ஒரு வாத்துக் குஞ்சின் அவலம்

எங்கள் அண்டை வீட்டினர் எங்கிருந்தோ சுமார் ஒரு மாத வயதுடைய இரு வாத்துக் குஞ்சுகளை வாங்கி வந்து வளர்த்துக்கொண்டிருந்தனர். அது தவறான தெரிவு, தவறான ஆசை. ஏனெனில், வாத்துகள் நீர் நிலை விரும்பிகள்; சேற்றுயிரிகளைத் தின்று வாழ்பவை. ஆனால், இது வறண்ட கிராமம். நாங்கள் ஊருக்கு முக்கால் கி.மீ. தள்ளி காட்டுப்பாங்கான பகுதியில் வசித்துக்கொண்டிருந்தோம். அருகில் வாத்துகள் நீந்துவதற்கு ஏற்ப ஆறோ, குளம் – குட்டையோ இல்லை. அவை சேற்று இரைகள் பிடித்துத் தின்ன இங்கே நெல் வயல்களும் கிடையாது. சுற்றி இருப்பவை முழுதும் புன்செய் விளை நிலங்கள்.
வாத்துக் குஞ்சு வளர்ப்பு வீட்டினர், அவற்றுக்கு ஒரு தண்ணீர்த் தொட்டியேனும் ஏற்பாடு செய்யவில்லை.
ஒரு வாத்துக் குஞ்சை, மொசலடிப் பெராந்து (முயல் அடிக்கும் பருந்து) எனப்படும் சிறிய வகைப் பருந்து தூக்கிச் சென்றுவிட்டது. இன்னொரு குஞ்சு ஒற்றையாக வளர்ந்து கொண்டிருந்தது. அது தன்னந்தனியாக மேய்வதைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும்.
அண்டை வீட்டினர் கோழிகள் வளர்த்துவதில்லை. ஆனால், எங்கள் வீட்டிலும் எதிர் வசமாக சற்றுத் தள்ளி அமைந்துள்ள ஒரு விவசாயக் குடும்பத்திலும் கோழிகள் வளர்த்தப்படுகின்றன. இதில் ஓரிரு பெட்டைக் கோழிகள் தங்கள் குஞ்சுகளோடு இருந்தன. அவை சுற்றுப்புறங்களில் குப்பைகளையும், கரையான்களையும் கிளறி, தமது குஞ்சுகளுக்கு இரையெடுக்க உதவிக்கொண்டும், அவற்றைக் காகங்கள், கழுகுகள் தூக்கிச் சென்றுவிடாதபடி போர்க்குணத்தோடு காவல் காத்தபடியும் இருக்கும்.
எங்களின் செவலைக் கோழி அப்போது இன்னும் சிறகுகள் முளைக்காத ஏழு குஞ்சுகளுடன் இருந்தது. அண்டை வீட்டு ஒற்றை வாத்துக் குஞ்சு, அந்த கோழிக் குஞ்சு உடன்பிறப்புக் கூட்டங்களைப் பார்த்து மகிழ்ச்சியோடு, “ஹாய்… குட்டிப் பசங்களா…! க்வாக் – க்வாக்…!” என்றபடி நட்புறவு நாடி வந்தது.
கோழிக் குஞ்சுகளும் க்வீச் – க்வீச் என உவகையோடு வரவேற்று, “ஏய்,.. இங்க பாரு ஒரு குட்டி அண்ணா வந்திருக்கறான்!” என ஆவலோடு அதைச் சூழ்ந்துகொண்டன.
“அண்ணா,… உன் பேரு என்ன?”, “உனக்கு மம்மி – டாடி இல்லையா?”, “உன் மூக்கு ஏண்ணா இப்படி பெருஸ்ஸ்ஸா… சப்பையா இருக்கு?”, “நீ ஏன் பம்ஸை ஆட்டி ஆட்டி நடக்கற?” என மழலைக் கீச்சில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கேள்விகள் கேட்டன.
ஆனால், தாய்க் கோழிக்கு இந்த உறவாடல் பிடிக்கவில்லை. அது வேகமாக அருகே வந்து, “கொக் – கொக்! அந்தப் பயலோட பேசவோ, சகவாசம் வெச்சுக்கவோ கூடாது. அவன் வேற ஜாதி! வாங்க எல்லாரும் இந்தப் பக்கம்!” என தன் குஞ்சுகளை அதட்டி, “போடா அனாதைப் பயலே…!” என வாத்துக் குஞ்சை விரட்டியது.
அப்போது கோடை காலம். வெக்கை அதிகமாக இருந்த ஒரு நாளின் பிற்பகலில் திடீரென தூறல் போட்டது. ஓரிரு நிமிடங்கள் பெய்து ஓய்ந்தும்விட்டது. பெய்த தூறல், மண் உறிஞ்சவே போதவில்லை. பிறகு எங்கே நீர் ஓடவும், தேங்கவும் செய்யும்? அப்படி இருந்தும், எங்கள் மண் வாசலில் ட்ரம் மூடி அளவுள்ள சிறு குழிவில், விரற்கடை ஆழத்தில் செந்நீர் தேங்கியிருந்தது. வாத்துக் குஞ்சு அதைக் கண்டதும் ஆலாப் பறந்தபடி ஓடி வந்து, அந்த விரற்கடையளவு நீர்த் தேக்கத்தில் அமர்ந்துகொண்டு, க்வாக் க்வாக் என உற்சாகமாகக் கத்தியபடி சிறகடித்தது.
அதற்கு உள்ளூர இருக்கிற நீந்தும் ஆசையையும், அதன் நிராசையையும் வெளிப்படுத்திய இந்தக் காட்சி, என் மனதில் கனத்த வலியையும் பரிதாப உணர்வையும் உண்டாக்கியது.
மழை வலுத்துப் பெய்தால் குழிவான இடங்களில் நீர் தேங்கி நிற்கும். அது அந்த வாத்துக் குஞ்சுக்கு ஓரளவேனும் ஆறுதல் அளிக்கக் கூடிய அளவில் இருக்கும். மழையே,… அந்த வாத்துக் குஞ்சுக்காக மீண்டும் சற்று கனமழையாகப் பெய் என எண்ணியபடி வானத்தை அண்ணாந்தேன். ஆனால், அதற்குள் வானம் வெளிறி,
பளீரென வெயில் அடித்தது. மழை பெய்ததற்கான சுவடோ, இனி பெய்யும் என்பதற்கான அறிகுறியோ வானில் இல்லை. மேகங்களே இன்றி நிர்மலமான நீலவெளியாக வெறிச்சோடிக் கிடந்தது.
வாசல் குழிவில் தேங்கியிருந்த நீரும், இத்தனை மாதங்களாக வெயிலில் காய்ந்து வறண்டிருந்த, வேட்கை தீராத மண்ணால் உறிஞ்சப்பட்டுவிட்டது.
வாத்துக் குஞ்சு ஏமாற்றத்தோடு எழுந்து அப்பால் சென்றது.
அந்த அபலை வாத்துக் குஞ்சு, விரற்கடையளவு மழை நீரில் அமர்ந்துகொண்டு, நீந்த இயலாமல் சிறகடித்து மகிழ்ந்துகொண்டிருந்த காட்சி, என் மனதை விட்டு அகலவே இல்லை.
சில நாட்களிலேயே கழுகு அந்த ஒற்றை வாத்துக் குஞ்சையும் தூக்கிச் சென்றுவிட்டது. பக்கத்து வீட்டுப் பெண்மணி அது குறித்து என் அம்மாவிடம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள். அம்மாவும் தன் இரங்கலைத் தெரிவித்தாள். அந்தக் குஞ்சு கழுகுக்கு இரையானது எனக்கு ஏனோ மிகுந்த திருப்தியாக இருந்தது.
– வாசகசாலை இணைய இதழ், 21-04-25.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |