ஒரு சரித்திரம் சரிகிறது




(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆச்சிக்குக் கிட்டத்தட்ட எண்பது வயசிருக்கலாம், கூடவுமிருக்கலாம். அவள் குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது தனது பழைய கால அனுபவங்களையும் சேர்த்துச் சொல்வாள்.
அப்படி அவள் சொல்லும் அனுபவ ரீதியான கதைகளுக்கு வயது பார்த்தால் அவை எழுபது அல்லது எண்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தவை.
ரஷ்ய புரட்சி பற்றி அவளுக்குத் தெரியாது. ஆனால் அவள் தகப்பன் (அந்தக் காலத்தில் திண்ணைப் பள்ளிக் கூட வாத்தியார்) தனக்குச் சொன்ன விடயங்களை, ஷார் மகாராசனும் குடும்பமும் அழிந்த கதையை அவள் குழந்தைகளுக்குச் சொல்வாள். அவளைப் பொறுத்த வரையில் சரித்திரமென்பது அரச பரம்பரை ஒருத்தரை ஒருத்தர் கொலை செய்வதும் பழிவாங்குவதும்தான். அவள் இன்று சரித்திரமாகிவிட்டாள்.
அவளையும் கொலை செய்து விட்டார்கள்.
அவள் எந்த அரச பரம்பரையையும் சேர்ந்தவளில்லை. அரசமரம் மாதிரி பெருத்து வளர்ந்த ஒரு குடும்பத்தின் பரம்பரைக்கும் மூலமானவள்.
அவளை அவர்கள் அடித்து- நொறுக்கி உருட்டி தைத்து கடைசியாக அவளின் பழமையான பண்பட்ட, வயது போன, நாளையோ அடுத்த நாளோ இறக்க வேண்டிய எலும்புக் கூட்டில் ஏறி நின்று மிதித்துக் கொலை செய்து விட்டார்கள்.
நாரான தசையால், பீறிட்டெழுந்த முது ரத்தம் அவர்கள் யூனிபோர்மில் புரளப்புரள அவர்கள் அவளைப் புரட்டிப் புரட்டி அடித்தார்கள்.
கிழவிக்கும் கொலைக்காரர்களுக்கும் மூன்று தலைமுறை வித்தியாசமிருக்கலாம்.
அவர்களைப் போல இளம் சிறார்களுக்குத்தான் அவள் வளைந்து போன தென்னை மரத்தடியிற் சாய்ந் திருந்து, தென்றல் கொஞ்சும் இரவுகளில் ராசா, ராணி, வேதாளம் என்றெல்லாம் கதை சொல்வாள். அவள் கதைகளில் இளைஞர்கள் காதலர்கள், இலட்சியவாதிகள், கண்ணியமானவர்கள். அவள் கதைகளில் வரும் இளைஞர்கள் இளவரசர்கள் தான் ஆனாலும் அவள் குழந்தைகள் பேரப்பிள்ளைகள் எல்லாம் அவளைப் பொறுத்தவரையில் இளவரசர்கள்தான்.
அவளுக்குப் பெரிய குடும்பம்.
அந்தக் குடும்பம் மட்டக்களப்பு எட்டுப்பகுதியிலும் சிதறிக் கிடக்கின்றார்கள். அவள் ஆடி ஓடித் திரிந்த காலத்தில் அக்கரைப்பற்று, திருக்கோயில், காரைதீவு, புளியந்தீவு என்று போய் வந்து கொண்டிருந்தாள்.
மாலைக்கண் வருத்தம் வந்து இரவில் பார்வை போய் விட்ட பின் பகலில் போய் வரக்கூடிய இடங்களுக்குப் போய் வந்து கொண்டிருந்தாள்.
பேரப்பிள்ளைகள் பெரியவர்களாகி வளர்ந்து, மனிதர்களாகி ஒவ்வொருத்தராய் கூண்டை விட்டுப் பறந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
சிலரின் முகமும் பலரின் குரலும் அவளுக்குப் பழக்கம். ஞாபகமும் அவ்வளவு சரியில்லை.
ஒரு காலத்தில் அழகியாய் இருந்திருக்கவேண்டும். அதை நிட்சயிக்க ஒரு புகைப்படமுமில்லை. அந்தக் காலத்தில் யாரும் படம் எடுத்துக் கொள்வதில்லை. ஆயுள் குறைந்து விடும் என்ற பயம்!
அவள் பேரன் திருச்செந்தில்நாதன் படமெடுக்கப் பழகிக் கொண்டபோது ஆச்சியை வளைந்த தென்ன மரத்தினடியில் வைத்துப் படம் எடுத்தான்.
ஆச்சியின் பேரன் திருச்செந்தில்நாதனில் அவளுக்கு உயிர். திரு என்று ஆசையாகக் கூப்பிடுவாள்.
திரு அவளுடைய முதல் பேத்தியின் மகன். அவன் தாயின் வயிற்றிலிருக்கும்போது ஆச்சியின் கணவர் இறந்து விட்டார்.
தனது பேத்தியின் வயிற்றில் பிறந்திருப்பது தனது இறந்த கணவன் என்பது ஆச்சிக்கு நம்பிக்கை.
திரு பிறந்தான். தவழ்ந்தான். எழும்பி நின்று ஆச்சி என்று மழலை சொல்ல அவள் அழுது விட்டாள். திருவின் சிரிப்பு அவளின் இறந்த கணவனை ஞாபகப்படுத்தியது. என்று சொல்லியழுதாள்.
அவன் வளர்ந்தான். படித்தான். படம் எடுக்கக் கற்றும் கொண்டான். யாழ்ப்பாணம் போய்ப் படித்து பட்டதாரியாகி விட்டான்.
தமிழ்ப் பகுதிகளில் குழப்பம்.
இலங்கையரசாங்கம் கொலைகள், கற்பழிப்பு, தீவைப்பு பின்னர் இந்திய அரசாங்கம், சினேகிதம், பூமாலை, நிறைகுடம் வரவேற்பு, பின்னர் கற்பழிப்பு கொலை, குண்டுவீச்சு, ஊரழிவு.
கிழவி இரண்டு உலக மகாயுத்தங்களின் அனுபவத்தைத் தெரிந்தவள். ஆனால் அவள் குடும்பத்தில் யாரும் இறந்ததில்லை. குழந்தைகள் பிறந்தார்கள். வளர்ந்தார்கள். பேரப்பிள்ளைகள் தந்தார்கள். அவர்கள் தங்களுக்கும் பிள்ளையும் பெற்றுக் கொண்டார்கள்.
தமிழ் ஈழப் பிரச்சினை இனவெறி பிடித்த இலங்கை அரசாங்கத்தால் அவள் எத்தனையோ பேரைப் பறி கொடுத்து விட்டாள்.
முதற்தரம் ஒரு பேரன் சிங்கள ராணுவத்தால் சுடப் பட்டு இறந்தபோது ஆச்சியும் குடும்பமும் துடித்துப் போய்விட்டார்கள். சிங்களப் பேரினவாதம் தமிழ்ச் சிறு இனத்தைக் கொன்று குவித்தது. ஆச்சிக்குப் பிறப்பும் இறப்பும் மகத்துவமானது.
அந்த மகத்துவத்தை ஒரு துளியும் மதிப்பில்லாமல் ஆக்கிவிட்ட அரசியல் மாற்றத்தை அவளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. இறப்பதும் புதைப்புக்களும் இவளின் அழுகைக்குக் காத்திராமல் அவசரமாக நடந்து கொண்டிருந்தன. அவளுக்குக் கண் தெரியாது. காதும் அவ்வளவாகக் கேட்காது. அருமைப் பேரன் திரு அவளைத் தென்னைமரத்தினடியில் வைத்தெடுத்த படத்தையும் பார்க்க முடியாது.
திருவைப் பார்ப்பதும் முடியாது. அவனைத் தடவிப் பார்ப்பாள், கொஞ்சிப் பார்ப்பாள், முகர்ந்து பார்ப்பாள்.
அவன் இருபத்திரெண்டு வயதுக்கு மேலானவன். ஆச்சியின் அன்பில் வெட்கப் படுவான். கிழவிக்கு கண் பார்வை மங்க முதல் அவளோடு பழகிய போராளிகளை அவனுக்குத் தெரியும். அவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்று தெரியும். பால் மணம் மாறாதவர்கள், பந்தடித்து விளையாடும் வயதில் பயங்கர ஆயுதம் தூக்கிக் கொண்ட வர்கள். அவர்கள் ஊரில் ஒரு நாளும் வேண்டப் படாதவர்கள். ஊருக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு கரடு முரடானது. ஆனாலும் அவர்களின் துப்பாக்கி களுக்கு ஊரார் பயம். துப்பாக்கிகள் புதிதானவை, உயர் தரமானவை என்று யாரும் சொல்லும்போது கிழவியால் எதையும் புரிந்து கொள்ள முடியாது. தென்னை மரத் தடியிலிருந்து கதை கேட்கும் வயதில் கொலை செய்யும் மாற்றத்தைக் கொண்டுவந்த அரசியலைப் புரியாதவள் அவள். இரண்டு உலக யுத்தங்களை அனுபவித்தவள். ஆனாலும் துப்பாக்கிகளை கண்டில்லை.
விடிந்த காலையின் இளம் சூட்டில், வளைந்த தென்ன மரத்தில் சாய்ந்து கொண்டு ‘திரு’ வை யோசித்துக் கொண்டிருந்தாள்.
இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு அவள் பறக்கும் குதிரைகள் பற்றிக் கதை சொல்ல மாட்டாள். ஏழு கடல்களுக் கப்பாலுள்ள பயங்கரக் குகையில் பாம்பின் தலையில் இருக்கும் மாணிக்கத்தை எடுத்துக் கொண்டு வந்து தன் காதலியிடம் கொடுக்க எந்த இளவரசனும் இப்போது போவதில்லை.
அவளைச் சுற்றி, முது கன்னிகளும், பழம் தோல்களும் தான் மிச்சம். ‘திரு எங்கே?’ அவன் சிரிப்பெங்கே? குரல் எங்கே? அவள் கேள்விக்கு யாரும் உருப்படியாக மறுமொழி சொல்லவில்லை.
திருவைக் கூட்டிக் கொண்டுபோய் ‘உனது நீளம் என்ன அகலம் என்ன என்று கேட்டபின் அவனைக் கொண்டே குழி தோண்டி அவனை இறங்கவிட்டு இறக்கப் பண்ணியதை அரையும் குறையுமாய் புரிந்து கொண்டாள். ‘திருவை’ ஏன் கொலை செய்தார்கள்? திருவைப்போல் எத்தனையோ பேர் இறந்து விட்டார்கள்.
ஆச்சியின் உலகம் ‘திரு’, புதைத்து விட்டவர்களின் ‘காம்ப்’ அடுத்த ஒழுங்கையிலிருக்கிறது. கண் சரியாகத் தெரியாமற் போக முதல் அவர்களை அவள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறாள். இன்றைய துப்பாக்கி தூக்கிகள் நேற்றையக் குழந்தைகளாயிருந்ததை நினைவு கொண்டாள். அவளுக்கும் அவர்களுக்கும் எத்தனையோ வித்தியாசம், உலகம் அனுபவங்கள் அவர்களைப் பொறுத்த வரை மிக மிக வித்தியாசமானவை.
“என்ன கிழவி” ஒரு துப்பாக்கி தூக்கி அலட்சியமாகக் கேட்டான், அவள் ‘திருவின்’ பாட்டியென்பதால் ‘ஆச்சி’ என்ற மரியாதையில்லை. திரு’ அவர்களின் எதிரி. ஆச்சி யும் அவர்களின் எதிரி. அவள் வயதும் அனுபவமும் வாழும் சுற்றலும் அவர்களின் எதிரிகள். அவளின் மழுங்கிய பார்வையில் புகை படிந்த உருவங் களால் நகர்ந்தார்கள். நடுமதிய சூரிய வெளிச்சத்தில் அவர்கள் ஏந்திய துப்பாக்கிகளின் வெள்ளி படிந்த இடங்கள் படபடத்தன.
இவர்கள் திருவை உயிரோடு புதைத்தார்கள்!
ஆச்சியின் கண்களில் நீர், இதயத்தில் எரிமலை. அவள் காறித் துப்பினாள். அவர்கள் கோபமானவர்கள். அவர்களுக்கும் இவளின் திருவுக்குமுள்ள வித்தியாசம் சாக்கடைக்கும் கோயிலுக்குமுள்ள வித்தியாசம். அவள் இன்னொரு தரம் காறித்துப்பினாள்.
வார்த்தைகள் வெடித்தன. வார்த்தைகளில் அவளின் வயதின் உரம் தொனித்தது. தொனியில் வெறுப்புத் தகர்ந்தது.
“கொலைகார மிருகங்கள், மனிதர்களை வேட்டை யாடும் மிருகங்கள்” அவள் காறித்துப்பினாள்.
அவளின் சுருங்கிய தோலை ஒருத்தன் எட்டியுதைத் தான். இன்னொருத்தன் துப்பினான் அடுத்தவன் ஏறி மிதித்தான்.
எண்பது வயதும், இரு உலக யுத்தங்களின் அனுபவமும் மதிய வெயிலில் மிதிபட்டு இறந்து கொண்டிருந்தது.
– அரை குறை அடிமைகள், முதல் பதிப்பு: 1998, மணிமேகலிப் பிரசுரம், சென்னை.
![]() |
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க... |