கண்ணீர் கொந்தளிக்கும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: சிரித்திரன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 5, 2025
பார்வையிட்டோர்: 445 
 
 

(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திரேசாளுக்கு இப்படி எப்பவும் கோவம் வந்ததில்லை. உடற்பலமிருந்தால் கண்டிப்பாக அந்தக் குடிசை வீட்டைத் தூக்கி எறிந்திருப்பாள். 

அவ்வளவு கோவம்! 

பாரிசவாதம் வந்து படுத்தபடுக்கையாகி, மறுபிறப்பெடுத்தது போல் எலும்பும் தோலுமாகி வெறும் உயிர்த்துடிப்பின் செயற்கையால் வாழ்ந்து கொண்டிருக்கும் அவளால் வேறெதையும் செய்ய முடியவில்லை. 

அந்தக்குடிசை வீட்டை மூடியிருந்த உக்கிய சில கிடுகுகளை மட்டும் பிய்த்தெறிய முடிந்தது. 

“அம்மா… வீட்டைப் பிய்க்காதையுங்கோ…” கத்தரீனாள் காலைப் பிடித்துக் கெஞ்சுகிறாள். அவளது உடலிலிருந்து பிரசவித்த குற்றத்திற்காகவோ என்னவோ அவளது ஒரே மகள் செல்வம் வாய்விட்டுக் கதறுகிறாள். 

“இருக்கவிட்டதுக்காக… என்னையே நீ கேள்வி கேட்கிறியா…” திரேசாளுக்கு உடற்பலம் இல்லையே தவிர வாய்ப்பலம் நிறைய உண்டு. 

திரேசாளை எதிர்த்து நியாயத்தைக் காட்டி இரண்டு வார்த்தைகள் கூற கத்திரீனாளுக்குத் தெரியாமலில்லை. அவளைத் தூக்கி வீசிவிடக் கூடிய மனத் தைரியமும், உடற் தைரியமும் கத்தரீனளுக்குண்டு! 

திரேசாளோடு நேரடியாகப் போட்டிபோடும் தகுதி கத்திரீனாளுக்கில்லை: அவள் பரம ஏழை. 

திரேசாளோ பணக்காரி! 

திரேசாள் வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுகிறாளே: கத்திரீனாவின் மறைந்து போன பரம்பரைகளைப் பற்றி, அவர்கள் வாழ்க்கையில் படிந்திருந்த கறைகளைப் புட்டுப் புட்டு வைக்கிறாளே… அந்தக் குமர்ப்பொட்டை செல்வதைப் பற்றி வாய்க்கு வந்த படி… எத்தனை வார்த்தைகள்… காதால் கேட்க முடியுமா?… 

இவைகள் எதுவும் கத்திரீனாளுக்கு கேவலமாகவோ, வேதனையாகவோ இல்லை. 

கத்திரீனாள் ஏழ்மைப் பாதாளத்தில் புதைந்து மீண்டவள். இந்தச் சிறிய வேதனை அவளுக்குப் பெரியதாகப் படவில்லை. 

திடீரென இந்த வீட்டை விட்டு வெளியேற அவளென்ன தனிக்கட்டையா?… குருவிச்சை போல் அவளை ஒட்டியிருக்கும் ஒரு குமர்… எங்கே போவது?… இது தான் அவள் மனதைக் குடைந்து கொண்டிருக்கும் பிரச்சனை. வேதனை! 

திரேசாளுக்குச் சொந்தங்கொண்டாடப் பல ஏக்கர் நிலமிருந்தும் அந்தக் காற்பரப்பு நிலத்தில் ஏதோ புதையலைக் கண்டுவிட்டதைப் போல் பதறித் துடிக்கின்றான். 

தனது சொத்துரிமையை அதிகாரம் காட்டிப் பேசிக் கொள்ள இதுவரை வாய்ப்புக் கிடைத்தில்லை கிடைத்து விட்ட இந்த ஒரு வாய்ப்பை விட்டு விடுவாளா? 

கிடுகைப் பிய்த்தெறிந்த போது அவளது தலையில் மூட்டிக் கொண்டிருந்த நான் கோ ஐந்து முருங்கைக்காய்கள் அவளது கோபத்துக்குள்ளாக பிடித்திழுக்கிறாள். முருங்கைக்காய்கள் கொப்போடு முறிய வீசி எறிகிறாள். 

தலையைத் திருப்பி அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றவர்களை ஒரு முறை பாரக்கின்றாள் பலர் நிற்கின்றனர். அவளது சொத்துரிமை உணர்வுக்குப் புதிய பலம். 

“டேய்… சிங்கா…” வேலைக்காரனைக் கூப்பிடுகிறாள். அவளது உடல் நடுங்குகின்றது. வெறும் எலும்போடு ஒட்டியிருக்கும் அவனது சிவந்த தோலினூடாக புடைத்து நிற்கும் நரம்புக்கொடி தெரிகிறது. 

“என்னம்மா…” 

“வீட்டை போல்… காருக்கை கிடக்கின்ற பெற்றோல் தகரத்தையும்…. நெருப்புப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு வா…” 

ஒரு புறம் தனது வர்க்கத்தைச் சேர்ந்த பரிதாபத்துகரிய கத்திரீனாள் குடும்பம், மறுபுறம் முதலாளியம்மாவின் கட்டளை… 

”ஏன்ரா நிற்கிறாய்… போடா…” 

சிங்கன் போகின்றான் அவன் திரும்பி வரமாட்டானெண்டு எல்லோருக்கும் தெரியும். 

“எடி இவ்வளவு நேரம் பேசி. நானே களைச்சுப் போனன். வீட்டை விட்டு வெளியாலை போ… எண்டு நேரை சொல்லியும், உனக்கு ரோசமில்லையடி ரோசங் கெட்ட நாய்… வெளியாலை போடி…” 

கத்திரீனாளின் கண்களிலிருந்து வழியும் கண்ணீர் மட்டும் அவளது பேச்சுக்குப் பதிலாய்ச் சமைகிறது. 

காங்கேசன்துறைக் கடற்கரையில் வாழ்ந்து வந்த கத்திரீனாளும், அவளது மகளும் வாழ வழி தேடிப் புறப்பட்டு எங்கோவெல்லாம் அலைந்து கடைசியில் இங்கு வந்து திரேசாவின் அனுமதியோடு அவளது காணி ஒன்றில் ஒரு குடிசையை அமைத்துக் கொண்டனர். 

திரேசாளுக்குரிய நிலங்கள் பிரயோசனமற்றுக் கிடந்தாலும் வசதியாக நிலம் வந்தால் அதையும் வாங்கிவிடுவாள். பின்னேரங்களில் காலில் செருப்புடன் கையில் திறப்புக் கோர்வையுடன் வேலைக்காரன் சிங்கன் பின் தொடர தன் காணிகளைச் சுற்றிவலம் வருவதில் இவளுக்குப் பெரும் மனத்திருப்தி! இப்படிப் பிரயோசனமற்ற நிலத்தில் ஒரு பகுதிதான் கத்திரீனாளுக்கு வழங்கப்பட்டது! 

குடும்ப நிர்வாகமே திரேசாளின் கையில்த்தான். 

திரேசாளின் புருசனை நல்லவன் என்று கூறுவதைவிட வஞ்சகமில்லாதவன் என்று கூறுவதுதான் பொருத்தம்! 

நேற்றைய தினம் திரேசாளின் காணியில் அதாவது கத்திரீனாள் குடியிருக்கும் நிலப்பரப்பில் நிற்கும் தென்னை மரத்திலிருந்து விழுந்த ஒரு தேங்காயை திரேசாளின் அனுமதியின்றி எடுத்துவிட்டு. காலந்தாழ்த்தித் கூறியதால் வந்த விளைவுதான் இந்த நிலை! 

“என்னைக் கேளாமல் ஏனடி எடுத்தனி…” 

“ஒண்டு தானே அம்மா… பிறகு சொல்லுவமெண்டிட்டு…” 

”பிறகென்னடி சொல்லுறது…” 

“அம்மா… நான் களவு பண்ணிறதெண்டால் இப்ப இந்த விஷயத்தைச் சொல்லுவனா…” நான் சொன்னாப் பிறகு தானே உங்களுக்குத் தெரியும்… நான் செய்த பிழையை ஒத்துக் கொள்றன்… மன்னிச்சுக் கொள்ளுங்கோ…” 

“மன்னிப்பென்ன… மன்னிப்பு…” 

“ஒரு துண்டு நிலம் சொந்தமில்லை…” 

“கையிலை ஒரு சதம் காசில்லை…” 

“வெட்கம் ரோசமில்லை…” 

“நீங்கள் சொல்றதெல்லாம் நாங்கள் ஒப்புக் கொண்ட விஷயந்தானே… எங்களிட்டை ஒண்டுமில்லையெண்டு தானே இஞ்சை வந்தனாங்கள்…” 

“…நீங்கள் பிறந்த மண்ணிலைத்தான் நாங்களும் பிறந்தது… அந்த ஒரு உரிமை… அதுக்காகவாவது… எங்களை மன்னிச்சுக் கொள்ளுங்கோ… 

“என்ன என்னைப் பயப்புடுத்திறியா…?” 

“உங்களைப் பயன்படுத்த என்னாலை முடியுமா?” 

“எடி எனக்கு ஞாயம் வேண்டாம்… நீ இப்ப வெளிக்கிடப் போறியா இல்லையா…? …? திரேசாள் முடிவாகக் கேட்டு விட்டாள் திரேசாளின் மனதைக் கத்திரீனாளும் முடிவாகப் புரிந்து கொண்டு விட்டாள். 

கத்திரீனாள் சீலைத் தலப்பால் தன் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறாள். 

நாயால் துரத்தப்படும் முயல் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடிந்தவரை ஓடி… முடியாத நிலையில் திரும்பி நாயை எதிர்பார்ப்பது போல… 

“திரேசாள்… பத்துவரியத்துக்கு முன்னம்… காங்கேசன்துறைக் கடற்கரையில் எங்களோடை சேர்ந்து மீன்பொறுக்கிச் சீவிச்சதை மறந்திட்டியா?… நீயும் நானும் ஒரே இடத்திலை கிடந்த குப்பைகள்… திடீரென வந்த காத்திலை நீ கோபுரத்துக்குப் போட்டாய் நான் குப்பையாகவே கிடக்கிறன்… இப்ப நீ அந்தக் குப்பையைப் பார்த்துச் சிரிக்கிறாய்… நீ மறந்திருப்பாய்… நான் மறக்கயில்லை…” 

இவ்வளவு பேர் மத்தியில் இவள்: கத்திரீனாள் நாதியற்றவள்… இப்படிக் கூறிவிட்டாளே! 

“என்னடி சொல்றாய் … நாயே…?” திரேசாளால் அடக்க முடியவில்லை. 

“…நீ என்னை நாயெண்டு சொல்லு… ஏனென்னடால் நான் நாய் தான்… ஆனால் : நான் உன்னை நாயெண்டு சொல்லமாட்டான்… ஏனெண்டால் நாய் நன்றியுள்ளது…” போர்க்களத்தில் போராளியாகி விட்ட நினைப்போ, என்னவோ – பதிலுக்கு பதில் பேசுகிறாள். 

கத்திரீனாள் திரேசாளின் கடந்த கால வாழ்க்கையைச் சுட்டிக்காட்டிப் பேசியது பெருமுள்ளாய் அவளது உள்ளத்தில் குத்தி முறிகிறது… கண்ணகியாக இருந்தால் அக்கிராமத்தையே தீக்கிரையாக்கி தன் வடுவைப் போக்கியிருப்பாள். 

“திரேசாள்… என்னை மன்னிச்சிடு. இவ்வளவுக்கும் என்னைப் பேசத் தூண்டினது நீ தான்: ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கிறாய்… நீ ஏறியிட்டன் எண்டதற்காக கீழை உள்ளவையளைப் பார்த்துச் சிரிக்காதை… கண்ணாடி வீட்டிலை இருந்து கொண்டு கல்லெறி யாதை!.. நாங்கள் ஏழையள்: எங்களிட்டடை ஒண்டுமில்லை… அது தான் போகட்டு இந்தக் குமர்… அதுக்காகவாவது நீ இரங்கியிருக்கலாம்… பத்து வரியத்துக்கு முன்னாலை… உன்னை நினைச்சுப்பார்… இவளுக்கும் உனக்கும் வித்தியாசம் இருக்குமா…? 

நீயும் நாங்களும் கடற்கரையிலை தானே பிறந்து வளர்ந்தனாங்கள்… அந்தக் கடலிலை பேய்மாதிரி எத்தினை அலையள் வருகுது… அது கரையிலேயே மறைஞ்சு போகுது… இத்தனை பெரிய அலைகளையும் உள்ளடக்கிக் கொண்டு கடல் அதிையாகத்தான் இருக்கு… அந்தக்கடல் ஒரு நாளைக்கு கொந்தளிச்சால்… கட்டுப்படுத்த முடியுமா?… யோசிச்சுப்பார்… 

“டேய் சிங்கா… கொண்டு வாடா பெற்றோல் தகரத்தை…” திரேசாள் கத்தினாள் அவளது உடலெல்லாம் நடுங்குகிறது. கண்கள் சிவந்து விட்டன! 

பத்து வருடங்களுக்கு முன்பு: 

திரேசாளுக்கு பத்தொன்பது வயது: தகப்பன் காச நோயால் பீடிக்கப்பட்டு படுத்த படுகையாகி விட வயிற்றுக் கொடுமையால் தாயோடு சேரந்து இவளும் கடற்கரைக்கு மீன் தெரியப் போவாள். இரவில் கடற்றொழிலுக்குப் போபவர்கள் காலையில் கரை சேர்வார்கள். அவர்களால் கொண்டு வரப்படும் மீன்களைத் தெரிவு செய்து கொடுத்தால், உதவிக்காக சில மீன்கள் இனாமாகக் கொடுக்கப்படும். திரேசாளின் குடும்பத்தைப் பொறுத்து தொழில் என்று இதைத் தான் கூறலாம். 

திரேசாளை ‘அழகி’ எண்டு கூறிவிட முடியாது. ‘சுவத்தப் பொம்பிளை’ என்று நாக்கூசாமல் கூறிக் கொள்ளலாம். ‘சுவத்தப் பொம்பிளை’ எண்ட பேச்சு நாளாவட்டத்தில் ‘உணர்வுள்ள நாக்குகளின் கைங்கரியத்தால்…’ அவள் ‘அழகி’ ஆக்கப்பட்டு விட்டாள்! 

பிறகென்ன…! 

ஒரு பணக்கார வாலிபனுக்கு வாழ்க்கைப்பட்டாள் ! இனியும் இரவல் காணியில்’ இருக்கவும், மீன் தெரியவும் முடியுமா?… திருமணத்தோடு இங்கு நிரந்தரமாக வந்து விட்டாள். இங்கு பணக்காரி! 

“… பரம்பரையான இரவல் காணி வாழ்க்கை திரேசாளோடு முடிவடைகிறது…!” அன்று இப்படித் திரேசாளின் தகப்பன். திரேசாள் புருஷனோடு வீட்டைவிட்டுப் புறப்படும் நேரத்தில் கூறியது கத்திரீனாளின் மனதில் வைச்சிரம் போல் ஒட்டியிருந்தது. 

“கத்தி்ரீனாள்… நீ என்னைப் பார்த்துப் பொறாமைப்படுகிறாய்…” 

“… சீ உன்னைப் பார்த்து நான் பொறாமைப்பட்டிருந்தால்… உன்னைப் பற்றி எதையெதையோ சொல்லியிருப்பன்… பொறாமை எண்டது உன்னைப் போல பணக்காரருக்குத்தான் வரும் ஏனெண்டால் பிறரோடை ஒப்பிட்டுப்பார்க்கக் கொஞ்சமாவது கிடக்கு எங்களுக்குப் பொறாமைக்குணம் வராது ஏனெண்டால் ஒப்பிட்டுப்பாக்க எங்களிட்டை ஒண்டுமில்லை. 

கத்திரீனாள் நிதானமாகப் பேசுகிறாள். 

“நீ இப்பவே வெளிக்கிட்டிடவேணும்…”  திரேசாள் தன் முடிவைக் கூறுகிறாள். 

…இந்த வாழ்க்கை உனக்கு அருமையானது அருமையாக வாங்கின கத்தி எண்டதுக்காக தீட்டின மரத்திலை கூர் பாக்காதை… கொக்கரிக்காதை…! 

எங்களைப் போல வழியில்லாததுகளை காலுக்கை போட்டு மிதிக்க எண்ணாதை… உந்தச் செருப்பும் திறப்புக் கோர்வையும் நிரந்தரமானதில்லை… 

பழையதை மறக்காதை… 

கத்திரீனாளின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது. 

“நில்லடிவாறன்.” நடக்கின்ற வேகம்: செருப்பு குதிக்காலில் முட்டி மோதுகிறது திரேசாள் வீட்டை நோக்கி நடக்கின்றாள். 

வீட்டுக்குச் சென்றவள் பெற்றோல் தகரமும் நெருப்புப் பெட்டியும் கொண்டு வருகின்றாள். 

திரேசாள் பெற்றோலை ஊற்றி நெருப்பு வைக்கிறாள். கத்திரீனாளின் குடிசை சுவாலை விட்டெரிக்கின்றது. திரேசாளின் கண்களும் அக்கினி உருண்டைகளாகி கண் தசைக்குளிக்குள் புரள்கிறது. 

கத்தரீனாளும், மகளும் வாய்விட்டழுகின்றனர். 

”திரேசாள்… இந்தக் கைகளைப்பார்… இதுகள் மீன் பொறுக்கின கைகள்… குருவி கூடு கட்டிறது போது இந்தக்கையாலை கட்டின் கூட்டை… உந்தக்கையாலை அழிச்சிட்டாய்…உது துறப்புக்கோர்வை பிடிக்கிற கைகள்!…? 

…இந்தக் கைகளுக்கு வலிமை இல்லாமலில்லை… நாங்கள் விடுகிற கண்ணீர்… எண்டைக்கோ ஒரு நாளைக்குக் கொந்தளிக்கும்…?… 

கத்தரிரீனாள் அங்கிருந்து நடக்கின்றாள் மகள் செல்வம் அவளைப் பின் தொடருகிறாள். 

திரேசாள் நெடுமரமாய் நிற்கிறாள். 

– சிரித்திரன், மே 1974.

– மண்ணின் முனகல் (சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சகம், கொழும்பு.

கே.ஆர்.டேவிட் கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *