எல்லை கடந்த மனிதாபிமானம்

இரு வாரங்களாக இந்தியா – பாகிஸ்தான் நாடுகளைச் சூழ்ந்திருந்த போர் மேகங்கள், பலத்த இடி மின்னல்களோடான கன மழை பொழிந்து, சூறாவளியைக் கிளப்பியிருந்தன. மே 7, 2025 அன்று இந்திய முப்படைகளால் நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதலான ஆப்பரேஷன் சிந்தூர் ஏற்படுத்திய அதிர்வலைகள் இந்தியாவெங்கும் இன்னும் நீடித்திருந்தன. மறுபுறம், பாகிஸ்தான் ராணுவம் அதற்குப் பதிலடியாக இந்தியப் பக்கத்தில், குறிப்பாக ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், ராஜோரி, குப்வாரா, பாரமுல்லா, ஊரி, அக்னூர் போன்ற பகுதிகளில் எல்லை தாண்டிய ஷெல் மற்றும் மோட்டார் (Mortar) தாக்குதல்களை நடத்தியிருந்தது. இதில் 13 முதல் 16 இந்திய அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், சுமார் 40 முதல் 60 பேர் காயமடைந்தனர்.
இந்த முறையற்ற தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் உடனடியாகவும், வீரியமாகவும் பதிலடி கொடுத்தது. மே 9, 2025 அன்று இரவு சுமார் 9 மணிக்கு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய அனைத்து எதிரிப் படைகளின் நிலைகளையும் இந்திய ராணுவம் அழித்தது. இதில் எதிரிகள் தங்கள் நிலைகளை விட்டு ஓடியதாக இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோவில் பதிவாகியிருந்தது. இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய உள் கட்டமைப்புகளையும், பயங்கரவாத முகாம்களையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (PoK) லீபா பள்ளத்தாக்கில் உள்ள ராணுவ உள் கட்டமைப்புகளையும் தாக்கியது. சினார் கார்ப்ஸ் அதிகாரிகள் அளித்த தகவல்களின்படி, இந்தப் பதிலடித் தாக்குதல்களில் குறைந்தது 64 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 96 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய பதட்டமான சூழலில், இந்திய ராணுவ வீரனும், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவனுமான தௌஸீஃப், இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள வனப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தான். அடர் வனத்தின் காய்ந்த சருகுகள் காலடியில் நொறுங்கும் ஒலியையும், காட்டுப் பறவைகளின் பலவித கானங்களையும் தவிர வேறு சத்தமில்லை. திடீரென, ஒரு பெருத்த அடிமரத்தின் பின்னாலிருந்து பலவீனமான முனகல் ஒலி கேட்டது.
தௌஸீஃப் உஷாரானான். இயந்திரத் துப்பாக்கியைத் தயார் நிலையில் பிடித்தபடி, சருகோசை எழுப்பாமல் பதுங்கி முன்னேறினான். அங்கே, பாகிஸ்தான் ராணுவச் சீருடையில் ஒரு வீரன் அடிமரத்தில் சாய்ந்த வாக்கில், நிலத்தில் கால் நீட்டியபடி தளர்ந்து கிடந்தான். அவனது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்பது, அங்கிருந்த காய்ந்த ரத்தக்களறியால் தெரிந்தது. அவனது ஆயுதம் கையருகிலேயே கிடந்தாலும், இப்போது அவனால் அதை எடுத்து சுட முடியாது என்பது உறுதி.
தௌஸீஃப் ஒரு கணம் தயங்கினான். எதிரி நாட்டவன், அத்து மீறி நம் நாட்டுக்குள் நுழைந்திருக்கிறான், என்றாலும் அந்த நொடியில், அவன் கண்களுக்கு அது தெரியவில்லை. வேதனையில் தவிக்கும் ஒரு சக மனிதன் என்பது மட்டுமே தெரிந்தது.
“அல்லாஹ்… யா அல்லாஹ்…” மெல்லிய முனகலோடு அந்த வீரனின் உதடுகள் அசைந்தன.
தௌஸீஃப் நெருங்கிச் சென்றான். தயக்கத்துடன், “உனக்கு அடி பலமா?” என்று உருதுவில் கேட்டான்.
பாகிஸ்தானி வீரன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். இந்திய வீரனைக் கண்டதும் அவனது கண்களில் பதற்றமும், பயமும், ஆத்திரமும் ஒருசேர மின்னின. வலது கரம் துப்பாக்கியை எடுக்க முற்பட்டது.
தௌஸீஃப் பொறுமையாக, “பயப்படாதே! நான் உனக்கு உதவுகிறேன்” என்றான்.
“காஃபிர் நாய்களின் உதவி எனக்குத் தேவையில்லை. நாங்கள் சிங்கங்கள். பாகிஸ்தான் ஜிந்தாபாத்!” துப்பாக்கியை இறுகப் பற்றிக்கொண்டு அவன் வலியிலும் ஆவேசமாகக் கத்தினான்.
தௌஸீஃப்பின் உதடுகளில் பரிகாசப் புன்னகை நெளிந்தது. “நீ எதிரி நாட்டவன் என்றாலும், நான் உன்னையும் என்னைப் போல ஒரு நாட்டின் ராணுவ வீரன் என்று மதிப்புடன் பார்க்கிறேன். ஆனால் நீயோ, என்னை மதவாதக் கண்களில் பார்க்கிறாய். இதுதான் இந்திய வீரர்களுக்கும், பாக் வீரர்களுக்கும் உள்ள வித்தியாசம்…”
“நாங்கள் ராணுவ வீரர்களோ, காய்கறி வியாபாரிகளோ, அரசு ஊழியர்களோ, உயர் அதிகாரிகளோ, தலைவர்களோ, சாமானிய மனிதர்களோ – யாராக இருந்தாலும் சரி; முதலில் நாங்கள் முஸ்லீம்கள். பிறகுதான் மற்றதெல்லாம்!” அவன் மூர்க்கமாக பதில் கொடுத்தான்.
தௌஸீஃப் அமைதியாகச் சொன்னான்: “நானும் முஸ்லீம்தான். ஆனால், அது எனக்கு இரண்டாம்பட்சம். எங்கள் நாட்டில் ராணுவச் சீருடைக்குத் தேச அடையாளம் மட்டுமே உண்டு. மதம் இல்லை.”
இப்போது பாக் வீரனின் வறண்ட உதடுகளில் இளக்காரச் சிரிப்பு.
“உனது வாய் அப்படிச் சொன்னாலும், இதயம் இஸ்லாமியன் என்பதால்தானே எனக்கு உதவ முன்வந்தது?”
“இதயத்துக்கு மதம் கிடையாது. இதயம் உள்ளவர்களுக்கு மதம் இருந்தாலும் மதவாதம், மத அடிப்படைவாதம், மதத் தீவிரவாதம் இருக்காது. நான் உனக்கு உதவ முன்வந்தது கருணை, மற்றும் மனிதாபிமானத்தின் அடிப்படையில்தான். நான் ஒரு இந்தியன் என்பதால், மனிதாபிமானத்தோடு உதவுகிறேன். உனக்குத் தாகமாக இருக்கும், தண்ணீர் குடி!”
பாட்டிலை நீட்டினான். பாகிஸ்தானி சந்தேகத்துடன் அவனைப் பார்த்தான். பிறகு வாங்கிக்கொண்டு, காயத்தின் வேதனையோடு, தண்ணீரைப் பொறுமையற்று மடக் மடக்கெனப் பருகினான்.
இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் அவனது வலது காலில் காயம்பட்டு இரண்டு நாட்களாகின்றன. பலத்த காயம் என்பதால் நடக்க இயலாத நிலை. தௌஸீஃப் அவனுக்குத் தன்னிடமிருந்த ரொட்டிகளை உண்ணக் கொடுத்தான். அவன் பசி வெகாறியோடு அதைத் தின்று, மீண்டும் தண்ணீர் குடித்தான்.
அடுத்த நாளும் தௌஸீஃப் ரகசியமாக அந்த இடத்திற்குச் சென்று அவனுக்கு உணவு கொடுத்தான். காயங்களுக்கு மருந்திட்டு, கட்டிவிட்டான்.
பாகிஸ்தான் வீரன் தெம்படைந்து, சற்றே குணமடைந்தான். எனினும் அவனுக்கு நடக்க சிரமமாக இருந்தது. தௌஸீஃப் அவனைத் தாங்கிப் பிடித்து மெதுவாக நடக்க உதவினான். அடர்ந்த மரங்கள், முட்கள் நிறைந்த புதர்கள், கரடுமுரடான பாறைகள் என அந்தக் காட்டுப் பகுதி அவர்களுக்குச் சவால்விட்டது. கஷ்டப்பட்டு பாகிஸ்தான் எல்லையை அடைந்தனர்.
“நீ எனக்குச் செய்த உதவிக்கு என்னால் எந்தக் கைம்மாறும் செய்ய இயலாது. அல்லாஹ் உனக்கு உரிய கூலியைக் கொடுப்பான்!”
பாகிஸ்தானி வீரன் உணர்ச்சியற்ற குரலில் ஒப்புவித்துவிட்டு தனது நாட்டின் எல்லைக்குள் விந்தி விந்தி நடக்கத் தொடங்கினான்.
தௌஸீஃப் சற்று நேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான். தான் செய்தது ராணுவ சட்டப்படியும், பொது நீதிப்படியும் குற்றம் என அவனுக்குத் தெரியும். எனினும், ஒரு சக மனித உயிரைக் காப்பாற்றிய பெருமிதத்தோடும், மனநிறைவோடும் அவன் கம்பீரமாக தனது படைத்தளத்தை நோக்கி நடக்கலானான்.
அப்போது, பின்னால் இயந்திரத் துப்பாக்கியின் சத்தம் கேட்டது.
திரும்பிப் பார்ப்பதற்குள் பின்னந்தலையில் குண்டுகள் துளைத்து, தலை சிதறி, ரத்தம் தெறிக்க, நிலை குலைந்து தரையில் குப்புற வீழ்ந்தான். அவனது கண்கள் இருண்டன. பின்னந்தலைத் துளைகளிலிருந்து ரத்தம் பீறிட்டது. கவிழ்ந்து கிடக்கும் அவனது உதடுகள் தாய் மண்ணை அழுத்தி முத்தமிட்டன.
– நடுகல் இணைய இதழ், 2025 ஜூன்.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |