என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்…?!

அந்த இண்டர்நேசனல் பள்ளியின் கம்ப்யூட்டர் லேப்பின் கதவு, சுவர்கள் கண்ணாடியாகியிருந்தாலும் நாகரீகம் என்று ஒன்று இருக்கே..?! அதனை மனசில் வைத்துக் கொண்டு கதவை மெல்லத் தட்டினான் பியூன் ராஜ கோபால்.
ராஜகோபால் அதிகம் படிக்கவில்லை என்றாலும், அந்த பிரபல பள்ளியில் வேலை பார்ப்பதனாலும், அதிக டீசண்டான பெற்றோர்கள் ஆசிரியர்களோடு பழகுவதாலும், அவன் பேச்சு, நடை, உடை செயல்களில் நாகரீகம் தாண்டவமாடும்.
‘எஸ்.. கமின்!’ என்றார் அந்தப் பள்ளியின் கம்ப்யூட்டர் மாஸ்டர் ஸ்ரீதர்.
தலையை லேசாக உள்ளே நீட்டி, கதவை ஓரளவு மட்டுமே திறந்து கொண்டு, உள்ளே போகாமல்… வெளியிலிருந்த படியே ‘சார், உங்களைப் செகரட்டரி கூப்பிடறாங்க!’ என்றான்.
‘எதுக்காய் இருக்கும் இப்போதுதான் அசெம்பிளி அதான் காலை கூட்டம் முடிந்து வந்து சீட்டில் உட்கர்ந்திருக்கான் ஸ்ரீதர். இன்னமும் கம்ப்யூட்டர்கள் ‘பூட்’டாகவே இல்லை… ‘நெட் ஒர்க் வேற படு ஸ்லோவாக இருந்தது. மாதக் கடைசி, சம்பளம் போடணும், லோனில் யூனிஃபார்ம் இத்யாதிகள் ஸ்டோரில் வாங்கியவர்களுக்குப் பிடித்தம் செய்து சேலரியை லிஸ்ட் எடுத்து, செகரட்டரிக்கு அனுப்பி பின் பாங்குக்கும் அனுப்பணும். என்ன பிரச்சனைனு தெரியலையே?! என்று குழம்பினான் ஸ்ரீதர்.
இருந்தாலும் கூப்பிடுவது செக்கரட்டரியாச்சே லேட்டாய் போக முடியாது. இப்ப கால மாற்றமும் ‘AI’ தொழில் நுட்பமும் வேகமாகி வியாபித்து வரும் நிலையில் உடனே ஓட வேண்டும்… ஓடினான்.
செக்ரடரி அறைக்கதவைத் தட்டி லேசாய் திறந்து,
‘மே.. ஐ கமின் மேடம்?’ என்றான். அங்கே காமினிதான் செக்கரட்டரியாய் இருக்கிறாள். ரொம்பவே கெடுபிடியானவள். தயவு தாட்சண்யம் பார்க்காமல் கடிந்து கொள்வாள். கோபம் இருக்கும் இடத்தில்தானே குணமிருக்கும்!. எவ்வளவுக்கு எவ்வளவு கடிகிறாளோ, அவ்வளவு அவ்வளவு கனிவும் காட்டத்தயங்க மாட்டாள்.
‘எஸ் பிளீஸ்!’ குரல் குழைய…
உள்ளே நுழியந்தான் ஸ்ரீதர்.
‘ உட்காருங்க!’ என்று உட்காரச் சொன்னாள்.
போச்சு..!!! அவள் யாரையாவது உட்காரச் சொன்னால், சிக்கல் என்று உள்மனம் ஸ்ரீதரை எச்சரித்தது.
நேரடியாகவே விஷயத்து வந்தாள் காமினி.
‘மிஸ்டர் ஸ்ரீதர், இங்க சம்பளம் வாங்கறவங்கள்ளயே அதிகம் சம்பளம் வாங்குறது நீங்கதான்னு உங்களுக்கே தெரியும்தானே??!!. ஏன்னா பே பில் நீங்கதான் ரெடி பண்றீங்க இல்லையா?
‘ஆ… ஆமாம்! மிடறு விழுங்கினான்.
‘என்ன வளம் இல்லை உங்களுக்கு…? ஏன் இந்தக் கெட்ட பழக்கம் உங்களுக்கு?’ என்றாள் கடுமையாக காமினி.
‘நான்… நான் என்ன தப்பு பண்ணினேன்?! கேட்டான்.
‘ஒரு ஆசிரியர்தான் ஒரு சமுதாயத்தையே உருவாக்குகிறார்னு உங்களுக்குத் தெரியும்தானே?1’
‘எஸ்… மேடம்!! ஐ நோ இட்!’ என்றான் ஸ்ரீதர் பணிவுகலந்த பவ்யத்தில்.
உங்கள் நடவடிக்கைகளை உங்கள் ஸ்டூடர்ஸ் தங்களையும் அறியாமல் பின்பற்றுவார்கள் தானே?!
ஆ…! ஆமாம்!! மேடம்!. குரல் கம்மியது ஸ்ரீதருக்கு.
எல்லாம் தெரிஞ்ச நீங்க ஏன் அந்தத் தப்பைத் தொடர்ந்து செய்யறீங்க? உங்களுக்கே அது அசிங்கமா இல்லை?! லட்சக் கணக்கில் சம்பளமாய் வாங்குறீங்க தானே..?? ஒரு டீசண்ஸி வேண்டாம்???
‘மேடம் நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை!’ என்றான் ஸ்ரீதர்.
‘என்ன புரியலை.??!! எத்தனை பேர் எத்தனை கண்கள் உங்களை வாட்ச் பண்ணுதுன்னு தெரியுமில்ல.??!!. இப்ப எல்லா இடத்துலயும் சிசிடி கனெக்ஷன் இருக்கு… பார்க்கிறவன் அசிங்கமா நெனைக்கறாமாதிரி இப்படி நடந்துக்கிறது நியாயமா?! என்றாள் காமினி கோபம் குறையாமல்…
‘மேடம்.. நான் என்ன தப்பு பண்ணினேன்னு சொன்னாத் திருத்திக்கறேன். எனக்குத் தெரியலை பம்மினான்.
ஒரு நூறு ரூபாய் வருமா லட்சக் கணக்கில் சம்பாதிக்கிற நீங்க ஏன் ஒரு நூறு ரூபாயை அதுக்காக செலவு செய்யக் கூடாது?!’ இப்போது காமினி குரலில் கோபம் கூடியது.
‘மேடம் புதிர் போடாம சொல்லுங்க!’ என்றான் ஸ்ரீதர்
AI தொழில் நுட்ப சூப்ர வைசர் உங்களை மட்டுமல்ல எல்லாரையும் கண்காணிக்குது. அதன் ரிப்போர்ட் படி நீங்க… நீங்க.. சொல்லவே அசிங்கமா இருக்கு..’ நிறுத்தினாள் காமினி.
சொல்லுங்க பரவாயில்லை..!
ஒரு ஆசிரியரா இருக்கிற நீங்க கம்ப்யூட்டர் லேபில் உட்கார்ந்து கொண்டு எல்லாரும் பார்க்கிறான்னு கூட யோசனையில்லாமல் நகத்தை பல்லால் கடித்துத் கடித்துத் துப்புவதைப் பார்த்தால்.. அசிங்கமா இருக்கு!. லட்சக் கணக்கில் சம்பாதிக்கறீங்க.. என்ன வளம் இல்லை? சொல்லுங்க! வேணா இந்த மாசம் ஒரு நூறு ரூபாயை கூட்டிப் போட்டுக்குங்க இனி நகத்தைகடித்துத் துப்பாமல், நெயில் கட்டரால் வீட்லயே கட் பண்ணிக்குங்க!. இது, வெளியுலகத்துக்குத் தெரிஞ்சா… நம்ம பள்ளி மானம் போயிடும் என்றாள் காமினி.
சே! இவ்வளவுதானா என்று நினைத்தாலும் தன் செயலுக்காக அவன் வருந்தாமலில்லை!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |