கண்ணி வைத்து…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 3, 2025
பார்வையிட்டோர்: 70 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நாளைக்கும் இதே நேரம் வருவோம். கொட்டியா (புலி) இருக்குமிடத்தைக் கூறாவிட்டால் உன் குடும்பம், இந்த ஊர் அத்தனையையும் பூண்டோடு அழித்து நிர்மூலமாக்கி விடுவோம்…” துப்பாக்கியும் கையுமாக வீட்டுக்குள் நுழைந்த ஏழெட்டு ராணுவத்தினரும் கடைசி எச்சரிக்கை புறப்படும்போது கூறிச் சென்ற புவனாவை நிலைகுலைய வைத்தது. 

மூன்றாவது நாளாக அவர்கள் பண்ணிய அத்தனை சித்ரவதைகளையும் பொறுத்துக் கொண்டு, மனங்கலங்காது, “என் கணவரைப் பார்த்து இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டது…” என்கின்ற ஒரே பதிலைத் தவிர வேறு எந்த வார்த்தைகளையும் அவள் கூறவில்லை. 

ராணுவத்தினர் அவளை நம்புவதாகயில்லை. கிளி நொச்சியில் ராணுவ ‘டிரக் குக்கு கண்ணி வெடி வைத்தது, குருநகர் ராணுவமுகாமைத் தாக்கியது என்பன போன்ற ராஜத்துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களில் அவன் முக்கியமானவன் எனச் சந்தேகித்தார்கள். 

“அதற்கான அத்தாட்சிகள் பலவற்றை உங்கள் ஆட்களே கொடுத்திருக்கிறார்கள்… கொடுத்தவர்கள் சாதாரணமானவர்களுமல்ல… அரசு அலுவலகங்களில் பெரிய பதவிகளை வகிப்பவர்கள்” எனச் சாதித்த ராணுவத்தினர் எப்படியாவது அவனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்து அரசிடம் ஒப்படைத்து விட்டால் அப்பகுதியில் தமிழ்ப் போராளிகளின் பாதி பலத்தையே நிர்மூலமாக்கிய பெருமை தங்களை வந்தடையும் என்ற நப்பாசையில் புவனாவின் உயிருக்கு எதுவும் தீங்கு விளைவிக்காமல் அவள் மூலமாக அவனுக்குக் கண்ணி வைத்துத் திரிந்தார்கள். 

இன்று அதன் கடைசிக் கட்டம். புவனாவால் எழுந்து உட்காரக்கூட முடியவில்லை. இடுப்புச்குக் கீழே ரணமாக வலித்தது. மெதுவாகப் புடவையைத் தூக்கிக் கால்களைப் பார்த்தாள். அப்படியே வரிவரி யாக இரத்தம் கொட்டி, கணுக்காலால் வடிந்து நிலத்தில் சிந்திக்கொண்டிருந்தது. அக்காயங்களைக் கைகளினால் தடவிவிட முயன்றாள். ஆனால் கைகளை அசைப்பதே ரண வேதனையாக இருந்தது. ராணுவ வீர னொருவன் இரண்டு கைகளையும் சேர்த்துப் பிடித்து முறுக்கியதில், கை நரம்புகள் அனைத்தும் விண் விண் ணென்று வலித்தன. 

இவ்வளவு சித்ரவதைகளையும் என்னால் எப்படித் தாங்க முடிந்தது…? அத்தகைய மன உறுதியை எனக்குள் நிறைத்தது எது? இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு கரப்பான் பூச்சி காலில் ஊர்ந்தால்கூட துள்ளிக் குதித்து ஆர்ப்பாட்டம் பண்ணும் அன்றைய புவனாவையும், உணர்வுகள் மங்கும் வரை சித்ரவதைப் பட்டும் ஏதோ னம்புரியாத வன்மத்துடன் கொள்கையில் தளராத புவனாவையும் அவளே ஒப்பிட்டுப் பார்த்து வியந்து போனாள். 

இதற்கு பாலுவின் மீது கொண்டுள்ள அன்பு மட்டும்தான் காரணமா இல்லை அதற்கெல்லாம் அப்பாற்பட்ட உணர்வு ஏதேனும் உண்டா? அவளுக்கே அது புரியாத புதிராக இருந்தது. 

பாலுவை அவளுக்குப் படிக்கும்பொழுதே நன்றாகத் தெரியும். மட்டக்களப்பில் வந்தாறுமுல்லை மத்திய கல்லூரியில் தான் இருவரும் படித்தார்கள். 

புவன பாலுவைவிட இரண்டொரு வகுப்புக் குறையவே படித்தாலும், அந்நாட்களில் கல்லூரிகளில் அவன் பெயருக்கு தனி மகிமையிருந்தது. கல்லூரிக் கலைவிழாக்கள், பட்டி மன்றங்கள், நாடக விழாக்கள் பேச்சுப் போட்டிகள் அனைத்திலும் பாலுவின் பெயா தான் முன்னணியில் நிற்கும். 

ஆனால் வகுப்பைப் பாதியில் நிறுத்தி கடைசிப் பரீட்சை எழுதாமல் கல்லுரிக்கு வருவதை அவன் நிறுத்திவிட்டதும்; சக மாணவர்கள் மத்தியில் அவனைப் பற்றிய பலவிதமான வதந்திகள் உலாவின. 

அவ்வதந்திகளை அவள் காதில் விழுத்தவில்லை. பின் னால் தனக்கும் பாலுவுக்கும் கல்யாணம் ஆகுமென்றோ, அவன்மீது கொண்டுள்ள அன்புக்காக எந்த அச்சுறுத்தலை யும் தான் தாங்கிக் கொள்ளும் வலிமை பெற்று விடலா மென்றோ அவள் எண்ணியதுமில்லை. 

அவளைத் தனியாகச் சந்தித்து, தன்னுடைய லட்சியம், அதனால் ஏற்படப்போகும் சிரமங்கள் அனைத்தையும் விளக்கக்கூறினான். “இவ்வளவையும் தாங்கிக் கொள்ளும் மன உறுதியும் தைரியமும் இருந்தால்தான் நீ என்னை மணக்க வேண்டும், ஒர் இளம் மனைவியின் ஆசைகள, எதிர்பார்பபுகள் அனைத்தையும் நிறைவேற்றக் கூடிய சூழ்நிலையில் நான் இருக்கமாட்டேன். அவற்றுக் கெல்லாம் ஈடுகொடுத்து உன்னால் சந்தோஷமாக வாழ முடியு மென்றால்தான் என்னைக் கணவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்று நீயெடுக்கும் முடிவுக்காகப் பின்னால் எப்பொழுதும் வருத்தப்படக்கூடாது.” புவனாவின் நாணம் படர்ந்த முகத்தினை ஆழமாக நோக்கியபடியே கூறினான் பாலு. 

ஆனால் பாலுவின் வார்த்தைகள் ஒன்றையும் அவள் காதில் வாங்கவில்லை. நெஞ்சில் அவன் மட்டுமே நிறைந் திருந்தான்; அவனது வெளிப்படையான பேச்சும், அஞ்சா நெஞ்சமும், கம்பீரமான தோற்றமும் அவளுக் குப் பிடித்துப்போய் விட்டது. 

“அப்படியொன்றும் வருத்தப்படமாட்டேன்” அவன் முகத்தைப் பார்த்தபடியே உறுதியளித்தாள். 

அந்த உறுதிமொழி இந்த மூன்று நாட்களும் நிதர்சனமாகிக் கொண்டிருந்தது. 

புவனாவின் முதுகில் துப்பாக்கி முனையொன்று அழுத் திக் கொண்டிருந்தது. கைகள் இரண்டையும் ராணுவ வீரனொருவன் முறுக்கிப் பிடித்திருந்தான். இன்னொருவன் இடுப்பு ‘பெல்ட்’டைக் கழட்டி கையில் வைத்துச் சுழற்றியபடி விசாரணை செய்து கொண்டிருந்தான். 

முழுமையாக உடலை மறைக்க வழியின்றித் துணிகள் அலங்கோலமாகப் பிய்ந்து தொங்கிய நிலையிலும் புவனா ஒரே பதிலையே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்தாள். “அவர் இருக்குமிடம் எனக்குத் தெரியாதுங்க.” 

ஆனால் ராணுவ வீரர்களோ விட்டுவிடுவதாக இல்லை. 

“உன் கணவன் இருக்குமிடத்தைக் கூறிவிடு. உன்னை யொன்றும் செய்யாமல் விட்டு விடுகிறோம். உன்னை விட்டுவிட்டு அவன் எங்கே போய்விடப் போகிறான்?” இப்படி எத்தனையோ போக்கிரித்தனமான ஆபாசமான கேள்விக்கணைகளால் அவளைத் துளைத்தனர். இடுப்பு பெல்டினால் அடித்துக் கேட்டனர். சிகரெட் லைட்டரால் மேனியில் சூடுபோட்டுப் பார்த்தனர். புவனா அசைய வில்லை. ஒரே பதில் “எனக்குத் தெரியாது.’ 

இன்று மூன்றாவது நாள். இன்றுதான் கடைசி எச்சரிக்கையென மிரட்டிவிட்டுச் சென்றிருந்தனர். 

“நாளைக்கு வரும்போது உன் கணவன் இருக்கு மிடத்தைக் கூறாவிட்டால் உனக்கு நடக்கப் போகும் கதையே வேறு” என ஏதேதோ வேண்டாத வார்த்தை களையெல்லாம் கொட்டிவிட்டுச் சென்றிருந்தார்கள். 

மீண்டும் அவர்கள் கையில் சிக்கி சித்ரவதைப் படு வதைவிட இறப்பதே மேல் நிமிடத்துக்கு ஒரு தடவை நினைத்துக் கொண்டிருந்தாள். புவனா இதனையே எத்தனையோ வகைகளில் தற்கொலை பண்ணிக் கொண்டு விடலாம். ஆனால் பாலு இதனையறியும்பொழுது நாலு பேர் மத்தியில் அவமானப்பட்டுவிட நேரிடுமோ? புவனா வால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. 

”அக்கா, சோறு கொண்டாந்திருக்கேன். சாப்பிடுங்கோ” ஈனஸ்வரத்தில் முனகியபடி படுத்திருந்த புவனாவின் தோள்களைத் தொட்டு எழுப்பினாள், ஏழெட்டு வீடுகள் தள்ளியிருக்கும் அவளது அத்தைப் பெண் சுமதி. அங்குதான் பானுவின் வயதான பெற்றோர்களை மறைத்து வைந்திருந்தாள். 

பொழுது சாய்ந்து, கருக்கிருட்டாகும் சமயத்தில் ராணு வத்தினரின் கண்காணிப்புக்குள் சிக்காமல் இந்த இரண்டு சாப்பாடு இந்தச் சிறுமிதான் மூன்று நாட்களாய் இந்தச் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் செல்வாள். 

சாப்பாட்டுத் தட்டைக் கழுவி புவனாவுக்குச் சாப் பாட்டைக் கொடுத்த சிறுமி; உணவு கொண்டு வந்த பையிலிருந்து இன்னொரு பார்சலையும் வெளியே எடுத்தாள். 

“என்னம்மா அது?”-புவனா ஆச்சரியத்தோடு கேட்டாள். 

‘ஸ்’ என்றபடி வாயில் விரலை வைத்து குரலை இறக்கிய சிறுமி, “அக்கா காலையிலே ஒரு அங்கிள் இதைக் கொண்டு வந்து யாருக்கும் தெரியாமல் உன்னிடம் கொடுக்கச் சொன்னார்” என்றாள் மெதுவான கிசு கிசுக்கும் குரலில், 

சாப்பாட்டைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு அப் பார்சலை வாங்கிய புவனா அதை உள்ளே எடுத்துச் சென்று பிரித்துப் பார்த்ததும் எதையோ உணர்ந்தவளாய் அதனை அலமாரியில் வைத்துப் பூட்டிவிட்டு இடுப்பில் சாவியைச் செருகியபடி மீண்டும் வந்தமர்ந்தாள். 

“நீயிதைக் கொண்டு வந்தது யாருக்கும் தெரியாதே? இனியும் எவருக்கும் சொல்லி விடாதே” 

“ம்ஹும்… நான் சொல்ல மாட்டேன். அந்த அங் கிள் ரொம்ப நல்ல அங்கிள். எனக்கு இரண்டு மிட்டாய் கூடக் கொடுத்தாரே” சட்டைப் ‘பாக்கெட்’டிலிருந்து ‘சாக்லெட்’ இரண்டை எடுத்துக்காட்டினாள் சிறுமி. 

சிறுமியை வீட்டுக்கனுப்பியதும், படுக்கையில் போய்ச் சரிந்தாள். மன உளைச்சல் சற்றுத் தணிந்து, ஏதோ ஒரு நிம்மதி அவளை அரவணைத்தது. 

காலையில் கண்விழித்த பொழுது; வெய்யில் முற்றத் தில் விழுந்தது. இவ்வளவு நேரமாகத் தூங்கினேனா? தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். கை, கால்களை மடக்கவோ, நீட்டவோ முடியவில்லை. உடல் முழுவதுமே ரணமாக வலித்தது. தத்தித்தத்திக் குளியலறைக்குச் சென் றாள். காப்பி போட்டுக் குடித்தாள். கொஞ்சம் தென்பு வந்தது. அலமாரியைத் திறந்து தான் வைத்த பார்சலை ஒருகணம் கண்குளிரப் பார்த்து நிம்மதியாக மூச்சு விட்டாள். பாலுவின் நினைவுகள் நெஞ்சைக் கவ்வின. அவளையுமறியாமல் கண்கள் பனித்தன. தன்னைச் சுதா ரித்துக் கொண்டு ‘ஹாலில்’ வந்து உட்கார்ந்தாள், 

நேரம் போய்க் கொண்டிருந்தது. சூழ்நிலையில் ஒரு மரணபயம் இருந்தது. அவளது வீட்டுக்கு ராணுவம் வரத்தொடங்கியதிலிருந்து அக்கம் பக்கத்திலுள்ளவர் கள் அந்த வீதியில் நடமாடுவதைக் குறைத்துக் கொண் டனர். வீட்டு ஜன்னல்களைக்கூடத் திறப்பதில்லை. சமையல், சாப்பாடு என வீட்டுக்குள்ளேயே சங்கமமா கியிருந்தார்கள். 

“அம்மா… போஸ்ட்”-யாரோ ஒரு இளைஞன் கேட் டடியில் ஒரு குரல் கொடுத்துவிட்டு ‘கேட்’டுக்கு மேலாக விசிறியடித்து விட்டுச் சென்ற கடிதத்தை சென்றெடுத்த புவனா, கவரின் மேலேயிருந்த கையெழுத்தைப் பார்த் ததும் ஆவலுடன் பிரித்தாள். 

பாலுவின் முத்து முத்தான எழுத்துக்கள். அவனையே நேரில்பார்ப்பது போன்ற பிரமையில் ஒரு கணம் தன்னை மறந்து நின்றவள், ஆவலுடன் படிக்க ஆரம்பித் தாள். 

கடிதத்தின் ஆரம்பத்திலேயே, எத்தனை எத்த னையோ சரித்திர புருஷர்களுக்குப் பின்னால் நின்றுழைத் தும், தியாகங்கள் புரிந்தும் வெளியுலகுக்குத் தெரியாமல் மறைந்துவிட்ட பல பெண்களைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டு; கடைசியில் “அந்தப் பெண்களின் வரிசையில் இடம் பெறும் தகுதி உனக்கும் உண்டு. நீ சந்தோஷமாகவும், தைரியமாகவும் இருக்கின்றாய் என்ற மன நிறைவில்தான் நான் தற்கொலைப் படையில் சேர்ந்திருக்கிறேன். இடுப்பில் குண்டுகளைக் கட்டிக் கொண்டு எதிரிகளைத் தாக்கும் பொழுது நான் அவர்களுடன் சேர்ந்தழிவதும் நிச்சயம். உனக்கு இதுபற்றியெல்லாம் தெரியும். 

நான் கேட்டுக் கொள்வதெல்லாம் இன்றோ நாளையோ என் உயிர் தாய்நாட்டு மண்ணுக்காக அர்ப் பணம் ஆகலாம். அதனை கேள்விப்படும்பொழுது நீ கோழைபோல் கண்ணீர் உகுக்காதே! தைரியமாய் சந்தோஷமாய் நான் நடந்து சென்ற அதே பாதையில் நடந்துசெல். உன்னால் முடிந்ததைச் செய். எவ்வளவோ சிரமத்துக்கு மத்தியில் இந்த நீண்ட கடிதத்தை எழுதி, உன்கையில் கிடைக்கத் தகுந்த வசதிகளைச் செய்து அனுப்பியிருக்கிறேன்.’ 

கடிதத்தை ஏழெட்டு தடவைகள் படித்தாள் புவனா 

“உன்னால் முடிந்ததைச் செய்; கோழையைப் போல கண்ணீர் உகுக்காதே! உன் சந்தோஷம் தான் என் தைரியம்…” அவனது கடிதத்திலுள்ள இவ்வார்த்தைகளே அவள் இதயத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன. 

தற்கொலை நினைப்பைத் தூக்கியெறிந்தாள். மனதைக் கல்லாக்கிக் கொண்டாள். பாலுவின் லட்சியம் தடைபடக்கூடா தெனில் நான் உயிருடன் இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி…? 

அவசியம் தேவையெனக் கருதிய சிலவற்றை எடுத்துக் கைப்பையில் திணித்துக் கொண்டாள். உள்ளே ஆட்கள் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த வீட்டின் ஜன்னல்களைத் திறந்து வைத்தாள். வானொலியை இயக்கினாள். 

உள்ளே வைத்திருந்த பார்சலையும் கையிலெடுத் தாள். இவ்வளவையும் செய்து முடிக்க அவளுக்கு ஏறக் குறைய ஒருமணித்தியாலத்துக்கும் மேலானது. 

அவள் வீட்டின் முன் பக்கம் மதிற் சுவர். பின்பக்கம் பூராவும் கிடுகினால் அடைத்த வேலிதான். பின்பக்க வேலியில் நான்கு கதியால்களை வெட்டி… பொந்துவைத்து வெளியே வந்தவள், சேலைத்தலைப்பைத் தலையில் முக்கா டாகப் போட்டுக் கொண்டு விடு விடென நடந்தாள். 

சரியாக மாலை 4மணிக்கு புவனாவின் வீட்டு வாசலில் ‘ஜீப்’ வந்து நின்றது. வழக்கமாக வரும் ராணுவ வீரர் களுடன் இன்று இரண்டு உயர் அதிகாரிகளும் வந்திறங் கினர். இன்றைக்கும் இந்தப் பெண் உண்மையைக் கூற வில்லையெனில் இவளை வெளியே உயிருடன் விட்டு வைப்பதில் பிரயோசனமில்லை. அவளைச் சித்ரவதைப் படுத்தினால் அவன் தானாக வந்து வலையில் விழுவான் என்ற நம்பிக்கைப் போய் விட்டது. 

‘சட்’டென்று ஒரு ராணுவ வீரன் கையை வைத்ததும் முன் கதவு திறந்து கொண்டது. அதிகாரிகளுக்குப் பின் னால் ராணுவ வீரர்கள் அனைவரும் ஹாலுக்குள் நுழைந் தனர். யாரையும் காணவில்லை. படுக்கையறையில் ரேடியோ பாடியது. உள்ளே எதுவோ சர சரப்பது போல் ஒரு பிரமை. 

‘…கானிட்ட வச வடிவெலா காம்பட்ட அறங்கிலா துன்னத்…” 

‘பெண்ணுக்குத் திமிர் கூடிப்போச்சு. முகாமுக்கு இழுத்துச் சென்று கொடுக்கிறபடி கொடுத்தால்’ அதிகாரி சிங்களத்தில் உறுமியபடியே படுக்கையறைக் கதவைக் காலால் உதைத்தார். 

‘டமார்’ ஊரே அதிரும் வண்ணம் பேரொலி ஒன்றெழுந்தது. 

புவனாவின் வீடு நகர்ந்து சிதறியது. தூரத்தே பூவரச மரத்தினடியில் தன்னை மறைத்துக் கொண்டு நகர்ந்த புவனா திரும்பிப் பார்த்தாள். 

தன் வீட்டின் மேலே கரும்புகை எழும்புவது தெரிந் தது. புவனா நிம்மதியாக நடந்தாள். 

– அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1985, தேனருவி வெளியீடு, சென்னை.

அக்கினி வளையம் அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் - ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை  தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் 'தேவி' இதழ் 'கண்ணீர்க் கதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக!  அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்!  இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *