கதையாசிரியர்: ,
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 26, 2024
பார்வையிட்டோர்: 2,045 
 
 

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தக் கைதி சாப்பிட மறுத்தான். தரங்கெட்டுப் போன உணவை வழங்கும் அந்த சிறைச்சாலை நிருவாகத்துக்கெதிராக உண்ணாவிரதம் இருந்தான். அவர்களின் சமூகவிரோதச் செயல்களை கண்டித்துப் போராட்டம் நடத்துகிறேன் என்று விளக்கம் காட்டினான். இன்னொரு தொழிலாளி தனக்குச் சம்பளம் குறைத்து உச்சியில் வழங்கப் பட்டதாகக் குற்றஞ் சாட்டி மரத்தின் ஏறிக்கொண்டான். ‘பிரதமமந்திரி வந்து அவனது பிரச்சினையைத் தீர்க்கும் வரை மரத்திலிருந்து இறங்கமாட்டேன்’ என்று பிடிவாதம் பிடித்தான். மற்றொருவனோ… தனது துயரங்களுக்கு சக மனிதர்களிடமிருந்து பரிகாரம் கிடைக்க மறுத்தால்… கடிதம் எழுதிவைத்துவிட்டு அந்த உயர்ந்த மாடிக் கட்டிடத்தில் ஏறிக் கொண்டான். இந்தச் சமூகத்தின் இழி நிலையை உலகம் அறியவேண்டுமென்று அங்கிருந்து குதித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டான். 

இவ்வாறு தங்கள் மேல் சுமத்தப் படும் சமூக அநீதிகளுக்காக அந்தச் சமுதாயத்தையே பழிவாங்க வேண்டுமென்று தங்களையே தண்டித்துக் கொள்ளும் மனத்தவிப்புக்கள் இருக்கத் தான் செய்கின்றன. இந்தப் போராட்ட வடிவங்கள் நகரப் புறங்களில் தோன்றுவதைக் காணுகின்றோம். ஆனால், இவர்களையொத்த இன்னொருவன் தோட்டப்புறத்தில் மிக வித்தியாசமான ஒரு போராட்ட முறையைத் தொடங்குகின்றான். அது ஓர் அறிவு பூர்வமான அணுகு முறையாக…. ஒரு புதிய வடிவம் எடுக்கின்றது. அவனது அந்தப் போராட்டம் ஓர் ஆயுதம் தாங்கிய போராட்டம் என்று பெயர் எடுத்தது. 

மிடில்டன் தோட்டம் தமிழில் பெரிய மல்லிகைப் பூத் தோட்டம் என்பார்கள்…… அந்தத் தோட்டத் தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் தான் ராமையா தலைவர். அந்த மக்களின் நல்லது கெட்டதுகளுக்கும்….. அவர்களின் முன்னேற்றத்துக்கும், உழைப்பதே ராமையா தலைவரின் கடமை என்று ஒரு பொறுப்பு அவர் மேல் சுமத்தப் பட்டிருக்கிறது. அவர் அந்தப் பொறுப்புக்களில் தன்னை முழுமையாக ஏற்படுத்திக் கொண்டார். ராமையா தலைவர் பழமை, புதுமை வாதங்களோடு ஒத்துக் போகக் கூடியவர். தொழிலாளர்களின் குறைகளைத் தோட்ட நிருவாகியிடம் எடுத்துக் கூறி உடனே நிவாரணம் கேட்பார். தோட்ட நிருவாகி உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுப்பதில்லை. மாறாக ராமையா தலைவரின் கோரிக்கைகளை உதாசீனம் செய்தார். 

இதனால் தலைவர் சங்கத்தின் மாவட்டக் காரியாலயத்துக்குப் பிரச்சினைகளைக் கொடுத்தார். அங்கேயும் இழுபறி…. மந்த கதியாகியது! தொழிலாளர்களின் பிரச்சினைகள் யாவும் வெறும் ‘டைப் அடிக்கும் கடிதத் தொடர்புகளில் தங்கியிருப்பதாலேயே இந்த இழுபறி… ஏற்படுகின்றது. 

“எப்படியாவது சரி… இந்தப் பிரச்சினைகளை நேரடியாகத் தீர்த்துக் கொள்ளணும்!” என்ற தீவிர எண்ணத்தோடு ஒரு ‘இளஞ்சுடர்’ முன்வந்த போது….. அந்த ஆவேசம்…. கணக்கப்பிள்ளையை அடித்து நொறுக்கியதில் போய் நின்றது! விளைவு……? 

அடிபட்டவர் பொலிஸுக்கு ஓடினார். இந்தச் சம்பவத்துக்குக் கொஞ்சம் கூட, சம்பந்தமில்லாத ஒரு ‘அரை டசன்’ பொடியன்களின் பெயர்களைச் சொல்லிச் புகார் கொடுத்தார். பொலிஸ் ஒடிவந்தது. அந்த துரதிஷ்டசாலிகளைக் கவ்வியது. அவர்கள் கூட்டுக்குள் தள்ளப் பட்டார்கள். பின்னர்… பிணையில் விடப்பட்டார்கள். 

பொலிஸ் பார்வையில். அவர்கள் சட்டத்தை மீறி ஒன்று கூடினார்கள்…. அச்சுறுத்தலில் இறங்கினார்கள்…… தாக்குதல் நடத்தினார்கள்’ என்ற குற்றங்களுக்குள்ளானார்கள். 

நீதி மன்றத்தின் தீர்ப்பு வரும்வரை தோட்ட நிருவாகி அவர்களை வேலை நீக்கம் செய்தார். ராமையா தலைவர் ஆதங்கப் பட்டார். ஒரு பக்கம் பொலிஸ் மூலம் வழக்கு… மறுபக்கம் தோட்டத்தில் வேலை நீக்கம்… ஒரு குற்றத்துக்கு இரண்டு தண்டனை வழங்கியது அநீதியான செயல் என்று குமுறினார். 

அன்று முதல் தோட்டத்தில் நடைபெற்று வரும் அநீதியான செயல்களையெல்லாம் வெளியில் காட்டுவதற்கு முனைந்தார். அதில் தீவிரமாக ஈடுபட்டார். 

அந்தப் புதிய பாதையில் புறப்பட்ட அவர் தனக்குள்ளே ஒரு தீர்மானத்தையும் எடுத்துக் கொண்டார். 

அந்தத் தீர்மானம்….? ‘இனிமே சவரம்……. செய்வதில்லை!’ 

ஆமாம்! அவர் தோட்டத்துப் பாபரிடம் முகச் சவரம் செய்வதை நிறுத்திக் கொண்டார். இந்த விஷயத்தைத் தன் மனைவியிடமோ தோட்டக் கமிட்டியிடமோ சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று அவர் மௌனமாக இருந்தார். 

முதல் மூன்று வாரங்கள் அந்த ரகசியம் எவரதும் கவனத்தையும் ஈர்க்கவில்லை! நான்காவது வாரத்தில் மெல்லிய தாடி அவர் முகத்தில் அரும்பியிருந்தது! அவரது நடவடிக்கைகளிலும் இப்போதெல்லாம் ஒரு வித்தியாசம் தெரிந்தது. தனது சாப்பாட்டை எவரிடமும் கேட்பதில்லை. கொடுக்கின்ற போது வாங்கிச் சாப்பிடுவார். மனைவியிடம் கடுமையாகப் பேசுவதோ….. குழந்தைகளிடம் செல்லமாகப் பழகுவதோ கிடையாது. வீட்டிலும் வேலைத் தலத்திலும் கோவிலில் கூடும் கூட்டங்களிலும் அவர் தன்னை ஒரு துயரம் பீடித்துக் கொண்டது போல் காட்டிக் கொண்டார். 

அவரது தாடி இடி முழங்கும் கருமேகமாய்….. பயங்காட்டி….. வளர்ந்து வந்தது……… 

தோட்ட மக்கள் அவரது தாடியைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். அவரது மனைவி, மக்கள் அவரிடம் ஒரு பயபக்தியோடு நடந்து கொண்டார்கள். வீட்டுச் சூழ்நிலை. களையிழந்து காணப்பட்டது. 

“எங்களது வழக்குமுடியும் வரை…. நாங்கள் வெற்றியடையும் வரை…எங்கள் தலைவர் தாடி எடுக்கமாட்டார்!” என்று வேலைநீக்கம் செய்யப் பட்டிருக்கும் இளைஞர்கள் வீரக் குரல் எழுப்பினார்கள். இந்த விஷயம் தோட்ட நிருவாகியின் காதுகளை எட்டியது! 

‘லேபர் டே’ 

தொழிலாளர் பேச்சுவார்த்தை நாளன்று ராமையா தலைவர் தோட்டக் காரியாலயத்துக்குச் சென்றிருந்தார். ராமையாவைப் பார்த்த சுப்பிரண்டன் புருவத்தை நெரித்தார். 

“அப்போ ராமையா என்னோட ஃபைட் பண்ண வாறது…?” 

“அப்படி ஒண்ணும் இல்லீங்க…..! தொரையோட நான் எப்படி பைட் பண்ண முடியும்?” 

“அப்போ… ஏன் தாடி……. வளர்க்கிறது…….?” 

ஒரு வேதனைக்குரிய அமைதி ராமையா தலைவரிடமிருந்து வெளிப்படுகிறது. அவர் மெளனமாக நிற்கின்றார். 

“ரொம்ப நல்லம்….! அப்ப நீ என்னோட ஃபைட் பண்ணிப்பார்! ஒன் தாடியைப் பத்தி… ஐ டோன்ட் கெயார்! இன்னையிலேயிருந்து ஒன் மூஞ்சி பார்க்கமாட்டேன்!” தோட்ட நிருவாகி ராமையா தலைவரின் முகத்தில் அறைவது போல ஆபீஸ் ஜன்னலை இழுத்து அடைத்தார். தோட்ட நிருவாகி தன் தாடிமேல் கொண்ட கோபத்தையறிந்து ராமையா தலைவர் இறுமாப்போடு வீட்டுக்குத் திரும்பினார். 

இந்தச் சம்பவம் காட்டுத் தீ போலப் பரவியது. 

தோட்டப் பெண்கள் பீலிக்கரையிலும் பிரட்டுக்களத்திலும் கொழுந்துக்காட்டிலும் ராமையா தலைவரின் தாடியைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டார்கள். தலைவரின் மனைவியைக் கண்டதும் பாசத்தோடு மரியாதை ததும்பப் பார்த்தார்கள். ஆனால், சின்னஞ்சிறுசுகளே…….. அவரின் தாடியைக் கொஞ்சங்கூட ‘கணக்கு’ எடுப்பதில்லை. அவரைக் கண்டதும் ராகம் பாடினார்கள்! 

“குருவிக் கூடு தொங்குது……..! குருவிக் கூடு தொங்குது!!”

வழக்கு ராமையா தலைவரின் தாடியைப் போலவே நீண்டு கொண்டிருந்தது. இதற்கிடையில் உதவித் தொழில் கமிஷனர் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணமுடியுமா என்பதை அறிந்து கொள்ள ஒரு ‘கொன்பரன்ஸ்’ ஏற்பாடு செய்திருந்தார். யூனியன் பிரதிநிதி, துரைமார் சங்கப் பிரதிநிதி, ராமையா தலைவர் பலரும் வந்திருந்தனர். 

ராமையாவின் தாடியைப் பார்த்த கமிஷனர் யூனியன் பிரதிநிதியிடம் கேட்டார். ‘ஜனங்கள் தாடிய இன்னமும் மதிக்கிறதா?” 

”சேர்!… சேர்….!” 

பிரதிநிதியிடம் கேட்ட கேள்விக்கு துரைமார் சங்கப் பிரதிநிதி பதில் சொல்ல அவரசப் பட்டார். இந்தத் தாடி நம்மட தொரமாருக்கு ‘செலன்ஞ்’ பண்ணுறமாதிரி இருக்குது!…..’ இந்த ஆள்……. வழக்கிலே ஜெயிக்கிறவரைக்கும் தாடி வெட்டுறதில்லேன்னு தோட்டம் பூராப் பிரசாரம் செஞ்சிருக்கிறது…….! என்று ஆத்திரமாகச் சொன்னார். இதைக் கேட்ட கமிஷனர் யூனியன் பிரதிநிதியின் முகத்தைப் பார்த்தார். ‘அப்போ….. வழக்கில் தோல்வி அடைஞ்சிட்டா என்னா செய்யப் போறது……..?’ என்றார். 

“அங்கதான் சேர்…….. விஷயமே இருக்கு!” என்ற யூனியன் பிரதிநிதி தொடர்ந்தார். ‘இவுங்க கதகட்டுறமாதிரி….. இந்த தாடி விவகாரத்துல சவால் கிவால்ன்னு அப்படி ஒண்ணும் கெடையாது! அந்த தாடி வளர்ப்பு……. ஒரு தார்மீகப் பகிஷ்கரிப்பு! சட்டப்படியோ நியதிப் படியோ பார்க்காம……. எது உண்மை, எது நியாயம் எது தர்மமோ அதன் அடிப்படையிலே போராடும் ஒரு சித்தாந்தம்! ஒரு கொள்கை முறை…. இட் இஸ் ஏ மோரல் புரொடெஸ்ட்! வழக்கிலே வெற்றியோ தோல்வியோ……. அவர் கடைசியில் தாடிய வழிச்சிடுவாரு!” என்று யூனியன் பிரதிநிதி உருக்கமாகவும் மிக உணர்ச்சியோடும் விளக்கினார். 

“ஓ… ஐ….ஸீ….இட் இஸ் ஏ….. மோரல் புரொடெஸ்ட்!” (ஒரு தார்மீக எதிர்ப்பு…. !)கமிஷனர் அந்தத் தலைவனின் தாடியில் பொதிந்துள்ள அர்த்தத்தைப் புரிந்து வியப்படைந்தார். 

“ஆனா…. அது எங்க மனச வருத்துது! இட் எனொய்ஸ் அஸ்!” என்று துரைமார் சங்கப் பிரதிநிதி கமிஷனரிடம் குற்றஞ் சாட்டினார். ‘எனொய்ஸ்…….? வருத்துதா ? ஒரு தொழிலாளி தாடி வைக்கிறதுக்கு உரிம இல்லேன்னு நீங்க சொல்ல வாறது?’ 

கமிஷனர் கொஞ்சம் கடுமையாகத் துரைமார் சங்கப் பிரதிநிதியை நோக்கினார். அவர் தொடர்ந்து பேசினார். “சுப்பிரண்டனை இந்தத் தலைவர் சந்திக்க போனப்போ அவர்ட மூஞ்சிக்கு அடிக்கிற மாதிரி ஜன்னல் சாத்தியிருக்கார்…..இட்இஸ் வெரி பேட்!” என்று முடித்தார். துரைமார் பிரதிநிதி விட்ட பாடில்லை. அவர் மீண்டும் எழும்பினார். 

“வட் கேன் வீ… டு… சேர்…..? நாங்க என்ன சேர்….. செய்யிறது……..? இந்த தலைவர் தாடி வளர்க்கிறது எங்கள பழி வாங்குறதுக்குத் தான்! இது இந்த தோட்டம் பூரா…. தெரியும்!” என்று சொன்னவர் ராமையா தலைவரின் கண்கள் காந்த சக்தி கொண்டவை…… ஒளிவீசும் பார்வை கொண்டவை. (Bright-Eyed Leader) என்று வர்ணித்து ஒருவித பயத்துக்குள்ளானர். அவர் அத்தோடு நிற்கவில்லை….. 

தலைவரின் தாடியைச் சுட்டிக்காட்டி……..”இந்த தாடி….. ஒரு கெட்ட ஆயுதம்!……. ஒரு ஆபத்தான ஆயுதம்!! இட் இஸ் ஏ நாஸ்டி வெப்பன்!” என்று ஆக்ரோசப்பட்டார். யூனியன் பிரதிநிதிக்குக் கோபம் வந்துவிட்டது! நாற்காலியைப் பின்னால் இழுத்துவிட்டுப் படீரென எழும்பினார். 

”நோ! சேர்! கெடையவே கெடையாது! இங்க…… இருக்கிற நண்பர்களுக்கு இந்தத் தாடியின் மகிமையைப் பத்தி….. ஒண்ணுமே தெரியாது போலிருக்கு! இந்தத் தாடி……. இந்தத் தோட்டத்தில் நடக்கிற அநியாயங்களையும் மோசமான சங்கதிகளையும் வெளியே எடுத்துக்காட்டிக்கிட்டு வருது….. ‘இற் கிவ்ஸ் எட்டென்சன் ஒன் த நாஸ்டி திங்ஸ் வட் தேடூ ஒன் த எஸ்டேட். Nasty என்ற வார்த்தையை இவரும் உபயோகித்தார். 

“அத…. நீங்க ப்ருவ் பண்ண முடியுமா……..?’ சுப்பிரிண்டன் அலறினான். 

“நிச்சயமா முடியும்! அதுக்குத் தான் நாங்க இங்க இருக்கோம்!’ பிரதிநிதி நிமிர்ந்து நின்றார். 

“அப்போ…. இவ்வளவு நாளா….ஏன் சும்மா இருந்தது………..?’ “நாங்க சும்மா இருக்கல்ல! ராமையா தலைவர் ஒங்க ஆப்பீஸுக்கு வந்தப்போ……’ பிரதி நிதி பேச்சை முடிக்கு முன்பே துரைமார் பிரதிநிதி இடைமறித்தார். 

“ஒங்கட ராமையா ஆபீஸுக்கு வந்தது…… அவண்ட தாடிய காட்டுறதுக்காக!” என்றார். 

”என்னடாப்பா! தொழிலாளி தாடிகூட வளர்க்கக் கூடாதா? சே! இந்த நாடு எங்க போயிக்கிட்டு இருக்கு………?” என்று ஏளனமாகச் சிரித்தார் யூனியன் பிரதிநிதி. 

துரைமார் சங்கப் பிரதிநிதி ‘மீண்டும் எழும்பினார். 

“சேர்! விளக்கமா சொல்றேன்…. கேளுங்கள்…..! அந்தக் காலத்தில் தோட்டத் தொரைமார்கள் மூச்சுவிட்டா….. போச்சு! உடனே தலைவர் தாடி வளர்ப்பார்! 

“தோட்டத்தொர மூச்சு நிப்பாட்டுற வரைக்கும் தாடி வெட்ட மாட்டேன்”னு ஜனங்களுக்கு பிரசாரம் பண்ணிடுவார்……! 

ஆனா….. ஜென்டில்மென்….. நீங்க இத… போயி ஒரு தொழில் பிரச்சினை… என்று சொல்றிங்க……..! மை காட்! என்ன உலகம்… இது…..? ரொம்பவும் அவர் நொந்து கொண்டார்…. 

எல்லோரும் சிறிது மௌனமாக இருந்தார்கள். 

கொன்பரன்ஸ் எதுவித முடிவுமின்றி ஒரு மணித்தியாலம் நடந்து முடிந்தது. 

தாடியைப் பற்றியே வாதம்…. பிரதிவாதம் தாக்கம்…. 

ஆயிரம் வார்த்தைகள் சாதிக்க முடியாததைத் தன்னுடைய தாடி சாதித்துவிட்டது என்ற மன நிறைவோடு ராமையா தலைவர் வீட்டுக்குத் திரும்புகிறார். 

அவருக்கும் உள்ளூர மகிழ்ச்சி….. அந்தத் துரைமார் சங்கக்காரன் சொன்னது போல தனது தாடியும் ஒரு ஆயுதம்! 

– ஆங்கில தொகுதி: The new weapon, Born to labour [by] C.V.Velupillai, Publisher: M.D.Gunasena & Co., 1970.

– தேயிலை தேசம், ஆங்கில மூலம்: சி.வி.வேலுப்பிள்ளை, தமிழில்: மு.சிவலிங்கம், முதற் பதிப்பு: பெப்ரவரி 2003, துரைவி பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *