என் பெண்டாட்டி எதிர் வீட்டு வைப்பாட்டி..!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 18, 2025
பார்வையிட்டோர்: 4,521 
 
 

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம் – 7

இரவு வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு கட்டிலில் சம்பத்திற்கு அருகில் வந்து படுத்த நித்யா.

“என்னங்க….” அவனை அழைத்தாள்.

“என்ன?”

”நான் கேட்குறதுக்கு உண்மையை ஒளிக்காம பதில் சொல்லனும்.”

“சொல்லு?”

“உங்களுக்கு என்னைத் தவிர வேற பெண் சவகாசம் இருக்கா?”

சம்பத் இதை எதிர்பார்க்கவில்லை. துணுக்குற்றான். நித்யா பக்கம் புரண்டு படுத்து “ஏன் இப்படி திடீர் கேள்வி…?” மனைவியைக் கூர்ந்து பார்த்தான்.

“கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க? உண்டா இல்லையா?“

“இல்லே.”

“பொய். உங்க அலுவலகத்துல பெண்கள் இருக்காங்களா?”

“இருக்காங்க. என் செக்ஷன்ல அஞ்சு பேர். அடுத்து உதவி ஒத்தாசைக்குன்னு அஞ்சு பேர். மொத்தம் பத்து.”

“எல்லாரும் கலியாணம் முடிச்சவங்களா?”

“முடிச்சவங்களும் இருக்காங்க. முடிக்காதவங்களும் இருக்காங்க. அம்பது வயசுல ரெண்டு பொம்பளைங்களும் வேலையில இருக்காங்க.“

“அவுங்ககிட்டே எல்லாம் நீங்க எப்படி பழகுவீங்க?”

“நட்பா பழகுவோம்.”

“நட்புன்னா?…சிரிச்சு கலகலன்னு ஒரு மாதிரியாவா?”

சம்பத்திற்கு மனைவியின் கேள்வி புரிந்தது. எதற்குத் தன் மேல் இவளுக்கு இப்படி திடீர் சந்தேகம். பெண் நண்பிகள் கிடையாது. தன் கூட படித்தவள் எவளாவது வந்து சம்பத் இருக்காரா என்று கேட்டுச் சென்றிருக்கிறாளா…?


சென்ற மாதம் அலுவலக விசயமாய் சேலம் சென்றிருந்த போது… எதிர்பாராதவிதமாய் மல்லிகா!

ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படிப்பு. ரொம்ப அழகு. எல்லாரிடமும் கலகல. அன்பு, ஆசையாய்ப் பழகுவாள். சம்பத் மேல் அவளுக்குத் தனி வாஞ்சை.

ஊதிப் பெருத்து…ஆளைப் பார்த்ததும் அடையாளமே தெரியவில்லை.

“ஏய் ! என்ன அப்படிப் பார்க்குறே?! என்னைத் தெரியலையா மறந்துட்டியா?” என்று கேட்ட பிறகு நினைவுக்கு வந்து “ஏ..மல்லிகா!” கூவினான். “குறுக்கால வளர்ந்து அடையாமே தெரியலை!” உண்மையைச் சொன்னான்.

“ஆண்கள் போல பெண்கள் என்றும் பதினாறு இல்லே. திருமணம் ஆகி ஒன்னு ரெண்டு பெத்ததும் ஊதிடுவாங்க.”

“உனக்கு ரெண்டு குழந்தைங்களா?!”

“ஆமாம். பையன் பத்தாவது படிக்கிறான். பொண்ணு எட்டாவது படிக்கிறா. வயசுக்கு வந்துட்டாள்.”

“படிப்பு முடிஞ்சதுமே உனக்குத் திருமணமா?!”

“பொண்ணெல்லாம் அப்படித்தானே! உனக்கு?”

“படிச்சு வேலை தேடி எல்லா ஆம்பளைங்களையும் போல முப்பது வயசுல கலியாணம்.”

“ஆம்பளைங்களெல்லாம் முப்பது வயசு வரைக்கும் ஜாலியா அனுபவிக்கிறீங்க. பெண்களைப் பாருங்க.. இருபது இருபத்திரண்டு வயசுக்கு மேல தங்க விடாம பொறந்த இடத்திலேர்ந்து தள்ளிவிட்டு புள்ளைப் பெத்துக்கோ குடும்பம் பார்த்துக்கோன்னு சுமையை ஏத்திடுறாங்க. உனக்கு புள்ளைங்க?”

“ஒரே ஒரு பையன்.”

“அடுத்துப் பெத்துக்கலையா?”

“என் சம்பளத்துக்கு அது போதும். நீ இங்கேதான் இருக்கீயா?”

“ஆமாம். ஏற்காடு போற வழியில மலையடிவாரம் ஓரம் காந்தி நகர். நீ…?”

“சந்தானக்குப்பம்.”

“அது எங்கே இருக்கு?”

“விழுப்புரம் பக்கம்.”

“விலாசம்?”

“10, பூச்சி அம்மன் தெரு.”

“அப்படின்னு ஒரு சாமி இருக்கா?“

“எல்லாத்துக்கும் சாமி இருக்கு.”

“ஓ.கே. எனக்கு அடுத்த மாசம் விழுப்புரம் வர்ற வேலை இருக்கு. வந்தால் வீட்டுக்கு வந்து உன்னைச் சந்திக்கிறேன். இப்போ நீ வா வீட்டுக்கு.”

“அப்புறம் வர்றேன்…”

“யோசனைப் பண்ணாதேப்பா. என் புருசன் சந்தேகப்பட மாட்டாரு.”

“இல்லே மல்லிகா. அவசர அலுவலக வேலையாய் வந்தேன். நேரம் கெடையாது. அப்புறம் வர்றேன்.”


அவள் வந்திருப்பாளோ?! – “என்ன விசயம் நித்யா?”

“உங்களுக்குப் போன் வந்தது.”

“யார் பேசினா?”

“அவசரப்படாதீங்க. யாரோ ஒருத்தி நீங்க இருக்கீங்களான்னு கேட்டு இல்லேன்னதும் போனை வைச்சுட்டாள்.”

“வேற ஒன்னும் பேசலையா?’’

“இல்லே.”

ஒரு வேளை அலுவலகத்தில் மஞ்சு, மாலா விசாரித்திருப்பார்களா?! அவர்கள் அலுவலகத்தில் தானே இருந்தார்கள். பேச வாய்பில்லையே!

எவராவது குடும்பத்தில் குழப்பம் செய்யவேண்டுமென்று செய்திருப்பார்களா? விளையாட்டுக்குச் செய்திருப்பார்களா? முக்கிய செய்தியா? இவனுக்குள் ஓடியது.

“யார் அவ?” நித்யா இடியை இறக்கினாள்.

சம்பத் அதிர்ந்தான்.

“எனக்கு எவளையும் தெரியாது!” சொன்னான்.

“தெரியாமலா இவ்வளவு நேரம் யோசனை செய்தீங்க. மறைக்க வழி தேடினீங்க?”

“அப்படியெல்லாம் இல்லே நித்யா. உண்மையில எனக்கு அலுவலகப் பெண்கள் தவிர மத்த யாரையும் தெரியாது.”

“அதுல எவ?”

“நாளைக்கு விசாரிச்சு சொல்றேன்.”

“எதுக்குப் போன் பண்ணினா?“

“அதையும் கேட்டு வர்றேன்.”

“பொண்டாட்டிக்குத் துரோகம் செய்யாதீங்க.”

சம்பத் சுருண்டு படுத்தான்.

‘எவள் இப்படியொரு திரியைக் கொளுத்தி இருப்பாள்?! சாதாரணமாகவே பெண்கள் சந்தேகப் பிராணிகள். இதில் இப்படி வேறு குட்டையைக் குழப்புகிறார்களே! எவள் அவள்?‘


காலையிலும் இதே சிந்தனையில் வீட்டில் சரியாக சாப்பிடக்கூடச் செய்யாமல் அலுவகத்திற்குக் கிளம்பி ஓடினான்.

அவன் அந்தண்டை சென்றதும் பங்கஜம் நுழைந்தாள்.

“என்னடி மருந்து கொடுத்தே, உன் புருசன் துண்டைக் காணோம் துணியைக் காணோம்ன்னு என் புருசனுக்கு முந்தி ஓடுறான்?!” கேட்டாள்.

“சரியான பேதி மருந்து. சந்தேகம்!”

“புரியும்படியாச் சொல்லு?”

“இல்லாததும் பொல்லாததுமாய் எதிர் வீட்டைப் பத்தி குறை சொல்லி அலுத்துப் போச்சு. அடுத்து எனக்கும் என்ன சொல்றதுன்னு தெரியலை. அவருக்கும் அதிக ஆர்வமில்லே. அடுத்து பத்துப் பதினைஞ்சு நாளுக்குத் தாக்குப் பிடிக்கிறாப்போல என்ன குண்டு தயாரிக்கலாம்ன்னு யோசிச்சேன். நேத்து அந்த ஆள் வந்திருக்கும் போது ஒரு ராங்க் கால் வந்துது. குண்டு தயாராயிடுச்சு. போட்டேன். வெடிச்சுடுச்சு. சத்தியமா பத்துப் பதினைஞ்சு நாள் தாக்குப் பிடிக்கும்க்கா. அதை இன்னும் நீட்டிச்சு ஒரு மாசம் ஓட்டலாம். நேத்திக்குத்தான் நமக்கு வருமானம் இல்லே. இன்னைக்கு உண்டா?“

“உண்டு.”

“யார்?”

“பழைய ஆள் ஒரு புது ஆளையும் அழைச்சு வர்றான். தயாராய் இரு. அதைச் சொல்லத்தான் வந்தேன்.”

“சரிக்கா!” இவள் தலையாட்ட அவள் சென்றாள்.


சம்பத் அலுவலகம் சென்றதும் முதல் வேலையாய் நித்யா நினைத்ததையேச் செய்தான். மாலா, மஞ்சு இருக்கைக்குச் சென்றான்.

“மஞ்சு! நேத்தி என் வீட்டுக்கு நீ போன் பண்ணுணீயா?”

“நான் எதுக்குச் செய்யனும்?”

“செய்தீயா இல்லியா?”

“இல்லே.”

“மாலா நீ?”

“இல்லே. எதுக்குக் கேட்குறீங்க?”

“என் வீட்டுக்கு யாரோ பொம்பளை போன் பண்ணி இருக்காங்க. எதுக்கு என்ன தெரியலை.”

“ஒரு வேளை சுந்தரி பண்ணி இருக்கலாம்.”

“அவ எதுக்குச் செய்யனும்?”

“அவளுக்கு விளையாட்டே இதுதான். ஏதாவது ஒரு நம்பருக்குப் போன் பண்ணி ஆம்பளை எடுத்தா பொம்பளை இல்லீயாம்பாள். பொம்பளை எடுத்தா ஆம்பளை இல்லீயாம்பாள்.”

‘இந்த விளையாட்டு எத்தனைப் பேர் குடும்பத்தைக் குழப்பி இருக்கிறது!‘ சம்பத்திற்குள் திகிலடித்தது.

“அவ நேத்திக்கு விடுப்பு. இப்போ வருவாள் கேட்டுடுடலாம்.”

மாலா சொல்லி வாய் மூடவில்லை. சுந்தரி நுழைந்தாள்.

சம்பத் தாமதிக்காமல் அவளிடம் சென்று மஞ்சு மாலாவிடம் கேட்ட அதே கேள்வியை அவளிடமும் கேட்க…

அத்தியாயம் – 8

“ஐயோ சாமி ! ஆளை விடுங்க.” சுந்தரி அலறி பின்வாங்கினாள்.

சம்பத்துடன் நின்ற மாலாவும் மஞ்சுவும் “ஏன்?!“ கேட்டார்கள்.

“நான் அந்த விளையாட்டையே விட்டுட்டேன்!”

“நிசமா?“

“சத்தியமா.”

“ஏன்?”

“இப்படி ஒரு நாள் நான் பக்கத்து வீட்டுக்காரிக்குப் போன் செய்ய… அவள் புருசன் மேல சந்தேகப்பட்டு சண்டை சச்சரவாகி தற்கொலை வரை போய்ட்டாள். நான் அப்படியே ஆடிப் போய்ட்டேன். இனிமே இந்த உயிர்க்கொல்லி விளையாட்டு வேணாம்ன்னு அன்னையிலேர்ந்து விட்டுட்டேன்.” நடுங்கினாள்.

இவளும் செய்யவில்லை.

‘பின் யார் செய்திருப்பார்கள் ?’ குழப்பத்துடன் அமர்ந்தான்.

மல்லிகா போன் செய்ய வாய்ப்பில்லை. நம்பர் தெரியாது! நினைத்தவனுக்குள்.. டைரக்டரியைப் பார்த்தால் யார் எண்ணும் தெரியுமே! நினைவு வந்தது. அவசரமாக தன் மேசையைத் திறந்து டெலிபோன் டைரக்டரியை எடுத்தான். சேலம் பகுதியைப் பிரித்து காந்தி நகர் இடத்தைத் தேடி மல்லிகா பெயரைப் பிடித்து… இன்ஷியல் ஞாபகம் வரவில்லை. நினைவேட்டுகளைப் பிரித்துப் பார்க்க…. கொஞ்ச நேரத்தில் அதுவும் வந்தது, எம். மல்லிகா. தேடினான். அதே பெயர் இன்ஷியலில் நாலைந்துகள் இருந்தது, எந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டு யார் என்னவென்று விசாரிக்க… தொய்வாய் மூடினான்.

“ரொம்ப மூளையைச் செலுத்தாதீங்க. சுந்தரி போல வேற யாராவது செய்திருப்பாங்க.”

“இல்லே மஞ்சு..! எதுக்கு, ஏன் போன் செய்தாங்கன்னு தெரியனுமே!“

“நல்லது கெட்டது முக்கியமான விசயமா இருந்தால் அவுங்களேத் திருப்பிப் போன் செய்வாங்க.”

அப்படி செய்ய வாய்ப்புண்டு. தொலைபேசியைத் தொட்டு தன் வீட்டு எண்களை அழுத்தினான்.

நித்யா எவனோடோ வந்து பூட்டி இருந்த கதவைத் திறந்தாள். வந்து தொலைபேசியைத் தொடுவதற்குள் அது நின்றது.

சம்பத் மறுபடியும் அழுத்த எடுத்தாள்.

“நித்யா! நான் சம்பத் பேசறேன்!”

அவளுக்குக் கணவன் குரலைக் கேட்டதும் குப்பென்று வியர்த்தது. இப்படி எந்த ஒரு முறையும் சம்பத் இடையில் போன் செய்ததில்லை.

“துாங்கினீயா?”

“இ..இல்லே. அ..ஆமா.”

“எதுக்குத் தடுமாறுறே?”

“து….துாக்கம்!”

“துாக்கமா !? எனக்கு யாராவது போன் பண்ணினாங்களா ?”

“இல்லே.”

“போன் பண்ணினா யார், என்ன விசயம்ன்னு கேளு.”

“சரி.” வைத்து திரும்பினாள். அவளோடு வந்த அந்த இளைஞன் சோபாவில் அமர்ந்து சிகரெட் பிடித்தான்.

“சிகரெட் பிடிக்காதீங்க.”

“ஏன்?” அவன் நன்றாகப் புகையை இழுத்துவிட்டு அடர்த்தியாய் ஊதினான்

“எனக்குப் பிடிக்காது.”

“பிடிக்காதா?” விளையாட்டாய் மறுபடியும் இழுத்துவிட்டு சிரித்தான்.

நித்யாவிற்குள் கோபம் புகுந்தது.

அவன் எதற்காக வந்திருக்கிறான் என்றுகூட யோசிக்காமல்…

“சொல்றேன்ல்லே….! பிடிக்காதீங்க..!” அதட்டினாள்.

வந்தவனுக்கு முகம் சுருங்கி விகாரப்பட்டது

“பிடிக்கிறதா இருந்தா தயவு செய்து வெளியே போங்க.” நித்யா மறுபடியும் வலியுறுத்த…

“சாரி!” அவன் சிகரெட்டைக் கீழே போட்டு காலால் மிதித்து நசுக்கிவிட்டு விருட்டென்று எழுந்து வெளியே சென்றான்.

‘ச்சே! மத்தவங்க மனசு நாகரீகம் தெரியாத மிருகம்!’ உள்ளம் கொதிக்க சிகரெட் நசுங்கி கரியாகக் கிடக்கும் இடத்தையே உற்றுப்பார்த்தாள் நித்யா.

அவன் வெளியேறிய அடுத்த வினாடியே பங்கஜம் நித்யா வீட்டிற்குள் அவசரமாய் நுழைந்தாள்.

“என்னடி வீட்டு வாசல்ல நிக்கிற என்னைக்கூடக் கவனிக்காம வந்தவன் கோபமா போறான்!?” கேட்டாள்.

“வீட்டுக்குள்ளே சிகரெட் பிடிக்கிறான்க்கா.”

“பிடிச்சா என்ன?“

“பிடிச்சா என்னவா? என் வீட்டுக்காரர் சிகரெட் பிடிச்சது இல்லே. சிகரெட் வாசனையும் பிடிக்காது. அப்படி இருக்கும் போது இவன் வீட்டுக்குள்ள வந்து சிகரெட் பிடிச்சான்னா அவர் வீட்டுக்குள்ளே நுழையும்போது சிகரெட் வாசனை அவர் மூக்குல நுழைஞ்சா என்னாகிறது? அடுத்து நாம ஒரு காரியமும் செய்ய முடியாது.”

பங்கஜம் மலைத்து நின்றாள்.

“முதல்ல சாம்பிராணி புகை போட்டு உள்ளே உள்ள சிகரெட் நாத்தத்தையெல்லாம் மாத்து. சம்பத் வந்தா வெள்ளிக்கிழமை விளக்கேத்தி சாம்பிராணி போட்டிருக்கேன்னு நெனைச்சுப்பான்.” என்றாள்.

“ஒரு நிமிசம்! நாம கோயிலுக்குப் போய் வந்து சாம்பிராணி போடலாம். வெள்ளிக்கிழமை வேளை நீ சாம்பிராணி போடுறதுக்கும் உன் வீட்டுக்காரன் வர்றதுக்கும் சரியா இருக்கும். நாத்தமும் போகும். சாம்பிராணி ஏன் ஏன் போடுறே போடுறே எதுக்குப் போடுறேன்னு சம்பத் மனசுல சந்தேகமும் வராது.” சொன்னாள்.

“இதுவும் நல்ல யோசனை! நீங்க போய் கிளம்பி வாங்க சீக்கரம் போய் திரும்புவோம்!” சொல்லி உடை மாற்ற அவசரமாக அறைக்குள் நுழைந்தாள் நித்யா.

அரைமணி நேரத்தில் இருவரும் புறப்பட்டு தங்கள் தங்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு கோயிலை நோக்கி நடந்தார்கள்.

எதிர் வீட்டு வாசலில் அப்போதுதான் புத்தம் புது சாண்ட்ரோ வந்து நின்றது. அதிலிருந்து அந்த ஆள் இறங்கி வாசல் மணியை அழுத்தி கதவு திறக்க உள்ளே சென்றான். கதவு மறுபடியும் அடைபட்டது,

“ஆள் புதுசு புதுசாக் கார் வாங்குறானில்லே?”பங்கஜத்திற்கு ஆதங்கம் தாங்க முடியவில்லை. கொட்டினாள்.

“ஆமாம்!” நித்யா தலையசைத்தாள்.

“இவன் போல எனக்கும் ஒரு வசதியான ஆள் கிடைச்சான்னு வை. நானும் என் புருசனை உதறி அடிச்சுட்டு நிப்பேன்.”

‘மாமிக்கு எப்பயெல்லாம் ஆசை!‘ நித்யாவிற்குள் வியப்பு வந்தது,

“என்ன யோசிக்கிறே? எனக்குன்னு ஒருத்தர் வந்து வாய்ச்சார் பார் ரெண்டு பேருக்கும் கொஞ்சம்கூட பொருத்தமில்லாம. எல்லாம் நேரம்.” பங்கஜம் முணுமுணுத்து பெருமூச்சு விட்டாள். கோயிலும் வந்தது.

சிவன் கோயில். மூன்று பிரகாரங்கள் வானளாவிய மதில் சுவர்களை உடைய பெரிய கோயில் ஒட்டி தெப்பக்குளம். சுற்றி படிக்கட்டுகள். தண்ணீரில்லாமல் படிக்கட்டுகளே பார்வைக்கு அழகாய் இருந்தது,

“அம்மா..ஆ !” “தாயே..ஏ !” இவர்கள் வாசலில் நுழையும் போதே இரு பக்கமும் வரிசைப் பிடித்து உட்கார்ந்திருந்த ஆண் பெண் பிச்சைக்காரர்கள் கையேந்தி குரல் கொடுத்தார்கள். கோயில் எதிரே வெள்ளை அம்பாசிட்டர், பச்சை மாருதி, டாடா சுமோ நின்றது.

நித்யாவும் பங்கஜமும் செருப்புகளை கழற்றி ஓரத்தில் போட்டுவிட்டு நடந்தார்கள். உள்ளே அவ்வளவு கூட்டமில்லை. கோயில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருப்பதால் திருவிழாக்காலங்களைத் தவிர எப்போதுமே கோயில் கொள்ளாத அளவு கூட்டம் இருந்ததில்லை. கண்ணுக்குத் தெரிந்து இரு புது மணத் தம்பதிகள், ஏழெட்டு காதல் ஜோடிகள் அமர்ந்திருந்தார்கள். அடுத்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிழடுகள். கர்ப்பக கிரகத்திலும் ஆண் பெண் குழந்தைகளைச் சேர்த்து பத்துப் பதினைந்து பேர்களுக்கு மேலில்லை. உள்ளே ஒரு அர்ச்சகர் சாமிக்குத் தீபாரதனை ஏற்பாடுகளிலிருந்தார். உள்ளிருந்து வெளி வந்த இன்னொரு குருக்கள் பக்தர்களிடமிருந்து பூசைக்கூடைகளை வாங்கிச் சென்றார். இவர்களும் கொடுத்தார்கள்.

சிறிது நேரத்தில் தீபாரதனை முடித்து வெளியே வந்தார்கள். பிரகாரச் சுற்றில் பக்கவாட்டில் திருப்பிக் கொண்டு இருக்கும் சின்ன மண்டபத்தில் துாங்கும் சாமியைக் கை தட்டி எழுப்பி கும்பிட்டுவிட்டு திரும்பினார்கள். எதிரே… கோயில் கிணறு. அதைத்தாண்டி வில்வ மரம். அதன் கீழ் சினிமா நடிகன் ஸ்ரீகாந்த் போல் இருபத்தைந்து ஒரு வாலிபன் நல்ல சிகப்பாய் அம்சமாய் இவர்களை எதிர் பார்த்து நின்றான்.

மாமிக்கு அவனைக் கண்டதும் முகம் மலர்ந்தது.

“ஸ்ரீ! எப்போ வந்தே?”அருகிலிருக்கும் நித்யாவை மறந்து உற்சாகமாய் அவனை நோக்கிச் சென்றாள்.

“நீங்க கோயிலுக்குள்ளே நுழையும் போதே வந்தேன். சாமி கும்பிட்டுட்டு வரட்டுமேன்னு பொறுமையாய் நிக்கிறேன்!” சொன்னான்.

“அவ்வளவு நேரமாவா நிக்கிறே?” பங்கஜம் கண்களில் ஆச்சரியம் வழிந்தது,

“ஆமாம்!” அவன் தலையாட்டினான்.

நித்யா அவர்களிடம் செல்லாமல் பிரகாரம் ஓரம் ஓரம் ஒதுங்கி செவிட்டுசாமியைக் கைதட்டி கும்பிட்டுவிட்டு திரும்பும் சனங்களுக்கு வழி விட்டு நின்றாள்.

அப்போதுதான் எதிர் வீட்டு அவளும் அவனும் ஜோடியாய் இவர்களைக் கடந்து சென்றார்கள். அந்த ஆள் கையில் அர்ச்சனைத் தட்டு வைத்திருந்தான். இருவர் நெற்றியில் திருநீறு, குங்குமம் இட்டு இருந்தார்கள். பார்க்க கணவன் மனைவி போல நடந்தார்கள்.

கொஞ்சம்கூட கூச்ச நாச்சமில்லாமல் எப்படி இவர்களால் இப்படி சமுதாயத்தின் முன் தலை நிமிர்ந்து நிமிர்ந்து நடக்க முடிகிறது?

நித்யாவிற்கு வியப்பாய் இருந்தது.

அதே சமயம்… மாமியும் அடுத்த ஆள் பிடித்து விட்டாள்! தோன்றியது.

நித்யா பங்கஜத்தைப் பார்த்தாள். அவள் இவளைக் காட்டி அவனிடம் ஏதோ சொன்னாள். அவனும் இவளை ஒரு தரம் உற்றுப் பார்த்துவிட்டு திரும்பி மாமியுடன் பேசினான்.

பேச்சை முடித்துவிட்டு கொஞ்ச நேரத்தில் பங்கஜம் அவனிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு வந்து “வா நித்யா!” அழைத்து நடந்தாள்.

“யார்க்கா அது?”

“அவசரப்படாதே. வெளியில போய் சொல்றேன்!”

“வெளியே வந்ததும் அவன்தான் நாளைக்கு நம்ம வீட்டுக்கு வர்ற ஆள்!” சொன்னாள்.

நித்யாவிற்கு என்னவோ பயமாக இருந்தது,

“வேணாம்க்கா!” மெல்ல நடுங்கிய குரலில் சொன்னாள்.

“ஏன்?“

“பயமா இருக்கு.”

“என்னிக்கும் இல்லாம இன்னைக்கு என்ன புதுசா பயம்?”

“இத்தினி நாளும் அலுவலகம் போய் சாயந்தரம் திரும்பி வந்தோமான்னு இருந்தவர் இன்னைக்கு மதியம் திடீர்ன்னு போன் பண்ணினார்…”

“போன் பண்ணினா என்ன?”

“அப்போ அந்த ஆள் இருந்தான். நான் எழுந்து போனைத் தொடுறதுக்குள்ளே லேட்டாயிடுச்சு. ஏன் லேட்டுன்னு கேட்டார். டக்குன்னு பாத்ரும்ல இருந்தேன். வந்தேன்னு சொல்லி சமாளிச்சேன்.”

“பொட்டச்சிங்களுக்குப் புருசனை ஏமாத்துறது பெரிய காரியமில்லே. நல்ல யோசனைதான்.”

“அடுத்து ஏதோ சந்தேகம்….ஒரு நாள் யாராவது இருக்கும்போது திடுதிப்புன்னு வந்து நின்னார்ன்னா மாட்டிக்கலாம்!”

“இதெல்லாம் வீண் கற்பனை, பயம்”

“பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டிக்கலாம்!”

“மாட்டினா என்ன. என் வீட்டுக்காரர் போல கண்டும் காணாம போவட்டும்.”

“அக்கா!”

“அப்படித்தான் ஆகும்.”

“உங்க சமாச்சாரம் வேற. மாமாவுக்கு வயசாயிடுச்சு. எதிர்த்துக் கேட்டால் நீங்க சண்டை போடுவீங்கன்னு பயந்து அப்படிப் போறார். இவருக்கு அரசல் புரசலா சந்தேகம் வந்தாலே வெட்டிப் போட்டுடுவார்.”

“ஏன்டி ஆம்பளை அரிவாளைத் துாக்கினா பொம்மனாட்டி சும்மா இருக்கிறதா? முடியலைன்னாலும் வெளியே ஓடி வந்து கத்தி கூச்சல் போட்டு ஆளைப் புடிச்சுக் கொடுக்க வேணாம்?”

“உங்க தைரியம் எனக்கு வராதுக்கா?”

பங்கஜத்திற்கு நித்யாவின் வீண் பயம் வேடிக்கையாக இருந்தது. மேலும் எதற்காக தங்களுக்கு இந்த திருட்டுத்தனம் யோசனையும் வந்தது. அதேசமயம் அதை விட்டு விடவும் மனமில்லை. அப்போது இவர்களைத் தாண்டி சாண்ட்ரோ சென்றது.

“அதோ அவுங்களைப் பார் புருசன் பொஞ்சாதிப் போல போறாங்க. நாட்டுல எவ்வளவோ அநியாயம் நடக்குது. நாம செய்யிறது ஒன்னும் பெரிய தப்பில்லே.” பங்கஜம் தங்கள் காரியத்திற்குச் சமாதானம் சொன்னாள்.

நித்யாவிற்கு அப்படியும் மனசு ஆறவில்லை. என்ன செய்வதென்று தோன்றாமல் குழப்பத்துடன் நடந்தாள்.

பங்கஜம் தொடர்ந்தாள். “இப்போ பேசி வந்தவன் சாதாரண ஆளில்லே. பெரிய இடத்துப் பையன். நாம பேசுற விதத்துல பேசி நடந்துக்கிற விதத்துல நடந்தோம்ன்னா பணத்தைப் பணம்ன்னு பார்க்காம அள்ளி வீசுவான்!” கொக்கி போட்டாள்.

நித்யாவிற்குள்ளும் மெல்ல சலனம் பாய்ந்தது,

“இவனுக்கு அடுத்து நாம இன்னொரு ஆளை கண்டிப்பா பார்த்தே ஆகனும்!” பங்கஜம் அழுத்தமாக சொன்னாள்.

“யார்?“ ஏறிட்டாள்.

“ரங்கோன் ரங்கமணி. ஆள் அம்பது வயசாய் இருந்தாலும் பாதாம் பிஸ்தாவெல்லாம் சாப்பிட்டு நல்ல திடகாத்திரம். வலது கை கொடுக்கிறது இடது கைக்குத் தெரியக் கூடாதுங்குறது போல பைசாவாய் இருந்தாலும் வீட்டுல போய்தான் வாங்கனும். பக்கத்துலதான் வீடு, தோட்டத்து நடுவே பெரிய பங்களா!” பங்கஜம் சொல்லும்போதே கண்கள் மின்னியது.

நித்யா பேசாமல் வந்தாள்.

“இப்பவே போகலாம். ஆனா அந்த ஆள் வீட்டுல இருக்காரா இல்லையான்னு தெரிஞ்சு போகனும். தெரியாம போய் திரும்பக்கூடாது.” என்ற பங்கஜம் “ஒரு நிமிசம்!” சொல்லி நின்றாள்.

“என்னக்கா?” நித்யா அவளை ஏறிட்டாள்.

“இப்பவே போன் பண்ணி இருக்காரான்னு தெரிஞ்சு போகலாமா?” கேட்டாள்.

“வேணாம் மணி அஞ்சரை. நாம வீடு போய் விளக்கேத்தி சாமி கும்பிடுறதுக்கும் அலுவலகம் விட்டு நம்ம வீட்டுக்காரங்க வர்றதுக்கும் சரியாய் இருக்கும்.”

“இரு ஆளைப் போன்ல புடிச்சு திங்கள் கிழமை வர்றதா சொல்லி வர்றேன்”. என்ற பங்கஜம் இவளிடமிருந்து பதிலை எதிர்பாராமலேயே அருகிலுள்ள பொது தொலைபேசி நிலைத்தை நோக்கி நடந்தாள்.

நித்யாவிற்கு அவளை விட்டு போகவும் மனமில்லை. தடுக்கவும் முடியவில்லை. சாலை ஓரம் நின்றாள். ஆட்டோ, கார், பேருந்து…என்று அவளைக் கடந்து சென்றது.

பங்கஜம் கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்து சேர்ந்தாள். இருவரும் நடந்தார்கள்.

“ஆள் இருந்தார். திங்கள் கிழமை பதனோரு மணிக்கெல்லாம் வர்றோம்ன்னு சொல்லி வந்தேன்.” பங்கஜம் நித்யாவிற்கு மட்டும் கேட்கும்படி கிசுகிசுப்பாக சேதி சொன்னாள்.

அத்தியாயம் – 9

துாரத்தில் வரும்போதே வீட்டைக் கவனித்த நித்யாவிற்குச் சொரக்கென்றது.

வாசலில் சம்பத் நின்றான்.

“வேகமா வாங்கக்கா!” எட்டி நடையைப் போட்டு வீட்டை அடைந்தாள்.

எதிர் வீட்டு வாசலில் அந்த கார் வந்து நின்றது.

“ரொம்ப நேரமா நிக்கிறீங்களா?” நித்யா கேட்டு சம்பத்தை நெருங்கினாள்.

“இல்லே இப்போதான் வந்தேன்.”

“அர்ச்சனைக்குக் கொஞ்சம் நேரமாயிடுச்சு” ஒரு காரணத்தைச் சொல்லி கதவை அவசர அவசரமாகத் திறந்து உள்ளே நுழைந்தாள்.

சிகரெட் வாடை கப்பென்று முகத்தில் மோதி அவளைக் கலவரமாக்கியது.

மனைவி பின்னால் நுழைந்த சம்பத் முகத்திலும் அது மோதியது.

“என்ன சிகரெட் நாத்தம்?” முகத்தைச் சுளித்து மோப்பம் பிடித்தான்.

நித்யாவிற்குச் சொரக்கென்றது.

“உள்ளே யாரும் பிடிக்கலை.” என்றாள்.

“உள்ளே பிடிக்கலைன்னா எப்படி நாத்தம்?” சொல்லி சம்பத் பின்னாலே வர….

திரும்பி வாசலைப் பார்த்தவள் முகத்தில் ஒளி.

“அங்கே பாருங்க வெளியில யாரோ பிடிச்சுப் போறாங்க. அந்த புகை உள்ளே புகுந்து நாத்தம் இங்கே குடலைப்புரட்டுது.” என்று சமாளித்த நித்யா பூசைக் கூடையை வைப்பவள் போல் வேகமாக சாமி அறையில் நுழைந்து “சாமி என்னைக் காப்பாத்து. மொதல்ல சாம்பிராணி போட்டு சனியனைத் துரத்தறேன்!” மனசுக்குள் வேண்டி தீப்பெட்டியை எடுத்து லட்சுமி விளக்கு ஏற்றினாள்.

பயபக்தியாய் இரண்டு கம்ப்யூட்டர் சாம்பிராணி பத்தி ஏற்றி தாம்பாளத்தில் வைத்து புகையை விட்டு சாமிப் படங்களுக்குக் காட்டி வெளியே வந்தவளுக்கு மறுபடியும் அதிர்ச்சி.

சோபாவில் உட்கார்ந்திருந்த கணவன் காலடியில் அவன் விட்டுப் போன அந்த சிகரெட் துண்டு கிடந்து ஈயென்று இளித்தது.

‘தப்புச்சுட்டேன்னு நெனப்பா? காட்டிக் கொடுக்கிறேன் பார்!‘ மிரட்டியது.

நல்ல வேளை சம்பத் கீழே குனிந்து பார்க்கவில்லை.

சிகரெட் துண்டு கரி இவன் கண்ணில் படுவதற்குள் ஆளை அப்புறப்படுத்த வேண்டும் நினைத்தவள் “முகம் கைகால் கழுவி வந்து சாமி கும்பிடுங்க.” வீடெல்லாம் சாம்பிராணி புகையைக் காட்டிக்கொண்டே அவனை உசுப்பினாள்.

சம்பத் மனைவியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு எழுந்து படுக்கை அறையை நோக்கிச் சென்றான். புகையைக் காட்டிக்கொண்டே சோபா பக்கம் வந்த நித்யா அப்படியே காலால் சிகரெட் துண்டை உதைத்து நன்றாக அதன் அடியில் தள்ளினாள்.

சம்பத் கைலிக்கு மாறி பனியன் துண்டுடன் அறையை விட்டு வெளியே வந்து பாத்ரூம் சென்றான்.

நித்யா வீட்டின் எல்லா இடங்களுக்கும் சாம்பிராணி புகை காட்டி தாம்பாளத்தை சாமி அறைக்குள் வைத்துவிட்டு காபி தயாரிக்க அடுப்படிக்குள் நுழைந்து அவசரமாக பிரிட்ஜைத் திறந்து பாலை எடுத்து அடுப்பில் போட்டாள்.

சிறிது நேரத்தில் காபியுடன் ஹாலுக்கு வந்தாள்.

சம்பத் இல்லை.

படுக்கை அறையில் இருந்தான். அங்கிருந்த கண்ணாடியில் முகம் பார்த்து தலைவாரிக் கொண்டிருந்தான்.

ஜன்னல் கதவுகள் திறந்திருந்தது, அதன் வழியே எதிர் வீடு தெரிந்தது, காம்பௌண்ட் கேட்டருகில் சொர்ணமுகி நின்றாள். அவன் காரில் ஏறி புறப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நித்யாவிற்குள் எதுவோ கொள்ளை போனதுபோல் பற்றி எரிந்தது,

“ஏன் கதவைத் திறந்தீங்க?” சீறினாள்.

“சாம்பிராணி புகை அறைக்குள்ளே மூச்சு முட்டுது நித்யா. வெளியேறட்டும்.”

“வெளியேறினது போதும் கதவைச் சாத்துங்க.”

“இப்போதான் திறந்து விட்டேன்.”

“அந்த முண்டச்சி வெளியே நிக்கிறா. பரவாயில்லே சாத்துங்க.”

“வேண்டாம் நித்யா!”

இவளுக்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. “இந்தாங்க.” காபியை சம்பத் கையில் கொடுத்துவிட்டு ஜன்னல் அருகில் சென்று தானே சாத்தினாள்.

சம்பத் தடுக்க முடியாமல் காபியுடன் வந்து வந்து சோபாவில் அமர்ந்து அருந்தினான்.

‘புகை நாற்றம். சோபா காலடியில் சிகரெட் துண்டு. யாரோ வந்து பிடித்திருக்கிறார்கள். நித்யா மறைக்கிறாள். படபடப்பாய் இருக்கிறாள். வந்தவன் யார்?’ அவனுக்குள் கேள்வி பிறந்தது, அதே சமயம் வாசலில் நின்ற சொர்ணமுகியின் திண்ணென்ற உடம்பும் வசீகரமான முகமும் அவன் கண்முன் வந்து உறுத்தியது.

‘எவன் சொன்னான் கிளி போல பொண்டாட்டி குரங்கு போல வைப்பாட்டி என்று இவள் மயில் மாதிரி வைப்பாட்டி. சொர்ணமுகி போல பெண் கிடைத்தால் ஒன்று என்ன அதற்கு மேல் கிடைத்தாலும் வைத்துக்கொள்ளலாம். அந்த பேருந்து உரிமையாளன் அதிர்ஷ்டக்காரன். தேடி எடுத்திருக்கிறான்!‘ மனசுக்குள் ஓடியது.

போன் மணி அடித்தது.

சம்பத் ஹலோ சொல்வதற்குள்…

“ஹலோ! நான் சூசன் பேசறேன்!” எதிர் முனையில் குரல் ஒலித்தது

“சூசன்னா..?!” சம்பத் புரியாமல் திருப்பிக் கேட்டான்.

“நீங்க யார் பேசுறது?” அவன் இவனைத் திருப்பிக் கேட்டான்.

“நீங்க யார் சார் பேசுறது ?” அவன் துணுக்குற்றுத் திருப்பிக் கேட்டான்.

“நான் சம்பத் பேசறேன்.”

“இது நித்யா வீடுதானே?”

“ஆமாம்.”

“நீங்க?“

“அவள் புருசன்!”

“சாரி. ராங்க் நம்பர்.” வைத்தான்.

நித்யா வீடுதானே என்று சரியாய்க் கேட்டுவிட்டு கணவன் என்று சொன்னதும் ராங்க் நம்பர் என்று சொல்லி போனை வைக்கிறான். சம்பத்திற்கு அடுத்த உறுத்தல் இடறியது,

“யாருங்க அது?” பூசை அறைக்குள்ளிருந்து வெளியே வந்தாள்.

உண்மையைச் சொல்லவா வேண்டாமா? ஒரு வினாடி தடுமாறிய சம்பத் “எவனோ சூசனாம். இது நித்யா வீடுதானே நீங்க யாருன்னு கேட்டு நான் உன் புருசன்னு சென்னதும் ராங்க் நம்பர்ன்னு சொல்லி போனை வைச்சுட்டான்!” சொல்லி அவள் முகத்தை ஜாடையாக கவனித்தான்.

நித்யா முகத்தில் கலவரம் வரவில்லை. மாறாக எவன் அவன்? உள்ளுக்குள் யோசனைதான் வந்தது.

“யார் நித்யா அவன்?” சம்பத் கேட்டு மீண்டும் அவளை நோட்டமிட்டான்.

“தெரியலை!”

“உன் பேரைச் சரியாய்ச் சொன்னானே!” என்று சம்பத் விடவில்லை.

வந்தவர்களில் ஒருவனா. இல்லை…. இன்றைக்குக் கோயிலில் பார்த்தவன் செய்தானா? மாட்டக்கூடாது! நினைத்த நித்யா அடுத்த வினாடி “இப்படித்தான்ங்க. பொறுக்கிங்க. ஏதாவது ஒரு நம்பரைச் சுழற்றி போன் செய்யுறானுங்க. பொம்பளை எடுத்தா கெட்ட பேச்சு பேசுறானுங்க. ஆம்பளை எடுத்தா வைச்சுடுறானுங்க. மொதல்ல டெலிபோன் ஆபிசுக்குப் போன் பண்ணி விபரத்தைச் சொல்லுங்க. அவன் யாரு எங்கே இருந்து பேசறான். கண்டு பிடிக்கச் சொல்லுங்க.” கோபத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னாள்.

“அப்படியா?” சம்பத்திற்குக் கோபம் வந்தது,

“ஆமாம். நித்தம் இல்லேன்னா ஒன்னுவிட்டு ஒருநாள் இப்படி!” என்றாள்.

“என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே?”

“மறந்துட்டேன்!“

“அடுத்தமுறை பண்ணட்டும் மாட்டிவிடுவோம்.”

“எப்படி?“

“டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்ல இது போல போன் வருது யார் எந்த நம்பர்ன்னு கவனிச்சு சொல்லுங்கன்னு கேட்டால் சொல்வாங்க.”

“அப்படியா?“ வாயைப் பிளந்தாள்.

“ஆமாம். அப்படி போன் வந்தா வைக்காம அவன்கிட்ட பேசிக்கிட்டே இருக்கனும். அதே சமயம் அடுத்த ஆள் எக்ஸ்சேஞ்சுக்குத் தகவல் சொல்லி கவனிக்கச் சொல்லனும். கண்டுபிடிச்சுடுவாங்க. நாம உடனே போலீசுக்குப் போய் இன்ன நம்பர் இன்ன ஆள் இப்படி பேசினான்னு புகார் கொடுத்தால் ஆளைத் தூக்கி வந்து போட்டுடுவாங்க. அவன் இல்லேன்னு மறுத்தால்கூட உதைக்கிற உதையில யார் பேசினதுன்னு உண்மை தானா வெளியே வந்துடும்.” விபரம் சொன்னான்.

சம்பத் இருக்கும் போது எவனும் போன் செய்யக்கூடாது! வேண்டினாள். அந்த வேண்டுதல் அடுத்த விநாடி பொய்த்தது.

போன் மணி அடித்தது.

சம்பத் அழுத்தமாக அமர்ந்து “அவன்தான் எடு நித்யா!” என்றான்.

அவள் உள்ளுக்குள் நடுக்கமாக வந்து தொட்டாள். ஒலி வாங்கியை எடுத்து காதில் வைத்தாள்.

“ஹலோ! நான் சூசன்!” எதிர்முனையில் கிசுகிசுப்பாய் ஆண்குரல்.

‘மடக்கம்மனாட்டி! போனை எடுத்ததும் ஹலோ சொல்லி ஆணா பெண்ணா தேவையான ஆளான்னு தெரிஞ்சு பேசாம என்னவோ தன் சொந்த வீட்டுக்குப் போன் செய்து எடுக்கிறவள் பெண்டாட்டிங்குற நெனப்புல பேரைச் சொல்லி மாட்றான் மாட்டிவிடுறானே.. மடையன் விபரம் தெரியாதவன்!’ சபித்தாள்.

“என்ன பேசமாட்டேங்குறே? யார் நித்யா?” சம்பத் மெலிசான குரலில் கேட்டான்.

அவன்தான் என்றால் வில்லங்கம். என்ன சொல்லி வைக்க?… யோசிக்கும்போதே…

“பேசு! ஏதாவது பேசு….” சம்பத் தொடர்ந்து அதே குரலில் கிசுகிசுத்தான்.

நித்யாவிற்கு வழி கிடைக்க முகம் மாறியது. எதிர்முனையில் பேச்சில்லை என்றதும் சூசனும் ஏதோ வில்லங்கம் என்று வைத்தான். சிறிது நேரம் வெறுமனே வைத்திருந்து விட்டு வைத்தாள்.

“பேசினது யார் நித்யா?” கேட்டான்.

“பொம்பளை!” பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னாள்.

“உன் தோழியா?”

“உங்க தோழி!”

“என் தோழியா?” சம்பத் துணுக்குற்றான்.

“ஆமாம். உங்க தோழியேதான். ஹலோ சம்பத்ன்னாள். எதிர்ல பொம்பளைக்குரல் கேட்டால் வைச்சுடுவாள்ன்னு நெனைச்சு நான் பேசலை. அவள் அடுத்து பேசாம கொஞ்ச நேரம் அப்படியே வைச்சிருந்து வைச்சிட்டாள். யார் அவ…?” பத்ரகாளியாய்ப் பார்த்தாள்.

சம்பத் சுருண்டான்.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *