ஒற்றுமையும் இனிக்கும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2023
பார்வையிட்டோர்: 1,971 
 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விடைபெற்றுக் கொண்டிருந்த நித்திராதேவியை வலுக்கட்டாயமாய் பிடித்திழுத்து வைத்துக் கொண்டு தூங்கிப் பார்த்தது கரடி.

கரிய இருளில் தனித்து நிற்கும் இயற்கைக் கன்னி, காட்டுக்கன்னி, கரடி – வேறு அரவம் இல்லை.

காட்டு மல்லிகை மணத்தைச் சுமந்து வந்த காற்று முகத்தில் ஸ்பரிசித்ததும் கண்ணைத் திறந்து கொண்டது.

தனது கால்களை நீட்டி நக்கிக் கொண்டது.

மிகவும் கட்டையான கால்கள். “இந்தக் கால்கள் மட்டும் நீட்டாக இருந்தால்.. நான் காடு முழுவதும் ஓடித்திரிந்து எத்தனை தேன் கூடுகளை கண்டு பிடித்துவிடுவேன். சே.. சே..”

என்று தனக்குள் கூறிக் கொண்டு மெதுவாக எழுந்து.. அந்த வட அமெரிக்கக் காட்டில் ஒரு எல்லைப் புற மரத்தின் கீழ் குந்திக் கொண்டது.

“நண்பன் வருவான்” என்ற நம்பிக்கை அதன் முகத்தில் தெரிந்தது.

விடிகாலைப் பொழுதிற் காட்டிற் பறந்து திரிந்து தேன் கூடு ஒன்றைக் கண்டு கொண்ட தேன் வழிகாட்டிக் குருவி, கரடி காவல் இருந்த இடத்தை அடைந்தது.

தானே தேன் கூட்டைக் கலைத்து நூற்றுக் கணக்கான தேனீக்கள் கொட்டும் பெருந்தாக்கு தலைப் புத்திசாலித்தனமாகத் தவிர்த்துக் கொண்ட குருவி கரடியை காட்டுக்கு அழைத்துச் சென்றது.

சிறு குருவிதான். ஆனால் பெரியமூளை!

குருவி காட்டிய பாதையில் நேரே சென்ற கரடி, தேன் கூட்டைத் தாக்கி அழித்து வயிறு முட்டத் தேன் குடித்தது.

தேன் என்றால் கரடிக்கு “கெடு” அதனுடைய தடித்த தோலும்மயிரும் தேனீக்கள் கொட்டுதலைத் தாங்கிக் கொள்ளும்.

இவ்வளவு நடக்கும் வரை பொறுமையாக காத்திருந் தது குருவி. எல்லாம் முடிந்த பின்னர்,

கூட்டிலிருந்து கீழே விழுந்த தேனிக் குடம்பிகளை ஆசை தீரத் தின்று முடித்தது குருவி.

“என் அருமை நண்பா, என் சிறிய நண்பா., நாளைக்கும் வருவாயா என்னிடம்?” என்று கேட்டது கரடி.

“நிச்சயமாய்! எப்போதும் நான் உன்னிடம் வருவேன். நாங்கள் என்ன மனிதர்களா? சுயநல எண்ணம் கொண்டு பிரிந்து போக..?” என்று கேட்டுச் சிரித்தபடியே “வீசுக்” கென்று பறந்து போனது குருவி. வட அமெரிக்கக் காட்டில் ஒரு காலை மடிந்தது.

– விஞ்ஞானக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 2000, கலை இலக்கியக் களம் தெல்லிப்பழை, ஸ்ரீலங்கா.

GokilaMahendran கோகிலா மகேந்திரன் (நவம்பர் 17, 1950 ,தெல்லிப்பளை, விழிசிட்டி, இலங்கை) ஈழத்து எழுத்தாளர். கலைத் திறானாய்வாளர், நாடகக் கலைஞர், சமூகசிந்தனையாளர், உளவள ஆலோசகர். இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனம், நாடகம்.. என பன்முகப் பரிணாமம் கொண்ட பல விடயங்களை எழுதியுள்ள பன்முகக் கலைஞர். இவரின் எழுத்துக்கள் இலங்கையின் புகழ் பெற்ற பத்திரிகைகளில் எல்லாம் இடம் பிடித்திருக்கின்றன. இவரின் தந்தை செல்லையா சிவசுப்பிரமணியம் சமய எழுத்துக்காக சாகித்திய விருது…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *