கடலும் கரையும்
(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காவிரிப்பூம் பட்டினத்தின் விசாலமான கடற் கரையில், ஆனந்தமான நிலவு பொழிகிற அமுத வேளையில், ஒளி வீசுகிற வெள்ளி மணற் பரப்பில் சந்திர மித்திரனும் பாநுமதியும் சந்தித்தார்கள்- ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு. எதிர்ப்பாராத விதமாக!
இதற்கு முன்பு எத்தனையோ முறை அதே கடற் கரையில் அதே பூரண நிலவில் அவர்கள் இருவரும். சந்தித்ததுண்டு. ஆனால் அதெல்லாம் முன் கூட்டியே பேசி வைத்து, ஒருவரை ஒருவர் எதிர் பார்த்துச் சந்தித்தது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அது! இப்பொழுதோ?
இப்பொழுது – இத்தனை நாட்களுக்குப் பின்பு மீண்டும் இப்படி ஒரு சந்திப்பு ஏற்படும் என்பதைப் பாநுமதி எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. சந்திர மித்திரன்தான் எண்ணியதுண்டா? இல்லை.
நிலவின் ஒளி வெள்ளமும் கடலின் அலை வெள்ளமும் ஒன்றை யொன்று அணைகிற இன்பப் பௌர்ணமி அது.
சந்திர மித்திரன் இந்த ஐம்பது ஆண்டுகளுக் கிடையில் சோழவள நாட்டின் எல்லை கண்ட இட மெல்லாம் எங்கெங்கோ சுற்றித் திரிந்து விட்டான். மனித குலத்தின் வாழ்வுப் போராட்டங்களை யெல் லாம் கண்டு கண்டு சலித்துப்போய், அதிலிருந்து உய்யும் வழியை உலக மாந்தருக்கு உபதேசிப்பதி லேயே இதுவரை தனது நாட்களைக் கழித்து விட் டான் அவன்! இன்றைக்கு அந்தச் சமணத் துறவி சம்பாபதிக் கடற்கரையில் தன்னுடைய இளமையின் இன்ப நிகழ்ச்சிகளுக் கெல்லாம் நிலைக்களனாக இருந்த கடலின் கரையில் பௌர்ணமி நிலவில் ஒரு முறை நடந்து செல்லலாம் என்று நினைத்தே இந்தத் தள்ளாத வயதிலும் நெடுந்தூரத்திலிருந்து இரண்டு வாரமாக நடந்து நடந்து வந்திருக்கிறான்.
பாநுமதியோ எல்லை வாயிற் கோட்டத்தில் புத்த தேவனுடைய பாத கமலங்களில் அர்ப்பணம் செய்து விட்ட தனது வாழ்வின் இந்த அந்தி வேளையில் உடல் என்ற கூட்டிலிருந்து உயிர்ப்பறவை பறந்து செல்லச் சிறகடித்து நிற்கும் இந்த முதுமைப்பருவத் தில், பழைய சந்திப்புகளின் அரங்கமாக அமைந்த கடற்கரையில் ஒருமுறை பௌர்ணமி நிலவைப் பார்த்து விடுவோமே என்று கருதித்தான் தவச் சாலையிலிருந்து வெளியே வந்தாள். இந்தச் சந்திப்பை எதிர்பார்க்கவே யில்லை!
பாநுமதியின் கண்களில் மரணத்தின் ரேகை கீற்றுவிட ஆரம்பத்திருந்தது என்றாலும், உள்ளத்தில் துறவு வேரூன்றி இருந்த காரணத்தால் மரண பயமோ பதற்றமோ அந்த விழிகளில் காணப்பட வில்லை. ஆனால் அதைப் பற்றிய நிச்சயம் இருந்தது. அவள் நினைத்தாள்: “இந்தப் பௌர்ணமி கழிந்து விட்டால் இனி அடுத்த பௌர்ணமிக்கு இப் பூவுலகில் இருப்போம் என்பது என்ன உறுதி? மரணம் நம்மை ஆட்கொண்டு விட்டால் பிறகு காவிரிப்பூம் பட்டினத்தையும் இந்தக் கடற்கரை யையும் மறுபடி பார்ப்பது எங்கே? புத்த தேவனைச் சரண் புகுந்த அந்த வினாடியே ‘பஞ்ச கந்தமும்’ அகன்று பிறப்பு என்னும் வேதனையை வென்றாய் விட்டது. என்றாலும் அப்படியே ஒருவேளை மீண் டும் பிறக்க நேரிட்டாலும் இந்தக் காவிரிப்பூம் பட்டி னத்திலேதான் பிறப்போம் என்று என்ன நிச்சயம்? அப்படியேதான் பிறந்தாலும் அந்த இளமை நினைவுகள் எல்லாம் மனத்தில் நிற்கவா செய்யும்? அடடா! மறக்க முடிகிற நினைவுகளா அவை!”
உலகப் பற்றை வேரோடு களைந்து எறிந்து விட்ட அந்தத் தூய உள்ளத்திலும்கூட, இந்த ஐம்பது ஆண்டுத் தவத்தின் இடையிலும் அந்த நினைவுகள் அலை அலையாகப் பொங்குவதை அவளால் தடுக்க முடியவில்லை. ஆனால் அவை வெள்ளமாகப் பெருகிக் கரையை உடைத்து வந்து துறவு நிலையை மூழ்கடிக்காமல் மட்டும் காப்பாற்ற முடிந்தது அவளால்!
சம்பாபதிக் கடலின் அலைகளைப் போலப் பொங்கிவந்து சரிந்து சரிந்து எல்லைக்கு உள்ளேயே மீண்டுவிடுகிற அந்த நினைவுகளை மிதித்துக் கொண்டு மேலே நடப்பவள் போல, அலைகள் தவழும் மணற் பரப்பிலே நடந்தாள் பாநுமதி. அப்பொழுதுதான் சந்திர மித்திரன் எதிர்ப்பட்டான்!
“நீங்களா! ஆச்சரியமாக இருக்கிறதே!” என்று திகைத்தாள் பாநுமதி.
“நீ இங்கு வந்ததும் எனக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. இந்த நள்ளிரவில் தவச் சாலையி லிருந்து எப்படி வெளியே வந்தாய்?”
பாநுமதி பதில் பேசவில்லை. திகைப்பிலிருந்து மீண்டு வர அவளுக்கு நேரம் ஆயிற்று.
“நீங்கள் என்னை எதிர்பார்த்தே இருக்கமாட்டீர்கள், இல்லையா?” என்று பாநுமதி கேட்டபோது மீண்டும் திகைப்பே ஒலித்தது வார்த்தைகளில்.
சந்திர மித்திரன் சொன்னான்: “இல்லை. எதிர் பார்க்கவில்லை. ஆனால் மனசின் ஆழத்தில் எங்கோ ஒரு கோடியில் ஒரு சிறு எண்ணம், ஒரு விவரிக்க முடியாத ஆசை, ‘இந்த இரவில் இந்த நிலவில் அழகான இந்தக் கடற்கரையில் பாநுமதியும் ஒருவேளை வந்தால்…’ – என்று நினைத்துப் பார்த்தேன்… என்ன ஆச்சரியம்! நீ நிற்கிறாய்!”
“வாஸ்தவமாகவா! உண்மையிலேயே நீங்கள் அப்படி நினைத்தீர்களா? என்ன விந்தை! நானும் ஒரு க்ஷணம் அந்த மாதிரியே நினைத்தேன். ஆனால் அது நிறைவேறும் என்று எதிர்பார்க்கவே இல்லை!”
“பாநு! இந்தக் கடலுக்கு அலைகள் இருப்பது போல, மனித உள்ளத்துக்கும் நினைவின் அலைகள் உண்டு என்று ஞானிகள் சொல்கிறார்கள் அல்லவா! அது உண்மையானால், அப்படி நினைவு அலைகள் என்று இருக்குமானால், அவை போய்ச் சேர்ந்து சரிகிற கரை எது தெரியுமோ? பாசத்தினால் பிணிக்கப் பட்ட மற்றொரு உள்ளந்தான். இந்த இதயத்தில் புறப்படுகிற அலைகள் அந்த இதயத்திலே போய்த்தான் மோதி விழுகின்றன!” என்றான் சந்திர மித்திரன்.
மேகத்திட்டு ஒன்றைத் தாவிக்கொண்டே நிலவுக் கரங்களைக் கொட்டியவண்ணம் வான வெளியிலே குதித்தான் ஒளிச்செல்வன். அந்தப் பிரகாசத்தில், சந்திர மித்திரன் நின்று பேசுவதைக் கேட்டுக் கொண்டே அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள் பாநுமதி. தன்னைப்போல அவனுக்கும் துறவுக் கோலம். காஷாய உடை. உடம்பின் ஆதிக்கத்தை வென்று நின்ற அந்தப் பிரும்மச்சரியம், கண்களில் தீக்கங்கு போலக் கனன்று கொண்டிருந்தது. முகத்தில் எல்லையற்ற சாந்தமும், அந்த சாந்தத்திலிருந்து ஒளிபரப்பும் தேஜசும் நிலவுபோலக் குளுமை செய்தன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வாலிபத்தின் மிடுக்கு, இளமை பொங்கும் அந்தத் துடிப்பு – அதெல்லாம் எங்கே?
“இந்த ஐம்பது வருஷத்தில் எவ்வளவு மாறிப் போயிருக்கிறீர்கள் நீங்கள்!” என்றாள் பாநுமதி.
சந்திர மித்திரன் சொன்னான்: “நீ மட்டும் மாறாமலா இருக்கிறாய்! நிலவு வீசுகிற முகம் என்று சொல்வேனே. அப்படிப்பட்ட உன்னுடைய முகத்தில் கடுந்தவமும் இதயத்தின் வரட்சியும் சேர்ந்து எவ்வளவு பெரிய மாறுதலைச் செய்துவிட்டன தெரியுமா! இதிலும் ஒரு அற்புதமான சோபை இருக்கவே செய்கிறது. ஆனால் இது வேறு விதம். இது தெய்விகம்!”
2
அகத்திய முனிவரின் கட்டளைக்கு இணங்கச் சோழ நாட்டில் தூங்கெயில் எறிந்த தொடித் தோட் செம்பியன் என்ற அரசன் ஆரம்பித்த இந்திர விழா அவனுக்குப் பின்னரும் ஆண்டுதோறும் காவிரிப்பூம் பட்டினத்தில் சிறப்பாக நடந்து வந்த காலம் அது. இந்த ஆண்டில் நெடுமுடிக் கிள்ளி இந்திர விழாவுக்கு உரிய நியமங்கள் அனைத்தும் இம்மியும் வழு வாமல் இருபத்து எட்டு நாட்கள் நடைபெற வேண்டும் என்று முரசு அறைவித்திருந்தான். எனவே கோலாகலமான களிப்புக்களோடு நாடக மகளிர் அனைவரும் கடற்கரையிலே ஒருமித்தனர். ஆனால் அந்தப் பெண் மான்களின் மத்தியில் மாதவியும் அவளுடைய பொன்மான் மணிமேகலையும் காணப் படவில்லை!
மதுரை மாநகரில் கோவலன் கொலை செய்யப் பட்டான் என்று கேட்டதும் மாதவி இந்த உலக வாழ்வையே வெறுத்தவளாகித் துறவு தாங்கி, பௌத்த சங்கம் சார்ந்து, அறவண அடிகளிடம் ‘நால்வகை வாய்மையும் ஐவகைச் சீலமும்’ கேட்டுத் தெளிவடைந்து, அந்தத் தர்மத்தையே மேற்கொண்டு விட்டாள். அவளுடைய மகள் மணிமேகலையும் அதே வண்ணம் அதே தூய தவநெறியில் தலைப்பட்டாள். இந்திர விழாவில் இவர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை. இது நாடக மகளிரிடையே ஒரு பெரும் பரபரப்பை உண்டாக்கியிருந்தது!
இந்தச் சந்தர்ப்பத்திலேதான் அந்தி நேரத்தில் நாகமாலை என்ற நாடகத்தாய் மிக வேகமாகக் கடற் கரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது மணி மேகலையைப் பார்த்துவிட்டாள். அதுதான் ஊழ் வினையாக முடிந்தது!
நாகமாலையின் மகள் பாநுமதி, சந்திரமித்திரன் என்ற பாணனோடு யாழும் கையுமாக ஏற்கனவே கடற்கரைக்குச் சென்றிருந்தாள். அவர்களைத் தொடர்ந்து வயோதிகப் பருவத்தின் தள்ளாமையை யும் மீறி வேகமாக நடந்துகொண்டிருந்தாள் நாக மாலை. வழியில் மணிமேகலை தனது மேனி முழுதும் காஷாயம் போர்த்துக் கையிலே பூமாலையுடன் அறச்சாலை நோக்கிச் செல்வதைப் பிரத்யக்ஷமாய்க் கண்டதும் அவள் திடுக்கிட்டாள். இளம் மேனியின் அழகை யெல்லாம் தவம் என்ற மகத்தான நெருப் பில் பொசுக்குவதற்கு ஒரு தாய், அதுவும் மாதவி போன்ற அபார எழில் படைத்த ஒரு தாய், எப்படி மனம் துணிந்தாள் என்று தனக்குள்ளேயே எண்ண மிட்டாள் நாகமாலை.அவளுடைய தாயுள்ளத்துக்கு உண்மையாகவே அது ஒப்பவில்லை. இந்தத் திகைப் பிலும் அனுதாபத்திலும் நாகமாலையின் நடை தளர்ந்தது. நின்றுவிட்டாள். இதை மணிமேகலை கவனித்தாள்.
“என்னம்மா, இந்தத் தள்ளாத வயதையுங் கூடத் தள்ளிக்கொண்டு வேகமாக இந்திர விழாவுக்கு நடந்துபோனவள், என்னைப் பார்த்ததும் இப்படித் தளர்ந்துவிட்டாயே?” என்று கேட்டாள் மணிமேகலை.
“ஒன்றுமில்லை. பெற்ற மனசுக்கு இப்படி ஒரு துணிச்சல் எப்படி வந்தது என்று நினைத்தேன். இந்த அழகான இளம் மேனியைத் தீயிலே கொண்டு போய்த் தள்ளிவிட்டாளே உன்னைப் பெற்ற தாய்-”
நாகமாலையின் குரலில் மனப்பூர்வமான அனு தாபம் இருந்தது. மணிமேகலைக்கு மாதவி ஒரு பெரிய கொடுமை இழைத்துவிட்டாள் என்றே அவள் எண்ணினாள். மணிமேகலையோ இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சிரித்தாள்.
“ஏனம்மா சிரிக்கிறாய்?” என்று நாகமாலை கேட்டாள். அவளுக்கு அந்தச் சிரிப்பு ஒரு பெரும் புதிராக இருந்தது.
“இளம் மேனியை நெருப்பிலே, நரகக் கொடுந் தீயிலே கொண்டு தள்ளுவது, என்னுடைய தாயா அல்லது பாநுமதியின் தாயாகிய நீங்களா? நிம்மதியாக இருந்து யோசித்துப் பாருங்கள்!” என்று சொல்லிவிட்டு மேலே நடக்க ஆரம்பித்த மணிமேகலை, நாகமலையின் சூதில்லாத திகைப்பைக் கண்டு மறுபடியும் சொல்லுவாள்: “அம்மா, தான் பட்ட வேதனையை மகளுக்கும் வழங்குவது கொடுமையா, அந்த வேதனையிலிருந்து மகளைக் காப்பாற்றுவது கொடுமையா? என்னுடைய அன்னை என்னைத் தவம் என்ற கனலில் ஸ்புடம் செய்து மாற்றுக் கொடுக்க முயற்சிக்கிறாள். அவளா கொடுமைக் காரி! இல்லை. சிந்தித்துப் பார்த்தால், கொடுமைக்காரி நீங்கள் தான். உங்களோடு சேர்ந்த ஆயிரக் கணக்கான பாநுமதிகளின் தாய்மார்கள் அனைவரும் கொடுமைக்காரிகள் தாம்!”
நாகமாலையின் மனத்துக்கு இந்தத் தத்துவம் அந்த நேரத்தில் பிடிபடவில்லை. அவள் சொன்னாள்: “ஆனாலும் மாதவிக்குத் தானும் ஒரு காலத்தில் இளமையாக இருந்த நினைப்பே இல்லாமல்தான் போய்விட்டது!”
”இல்லை! அந்த நினைவு மனசில் இன்னும் அப்படியே பூரணமாக இருப்பதினால்தான் என்னைக் காப்பாற்றத் துணிந்தாள். அதுதான் அறிவோடு கூடிய அன்பு!”
நாகமாலை பதில் பேசவில்லை. நிதானித்தாள். மணிமேகலை மேலும் சொல்வாள் :
“அம்மா! உலகம் என்பது ஒரு துன்பக் கேணி. இன்பம் என்று எண்ணி இறங்கி ஏமாந்த உள்ளம் அதைத் துன்பம் என்று கண்ட பின்புங்கூட ஒப்புக் கொள்ள மறுக்கிறது. கூசுகிறது. வாழையடி வாழையாக அந்தத் துன்பத்தை வழங்கிக்கொண்டே போகிறது. இதுதான் மயக்கம். இதை வெல்லக் கூடிய ஒரு தாய் அபூர்வமானவள்தான். அவளைக் கொடுமைக்காரி என்றுதான் உலகம் சொல்லும். ஏனென்றால் கொடுமைக்காரிகளான தாயார்கள் தான் இவ்வுலகில் அதிகம் – உங்களைப்போல!”
இவ்வாறு சொல்லிவிட்டு விறுவிறு என்று மறைந்தாள் மணிமேகலை.
நாகமாலைக்கு ஒன்றும் ஓடவில்லை. அந்த இடத்திலேயே கிறங்கிப்போய் நின்றாள். புத்தி குழம்பியது.
“நீங்கள் கொடுமைக்காரி. உங்களோடு சேர்ந்த ஆயிரக்கணக்கான பாநுமதிகளின் தாய்மார்கள் அத்தனை பேரும் கொடுமைக்காரிகள்” என்று மணிமேகலை சொன்ன வார்த்தைகள் நாகமாலையின் மனத்தில் இப்பொழுது உறுத்த ஆரம்பித்தன. அவளுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தது. பாவம்! அது அவளை வேதனைப் படுத்தத் தொடங்கிவிட் டது! கடற்கரையை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தவள் இப்பொழுது மறுபக்கம் திரும்பி வீடு நோக்கி விரைந்தாள்!
அன்று இந்திர விழாவுக்குப் போகாதவர்கள் மாதவியும் மணிமேகலையும் மட்டுந்தானா? இல்லை, நாகமாலையுங் கூடத்தான்!
3
பாநுமதி அன்றிரவு மூன்று ஜாமத்துக்குப் பிறகுதான் வீடு திரும்பினாள். உள்ளே வந்தபோது தன்னுடைய அருமைத் தாய் சால்வையை இழுத்து மூடிக்கொண்டு படுத்திருந்ததைப் பார்த்தாள்.
“என்னம்மா உடம்பு உனக்கு?” என்று கேட்டாள் பாநுமதி.
“இன்று சாயந்திரத்திலிருந்து ஒருமாதிரியாக இருக்கிறது” என்றாள் நாகமாலை.
“அதனால் தான் கடற்கரைக்கு நீ வரவில்லையோ”
“வந்தேன். மருவூர்ப் பாக்கத்தோடு நடந்த போதுதான் உடம்புக்கு இன்னும் அதிகமாகி விட்டது.”
“இந்த வயதில் கடற்காற்று உடம்புக்குப் பிடிக்க வில்லை” என்றாள் பாநுமதி.
நாகமாலை சிரித்தாள்.
“ஏனம்மா சிரிக்கிறாய்?” என்று பாநுமதி திகைப்போடு கேட்டாள்.
“ஒன்றுமில்லை. உன்னிடத்தில் எனக்கு எவ்வளவு பிரியம் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தேன். சிரிப்புத்தான் வந்தது” என்று சொன்னாள் அவள்.
“இதென்ன விசித்திர நினைப்பாக இருக்கிறது!”
“விசித்திரம்தான். நீயே சொல்லேன். உன்னிடத்தில் எனக்கு எவ்வளவு பிரியம் இருக்கிறது!”
பாநுமதி பதில் சொல்லவில்லை. இத்தனை நாளும் இல்லாத இந்த நூதனக் கேள்வி அவளுக்குத் திகைப்பையே கொடுத்தது.
“சொல்லம்மா. நான் ஒரு கொடுமைக்காரி என்றுதான் எனக்குப் படுகிறது. நீ சொல்; உன்னிடம் எனக்கு எத்தனை பிரியம் இருக்கிறது என்று”.
“என்ன கேள்வி இது! இந்தச் சம்பாபதிக் கடலில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? அது போலத்தான் உன் கேள்வியும். அந்தக் கடலுக்கும் உன்னுடைய அன்புக்கும் எல்லை ஏது?”
நாகமாலை எழுந்து உட்கார்ந்தாள்.
“இல்லை. யோசித்துப் பார்த்தால் நான் கொடுமைக்காரி தான். நான் உன்னைத் துன்பப் பெரும் நரகத்திலேதான் தள்ளுகிறேன். தடுக்க வேண்டியவளே ஊக்கம் ஊட்டுகிறேன்! ஆமாம்!”
நாகமாலை இப்படிச் சொன்ன போது அந்த வார்த்தைகள் ஏதோ ஒரு ஜன்னியின் பேச்சுப் போல இருந்தன. பாநுமதிக்கு உடம்பு பதறியது.
“அம்மா! என்னென்னவோ பிதற்றலாகப் பேசுகிறாயே. பயமாக இருக்கிறதே எனக்கு. சந்திர மித்திரனைக் கூப்பிட்டு விடட்டுமா?” என்று ஆதங்கத்தோடு கேட்டாள் அவள்.
“சந்திரனையா! அவனும் இப்பொழுது வருவானா இங்கே?” என்று கேட்டுக் கொண்டே கட்டிலில் சாய்ந்தாள் நாகமாலை.
4
மறுநாள் காலை நாகமாலை கண் விழித்தபோது ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாக மகள் பாநுமதியைக் கூப்பிட்டாள்.
”பாநு! என்னுடைய உடம்பு சரியாகி நான் எழுந்திருக்க வேண்டும் என்றால் நீ எனக்கு ஒரு நீ வாக்குறுதி தரவேண்டும். இல்லையென்றால் நான் மடிந்தாலும் அது நிம்மதியான மரணமாக இராது!” என்றாள் நாகமாலை.
”அம்மா, என்னிடம் வாக்குறுதிகூடக் கேட்க வேண்டுமா! நீ சொல்லி நான் செய்யாதது எது உண்டு?”
”அது சரி. ஆனாலும் இப்பொழுது வாக்குறுதி வேண்டும்” என்று பதறினாள் தாய்.
“ஆகட்டும். வாக்குறுதி கொடுக்கிறேன்” என்று சொல்லியவாறு தாயின் அருகிலே அந்தக் கட்டிலில் உட்கார்ந்தாள் பாநுமதி.
நாகமாலையின் குரல் கம்மிற்று. சிரமப்பட்டுத் தன்னுடைய உடம்பிலிருந்த பலம் அனைத்தையும் ஒருமிக்கிறவளைப் போல ஒருதரம் குரலைச் சரிப் படுத்திக்கொண்டு சொன்னாள்: “பாநு! இன்றி லிருந்து நீ சந்திரமித்திரனை மறந்துவிட வேண்டும்!”
அவ்வளவுதான்! பாநுமதி கட்டிலில் இருந்து துடித்துக்கொண்டு எழுந்தாள்.
“என்ன சொல்லுகிறாய் அம்மா?” – அதற்கு மேல் பாநுமதிக்கு வார்த்தை வரவில்லை. அப்படியே தரையில் தடால் என்று உட்கார்ந்தாள். தாயின் கால்களில் தலையைச் சாய்த்தவாறு அவளுடைய இரு பாதங்களையும் கைகளில் பற்றிக்கொண்டாள். கண்ணீர் பொலபொலவென்று உதிர்ந்த வண்ணமாக இருந்தது.
“பாநு! இனி நாம் இருவரும் புத்த தேவனுக்கு அடிமைகள். உன்னை நான் அறவண அடிகளின் தவச்சாலையில் சேர்க்கத் தீர்மானித்துவிட்டேன்!”
பௌர்ணமி நிலவிலே கடல் அலைகள் கொந் தளிப்பதைக் கண்டு களித்துள்ள பாநுமதியின் இளம் உள்ளத்தில், இப்பொழுது வேதனையின் அலைகள் ஆவேசத்தோடு கொந்தளித்தன.
“அம்மா! நீயா இந்த வார்த்தை சொல்கிறாய்! அந்தக் கொடுமைக்கார மாதவியா ! உன்னுடைய மனசுமா கல்லாகிவிட்டது!”
பாநுமதி தேம்பித் தேம்பி அழுதாள். நாகமாலை அளவு கடந்த பரிவுடன் மகளை வாரி அணைத்துக் கொண்டு சொன்னாள் :
“கண்ணே, ஈரமற்ற மனம் என்று நாம் நினைக்கிற மனந்தான் அன்புக் கடலாக இருக்கிறது. நேற்று வரை கரையற்ற கடல் என்று நினைத்த என் மனம் மூட இருளில் மூடிக் கிடந்த கல்லாய், பாறையாகத்தான் இருந்தது!”
பெற்ற அன்னையிடமிருந்து வந்த இந்த வார்த்தைகள் பாநுமதியின் செவிகளைத் துளைத் தன. ஆனாலும் அவளால் வேறு என்ன சொல்லக் கூடும்?
“அம்மா, அப்படியானால் நிச்சயம் அவரை மறக்கும்படியேதான் சொல்கிறாயா என்னை?” என்று கேட்டாள்.
தன் பார்வையை மறுபக்கம் திருப்பிக்கொண்டு “ஆமாம்” என்று உறுதியோடு சொன்னாள் பாநுமதியின் அருமை அன்னை நாகமாலை.
5
“என்ன பேசாமல் நிற்கிறாய்?” என்று கேட்டான் சந்திரமித்திரன்.
“நீங்கள் மட்டும்? நீங்கள் ஏன் பேசாமல் நிற்கிறீர்கள்?” என்று கேட்டாள் பாநுமதி.
”அந்தப் பழைய சம்பவங்களை யெல்லாம் அப்படியே ஒரு ஓட்டம் மனத்தில் ஓடவிட்டேன்.”
“நானுந்தான்- நினைவுகளின் சுழற்சிதானே வாழ்க்கையும் அதன் சம்பவங்களும்!” என்றாள் பாநுமதி.
தவச்சாலையிலிருந்து வைகறை மணியின் நாதம் காற்றிலே வந்தது. அந்த மணியோசை நினைவின் அலைகளிலே மிதந்து சென்ற உள்ளங்களைப் பிடித் துக்கொணர்ந்து, கரையிலே சேர்த்தது.
“அப்படியானால் நான் புறப்படட்டுமா?” என்று பாநுமதி சொல்லி முடிப்பதற்கு முன்பு சந்திர மித்திரனும் கைகூப்பியவாறு மறுபக்கம் திரும்பிச் செல்லச் சித்தமாயிருந்தான்.
ஓயாமல் அலை புரளும் கடலுக்கு மேலே நிலவு நலிந்துவிட்டது. கரையில் தெற்கும் வடக்குமாக இருவரும் பிரிந்தனர். சற்றே நடந்தனர். உடனே சொல்லி வைத்தாற்போல், ஏதோ நினைப்பில், இரு வரும் ஒரே சமயம் திரும்பிப் பார்த்தனர்.
“என்ன திரும்புகிறாய்?” என்று கேட்டான் சந்திரமித்திரன்.
“நீங்கள் ஏன் திரும்பிப் பார்த்தீர்கள்?” என்றாள் பாநுமதி.
“அன்பு என்பது அவ்வளவு கடினமான பாசக் கயிறாக இருக்கிறது” என்று வார்த்தைகளைத் தேர் இழுப்பது போல உள்ளத்திலிருந்து இழுத்தான் சந்திரமித்திரன்.
இருவரும் மீண்டும் பழைய இடத்திற்கே திரும்பி நடந்து வந்தனர்.
“உடல் என்ற ஸ்தூலம் அற்றுவிடுமானால், உள்ளம் என்ற உலகில் அன்பு என்னும் தூய உறவுக்குப் பாபம் ஏது? களங்கம் ஏது?” என்று கேட்டான் சந்திரமித்திரன்.
“இல்லைதான். ஆனாலும் பாசம் என்பது எப் பொழுதுமே….”
“இல்லை. புத்ததேவனிடத்து நாம் செலுத்தும் அன்பையும் பாசம் என்ற பொருளிலே சேர்த்துவிட முடியுமா? அந்த அன்பு, அந்தப் பாசம், வேறு தானே? அதுபோல மனித உள்ளங்களுக்கு மத்தி யிலும் தெய்விக அன்பு என்று ஒன்று இருக்கிற தல்லவா?” என்றான் அவன்.
கிழக்கில் வானம் வெண்மை அடைந்து தெளிந்து வந்தது. சூரிய உதயத்தை வரவேற்ப தற்காகக் கடலின் அலைகள் பக்தி சிரத்தையுடன் தலை தாழ்த்தி ஆயத்தமாகிக்கொண்டு வந்தன.
“புத்த தேவனுடைய சரண கமலங்களை அடைகிற உள்ளங்கள் அனைத்துமே ஸ்தூலப் பிடிப்பிலிருந்து விடுபட்டு, கலந்து நிறைந்து ஏகோபித்து ஐக்கியமே ஆகின்றன. அதுதானே மகா சங்கமம்!” என்று சொல்லியவாறு இருவரும் ஒருமித்து நடந்தார்கள்.
மனித உள்ளத்தின் ஆசாபாசச் சுழல்களைப் போல அந்தநீலக் கருங்கடல் அதனுடைய கரையின் வட்டத்துக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தது. சந்திரமித்திரனும் பாநுமதியும் அந்தக் குமைவை – யெல்லாம் கடந்து கரையின் மேட்டிலே ஏறித் தவச் சாலையை நோக்கி ஒருமித்து நடந்தார்கள்!
– கேளாத கானம் முதலிய கதைகள், முதற் பதிப்பு: பெப்ருவரி 1955, பாரி நிலையம், சென்னை.
![]() |
மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க... |