ஆணையிட்ட அப்போதைய சரசுவதி மகால் நூலக இயக்குநர் திருமிகு. மு. சதாசிவம் அவர்களுக்கு முதலில் என் நன்றியை உரித்தாக்கக் கடமைப்பட்டுள்ளேன். 

இந்நூல் வெளிவரும் இவ்வேளையில் சரசுவதி மகால் நூலக இயக்குநர் பொறுப்பு வகிக்கும் பெருமதிப்பிற்குரிய தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமிகு. தி. சண்முகராஜேஸ்வரன், இ. ஆ. ப., அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை உரித்தாக்கி மகிழ்கின்றேன். 

இந்நூற் பதிப்புக்குத் தேவையானவற்றை மிகுந்த ஆர்வத்துடனும் அன்புடனும் செய்து உதவிபுரிந்த சரசுவதி மகால் நூலக நிருவாக அதிகாரி (பொறுப்பு) திருமிகு. அ. பஞ்சநாதன், எம்.ஏ., எம்.எல்.ஐ.எஸ்., அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்கி மகின்றேன். 

வாய்மொழி இலக்கியம், தமிழ் உரைநடை குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் இப்பதிப்பைப் பயன்படுத்திக்கொள்வர் என்று நம்புகிறேன். தமிழில் இதுவரை வெளிவந்துள்ள ‘இராயர் அப்பாஜி கதைப் பதிப்பு நூல்கள் அனைத்தையும் திரட்டிப் பதிப்புக்குப் பதிப்பு ஏற்பட்டுள்ள மாறுபாடுகள், சில கதைகள் சில பதிப்புகளில் நீக்கப்பட்டமைக்கும், சில கதைகள் சில பதிப்புகளில் சேர்க்கப்பட்டமைக்குமான காரணம், அச்சுயந்திர வெளியீட்டு சாதனங்களின் வளர்ச்சி விற்பனை நோக்கம் முதலியவற்றால் இக்கதைகள் பெற்ற மாற்றங்கள் வாய்மொழி இலக்கியம் என்னும் நோக்கு முதலிய கோணங்களில் ஆய்வாளர்கள் இக்களத்தில் ஆய்வு நிகழ்த்துவதற்கு வாய்ப்புள்ளமையை இவண் சுட்டிக்காட்டி அமைகின்றேன். 

ய.மணிகண்டன், எம். ஏ., எம். ஃபில்., 
தமிழ்ப்பண்டிதர், 
சரசுவதி மகால் நூலகம்.
தஞ்சாவூர், 1-3-92.

– இராயர் அப்பாஜி கதைகள், இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2006, சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.