கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 16, 2024
பார்வையிட்டோர்: 1,615 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வேலைபார்த்த ஒருவனுக்கு உடனே கூலி கொடாமல் வேலை வாங்கிக்கொள்பவனோ, அல்லது ஒரு பொருளை வாங்கிக்கொள்பவனோ கடனாளியாகின்றான்; வேலை செய் பவனோ அல்லது பொருளைக் கொடுப்பவனோ கடன் கொடுத்தவனாகின்றான். 

வாணிபத் துறையில் மக்கள் அவரவர் நலங்கோரி ஒருவர்க்கொருவர் கடனாளிகளாவது இன்றியமையாத தாக நேரிடுகின்றது. இல்லறத் துறையிலும் மக்கள் சில வேளைகளில் ஒருவர்க்கொருவர் கடன் கொடுப்பதோ, வாங்குவதோ இன்றியமையாததாகின்றது. 

கடன் கொடுப்பவன் ஓர் இடையூறுமின்றிக் கடன் ‘கொடுக்கக் கூடியபோதும், கடன் படுபவன் அக்கட னைக் குறித்த காலம் தவறாமல் திருப்பிக்கொடுக்க வல்லவ னாக இருக்கும்போதும், கடன் கொடுப்பதும் வாங்குவதும் இருதிறத்தாருக்கும் நலனே. 

ஆனால் வாங்கிய கடனை எக்காலத்தும் திருப்பிக் கொடுக்கச் சிறிதும் முடியாத நிலைமையில் இருப்பவன் ஒரு வன், எவனிடத்தும் கடன் வாங்குவது மிகத் தவறே. இவ்வாறு செய்பவன் இன்னொருவன் பொருளைத் தனது தனி நன்மைக்கென்றே பயன்படுத்துபவ னாகின்றான். இவன் பிறர் உழைப்பினால் தான் பிழைப்பவனாகின்றான். உண்மையாகவே கொள்ளையினும் மிக இழிவான கொள்ளையாகின்றது. 

உண்மையாளன் தனக்கு இன்றியமையா தபோதுங் கூடக் கடனை இறுக்க முற்றும் வல்லமையுடையனாகின் போதுதான் கடன் வாங்குவான். அவன் வாங்கிய கடனை எப்போதும் மறவான். எதிர்பாராவண்ணம் கடன் இறுக்க ஏதாவதோர் இடையூறு நேரின், அதனால் இவன் வருந்தி ஒரு காசுங் குறையாமல் அக்கடன் இறுக்கும் வரையில் தன்னாலான முயற்சிகளெல்லாஞ் செய்யத் தவறான். 

1. ஒரு ஜெர்மனிச் சிற்றரசன் 

நூறாண்டுகட்கு முன் ஜெர்மனி நாட்டில் ஜியார்ஜ் லூயி என் னும் ஒரு சிற்றரசனிருந்தான்; அவன் எக்காரணத்தினாலோ ஒரு பெருங் கடனாளியாய்விட்டான். அவன் பண்டாரத்திலும் பண மில்லை. குடிகள் மீது புதுவரிபோட்டு அக்கடனை எளிதில் தீர்த்து விடலாமென்று உடனாளிகள் அவனுக்குச் சூழ்ச்சி கூறினர். மனச் சான்றில்லாத ஒரு மன்னன் இவ்வாறே செய்ய முற்பட்டிருப் பான். ஆனால் ச்சிற்றரசனோ அவ்வாறு செய்ய மனமொவ்வாதவனானான். ஏனெனில் அக்கடன் குடிகளால் ஏற்பட்டதன். றென்று உணர்ந்தான். அதனால் அதனைத் தீர்க்க அவர்கள்மீது புது வரிகளைச் சுமத்த இசையாதவனானான். 

அவன் நீள நினைந்து அரண்மனைக் காவற்காரர்கள், வண்டி, குதிரைகள், வேலைக்காரர்கள், மெய்க்காப்பாளர் முதலியதளவாடங்களை அறவே யொழித்துத் தன்னந்தனியே ஜெனீவா நகர் சென்று, பொதுமக்கள் வாழ்க்கை நடத்திக்கொண் அதனால் மிகுதியாகுந் தொகையை அவ்வப்போது கடனுக்குச் செலுத்திவருமாறு அரசிய லுடனாளிகளிடம் ஏற்பாடு செய்து வைத்தான். சில நாட்களிலேயே அக்கடன் முழுதுங் கழிந்து போயிற்று. பிறகு சிற்றரசன் தன்னகர் திரும்பி முன்போல அரச வாழ்க்கை வாழ்ந்துவந்தான். 

தம் சிற்றரசனுடைய இச் சிறந்த நடவடிக்கை கண்டு குடி மக்களெல்லாம் அவரிடம் அன்புபூண்டு உயர்வாழ்க்கையில் அமர்த்தித் தங்கள் மன்னனை உலகம் மெச்சச் செய்தனர். 

2. நெறிதவறாக் கடனாளி டென்ஹாம் 

வாணிகர் முதலியார் சிலகாலத்தில் பெருங் கடன்பட்டு முழுக் கடனையும் இறுக்க முடியாதவர்களாகின்றார்கள். எனினும், உண்மையுள்ள கடனாளிகள் கடன்களின் அளவுக்குத் தக்கவாறு தங்கள் இருப்பை விகிதப்படி பங்கிட்டுக்கொடுத்து கடன்கொடுத் தவர்கள் மனநிறைவடையும்படி செய்கின்றார்கள். இஃதேயன்றி மனச் சான்றுடைய கடனாளிகள் அரசியற் சட்டப்படி மிகுதிக் கடன் கொடுக்கக் கட்டுப்பட்டவர்கள் அல்லராயினும் கடன் முழுதுங் கொடுபட்டாலன்றி மனநிறைவு அடையமாட்டார்கள். இத்தகையோர் பலவழிகளிலும் முயன்று, பொருள் சேர்த்து முன் கொடுபடாமல் விட்டுப்போன கடன் தொகைகளை முற்றுங் கொடுத்து மேன்மை பெறுகின்றனர். 

டென்காம் என்பவர் பிரிஸ்ட்டல் நகரத்துப் பெரு வணிகர். இவர் பற்பல செல்வர்களிடத்துக் கடன் வாங்கியிருந்தார். வாணிபத்துறையிற் பலவகை இடையூறுகள் ஏற்பட்டு அக்கடன் களைக் கொடுக்க முடியாதவரானார். ஆகவே, அவர் தம் கையி லிருந்த பொருளை, விகிதப்படி அவரவர்களுக்குக் கொடுத்து விட்டுக் கடன் விடுதலைபெற்று அமெரிக்கா சென்றார். ஆங்கு அவர் தமது விடாமுயற்சியின் பயனால் சில்லாண்டுக ளேயே பெருஞ் செல்வரானார். பிறகு அவர் பிரிஸ்டல் நகர் திரும்பி முன் கடன் கொடுத்த செல்வர்களுக்கெல்லாம் ஒரு விருந்தளித்தார். விருந்தேயன்றி வேறெதனையும் எதிர்பாராத அச்செல்வர்கள் வியப்படையும்படி தமக்குச் சேரவேண்டிய மிகுதித் தொகைக்கு வட்டியுடன் ஒவ்வோர் உண்டியல், தட்டுமூடி களுக்குள் இருக்கக்கண்டு டென்ஹாமின் நெறிதவறா இயல்பினை மெய்ச்சி மகிழ்ந்து அவரிடம் விடைபெற்றுச் சென்றனர். 

3. வெல்லெஸ்லிப் பெருந்தகையார் 

வெல்லெஸ்லிப் பெருந்தகையாரின் தந்தையார் பல்லாயிரக் கணக்கான பவுன் குடும்பக் கடனாக வைத்துவிட்டு விண்ணடைச் தார். அரசியல் சட்டத்திரிபு நுணுக்கத்தால் அக்கடனுக்கு வெல்லெஸ்லி பொறுப்பாளியாகவில்லை. ஆயினும் அவர் மனச் சான்றுக் குட்பட்டு அக்கடன் கொடுபடாதவரையிற் குடும்பச் சொத்தின் பயனைத் துய்க்க மனங்கொள்ளாதவரானார். அவர் மிக்க சிக்கன வாழ்க்கை நடத்திக் கடன் கொடுபடத் தக்க தொகை மிச்சப்படுத்திக் கடன் கொடுத்த முதலாளிகள் ஒவ்வொருவருக்கும் ஒருகாசும் விடாமல் கடன் தீர்த்துக்கொண்டு வந்தார். 

ஒருநாள் ஒருவன் வெல்லெஸ்லி தந்தையார் நூற்றைம்பது பவுனுக்கு எழுதிக்கொடுத்த ஒரு பத்திரத்தை இவரிடம் கொடுத்துத் தொகையைத் தரும்படி கேட்டான். இவர் அப்பத்திரத்தைத் தேர்வு செய்து, அஃது அவனுக்கு முழுதும் உரியதன்றென்றும், பவுன் ஐம்பது கடனுக்காகவே ஓர் ஏழைக் கிழவனால் இவனுக்குச் சாட்டப்பட்டதென்றும் கண்டுகொண்டார். ஆகவே, அவனுக்குச் சேரவேண்டிய தொகையை வட்டியுடன் கொடுத்துவிட்டுப் பத்திரத்தைத் தாம் வாங்கி வைத்துக்கொண்டார். பிறகு அவர் அக்கிழவனைக் கண்டுபிடித்து அவனுக்குப் பத்திரத்தின் முழுத் தொகையையும் வட்டியுடன் கொடுத்துவிட்டார். 

இவ்வாறு கடன் முழுதும் கொடுபட்டபிறகே வெல்லெஸ்லிப் பெருந்தகையார் தந்தை சொத்தைத் தமதாக்கிக்கொண்டார். 

க. எவனுக்கும் கடன்பட்டிராதே; அன்புள்ளவனாயிரு.  -பவுல் உபதேசியார். 

உ. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. -வள்ளுவர். 

௩. ஆன முதலில் அதிகஞ் செலவானால் மானமழிந்து மதிகெட்டுப் – போனதிசை யெல்லார்க்குங் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. -ஒளவையார். 

– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.

சேலை_சகதேவ_முதலியார் சேலை சகதேவ முதலியார் (1874 - ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *