கண்ணாம்பூச்சி பிள்ளையார்





இரண்டு தெருவுக்கும் சேர்த்து ஒரே கோயிலாக கட்டி விடுவதென , முக்கியமான ஆட்கள் ஒன்று கூடி இரண்டு தெருவுக்கும் கடைசியில் நடுவில் லாரி போகும் அளவுக்கு பாதை விட்டு தள்ளியிருந்த காலி மனையை வாங்கி கோயில் கட்டுவதாக, ஒரு மனதாக முடிவுக்கு வந்தனர். செவ்வாய் வெள்ளி கோயிலுக்கு போக வேண்டுமென்றால் ,இரண்டு கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் சுபமங்களா திருமணமண்டப வாசலில் இருக்கும் சிறிய பிள்ளையார் கோவிலுக்கோ , மூன்று கிலோமீட்டர் தள்ளி புதுக்கோட்டை செல்லும் பாதையில் , மேலவஸ்தாத் சாவடியிலுள்ள காளிக் கோயிலுக்கோ போக வேண்டும். . இரண்டு தெருவிலும் , வாகனம் வைத்துள்ள கணவன்மார்களுக்கும், வாகனம் ஓட்டத் தெரிந்த மகள், மகன்களுக்கும் சற்று தொல்லை , கூட்டிக் கொண்டு போய் சாமிகும்பிட்ட பிறகு அழைத்து கொண்டு வீடுவர வேண்டும். சில நேரங்களில் தவிர்க்க முடியாத வேலை பளுவால் வர முடியாமல் , போக முடியாமல் போனாலோ அதையே சொல்லி வெறுப்பேற்றுவார்கள். இந்த பிரச்சனைக்காகவும், தெரு மக்களை ஒன்று சேர்க்கவும் கோயில் கட்டுவதென்ற முடிவை அனைவரும் ஏற்றனர்.
தலைக்கு ஒரு சாமி பேரைச் சொல்லி இவருக்கு கட்டுங்கள், அவருக்கு கட்டுங்கள் என்ற கூச்சலுக்கு , பெரியவர் என்பது வயதை நெருங்கும் பிச்சை முத்துவின் கை தூக்கல் அனைவரையும் அமைதிக்கு கொண்டு வந்தது.
கொஞ்சம் பெரிசா பிள்ளையார் கோயில் கட்டுவோம், அங்க எல்லா சாமி பண்டிகையும் கொண்டாடுவோம் ,அவரு பொதுவானவரு
மேற்கொண்டு யாரிடமும் எந்தவித முனுமுனுப்பும் இல்லை. ஒரு வாரத்திற்குள்ளாக வரைபடத்தை வரைந்து உறுதி செய்து , நகராட்சியில் அனுமதிக்கு விண்ணப்பிப்பதாக அனைவரும் ஒத்துக் கொண்டனர். பல்வேறு கவனிப்புகளால் விரைந்து வந்து பார்த்து ,
நகராட்சியில் விண்ணப்பத்தை ஏற்று கோயில் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்ததும். வார இறுதியில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஞாயிறு கூட்டத்தில் கோயில் கட்ட மொத்த செலவை முன்வைத்து குடும்பத்திற்கு இவ்வளவு என நிர்ணயித்தும். பாக்கி தொகைக்கு ஊருக்குள் பொதுமக்களிடமும் , முக்கியமான புள்ளிகளிடமும் வசூல் நடத்தலாம் எனவும் முடிவு செய்தனர். அதற்கு முன்பாக ஒரு வேலை செய்ய வேண்டும் அதை பிச்சை முத்து அறிவிப்பார் என குழுவின் செயலர் சொன்னார்.
இப்ப மொதல்ல செய்ய வேண்டியது ஒரு புள்ளையார் செல வேணும், . நம்ம ஊர் வழக்கம் ஒன்னு இருக்கு,
அதுவும் திருட்டு புள்ளையார் தான் வேணும், காலம் காலமாக செய்யும் மொற , நாலு திசையிலும் ஆள அனுப்புவோம் பார்த்துட்டு வரட்டும் பெறவு முடிவு செஞ்சிக்குவோம் என்றார். கூட்டத்தில் சிறு சலசலப்பு எழுந்தது இளைஞர்கள் சிலர் அது எப்படி திருட்டு புள்ளையார் தான் வக்கனுமா கும்பகோணத்துல சொன்னா செஞ்சி தரப்போறாங்க அத வச்சி கோயில கட்டலாம் என்றனர்
பெரியவங்க ஏதோ ஒரு காரணத்தால தான் அப்படி செஞ்சாங்க, நாங்களும் பல தடவை செஞ்சிருக்கோம். நீங்க வேணும்னா நல்ல வயசான அய்யர பாத்து கேட்டுக்குங்க என்றார் பிச்சை முத்து. ஒரு வழியாக சலசலப்பு ஓய்ந்து அடுத்த வாரத்திற்குள்ளாக ,நல்ல தெளிவான சிலையாக பார்த்துவைத்துக் கொள்ள, பன்னிரண்டு நபர்கள் கொண்ட குழு அமைத்து ஒரு குழுவிற்கு மூன்று பேர் , அதில் மூத்தவர் ஒருவர் என பிரித்துக் கொண்டு பயணிக்க உத்தரவும் வழிச் செலவுக்கு பணமும் அளித்தனர். வேலை தேடும் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், குழுதலைவராக நாற்பது வயதான விவரமானவரை தன்னார்வலராக இணைத்து தேட ஆரம்பித்தனர்.
பக்கத்தில் பல ஊர்கள், நகரங்கள் பயணித்தும் ஒன்றும் அமையவில்லை. நன்னிலம் பக்கம் சென்ற குழுவிற்கு மட்டும் ஒரு சிறிய கிராமத்தில் நல்ல கவனிப்பில், அழகும், உறுதியும் உள்ள பிள்ளையார் குளக்கரையில் திறந்த வெளியில் கூரையின்றி இருப்பதை கவனித்து , அப்பகுதியை அலசி, ஆராய்ந்து , கண்காணித்து கடத்த திட்டமும் தயார் செய்தனர். நான்கு நாட்களுக்கு பிறகு பிள்ளையார் சிலையை கடத்த தகுந்த நபர்களோடு புறப்பட்டு சென்றனர்.
கிராமத்திற்கு சென்று சேர்ந்தது நள்ளிரவு ஒரு மணிக்கு. அவ்விடத்தை பார்த்ததும் அதிர்ந்தனர் . பிள்ளையார் சிலை இருந்த பீடத்தை சுற்றிலும் கூட்டமாக இருந்ததை கவனித்ததும், உஷாராளர்கள். வந்த சுவடு தெரியாமல் திரும்பினர் . காலையில் ஒருவர் மட்டும் வந்து பார்த்து தகவலை சொல்ல வேண்டுமென முடிவு செய்தனர்.
பிள்ளையார் சிலை திருட்டு போய்டிச்சாம். அவங்களும் அதை திருடித்தான் கொண்டு வந்து வச்சாங்களாம் என்றார்.
பிரபல ஐயரை அழைத்து மேற்கொண்டு மாறுதலாக செய்யலாமா என்ற போது.
செய்யலாம். புதிதாக சிலை செய்து ஒரு மண்டலம், கோயில் கட்டும் வரைக்கும் தெனம் பூசை செய்யனும் அப்றம் கருவறையில வச்சிக்கலாம். என்றார். தெருவினர் கூடி முடிவெடுத்து புதிதாக சிலை செய்து வாங்கி நாள் தவறாமல் பூசை செய்து வந்தனர், ஒரு புறம் கோயில் கட்டும் பணியும் தீவரமாக நடைபெற்றது. ஒரு அமாவாசை இரவில் புதிய பிள்ளையார் சிலை எப்படியோ திருடுபோனது. இப்படித்தான் நம்ம தெரு கோயிலுக்கு பேரு வந்திச்சி என்றார் பிச்சைமுத்து.
![]() |
பெயர் - வி.கலியபெருமாள். வயது - 53 புனைப்பெயர் - கலித்தேவன். ஊர் - சொந்த ஊர் தஞ்சாவூர். இப்போதும் தஞ்சை வாசி Cell No- 6383481360 படிப்பு - ITI ELECTRICIAN , D.EEE ELECTRICIAL தொழில் - மோட்டார் ரீவைண்டிங், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் வேலைகள். பிறப்பு, திருமணம், குழந்தைகள். 1971 ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி பிறந்தேன்.. தந்தை விராசாமி தாய் அகிலாண்டேஸ்வரி மூன்றாம் வகுப்பு…மேலும் படிக்க... |