ஏக்காயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 2, 2025
பார்வையிட்டோர்: 1,105 
 
 

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனக்கு சதுரமெல்லாம் நடுங்குது. ஏதோ வந்து தொண்டைக் குளிக்குள்ள அடைக்குமாய் போல கிடக்குது. போகிற போக்கில் என்ன விபரீதமெல்லாம் நடக்குமெண்டு அனுமானிக்க முடியேல்லை. எதிர்காலம் வெட்ட வெளிச் சூனியமாக என்னைப் பயமுறுத்துது. திடுமென ஏதாவது இடியேறு வந்து என்ர சீவனை முடிக்காதோ எண்டு ஏக்கமாயிருக்கு. 

ஆ! நான் பாவி! கொடும்பாவி யாருக்கு என்ன நடந்தாலும் பரவாய் இல்லை. நான் உயிரைக் கொண்டோடித் தப்பிவிட்டால் என்ன எண்ட சுயநலம்தானே இப்பவும் எட்டிப்பார்க்குது. 

அங்கே அந்த மனுசன் என்ன பாடு படுகுதோ. நான் இல்லா விட்டால் கையும் ஓடாது! காலும் ஓடாது. எல்லாவற்றிற்கும் நான் வேணும். நான் பக்கத்திலே இல்லாமல் என்ன பதகளிப்படுதோ! 

எனக்கு மனம் பதறுது. படுத்தால் நித்திரை அண்ட மறுக்குது. கண்ட கண்ட பயங்கரக் கனவெல்லாம் வந்து மனதை உலைக்குது. சாப்பிட ஏதாவது எடுத்தால் உட்செல்ல மறுக்குது. தண்ணீர் குடித்த பின்னும் விக்கல் எடுக்குது. என்ன விக்கினமெல்லாம் வரப் போகுதோ! 

ஆறு மாதத்திற்கு முன்னம் வைத்தியத்திற்கு கொழும்புக்கு வந்து எனக்குத் திரும்பிப் போகக் கிடைக்கவில்லை. நாளுக்கு நாள் சண்டை வலுத்துக்கொண்டு வந்திட்டுது. ஓமந்தை சோதனைச் சாவடியை மூடினாங்கள். 

கொழும்பில் இருந்து ரயில் மதவாச்சி வரையும் எண்டு கதை வந்தது. கடைசியிலை…. நான் கொழும்பிலை ஒரு விடுதியிலே மூலையிலே ஒடுங்கிக்கிடக்கிறன். அங்கே என்ன பிரளயம் நடக்குதோ! 

அங்கே வன்னியிலே குண்டு வீச்சாலும் செல்வீச்சாலும் சனங்கள் என்ன அலாவலாதிப் படுகினமோ? பதுங்கு குளிக்குள்ளே பிதுங்கிக் கொண்டு எத்தனை நாளைக்கு எப்படிச் சீவிக்கிறது. ஒளித்தாலும் பதுங்கு குளியையும் பூறிக் கொண்டு நிலத்தைத் துளைக்கிற குண்டெல்லோ விழுகுது. ஓடவும் முடியாமல் ஓடி ஒளியவும் முடியாமல் எத்தனை சீவன்கள் அந்தரிக்குதுகள் அன்று ஆரோ சொல்லிப் போனைவையாம் இனித் தமிழனை ஆண்டவன்தான் காப்பாற்ற வேணும் எண்டு. ஆண்டவன் வந்தால் அவன்ர தலையிலுமெல்லோ குண்டு விழுந்து சிதறிப்போவான் அல்லது ஷெல் விழுந்து செயலிழந்து போவான். அத்தனைக்கு அட்டூழியமெல்லோ நடக்குது. குஞ்சு குருமன் எல்லாம் குண்டடி பட்டு ஷெல்லடி பட்டு சீரழிஞ்சு கிடக்குதுகள். எத்தனை பிணங்கள் அநாதையாகக் கிடைக்குதுகள். வைத்தியசாலையிலும் குண்டுவிழுகுது, குடியிருப்புக்களிலும் குண்டு விழுகுது. சனம் எல்லாம் அல்லோல கல்லோலப் படுகினம். சனம் சொந்தங்களைத் தவறவிட்டு தேடமுடியாமல் முழித்துக் கொண்டு….. மனிதாபிமானம் காற்றிலே பறக்குது. தமிழினம் பூண்டோடு அழியுது. 

பயங்கரவாதம் எண்டு ஒரு பக்கம் பேச்சு. உரிமைப் போராட்டம் எண்டு மறுபுறம் பேச்சு. இடையிலை நிண்டு இடிபடுகிறதும் வதைபடுகிறதும் சனங்கள் தானே. இது ஆர் கண்ணுக்கும் தெரியேல்ல. தெரியவில்லையோ தெரிஞ்சு கொண்டு பொழிப்புப் பார்க்கினமோ! இப்படிச் சனம் எல்லாம் அழியுமட்டும் பார்த்துக்கொண்டிருக்கினம். எல்லாம் முடிஞ்ச பிறகு புனருத்தாரணம் எண்டும் மனதாபிமான உதவியும் செய்ய வர எல்லாரும் ஆயத்தமாம். நாடெல்லாம் காடான பிறகு ஆரைக்கொண்டு போய் குடியிருத்தப் போகினம். 

எனக்கு காலை வேளையிலை அன்றாடப் பத்திரிகையை விரிச்சுப் பார்க்கிறது தான் வேலை. பரீட்சை தேர்வு முடிவு வந்தால். அதிஷ்டலாபச் சீட்டுழுப்பு முடிவு வந்தால், பெயர் வந்திருக்குதோ எண்டு பார்க்கிறது தானே வழக்கம். ஆனால் வன்னியிலை இருந்து காயப்பட்ட இறந்த சனங்களின்ர பட்டியல் பத்திரிகையிலை வரும் போதெல்லாம் எங்களின்ர சொந்தக் காரரின்ர பேர் இருக்கக் கூடாது என்று தான் நேர்ந்து கொண்டு பார்ப்பன். பேர் இல்லை என்றால் ஓர் அற்ப சந்தோக்ஷம். அதே நேரம் அவர்களுக்கு வேறு ஏதாவது நேர்ந்திருக்குமோ அல்லது போர்க்களத்திலை சிக்குப்பட்டு அவதிப்படுகினமோ எண்டு மனம் அந்தரிக்கும். தப்பி வருகிற சனங்களை முகாம் வழிய அடைச்சு வைத்திருக்கிறதாக அறிய கிடக்கு ஐயோ! வெளியில் இருந்து ஆரும் காணவோ கதைக்கவோ முடியாதாம். அந்த இயலாத மனுசனும் சின்னஞ்சிறு பாலகரும் அந்த சிறைக்குள்ளே இருந்து என்ன பாடுபடுகிறதுகளோ! 

ஒரு நேரம் பால் புகட்டப் பிந்தினாலும். நித்திரை குழம்பினாலும் ‘ஓ’ வென்று ஓலம் போடுகிற குழந்தைகளெல்லாம் என்னவெல்லாம் இம்சைப்படுத்துகளோ ஐயோ! இதுகளை நான் எப்ப காணப்போகிறனோ! அல்ல காணத்தான் வாய்புக் கிட்டுமோ என்று ஏக்கமாக் கிடக்குது! 

அவள் நடுவிலாள் சாந்தி என்ன பங்கப்படுகிறாளோ தெரியாது. அப்பிராணி சீவன் என்ன மாதிரி துடுக்கான பிள்ளையாய் இருந்தவள். துடிப்பாகப் பள்ளிக்கூடம் போய்வந்த பாவி. நல்ல கெட்டிக்காரி. ஆறு வருசத்திற்கு முன்னம் பள்ளிக்கூட வளவிற்குள்ள கிபீர் போட்ட குண்டு விழ, அருகில் நின்ற பொடியன் ஒருவன் சிதறி விழுந்து துடிக்கக் துடிக்கச் செத்துப்போனான். இதைக்கண்ட இவள் மூர்ச்கையாகி விழுந்து எழுந்தவள் தான் அதன் பிறகு நடைப்பிணமாக ஆகிப் போனாள். பள்ளிக்கூடம் போக மறுத்தவள் தான். எந்த நேரமும் முழியைப் புரட்டிக்கொண்டு யோசித்தபடி திரிவாள். ஆரோடும் கதைகாரியம் இல்லை. இப்பவும் இரத்தம் கண்டால் மூர்ச்சையாகிவிடுவாள். ஏதும் கொடுத்தால் ஏனோ தானோ எண்டு ஒரு சாப்பாடு. உண்டேன் உறங்கினேன் எண்ட கணக்கிலை திரியும். வானத்திலே ஒரு ‘சீ’ பிளேன் போனாலும் முழி பிதுங்கும். கிபீர் வரப்போகுது எண்டு கத்திக்கொண்டு முதல் ஆளாக பதுங்கு குழிக்குள்ளே போய் குப்புறப் படுத்திடுவாள். இப்ப இந்தப் போராட்டத்துக்குள்ளே குண்டு வீச்சுக்கும் எறிகணை வீச்சுக்கும் இடையிலை என்ன பதகளிப்படுறாளோ! என்ன கோதாரி நடக்குதோ. இவளைக்கட்டி மேய்க்கவே ஒரு ஆள் வேறாக வேணும். அந்த இயலாத மனுஷன் என்ன பாடு படுகுதோ. நினைக்கவே ஈரல் பற்றி எரியுதே! அம்மா! வயது எண்பதுக்கு மேலாகியும் என்ன திடகாத்திரமாக இருத்தவ. கண் பார்வை தான் குறைவு. கிபிர் வருகிற சத்தங் கேட்டால் போதும் பதுங்கு குழிக்குள்ள ஓடிப்போய் இருந்திடுவா. என்ன அம்மா இன்னும் சாகப் பயமோ? என்டு நாங்கள் சூழ்நிலையையும் மறந்து பைம்பல் அடிப்பம். எடி எடி இவ்வளவு காலம் வாழ்ந்தது இப்படி அவலச்சாவு சாகவோ என்று சொல்லுவா. எத்தனை உயிர் அவமாய் சாகுது. இப்ப பதுங்கு குழியும் இருக்குமோ! உருத்திரபுரத்தில இருந்து கிளிநொச்சிக்கு மாறி கிளிநொச்சியில் இருந்து தர்மபுரம் ஓடி, தர்மபுரத்தில் இருந்து புதுக்குடியிருப்புக்கும் போய்….. நடக்க முடியாமல் தளம்புறல இந்த எறிகணை வீச்சுக்கும் குண்டு வீச்சுக்கும் எங்கே எப்படி நிண்டு பிடிக்கிறாவோ? இப்ப மூண்டு நாலு மாசமா அங்கே நடக்கிறது ஒண்டும் அறிய முடியேல்ல. ஒரு செய்தியும் வர வழியுமில்லை. கூழ் பானைக்குள்ள விழுந்த பல்லி மாதிரி இங்க நான் தத்தளிச்சு கொண்டு நிற்கிறன். 

முப்பது வருசத்துக்கு மேலாக நாங்கள் உழைப்பை உரமாக்கி கண்ணீர் விட்டு வளர்த்து உண்டாக்கிய தோட்டம் வரவு, காணி வீடு வளவு. மாடு கண்டு எல்லாம் விட்டுட்டு….. தைப்பொங்கல் எண்டு சொல்லி சனங்கள் எல்லாம் ஓரே கூத்தும் கொண்டாட்டமுமாகத் திரியுதுகள். அந்த யுத்த பூமியிலே எங்களின்ர இரத்த உறவுகள் என்ன இம்சைப்படுகுதுகள் எண்ட எண்ணம் கஞ்சித்தும் இருக்கிறதா தெரியலை. அதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை எண்ட தோரணையிலே பட்டாசு வெடியும் வேடிக்கையும் கேளிக்கையும் தான். ஏன் கொஞ்சம் அடக்கி வாசித்தால் என்ன! சுதந்திர தினமாம் ஆகாயம் எல்லாம் கிபிரும் ஹெலியுமாய் ஓரே ஆர்ப்பாட்டம். பயிற்சி நடக்குதாம். எனக்கு இந்த சத்தத்தைக் கேட்டாலே குடல் நடுங்குது. 

என்னை எல்லோரும் சந்தேகம் கொண்டுதான் பார்க்கினம். எனது அடையாள அட்டையிலே வன்னி என்றிருக்குதாம். வன்னி எண்டா நான் இலங்கை பிரசை தானே! நான் ஆர்? தமிழ்ப் பொம்பிளை அதுவும் வன்னியூர். வயது அறுபத்தாறாய்ப் போச்சு. அப்படியும் எத்தனை கேள்விகள்? நான் பயங்கரவாதியோ இராசத்துரோகியோ புரட்சிக்காரியோ.. ஆருக்கும் எதிரியோ! என்னை ஏன் இப்படி ஒரு மாதிரிப் பார்க்கினம். பயமாகக் கிடக்கு. நான் சாகாமல் சாகிறன். தணலாக வேகிறன். ஏன் கொழும்புக்கு வந்தால் எங்கே தங்கியிருக்கிறாய். ஏன் வந்தாய், எப்போ திரும்பிப் போகிறாய் என்று எத்தனை ஆயிரம் கேள்விகள். நான் எங்கே திரும்பிப் போக, திரும்பிப் போக அங்கே ஊர் எல்லாம் மயானக் காடாய் போச்சு. நான் இந்த விடுதிக்குள்ள ஒரு மூலையிலை முடங்கிக் கிடக்கிறன். வைத்தியத்திற்கு வந்தது எண்ட படியால் விடுதிக்காரர் இடம் தந்தவங்கள். ஏன் கொழும்பிலை சொந்தக்காரர் இல்லையே, இருக்கினம் ஆனால் அண்ட தயங்குகினம் இல்லை மறுக்கினம். கடைசியாக ஒரு மாதிரி இந்த விடுதியிலை இடம் கிடைச்சது 

அங்கே மேலே ஆகாய விமானம் போனாலும் எனக்கு வயிற்றைக் கலக்குது. கிபீர் தான் போகுதோ, வன்னிக்குத்தான் போகுதோ, அங்கே என்ன அழிவு நடக்கப் போகுதோ எண்டு மனம் பதறும். அன்றொரு நாள் பேப்பரையும் பார்த்து ஏங்கிப்போனன். வன்னியிலே காயப்பட்டு வைத்திய சாலையில் கிடக்கிற ஆட்களின்ர படம் கையிலை காயப்பட்ட ஒரு இரண்டரை வயதுக் குழந்தையோட அவன்ர தலையிலும் கட்டு. காலிலும் கட்டு. நான் ஏங்கிப் போனன். அது ரவி தானோ பிள்ளையை காவிக்கொண்டு போறது! முகச் சாயல் அவன் போலவும் கிடக்குது. திரும்பத் திரும்பப் பார்க்கிறன். தலை கிறு கிறு எண்டு சுழலுது. சரியாக ஆராஞ்சு பார்த்தன். படத்தில இருக்கிற பொடியனுக்கு மீசை இருக்கு, பக்க வெட்டும் வித்தியாசமாக இருக்குது. தலை இழுப்பும் வித்தியாசம். நல்லாக ஊன்றி ஆராஞ்ச பிறகுதான் அவனாக இருக்காது என்று முடிவு செய்தன். இப்படி நெஞ்சிலை நெருப்பை வைச்சுக்கொண்டு எத்தனை நாளைக்கு இந்த சீவியம். 

நாங்கள் கும்பிட்ட தெய்வமெல்லாம் குறுக்காலை போயிட்டினமோ மடுமாதாவும் மலையேறிப் போய்விட்டாவோ! முறிகண்டிப் பிள்ளையாருக்கு வந்த மோசமென்ன? வற்றாப்பளை அம்மனும் வழிதவறிப் போய்விட்டாவோ? நாகதம்பிரானும் வேகமாக வெளியேறி விட்டினமோ? தெய்வங்கள் கூட இடம் பெயர்ந்து பரதேசம் போய்விட்டினமோ? எங்கள் தேசத்தை இரட்சிக்க ஆளில்லையோ? 

என்ன ஒரு பரபரப்பாகக் கிடக்கு வெளியிலே ஆ! காலை வேளையோட பொலிஸ் திடீர் சோதனைக்கு வந்திட்டாங்கள் போலை. இனி எத்தனை கேள்வி கேட்டு உருட்டிப் புரட்டுவினம். மறுமொழி சொல்லி மாளாது. ஐயோ! ஏன் இந்த சோதனை அடையாள அட்டையையும் மருந்து அட்டையையும் எடுத்து வைப்பம். எங்கே வைச்சனோ தெரியாது. அந்தரத்துக்கு ஒண்டும் கண்ணுக்கு தட்டுப்படாது. ஆத்துக்கை வைச்சிட்டு குளத்துக்குள்ள தேடுறன். ஐயோ! எனக்குத் தலை கிறுகிறுக்குது. ஒண்டும் தெரியேல்லை. மயக்கம் வருமாப் போலகிடக்கு. ஆரும் ஒரு மிடறு தேத்தண்ணி தாருங்கோ! எல்லோருக்கும் அவை அவையின்ர அத்தடி. ஐயோ! நான் விழப்போறன் போல கிடக்கு என்னைக் கொஞ்சம் பிடியுங்கோ…..! ஆ…… ஆ…..! 

– பங்குனி, 2009.

– என்னுயிர் நீ தானே! (சிறுகதைத் தொகுதி), முதலாம் பதிப்பு: மார்கழி 2018, கவிதா நிலையம், தும்பளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *