எதுவரை





(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாலை மூன்று முப்பதுக்கு டிங்டொங் என பெல்பொட்டம் கால்களில் அடிக்க கன்னக்கிராதியும் டோப்பாத் தலையு- மாக இப்போது நினைத்துப் பார்க்க சிரிப்பு வரும் கோலத்தில் சந்தியில் தவம் இருந்ததை இங்கு எப்படி விபரிப்பது?
எழுபத்தியாறாம் ஆண்டா எழுபத்தி- யேழா ஞாபகம் இல்லை. விடுதலை, சுதந்திரம்,என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் வீராதி வீரர்களாக அப்போது நாங்கள்.
ஒற்றை பௌசரில் சுன்னாகம் ஸ்ரேசனடியில் தண்ணீர் அள்ளிக் காரைநகருக்குப் போகும் நேவிக்காரரின் தண்ணீர் பௌசர்.இப்- போது முன்னுக்கும் பின்னுக்கும் ஆயுதம் தாங்கிய நேவிக்காரர்- கள் ஜீப்புகளில் பவனிவரும் முன்னிலைக்கு வந்து விட்ட காலம்.
தம்பி கடையின் ஓரமாக சந்தி வளைவில் இருக்கும் செரிமரமும் தம்பி கடையின் ஒரு பக்கத்துச் சுவரோடு தொடர்புபட்டதாய் ஆட்களற்ற பழைய மண்டபத்திலும் தான் பொழுது கரையும்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேயர் விருப்பத்தில் கடைசிப் பாடல் பெரும்பாலும் எங்கள் விருப்பமாகத் தான் இருக்- கும். ஆனால் ஒருநாள் தனிலும் ஒரு போஸ்காட் எழுதி அனுப்பிய- தாக இல்லை. ரேடியோ சிலோனில் வேலை செய்த சுபாஸ்கரனின் உறவினரின் கைங்கரியத்தில் அது அமோகமாக நடந்தது.
சந்திக்குக் கிட்டத்தான் வீடு. வீட்டுக்கும் கேற்றடிக்கும் இடையில் சைக்கிள் ஓடிப் பழகக்கூடிய தூரம்.
கேற்றடியில் குவியலாகக் குருவிச்சை ஆடிய மாமரங்கள் ஊராரின் கல்லெறிக்கும் தாக்குப் பிடித்துக் கொண்டு எங்களுக்கும் உதவி செய்தன.
சுபாஸ்கரனுடன் சில இடைப்பட்ட நேரங்களில் மாமரத்தின் கீழ் சீரியஸாக கதைத்தபடி நிற்போம். அவை கால் தூசுக்கு பெறுமதி இல்லாத சமாச்சாரங்கள் என்பதை இப்போது விளங்கி என்ன செய்ய முடியும்?
ரியூஷனுக்குப் போய் விட்டு தளர்நடையுடன் வரும் றஞ்சிதம் ஒற்றைக் கண்ணை ஒரு தடவை தான் வெட்டிப் பார்ப்பாள். அதற்காகவே எத்தனை மணித்தியாலங்கள் காத்திருந்தோம்.
கமரா ஒன்றை பேப்பர் பையினுள் மறைத்து லென்ஸ் உள்ள பக்க த்தை மாத்திரம் கிழித்து விட்டு சுபாஸ்கரன் ரஞ்சிதாவை படம் எடுத்தது அந்தக்காலத்து எங்களது மாபெரும் சாதனைகளில் ஒன்று.
மீண்டும் சந்திக்கு வந்தால் தம்பி கடை வளைவில் ஒருநாள் சைக்கிளில் காலை ஊன்றியபடி நிற்க, தண்ணீர் கொண்டு சுன்னாகத்தில் இருந்து வந்த நேவிக்காரரின் முதலாவது ஜீப் மெதுவாகத் திரும்பியது. றைபிள் சகிதம் றைவிங் சீற்றுக்குப் பின்னால் இருந்த நேவிக்காரர் பார்த்த பார்வையின் வலிமையின் முன்னால் எங்கள் விழிகள் தெறித்துப் பறந்தன. தோள்கள் வளைந்து சுருங்கின.
ஜீப் நின்றது. படார் என அவன் குதித்தான். நாங்கள் கேள்விகள் ஏதும் கேட்காமலே அவன் எங்கள் கன்னங்களில் பதில் தந்தான். சளார் சளார் என்ற சத்தத்துடன் அக்கம் பக்கத்தில் நின்ற மீசைக்கார ஆம்பிள்ளைகள் இருந்த இடம் தெரியாமல் பறந்து விட்டார்கள்.
நல்லூர் திருவிழா முடித்து ஐந்து சைக்கிள்களில் பத்துப்பேர்கள் வீடுகளுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தோம். சில வேளைகளில் இதைவிடக் கூடத்தான் ஆட்கள் வருவார்கள்.
இந்த முறை குறைந்து விட்டது. யாரோ செய்த புண்ணியம் தான் கலகலத்து செறிந்திருந்த தெருவழியே ஆய் ஊய் என்ற படி எங்கள் நகர்வு இருந்தது. மின்சார விளக்குகளினால் உயர்ந்- திருந்த வீடுகள் கடைகளால் தெருவே அமளிப்பட்டது.
சந்திக்கு வர சற்றே ஒரு மாறுதல். வைரவர் கோயில் வாசலோர- மாக ஒரு ஜீப் பதுங்கியிருந்தது. சந்தைச் சுவரோரமாக துப்பாக்” கிகள் சுமந்த இராணுவத்தினர்.
சந்தியின் நான்கு பக்கம் பல ஜீப்புகள் ஆமியும் நேவியுமாக நிலையெடுத்திருந்தனர். எங்கள் சைக்கிள்கள் பொத்துப் பொத் தென்று நிற்க நாங்கள் சைக்கிள்களை ஓரம் கட்டி தலை வணங்கினோம்.
துரையண்ணை கடை மதில் சுவரில் பெரிதாக வரிவடிவம் பெற்றிருந்த விடுதலை இயக்கமொன்றின் வேண்டுகோள் சுவ- ரொட்டியை எங்களைப் போல பல வேலையற்ற விற்பன்னர்கள் கிழித்துக் கொண்டிருந்தனர்.
உயரத்தில் இருப்பவற்றினை ஒருவர் தோளில் ஒருவர் ஏறி நின்று கிழித்துக் கொண்டு இருந்தனர். சந்தியோரமாக உடல் பெருத்து நெஞ்சுவிரிய நின்ற ஒரு பெரிய இராணுவ அதிகாரி ஐயா, எங்களையும் சுவரொட்டியைக் கிழிக்கும் பெரும் பணியில் ஈடுபடும்படி பணித்தார். அதனை பவ்வியமாக ஏற்று பணிய சில விநாடிகள்தான் தாமதம் ஆகிவிட்டது.
பெரும் அரசதுரோகம் இழைத்து விட்டதாக கருதிய அந்தப் பெருமை மிக்க படையினர் ரைபிள்களால் இடிக்க கன்னங்கள் கன்றி இரத்தம் பிறிட்டது.
இப்போது தம்பி கடை இளைத்திருந்தது. இந்தியப் படைகள் சூறையாடிய சந்தி கசங்கிக் கந்தலாகி விட்டது. முகம் கறுத்து சுயத்தை இழந்த மனிதர்கள் சந்தியோரம் வரவே அஞ்சினார்கள், தம்பி கடையின் பக்கத்து மடம் பழம் பெருமை இழந்து குட்டிச் சுவராய் போய் விட செரிமரம் கருவறுந்து கனகாலமாயிற்று.
புகை கக்கி நெய் நாற்றத்தை வீசியபடி இந்திய இராணுவத்தின் வாகனங்கள் சந்தியெங்கும் திமிரோடு திரிந்தன. சந்திக்கு வரும் பாதைகள் எங்கும் இந்திய இராணுவம் தனது நாற்றங்களைப் பரவவிட்டு மமதையுடன் முகாம்கள் அமைந்திருந்தது.
தாண்டித் தாண்டி நடந்தபடி ஒரு இராணுவ கேணல் எங்கள் தெருவாலும் போவான். அவனைச் சூழ ஒரு பட்டாலியனே போகும். சில வீட்டுக் கேற்றுக்களை இடி இடியென அடித்து அட்டகாசம் போட்டுவிட்டு அவன் துள்ளுவான்.
காதலித்த ரஞ்சிதாவை கைவிட்டு யாரோ ஒருத்தியை சுபாஸ்கரன் கலியாணம் செய்து கனடாவுக்குச் சென்றது போல பலபேர் போய் விட்டனர். விலை பேச முடியாத சுதந்திரமும் விடுதலையும் தேவை என்பதை மூத்த மகனைப் பார்க்கும் போது தோன்றும். கடைசி இவனாவது தலை நிமிர்ந்து வாழ வழி வர வேண்டாமா என்பதும் இதுவரை பெரும் மாயையில் வாழ்ந்து விட்டோம் என்ற உண்மையும் விழியோரங்களில் அரும்பும் கண்ணீரோடு வெளிப்படும்.
எண்பத்தியேழு மார்கழியில் ஒரு மாலைப்பொழுதில் வானத்தின் இதமான நேரத்தைக் கருமேகங்கள் மறைத்திருந்த வனப்பு மிக்க நேரம்.
எங்கள் வீட்டுக் கேற்றடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வந்த சிவநேசனும் செல்வகுமாரும் கதைத்து ரீ குடித்து மீள ஒரு மணித்தியாலம் ஆகிவிட்டது.
புறப்பட்டுப் போனவர்களைச் சந்தியில் இருந்த முதலாவது ஐ.பி.கே.எவ். சென்றியில் சிப்பாய்கள் மறித்து விட்டார்கள்.
எங்கள் சந்தி ஒன்றும் அவர்களின் உத்தரப் பிரதேசத்திலோ குஜ- ராத்திலோ இல்லை என்றாலும் அவர்கள் அதனைச் செய்தார்கள்.
சற்றே நிமிடங்கள் கரைய தாண்டித் தாண்டி நடக்கும் கேணலுக்- குத் துணையாக வரும் இந்திய சிப்பாய்கள் இரண்டு பேர் எங்கள் வீட்டுக் கேற்றினை உதைத்தனர்.
அவர்களுடன் அந்தச் சென்றிக்குப் போனேன். கூடவே மகனைத் தூக்கிக் கொண்டு மனைவி வந்தாள். அம்மாவும் தங்கைகளும் இன்னும் கொஞ்சம் பின்னால்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ஏன் வந்தார்கள், எதற்காக வந்தார்கள். அவர்களுக்கும் எனக்கும் என்ன உறவு என்பதை- யெல்லாம் விசாரித்து இனிமேல் இது போல எதுவும் நடக்கக் கூடாது என்று போதித்து மோட்டார் சைக்கிளை கைவிட்டார்கள். மோட்டார் சைக்கிள் கேற்றடியில் நின்றது தான் இவ்வளவுக்கும் காரணம்.
“எங்கடை காம்பில் ஒரு அறை இருக்கு தெரியுமா?” என்றான் தமிழ் தெரிந்த சிப்பாய் ஒருவன்.
“ம்”
“அங்கை கொண்டு போனால் இரத்தக்காயம் படாமல் ஒருவரும் வெளியில் வாறதில்லை”
“அடுத்ததரம் இப்படி ஏதாவது பிரச்சினை எண்டால் அந்த அறைக்குத்தான் கொண்டு போகவேணும். இப்ப போ” என்றான் சற்று உறைப்பாக.
எல்லாமே ஒரு மாயைத் தோற்றம் போலத்தான் இருக்கிறது. தொண்ணூற்றி ஐந்தாம் ஆண்டு என்ன மாதிரி வந்து விட்டது. அக்டோபர் கடைசியில் வலிகாமத்தில் இருந்து இடம் பெயர்ந்- தாயிற்று.
அடர்த்தியான பலா மரத்தின் கீழ் அடுப்பு புகைத்துக் கொண்டி- ருந்தது. மணலாய் பூத்திருந்த நிலம் குளிர்ச்சியாக இருந்தது.
மணல் பூக்கள் தாங்கிய உரப்பையை தரையாக்கி சிரட்டையில் ஏறி நின்ற கத்தியில் மரக்கறி வெட்டுதல் நடக்கிறது. ஒரு காலத்து எம்.ஜி.ஆர் படம் ஓடும் தியேட்டரில் சனங்கள் போல ஈக்கள் கும்பல் கும்பலாக, அதனைக் கலைக்கக் கலைக்க கைகள் தான் வலித்திருக்க வேண்டும் ஆச்சிக்கு.
தெரு நிறைய சனங்கள். தாடி மலர்ந்த முகங்கள். சோகம் அப்பிய விழிகள். சோபை இழந்து நெருக்கமாக மிக நெருக்கமாக பளைவரை போவார்கள்.நிம்மதியான வாழ்வுக்காக அப்பால் கிளாலியையும் தாண்டுவார்கள்.
தலையை முட்டும் கூரை கொண்ட எங்கள் தற்காலிக குடியிருப்பில் திரும்பிப் படுக்க இடமில்லை.
ஆனால் நில், இரடா, ஐ. சி. இருக்கா என்று கேட்க யாரும் இல்லை. இரவு கனிந்த பிறகு தெருவில் நடக்க பயப்படத் தேவையில்லை. தடை முகாம்கள் முன்னால் தலை கவிழ்ந்து கைகளை உயர்த்திக் கூனிக் குறுகி, ஐயகோ இந்த அவலங்கள் இல்லை.
இப்படியான ஒரு நிலை நிரந்தரமாக வேண்டும்.
‘எப்போது வரும் அது?’
– ஈழநாதம், 29-12-1995.
– மணல்வெளி அரங்கு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மாசி 2002, தேசிய காலை இலக்கிய பேரவை, கொழும்பு.