ஒரு பகல் நேர நாடகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 18, 2024
பார்வையிட்டோர்: 1,253 
 
 

(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நட்ராஜனை மட்டும் இறக்கி விட்டு விட்டு நகர்ந்தது பஸ். ஓடும் பஸ்ஸின் பின் புறத்தையும், அந்தக் காலை வெயிலில் மினுமினுக்கும் நீண்ட தார் ரோட்டையும் பார்த்துக் கொண்டு கொஞ்ச நாழி அப்படியே நின்றான் நட்ராஜன். பின் சுற்றுமுற்றும் பார்த்தான். ரோட்டின் ஓரத்தில் ரெண்டு வெற்றிலைபாக்குக் கடையும், ஒரு டீக்கடையும், டீக்கடைக்குப் பக்கத்தில் ஒரு சைக்கிள் கடையும் இருந்தது. வெற்றிலை பாக்குக் கடையில் ஒரு சிகரெட் வாங்கி புகைந்து கொண்டிருந்த கயிற்றில் பற்ற வைத்துக் கொண்டான். கையில் வைத்திருந்த ஃபைலை ஒரு பக்கமாக வைத்துவிட்டு, பொறுமையாகப் புகைக்கத் தொடங்கினான். 

சைக்கிள் கடையில், ஒரு சிறு பையன், ஒரு பெரிய ஆளுடைய கால் சட்டையைப் போட்டுக் கொண்டு, சைக்கிள் ஒன்றுக்கு எகிறி எகிறிக் காற்றடித்துக் கொண்டிருந்தான். ரெண்டு முறை அடிப்பதும் அவிழ்ந்து கீழே வழியும் கால் சட்டையைத் தூக்கி முடிவதுமாக இருந்தான் பையன். 

நட்ராஜன் கடைக்காரனைப் பார்த்து, தான் போக வேண்டிய ஆபீஸின் பேரைச் சொல்லி வழி கேட்டான். கடைக்காரன் கையை ஒரு பக்கமாக வளைத்து வழி சொன்னான். 

ஃபைலை எடுத்துக் கொண்டு நடந்தான் நட்ராஜன். 

ஆபீஸின் வெளியே அதற்குள்ளாகவே சிறு கூட்டம் கூடியிருந்தது. பதினாறு வயதுக்கும் குறைவான பையன் ஒருவன் கையில் மஞ்சள் பிளாஸ்டிக் பையுடன், துவைத்து, ஆனால் இஸ்திரி போடாத கசங்கிய அரைச் சட்டையுடனும், நாலுமுழ வேட்டி யுடனும் நின்றிருந்தான். அளவுக்கு மீறி தடவப்பட்ட எண்ணெய், நெற்றியில் வழிந்து கொண்டிருந்தது. நிறைய விபூதி காதுக்கும் தடவி இருந்தான். நாலைந்து பேர் அவன் மாதிரியே இருந்தார்கள். ரெண்டு பேர் பேண்ட் போட்டுக்கொண்டு கையில் லெதர் பேக்குடன், பேசிக் கொண்டிருந்தார்கள். 

நட்ராஜன் தயங்கி நின்றான். இவனையே எல்லோரும் பார்ப்பதாக இவனுக்குப் பட்டது. இன்னும் ஆபீஸ் திறக்கவில்லை. அந்த மஞ்சள் பை பையனிடம் போய், ‘ஆபீஸ் திறக்க இன்னும் எவ்ளோ நேரமாவும்’ என்றான். பையன் மருண்டு போனான். திக்கித் திக்கித் ‘தெரியல’ என்றான். நட்ராஜனுக்கு அவனுடன் பேச வேண்டும் போல இருந்தது. அவனைப் பார்த்து லேசாகச் சிரித்தான். 

‘உனக்கு எந்த ஊருப்பா?’ என்றான். 

பையன் ஊரின் பேரைச் சொன்னான். அது இவன் ஊருக்குப் பக்கத்தில்தான். அதைச் சொன்னான். பையனுக்கு இப்போது கொஞ்சம் சுமுகம் வந்தது. 

‘எஸ்.எஸ்.எல்.சி.யா?’ என்றான் நட்ராஜன். 

‘ஊம்…’ 

‘எந்த ஸ்கூல்?…’ 

‘….’ என்றான் பையன். 

‘ராஜமாணிக்கம் தானே உங்க தமிழ் பண்டிட்…’

‘ஆமா… ராஜமாணிக்கனார்தான்…!’

‘அவன்கூட நாராயிட்டானா…’ 

பையன் மிரண்டு போனான், இவனையே உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். 

திடீரென்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுவதை உணர்ந்தான் நட்ராஜன். காக்கிச் சட்டையும், காக்கிக் கால் சட்டையுமாகக் கையில் புகையும் பீடியோடு ஒருவன் வந்தான். பெரிய மீசை வைத்திருந்தான் அவன். 

‘யாரிவன்?’ என்றான் நட்ராஜன். 

‘இவர்தான் ஆபீஸ் பியூன்…’ என்றான் பையன். 

காக்கிச் சட்டை கூட்டத்தை உற்று நோக்கினான். இப்போது நிறைய பேர் வந்து சேர்ந்திருந்தார்கள். 

‘இன்னாப்பா இது. கும்பல் கூடிக்கிட்டு நிக்கிறீங்க… இங்க இன்னா அவுத்துப் போட்டுட்டா ஆடறாங்க.. வரிசையா… கியூவில் நில்லுங்கப்பா…ஆபீஸர் வர்ற நேரமாயிடிச்சி…!’ என்றான் காக்கிச் சட்டை. 

கும்பல் கலைந்து திரும்பவும் கும்பலாகவே கூடுவதைக் கவனித் துக் கொண்டு நின்றிருந்தான் நட்ராஜன். மீண்டும் ஆபீஸுக்குள்ளி ருந்து வெளியில் வந்த காக்கிச் சட்டை கும்பலையே பார்க்க நேர்ந்தது. 

‘ஏம்பா… நீங்கள்ளாம் இன்னா படிச்சவங்கதானா… மாடு மேய்க்கிற பசங்களா… கொஞ்சங்கூட நான் சொல்லச் சொல்ல ரெஸ்பெட்டே இல்லாம அவன் பாட்டுக்கினு நிக்கிறீங்க… ஏ… யார்பா அது… மஞ்சப்பை… ஏன் திருதிருன்னு முழிக்கிறே… நீ இன்னா? ஊம்…? எசேல்சியா… எசேல்சி பசங்கல்லாம் இப்படி வா.. வாவா இப்டி நில்லு வரிசையா…!’ 

கொஞ்சம் பேர் வரிசையாக நின்றனர். 

‘ஏங்க சார்… எசேல்சி பெயிலுல்லாம் எங்க நிக்குறதுங்க…?’ என்றான் ஒருவன். 

‘இப்படி இந்தப் பக்கம் அவன்களை ஒட்டி நில்லுங்கப்பா…? என்றான் காக்கிச் சட்டை. 

எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் வரிசையைவிடப் ஃபெயில் வரிசை கொஞ்சம் நீண்டு நின்றது. அடுத்தாற்போல பி.யூ.சி.யும், அதற்கும் அடுத்து டிகிரிகளும் நின்றன. சினிமாக் கொட்டகை வாசலில் கௌன்ட்டருக்கு முன்னால், நிற்கும் கும்பல் ஞாபகம் வந்தது நட்ராஜனுக்கு. 

நட்ராஜன் எந்த வரிசையிலும் சேராமல் ஒதுங்கி நின்றான். வெயில் சுள்ளென்று அடிக்க ஆரம்பித்தது. கையிலிருந்த ஃபைலைத் தலைக்கு மறைவாகப் பிடித்துக்கொண்டு நின்றான். 

‘நீ இன்னாப்பா தனியா நிக்கற… சேந்து நில்லுபா…’ என்றான் காக்சிச் சட்டை நட்ராஜனைப் பார்த்து. 

தான் எதில் சேத்தி என்று அவனுக்கு விளங்கவில்லை. ஆபீஸ் வாசற்படிக்கும் ரோட்டுக்கும் இடையில் இருந்த வெளியில் நட்டு வைக்கப்பட்டிருந்த செடிகளையும், அவற்றில் முளைத்திருக்கும் வித விதமான புஷ்பங்களையும் பார்த்துக் கொண்டிருந்தான் நட்ராஜன். 

‘உன்னைதாம்பா… ஏ… சொல்லச் சொல்ல பராக்குப் பார்த்து கிட்டு. நிக்கற… வரிசையில் போயி நில்லுபா..’ என்றான் மீண்டும் காக்கிச் சட்டை. 

கியூவில் நின்றிருந்த எல்லோரும் தன்னையே, திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான், நட்ராஜன். வெயில் ரொம்ப உஷ்ணமாகக் காய்வதாகப் பட்டது அவனுக்கு. முதுகில் வியர்வை கசகசத்துக் கோடாக வழிவதை உணர்ந்தான் நட்ராஜன். 

காக்கிச் சட்டை நேராக அவனிடம் வந்தான். 

‘நீ இன்னப்பா எசேல்சியா..’ என்றான். 

‘இல்லே…’ 

‘பின்ன …?’ 

‘புலவர்…?” 

‘அது சரி… எசேல்சி பாஸா…’ 

‘இல்ல… என்ட்ரன்ஸ்…!’ 

‘அப்ப… எசேல்சி பெயிலானவங்க வர்சையில நில்லு…’ 

‘நான் புலவர் பாஸ் பண்ணியிருக்கேனே…’ 

‘அது இன்னா டிக்கிரிபா…!’ 

‘டிகிரி இல்ல… டிப்ளமான்னும் சொல்ல முடியாது!’ 

‘டிக்கிரியும் இல்ல… டிப்ளமாவும் இல்லன்னா அது இன்னாபா எழவு படிப்பு.. பெரிய ரோதனையாப் போச்சுபா உன்னோட… சரி… சரி. அப்படியே நில்லு கெளார்க்கு கிட்டே போயி சொல்லு…’ 

காக்கிச் சட்டை திரும்பி நடந்தான்; ஆபீஸ் வாசலில் போய் நின்று கொண்டான். ‘எல்லாரும் அப்படியே உக்காருங்கப்பா… அவன் அவன் எசேல்சி புக்கையும், செத்திகேட்டையும் எடுத்துக் கையிலே வச்சுக்கிங்க…!’ என்று சத்தம் போட்டான். 

வரிசைகள் அப்படியே கீழே மண்மீது அமர்ந்தன. 

நட்ராஜனுக்குச் சிகரெட் பிடிக்கலாம் போல இருந்தது. இங்க பிடிக்கலாமோ, எழுந்து போய்ப் பற்ற வைத்துவிட்டு வந்தால் ஏதாவது சொல்லுவானோ… மனசைக் கட்டிப் போட்டுக் கொண்டு, மண்ணில் ஓரமாக உட்கார்ந்து கொண்டான். 

அப்போது ஒரு ஸ்கூட்டர் வந்து ஓரமாக நின்றது. காக்கிச் சட்டை ஓடிப்போய் சல்யூட் அடித்து நின்றான். ஸ்கூட்டரில் வந்தவர் வெள்ளை சர்ட்டும், வெள்ளை பேன்ட்டும் வெள்ளைத் தலையுமாக, வெள்ளை வெளேரென்று இருந்தார். ஸ்கூட்டரைக் காக்கிச் சட்டையிடம் ஒப்படைத்துவிட்டு விறைப்பாக நடந்து உள்ளே போய்விட்டார். காக்கிச் சட்டை ஸ்கூட்டரைத் தள்ளிக் கொண்டு போய், பக்கத்தில் இருந்த ஒரு வேப்பமரத்து நிழலில் வெயில் படாமல் நிறுத்தினான். ‘எல்லாரும் அவங்கவங்க, எசேல்சி புக்கையும் செத்திகேட்டையும் கையில் எடுத்துத் தயாரா’ வைத்துக் கொண்டார்கள். 

காக்கிச் சட்டை ஒவ்வொருவருடைய கையிலிருந்த காகிதங் களையும் வாங்கி, ரொம்பக் கூர்மையாகக் கவனிப்பவன் போல நெற்றிப் புருவம் எல்லாவற்றையும் சுருக்கிக் கொண்டும் கண்களை இடுக்கிக் கொண்டும் பரீட்சித்தான். 

ஊம்… சரி… யார்பா… பச்ச சட்ட… நீ போ உள்ள… எசேல்சி யெல்லாம் அந்த வழியா உள்ள போங்கப்பா… மத்த டிகிரியெல்லாம் இந்த வழியா போங்க. ஊம் சத்தம் பண்ணாமே ஒவ்வொத்தரா போ… ஒர்ராள் போயி முடிஞ்சி வெளியில வந்தப்புறம் இன்னொருத்தர் போனும்… தெரியுதா.. ஊம்… 

ஒவ்வொருத்தராக எழுந்து ஆபீசுக்குள் ரிஜிஸ்டர் பண்ணிக் கொள்ளப் போனார்கள். நட்ராஜன் வரிசையைக் கவனித்தான். ரொம்ப நீளமாக இருந்தது. அவன் முறை வர இன்னும் மூணு மணி நேரமாவது ஆகும் போலத் தெரிந்தது. 

நட்ராஜனுக்கு நேரம் போவது கஷ்டமாக இருந்தது. வேப்பமரத்தைப் பார்த்தான். இலை ஆடவில்லை. சில காக்காய்கள் கத்திக் கொண்டிருந்தன. விர்ரென்று ஒரு கார் ரோட்டில் வழுக்கிக் கொண்டு ஓடியது. பின்னால் புழுதி மரம் அளவுக்கு உயர்ந்தது. வெயில் உஷ்ணம் தகித்தது. ஃபைலைத் தூக்கித் தலையையும் முகத்தையும் மறைத்துக் கொண்டான். வானத்தைப் பார்க்க முடியவில்லை. கண் கூசியது. 

‘ஏய்…’ காக்கி சட்டைதான் கத்தினான். 

‘இன்னா வாத்தியாரே… நம்ம கிட்டயே உன் குயினா வேலை யைக் காம்பிக்கிறியே…’ என்றான், காக்கிச் சட்டை ஒருவனைப் பார்த்து. அவன் எழுந்து நின்றான். பேன்ட்டும் சிலாக்கும் அணிந்தி ருந்தான். அந்தப் பையன் கிருதா கொஞ்சம் நீண்டு அடர்ந்து இருந்தது. 

‘இன்னா சொல்றீங்க!…’ என்றான் பேன்ட். 

‘இன்னாப்பா ஒண்ணும் தெரியாதவனாட்ட காடு காட்டரே. இது கடலூர் எம்பிளாய்மண்டுல ரிஜிஸ்டரான செத்திபிகேட்டுல்ல?” என்றான் காக்கிச் சட்டை. 

‘ஆ…மா’ என்றான், தடுமாறிய படியே பேன்ட். 

‘அங்கியும் பதிஞ்சுட்டு, இங்கியும் பதிஞ்சுக்கலாம்னு வந்துட் டியா… நாங்கல்லாம் எப்பவோ காது குத்திகினாசுப்பா… ஒருத்தன் ஒரு எம்பிளாய்மண்டுலதான் ஒரு சமயத்துல பதியலாங்கிறது ஒனக்குத் தெரியாதா… ஊம்…’ என்று உரத்துச் சத்தம் போட்டான் காக்கிச் சட்டை. 

அந்தப் பேன்ட், ஹீனஸ்வரத்தில் சுற்றி இருந்தவர்கள் அவர்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை ஓரக் கண்ணால் கவனித்துக் கொண்டே சொன்னான். 

‘தெரியும்…ஆனா.. கடலூர்ல பதிஞ்சு நாலு வருஷத்துக்கு மேல் ஆயிட்டுது… இன்னும் வேல கிடைக்கல்ல… அதான் இங்கே பதியலாம்னு… 

‘இங்கப் பதிய வர்றவன் அத கான்சல் பண்ணீட்டில்ல இங்க வர்ணும்… அப்படியே எடுத்தாந்தா இன்னா அர்த்தம்…. நாங்கல்லாம் இன்னா காதுல லோலாக்கா மாட்டிக்கிட்டிருக்கோம். இது எவ்ளோ பெரிய குத்தம் தெரியுமா? உன்னைப் போலீஸ்ல கொண்டு போயி விடலாம் தெரியுமா…’ 

‘இல்லீங்க… இல்லீங்க… ஏதோ தெரியாம…’ 

‘இன்னாபா தெரியாம… ஒன்னும் தெரியாது ஒனக்கு… படிச்ச வன்தாம்பா நீ… ஒனக்கு ஏன் இப்டிப் புத்தி பீ திங்கப் போச்சி… ஊம்…’ 

‘இல்லீங்க ஏதோ தெரியாம… இனிமே இப்படிச் செய்ய மாட்டேங்… வூட்ல ரொம்ப கஸ்டங்க…’ 

அந்தப் பையன் இன்னும் கொஞ்ச நாழிகையில் அழுது விடுவான் போல் இருந்தது. நாக்கு தழுதழுத்தது. முகம் இரத்தச் சிவப்பாய் மாறிவிட்டது. நட்ராஜன் மயிர்க் கால்களெல்லாம் குத்திட்டு நின்றது. மார்பு வேகமாக அடித்துக் கொண்டது. கீச்கீச் என்றோர் அணில் குரோட்டன் ஓரத்தில் இவனைப் பார்த்து வாலைத் தூக்கி ஆட்டியது. ஒரு சிறு கல் கிடைத்தால், ஒரே அடியில் அடித்து அதை வீழ்த்தலாம் போல இருந்தது. கல்லைத் தேடிச் சுற்றிலும் நோட்டம் விட்டான். 

‘வூட்ல கஸ்டம்னா எங்க தாலிய ஏம்பா அறுக்க வர… பசிக்கு மின்னா பீ தின்னுவியா நீ..’ என்றான், காக்கிச் சட்டை. 

அந்தப் பையன் தலையைக் கவிழ்ந்து கொண்டு நின்றிருந்தான். எல்லோரும் பார்க்கிறார்களே என்ற கூச்சத்தை அவன் இப்போது விட்டு விட்டான். தாடை வழியாக உருண்டு வந்து மண்ணில் விழுந்த ஈரம் சொட்டுச் சொட்டாகப் பொட்டு மாதிரி மாறுவதை நட்ராஜன் கவனித்தான். இன்னேரம் சுமதி என்ன செய்து கொண்டி ருப்பாள் என்று நட்ராஜன் யோசித்தாள். சமையலை முடித்து விட்டிருப்பாள். சாப்பிட்டிருக்க மாட்டாள். தன்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பாள். அந்த நம்பிக்கையே திருப்தி தந்தது அவனுக்கு. சுபா தூங்கியிருக்க மாட்டாள். ‘அப்பா எங்கே போயிருக் காங்க…’ என்று சுமதி சுபாவைக் கேட்பாள். சுபா ‘ஊ’ என்று உதட் டைக் குவித்துக் கையை மேலே தூக்கிக் காண்பிக்கும். பிறகு ‘டர்ர்ர்’ என்று சத்தமிடும். அதன் பாஷையில் அப்பா ஊருக்குப் போயி ருக்கிறார் என்று அர்த்தம். குழந்தைக்கு அரைமணி நேரம் அப்பாவைக் காணவில்லையென்றால், அவர் ஊருக்குத்தான் போய் இருக்கிறார் என்று எப்படியோ தோன்றி விடுகிறது. சுமதி அடிக்கடி இதைக் கேட்டு ரசிப்பாள். இப்போதும் கேட்டுக் கொண்டிருப்பாள். 

‘செரி… செரி இனிமே இந்த மாதிரி காரியமல்லாம் பண்ணாதே… பண்ணீட்டுப் பொட்ட மாதிரி அழுவாதே… போ… போ..’ என்றான் காக்கிச்சட்டை. 

கூனிக் குறுகி நடந்து மறைந்தான் பையன். 

எஸ்.எஸ்.எல்.சி.யில் எல்லோருமே பதிந்து கொண்டு மீண்டவுடன் ‘நீயும் போயிக் கெளார்க்கைப் பாரம்பா’ என்று நட்ராஜனைப் பார்த்துச் சொன்னான் காக்கிச் சட்டை. 

நட்ராஜன் உள்ளேபோய் ஒரு கிளார்க்குக்கு முன்னால் நின்றான். கதர் அரக்கை சட்டை அணிந்து கொண்டு கறுப்பாக ஒல்லியாக இருந்தார் அவர். முகம் மலர்ச்சியே இன்றி துருப்பிடித்த இரும்பு மாதிரி இருந்தது. ஏதோ சம்பளம் வாங்காது இனாமாக வேலை செய்வது மாதிரி அலுப்போடு உட்கார்ந்திருந்தார் அவர். 

நட்ராஜன் தன் காகிதங்களை மேசை மேல் வைத்தான். மௌனமாக அவற்றைப் புரட்டிப் பார்த்தார் அவர். பேனாவைப் பட்டென்று மேசை மேல் போட்டார். 

‘ப்ச்… நீங்க புலவரில்ல… எஸ்.எஸ்.எல்.சி. கேன்டிடேட்ஸ் கூட ஏன் சார் வந்து நிக்கிறீங்க… ஒங்கள மாதிரி எஜூகேட்டட்ஸே இப்படி இருந்தா என்ன சார் அர்த்தம்… போங்க… போங்க… அந்த டிவிஷனுக்குப் போங்க’ என்றார் அவர். 

முகமெல்லாம் இருண்டு போன மாதிரி, ‘எக்ஸ்கியூஸ்மி’ என்று கூறிவிட்டு ஆபீஸை விட்டு வெளியே வந்தான் நட்ராஜன். டிகிரிகள் நின்றிந்த கியூவில் போய் நின்றான். பசித்தது. மணியைப் பார்த்தான். பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு டீ சாப்பிட்டால் தேவலாம் போலிருந்தது. நாக்கு வறண்டிருந்தது. வெயில் வெள்ளை யாகக் கொளுத்திக் கொண்டிருந்தது. டைப் மெஷினிலிருந்து வரும் லேசான சத்தமும், எங்கோ ஏதோ பறவைகள் கத்தும் சத்தத்தையும் தவிர, வேறு சத்தம் ஒன்றும் இல்லை. 

கியூ நகர்ந்தது. கீழே உட்காரவும் முடியவில்லை. மணல் சுட்டது ஸ்லிப்பரையும் மீறி மணல் காலைச் சுட்டது. 

நட்ராஜன் உள்ளே போனான். ஒரு கையைத் தூக்கி விஷ் பண்ணினான். அஃறிணைப் பொருளைப் பார்ப்பது மாதிரி எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டி விடாத ஒரு மனிதர் ஒரு பெரிய மேசையைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார். ஃபைல்கள், ஒரு பேப்பர் வெயிட், இங்க் துளிகள் உறைந்த ஓர் அழுக்கு டேபிள் கிளாத், இத்யாதிகளோடு அவர் எண்ணெய் வழியும் மூஞ்சியோடு இருந்தார். 

‘எஸ்…’ என்றார் அந்த மனிதர். 

நட்ராஜன் காகிதங்களைப் பணிவோடு அவர் மேசை மேல் வைத்தான். தொட்டால் தீட்டுப்பட்டு விடுமோ என்று அஞ்சுவது மாதிரி தன் விரல் நுனிகளால் அதைப் புரட்டினார் அவர். 

நட்ராஜன் முகத்தைப் பார்த்து, மெல்லிய அழுத்தமான குரலில், ‘ஆர் யு எ கிராஜூவேட்?” என்றார். 

நட்ராஜன் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. தொண்டைக்குள் சளி வந்து அடைத்துக் கொண்டது போல. பேச நினைக்கிறான் முடியவில்லை. உட்கார்ந்து கொள்ளலாமா என்று ஒரு கணம் யோசிக்கிறான். அவரே சொல்லி இருக்க வேண்டும். தானாக எப்படி…? 

‘இல்லே… புல…வர்…’ 

‘ஈஸ் இட் எ டிகிரி?…’

‘இல்லே… சார்…’ 

‘இல்லேண்ணு தெரியுதுல்ல… பின்ன எதுக்கு என் முன்னால வந்து இப்படி நிக்கறே?…’ 

‘சாரி… சார்… யாருகிட்டேப் பதியறதுன்னு… தயவு செய்து…!’ தடுமாறினான் நட்ராஜன். 

‘ஆபீஸரைப் போய்ப் பாரு’ என்றார் அவர். தன் எண்ணெய் வழியும் மூஞ்சை ஒரு ஃபைலுக்குள் நுழைத்துக் கொண்டார். 

நட்ராஜன் ஏதோ பேரோடு ஆபீஸர் என்று போர்டு போட்டி ருந்த ஓர் அறையின் வெளியில் வந்து நின்றான். அங்கே ஒரு பெண் – அழகான பெண் – கூந்தலைப் பாப் செய்த பெண் குறைந்த பட்ச ஆடைகளிலேயே தன் நிறைந்த அழகைக் காட்டிக் கொண்டு ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். அவள் முன் ஒரு டைப்ரைட்டர் மிஷின் இருந்தது. அவள் நட்ராஜனைப் பார்த்து மிக வசீகரமாகச் சிரித்தாள். அவள் பற்கள் மிகவும் வெள்ளையாக இருந்ததைக் கவனித்தான் நட்ராஜன். இனிமையாக, ‘எஸ்.பிளீஸ்..’ என்றாள். 

‘ஆபீஸரைப் பார்க்கணும்-‘ 

‘ஹோ..’ அவள் கிறீச்சிட்டாள். பொறியில் மாட்டிக்கொண்ட எலியின் சத்தம் இவனுக்கு ஞாபகம் வந்தது. கூடவே மதுரமான ஒடிக்குலான் வாசனை அவளிடம் இருந்து கிளம்பி வந்தது. 

‘இப்போதுதான் ஆபீஸர் வெளியில் போனார்- இத்தோடு மூணு மணிக்குத்தான் அவரைப் பார்க்கலாம்-‘ என்று இங்கிலீஸ் காரர்களின் தமிழில் சொல்லி, அழகாகச் சிரித்தாள் அவள். 

நட்ராஜனுக்கு ஏமாற்றமாக இருந்தது. உடல் தெம்பு எல்லாம் போன மாதிரியும் வெறும் எலும்புக் கூடாகத்தான் அவள் முன் நிற்பது மாதிரியும் நட்ராஜன் உணர்ந்தான். ‘தேங்ஸ்’ என்று கூறிவிட்டுத் திரும்பினான். 

மணி இப்போது ஒன்றரையை நெருங்கிக் கொண்டிருந்தது. தலையை விண் விண்ணென்று தெறித்தது. நேராக டீக்கடையை நோக்கி நடந்தான். சோறு சாப்பிடத் தோணவில்லை. பசித்தது. ஒரு வயதானவரும் ஒரு சிறு பெண்ணும், தையல் இலையில் சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ரெண்டு வடையை மென்று, டீயைக் குடித்தான். பக்கத்தில் பெட்டிக் கடையில் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு வந்து மீண்டும் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு புகைக்க ஆரம்பித்தான். 

மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் ஆபீஸர் வரவில்லை. நிழலுக்கு வேப்ப மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்தான் நட்ராஜன். பெரும்பாலும் இப்போது கூட்டம் இல்லை. பொட்டல் வெளியில் உஷ்ணக் காற்று அவன் முகத்தை எரித்தது. பனியன் தெப்பமாக நனைந்து, அக்குள் பகுதி ஈரம் நசநசத்தது. அடிக்கடி பனியனுக்குள் உப்பென்று ஊதிக் கொண்டான். 

கடைசியாக, ஸ்கூட்டர் சத்தம் முன்னால் வர, ஆபீஸர் வெள்ளையாக வந்து சேர்ந்தார். காலையில் இருந்த வெள்ளை கொஞ்சங்கூட கசங்கவில்லை. இன்னும் வெள்ளை கூடியிருப்பதைப் போல அவனுக்குப் பட்டது. இஸ்திரீ கூடக் கலையாமல் இருந்தது. அவர் உதடுகள் வெற்றிலைச் சிவப்பேறி இருந்தன. கண்கள் மட்டும் கொஞ்சம் காலையில் இருந்ததைவிட வீங்கி இருப்பதைப் போல அவனுக்குப் பட்டது. 

அவர் விறைப்பாக, கம்பீரமாக ஆபீசுக்குள் நுழைந்தார். நட்ராஜனும் அவர் கூடவே உள்ளே போனான். உள்ளே அதே டைப்பிஸ்ட் அதே அழகான சிரிப்போடு அவனை வரவேற்றாள். வெயிலின் கடுமையான உஷ்ணச் சூழ்நிலையில் இங்கு மட்டும் கொஞ்சம் குளிர்ச்சியாய் இருப்பதற்கு இவள் சிரிப்பும் ஒரு காரணமாக இவனுக்குப்பட்டது. 

‘இப்போதானே ஆபீஸர் வந்தார். ஒரு டென் மினிட்ஸ் ஆப்டர் போங்களேன்…’ டைப்பிஸ்ட் கொஞ்சினாள். 

நட்ராஜன் அங்கேயே நின்றுகொண்டு பராக்குப் பார்க்கத் தொடங்கினான். நேருவின் வாசகங்களுடன் கூடிய அவர் கழுத் தளவு படம், லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரது சில ‘கொட்டேஷன்கள்’ அவர்களது படங்களுடன் இந்திரா காந்திக்கு முன் நெற்றியின் மேல் கொஞ்சம் நரைத்திருந்தது ரொம்ப அழகாக இருப்பதாகப் பட்டது இவனுக்கு. பெரிய பெரிய மேசைகள், காகிதங்களைக் கண்களால் தின்று கொண்டிருக்கும் கழுத்து வளைந்த மனிதர்கள். பரபரப்பாக யார் யாருடைய தலைவிதிகளையோ நிர்ணயித்துக் கொண்டிருக்கும் அவசரக் கைகளின் ஓட்டங்கள்… டிக் டிக்கென்று காலத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கும் கடிகாரம்… பூட்ஸ் கால்கள், பாட்டாவின் புதுரக செருப்புகள், அவற்றின் நடைச் சத்தங்கள், கிருதாக்கள், கறுப்பின் ஊடே வெள்ளை நெசவுகள், கடிகாரத்தின் நிதானத்தைக் கடிந்து கொள்ளும் அரைக் கண்கள்… 

டைப்பிஸ்ட் கொடி மாதிரி அசைந்து அசைந்து அறைக்குள் போய் மிக நிதானமாக வெளியில் வந்தாள். 

‘எஸ்… யு மே கோ…’ என்றாள் நட்ராஜனைப் பார்த்து. 

அவன் அறைக்குள் நுழைந்தான். பெரிய அறை அது. சுத்தமாக இருந்தது. மேலே ஃபேன் அவசரமில்லாமல் மெதுவாகச் சுற்றிக் கொண்டிருந்தது. அழகான கலர் கிளாத் விரித்த பெரிய மேசையின் பின் நன்றாகச் சாய்ந்து ஈஸிசேரில் இருப்பது மாதிரி இருந்தார் அவர். அவரது கண்கள் அரைகுறையாகத் திறந்தும் மூடியும் இருந்தன. அந்த அமைதியான சூழ்நிலையில், அவரிடம் பேசி அந்த அமைதியைக் குலைக்கவும் பயமாக இருந்தது அவனுக்கு. நிமி ஷங்கள் கரைந்தன. ஆபீஸர் கண் திறக்கவில்லை. நட்ராஜன் லேசாகக் கனைத்து விட்டுக் கொண்டான். சட்டென்று விழித்துப் பார்த்த அவர், அவனையே முறைத்துப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். பிறகு, தலையை மேலும் கீழும் அசைத்து ‘என்ன’ என்று கேட்பது மாதிரி அவனைப் பார்த்தார். 

நட்ராஜன் தன் காகிதங்களை அவர் முன்னால் வைத்து ‘நான் புலவர்… பாஸ் பண்ணியிருக்கேன். தமிழ் பண்டிட்டாகப் பதிஞ்சுக் கலாம்னு…’ என்று ஒவ்வொரு வார்த்தையாக அவன் அளந்து சொன்னான். 

சாய்ந்து உட்கார்ந்திருந்தவர், அப்படியே கொஞ்ச நேரம் இருந்தார். பின் நேராக உட்கார்ந்தார், ஒரு நிமிஷம் காகிதங்களையே உற்றுப் பார்த்தார். நாசூக்காக அவற்றை இப்படியும் அப்படியும் புரட்டிப் பார்த்தார். விரலை காலிங்பெல்லை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக, உடலை அசைத்துக் கொள்ளாமல் மெல்ல நீட்டினார். அரை நிமிஷம் அப்படியே ஓய்வெடுத்துக் கொண்டார். 

உள்ளே நுழைந்த பியூனைப் பார்த்து, ‘துரைசாமி…’ என்று முணுமுணுத்தார். களைத்து விட்டவரைப் போல சரிந்து படுத்துக் கொண்டார். 

துரைசாமி (என்று நினைத்தான்) உள்ளே வந்தான். பேசாமல் நின்றான். கால்கள் விறைத்துப் போய் நின்றிருந்தான் நட்ராஜன். கண்களைப் பிட்டுக்கொண்ட ஆபீஸர் அப்படியே சுற்றும் ஃபேனையே, அது எப்படிச் சுற்றுகிறது என்று ஆராய்பவர் போல உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். பின், என்னமோ எழுதினார். காகிதங்களை துரைசாமியிடம் கொடுத்தார். காலை நீட்டி நன்றாகச் சாய்ந்து அந்த வசதியான நாற்காலியில் படுத்தார். கண்ணை மூடினார். 

நட்ராஜன் ஆபீஸை விட்டு வெளியில் வரும்போது மணி ஐந்தை நோக்கிக் கொண்டிருந்தது. வெயில் அவ்வளவாக இல்லை. ஆனாலும் உஷ்ணம் இருந்தது. அப்போதுதான் தான் காலையி லிருந்து சிறுநீர் கழிக்காதது திடீரென்று அவனுக்கு ஞாபகம் வந்தது. நினைவு வந்ததும் அடி வயிறு கனத்து முட்டிக்கொண்டு வருவது போல் இருந்தது. ஒரு புளிய மரத்து நிழலில் உட்கார்ந்து எழுந்தான். மூத்திரம் மஞ்சளாகப் போயிற்று. நாளைக்குத் தலை முழுக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். மீண்டும் அந்தப் பெட்டிக் கடைக்குப் போய் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு தான் போக வேண்டிய ஊருக்கு, பஸ்ஸை எதிர்நோக்கிக் காத்திருந்தான் நட்ராஜன். 

– 1972

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

பிரபஞ்சன் பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *