ஏழையின் கல்வி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 31, 2024
பார்வையிட்டோர்: 2,465 
 
 

அடிப்படை வசதிகள் அற்ற ஒரு சிறிய கிராமத்திலே பிறந்தது எனது குற்றமா? என்று மனதோரம் பல கேள்விகள் எழுந்து கொண்டிருந்தது. கேள்விகளுக்கு எவ்வாறு பதில் கூறுவது என்று தெரியவில்லை . கேள்விகள் கேள்விகளாகவே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். ஒரு நாள் என்னுடைய கேள்விகள் அனைத்திற்குமான ஒரு பதில் கிடைக்கும் என்கின்ற எண்ணத்தை ஆழ்மனதில் பதித்துக் கொண்டேன். அதை நினைத்தபடியே என்னுடைய தூக்கமும் ஆரம்பித்துவிட்டது. அப்போது ஒரு கனவு என் கண்முன்னே தோன்றியது என்னுடைய புத்தகங்கள் அனைத்துமே எரிந்து சாம்பலாகுவதைப் போன்ற கனவு பயத்துடனே காலை எழுந்ததும் எனது அம்மாவிடம் எனக்கு வந்த கனவினை கூறினேன் அதற்கு அம்மா “நீ என்றும் கவலை கொள்ள வேண்டாம் உன்னுடைய படிப்புதான் உனக்கு இறுதிக்காலம் வரைக்கும் துணையாக வரும் நானோ அல்லது உனது அப்பாவோ சகோதரர்களோ யாருமே உன்னுடன் துணையாக இருக்க மாட்டார்கள் நீ இறக்கும் வரைக்கும் என்றுமே துணையாக இருப்பது உன்னுடைய கல்விதான் என்று எனது தாயார் அடிக்கடி கூறி என்னை ஊக்குவித்துக் கொண்டிருந்தார்”.

தாயினுடைய ஒவ்வொரு வார்த்தைகளையும் கேட்டு வளர்ந்த நான் கல்வியின் மீது அதிகமான ஈடுபாட்டை கொண்டுவளாக வளர்ந்து கொண்டிருந்தேன் ஒருநாள் என்னுடைய சிந்தனையில் தோன்றிய ஒரு விடயம் ஏன் நான் ஒரு வைத்தியராகக் கூடாது சமூகத்தில் உயர்ந்ததோர் நிலைக்கு வந்து எங்களுடைய கிராமத்தில் ஒரு வைத்தியசாலையை அமைத்து கிராமத்தை உயர்ந்த நிலைக்கு ஏன் கொண்டு வரக்கூடாது. எங்களுடைய சமூகம் என்றுமே பின்தங்கிய சமூகமாக இருக்க வேண்டுமா? என்கின்ற பல்வேறு வகையான கேள்விகளை எண்ணுள்ளே எழுப்பிக் கொண்டிருந்தேன.;

“ஏழைக்கு கல்வி என்பது சாதாரணமான விடயம் அல்ல உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படக்கூடியது” என்று எண்ணுள்ளே பலவகையான கேள்விகளையும் அதற்கான விடையினையும் நானே வழங்கியவளாக இருந்தேன.; இவ்வாறாக நாட்கள் நகர்ந்தது என்னுடைய பாடசாலையானது அடிப்படை வசதியற்ற ஒரு பாடசாலையாகும். கற்றலுக்கான போதிய அளவான ஒரு இருப்பிடம் கூட இல்லாத பாடசாலையிலே நான் கல்வியை கற்றுக் கொண்டிருந்தேன.; என்னுடைய பாடசாலை ஆசிரியர்களின் வழிகாட்டலினாலும் அவர்கள் கூறுகின்ற ஒவ்வொரு விடயங்களையும் கிரகித்து கிரகித்து என்னுடைய அறிவு வளர்ச்சியினை மேலும் வளர்த்துக்கொண்டிருந்தேன.;

அப்பொழுது என்னுடைய அதிபர் என்னிடம் வந்து உன்னுடைய வாழ்க்கை உன் கையில் தான் உள்ளது வீட்டுச்சூழல் குடும்பச்சூழ் நிலயினைக் கருத்தில கொண்டு கல்வியை மட்டும் கடைசி வரைக்கும் கைவிடாமல் படிச்சிட்டு வந்தாய் என்றால் நிச்சயமாக சமூகத்திலும் ஊரிலும் சரி உனக்கான ஒரு அடையாளத்தை பெற்றுக் கொள்ளுவாய் என்று என்னுடைய அதிபர் எனக்கு கூறினார். நான் அதிபரிடம் ஏழையினுடைய கல்வி என்றுமே வீணாப் போகாது சேர் என்று கூறினேன.;

எனது பாடசாலையிலே எனக்கு ரொம்ப பிடித்த ஆசிரியர் என்னுடைய தமிழ்ப் பாட ஆசிரியர்; தினமும் நல்லது கேட்டது வாழ்க்கை அனுபவம் என்று பல பாடங்களை அனுபவம் சார்ந்த ரீதியில் கூறுவார். இவ்வாறாக பாடசாலை நாட்களும் நகர்ந்து சென்றன அன்றொரு சனிக்கிழமை என்னுடைய அம்மா என்னிடம் வந்து உண்பதற்கு உணவு ஏதுமில்லை உனக்கு என்ன செய்து தர என்று கேட்டார். “எனக்கு பசிக்கவில்லை என்று எனது தாயிடம் கூறினேன் ஆனால் எனக்கு பசியோ என்னுடைய வயிற்றினிலுள்ள ஒவ்வொரு பாகங்களையும் பகுதி பகுதியாக பிரிப்பது போன்றிருந்தது இருப்பினும் என் தாயினுடைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு எனக்கு பசி இல்லை அம்மா என்று கூறினேன்.”

ஆனால் எனது முகத்தினுடைய வாட்டத்தினை அறிந்து கொண்ட தாய் பசிக்கின்றது என்பதை அறிந்து கொண்டார் போன்று பக்கத்துவீட்டு அக்காவிடம் சென்று அரிசி இருந்தா ஒரு ரெண்டு சுண்டு தாங்க நான் நெல்லு குத்தினதும் உங்களுக்கு மாறித்தாறன் என்று எங்கம்மா அக்காக்கிட்ட கேக்கிறாங்க அக்கா அதற்கு இந்தாங்க நீங்க மாறித்தர தேவையில்ல பரவால்ல வச்சுக் கொள்ளுங்க என்று என்னுடைய அக்கா கூறினார். அதற்கு அம்மா இல்லை இவர் வேலைக்கு போய் இருக்காரு திரும்ப வந்ததுமே உங்க அரிசிய மாறி வாங்கித்தாறேன் என்று சொல்லிட்டு என் அம்மா வந்துட்டார். கறி ஒன்றுமில்லை என்பதினால் அம்மா அதனை தேங்காய்ப்பால் சீனி உப்பு சேர்த்து கஞ்சி போன்ற செய்து தந்தவர். இரவு பகல் என்று இரண்டு நேரமும் எங்களுடைய உணவு அதுவாகத்தான் இருந்தது இவ்வாறாக நாட்கள் கடந்து சென்று கொண்டிருந்தது நான் இரவில் படிப்பதை விட பகலில் அதிக நேரம் படித்தேன். அப்போது எனது தோழி “என்னிடம் இரவிலும் இப்படித்தான் அதிகநேரம் படிப்பாயா?என்று கேட்டாள் நான் எனது தோழியிடம் இரவில் படிப்பதற்கு விளக்கிற்கு எண்ணையில்ல அதனால்த்தான் கூடுதலாக பகலில் படிக்கின்றேன். இப்போது வீட்டில் மண்ணெண்ணெய் வாங்கக் கூட காசுமில்ல அதான் இரவில் படிக்க வேண்டியதை இப்போது சேர்த்து படிக்கின்றேன் என்று கூறினேன்”

எனது தோழி என்னிடம் நம்ம ஏழையாகப்பிறந்தது நம்மட தப்பில்ல என்று கூறினாள் எனக்குத்தான் படிக்க சரியா வராது ஆனா நீ நல்லா படிச்சு நம்முடைய ஊருக்கு ஒரு நல்ல பேர எடுத்துத்தாடி என்றாள். நான் அவளிடம் எனது வாழ்நாள் இலட்சியமே அதுதான் என்று கூறிவிட்டு நான் படிப்பதற்கு தொடங்கி விட்டேன் இவ்வாறாக நாட்கள் நகர்ந்தன ஒரு மாதிரியாக சாதாரண பரீட்சையில் சித்தியடைந்து அதிகமான பெறுபேறுகளைப் பெற்றுவிட்டேன். எனது அதிபர் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினார்கள் எனது அம்மா அப்பா அண்ணா என எல்லோரும் எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள் இனி உயர்தரம் படிப்பதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் ஒரு வைத்தியராக வேண்டும் என்பது என்னுடைய வாழ்நாள் கனவாகும். என்ன செய்வது என்றே தெரியவில்லை அப்போது என்னுடைய அப்பா என்னிடம் நீ ஒன்றும் யோசிக்கத் தேவையில்லை மகள் நம்முடைய காணி வளவு எல்லாத்தையும் வித்தாவது உன்னைய படிப்பிக்கிறேன் என்றார.;

நான் ஒன்றும் கூறவில்லை கண்களில் தண்ணீர் அருவி போன்று வந்து கொண்டிருந்தது. எல்லா சுமையும் எனது பெற்றோருக்கு என எண்ணி கண்கள் ஈரமானது என்னுடைய பாடசாலை ஆசிரியர்கள் அதிபர் என எல்லோரும் எனக்கு உதவிகளை செய்வதாக கூறினார்கள் நான் முதன்முறையாக எனது வீட்டை விட்டு படிப்பதற்கு வேறோரு பாடசாலைக்கு செல்ல வேண்டியதா இருந்தது அங்கு சென்று படிப்பதற்கு ஒரு மாதம் 5000 ரூபாய் பணம் கட்டவேண்டும் என கூறினார்கள் எனது பெற்றோர் ஆசிரியர்கள் அனைவரும் அந்தப் பணத்தை கட்டுவதாக கூறி என்னை வேறு ஒரு பாடசாலைக்கு கொண்டு விட்டனர் “நான் என்னுடைய தாயாரிடம் நான் உங்களை விட்டு பிரிகின்றேன் என்று கவலைப்படவில்லை அம்மா நான் உங்களை மீண்டும் வந்து சேரும்போது உங்களின் பெயரை இந்த ஊரே போற்றும் படி செய்வேன் என்று கூறி எனது உள்ளத்தை கல்லாக்கி உறுதி கொண்ட மனதுடன் கல்வி கற்க சென்றேன்.”

புதிய இடம் புதிய நண்பர்கள் புதிய உணவு என்று எல்லாம் புதிதாக இருந்தது எனது இலட்சியம் இது என்று மனதில் தினம் எண்ணிக் கொண்டு எனது பயணத்தினை ஆரம்பித்தேன். ஒரு நாள் எனது ஆசிரியர் என்னை பார்ப்பதற்காக நான் கல்வி கற்கும் பாடசாலைக்கு வந்திருந்தார் அப்போது என்னைப் பற்றி பிற ஆசிரியர்களிடம் கேட்டுவிட்டு என்னிடம் வந்து பழம் உணவு எனத் தந்துவிட்டு எப்படி படிப்பெல்லாம் போகுது என்று கேட்டார் நான் படிப்பு எல்லாம் நன்றாகப் போகிறது சேர் என்று கூறினேன். அப்பொழுது எனது அம்மா எனக்கு பிடித்த மீன் கறியினையும் பிட்டினையும் கொடுத்ததாக என்னிடம் தந்தார் நான் எனது ஆசிரியரிடன் என்னுடைய அம்மா என்னை பார்க்க வரவில்லையா? என்று கேட்டேன் அதற்கு நீ உன்னுடைய இலட்சியத்தை அடைந்து விட்டு அவரை வந்து சந்திப்பாய் என்று கூறியிருந்தாயாமே அதனால் உன்னுடைய தாய் வரவில்லை உன்னுடைய தாயைப் பார்த்தல் நீ கவலையடையக் கூடும் அதனால் உன்னுடைய இலட்சியப்பாதை மாறக்கூடும் என்று எண்ணினாரோ தெரியவில்லையே என்று ஆசிரியர் கூறினார் இவ்வாறு இருவரும் உரையாடிக் கொண்டிருந்த வேளையிலே என்னுடைய ஆசிரியர் நான் இனி வீட்டுக்கு போக போறேன் நீ நன்றாக படித்துவிட்டு லீவு ஏதும் கிடைச்சா ஊருக்கு வந்துட்டு போ என்று ஆசிரியர் என்னிடம் கூறிவிட்டு சென்று விட்டார். நான் எனது அறைக்குச் சென்று அம்மா தந்த பிட்டினையும் மீன்கறியையும் ரசித்தபடி உண்டு கொண்டிருந்தேன் அப்பொழுது என்னுடைய தாய் நான் ஊரிலே இருக்கும்போது அவருடைய கையால் பிசைந்து கூட்டுகின்ற அந்த நினைவு என் சிந்தனையிலே ஓடிக்கொண்டிருந்தது கண்களிலே சிறு துளியாக கண்ணீர் வடிந்து அப்பொழுது எனது புதிய தோழி என்னிடம் வந்து ஏன் அழுது கொண்டிருக்கிறாய் என்று கேட்டாள் நான் எனது அம்மாவின் நினைவு வந்துவிட்டது என கூறினேன்.

அவள் நீ கவலைப்படத் தேவையில்லை இந்த பாடசாலையிலே அதிக புள்ளியினை பெறுகின்ற ஒரே மாணவி நீ மட்டும் தான் நீ படிச்சி நல்ல பெயரை ஈட்டி கொடுத்தால் அது உன்னுடைய தாய்க்கு பெருமை தானே என்று ஆறுதல் வார்த்தைகளை கூறினாள் நான் எல்லாவற்றையும் யோசித்துக்கொண்டு என்னுடைய ஊருக்காகவும் என்னுடைய பெற்றோருக்காகவும் என்னுடைய இலட்சியத்தில் இருந்து மாறக்கூடாது என்று உறுதி கொண்டு அம்மா தந்த உணவினை உண்டுவிட்டு படிக்கத்தொடங்கினேன். இவ்வாறு நாட்கள் பல கடந்து ஒரு விடுமுறை வந்தது. அந்த விடுமுறைக்கு என்னுடைய ஊருக்கு செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. நான் எனது ஒரு சில உடைகளை எடுத்துக்கொண்டு என்னுடைய வீட்டிற்கு சென்றேன். வளமை போன்று என்னுடைய வீடு எவ்வாறு இருந்ததோ அதேபோன்றுதான் இருந்தது என்ன ஒரு சில மாற்றங்கள் மட்டும் காணப்பட்டது.

எங்களிடமிருந்து ஆடு மாடுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது அம்மாவிடம் சென்று அம்மா நிறைய மாடுகள் இருந்ததே என்று கேட்டேன் அதற்கு அம்மா உன்னுடைய படிப்பு செலவுக்காக ஒரு சில மாடுகளை விற்றுவிட்டோம் என்று கூறினார் நான் அம்மாவிடம் ஒன்றும் கூறவில்லை அம்மா இதையெல்லாம் யோசிக்காமல் படித்து ஒரு நல்ல நிலைமைக்கு வந்தா இதைவிட நிறைய சம்பாதிக்கலாம் அப்படி என்று அம்மா எனக்கு அறிவுரை கூறினார். நான் எனது அம்மாவிடம் நிச்சயமாக என்று கூறிவிட்டு வீட்டுக்குள்ளே சென்றேன் அன்று இரவு என்னுடைய அம்மா அப்பா அண்ணா அனைவரோடுமிருந்து உணவு உண்டு மகிழ்ச்சியாக அன்றைய இரவைக் கழித்துவிட்டு அடுத்த நாள் என்னுடைய பாடசாலைக்கு புறப்படுவதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன் அப்பொழுது அண்ணா என்னிடம் வந்து இந்தா நான் வேலை செஞ்ச காசு இருக்கிறது வச்சுக்கோ என்று சொல்லி என்னிடம் காசைத் தந்தார் நான் வேண்டாம் என்று சொன்னேன் இருப்பினும் அண்ணா இதை வைத்துக்கொள் தேவைப்படும் என்று கூறினார் நான் அதை வாங்கிக்கொண்டு பாடசாலைக்கு சென்றேன்.

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலே படித்துக் கொண்டிருக்கின்றேன் என்பதை என்னுடைய பெற்றோரிடம் கூறவில்லை ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் மேலும் மேலும் கஷ்டத்தை அனுப்பிப்பது எனக்கு பிடிக்கவில்லை அதனால் எதையும் கூறாமல் நான் என்னுடைய பாடசாலைக்கு சென்று விட்டேன் இரவு பகல் என என்னால் முடிந்த அளவிற்கு கல்வியை கற்றுக் கொண்டு வந்தேன் இவ்வாறாக கற்றுக் கொண்டு வருகின்ற வேளையில் உயர்தர பரீட்சைக்கான நேரம் வந்துவிட்டது அப்போதும் ஒரு விடுமுறை தந்தார்கள் வீட்டிற்கு சென்று வருமாறு நான் எனது வீட்டிற்கு வந்து எந்தவிதமான செய்யற்பாடுகளிளும் ஈடுபடாமல் எனது அறைக்குள்ளே சென்று படிப்பை மட்டுமே மனதில் கொண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என்னுடைய மாமியார் வந்து என்ன மகள் வந்து விட்டாளா? படிப்பெல்லாம் எப்படிப் போகுது என்று கேட்டார் அதற்கு அம்மா பரவாயில்லை அடுத்த மாதம் அவளுக்கு பரீட்சையாம் அதனால ரெண்டு நாளைக்கு வீட்டை இருந்துட்டு போகட்டும் என்று அனுப்பி இருக்காங்க என என்னுடைய தாயார் மாமிக்கு கூறினார்.

மாமி என்னை பார்த்து ந மது ஊர்ல முதன் முதலில் ஒரு நல்லா படிக்கிற பிள்ளை நீ மட்டும் தான் நல்லா படிச்சு வந்து ஊருக்கு ஒரு மதிப்ப பெற்று கொடு மகள் என்று என்னுடைய மாமியார் கூறினார் நான் எனது மாமியாரை பார்த்து சிறு புன்னகை செய்தேன். மாமியார் செல்ல இரவாகி விட்டது நானும் படித்துக் கொண்டிருந்தேன் விளக்கிலுள்ள மண்ணெண்ணெய் குறைந்து விளக்கு அணையப்போகுது என்பதைக் கூட அறியாமல் படித்துக்கொண்டிருந்தேன் அப்பொழுது என்னுடைய அம்மா வந்து அட கடவுளே! மண்ணெண்ணெய் முடிந்து விட்டது என்ன செய்றது என்று பதர்றத்துடன் கேட்டார் அப்போது என்னுடைய தந்தை விறகுகளை வெட்டி அதை எரிய வைத்துவிட்டு எரிகின்ற வெளிச்சத்தில் என்னை படிக்குமாறு கூறினார் நான் அதற்கு சரியென்று இயற்கையான குழலை ரசித்துக்கொண்டு வெளியே இருந்து கல்வியை கற்றுக் கொண்டிருந்தேன் அடுத்த நாள் காலை பாடசாலை செல்வதற்காக பேருந்து வந்தது பேருந்தில் ஏறி பாடசாலை சென்று விட்டேன்.

அங்கு சென்றதும் உயர்தர பரீட்சைக்கு செல்வதற்கான ஆயத்தங்களை செய்யுமாறு ஆசிரியர் கூறினார் நாளை உங்களுக்கான உயர்தர பரீட்சைகள் நடைபெறும் என்றும் கூறினார் அப்பொழுது என்னுடைய ஆசிரியர்களும் அங்கு வந்து எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு சென்றனர் இரவு பகல் என கண் விழித்து படித்த அனைத்தும் வீணாகிரக் கூடாது என்பதற்காக என்னால் இயலுமான வரைக்கும் படித்துக் கொண்டே இருந்தேன். சிறு துளிநேரத்தினைக்கூட சும்மா செலவழிக்கக்கூடாது என்று முழுமையாக என்னை படிப்பிளல் ஆழ்த்திக்கொண்டேன்.

இவ்வாறாக பரீட்சைகளின் நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தது முற்று முழுதாக பரீட்சைகள் முடிவடைந்த பின்னர் என்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன் அப்போது என்னுடைய தாயார் என்னிடம் பரீட்சையை எவ்வாறு எழுதினாய் என்று கேட்டார் நான் அதற்கு உங்களிடம் முன்கூட்டியே கூறியிருந்தேன் இந்த ஊரில் உங்களுக்கான ஒரு மதிப்பினை நான் பெற்றுத்தருவேன் என்று அதற்கான வழியினைத் தேர்ந்தெடுத்ததுதான் என்னுடைய கல்வியாகும் என்னுடைய உயர்தர பரீட்சை கூட அதனை நோக்கியதாகத்தான் இருக்கும் என்று என்னுடைய தாயிடம் கூறினேன் என்னுடைய தாய் என்னை வாழ்த்தி எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று கூறினார்.

இவ்வாறாக நாட்கள் நகர்ந்து கொண்டு செல்லுகையில் உயர்தர பெறுபேறுகள் வந்தது நமது நாட்டிலேயே முதலாவது வைத்தியராக தெரிவாகிவிட்டேன் என்று என்னுடைய ஆசிரியர் வந்து கூறினார். நான் ஒரு சில நிமிடம் பேரதிர்ச்சியடைந்தேன். நானா என்று அதிர்ச்சியில் இருந்து வெளிவராத வண்ணம் இருந்தேன் என்னுடைய ஆசிரியர் நீதான் ஊருக்கும் உனது தாய்க்கும் ஒரு நல்ல பெயரை சேர்த்து விட்டாய் என்று கூறினார். அப்பொழுது நான் என்னுடைய தாயாரிடம் கர்வமாக கூறினேன் அதுமட்டுமின்றி பெருமிதத்தோடும் அம்மா நான் உங்களிடம் கூறினேன் தானே இந்த ஊர்ல உனக்கான ஒரு இடத்தை நான் பெற்றுத்தருவேன் தானே என்று என்னுடைய அம்மாவிடம் சொன்னேன.; என்னுடைய அம்மா என்னை பார்த்து “இப்படி ஒரு பிள்ளை கிடைத்ததற்கு நான் தான் பெருமை செய்திருக்க வேண்டும் என்று கூறினார் நான் எனது தாயிடம் அப்படியில்லம்மா உங்களைப் போன்ற ஒரு பெற்றோர் கிடைப்பதற்கு நான் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அம்மா”

ஏழையினுடைய கல்வி எவ்வாறு வலிமையானது என்பதையும் ஏழையினுடைய கல்வி என்றுமே பொய்யாகி விடாது அம்மா உறுதிகொண்ட மனதோடு படித்தால் எதையுமே சாதிக்க முடியும் அம்மா அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்று கூறுவார்கள் அதேபோன்றுதான் எந்த செயலை ஆரம்பித்தாலும் அதிலே கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் நிச்சயமாக பலன் கிடைக்கும்.

“ஏழையும் ஓர் நாள் உயர்வான் என்பது என்னுடைய வாழ்வின் மூலம் தெரியவரும் என்று என்னுடைய தாயிடம் பெருமிதத்துடன் கூறியிருந்தேன் என்னுடைய தாயார் எனைப் பார்த்து நிச்சயம் உயர்ந்த நிலையை அடைவாய் என்று கூறி என்னை வாழ்த்தினார்.

“கடினமான பாதைகள்தான் நிறைவானை நிம்மதியினைத் தரும்.”

– குமாரசூரியர்.யர்சினி, கிழக்குப் பல்கலைக்கழகம், தமிழ்க் கற்கைகள் துறை, தமிழ் சிறப்புக் கற்கை, மூன்றாம் வருடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *